Advertisement

                                                                12

 

    ‘சிரிப்பா சிரி! பெத்த பிள்ளையோட வாழ்க்கைக்கு ஆப்பு வச்ச முதல் அப்பா நீயாதான் இருப்ப!’ என்று பல்லைக் கடித்தபடி முனகியவன், கார்த்திக்கை அடித்து துவம்சம் செய்து அங்கிருந்து வெளியே தள்ளிவிட்டுட்டு தான் அந்த இடத்தில நிற்க வேண்டும் என்பது போல் பரபரத்த மனதை சபை நாகரிகம் கருதி வெகுவாய்க் கட்டுப் படுத்தி கொண்டு நின்றான் கற்சிலையாய்.

     புகைப்படம் எடுக்கும் போது மட்டும் அல்லாமல், சாப்பிடும் போதும் கார்த்திக், பிரதாப், கிஷோருடன் சேர்த்து கண்ணனையும் தங்கள் அருகே வந்து சாப்பிடுமாறு வற்புறுத்த, அவனுக்கும் அவளுக்கும் மனம் போர்க்களமாய் ஆனது. அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொரு நொடியும் கண்ணனின் மனம் வெகுவாய் திண்டாடிக் கொண்டிருந்தது கோபத்திலும், வேதனையிலும்.

     அவனுக்குப் புரியவில்லை! இப்போது கூட அவன் அவளை விரும்புகிறானா என்று புரியவில்லை! ஆனால் அன்று நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவனால், இன்று அவளை இன்னொருவனின் மனைவியாக கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியவில்லை!

    பெயருக்கென நான்கு வாய் உண்டவன், விருட்டென அங்கிருந்து எழுந்து வெளியேற ஒருவாய் கூட உண்ண முடியாமல் கண்கள் சிந்திய கண்ணீரை தலையை நன்கு குனிந்தபடி தனது இலையிலேயே சிதறவிட்டு அவன்பால் உருகிக் கொண்டிருந்த  மனதைக் கடிவாளமிட்டு அடக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் அவனின் மேல் உயிரையே வைத்திருப்பவள்.

     அவளைப் பார்க்கப் பார்க்க இதுவரை அவனுள் எழுந்த வேதனையெல்லாம் இப்போது பெரும் கோபமாய் உருமாறிக் கொண்டிருந்தது அவனுள்.

     சாப்பாட்டு மேசையிலிருந்து எழுந்து வெளியேறியவன் தனது வண்டியை எடுத்துக் கொண்டு நேராய் அவர்கள் ஊரில் இருந்த வொயின் ஷாப்பை தஞ்சமடைந்தான் தன் மன வலியைப் போக்க எண்ணி.

     கோபம் தீர்க்க எண்ணி தனது காரில் அமர்ந்தபடி வெகு நேரம் குடித்துக் கொண்டே இருந்தவன், அப்போதும் கோபம் கனன்று கொண்டே இருக்க, காலியான பாட்டில்களை ஒவ்வொன்றாய் தூக்கிப் போட்டு உடைத்தான் கார்த்திக்கை அடித்துத் துவைப்பதாய் நினைத்துக் கொண்டு.

     அவன் செய்த செய்கையைப் பார்த்து, ஓரிருவர், ‘இது தங்கரத்தினம் பையன்தானே இவன் ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான்?!’ என்று முனகிக் கொண்டே செல்ல, அவனுக்கு தந்தையின் மீது கோபம் திரும்பியது.

     “நான் வேணான்னு சொன்னா விட்டுட்டுப் போக வேண்டியதுதானே?! என்ன மயிருக்கு அந்த நாயிக்கு கட்டிக் கொடுக்கறேன்னு இவர் நடுவுல வரணும்?!’ என்று பற்களைக் கடித்தபடி சொன்னவன்,

     “அவனை அவனை கூட்டிட்டு வந்தேன் பாரு என்னை என்னை செருப்பால அடிச்சுக்கணும்!” என்று தன்மேலும் கோபம் கொண்டவன்,

     “நான் வேணானா அவன் பொண்ணு கேட்கபானா என் கவியை?!” என்று சீற்றம் கொண்டான் அடுத்த நொடி.

     நொடிக்கு நொடி ஒவ்வொருவர் மேலும் கோபம் கொண்டிருந்த மனது, இறுதியாய் அவனை நேசித்தவளிடம் வந்து நிற்க,

     “என்னடி என்னடி அப்படிக் பார்க்குற?!” என்றான் எப்போதும் தான் ஊருக்குக் கிளம்புமுன் காரின் முன் சீட்டில் தன்னருகே அமர்ந்து கொண்டு,

     “மாமா ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போய் விட்டுட்டுதான் நீ கிளம்பணும்” என்று அடம்பிடித்தபடி அமர்ந்திருக்கும் அத்தை மகள் அங்கு இல்லாத போதும் இன்று இருப்பதாய் கற்பனை செய்து கொண்டு.

     “கேட்குறேன்ல?! இன்னும் என்னடி முறைப்பு?!” என்றான் மீண்டும் அங்கே இல்லாதவளிடம். குடி போதை கண்ணை மறைத்து மனதைத் திறந்து வைத்திருந்தது அவனுக்கு.

     “ஏய் நீ நிஜமா எல்லாம் என்னை விரும்பலைடி! சும்மா சும்மா உசிரு, —- சொல்லிக்கிட்டுத் திரிஞ்சிட்டு, இன்னிக்கு அந்த, அந்தக் கார்த்திக் நாயோட ஜோடி சேர்ந்தாடி நிக்குற?” என்று அருகே இல்லாதவளின் கழுத்தை நெரிப்பது போல் போகவும்தான் அவள் அங்கு இல்லை என்பது உரைத்தது அவனுக்கு.

     பையித்தியக்காரனைப் போல் தன்னந்தனியாய் புலம்பிக் கொண்டிருந்தவனின் கோபம் மேலும் மேலும் கூட, ஒரு கட்டத்தில் வண்டியைக் கிளப்பிக் கொண்டு கண் மண் தெரியாமல் ஓட்டத் துவங்கினான்…

     நடுநிசியைத் தாண்டிய நேரமாதலால், அந்த கிராமத்து வீதிகள்  வெறிச்சோடி கிடக்க, அதில் மூர்க்கத்தனமாய் ஓடிய அவனது வண்டியின் சப்தம் நாராசமாய் காதுகளைக் கிழித்தது.

     திண்ணைகளில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிலர் அலறிக் கொண்டு எழுந்தனர் அவனின் இந்தச் செயலால்.

     “ஏ! எடுபட்ட பயலே?! எதுக்குடா இந்த நேரத்துல இப்படிக் கண்மண் தெரியாம வண்டியை ஓட்டிகிட்டு போறா?! எங்கயாச்சும் முட்டிக்கிட்டுச் சாகவா?!” என்று ஒரு பெரியவர் எழுந்து வைய, அதெல்லாம் அவன் காதில் விழுந்துவிடுமா என்ன?!

     அதோடு அவன் ஒட்டிய வேகத்தில் தெருவில் இருந்த நாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குரைத்துக் கொண்டு வர, வண்டிக்கு எதிரேயும் சில நாய்கள் வேகமாய் ஓடி வரவும், சடாரென்று ப்ரேக் இட்டு நிறுத்தினான் கண்ணன்.

     குடியின் உபயத்தால் ப்ரேக் அடித்த வேகத்தில் அவனால் சுதாரிக்க முடியாது போக, நெற்றி நன்கு ஸ்டியரிங்கில் இடித்துக் கொண்டது. இடித்த வேகத்தில் நொடியில் ரத்தம் வரத் துவங்க, ஏற்கனவே போதையால் செருகிக் கொண்டிருந்த அவன் விழிகள் இப்போது மயக்கத்தில் மொத்தமாய் செருகிக் கொண்டு போனது. அவன் எவ்வளவு முயன்றும் அவனால் தன் சுயநினைவைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது போக, ஸ்டியரிங் மேலேயே மயங்கிச் சரிந்தான்…

     “என்ன அப்படி ஓடுன வண்டி சட்டுன்னு நின்னுடுச்சு?!” என்று சற்று முன் திட்டிய அந்தப் பெரியவர், எழுந்து அவனது வண்டியை நெருங்கி உள்ளே பார்க்க,

     “அடக் கடவுளே?! இது தங்கரத்தினம் மவன்தானே! இப்படி விழுந்து கெடக்கான்?!” என்று பதறியபடியே, குரைத்துக் கொண்டிருந்த நாய்களை விரட்டிவிட்டு அவர் கதவைத் திறந்து தொட்டு அவனை எழுப்ப, அவனிடம் எந்த அசைவும் இல்லை!

     “ஏடேய் ஏடேய் முருகா?! இங்க எழுந்து வா!! இங்க இவ்வளவு கூத்து நடந்துருக்கு?! எப்படி குறட்டை விட்டுக்கிட்டு தூங்குறான் பாரு?!” என்று தங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகனை அவர் குரல் கொடுத்து எழுப்ப அவனோ, உழைத்த களைப்பில் அடித்துப் போட்டதைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்.

     “ஏடேய் எழுந்திருடா” என்று அவன் அருகே சென்று அவனைத் தட்டி எழுப்பியவர்,

     “ஏடேய், தங்கரத்தினதோட மவன் வண்டியில இடிச்சிக்கிட்டு மயங்கிக் கெடக்கான். எழுந்து வந்து அவனை ஒரு கைப்புடிச்சுத் தூக்குடா?!” என்று அந்தப் பெரியவர் சொல்ல,

     “ஹான்?!” என்று அலறி அடித்துக் கொண்டு வந்த முருகன், கண்ணனை நெருங்க,

     “அய்யே இவன் சாராயம் குடிச்சு மயங்கிக் கெடக்கான் போல?!” என்றான் முகம் சுளித்து.

     “இல்லடா! அங்க பாரு நெத்தியில ரத்தம் வழியுது! ஒரு கை புடி! கொண்டு போய் திண்ணையில படுக்க வச்சு மயக்கம் தெளிய வச்சு மருந்து போடுவோம்” என்றார் அவர்.

     “அட ஆமா?!” என்றவன், பெரியவர் சொன்னது போல் அவனை வெகு பாடு பட்டுத் தூக்கிக் கொண்டு சென்று திண்ணையில் படுக்க வைக்க, அந்தப் பெரியவர், தனது மனைவியையும், குரல் கொடுத்து எழுப்பி, அவனுக்கு தண்ணீர் எடுத்து வரச் சொல்லிப் பணித்தார்.

     “டேய் முருகா, நம்ம வூட்டுத் தோட்டத்துலயே மூக்குத்திப் பூச்செடி இருக்கு பாரு, போய் வெரசா அதோட இலையைப் பறிச்சுக் கொண்டா” என்றும் கட்டளையிட,     

     “ஹான் இதோ வந்துடறேன்” என்று ஓடினான் அவனும்.

     மனைவி கொண்டு வந்த தண்ணீரை அவன் முகத்தில் தெளித்த பின்னும் அவனிடம் இருந்து சிறு முனகல் மட்டுமே வந்ததே தவிர அவனுக்கு சுயஉணர்வு வரவில்லை மதுவின் தாக்கத்தால்.

     “குடிச்சிருக்கு போலங்க?!” என்று அந்த அம்மாவும் கேட்க,

     “ம்! அங்க இவ அத்தை மகளுக்கு விடிஞ்சா கல்யாணம். அங்க ஓடியாடி வேலை செய்ய வேண்டியவன் இங்க இந்த கதியில படுத்துக் கெடக்கான்?!” என்றார் அவரும்.

     “ஒருவேளை அந்தப் புள்ளைக்கு வேற ஒருத்தரோட பேசி முடிச்சதுல சங்கடமோ?!” என்று அந்த அம்மா கேட்க,

     “அடி ஏன்டி நீ வேற?! இந்தப் பய வேணாம்னு சொன்னதுனால தானே இவன் கூட்டாளி பொண்ணு கேட்டு முடிச்சிருக்கான்!” என்றார் விஷயம் தெரிந்தவராய்.

     “ஓ?!” என்று சந்தேகமாய்க் கேட்ட அந்த அம்மா,

     “சரி அந்தப் பையன் அப்படியே உறங்கட்டும். நீங்களும், முருகன் இலையப் பறிச்சிட்டு வந்ததும், காயத்துல சாரைப் பிழிஞ்சி விட்டுட்டு இந்தப் பக்கத் திண்ணையில படுத்துக்கோங்க. என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

     அதற்குள் முருகனும் வந்துவிட, மூக்குத்திப் பூச்செடியின் இலைகளை பிழிந்து சாறெடுத்து அவனது காயத்தில் ஊற்றிய அந்தப் பெரியவர்,

     “புள்ளை நல்லா கண்ணுக்கு லட்சணமா இருக்கான். ஆனா பட்டணத்துக்குப் போயி மனசைக் கெடுத்து வச்சிருக்கான். அவங்க அத்தையும், அப்பனும் கண்ட கனவு கனவாவே போச்சு” என்றார் சங்கடமாக.

     அவர்கள் பேசியது எதுவுமே காதில் விழாமல், அவளது நினைவுகளும் மனப் போராட்டங்களும் இல்லாமல் அவன் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் அங்கு மண்டபத்தில் இருக்கும் தன் தந்தையையும், தன்னை நேசிப்பவளையும் மறந்த நிலையில்…

                                             -உள்ளம் ஊஞ்சலாடும்…     

       

    

     

 

      

        

    

    

         

 

Advertisement