Advertisement

                                *****

     இன்று, கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மாமனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி படுத்திருந்தாள் கவி.

     ‘ஏன் மாமா இப்படி எல்லாம் பண்ற?! வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்த நீ, கடைசி நொடியில என்னை விட்டுக் கொடுக்க முடியாம, நான் வேணும்னு தானே கட்டிக்கிட்ட?! அப்புறமென் இப்படி என்னையக் கொல்லாமக் கொல்லுற?!’ என்றாள் மனதோடு கரைந்து.

     ‘நாம எப்படி எல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா மாமா?! நம்ம கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கணும்னு ஆசைபட்டேன் தெரியுமா மாமா?! நமக்கு நடக்க வேண்டிய கல்யாணச் சடங்கு எவ்ளோ சந்தோஷமா நடக்கணும்னு கனாகண்டேன் தெரியுமா மாமா?!’ என்றவள் அன்று தான் கண்ட கனவுகளில் மூழ்கினாள்.

     ஒவ்வொரு சடங்கிலும் அவனின் குறும்புப் பார்வைகள் அவளைத் தொடர, அவளின் செல்ல விளையாட்டுகள் அவனின் செல்லச் சீண்டல்கள், பெரியவர்களின் ஆசீர்வாதம், குலதெய்வத்தின் ஆசி, மணமேடையில் அவளின் நாணப் பார்வைகள் அவனின் காதல் பார்வைகள், பரஸ்பர புரிதல், புரிதலோடு கூடிய நெகிழ்வான தருணமான மாங்கல்யம் சூடும் நேரம் என்று எத்தனை எத்தனையோ கனவுகள் தான் விவரம் தெரிந்த நாள் முதல் அவளுக்கு. ஆனால் எல்லாவற்றையும் பொடிபொடியாக்கி விட்டு, இப்போதும் இவன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பவனை என்னவென்று சொல்வது?!

     ஆணென்ன பெண்ணென்ன எல்லோருக்குமே திருமணம் என்பது மிகப் பெரிய கனவும் வாழ்வின் திருப்பமும் அல்லவா?! அந்தக் கனவும் திருப்பமும் நல்லதாய் அமையாத போது எல்லோருக்குமே அது சற்று நிராசையாகத்தான் போய்விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை திருமணத்திற்கு பின் அமையும் வாழ்வாவது நல்லதாய் அமைந்து விட்டால் அந்தக் குறைகள் நீங்கிவிடலாம். ஆனால் அதுவுமே போராட்டம் என்றால்?!

                                  *****

     மறுநாள் அவன் எழும் முன்பே எழுந்து சென்று குளித்து முடித்து வந்தவள், எப்போதும் போல் மாமனுக்காய் அம்மா பார்த்து பார்த்து ஏதேனும் செய்து வைத்திருப்பாரோ என்று எண்ணியபடி சமையற்கட்டிற்குள் நுழைய, அங்கு வைரமோ, வெறுமென இட்டிலியையும், கடலைத் துவையலையும் அரைத்து வைத்திருந்தார்.

     அதைக் கண்டு தாயை முறைத்தவள், “என்னமா இது?!” என,

     “எனக்கு உடம்புக்கு முடியலை!” என்றுவிட்டு அவர் வெளியே சென்றுவிட,

     “என் மாமனுக்கு ஆக்கிப்போட முடியலைன்னா என்கிட்டே ஒருவார்த்தை சொல்ல வேண்டியதுதானே! நான் செஞ்சிட்டுப் போறேன்” என்று பொரிந்தவள், தானே கடைக்குக் சென்று கறி எடுத்து வந்து ஒரு மணி நேரத்தில் அவனுக்காய் மணக்க மணக்க ஆக்கி இறக்கினாள்.

     அவள் சமையல் முடித்து வெளியே வரும் நேரமே அவன் உறக்கம் களைந்து எழுந்து வெளியே வர,

     “கொல்லப் பக்கம் அடுப்புல தண்ணி போட்டிருக்கேன் மாமா. நல்லெண்ணையும் சீயக்காயும் கூட அங்கேயே எடுத்து வச்சிருக்கேன்” என்று அவள் சொல்ல, அவன் வைரத்தைப் பார்த்தான்.

     அவர் வேண்டுமென்றே அவனைப் பார்க்காதது போல் நகர்ந்து சென்றுவிட, அவன் முகம் வாடிப் போனது.

     வைரம் நேற்று அவன் ஊருக்கு வந்தது முதலே அவனிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை! ஏன், அன்று திருமணத்தின் போதிலிருந்தே அவர் அவனிடம் பேசாமல் தான் இருந்தார். அவனாய் போன் செய்த போதும் கூட அவர் அவனிடம் பேசவே இல்லை! அவன் அத்தை தன்னை ஒதுக்கி வைக்கிறாரே என்ற கவலையில் நின்றிருக்க, கனகாம்புஜம் பாட்டியோ வேண்டாத வேலையாய் அவன் கோபத்தை இன்னுமே கிளரும் வகையில் இடைபுகுந்து,

     “ஏன்டி கூறுகெட்டவளே எல்லாத்தையும் எடுத்து வச்சேன் எடுத்து வச்சேன்னு சொன்னா போதுமா?! அவனுக்குப் போயி எண்ணெய் தேய்ச்சி தலை கசக்கிவிடேன். கல்யணம் ஆனா பிறவும் உங்க ஆத்தாளே அவனுக்குச் சேவை செய்யணுமா?!” என்று  அவளை திட்ட ஆரம்பிக்க, அவனோ சட்டென பாட்டியின் எண்ணம் புரிந்து,

     “இல்லல்ல! அதெல்லாம் யாரும் செய்ய வேணாம் நானே பார்த்துக்கறேன்” என்றுவிட்டு விறுவிறுவென பின்கட்டுக்கு நடந்தான்.

     ‘இவ எண்ணெய் தேய்ச்சுவிட்டா நான் உருகிடுவேனாக்கும்?!’ என்று நக்கலடித்துக் கொண்டே தானே எண்ணெயை ஊற்றித் தேய்க்கத் துவங்க,

     “அடியே பையித்திகாரி, உனக்கு ஒவ்வொண்ணும் படிச்சுப் படிச்சு சொல்லித் தரணுமா?! போடி போ” என்று அவளை மறுபடியும் திட்டி அனுப்ப,

     ‘கெழவி போகலைன்னா திட்டும்! மாமா போனா திட்டும்?! என்னத்தச் செய்ய?!’ என்று எண்ணியபடியே அவள் தயங்கித் தயங்கி பின்கட்டுக்குச் செல்ல, அவன் எண்ணையை மேலேயேயும் கீழேயும் ஊற்றிக் கொண்டு ஒழுங்காய்த் தேய்க்கக் கூடத் தெரியாமல் தேய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அந்த நிலையிலும் கூட அவளுக்கு சிரிப்பு வந்தது.

     ‘பெரிய உத்தியோகம் பார்க்கத் தெரியுது! ஆனா ஒழுங்கா எண்ணெய் கூட தேய்ச்சிக் குளிக்கத் தெரியலை!’ என்று முணுமுணுத்தபடி மெல்ல சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனருகே சென்றவள்,

     “குடு மாமா” என்று அவன் கையில் இருந்த எண்ணெயை வாங்க,

     “வேணாம் வேணாம்” என்று சிடுசிடுப்பாய் மறுத்தவனிடம் இருந்து வலுக்கட்டாயமாய் வாங்கியவள், கொஞ்சமாய் எண்ணையைக் கையில் ஊற்றி அவன் உச்சந்தலையில் வைத்து நன்றாய் சுடு பறக்கத் தேய்த்து விட, அவனுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.

     சிறுவயது முதல் கூடவே வளர்ந்திருந்தாலும் இதுவரை அவளிடம் உணர்ந்திராத ஏதோ ஓர் உணர்வு அவனுள் தலைதூக்க, அவன் மெல்ல பார்வையை அவள் மீது செலுத்தினான்.

     அவன் அமர்ந்தவாக்கிலும் அவள் நின்ற வாக்கிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்க, தலை குனிந்து கொண்டிருந்தவனுக்கு, அவளின் தூக்கிச் செருகி இருந்த புடவையின் நிமித்தம், அவளது மஞ்சள் பூசிய கணுக்காலும் சின்னஞ்சிறு பாதமும், அதில் அவன் அணிவித்த மெட்டியும், அவனது முதல் சம்பளத்தில் அவளுக்கு வாங்கிக் கொடுத்த கொலுசும் தான் தெரிந்தது.

     ‘என் கவியோட பாதம் இவ்ளோ அழகா?!’ என்று அவன் எண்ணம் போக, மெல்ல அவன் கண்கள் தானே மேலே உயர்ந்தன.

     இதுவரை அவள் அவனைக் காணாத, காண நினைக்காத பார்வை! மேல உயர்ந்த அவனது விழிகள், அவள் புடவை முந்தானையை இடுப்பில் செருகி இருந்த இடத்தில வந்து நிற்க, முந்தியைச் செருகி இருந்ததினால், தெரிந்த அவளது இடுப்புப் பகுதியில் அவனது கண்கள் தடுமாறி நின்றன.

      அதோடு இதுநாள் வரை அவன் உணராத அவளது மேனியின் மஞ்சள் கலந்த தனி வாசம் அவனுள் புது மயக்கத்தைத் தூண்ட, கிறங்கிப் போய்க் கிடந்தான் தன் வரட்டுப் பிடிவாதம் கோபம் எல்லாம் மறந்தவனாய்.

     ஆனால் எத்தனையோ வருடமாக இந்த தருணத்தை எல்லாம் ஆசை ஆசையாய் எதிர்பார்த்துக் காத்திருந்தவளோ இன்று தன் கடமையென நினைத்து அவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் தன் ஆசைகள் துறந்தவளாய்!

     ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும்?! இங்கு நடக்கும் கூத்தை எல்லாம் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு துவைத்த துணிகளைக் காய வைக்க வந்திருந்த கங்கா பார்த்துவிட, தோழிக்கு அவள் நினைத்த வாழ்வு அமைந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் மனம் துள்ளியது.

     ‘பார்றா இந்த அண்ணன்! அவளை வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்குறதை?!’ என்று எண்ணிக் கொண்டு,

     ‘ம் நடக்கட்டும் நடக்கட்டும்?!’ என்று சிரித்தபடி துணிகளைக் காய வைக்கத் துவங்கினாள்.

     ஆனால் அவள் துணிகளைக் காய வைத்து முடிக்கும் வரை கூட இவள் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்க, கங்காவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

     “அடியே வருஷக் கணக்கா இருந்த ஆசைய ஒரே நாள்ல எண்ணெய் வச்சுத் தீர்த்துக்காத! குளிர்ச்சியில அண்ணனுக்கு ஜன்னி கின்னி வந்துடப் போகுது!” என்று தன் வாயை அடக்கமாட்டாமல் கங்கா குரல் கொடுத்துவிட, அதுவரை தன் மனைவியை தாறுமாறாய் ரசித்துக் கொண்டிருந்தவன் தான் இருக்கும் சுற்றுப் புறம் உணர்ந்து,

     “ச்சே!!” என்று தன்னையே கடிந்து கொண்டு பட்டென தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

     கங்காவின் கேலியில் கவிக்குமே படபடப்பாகிவிட, “ந நான் எண்ணெய் தேய்ச்சுட்டேன் மாமா! நீ நீயே சீயக்காய் தேய்ச்சுக் குளிச்சுக்கோ!” என்றுவிட்டு விடுவிடுவென உள்ளே ஓடிவிட்டாள்.

     அவள் ஓடிய பின்பே தான் பார்த்திருந்த பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன்,

     ‘ச்சே! என்னடா பண்ணி வச்சிருக்க நீயி?! அவளை வேணாம் வேணாம்னு சுத்திக்கிட்டு பார்க்கக் கூடாது இடமெல்லாம் பார்த்து வைக்கிற?! ச்சே! கொஞ்சமாச்சும் சூடு சொரணை இருக்காடா உனக்கு?! உன்னை வேணாம்னு முடிவெடுத்து அவனைக் கட்டிக்கப் போனவளைப் போயி இப்படி முறைச்சு முறைச்சுப் பார்க்குறியே வெட்கமாயில்லை!’ என்று எப்போதும் கிறுக்குத்தனமாய் யோசிக்கும் அவன் புத்தி அவனை உசுப்பேற்றி விட, வேகமாய் அவள் வெளாவி வைத்திருந்த சுடுநீரை மோர்ந்து தன் தலையில் ஊற்றி அவள் நினைவுகளையும் நீரோடு சேர்த்து மண்ணில் வழியவிட்டான்…

                                        -உள்ளம் ஊஞ்சலாடும்…

        

    

 

                 

    

      

Advertisement