11

     “எனக்கு உங்க பொண்ணைக் கட்டிக் கொடுங்க! நான் அவங்களை மகாராணி மாதிரி வச்சுப் பார்த்துக்கறேன்” என்று கார்த்திக் சொன்னதும் எல்லோருமே சில கணங்கள் திகைத்துப் போயினர் என்ன சொல்வது என்று புரியாமல்.

     மற்றவர்கள் ஒருவிதமான திகைப்பில் இருக்க, கண்ணன் மற்ற அனைவரையும் விட மிகுந்த திகைப்போடும், கோபத்தோடும் அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்திருந்தான்.

     கவியுமே, ‘என்ன இவங்க இப்படிக் கேட்டுட்டாங்க?!’ என்று கார்த்திக்கைக் கோபமும் வேதனையும் சேரப் பார்த்திருக்க,

     வைரமும், வீரபாண்டியும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொள்ள, தங்கரத்தினம் யாருமே எதிர்பாராத வண்ணம் அவ்வார்த்தைகளை உதிர்த்தார்!

     “கட்டிக்கோய்யா! எம்மருமவள நான் உனக்கு என் மனசார கட்டிக் கொடுக்கறேன். கட்டிக்கோ” என்றார் மனமும் கண்களும் கலங்க.

     “மாமா??!!” என்று கவி உயிர் துடிக்க தன் தாய்மாமனைப் பார்க்க,

     “கன்னுக்குட்டி, நீ இதை மறுத்து ஒரு வார்த்தைப் பேசினாலும் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்றார் அதிரடியாய் ஒரு முடிவை எடுத்து.

     “அண்ணே! என்ன இது?! இது யோசிச்சு எடுக்க வேண்டிய முடிவு அண்ணே” என்று வைரமும் மறுக்க,

     “ஆமாங்க மாமா! நம்ம கவியோட மனசையும் நினைச்சுப் பாருங்க” என்றார் வீரபாண்டியும்.

     பாட்டியும், “எல்லோரும் சொல்றதுதான் ய்யா சரி! இதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கக் கூடாது!” என்றார் மறுப்பாய்.

     “நான் எம்மருமகளுக்கு எது செஞ்சாலும் அது நல்லதாதான் இருக்கும்னு நீங்க எல்லோரும் நம்புனீங்கன்னா எல்லாரும் என் பேச்சுக்குக் கட்டுப் பட்டுத்தான் ஆகணும்” என்றார் ரத்தினம் தீர்மானமாய்.

     “ஐயோ! மாமா?!” என்று கவி பரிதவிப்புடன் ரத்தினத்தை பார்க்க,

     “நீயும் அவனை மாதிரியே என் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமாட்டியா கண்ணு?!” என்று அவர் உருக்கமாய் கேட்க, கவிக்கு அந்த நொடியே தான் இறந்துவிட மாட்டோமா என்று தோன்றியது அவனை மறுத்து ஒருநொடி கூட இன்னொருவனை அவன் இடத்தில் நினைத்துப் பார்க்கவியலாமல். ஆனால் அவள் ஏதும் கூறுமுன்னே,

     “அவளே சம்மதிச்சாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்! அவனெல்லாம் கவிக்கு வேணாம்! நானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா கொண்டு வரேன். உங்களை விட அவ மேல எனக்கு அக்கறை இருக்கு!” என்று கண்ணன் ஏற்கனவே அனைவரும் அவன்மேல் கடுப்பில் இருப்பது தெரிந்தும் லூசுத்தனமாய் வார்த்தைகளை விட,

     “கொன்னு போட்ருவேன்டா உனைய!” என்று மகனை நோக்கி ஆவேசமாய் நெருங்கினார் ரத்தினம்.

     “ஐயோ மாமா?!” என்று சட்டென அவரைப் பிடித்துத் தடுத்த வீரபாண்டி,

     “என்ன மாமா இது?! தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையப் போய்?!” என,

    “தோளுக்கு மேல வளர்ந்தாலும் என் ரத்தம்தான வீரா?! எனக்கு எதுக்குமே உரிமையில்லையா?! இப்படி மரமாட்டம் வளர்ந்த பிறகு நம்ம எல்லாரோட மனசையும் குத்திக் கிழிக்கத்தான் இவனைப் பெத்தேனா?! இல்லை இதுக்காகத்தான் நீங்களும் வைரமும் அவனுக்கு தாயா தகப்பனா இருந்து பாதுகாத்தீங்களா?!” என்றார் உள்ளம் கலங்க.

     தந்தையின்  வார்த்தைகளில் அவனுக்குமே மனம் வருந்த, “அப்போ என் மனசுக்கும், உணர்வுகளுக்கும் யாருமே மதிப்புக் கொடுக்க மாட்டீங்க. அப்படித்தானே?! நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் வரணும். அதானே உங்க எல்லோருடைய எண்ணமும்!” என்றான் கண்ணன்.

     “என்னடா மதிப்புக் கொடுக்கலை உனக்கு?! என்ன மதிப்புக் கொடுக்கலை! பள்ளிப்படிப்பு முடிச்சதும் நம்ம தோப்பு, வயலெல்லாம் கெடக்கு விவசாயம் பாருடான்னா, காலேஜு படிப்பு படிக்கணும்னு கேட்ட, சரின்னுதானே சொன்னோம். சரி படிச்சு முடிச்சிட்டாவது எங்களுக்கு துணையிருப்பன்னு பார்த்தா வேலைக்குதான் போவேன்னு நின்ன, அதுக்கும் சரின்னோம்! இங்கயே இருந்து வேலைப் பாருடான்னா பட்டணத்துக்கு தான் போகணும். அங்கதான் பெரிய சம்பளம் கெடைக்கும்ன, அது எல்லாத்துக்கும் மதிப்புக் கொடுத்தோம்தானே! எதுக்குடா மதிப்புக் குடுக்காம போயிட்டோம் நாங்க?!” என்றுப் பொறுமையாய்க் கேட்டவர்,

     “உன் இடத்துல பெண்பிள்ளை அவ இருந்து நம்ம நிலத்தை எல்லாம் எங்க கூட சேர்ந்து பாடுபட்டு காப்பாத்திகிட்டு இருக்காடா தரிசா போக விடாம! அட, இதெல்லாம் கூட விடு! ஆனா உன்மேல உசுரே வச்சிருக்க புள்ளைய நீ வேணாம்னு சொல்லிட்டு பட்டணத்து மோகத்துல பட்டணத்துப் பொண்ணுதான் வேணும்னு நிக்குற பாரு?!” என்று வெறுப்புடன் அவனைப் பார்த்தவர், அப்போதும் அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் நிற்பது கண்டு,

    “உன் பிடிவாதத்துல நீ இவ்வளவு உறுதியா இருக்கும் போது உன்னைப் பெத்த எனக்கு உன்னைவிட புடிவாதம் அதிகம் இருக்கும்தானே?! நீ உன் பிடிவாதத்துலையே உறுதியா நின்னுக்கோ! ஆனா என் மருமவ விஷயத்துல இனி உனக்கு எந்த உரிமையும் கெடையாது! வர்ற மாசம் வளர்பிறை மூகுர்த்ததுல இந்த தம்பிக்கும், என் மருமவளுக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டேன்! உன்னால முடிஞ்சா தடுத்துப் பாரு!” என்று அவர் மகனிடம் சவாலே விட, கவிதான் முழுதாய் நொறுங்கிப் போனாள்.

     கண்ணனோ, கோபம், ஆற்றாமை, வேதனை எல்லாம் ஒன்று சேர்ந்து அவனைச் சூறாவளியாய்ச் சுழன்றடிக்க, வேகமாய் வீட்டை விட்டு வெளியேறினான் அங்கு இருப்பவர்களை எதுவும் செய்ய இயலாமல்.

     ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் இப்போதும் விளங்கவே இல்லை! அவளைத் தானும் கட்டிக் கொள்ள மறுக்கிறான்! வேறு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்றும் வாய் வார்த்தையாய் சொல்கிறானே தவிர, உண்மையில் பார்க்கும் எண்ணம் வரவே இல்லையே என்று! இதோ இப்போது கார்த்திக் அவளைக் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டதும் கூட ஏன் அத்தனை கோபமும் ஆவேசமும் வருகிறது அவன்மேல்?! இத்தனைக்கும் அவன் அவனது நண்பன்தனே! பெண்களை ரசிப்பவனே தவிர பின்னே சுற்றுபவன் இல்லையே என்று அவனுக்குத் தெரியாதா என்ன?! இப்போது திடீரென்று கவியைப் பெண் கேட்டவனைப் பார்த்து ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று அவனுக்குப் புரியவே இல்லை!

     தங்கரத்தினத்தின் முடிவிலும், கண்ணனது கோபத்திலும் வீடே அமைதியாகிக் கிடக்க, கிஷோரும், பிரதாப்பும் மட்டும் கார்த்திக்கை வெளியே இழுத்துக் கொண்டு போய்,

     “என்னடா பண்ணி வச்சிருக்க நீயி?! ஊருக்கு வந்தோமா பொங்கலைக் கொண்டாடினோமான்னு கிளம்புறதை விட்டுட்டு இப்படி ஒரு வம்பை இழுத்து வைச்சிட்டியே?!” என்றனர் கண்டிப்புடன்.

     “என்னடா? நான் என்ன வம்பை இழுத்து வச்சிருக்கேன். அவன் அவங்களை அவ்ளோ உதாசீனப்படுத்துறான். அது உங்களுக்குத் தப்பா தெரியலை! ஆனா நான் அவங்க பொண்ணைக் கேட்டது உங்களுக்குத் தப்பா தெரியுதா?!” என்று எகிறினான் அவர்களிடம்.

    அவன் கேள்வியிலுமே நியாயம் இருக்க, “இருந்தாலும் அது அவங்க குடும்ப விஷயம்டா. இதுல திடுதிடுப்புன்னு நீ உள்ளே நுழைஞ்சா சரியா சொல்லு! பாவம் அந்தப் பொண்ணு அவன்மேல உயிரையே வச்சிருக்கு!” என்றான் பிரதாப்.

     “ஆமாம்! உண்மைதான். ஆனா இவன் அதைப் புரிஞ்சிக்கலையே! அப்புறம் எப்படி அந்தப் பொண்ணு அவனோட சந்தோஷமா வாழும்?!” என்றவன்,

     “நான் அந்தப் பொண்ணு மேல பரிதாபப்பட்டோ, இல்லைக் காதல் வயபட்டோ எல்லாம் பொண்ணு கேட்கலை! இவங்க குடும்பத்தை எனக்கு பிடிச்சிருக்கு! அந்தப் பாசம் எனக்குப் பிடிச்சிருக்கு! அந்தப் பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணு. என்ன அவனைக் காதலிச்சிட்டு இருக்குங்கிற ஒரே தடை மட்டும்தான். ஆனா அவன் இந்தப் பொண்ணோட மனசைப் பத்திக் கொஞ்சமும் யோசிக்கலையில்ல?! அப்படி இருக்கும் போது அந்தப் பொண்ணு மட்டும் எதுக்கு அவனையே நினைச்சு இப்படி வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கணும்?!” என்று கேட்க, இவர்கள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாய் நின்றனர்.

     ஆனால், சற்று நேரம் மாமனின் முடிவால், கண்களில் நீர் பெருக அமர்ந்திருந்த கவியோ, ஏதோ ஒரு முடிவெடுத்தவளாய் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வெளியே வந்தாள்.

     கார்த்திக்கும், அவன் நண்பர்களும் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருக்க,

     “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் கார்த்திக்கை பார்த்து நிமிர்வாய்.

     “ம்” என்றவன் எழுந்து அவளுடன் நடக்க, அவன் நண்பர்கள் என்னடா இது என்பது போல் வேதனையும், பயமும் ஒருசேர அவர்கள் செல்வதையே பார்த்திருந்தனர்…

     ஆயிற்று எல்லாம் முடிவாகி, அவன் கண் முன்னேயே அவனை உயிருக்கு உயிராய் நேசித்த அவனது அத்தை மகள் இதோ இன்னும் சில நாட்களில் வேறொருவனுக்கு உரிவளாகப் போகிறாள்.

    கல்யாணக் கூழ் ஊற்றுவதிலிருந்து, வயக்காட்டில் கல்யாணப் பொங்கல் வைத்துப் படையலிட்டு, ஊருக்கெல்லாம் பத்திரிக்கை வைப்பது என்று எல்லாம் அவன் கண் முன்னேயே நடந்து கொண்டிருந்தது அவன் நெஞ்சில் இருந்த சினத்தை அதிகரிக்கும் விதமாய்.

     ஊருக்கே போகவே கூடாது என்று நினைத்திருந்தவன் ஒவ்வொரு முறையும் கார்த்திக் அங்கு கிளம்புவதற்கு முன்பே முதல் ஆளாகச் சென்று நின்றிருந்தான் தன் பிடிவாதத்தையும் மீறி.

     கார்த்திக்கிற்கு யாரும் உறவு என இல்லை என்பதால், திருமணக் கூழ் ஊற்றுவதிலிருந்து எல்லா சம்பிரதாயங்களுக்கும் அவனையும் உடன் இருக்குமாறு ரத்தினம் கட்டளையிட்டுவிட, அவனும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வப்போது ஊருக்கு வந்து சென்று கொண்டு இருந்தான்.

    அவர்கள் வீட்டில் கார்த்திக்கிற்கு பலமான மரியாதை இருந்த போதும், எப்போதும் போல் கண்ணனையும் கவனிக்கத் தவறவில்லை அவனது அத்தையும், மாமனும். ஆனால் அவன் பின்னேயே சுற்றிச் சுற்றி வந்தவள் மட்டும் இப்போதெல்லாம் அவன் கண்ணில் படுவதையே வெகுவாய்க் குறைத்துக் கொண்டிருந்தாள்.

     ஆனால் அவளை வேண்டாம் என்றவனுக்கோ, அவளது இந்தப் பாரா முகமும், அவள் இன்னொருவனுக்குச் சொந்தமாகப் போகிறாள் என்ற எண்ணமுமே வெகுவாய்க் கசந்து தினந்தோறும் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று போட்டுக் கொண்டிருந்தது.

     ‘ச்சே! நான்தான அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு  சொன்னேன். அப்புறம் ஏன் அவளை இன்னொருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கும் போது மட்டும் எனக்கு இவ்ளோ கோபமும் ஆதங்கமும் வருது?!” என்று உள்ளுக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் அன்றுக் காலை பந்தக் கால் நடப்பட்டு நலங்கு வைபவத்திற்காய் பட்டுப்புடவை கட்டிப் பூசூட்டி, மணப்பெண் அலங்காரத்தோடு கண்களில் ஒருவித தவிப்போடு அவனையே பார்த்தபடி மனையில் அமர, இத்தனை நாட்களாய் இல்லாது காலம் கடந்து அவளின் பார்வை சொன்ன செய்தி அவனுள் எதையோ உணர்த்தியது முதன்முதலாய்.

     ‘என், என் கவியை நானே, நானே தூக்கி எறிஞ்சிட்டேனோ?!’ என்ற எண்ணம் எழ, விலுக்கென அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான் அவன்.

     ‘அவ இப்போ உன் கவி இல்லைடா?! இன்னும் ரெண்டே நாள்ல அவ இன்னொருத்தனுக்கு மனைவி ஆகப் போறவ!’ என்று புத்தி சடுதியில் எடுத்துரைக்க,

     ‘இல்லை அவ என்னிக்கும் என் கவிதான்!’ என்றான் முணுமுணுப்பாய்.             

     கண்களில் நீர் திரண்டு விடா வண்ணம் மனதை இறுக்கமாய்  வைத்தபடி நொடிக்கொரு தரம் தன் மாமனையே பார்த்திருந்தவள்,

     ‘என்னை என்னை மன்னிச்சிடு மாமா! எனக்கு ரத்தினம் மாமாவும் முக்கியம்! நீ அவரை உதாசீனப் படுத்துற மாதிரி என்னால ஒரு கணம் கூட அவரை கஷ்டப் படுத்த முடியாது! எ எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை மாமா?!” என்று மனதிற்குள்ளேயே உருகிக் கொண்டிருந்தாள் மாமனிடம்.

    ஏனோ அதற்கு மேல் அந்தக் கோலத்தில் காணவியலாமல் விருட்டென அங்கிருந்து எழுந்து வெளியே சென்றுவிட்டான் கண்ணன்.

     கார்த்திக் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, கங்கா மட்டும் அவனை முறைத்துக் கொண்டே இருந்தாள் அவனைக் கொஞ்சமும் பிடிக்காதவளாய்.

     ‘மூஞ்சியைப் பாரு! ஒரே நேரத்துல என்னைக் கவின்னு எல்லாரையும் லுக்குவிட்டுக்கிட்டு இருந்துட்டு, பொசுக்குன்னு பொண்ணும் கேட்டுடுவானா இவன்?!’ என்று மனதுள் அவனை வறுத்தெடுத்த படியே,

     “இந்தாங்க காபி” என்று அவனிடமும் மற்றவர்களிடமும் காபி டம்பளர்கள் நிறந்த தட்டை நீட்டியவளை, அப்போதும் அசராமல் லுக் விட்டான் கார்த்திக்.

    ‘அடப்பாவி?! இப்போவும் அசராம சைட் அடிக்கிறானே! அதான் மாமா மூலமா கவியை வளைச்சுப் போட்டுட்டான்ல அப்போவும் அடங்க மாட்டேங்குறானே?!’ என்று பல்லைக் கடித்தபடியே,

     “கண்ணை நோண்டிடுவேன்” என்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை வாயசைவினாலும், கண்களாலும், பலமாய் மிரட்டிவிட்டுச் சென்றவளைப் பார்த்து,

     ‘கல்யாணம் முடிவாயிட்டா சைட் அடிக்கிற உரிமை கூட இல்லையாப்பா பசங்களுக்கு?! நாங்கல்லாம் கல்யாணம் ஆனாலும் பொண்டாட்டியைப் பக்கத்துல வச்சுகிட்டே சைட் அடிப்போம்ல!’ என்று சிரித்துக் கொண்டான் கார்த்திக்.

     ‘ச்சே! என்ன ஜென்மம் இவன்?! தான் கட்டிக்கப் போற பொண்ணு எதிர்ல இருக்கும் போதே என்னை இப்படி லுக்கு விடுறானே?! போயும் போயும் இந்த ரத்தினம் மாமாக்கு இவன்தானா மாப்பிள்ளையா கிடைச்சான்?! என் கவிக்கு என்ன குறைச்சல்?! எல்லாம் இந்த கண்ணன் அண்ணனைச் சொல்லணும்! ம்! அவரு மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா?!’ என்று வருத்தப் பெருமூச்சுடன் அங்கிருந்த மற்றவர்களுக்கும் காபி கொடுக்கச் சென்றாள் கங்கா.

     வெளியே சென்ற கண்ணன், தன்னுள் புதிதாய் தோன்றிய பதட்டத்தை மறைக்க, என்றும் இல்லா பழக்கமாய் பக்கத்துப் பெட்டிக் கடைக்குச் சென்று சிகரெட் ஒன்றை வாங்கிக் பற்ற வைத்தான்.

     அவனுக்கு அது புதிது என்பதால், நெஞ்சைக் கரித்துக் கொண்டு இருமல் வந்தது. ஆனாலும், சமாளித்துக் கொண்டு அதனை நன்கு இழுத்தவனை வித்தியாசமாய்ப் பார்த்த கடைக்காரர்,

     “கண்ணன் தம்பி! என்னப்பா இது? இதுவரைக்கும் ஒருநாளும் இதெல்லாம் நீங்க வாங்கினது இல்லையே?! மொத இழுப்புக்கே இப்படி இருமறீங்க?! புதுசா பழகுறீங்களா?! வேணாம் தம்பி இதெல்லாம்” என்று அவர்கள் குடும்பத்தை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் அவர் அக்கறை கொண்டு சொல்ல,

     “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று அவரிடம் சம்மந்தமே இல்லாமல் எரிந்து விழுந்துவிட்டு, அங்கிருந்து நகன்றது தங்கள் வீட்டின் மொட்டை மாடி நோக்கிச் சென்றவனை அப்போதே வீட்டிலிருந்து வெளியே வந்த பிரதாப்பும், கிஷோரும் பார்த்தனர்.

     “என்னடா பிரதாப் இவன்? என்னிக்கும் இல்லாம புதுசா சிகரெட் பிடிச்சிக்கிட்டுப் போறான்?!” என்று கேட்டபடியே கிஷோர் கவலையுடன் கண்ணனைப் பார்க்க,

     “என்னன்னே புரியலைடா! இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே அவன் வேற மாதிரி தான் இருக்கான்?! ஒருவேளை அவன் அத்தைப் பொண்ணைப் பிரியப் போறோம்கிற கவலையோ?!” என்றான் பிரதாப் ஏதோ யுகித்தவனாய்.

     “அது சரி! அவன்தானே அவளை வேணாம்னு சொன்னதே?!” என்று  சொல்லிக் கொண்டே கிஷோர்,

     “வா மேல போய் பேசுவோம் அவன்கிட்ட” என்று பிரதாப்பை அழைத்துக் கொண்டு சென்றான்.

     அங்கு பழகாத புகைப் பழக்கத்திற்கு இருமியபடியே பழகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து,

     “எதுக்குடா உனக்கு இந்த வேலை?!” என்றனர் இருவரும் ஒரே குரலில்.

     ஆனால் அவன் ஒருவர் குரலுமே கேட்காதவன் போல் அமர்ந்திருக்க,

     “டேய் கேட்கிறது காதுல விழலியா?!” என்றான் கிஷோர்.

     “இப்போ எதுக்கு இங்க வந்தங்க?!” என்றான் அலட்சியமாய்.

     “ஏய் என்னடா இது?! எதுக்குடா புதுசா இந்த வேண்டாத பழக்கமெல்லாம்?!” என்று கிஷோர் தன்மையாய்க் கேட்க அப்போதும் அவனிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.

     “ஏய்! என்னதான்டா பிரச்சனை உனக்கு?! சொல்லித்தான் தொலையேன். எல்லாத்தையும் எப்போவும் மனசுக்குள்ளயே வச்சிக்கிட்டு எல்லாரையும் சாவடிக்காத!” என்றான் பிரதாப் இப்போது சற்றே கோபமாய்.

     “ச்சே!” என்று சலிப்பும் கோபமுமாய் சிகரெட்டை விட்டேறிந்தவன்,

     “நான் சிகரெட் பிடிக்கிறதுக்கு கூட உங்ககிட்ட சொல்லிக்கிட்டுதான் பிடிக்கணுமா?!” என்றான் வெறுப்பாய்.

     “நாங்க நீ சிகரெட் பிடிக்கிறதை பத்தி மட்டும் கேட்கலை!” என்ற பிரதாப்,

     “நீ கொஞ்ச நாளாவே சரியில்லை! மொதல்ல உனக்கு அந்தப் பொண்ணுக்கும் கல்யாணப் பேச்சு எடுத்த போது ஒருமாதிரி இருந்தன்னா, இப்போ கார்த்திக்குக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் முடிவானதுல இருந்து வேற மாதிரி இருக்க?!” என்றான் அவனின் போக்கை சரியாய் கவனித்த பிரதாப்.

     “என்ன என்ன வேற மாதிரி இருக்கேன்?!” என்று கண்ணனும் கோபத்தில் துள்ள, 

     “இல்லை கண்ணா. பிரதாப் சொல்றதும் சரிதான். நீ சரியில்லை” என்றான் இப்போது கிஷோரும்.

     அது அவனுக்கே புரியத்தான் செய்தது! ஆனாலும் ஏன் ஏன் இப்படி செய்கிறேன் என்று மட்டும் அவனுக்குப் புரியவில்லை!

     “ஒ ஒருவேளை நீ நீ கவியை உன் அத்தைப் பொண்ணை?!” என்று பிரதாப், தயக்கத்துடன் கேட்க,

     ஏற்கனவே பெரும் மனக்குழப்பத்தில் இருந்த கண்ணன்,  “தெரியலை! தெரியலை! தெரியலை!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி தன் வலக்கையால் தலைமுடியை அழுந்தக் கோதிவிட்டுத் திரும்பி, மாடியின் சுற்றுச் சுவரில் ஓங்கிக் குத்தினான் தன் ஆவேசம் தணியும் பொருட்டு.

     அவனின் செயல் அங்கிருந்த இரு நண்பர்களுக்குமே பெரும் பயத்தையும், கவலையும் உண்டு பண்ண,

     “இப்போ என்னடா செய்யிறது?!” என்ற ரீதியில் ஒருவரை ஒருவரை பார்த்து நின்றனர் கலக்கமாய்.

                                          -உள்ளம் ஊஞ்சலாடும்…