Advertisement

     கீதாஞ்சலியின் உள்ளமெனும் ஊஞ்சலிலே!

                              1

     “கடவுள் அமைத்து வைத்த மேடை

     கிடைக்கும் கல்யாண மாலை

     இன்னார்க்கு இன்னாரென்று

     எழுதி வைத்தானே தேவன் அன்று…

     அந்த வீட்டில் அவனுக்கும், அவளுக்கும் அன்று காலைதான் திருமணம் முடிந்திருந்தது என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள்.

     அவன் தனது உடைகளை எடுத்துத் தனது ட்ராவல் பேகில் அடைப்பதை அவள் கண்கொட்டாமல் அமைதியாய்ப் பார்த்திருந்தாள்!

     “என்னடி அப்படிப் பார்க்குற?! கண்ணாலேயே பொசுக்கிடுவியோ?!” என்று அவளை நக்கலாய்க் கேட்டவனைப் பார்த்து,

     “ம்!” என்று மெலிதாய்ச் சிரித்தவள், அப்போதும் அவனிடமிருந்து பார்வையை எடுக்காமல் சளைக்காது அமர்ந்திருக்க,

     “உருகி உருகிக் காதலிச்சிக்கிட்டு அவனுக்கு கழுத்தை நீட்டப் போனல்ல! அதுக்கான தண்டனைதான்டி இது!” என்றுவிட்டு, அவன் தனது பையுடன் வெளியேற,

     அவன் பையுடன் வெளியேறுவதைக் கண்டு பதறிப் போன வைரம்,

     “எ என்னங்க பண்றான் இவன்?! என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான் இவன் மனசுல?! யாரும் இவனை அடக்க முடியாதுன்னு நினைப்போ?!” என்று கோபத்தில் சிவந்த முகத்துடன் கத்தியபடியே வைரம் அவனைப் பின்தொடர்ந்து போக எத்தனிக்க அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய வீரபாண்டி,

     “பொறு பொறு வைரம்! அவன் நம்ம பையன். அவன இப்படி நாலு பேர் முன்னாடி நீ நிக்க வச்சுக் கேள்வி கேட்டா அது நமக்கும் சரி அவனுக்கும் சரி மரியாதையா இருக்காது! வந்திருக்க உறவுக்காரங்க எல்லாம் ஊரு திரும்பினதும் பேசிக்கலாம்! பட்டணத்துக்குப் போறவன் எப்பயிருந்தாலும் திரும்பி இங்கதானே வரணும்” என்று அவர் மனைவியைத் தடுத்து நிறுத்த,

     அங்கு வெளியே அமர்ந்திருந்த தங்கரத்தினமோ, “டேய் என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல?! இப்போ எங்க கிளம்புற நீ?!” என்று எகிறிக் கொண்டு எழுந்து வந்தார்.

     “ம்! எனக்கு வேலை வெட்டி இல்லை?! நாளைக்கு காலையில நான் வேலைக்கு போயாகணும்! உங்களை மாதிரி இங்க உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருக்க முடியாது!” என்று நக்கலும் திமிருமாய் பதிலளித்தவன், தனது காரின் பின் பக்கக் கதவைத் திறந்து, தனது பையைப் பின் சீட்டில் தூக்கிப் போட்டுவிட்டு, கதவை அறைந்து சாத்த,

     “டேய் டேய் டேய்! எங்களை விட்டுட்டுப் போகப் பார்க்குறியே டா!” என்று திருமணத்திற்கு வந்திருந்த அவனது நண்பர்கள் வேகவேகமாய் ஓடி வர,

     “ம் யார் கல்யாணத்துக்கு வந்தீங்களோ அவனையே கூட்டிட்டு வரச் சொல்லுங்க!” என்று கடுப்பில் தனது நண்பர்களைக் கூட வண்டியில் ஏற்றாமல் வண்டியைச் சீறிக் கிளப்பினான் கண்ணன் என்கிற கண்ணதாசன்.

     “என்னடா இவன் இப்படிச் சொல்லிட்டுப் போறான்?! அவனே செம கடுப்புல உட்கார்ந்துக் கிட்டு இருக்கான் இதுல அவன் எப்படிடா நம்மளைக் கூட்டிட்டுப் போவான்?!” என்று புலம்பினான் நரேஷ்.

     “போடா இவனுங்களை நம்பி நாம வந்தோம் பாரு! ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா செஞ்சிட்டானுங்க!” என்ற பிரதாப்பும்,

     “சரி வா! இங்க இருக்கிறவனையாவது போய் சமாதானப் படுத்தி அழைச்சிட்டுப் போகலாம்!” என்றான்.

     அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் வெகு தீவிரமாய் எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்த்து,

     “டேய் மச்சி விட்றா?! நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்குக் கிடைக்கலைன்னா அதைவிட நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கப் போகுதுன்னு அர்த்தம்! இதுக்காக காலையில இருந்து இப்படி தண்ணி கிடைக்காத தேவதாஸ் மாதிரி உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?!” என்று பிரதாப் அருமையான உதாரணம் ஒன்றைக் காட்டி கார்த்திக்கை சமாதானப் படுத்த முயல,

     “ஆமாம்டா மச்சி! நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை! நான்தான் தப்பு பண்ணிட்டேன்! அந்தத் தப்பை  எப்படி கரக்ட் பண்றதுன்னு தான் தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்!” என்றான் கார்த்திக் யோசனையோடு.

     “என்னடா சொல்ற?! இவ்ளோ சீக்கிரம் நீ மனசு தேறி வருவேன்னு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கலைடா!” என்று நரேஷ் அதிசயிக்க,

     “ப்ச் ப்ச்! இப்போ இல்லடா! எப்போ அவ கழுத்துல தாலி ஏறுச்சோ அந்த நிமிஷமே நான் என் மனசைத் தேத்திக்கிட்டேன்! நமக்கு ஏத்தவ அவதான்னு?! அதான் அவளை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்!” என்றான் கார்த்திக்.

     “எவதான்?!” என்று நரேஷும்,

     “எவளைக் கரெக்ட் பண்ணலாம்னு?!” என்று பிரதாப்பும் வாய்பிளக்க,

     “அதான்டா! அவதான்! நேத்துல இருந்து அவகூட ஒட்டிக்கிட்டே சுத்திக்கிட்டு இருந்தாளே அவதான்!” என்று கார்த்திக் வெட்கச் சிரிப்புடன் சொல்ல,

     “தூ!!” என்று இருவரும் ஒரே நேரத்தில் துப்பினர் தன் நண்பனைப் பார்த்து.

                           *****         

     “டீ?! என்னடி நடக்குது இங்க?! அவன் எங்கப் போறான்?! ஏதாவது சொன்னானா?!” என்று அவன் கிளம்பியதும் வைரம் அவளைப் பிடித்துக் கேள்வி மேல் கேள்வி கேட்க,

     “எங்க போவும்னு உனக்குத் தெரியாத?!” என்று அவரையே பதில் கேள்வி கேட்டாள் கவி என்கிற கவிதாயினி.

     “நல்லா பேசக் கத்து வச்சிக்கிட்டு இருக்கீங்கடி ரெண்டு பேரும்! வேணும் வேணும்னு பிடிவாதம் பிடிச்சவ, வேணாம்னு விட்டதும், வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டு கெடந்தவன் வேணும்னு அடமா நின்னதும்! எனக்கு தலையே சுத்துதுடி நீங்க பண்ணக் கூத்துல!” என்று வைரம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட,

     “அயித்தை அவுங்க கோபத்தை இன்னிக்கு நேத்தா பாக்குறீங்க?! எல்லாம் சரியாப் போயிடும்! இப்படி காலையில இருந்துப் பட்டினியாக் கெடந்தா வயறு காஞ்சு தலை சுத்ததானச் செய்யும்!” என்ற கங்கா,

     “டி? நீயும் என்னடி இப்படி அழிச்சாட்டியமா காலையில இருந்து ஒரே இடத்துல உட்கார்ந்துகிட்டு எல்லோரையும் அலைக்கழிக்குற?! எழுந்து வந்து சாப்பிடுடி!” என்று அதட்டினாள் தனது தோழியையும்.

     “நீங்க எல்லோரும் போய்ச் சாப்பிடுங்க! அப்பா, அம்மா, மாமாவையும் சாப்பிட வையி” என்றவள், அதற்கு மேல் கங்கா எவ்வளவு சொல்லியும் அவள் புறம் திரும்பக் கூட மனமில்லாமல், அவர்களுக்கு முதுகு காட்டியபடி படுத்துக் கொண்டாள் அவள் அமர்ந்திருந்த கட்டிலிலேயே.

     “திமிரு திமிரு! நான் தூக்கி வளர்த்துங்க! எனக்கே ஆட்டங் காட்டுதுங்க! நாலு வச்சாதான் சரியா வரும்” என்று வைரம் கவியை நெருங்க,

     “அயித்தை விடுங்க! நீங்க மொதல்ல வந்துச் சாப்பிடுங்க! நான் அவளுக்கு எடுத்துட்டு வந்து கொடுக்கறேன்” என்று வைரத்தைச் சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றாள் கங்கா.

     அவர்கள் இருவரும் வெளியே செல்லும் போது, “கதவைச் சாத்திட்டுப் போ கங்கா” என்று குரல் கொடுத்தாள் கவி.

     கங்கா கதவைச் சாற்றி விட்டுச் சென்றதும், கட்டிலில் அவன் கழற்றிப் போட்டுவிட்டுச் சென்றிருந்த அவனது வாசனை நிறைந்த டிஷர்டை, எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டவள் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தது அவளின் கடந்த காலக் காதலையும், காற்றைப் போல் கவலையின்றித் சுற்றித் திரிந்த காலத்தையும் எண்ணி…

                         *****

     பூவுக்கென்ன பூட்டு

     காற்றுகென்ன ரூட்டு

     ஹல்லா குல்லா ஹல்லா குல்லா…

     நீயும் நானும் யாருக்கு,

     வானும் மண்ணும் யாருக்கு (ஹல்லா)

     சோலைக்கு என்ன ஒரு கவலை

     எப்போதும் பார்வைகள் அழுவதில்லை,

     சூரியனில் என்றும் இரவு இல்லை

     எப்போதும் சொர்க்கத்துக்குத்

     தடை இல்லை! (ஹல்லா)

     காணத்தானே கண்கள்

     கண்ணீர் சிந்த இல்லை,

     மேகங்கள் மண்ணில் வீழ்ந்துக்

     காயங்கள் ஆனதில்லை… (மேகங்கள்)

     தோழிகள் இருவரும் தத்தம் வயக்காட்டில் எருதுகளை பூட்டி ஏர் உழுதபடியே ஆட்டமும், பாட்டமும், ஆனந்தமுமாய் தாங்கள் நேசிக்கும் நிலமகளை அடுத்த விளைச்சலுக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர் தகப்பனார்களுக்கு உதிவியாய்.

     “டேய் வீரா பெண் பிள்ளையைப் பெத்துட்டோமே, நம்ம வயலு, தோப்புத் தொரவெல்லாம் யாரு பார்த்துப்பான்னு கெடந்து கவலைப் பட்டோமே அன்னிக்கு இந்த புள்ளைங்க பிறந்தப்போ! இன்னிக்குப் பார்த்தியா? ஆம்பிளைப் புள்ளைங்க எல்லாம் பட்டணத்துக்கு போய் எவன்கிட்டயோ சம்பளத்துக்கு வேலை பார்க்க, இந்தப் புள்ளைங்க ராசக்குமாரி மாதிரி வயக்காட்டுல ஜோரா வளம் வருதுங்க!” என்று தன் மகளையும் தன் நண்பனின் மகளையும் மெச்சிக் கொண்டார் மருது.

     காய்ந்து பிடுங்கிப் போடப்பட்டிருந்த கடலைச் செடிகளின் வேர்களிலிருந்து கடலைகளை உதிர்த்தபடியே,

     “ஆமாம் டா மருது! என் பொண்ணு பொறந்தப்போவே இந்த மண்ணுக்கும் வானுக்கும் அம்புட்டுச் சந்தோஷம் அவ ஆத்தாளைப் போலவே! வருஷக் கணக்கா வரண்டு போய்க் கெடந்த பூமித்தாயை குளுர வைக்க, அப்படிப் பொத்துக்கிட்டு ஊத்திக் குளிர வச்சான் அந்த வருண பகவான்! வளர வளர உன் பிள்ளையும் என் பிள்ளையும் சேர்ந்து இந்த பூமிய நேசிச்ச அழகப் பார்த்து நானே அதிசயிச்சுப் போயிருக்கேன் தெரியுமா?!” என்றார் வீரபாண்டியும்.

    “ஆமாம்டா மறக்க முடியுமா அந்தப் பஞ்ச காலத்தை! அந்த தேவதைப் பொறந்த அன்னிக்கு ஊரே உற்சாகத்துல மிதந்ததுல்ல!” என்று மருதுபாண்டியும் சொல்லிக் கொண்டிருக்க,

     “ம்!! ரெண்டு பேரும் பெண் பிள்ளைகளைப் பெத்தும் மவராசன் மாதிரி கண்ணுக்கு அழகா பக்கத்துல வச்சு ராஜ வாழ்க்கை வாழுறீங்க! நானும் பெத்தேனே ஒருத்தனை?!” என்று பெருமூச்செறிந்தார் தங்கரத்தினம்.

     “அட நீங்க என்ன மாமா இப்படிச் சொல்லிட்டீங்க?! எம் மருமவனுக்கு என்ன குறை?! அவன் ஒரு மாசத்துல சம்பாதிக்குற சம்பாத்தியத்தை நாம எத்தனை மாசம் ஆகுது ஈட்ட?!” என்றார் வீரபாண்டி மருமகனை எப்போதும் போல் விட்டுக் கொடுக்காமல்.

     “அதென்னவோ நீங்களும், வைரமும் தான் அவனை இப்படித் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடுறீங்க! ஆனா எனக்கும் என் மருமவளுக்கும் அவன் எப்போ அந்தப் பட்டணத்து மோகத்தை விட்டுட்டு வர்றானோ, அன்னிக்கு தான் மனசுக்கு நிம்மதி.” என,

     “அண்ணே!! சோறு கொண்டாந்திருக்கோம்! எல்லாரும் இங்க மரத்தடி நெழலுக்கு வாங்க!” என்று கூவிக் குரல் கொடுத்தார் வீரபாண்டியனின் அன்பு மனைவியும், தங்கரத்தினத்தின் ஆசைத் தங்கையுமான வைரம்.

     “இந்தா வந்துட்டாங்களே என் ஊட்டு மகாராணியும், உங்க வீட்டு மகாராணியும்!” என்று மருது முகம் மலர்ச் சொல்ல,

     “ஏ! பிள்ளைங்களா உழுதது போதும் வாங்க! சாப்பாடு வந்துடுச்சு” என்று வீரன் குரல் கொடுக்க,

      “இந்தா வந்துட்டோம் ப்பா!” என்று குரல் கொடுத்தபடியே எருதுகளை ஒட்டிக் கொண்டு வந்து மரத்தடி நிழலில் கட்டிவிட்டு, பம்ப்பு செட்டில் போய் முகம் கைகால் கழுவி வந்தனர் அவர்கள் வீட்டு ராஜகுமாரிகள் இருவரும்.

     “எப்பா, மாமா நீங்க எல்லாரூம் இன்னும் போய் முகம் கை கால் கழுவலயா! சீக்கிரம் போய் வாங்க” என்றபடியே,

     “எம்மா இன்னிக்கு என்னக் கொழம்பு நம்ம வீட்ல?! அயித்தை நீ என்னக் கொண்டாந்திருக்க?” என்றாள் கவிதாயினி இருவர் வீட்டிலிருந்தும் கொண்டு வந்த சோற்று மூட்டைகளைப் பிரித்தபடியே.

    “அடியே இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே! என்னக் கறியும் மீனுமா கொண்டு வரப் போறோம்! சாம்பார் சோறுதான்.” என்று வைரம் சொல்ல,

     “என்ன வெள்ளிக்கிழமையா?! எப்படி மறந்தேன் நானு?!” என்றவள் கண்களில் பல்ப் எரிய, அங்கிருந்த அத்தனை பேரும் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தனர்.

     “ம்க்கும்! இவ மறந்துட்டான்னு சொன்னா நாங்க அதை நம்பிடுவோமாம்!” என்று நக்கலடித்தாள் கங்கா.

    “டி போதும். அடங்குடி!” என்று தோழியை அடக்கியவள்,

     “ஏம்மா நாளைக்கு ஆப்பத்துக்கு அரிசி ஊறப்போட்டுட்டியா? ஆட்டுக் காலை தீச்சி வச்சுட்டல்ல?! அப்புறம் அறையெல்லாம் சுத்தம் பண்ணி வச்சுட்டல்ல?!” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

     “போதும் போதும்டி! எனக்கு இல்லாத அக்கறை இவளுக்கு பொங்கிடுதாம்!” என்று சிரித்த வைரம்,

     “முதல்ல உட்கார்ந்து சோறைச் சாப்பிடு” என்று  உருண்டைப் பிடித்துக் கொடுக்க, மகள் சிரிப்புடன் கண்களில் கனவுகளோடு ஆசையாய் ரசித்து ருசித்து உண்பதைப் பார்த்த வைரத்தின் மனம்,

     ‘என் பொண்ணோட முகத்துல இருக்க இந்தச் சிரிப்புதான் எங்க எல்லோரையும் எவ்ளோ கஷ்டம், நஷ்டம் வந்தாலும் சமாளிக்க வைக்குது. இப்படி ஒரு பொண்ணைக் குடுத்ததுக்கு உனக்குத்தான் சாமி நாங்க கடமைப் பட்டிருக்கோம்!’ என்று மனதுள் மெச்சிக் கொண்டார் மகளை.     

     “அயித்தை உங்க பொண்ணுக்கே குடுப்பீங்களா எனக்கும் நாலு உருண்டை ஊட்டுங்க?!” என்று கங்கா இடை புக,

     “உனக்கில்லாததா டா” என்று அவளுக்கும் உணவை உருண்டை பிடித்துக் கொடுக்க,

     “அடியே நான் இங்க வேலை மெனக்கெட்டு சமச்சுக் கொண்டாந்திருக்கேன். நீ அங்க பங்குக்கு போற?! அவங்களை ஒழுங்கா சாப்பிட விடுடி” என்று எப்போதும் போல் கங்காவின் தாய் கற்பகம் மிரட்ட,

     “போம்மா! அதை அப்பாவும் மாமாங்களும் சாப்பிட்டுக்குவாங்க” என்றுவிட்டு வைரத்திடம் வாங்கி  உண்ணலானாள் கங்கா.

     ஆண்கள் மூவரும் வந்தவுடன், வைரமும், கற்பகமும் அவர்களுக்கும் உணவை உருண்டைப் பிடித்துக் கொடுக்கக், காலை முதல் உழைத்து கொண்டிருந்த விவசாயிகளின் வயிற்றுப் பசி ஆறியது மணக்கும் கிராமத்துச் சமையலாலும், தத்தம் வீட்டுப் பெண்மணிகளின் அன்பாலும்.

     வீரபாண்டி, மருதுபாண்டி இருவரும் அந்தப் பசுமை கொஞ்சும் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில், அருகருகே இருக்கும் வீட்டில் வசித்து வந்ததில் மலர்ந்த நட்பு. பால்ய வயது முதல் இன்னும் பசுமையாய் இருக்கிறது அவர்களின் கிராமத்தைப் போலவே.

     அதேபோல் வைரமும், தங்கரத்தினமும்  வீரபாண்டிக்கு அத்தை, மாமன் பிள்ளைகள் ஆக, வழி வழியாய் வந்தது போல் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று உறவிலேயே கட்டிக் கொடுத்திருந்தனர். அவர்களும் அருகருகிலேயே இருந்த வீட்டிலேயே வசித்து வந்ததில் எல்லோருமே அத்தனை ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தனர். அந்த ஒற்றுமையின் காரணமாகவே, தங்கரத்தினத்தின் மனைவி பாரிஜாதம் இறந்த பின்னும் கூட, தாயில்லாத குறை தெரியாது அன்பைக் கொட்டி வளர்த்தார் வைரம் தன் அண்ணன் மகனை.

     “என்னடி பேச்சு சத்தமே இல்லாம முழுங்கிட்டு இருக்க?! நெனப்பு எங்கயோ பறந்து போயிடுச்சு போல!” என்று கங்கா தனதருகே அமர்ந்திருந்த கவியின் காதில் கிசுகிசுக்க,

     “ஆமா! உனக்கென்னவாம் பேசாம சாப்பிடுடி!” என்று மிரட்டினாள் தோழியை.

     “ம் ம்!” என்று கோணல் சிரிப்பைத் தவழவிட்ட கங்காவை பார்த்து,

     “உதை விழும் ஒழுங்கா சாப்பிடுடி!” என்று மிரட்டினாள் கண்களால்.

     “என்னடி குசுகுசுன்னு பேசிக்கிட்டு சோறு சாப்பிடும் போது பேச்சென்ன வேண்டிக் கெடக்கு?!” என்று கற்பகமும் மிரட்ட ஆரம்பிக்க,

     “நல்லா சொல்லுங்க அயித்தை, சும்மா தொணதொணத்துகிட்டு இருக்கா சாப்பிடக் கூட  விடாம!” என்று கோர்த்துவிட்டவள், தனது கண்களில் காதல் கனவுகளை ஏந்திக் கொண்டாள் மீண்டும்.

     அங்கே அவளது கனவுகளுக்குச் சொந்தமானவனோ, வேறொருத்தியின் தோளில் கைபோட்டபடி,

     “ஐ! லைக் யூ! ஐ லைக் யூ வெரி மச் ஷாலு!” என்று  கொஞ்சிக் கொண்டிருந்தான் கிறக்கத்துடன்.

     அவனது கொஞ்சலில் இருக்கும் இடத்தை மறந்தவளோ,

      “ஐ டூ! ஐ டூ லவ் யூ சோ மச் டா தாஸ்!” என்ற ஷாலு, அவனை மேலும் நெருங்கி மயக்கத்துடன் அவன் இதழ்களில் முத்தமிட நெருங்க, ஒரே தள்ளில் அவளைக் கீழே தள்ளிச் சாய்த்தான் அவன்…

                           -உள்ளம் ஊஞ்சலாடும்…

            

    

     

    

 

    

       

 

                

   

    

  

    

           

Advertisement