Advertisement

என் உயிர் தொடும் மெல்லிசையே… உங்கள் இதயத்தை தொடும் மெல்லிசையாக உங்களோடு பயணிக்க வரும் ஆதிதேவ், இசைப்பிரியா

பகுதி – 01

அதிகாலை நேரம் மெல்ல சோம்பலை முறித்த சம்யுக்தா குளித்து முடித்துவிட்டு பரபரப்பாக சமையலறைக்குள் நுழைந்தாள்.

சமையலறைக்குள் இருந்து கொண்டே தனது அன்பு கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

“ஜெய்… ஜெய்… இங்க கொஞ்சம் வாங்களேன்” என்றாள்.

‘காலைல மனுஷன நிம்மதியா தூங்க விடுறாளா? பெருசா சமையல் செஞ்சு கிழிக்கிற மாதிரி தான் சீன் போடுறது. வழக்கம் போல ஒரு இன்ஸ்டன் காஃபி. ஸ்விக்கில டிஃபன் ஆர்டர் பண்ணுவ. இதுக்கு ஓவர் பில்டப்’ என நினைத்துக் கொண்டவன் சத்தமின்றி புரண்டு படுத்துக் கொண்டான்.

எல்லா வேலையும் நாமலே செய்யனும். வேலைக்கும் போகனும். நம்மள மட்டும் என்ன இரும்புலயா அடிச்சு வச்சிருக்காங்க.

“நல்ல வேல. கடவுள் உன்ன இரும்புல அடிச்சு வைக்காம விட்டான். இதுக்கே இந்த ஆட்டம் போடுறவ. ஹிக்கும்” என கண்களை சிரமப்பட்டு மூடிக்கொண்டு வராத தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“கரடியா கத்தினாலும் நமக்கு உதவி செய்ய இங்க நாயும் இல்ல” என முனகிக்கொண்டே பால் பாக்கெட்டை எடுத்து ஒரு மூலையில் சிசரில் கட் பண்ணி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள். நெருப்பின் வேகம் குறைய சிம்மில் வைத்துவிட்டு தனது செல்ல பிள்ளைகளை எழுப்பிவிட்டாள்.

ஆரவ், மித்ரா டைம் ஆகுது செல்லக்குட்டீஸ்..

“மம்மி ப்ளீஸ். டுடே லீவ் தான. இன்னும் கொஞ்ச நேரம் மம்மி” என பதினொரு வயதான பூங்குட்டி மித்ரா கொஞ்சும் குரலில் கேட்டாள்.

“அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு. அப்படியே அப்பன் புத்தி” என வசைபாடத் துவங்கினாள்.

“மம்மி எனக்கு கோல்டு காஃபி போட்டு வைங்க. நான் அப்புறம் வந்து குடிக்கிறேன்” என்றாள் மித்ரா.

ஆரவ் மட்டும் சமத்தாக எழுந்து கொண்டான். எழுந்தவன், “ஹேப்பி மார்னிங் மாம்” என சம்யுக்தாவை கட்டிக் கொண்டான்.

“என் தங்கம். ஹேப்பி மார்னிங் செல்லம்” என்றவள் செல்ல மகனின் தலையை வருடிக் கொடுத்து முத்தமிட்டாள்.

“ஆரவ்க்கு எட்டு வயசு தான் ஆகுது. எவ்வளவு பொறுப்பா நேரமா எழுந்து ஹேப்பி மார்னிங் சொல்றான். அப்பனும் மகளும் மட்டும் ஏன் இப்படி இருக்கிங்க” என குரலை உயர்த்தி வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தாள்.

சம்யுக்தாவின் பேச்சு அவர்கள் காதில் எள்ளளவும் இறங்கவில்லை. அசையாமல் படுத்துக் கொண்டிருந்தனர்.

“இங்க ஒருத்தி காலைல இருந்து கத்திட்டு இருக்கேன். நிஜமா உங்க காதுல விழவே இல்லையா?…”

“இருவரிடமும் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு கோவத்துடன் நீ செல்லம் போலாம்” என மகனது கையைப் பிடித்துக் கொள்ள.

“மம்மி நான் ஃபேஷ் வாஷ் பண்ணிட்டு பிரஸ் பண்ணிட்டு வரேன். எனக்கு ஒரு கப் கேப்புசீனோ போட்டு குடுங்க” என்றான்.

“சரிடி தங்கம். சமத்து” என மகனை கொஞ்சிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

கிச்சனுக்குள் போன ரெண்டாவது நிமிடத்தில் மீண்டும் சம்யுக்தாவின் அந்த வீடு முழுவதும் குரல் எதிரொளித்தது.

“இந்த மனுஷன கட்டிகிட்டு வந்து நாயா உழைக்கிறேன். ஒரு நல்லநாள் பெரிய நாள்னு நாளும் கிழமையும் உண்டா? ஊரு டூருனு எதாவது சந்தோஷம் உண்டா? மனசுக்கு நிம்மதி தான் உண்டா? லீவு நாள்லயாவது கொஞ்சம் ஓய்வு உண்டா? ஒரு மண்ணும் கிடையாது. ஆஃபீஸ் வீடுனு அலைஞ்சே கிழவியாக வேண்டியது தான். பாருங்க மக்களே. இதுதான் பெண் சுதந்திரம்” என தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

“மம்மி நான் வந்துட்டேன். என்னோட கேப்புசீனோ ரெடியா?” என கண்களில் ஆர்வம் மின்ன அந்த சிறிய விழிகள் இரண்டும் சமையலறையை வட்டமிட்டு க்ளாஸை தேடியது.

“மம்மி இன்னும் ரெடி பண்ல செல்லம். ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல ரெடி பண்ணிடுவேன்” என செல்ல மகனைப் பார்க்க.

“ஓகே மம்மி” என ஆரவ் வெளியே ஓட.

“மம்மி சீக்கிரம் ரெடி பண்ணி தரேன்.

ஆரவ் செல்லம் உங்க டாடிய கொஞ்சம் கிச்சனுக்கு வர சொல்லுடா”  என கிச்சனில் இருந்து சம்யுக்தாவின் குரல் ஒலிக்க.

“டாடி போன் பேசிட்டு இருக்காரு மம்மி” என ஆரவ்  பதிலுக்கு குரல் கொடுத்தான்.

“மம்மி கூப்பிட்டேனு வர சொல்லுடா…”

“ஓகே மம்மி” என்றவன் “டாடி மம்மி உங்கள கிச்சனுக்கு வர சொல்றாங்க” என அழைப்பு விடுத்தான்.

‘எங்க அம்மா கிட்ட பேசினா இவளுக்கு பொறுக்காதே.  கழுகுக்கு மூக்கில வேர்கிற மாதிரி எப்படித்தான் கண்டுபிடிப்பாளோ தெரியல’ என நினைத்துக் கொண்டு “இதோ வரேன்னு சொல்லுடா” என மகனிடம் சொல்லி அனுப்பினான்.

ஆரவ் அப்படியே சம்யுக்தாவிடம் கூறிவிட்டு ஓடினான்.

ஜெய் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு,  “சம்யு டியர்” என சொல்லிக் கொண்டே கிச்சனுக்கு சென்றான்.

“என்னடி லட்டு காலைலயே தூது விடுற. ரொமான்ஸ் மூடா” என அவளருகில் வந்து லேசாக கன்னத்தை கிள்ள.

ஹிக்கும். அது ஒண்ணு தான் குறைச்சல். நான் இங்க  தனியா கஷ்டப்படுறேன்.  அங்க உங்க அம்மாவுக்கு போன் பண்ணி கொஞ்சிட்டு இருக்கிங்க.

அம்மா கிட்ட பேசி நாலுநாள் ஆகுதுடி. ஆதியும் பேசலையும். அவங்க பாவம்ல.

உங்க தம்பி ஆதி விவரமா தான் இருக்கான்.  காலையில எழுந்ததுமே அங்க போன் பண்ணி பேசலனா அன்னைக்கு பொழுதே போகாது.

ஏண்டி காலைலயே ஆரம்பிச்சிட்டியா?…

ஏழு கழுத வயசு ஆனாலும் கொஞ்சலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல. ஆனா இங்க ஒண்ணும் இருக்காது.

“இப்போ உனக்கு என்ன குறைச்சலா போயிடுச்சு. உன்ன மட்டும் கொஞ்சலையா? டியர்” என குறும்புப் பார்வையுடன் சம்யுக்தாவை பார்த்தான்.

உங்க வீட்டு பேச்செல்லாம் கேட்க நான் தயாரா இல்ல ஜெய்.  இத கொஞ்சம் பீட் பண்ணி குடுங்க.

என்ன கருமம்டி இது.

ஆரவ் தான் கேப்புசீனோ கேட்டான். அதான் ரெடி பண்றேன்.

காஃபி கேட்டா இன்ஸ்டன்ட் காஃபிங்கிற  பேர்ல கொடுமை பண்ற.  ஒரு நாளாவது  எங்க அம்மா போடுற காஃபி  மாதிரி நல்ல காஃபி போட்டு கொடுத்து இருக்கியா?  கண்ட கருமத்தையும் கொடுத்து பிள்ளைகளையும் சேர்த்து கெடுத்து  வைக்கிற.

இப்படி எல்லாம் செஞ்சு கொடுக்கணும்னு வேண்டுதல் பாருங்க.  உங்க பையன் தான் கேப்புச்சீனோ வேணுன்னு ஒத்தகால்ல நிக்கிறான். இத கூட  வெளிய போய் வாங்கணுமானு தான்.  வீட்டிலேயே செய்து கொடுத்தா நல்லா இருக்கும். இன்னும் கொஞ்சம் சேர்த்து கிடைக்கும்னு தான் ஜெய். இதில உங்களுக்கு என்ன கஷ்டம்.

என்கிட்ட இல்ல வேலை வாங்குற.

 இத பீட் பண்ணி கொடுத்த கொறைஞ்சா போயிடுவிங்க.

“நான் ஒண்ணுமே சொல்லல சம்யு.  குடு” என  வாங்கி பீட் பண்ணத் தொடங்கினான்.

நல்லா கிரீமியா வர வரைக்கும் பீட் பண்ணுங்க.

சரிங்க பொண்டாட்டி. இதுல என்னத்த கலந்த வச்சிருக்க.

அதுல ஒன்னுமே இல்ல ஜெய்.  இன்ஸ்டன்ட் காபி தூள், சர்க்கரை,  கொஞ்சம் ஹாட் வாட்டர் அவ்வளவுதான்.  நீங்க நினைக்கிற மாதிரி எந்த கெமிக்கலும் இதுல இல்ல.

நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். பையனுக்கு கேப்புச்சீனோ.  பொண்ணுக்கு எந்த கருமத்த கொடுக்கப் போற.

உங்க மகாராணி ஆச்சே.  மேடம் கோல்ட் காஃபி தான் கேட்டிருக்காங்க.

பாசம் காட்றேன்னு  பிள்ளைகள இப்படி கெடுத்து வைக்கிற.

நான் எங்க கெடுக்கிறேன். அவங்க  கேட்கிறது கொடுத்தாதான் குடிக்கிறாங்க.  இல்லனா சும்மா கிடக்கும்.  மனசு கேட்காம தான் செஞ்சு தரேன்.

அடேங்கப்பா. எவ்வளவு நல்ல மனசு. பெரும்பாலும் ஸ்விக்கில ஆர்டர் பண்ற. மாசத்துக்கு பாதி நாள் சமைக்கிறதே இல்ல.  என் பொண்டாட்டிக்கு என்ன ஒரு பொறுப்பு டா சாமி.

நான் பொறுப்பா இல்லனா நீங்க சொகுசா வாழ முடியாது ஜெய்.

நான் எதுவும் சொல்லல. அடுத்து என்ன செய்யனும் சொல்லுங்க டியர் பொண்டாட்டி.

உங்க செல்ல பொண்ணுக்கு  சாக்லேட் கோல்டு காஃபி தான் வேணுமாம்.  அதுல வெண்ணிலா ஐஸ்கிரீம் வேற கலந்து தரனுமாம்.

இப்படியே ஐஸ்கிரீம் கொடுத்து உருட்டி வச்சிடு. நீ படிச்சவ தான. அவங்க சின்ன பிள்ளைங்க. அப்படி தான் ஆசைப்பட்டு கேட்பாங்க. நாம தான் பாத்துக்கனும் சம்யு.

ஜெய்யைப் பார்த்து முறைத்தவள், “பீட் பண்ணது போதும். ஃபிரிட்ஜ்ல  பால் வெச்சிருக்கேன். கொஞ்சம்  ஐஸ்கிரீம்,  சாக்லெட் சிரப் எல்லாம்  எடுத்துட்டுவாங்க”  என சொல்லிக் கொண்டே பீட் செய்த கிரீமில் சூடான பாலை கண்ணாடி க்ளாஸில் ஊற்றி கலந்து நுரை பொங்க ஆரவிடம் நீட்டினாள்.

ஆரவ் ஆசையுடன் வாங்கிக்கொண்டு சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

இதற்குள் சம்யுக்தா சொன்ன பொருட்கள் அனைத்தையும் ஜெய் அருகில் எடுத்து வைத்தான்.

இன்ஸ்டன்ட் காஃபி தூளை தண்ணீரில் கலக்கி தேவையான அளவு சாக்லேட் சிரப், சர்க்கரை, சில்லுனு பால் கொஞ்சம் சேர்த்து மிக்ஸியில் அடித்து க்ளாஸில் கொஞ்சம் சாக்லேட் சிரப், கொஞ்சம் ஐஸ்க்ரீம் போட்டு மிக்ஸி ஜாரில் உள்ள கலவையை ஊற்றினாள்.

மித்ராவுக்கு கோல்டு காஃபி ரெடி பண்ணி மீண்டும் ஃபிரிட்ஜில் வைத்தாள்.

பொண்ண எழுப்பி கொடுக்காம இப்ப எதுக்கு மறுபடியும் ஃப்ரிட்ஜில வைக்கற.

“அவ எழுந்து வேணும்னா குடிக்கட்டும். இந்தாங்க உங்களுக்கு காஃபி” என கப்பை நீட்டினாள்.

“ஒரு காஃபி போடுறதுக்கே இத்தனை அட்டகாசம் பண்ற.  நீ இன்னும்  எப்ப சமைச்சு நான் எப்ப கிளம்பி”  என  வார்த்தையை   முழுங்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

என்னது சமைக்கனுமா? போனா போகுதுன்னு காஃபி போட்டா சமைக்க வேற சொல்லுவீங்களா? அதெல்லாம் ஸ்விக்கில ஆர்டர் பண்ணிட்டேன்.  பத்து நிமிஷத்துல வந்துடும்.  சாப்பிட்டு கிளம்புங்க.

இன்னைக்கும் ஆர்டர் தானா? சம்பாதிக்கிறது ஆர்டர் போட்டே அழிஞ்சிடும் போல. இதுல மாசம் இ எம் ஐ, ஸ்கூல் ஃபீஸ், வீட்டு வாடகை எப்படி தான் சமாளிக்கிறது.

அவன் சொல்வதை காதில் வாங்காமல் போய்ட்டு  வரும் போது ரெடிமேட் சப்பாத்தி,  அப்புறம் கொஞ்சம் தக்காளி தொக்கு, புதினா தொக்கு வாங்கிட்டு வந்துருங்க. அப்படியே கருவாடு தொக்கு  கூட  வாங்கிட்டு வந்துடுங்க ஜெய்.

வாங்கிட்டு வந்துடுறேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம் சம்யு.

“என்ன?” என்பதைப் போல பார்த்தாள்.

“உனக்கு எதுக்கு டியர் கிச்சன்?.. “

தேவையில்லாம சீண்டி வார்த்தைய வாங்காதிங்க.

இல்ல செல்லம். இனி  பார்க்கும் போது கிச்சன் இல்லாத வீடா  பார்த்துடலாம்.

ஓவரா லொள்ளு பண்ணாதிங்க.  ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம்.  வேலைக்கு ஆள் வெச்சுக்கலாம்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறிங்க.  நான் என்ன செய்ய முடியும்.

வேலைக்கு ஆள் போடுற அளவுக்கு நாம இன்னும் வளரல சம்யு. நம்ம வேலைய நாம தான் செய்யனும்.

“வேலைக்கு போயிட்டு வந்து  வீட்டுலயும்  சமைக்கணும்னா என்னால முடியாது” என சொல்லிவிட்டு கோபமாக சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.

“உன்னைய  யார் வேலைக்கு போக சொன்னா?…”

ரெண்டு பேரும் வேலைக்குப் போனா தான் குடும்பத்தை சமாளிக்க முடியும்.   புள்ளைங்க படிப்பு செலவுக்கு, குடும்ப செலவுக்கு பணம் பத்தாது. இந்த பெங்களூர் சிட்டில  ரெண்டு பேரும் சம்பாதிக்காம பொழப்பு நடத்த முடியாது. அது மனசுல இருக்கட்டும் ஜெய்.

இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. புள்ளைங்கள  ஊருல அம்மாகிட்ட விடலாம்னு  சொன்னா  கேட்க மாட்டேங்கிற.

அந்த பட்டிக்காட்டுல என்ன ஸ்பெஷிலிட்டி இருக்கு. அங்க  போய் என் பிள்ளைங்க ஆடு மாடு மேய்க்க வா.

சரி உங்க அம்மா வீட்டிலயாவது விடலாம்.

ஏன்? எங்கம்மா நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? எங்கம்மாவ கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன்.

“எது சொன்னாலும் இப்படி விதண்டாவாதம் பேசினா நான் என்னடி பண்றது” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே சம்யுக்தா ஆர்டர் செய்த ஃபுட் வந்து சேர்ந்தது.

“பசங்களுக்கு லஞ்ச் என்ன பண்ண போற…”

“கொஞ்சம் கஷ்டப்பட்டு  மேக்ரோனி செஞ்சுட்டேன்.  ஈவினிங் தான் சப்பாத்தி வந்துரும் இல்ல…”

எங்க ஊர்ல கிராமத்துல ஆரோக்கியமா சாப்பிட்டு நல்லா சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தேன். வேலைங்கிற பேருல இங்கு வந்து சித்திரவதைய அனுப்பிவைக்கிறேன்.

வேலை வேணும்னா கஷ்டப்பட்டு தான் ஆகனும் ஜெய்.

வேலையிலயும் நிம்மதி இல்ல. சாப்பாட்டுலயும் நிம்மதி இல்ல. வெறும் பணத்தை வச்சிட்டு நாளைக்கு என்னத்த கொண்டு போக போறேன்.

உங்க வார்த்தை எல்லாம் வார்த்தைக்கு தான் நல்லா இருக்கும். வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. வெட்டி பேச்ச விட்டுட்டு வந்து சாப்பிடுங்க.

சரிங்க மகாராணி. நீங்க வச்சது தானே சட்டம். நான் வெறும் கீ கொடுக்கிற  பொம்மை தானே.

ரொம்ப பேசாதிங்க. நல்லது சொனீனா நாய் சொன்னா கூட கேட்டுக்கலாம். தப்பில்ல.  உங்க பொண்ணு உங்கள மாதிரியே சோம்பேறியா இருக்கா. போய் எழுப்பிவிடுங்க.

“நான் சோம்பேறியா? இருக்கும் டி. ஏன் சொல்லமாட்ட.  புள்ளைங்கள இப்படி வழக்காத.  இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. நேரமா எழுப்பி பழக்கு” என்றான்.

உங்க அம்மா கிட்ட பேசின உடனே எதுத்து பேச தைரியம் வந்திருச்சா.

நீயேன் எல்லா விஷயத்தையும் தப்பு தப்பாவே புரிஞ்சிக்கிற சம்யு. நான் போய் உன்னை எதிர்த்து பேச வேணா?. காலையில் இருந்து எழுந்து எவ்வளவு வேலை செஞ்சிருக்க.  கேப்பசீனோ போட்டுட்டு,  இன்ஸ்டன்ட் காஃபி,  கோல்ட் காஃபினு அடேங்கப்பா எவ்வளவு வேலை.  உன்ன போய் நான் எதுத்து பேச முடியுமா?

“என்ன நக்கலா?…”

பாத்தியா திரும்பத் திரும்ப தப்பாவே பேசுற.  நீ முதல்ல உக்காரு. இன்னைக்கு சண்டே லீவு தானே. எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு  இருக்குற.

ஒரு நாள் லீவுக்கு உங்களுக்கு வேலை செய்யவே சரியா போயிடுது. அப்புறம் என்னத்த ரெஸ்ட் எடுக்கிறது.

“எனக்காக ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்றியா?…”

“செய்யற மாதிரி சொல்லுங்க. செய்றேன்…”

கொஞ்சம் மட்டனும்,  ஃபிஸ்சும் எடுத்துட்டு வரேன். காரசாரமா செஞ்சினா மதியம் வந்து சாப்பிடுவேன்.

ஏதாவது ஒண்ணு மட்டும் செய்யலாம். நிறையலாம் செய்யமுடியாது.  வேணும்னா அதையும் ஆர்டர் போட்டுக்கலாமா? ஜெய்.

“எதுக்கு எடுத்தாலும் ஆர்டர் போட்டு என்ன கடுப்பு ஏத்தாத சம்யு. ஒரு நாளைக்காவது வீட்டில  நல்லவிதமா பிள்ளைகளுக்கு சமைச்சு கொடுத்தா  என்ன?…”

இன்னைக்கு ஒருநாள் தானே எனக்கும்  லீவு. ஏன் மனசாட்சி இல்லாம பேசுறீங்க. உங்களுக்கு மட்டும் தான் ரெஸ்ட் வேணும்.  நானும் மனுஷி தான. என்னால முடியாது. ஆர்டர் போட்டுக்கலாம்.

அவ்வளவுதான்.

“என்ன சொன்னாலும் ஆர்டர் போட்டுக்கலாம்னு சொல்றவ.  புள்ளைங்கள  மட்டும் ஏன் கஷ்டப்பட்டு பெத்தவ.  பேசாம அதுங்களையும் ஆர்டர் போட்டு தத்தெடுத்து வாங்கி இருக்கலாம். அவசரப்பட்டு பெத்துட்ட போல”  என்று சொன்ன நிமிடம் சம்யுக்தாவின் கண்களில் கோபம் அனலாக  தெரித்ததை அவனால் உணர முடிந்தது.

‘அச்சோ! அவசரப்பட்டு வார்த்தைய விட்டு மாட்டிக்கிட்டோமா? சும்மாவே ஆடுவா? இப்ப என்ன பண்றது’  என யோசித்தான்.

சம்யுக்தா அவன் மீது  தாக்குதலை தொடங்கும் முன்னே ஜெய்யின்   தம்பி ஆதி தேவிடமிருந்து  கால் வந்தது.

சென்னை சிப்காட் ஐடி  கம்பெனியில் சோலார் மெயின்டனன்ஸ் இன்ஜினியராக பணிபுரியும்  இருபத்து எட்டு வயதான ஆதிதேவ்.

‘ஆபத்பாண்டவா சரியான நேரத்துல கால் பண்ணியிருக்க’ என நினைத்துக் கொண்டு, “சொல்லுடா ஆதி.  அண்ணன் நெனப்பு இப்பதான் உனக்கு வந்ததா?” என்றான்.

டேய்! அண்ணா. அதெல்லாம் எப்பவும் ஞாபகம் இருக்கும்.

காரணம் இல்லாம போன் பண்ண மாட்டியே.  அதுவும் இந்த டைமுக்கு கால் பண்ணி இருக்க.

சும்மா தான் கால் பண்ணேன். எப்படி இருக்க. அண்ணி பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?

அடேங்கப்பா. குடும்பத்து மேல அக்கறையாம். ரொம்ப நடிக்காதடா. இப்ப எதுக்கு கால் பண்ண.

அதுவா. அந்த மேனேஜர் இன்னைக்கு லாங்  சைட் போக  சொல்லிட்டான்.  அதான் நேரமா கிளம்பிட்டேன்.

லாங்  சைட் போற மாதிரி வருத்தம் உன் மனசுல இருக்கிற மாதிரியே தெரியலையே டா.

எப்படிடா தெரியும்.  என்னோட ஹெச் ஆரா கன்னடத்து பைங்கிளி  ஒண்ணு  வருதாம். எதாவது செட் ஆகுமானு கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்க போறேன்.

“நீயெல்லாம் என்ன ஜென்மம் டா…”

“மனுஷ ஜென்மம்னு தான்னு நெனச்சிட்டு இருக்கேன் டா அண்ணா…”

போன முறை தான் யாஷிகாவ லவ் பண்றேன்னு சொன்ன. அதுக்கு முன்னாடி தூரிகா, மிர்திகா, ரகசியானு லிஸ்ட் பெருசா போட்டு சொன்ன . அதெல்லாம் என்ன ஆச்சினு தெரியல.

“அதுங்க  ஆதியின் ஆத்மார்த்தமான காதலிகள்டா அண்ணா. நான் எதிர்பாக்கிற குவாலிஃபிகேஷன்  எல்லாம் மொத்தமா எவகிட்ட இருக்கே அவ தான் என் லைஃப் பார்ட்னர். அவள தான் தேடிட்டு இருக்கேன் டா” என்றான்.

“அப்படினா இந்த ஜென்மத்தில உனக்கு லைஃப் னு ஒண்ணு கிடைக்காது. லைஃப் பார்ட்னரும் கிடைக்கமாட்டா. இந்தா வச்சிக்கோ இந்த அண்ணனோட அதிகாலை சாபம்” என்றான் ஜெய்.

மெல்லிசை தொடரும்..

வழக்கம் போல ஹீரோயின் வந்து ஹீரோவ திருத்துவானு கற்பனை பண்ணாதிங்க. இது வேற லெவல் ஹீரோயின் செல்லம்ஸ்.

அதே போல ஆன்டி ஹீரோ மாதிரி தான். அப்படி தான் ஆனா இல்ல. ஞாபகம் வச்சிக்கோங்க.. போகப்போக புரியும்..

Advertisement