Advertisement

  14

     கண்ணன் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, அங்கு இருந்த அனைவருமே மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாகத்தான் நின்றிருந்தனர் கனகாம்புஜம் பாட்டியைத் தவிர.

     “எய்யா கண்ணா… வாரத்துக்கு ஒருமுறை எப்போவும் போல ஊருக்கு வந்துட்டுப் போய்யா! உன் அப்பனுக்கு வேற இப்படி உடம்புச் சுகமில்லாம கெடக்கு! நீ வர போக இருந்தாத்தானே எங்க மனசுக்கும் கொஞ்சம் நிம்மதி இருக்கும்!” என்றார் பாட்டி.

     ‘ஆனா இங்க வந்தாலே என் நிம்மதி போயிடுதே அப்பத்தா!’ என்று எண்ணிக் கொண்டான் அவனின் அத்தை, மாமனின் பாராமுகத்தைத் தாங்க இயலாதவனாய்.

     “என்னய்யா அமைதியா நிக்க? வருவ இல்லை?!” என்று அவர் மீண்டும் கேட்க,

     “ம் வரேன் அப்பத்தா” என்றவன்,

     “நான் கிளம்புறேன். அப்பா உடம்பைப் பார்த்துக்கோங்க. நான் நேரம் கிடைக்கும் போது வரேன்.” என்றவன், தனது அத்தை மாமனைப் பார்த்து,

     “அத்தை, மாமா நான் போயிட்டு வரவா?!” என்றான் தயக்கமாய்.

     “போகாதேன்னு சொன்னா நின்னுடுவியாடா?!” என்று இரண்டு நாட்களாய் வாய் திறவாத வைரம் கோபம் கொண்டு கேட்க, அவன் மௌனியாய்த் தலை குனிந்தான்.

     “உனக்கு எங்க சந்தோஷம், நிம்மதி, கெளரவம் எல்லாத்தையும் விட உன் வரட்டுப் பிடிவாதம்தானே முக்கியம்! பொறவு எதுக்கு இன்னும் நின்னுக்கிட்டு?!” என்றுவிட்டு வைரம் சட்டென அங்கிருந்து வெளியேறி பின்கட்டுக்குச் சென்றுவிட்டார்.

     “அவ கோபத்துலயும் நியாயம் இருக்குல்ல ப்பா! அத்தை தானே, விடு” என்றார் ரத்தினம்.

     “அத்தை கோபப்படுறதுல எனக்கு வருத்தமே இல்லைப்பா! ரெண்டு அடி கூட அடிச்சிரட்டும். ஆனா இப்படிப் பேசாம இருக்க வேணாம்னு சொல்லுப்பா. என்னாலத் தாங்க முடியலை!” என்றவனைப் பார்க்க பாவமாய் இருந்தது கவிக்கு.

     அவன் சின்னதாய் முகம் வாடினாலே தாங்க மாட்டாளே அவள்! அப்படி இருக்க இவன் இன்று தனது அத்தை, மாமனின் அன்பிற்காய் ஏங்கி நிற்பதைக் காண அவளுக்கு பெரும் வேதனையாகத்தான் இருந்தது. அப்போது கூட அந்தப் பாசம் கொண்ட பெண்ணுக்கு தன்னை அவன் படுத்தும் வேதனையை எண்ணிப் பெரிதாய் கோபம் எழவில்லை! மாறாய் அதற்கும் வருத்தம் தான் எழுந்தது.   

     “அதெல்லாம் கொஞ்ச நாள் ஆனா சரியாபோயிடும். நீயும் என் மருமகளும் ஒண்ணா சேர்ந்து சந்தோஷமா வாழுறதைப் பார்த்தா தன்னால பேசப் போறா” என்று ரத்தினம், அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால்தான் வைரம் பேசுவார் என்பதை சூசகமாய் சொல்லி வைத்தார்.

     ஆனால் அது எங்கே அவன் மரமண்டைக்கு உரைத்தது!

     “சரிப்பா நான் கிளம்புறேன்” என்றவன், எல்லோரிடமும் சொல்லிவிட்டு, கவியிடம் மட்டும் ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் செல்ல, அவள் மனம் வெகுவாய் வலித்தது.

     ‘உனக்கு மட்டும்தான் மனசு கஷ்டப்படுமா மாமா?! எனக்கும் மனசு இருக்குதானே?! அதுக்கும் நீ பேசாம போன கஷ்டமா இருக்கும்தானே?! ‘ என்று அவள் செல்லும் தன் மாமனையே பார்க்க, அவனுக்கு அவள் பார்வை அவன் முதுகையே துளைத்திருப்பது நன்கு தெரிந்தாலும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நடந்தான்… மாற்றம் யாரால் எப்போது வரும்?!

                               *****

     வாரம் ஒருமுறை இல்லையென்றாலும் மாதத்திற்கு இரண்டுமுறையாவது அவன் ஊருக்கு வந்து சென்று கொண்டிருக்க, படுவேகமாய் அவர்கள் திருமணம் முடிந்து மூன்று மாதம் கடந்து நான்காம் மாதம் துவங்கிவிட்டிருந்தது.

     இதனிடயே கார்த்திக் விளையாட்டாய் அல்லாது, தான் சொன்னது போலவே, தங்கரத்தினத்திடம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து அவர்கள் ஊரிலேயே நான்கு ஏக்கர் நிலம் வாங்கிப் போடச் சொல்லி இருந்தான். அதோடு அவனது ஆபீசிலும் திருமணம் முடிவான கையோடே தனது ரெசிக்நேஷனையும் அப்ளை செய்திருந்ததனால், சரியாக மூன்று மாதம் கழித்து அவன் சென்னையிலிருந்து கண்ணனின் குடும்பம் இருந்த ஊரான குள்ளூர்சந்தைக்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தான்.

     கார்த்திக் கவியைத் திருமணம் செய்யப் போவதால்தான் ஊருக்குச் சென்று வசிக்க முடிவெடுத்து வேலையை விட நினைத்தான் என்பது வரை கண்ணனுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால் திருமண  நின்ற பின்னும் அவன் அவர்கள் ஊரில் இடம் வாங்கிப் போட்டு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது அவன் அறியாத விஷயம்.

     எப்போதும் போல் அந்த வார விடுமுறையின் போது, கண்ணன் அவர்கள் வீட்டிற்குச் செல்ல, சித்திரை மாத வெயிலின் புழுக்கம் தாளாமல், கவி வீட்டைச் சேர்ந்தவர்களும், கங்காவின் அப்பாவும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் கார்த்திக்கும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் தன் அத்தை கொடுத்த பலகாரத்தை நன்கு மொக்கியபடி சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கண்ணன் தனது காரைச் சடக்கென்று ப்ரேக் இட்டு நிறுத்தினான்.

     “அட உன் கூட்டாளியும் வந்துட்டான் ப்பா” என்று ரத்தினம் சிரிக்க,

     “வாடா மாப்ளை!” என்று கார்த்திக் கண்ணனை, அவன் வீட்டிற்கே வரவேற்க இவனுக்கு இன்னும் காண்டகிப் போனது.

     “நீ எதுக்கு இங்க வந்த?!” என்றான் எடுத்த எடுப்பிலேயே.

     “அட உனக்குத் தெரியாதுல்ல?!” என்று நக்கலாய்க் கேட்ட கார்த்திக்,

    “நான் இதோ இந்த வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரமாச்சு” என்றான் அவர்கள் வீட்டின் எதிரே இருந்த ஒரு வீட்டைக் காண்பித்துச் சர்வ சாதரணமாய்.

    “வாட்?!” என்று கண்ணன் அதிர்ச்சியும், கோபமும் கலந்து கேட்க,

    “உனக்கு என் மச்சி இவ்ளோ ஷாக்கு?! இந்த ஊர்லயே செட்டில் ஆகணும்னு இடம் கூட நாலு ஏக்கர் வாங்கிப் போட்டிருக்கேன் தெரியுமா?!” என்று மேலும் கார்த்திக் கண்ணனுக்கு அதிர்ச்சி கொடுக்க, கண்ணனுக்கு வெறியே ஏறியது.

     “ஏன் களை புடுங்கவா?!” என்று அவன் பல்லைக் கடித்தபடி கேட்க,

     “ச்சே! ச்சே! முதல்ல பயிர் எல்லாம் வைப்பேன். பிறகு இடையில ஏதேனும் வேண்டாதது முளைச்சா பிடுங்கி, எறிஞ்சிட வேண்டியதுதான்” என்றான் கார்த்திக்குமே எச்சரிக்கும் பாவனையில் குதர்க்கமாய்.

     “ஏய்!” என்று கண்ணன் முறைக்க,

     “ஆன்ட்டி உங்க மருமகன் ரொம்ப சூடா இருக்காரு. ஜில்லுன்னு ஏதாச்சும் குடிக்கக் கொண்டு வாங்க” என்றான் கார்த்திக் உள்ளே இருந்த வைரத்திற்குக் கேட்கும்படி உரக்கக் குரல் கொடுத்து.

     “ஆமாம்! அவன் எப்போதேன் ஜில்லுன்னு இருந்திருக்கான்?!” என்று எண்ணிக் கொண்ட வைரம்,

     “இதோ வரேன் பா” என்று பதில் கொடுத்தார்.

     “எனக்கு எதுவும் வேணாம்” என்று இவனும் உரக்கக் குரல் கொடுத்துவிட்டு தன் அறைக்குள் சென்று படீரென்று கதவை அடைக்க, அங்கு அவள் தரையில் அவன் சட்டையை இறுக்கிப் பிடித்தபடி சுருண்டுப் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.

     “ஏய் இங்க என்னடி பண்ற?!” என்று அவன் கார்த்திக்கின் மீது இருந்த எரிச்சலில் வந்ததும் வராததுமாக அவளிடம் சுள்ளென எரிந்து விழ,

     “ஹான்?!” என்று திடுக்கிட்டுக் கண்விழித்தவள்,

     “ம மாமா! நீ எப்போ மாமா வந்த?!” என்றாள் மெல்ல எழுந்து அமர்ந்து.

     “ஏன் நான் வந்தது இடைஞ்சலா இருக்கோ?!” என்று சீறினான் பதிலுக்கு.

     “ஏன் மாமா அப்படி சொல்லுற?!” என்று சோர்வாய்க் கேட்டவள் மெல்ல எழ முயன்று, சோர்விலும் வலியிலும் மீண்டும் அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

     “என்னடி?! எந்திரிச்சுப் போய்த் தொலையேன்.” என்று அவன் மீண்டும் சிடுசிடுக்க,

     “ஹான்” என்று எழுந்தவளுக்கு மாதாமாதம் படுத்தும் அடிவயிற்று வலியும் இடுப்பு வலியும் பின்னி எடுத்தது.

     அவள் மெல்ல இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து நடக்கும் போதே அவனுக்கு ஏதோ புரிய,

     “எ என்னடி ஆச்சு?! மாசாமாசம் வர்ற வயறு வலியா?!” என்றான் தயக்கமின்றி.

     பலமுறை அவன் இங்கு ஊரில் இருந்த நாட்களில் அவளின் இந்த நாட்களின் போது அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்திருக்கிறான். அவனின் அப்பத்தா அந்த நாட்களில் அவள் அருகே போகக் கூடாது என்று எவ்வளவு திட்டினாலும் கேளாமல், அவளின் மாத நாட்களில் அவளுக்காய் பார்த்துப் பார்த்து மாதுளம் பழம் பறித்து வந்து சாறு எடுத்துக் கொடுப்பதும், பின் அவளுக்காய் மாதுளைக் கன்றுகளையே வாங்கி வந்து தங்கள் வீட்டில் வளர்த்ததுமாய் இருந்தவன் தான்.

     ஆனால் அதெல்லாம் அவன் சென்னைப் போகும் வரைதான்.  வேலை என்று வந்த பின் சம்பாதிப்பது மட்டுமே அவனுக்குப் பெரிதாகிப் போனது!

     நீண்ட நாட்களுக்குப் பின் அவன் சட்டென அப்படிக் கேட்டதில், அவளுக்கு தயக்கமே எழ,

     “ம்!” என்றாள் மெல்லிய குரலில்.

     “ஓ?!” என்றவன்,

     “சரி அதுக்கு ஏன் கீழ படுத்திருக்க? இந்நேரத்துல உனக்கு இடுப்பு ரொம்ப வலிக்கும்ல. கட்டில்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? மாதுளை ஜீஸ் குடிச்சியா?” என்றான் நொடியில்  கோபமெல்லாம் தொலைத்தவனாய் பழைய அக்கறையோடு.

     அவனது நீண்ட நாட்களுக்குப் பின்னான அக்கறையில், அவள் நெஞ்சம் கரைந்து நிற்க,

     “கேட்கறேன்ல காதுல விழல?!” என்றான் சத்தமாய்.

     “ம்!” என்றவள்,

     “அதெல்லாம் நீ போட்டுக் கொடுத்தக் காலத்தோட சரி” என்றாள் மெல்ல.

     “ஏன் அதைக் கூடச் செய்ய முடியாதா இங்க இருக்கிறவங்களுக்கு?!” என்றவன் கையோடு சென்று அந்தி சாய்ந்த நேரம் என்றும் பாராமல் மாதுளை மரத்தில் இருந்து மூன்று பழங்களைப் பறித்து வந்து, சாறெடுத்து அவளுக்குக் கொண்டு வந்துக் கொடுக்க, அவன் என்ன செய்கிறான் என்று பார்த்திருந்த வைரம், அமைதியாய் வெளியே சென்று அம்மா, கணவர், அண்ணன், கார்த்திக் என நால்வரும் அமர்ந்திருந்த  திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டார் கொஞ்சமே மனநிம்மதி பெற்றவராய்..

     “என்னடி பார்த்துக்கிட்டே இருக்க?! கையில வாங்கிக் கூடக் குடிக்க முடியாத?! ஊட்டி விடணுமா?!” என்றான் அதட்டலாய்.

     ‘ம்! ஊட்டிவிட்டா வேணான்னா சொல்லப் போறேன் மாமா?!’ என்று அவள் பெருமூச்சுடன் வாங்கிக் கொள்ள, அவன் பயணித்து வந்த களைப்பு தீர, துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.

Advertisement