Advertisement

    “என்னடா சொல்றான் இவன்?!” என்று நினைத்துக் கொண்டே நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்க்க, கண்ணனோ, பித்துப் பிடித்தவன் போல் நின்றிருந்தான்.

     “பேசுடா” என்பது போல் பிரதாப், கிஷோரைப் பார்த்து கண்களால் சைகை செய்ய,

     “என்னத்தப் பேச?! அதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டானே?!” என்றான் கிஷோர் மெல்லிய குரலில் பிரதாப்பை முறைத்தபடி.

     “இதோடா, நான் கேட்டதுனால்தான் அவனுக்கு அவன் அத்தை பொண்ணு மேல விருப்பம் வந்துச்சா என்ன?!” என்று பிரதாப்பும் மெல்லிய குரலில் கேட்க,

     அவர்கள் எவ்வளவுதான் மெதுவாய் தங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாலும், அது கண்ணன் காதுகளை எட்டி இருந்ததால்,

     “மூடிட்டு இங்கிருந்துப் போறீங்களா?!” என்று கடுப்பில் அவர்கள் மேல் எறிந்து விழுந்தான்.

     இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அங்கேயே நிற்க,

    “போங்கன்னு சொன்னேன்” என்று அவன் மீண்டும் மிரட்ட,

    “கண்ணா இதெல்லாம்” என்று கிஷோர் ஆரம்பிக்க,

    “இப்ப நீங்க போறீங்களா?! இல்லை நான் போகட்டுமா?!” என்றான் அதட்டலாய்.

     இதற்குமேல் அவனிடம் பேசினாலும் பிரச்சனைதான் வளரும் என்று எண்ணிய கிஷோர்,

     “வாடா” என்று பிரதாப்பைக் கைபிடித்து இழுக்க,

     “இவன் பண்றது அநியாயம்டா! அன்னிக்கு இவன் அப்பா அந்தப் பொண்ணுக்கும், இவனுக்கும் நிச்சயம் முடிவு பண்ணதுக்குதானா இவன் அந்த ஆட்டம் ஆடுனான்! இப்போ என்னன்னா இப்படிப் பேசுறான்?! நாளுக்கு நாள் மனசை ம்திகிட்டே இருப்பானா இவன்?! இவன் பேசுறதை மட்டும் யாராச்சும் கேட்டா என்னடா நினைப்பாங்க?! அந்தப் பொண்ணு என்ன கீ குடுக்குற பொம்மையா இவங்க எல்லோரும் நினைச்சபடி ஆட?!” என்று பிரதாப் புலம்பியபடியே கிஷோருடன் செல்ல, அது கண்ணனின் காதுகளிலும் நன்கு விழுந்தது.

     ‘ஆமாம்! அவ என்ன பொம்மையா நாங்க எல்லோரும் நினைச்சுபடி அவளை ஆட்டி வைக்க?!’ என்று எண்ணியவனுக்கு, இன்னொரு எண்ணமும் ஏட்டிக்குப் போட்டியாய் உதித்தது.

     ‘அதானே?! அவளுக்குன்னு ஒரு விருப்பம் இருந்தது தானே?! அப்புறம் எப்படி அவ இவங்க சொன்னவுடனே அவனைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா?! அவ உண்மையா என்னை விரும்பியிருந்தா இப்படி பண்ணியிருக்கக் கூடாதுல்ல?!’ என்று அவள் மீதே பழியைத் தூக்கிப் போட்டான் இப்போதும்.

     ‘அப்போ சும்மா சும்மா மாமா மாமான்னு என்னை சுத்தி வந்துட்டு, நான் வேணான்னு சொன்னதும் விட்டுட்டுப் போயிட்டா?! அவ இல்லை எனக்குப் பேசி புரிய வச்சிருக்கணும்?! நான் வேணான்னதும், குழம்பை எடுத்து தலையில கவுத்துட்டு போயிக்கிட்டே இருந்துட்டு இப்போ, இப்போ இப்படி என்னை சாகடிக்கிறாளே?!’ என்று யோசித்தான் கிறுக்குத்தனமாய்.

     “டேய் டேய் ஏற்கனவே உன்னை எல்லோரும் லூசுன்னு திட்டிக்கிட்டு இருக்காங்க! இதுல நீ இப்படி எல்லாம் யோசிச்சா இன்னும் ஏடாகூடமா திட்டுவாங்கடா உன்னை ஹீரோன்னு கூட மதிக்காம!” இது நம்ம மைன்ட் வாய்ஸ்.

     மணித்துளிகள் வெகுவேகமாய் செல்வது போல் இருந்தது கண்ணனுக்கும் கவிக்கும். மறுநாள் அவளின் நிச்சயமும், வரவேற்பும் நடக்கவிருக்க, அவனுக்கும் அவளுக்குமோ,

     ‘ஐயோ நாளைய நாள் உதிக்காமலே இருந்துவிடக் கூடாதா?!’ என்றிருந்தது.

     நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?!

     மறுநாள், கவி, கார்த்திக்கின் நிச்சயம் முடிந்து அவர்கள் இருவரும் வந்தவர்களை வரவேற்கும் வண்ணம் மேடையில் நின்றிருக்க, அதைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

     அவன் அவளைக் காண்பதைத் தவிர்க்க எண்ணி வெளியே வெளியே சென்று நின்று கொண்டும், பந்தி பரிமாறும் இடத்திற்குச் சென்றும் வந்தும் கொண்டிருக்க, தங்க ரத்தினம், அவனை இம்சை செய்யும் விதமாய் மீண்டும் மீண்டும் யாரிடமாவதுச் சொல்லி அவனை மேடையின் அருகே அமர்ந்திருக்கும் அவர் அருகே வந்து அமரச்  சொல்லி வெளியூரிலிருந்து வந்திருந்த முக்கியமான உறவினர்களிடம் அவனை அறிமுகப் படுத்திக் கொண்டே இருந்தார் ஓயாமல்.    

     ஒருகட்டத்தில் மிகவும் கடுப்பான கண்ணன், “எத்தனை முறைதான் கூப்பிட்டு அனுப்புவீங்க?!” என்று கத்த,

     “என்னடா இப்படி சொல்ற?! நீதான பட்டணத்துப் பொண்ணாதான் கட்டணும்னு ஆசைப்பட்ட! இவுங்கள்ல முக்கால்வாசிப் பேர் பட்டணத்துக்காரங்க தெரியுமா?! உன்னைப் பார்த்தா அவங்களுக்கும் அவங்க பெண்ணை கொடுக்க ஏதாச்சும் எண்ணம் வருதான்னு பார்க்குறேன்” என்று குத்தலும் சிரிப்புமாய்ச் சொல்ல,

     “ஓ!” என்று கடுப்புடன் கேட்டுக் கொண்டவன்,

     ‘எல்லாம் நீங்க பண்ண வேலைதான்?! அவ பாட்டுக்கு வேணான்னு சொன்னா இல்லை, பேசாம விட வேண்டியதுதானே?!’ என்று தந்தை மீதும் கோபம் கொண்டான் தான் செய்ததை எல்லாம் மறந்து போனவனாய்.

     அவனுக்கு திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையாய் வலித்துக் கொண்டிருந்தது உள்ளுக்குள். தானே வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்று தானே அவள் இன்னொருவனுக்குச் சொந்தமாவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பதும் கோபம் கொள்வதும் அவனுக்கு பெரும் இம்சையாய் இருந்தது. அதிலும் அவன் நண்பர்கள் இருவரும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு இன்னும் அதிகமாய்  கோபம் எழுந்தது.

     ‘இவனுங்களை ஊருக்குக் கூட்டிட்டு வந்ததுனால தானே இதெல்லாம்?! என்னையே சுத்தி சுத்தி வந்த என் கவி இப்போ இப்போ?!’ என்று எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

     அவளுமே அந்த மேடை மேல் நிற்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய் உருகிக் கொண்டிருந்தாள், வெளியே போலிப் புன்னகையைச் சுமந்தும் மனதில் அவனைச் சுமந்தும்.

     அவளால் ஒரு நொடி கூட அவளது மாமனைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை! ஒவ்வொரு கணமும் பார்க்க ஏங்கும் அவன் வதனத்தை இன்று ஒரு நொடி கூட சந்திக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் தவிப்புடன்.

     ஆனாலும் முன் வரிசையில் தனது தாய்மாமனுடன் அமர்ந்திருந்தவனை அவளால் எவ்வளவு முயன்றும் பாராமல் தடுக்க முடியவில்லை!

     அவனுக்கும் ஒவ்வொரு நொடியும் அவளைப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் எழுந்தாலும் அதையும் மீறி அவள் புறமே பார்வை திரும்ப இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்ட நொடிகள் இருவருக்குமே நரகமாய் அமைந்தன.

     அந்த நரக நொடிகளைத் தவிர்க்க எண்ணி சட்டென எழுந்து செல்லப் போனவனை, மீண்டும் அழைத்த தந்தையை வெகுவாய் முறைத்துவிட்டு,

     “சும்மா சும்மா என்னை கூப்பிடுற வேலை வச்சுக்காதீங்க?!” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு, அவன் விடுவிடுவென கூடத்தை விட்டு வெளியே செல்லப் போக, ஒரு சிறு பெண் ஓடிவந்து,

     “மாமா!” என்று அவன் கைப்பிடித்து நின்றாள்.

     “என்ன?!” என்று திரும்பியவன், மீண்டும் தந்தைதான் அழைத்தாரோ என்று கோபமாய் அவரை நோக்க,

     “இங்க வாங்களேன்” என்று அந்த சிறுமி, கைப்பற்றி இழுத்துச் செல்லவும், எங்கே என்று புரியாமல் அவன் நடக்க, அந்த பிள்ளை, அவனைக் கார்த்திக், கவி இருவரும் நிற்கும் மேடை அருகே இழுத்துக் கொண்டு செல்ல, அவன் உடலெல்லாம் குப்பென்று வியர்த்தது.

     “இங்க எதுக்கு அழைச்சிட்டு வந்த?! என்ன வேணும் உனக்கு?!” என்றான் சிறுமியைப் பார்த்து.

     “நீங்க வாங்க சொல்றேன்” என்று அந்தப் பிள்ளை எதுவும் சொல்லாமல் அவனை மேடை மேல் ஏறச் சொல்லி அடமாய் கைப்பிடித்து இழுக்க,

     அவன் கார்த்திக்கையும் அவளையும் வெகுவாய் முறைத்துக் கொண்டே மேலேறினான்.

     “நீங்க சொன்ன மாதிரியே இந்த மாமாவ எங்க போறோம்னு சொல்லாமயே கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று பிள்ளை சிரிக்க,

     ‘பயபுள்ள கடைசி நேரத்துல கோர்த்து விட்டுடுச்சே?!’ என்று மைன்ட் வாய்சில் புலம்பிய கார்த்திக்,

     ‘சரி விடு!’ என்று சாதாரணமாய் தேற்றிக் கொண்டு,

     “என்னடா கண்ணா இது? என்னோட பெஸ்ட் பிரெண்ட் நீ. நீ என் கல்யாண ஆல்பம்ல இல்லைன்னா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?! வா வந்து நில்லு” என்று சட்டென கண்ணனும், கவியும் எதிர்பாரா வண்ணம் கண்ணனின் கைபிடித்து இழுக்க, கண்ணன் எதிர்பாராமல் அவன் இழுத்ததும், சட்டென முன்னே வந்த கண்ணன் கவி கார்த்திக் இருவருக்கும் நடுவில் வந்து நின்றுவிட,

     “டேய் இதெல்லாம் அநியாயம்! அவ இனி என் மனைவி, உன் அத்தைப் பொண்ணுங்குற உரிமை எல்லாம் எப்போவோ போச்சு! நீ இப்போ இந்தப் பக்கம் வந்து என் பக்கத்துல நில்லு” என்றான் இருவரின் மனவேதனையையும் அதிகரிக்கும் விதமாய். அவன் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு, கவி, கண்ணன் இருவருக்குமே அத்தனை வேதனையும் ஆத்திரமும் பொங்கியது.

     ‘எல்லாம் இந்த ரத்தினம் மாமாவாலதான்?!’ என்று அவளும்,

     ‘இந்த அப்பாவை?!’ என்று இருவருமே சொல்லி வைத்து போல் ரத்தினத்தை முறைக்க அவரோ, முகம் முழுக்க சந்தோஷமாய் யாரோ ஒரு உறவினருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

 

Advertisement