Advertisement

                              1௦

     திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. மணம் முடித்த கையோடு கிளம்பிச் சென்றவன்தான். தன்னையும் வருத்திக் கொண்டு, அவளையும் தவிக்க வைத்துக் கொண்டு, குடும்பத்தினரையும் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தான் தன் வறட்டு பிடிவாதத்தாலும், தவறான புரிதலாலும்.

     தங்கரத்தினம் இதோடு நூறு முறைக்கும் மேல் அழைத்து விட்டிருப்பார் அவனின் கைபேசிக்கு! ஆனால் அவரின் அழைப்பு மட்டும் ஏற்கப்படவே இல்லை!

     பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், கார்த்திக்கிடம் அவர்கள் தங்குமிடத்தின் விலாசம் வாங்கிக் கொண்டு கிளம்பியேவிட்டார் சென்னைக்கு.

     கண்ணன் வேலை முடிந்து வீடு திரும்பும் சமயம், அவன் தன் நண்பர்களுடன் தங்கி இருக்கும் அந்த வீட்டின் வெளியே இருந்த வராந்தாவில் அமர்ந்திருந்தார் தங்கரத்தினம் தனது பையுடன்.

     கார் உள்ளே நுழையும் போதே அவரைக் கண்டு கொண்டவன், ‘இவரு எப்போ வந்தாரு?! அட்ரெஸ் எப்படித் தெரிஞ்சுது?!’ என்று யோசித்தவனுக்கு அதை யார் கொடுத்திருப்பார் என்று கண்டு பிடிப்பது பெரிய விஷயமாயில்லை!

     ‘அவன் அடங்கவே மாட்டானா?!’ என்று மனதுள் கருவிக் கொண்டவன், காரை நிறுத்திவிட்டு இறங்கி வீட்டுக் கதவைத் திருந்து கொண்டு உள்ளே சென்றான் தந்தை என்ற ஒருவர் அங்கு இருப்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல்.

     அவன் செய்கையில் அவருக்குமே கோபம் ஏறினாலும், வேண்டாம் இது கோபப்படும் நேரமல்ல, என் மருமகளோட வாழ்க்கைக்காக நான் பொறுத்துதான் போகணும் என்று கோபத்தைத் தணித்துக் கொண்டு தனது பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார் அவன் அழைக்காமலேயே.

     “இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?!’” என்று முந்திக் கொண்டான் அவர் எதுவும் கேட்கும் முன்.

     “ம்! உன்னை சீர்வரிசை வச்சு அழைச்சிட்டுப் போக!” என்றார் ரத்தினமும் நக்கலும் கோபமுமாய்.

     அவரது நக்கலில் எரிச்சலுற்றவன், “அதான் உங்க ஆசைப்படி உங்க மருமக கழுத்துல தாலி கட்டியாச்சுல்ல?! அப்புறம் என்ன?!” என்றான் எடாகுடம் பிடித்தவனாய்.

     அவனது லூசுத்தனமான பேச்சில் அவருக்குமே சுருக்கென்று கோபம் எழ,

     “அடேய் கூறு கெட்டவனே! தாலியைக் கட்டிட்டா போதுமாடா?! அவளும் நீயும் ஒண்ணா சேர்ந்து வாழுறதைப் பார்க்கத்தானே கல்யாணம் பண்ண நினைச்சோம்! இப்படி தாலியைக் கட்டிட்டு எங்கயோ ஓடி ஒளிஞ்சுக்கவா?!” என்றார் அவரும் காட்டமாகவே.

     “அதை நீங்க அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் முடிவு பண்ணீங்களே அப்ப யோசிச்சிருக்கணும்?!” என்றான் அவனும் அசட்டையாய்.

     “அதான் கெடுத்து விட்டுட்ட இல்லை! அப்புறம் என்ன?!” என்றார் அவனை மேலும் வெறுபேற்றும் விதமாய்.

     “அப்போ நான்தான் எல்லாத்துக்கும் காரணமா?!” என்றான் காரணம் உணர மறுத்து.

     “டேய் உனக்கு மூளை கீழ குழம்பிப் போச்சா டா?!” என்று அவனை ஒருமாதிரியாகப் பார்த்தவர்,

     “அவளை வேண்டாம்னு சொன்னவன் நீ! அப்புறம் அவ எனக்குதான்னு சொல்லி வம்படியா கட்டிக்கிட்டவன் நீ! இப்போ குடும்பம் மட்டும் நடத்த மாட்டேன்னு இங்க வந்து உட்கார்ந்து கிட்டு இருக்கியே? இதெல்லாம் அநியாயாம தெரியலை உனக்கு?!” என்றார் ரத்தினம்.

     ‘ஆமாம்! அவர் சொல்றது சரிதானே?!’ என்ற எண்ணம் அவனுள்ளும் தோன்ற, 

     ‘ஆனா அவ என்மேல உசிரையே வச்சிருக்கேன்னு சொல்லிட்டு அவனைக் கல்யாணம் பண்ணிக்க எப்படிச் சம்மதிக்கலாம்?!’ என்று முரண்டு பிடித்தான் மீண்டும்.

     அதை அவரிடம் வாய்விட்டுக் கேட்டிருந்தால் கூட அவர் ஏதேனும் பதில் சொல்லி இருப்பார் அவன் புத்திக்கு உரைக்குமாறு. ஆனால் அவனோ, மனதிற்குள்ளேயே அல்லவா பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

     “என்னடா பதிலையே காணோம்?! உண்மை உரைக்குதோ?!” என்றார் கடினமாய்.

     “ஆமாம்! நீங்க எல்லோரும் உண்மையோட வடிவம்! நான் மட்டும்தான் சரியில்லை!” என்று ஏறுக்கு மாறாய் பேசியவன்,

     “இது எனக்கும் அவளுக்குமான விஷயம் இதுல நீங்க யாரும் தலையிடத் தேவையில்லை! ராத்திரி ஆகிடுச்சு அதனால இன்னிக்கு ஒருநாள் மட்டும் இங்க தங்கிட்டு ஊர் போய் சேருற வழியப் பாருங்க!” என்றுவிட்டு அவன் தனது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் செல்ல,

     ‘ஐயோ எந்த நேரத்துல இவனைப் பெத்தோமா?! இப்படி எடாகுடம் பிடிச்சவனா இருக்கானே?!’ என்று இருந்தது ரத்தினத்திற்கு!

     சிறிது நேரத்தில் அவனது நண்பர்கள் அனைவரும் ஒன்றாய் அங்கு வந்து சேர, அவர்கள் ரத்தினத்தை அன்பாய் விசாரித்து அவருக்காய் பார்த்துப் பார்த்துச் சமைத்துக் கொடுக்க, கண்ணன் அவர்களின் உபசரிப்பை எல்லாம் ஒரு முறைப்போடு கவனித்துக் கொண்டு இருந்தான்.

     ‘நியாயமா நான் பெத்தது இதையெல்லாம் செய்யனும்! ஆனா என்னிக்கு இவனுக்கு நம்ம அருமை புரிஞ்சிருக்கு?!’ என்று எண்ணிக் கொண்டவர்,

     ‘என் அருமை புரியலைன்னாலும் பரவாயில்லைமா?! நீ பெத்த புள்ளைக்கு நீதான் நல்ல புத்தியைக் கொடுத்து அவன் பொண்டாட்டியோட அருமையையாவது அவனுக்கு உணர வைக்கணும் ம்மா!” என்று வேண்டிக் கொண்டார் மனைவியிடம்.

                                 *****

     அங்கு வைரமோ, “இந்த அண்ணன் சொன்னப் பேச்சைக் கேட்காம அவனைப் பார்க்க கிளம்பிப் போயிருக்கு! அங்க அவன் என்னென்ன பேசுறானோ அவரை! எனக்கு ஒரே வெசனமா இருக்கு ஆத்தா?!” என்று தங்களது தாய் கனகாம்புஜத்திடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

     “நீ சும்மா புலம்பாத வைரம். அவனை இப்படியே விட்டுவச்சா சரிவருமா சொல்லு?! தாலியையும் கட்டிப்புட்டு குடும்பமும் நடத்தாம போயி எனக்கென்னன்னு பட்டணத்துல போய் உட்கார்ந்திருக்கானே அந்தக் கிறுக்குப் புடிச்சவன், அவனை அப்படியே விட்டா நம்ம ரெண்டு புள்ளைங்க வாழ்க்கையும்தான் வீணா போவும்” என்றார் பாட்டி சமதானப் படுத்தும் விதமாய்.

     ஆனால் கவலை கொள்ள வேண்டியவளோ காலை முதல் நிலத்தில் பாடுபட்ட அயர்வில், நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தாள் இவர்கள் புலம்பல் அறியாமல்.

     “அது சரிதான் ஆத்தா?! ஆனா?!” என்று வைரம் இழுக்க,

     “எந்த ஆனாவும் இல்லை! எம்மவன் கையோடு என் பேரனைக் கூட்டியாரத்தான் போறான். நீ வேணா பாரு” என்று பாட்டி உறுதியாய்க் கூற, வைரமும் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.

                                 *****

     மறுநாள் காலை, இரவு உறங்குவதற்காய் படுக்கை விரித்துப் படுத்த ரத்தினம் காலை அவர்கள் வேலைக்குக் கிளம்பும் சலசலப்புக் கேட்டும் கூட கண்விழிக்காதது அவனுக்கு ஏதோ தவறாய்ப்பட,

     “டேய் அவரை எழுப்புங்கடா” என்றான் நண்பர்களைப் பார்த்து.

     “ஏன் உங்க அப்பாதானே? நீ எழுப்பினா என்ன?!” என்று கார்த்திக் இடைபுக,

    “நான் உன்கிட்டப் பேசலை!” என்றான் கண்ணன்.

    “அப்போ பேர் சொல்லி எழுப்பச் சொல்லி இருக்கணும்?!” என்று கார்த்திக் மீண்டும் வம்பிழுக்க,

     “ச்சே! உங்ககிட்ட போய் சொன்னேனே?!” என்றவன்,

     “அப்பா அப்பா?!” என்று குரல் கொடுக்க அவரிடம் அசைவே இல்லை!

     ‘என்ன இவரு எப்போவும் ஒரு குரலுக்கே எழுந்திடுவாரே?!’ என்று பதறியவன்,

     “அப்பா…?!” என்று அவரைத் தொட்டு உலுக்க, அப்போதும் அவரிடம் எந்த அசைவும் இல்லை!

     அதைப் பார்த்திருந்த மற்றவர்களுக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள,

     “என்ன என்னடா ஆச்சு?! தூக்குடா அப்பாவை ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போகலாம்?!” என்றனர் பிரதாப்பும், கிஷோரும் பதட்டமாய்.

    அதற்குள் கார்த்திக் வேகமாய் சென்று தண்ணீர் கொண்டு வந்து அவரது முகத்தில் தெளிக்க, அவரிடம் லேசாய் அசைவு தென்பட்டது.

     “அ அப்பா?! அப்பா?!” என்று பதறிய கண்ணன், நொடியில் தன் தந்தையை தூக்கிக் கொண்டு எழ,

     ‘அய்யய்யோ ஹாஸ்பிட்டலுக்கு போனா காரியம் கெட்டுடுமே?!’ என்று பட்டெனக் கண்களைத் திறந்தார் ரத்தினம்.

     “எ எனக்கு ஒன்னும் இல்லைப்பா! காலையில பாத்ரூம் போயி வந்து படுத்தேன். அப்போவே லேசா தலை சுத்துச்சு! அப்படியே கண்ணை செருகிட்டுப் போயிடுச்சு. மனசு பூரா கவலை இருக்க இருப்புக்கு எல்லா நேரமும் உடம்பு தாங்குமா சொல்லு? ஏதோ இந்த பிபி கீப்பின்னு சொல்றாங்களே அது கொஞ்சம் ஏறி இருக்கும்!” என்று சமாளித்தார் அவன் நம்பும் விதமாய்.

     எப்போதுமே அதட்டலாய் வரும் தந்தையின் குரல் இப்போது சோர்வாய் ஒலிப்பதைக் கேட்டு கண்ணனுள் பெரும் குற்ற உணர்வு புகுந்து கொள்ள,

     “எதுக்கும் ஹாஸ்ப்பிட்டல் போயிட்டு வந்துடலாம்ப்பா!” என்றான் மனம் தாளாமல்.

     “இல்லை இல்லப்பா! எனக்கு எந்த ஆஸ்பத்திரியும் வேணாம்! என் உசிர் போறதா இருந்தா அது என் சொந்த மண்ணுலதான் போகணும்! என்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போய் சேர்த்துடுறியாய்யா?!” என்றார் உருக்கமாய்.

     “அ அப்படி எல்லாம் சொல்லதப்பா!” என்று கலக்கத்துடன் சொன்னவன்,

     “நீங்க முதல்ல வாங்க ஹாஸ்ப்பிட்டலுக்குப் போகலாம்!” என்றான் பிடிவாதமாய்.

     “நான்தான் சொல்றேன்ல ப்பா! எதுவாயிருந்தாலும் ஊருக்குப் போயி பார்த்துக்கலாம் அங்கயும் ஹாஸ்பத்திரி இருக்குதானே?!” என்று பிடிவாதமாய் அவரும் மறுக்க வேறு வழியின்றி கண்ணன் தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு ஒரு மணிநேரத்தில் அவரை ஊருக்கு அழைத்துக் கொண்டுக் கிளம்பினான் உண்மையாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று நம்பி.

     ஒருவழியாய் அவன் தந்தையை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

     ‘ஊருக்குப் போன பெரிய மாமாகிட்ட இருந்து ஒரு போன் கூட இல்லையே காலையில இருந்து. நான் போன் பண்ணாலும் ஆப் பண்ணியிருக்குன்னே வருது! இந்த கண்ணன் மாமா என்னவெல்லாம் பேசுச்சோ அவரை?! எல்லோரும் சொல்லச் சொல்லக் கேட்காம கிளம்பிப் போனாரே! என்ன ஆச்சுன்னு தெரியலையே?!’ என்று அவள் தன் நெஞ்சில் சுமக்கும் மாமனையும், தன்னைத் தூக்கி வளர்த்த மாமனையும் எண்ணிக் கவலைக் கொண்டிருக்க, எதிர்பாராமல் திடீரெனக் கேட்ட அவனின் கார் சத்தம் அவள் செவிகளை எட்டி அவளுள் ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும், கோபத்தையும், வேதனையையும் தோற்றுவித்தது.

     கார் சத்தம் கேட்டதும் மற்றவர்களும் சட்டென எழுந்து வெளியே செல்ல, அவளுமே பெரிய மாமனும் நிச்சயம் உடன் வந்திருப்பார் என்பதால் எழுந்து அவரைக் காண்பதற்காய் சென்றாள்.

     காரில் இருந்து இறங்கிய அவரைக் கண்ணன் அவர் கைபற்றி உள்ளே அழைத்து வரவும் மொத்தக் குடும்பமுமே பதறிவிட்டது.

     “ஏய்யா?! என் புள்ளைக்கு என்ன ஆச்சு?!” என்று கலங்கியபடி முன்னே வந்த தாயையும்,

      “ஐயோ அண்ணே?! என்னண்ணே ஆச்சு?!” என்று பதறிக் கொண்டு ஓடி வந்த தங்கையையும் பயப்படுத்த மனம் சுருங்கினாலும், போட்ட நாடகத்தை அவன் முன்னே கலைக்கக் கூடாதென,

     “ஒண்ணுமில்லை ஆத்தா! ஒரே சோர்வா, மண்டையும் லேசா கிறுகிறுன்னு இருக்கு காலையில இருந்து!” என்றார் ரத்தினம் உள்ளே சென்ற குரலில்.

     “நல்லாத்தானே அண்ணே கிளம்பிப் போன?! இந்தப் பைய ஏதாச்சும் சத்தம் போட்டானா?! அதுக்குதான் நீ போகாத, அவன் எப்ப வரானோ வரட்டும்னு சொன்னேன்! நீ கேட்டாதானே?! தேடித் போயி உடம்பைக் கெடுத்துக்கிட்டு வந்திருக்க!” என்று வைரம் படபடவென பொரிய,

     ‘ஐயோ! நானே இவனை ஒருவழியா அதையும் இதையும் சொல்லி இங்க கிளப்பிட்டு வந்திருக்கேன். இந்தப் பிள்ளைக் காரியத்தைக் கெடுத்துடும் போலேயே?!’ என்று எண்ணிய ரத்தினம்,

     “அட சும்மா இரு தாயி! அவன் ஒண்ணுஞ் சொல்லலை! என் உடம்புக்கு என்னமோ திடீர்னு கேடு வந்துடுச்சு! வயசாகுதுல்ல. உடம்பு ஒரே மாதிரி இருக்குமா என்ன? நேரம் வந்தா போக வேண்டியதுதான்” என்று ரத்தினம் வருத்தமாய்ச் சொல்ல, வைரம், கவி, கண்ணன் உட்பட அனைவருமே,

     “அப்பா, மாமா, அண்ணே” என்று அதட்டல் போட்டனர் ஒருசேர.

     ‘பரவாயில்லை! நான் பெத்ததுக்கும் என்மேல பாசம் இருக்கு!’ என்று எண்ணி திருப்தி கொண்டவர்,

    “நெருப்புன்னா வாய் வெந்துடுமா?! ஒரு பேச்சுக்கு சொன்னேன். விடுங்க” என்றுவிட்டு மெல்ல தரையில் விரித்திருந்த பாயில் அமர்ந்தவர்,

     “ஒரு சோம்பு தண்ணி கொண்டாடா கன்னுக்குட்டி” என்றார் மருமகளிடம்.

     “ஹான் இதோ கொண்டார்றேன் மாமா” என்று ஓடிச் சென்று நீர் மோர்ந்து எடுத்து வந்தவளை அப்போதுதான் அவன் கவனித்தான்.

     திருமணத்திற்கு முன் அவன் நிராகரித்த போதே அவள் சற்று மெலிந்திருந்தாள் தான். ஆனால் இப்போது கண்கள் உள்ளே சென்று முகம் கூட லேசாய் கருத்து, மேலும் மெலிந்து தன் பொலிவை மொத்தமாய்த் தொலைத்து நின்றிருந்தவளைக் காண அவன் மனம் மொத்தமாய் அவனையேக் குற்றம் சுமத்திக் கூண்டில் ஏற்றியது.

     வைத்த கண் வாங்காமல் மகன் மருமகளையே பார்த்திருப்பதை கவனித்துவிட்ட ரத்தினம்,

     “போங்க எல்லாரும் போய் படுத்துத் தூங்குங்க! எனக்கும் ரொம்ப களைப்பா இருக்கு. ஒரு ராத்திரி தூங்கி எழுந்தாதான் கொஞ்சம் உடம்பு  தேறும்” என்று சொல்லி அனைவரையும் உறங்கச் சொல்ல,

     “எதுவும் சாப்பிடாம இப்படியே உறங்குவிங்களா அண்ணே? இருங்க போயி ரெண்டு தோசை ஊத்தி எடுத்தார்றேன்.” என்று உள்ளே செல்லப் போன வைரத்தை,

     “இல்லை இல்லைம்மா! அவன் வர்ற வழியிலேயே இட்டிலி வாங்கி சாப்பிடக் கொடுத்துதான் கூட்டியாந்தான். நீ போய் படு தாயி.” என்றவர்,

     கண்ணன் தனது அறைக்கும், கவி அவளது அறைக்கும் செல்வதைப் பார்த்து,

     “ஆத்தா அந்தப் பிள்ளையைப் போய் அவன் அறையில உறங்கச் சொல்லு” என்றார் மெல்ல தாய்க்கு மட்டும் கேட்கும் வண்ணம்.

     அதைகேட்டு, “அடியே கூறு கெட்டவளே, அதான் கல்யாணம் முடிஞ்சுடுச்சுல்ல?! இன்னும் என்ன அங்கன ஓடிக்கிட்டு? போயி உன் மாமன் அறையில உறங்கு” என்றார் கனகாம்புஜம் பேத்தியைப் பார்த்து அதட்டலாய்.

     “ம்??!!” என்று அவள் தயங்கி நிற்க,

     “போடின்னு சொல்றேன்! இன்னும் என்ன அங்க முழிச்சிகிட்டு நிக்குற?!” என்று அவர் மீண்டும் அதட்டல் போட, வேக வேகமாய் அவன் அறைக்குள் நுழைந்தவளை வெகுவாய் முறைத்தான் அவன்.

     “அ அது வந்து பாட்டி பாட்டிதான்” என்று அவள் திணற,

     “ம்! ம்!” என்று அதிகாரமாகவே அனுமதி கொடுத்தவனை அவளுமே நீண்ட நாட்களுக்குப் பின் நேருக்கு நேருக்கு இப்போதுதான் பார்ப்பதால், அவனை விட்டுக் கண்களை விலக்க முடியாமல் திண்டாடினாள்.

     ஆனால் அவள் அன்பும், ஏக்கமும் கொஞ்சம் கூட புரியாது, “ஏய் எவ்ளோ நேரம்டி இப்படியே நிப்ப?!” என்றவன், ஒரு போர்வையையும் தலையணையும் எடுத்துத் தரையில் தூக்கிப் போட்டு,

     “படு” என்றான் அதிகாரமாய்.

     அவன் போர்வையும் தலையணையையும் வேகமாய்த் தூக்கிப் போட்டதில், அவள் மனம் உடைந்த கண்ணாடிச் சில்லாய் நொறுங்க,

     ‘உன் படுக்கையில வேணா எனக்கு இடமில்லாம போகலாம் மாமா! ஆனா உன் மனசுல நான்தான் நான் மட்டும்தான் இருக்கேன்! அதை நீ முழுசா உணர்ற காலம் வரும்! ஆனா அதுவரைக்கும் எதுவும் தப்பா நடந்திடக் கூடாது மாமா! உன்மேல எனக்கிருக்க இந்த காதலும் தொலைஞ்சிடக் கூடாது மாமா!’ என்று ஏன் இப்படி ஒரு எண்ணம் தனக்குள் வந்தது என்று புரியாமலேயே மனதோடு சொல்லிக் கொண்டாள் உருக்கத்தோடும், வேதனையோடும்…

                                             -உள்ளம் ஊஞ்சலாடும்…     

     

              

    

Advertisement