Advertisement

அத்தியாயம் 3
“முடியாது முடியாது முடியாது, கண்டிப்பா முடியாது, நீங்க என்ன வேணா சொல்லுங்க, என் பையன் நைட் பொண்ணுங்களை  கூப்ட்டு லூட்டி அடிப்பான்னு வெளிய சொல்ல முடியாது, இது என் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய களங்கமாகும்ய்யா, ஏற்கனவே எப்போடா கவுக்கலாம்னு காத்துட்டு இருக்காங்க, ஒரு சின்ன பிரி கிடைச்சாலும் மொத்தமா மேஞ்சிடுவாங்க”
“ஸார் அப்போ யார் கொலை பண்ணினதுன்னு கண்டு பிடிக்க வேணாங்களா?”, சிவராமன்.
“கண்டுபிடிய்யா, கண்டுபிடிச்சு எவன் பண்ணினானோ அவனை என்கிட்டே கொண்டுவா, ஆனா எக்காரணத்தை கொண்டும் சம்பு சொன்ன விஷயம், உங்க ரெண்டு பேரைத் தவிர வெளிய யாருக்கும் தெரியக்கூடாது, நல்லா தெரிஞ்சிக்கோங்க வெளில இருக்கிற எந்த போலீஸ்க்காரனுக்கும் கூட தெரியக்கூடாது. ஏன்னா எவன் எந்த கட்சிக்கு, எந்த கோஷ்டிக்கு விசுவாசமா இருப்பான்னு யாருக்குமே தெரியாது”, என்று தீர்மானமாக உரைத்தவர், தொடர்ந்து..
இறுகிய முகத்துடன், “நா சத்தியசந்தன், ராமனுக்கு டஃப் குடுக்கிற வம்சம் எங்க வம்சம்னு பேர் இருக்குய்யா. அத கெடுத்துக்க முடியாது.  என் ஒரே மகன்யா அவன்…., செத்துப்போயும் ஊர் வாய்க்கு அவல் ஆகிடக்கூடாது. எங்க அரசியல் எதிரிங்க யாரோ கொன்னுட்டாங்கன்னு வதந்திய கிளப்புங்க, அதே கோணத்துல விசாரிக்கிறோம்னு அறிக்கை குடுங்க”, குரல் கரகரத்து அழுகைக்கு தயாராகும்போல் இருந்தது. ஆனால் நொடியில் சரி செய்து கொண்டு, விரக்தியாக  “ஹும். அரசியல்வாதிக்கு பாசத்தைவிட இமேஜ் முக்கியம்” அதற்கு மேல் அவர் ஏதும் பேசவில்லை.
சிவராமனும், “சார், டேக் கேர்”, என்று விட்டு தோட்டம் நோக்கி நடந்தார்.
பேசியில் ஷானுவின், “ரிசார்ட்டில் இருக்கிறேன், தொந்தரவில்லை என்றால் அழைக்கவும்” குறுஞ்செய்தி பார்த்து, அவளுக்கு  அழைத்தார்.
“சார்”
“யா, வந்துடீங்களா?”
“எஸ்ஸார்”, ஷானு.
கொலையைப் பற்றி யோசனையில் இருந்தவர், “அந்த ரிசார்ட்-டை ஒரு கம்ப்ளீட் ஸ்டடி பண்ணுங்க”
“ம்ம். ஓகே சார்”, ஷானுவை குறுக்கிட்டு, “சார் போலீஸ் இன்க்வஸ்ட்-ல இந்த இடத்தை தரோவா அலசி ஆராய்ஞ்சி இருப்பீங்க. அப்படி இருக்கும்போது எங்களுக்கு என்ன பாக்கணும்-ங்கிறா மாதிரி ஒரு க்ளூ குடுத்தீங்கன்னா..”, குரூப் காலில் சூர்யா கேட்க..
ஷானு,  அவளை ஒரு கண்டனப்பார்வை பார்த்து “ம்ப்ச்”, என்றவள் தொடர்ந்து,
“சாரி சார் அவ ஒரு ஆர்வக்கோளாறு, நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க.”
“ஷி ஹவ் எ பாயிண்ட், இந்த கேஸ் அவுட்லைன் கொடுக்கறேன், தென் நீங்க என்ன பண்ணனும்னு சொல்றேன். இறந்து போன எல்லாருமே பிக் ஷாட், ஒரே மாதிரி செத்துப்போயிருக்காங்க. ஒரே வீட்ல, கண்டிப்பா இது ஒரு ப்ரீ-ப்ளான்ட் மர்டர். இந்த வீட்டுக்கு நைட் யாரோ வந்து போயிருக்காங்க, அது ஒரு ஆளா இல்ல ரெண்டு மூணு பேரா தெரில.”
“வீட்டை பாத்துக்கற சம்பு-ங்கிறவர் எப்போதும் வெளி வராண்டாலதான் படுப்பார் ஆனா, இன்னிக்கு தோட்டக்காரன் குப்பத்துல படுத்துக்குங்கனு அந்த பசங்களே துரத்தி விட்டு இருக்காங்க. அவர் சொன்ன தகவல், இந்த நாலுபேரும் இங்க வர்றதுக்கு முன்னாடி யாரோ லேண்ட் லைன்க்கு போன் பண்ணி இவங்க இருக்காங்களா, எப்போ வருவாங்கன்னு கேட்டிருக்காங்க”
“போன் நம்பர் யார்துன்னு..?”, ஷானு கேட்க..
“அது ஒரு மால்ல ரெஸ்ட் ரூம் பக்கத்துல கிடந்தது, திருடப்பட்ட போன்.  திருட்டு கொடுத்தவர் அந்த நம்பரை அரை மணி நேரத்துல ப்ளாக் பண்ணியிருக்கார்”
“ஹ்ம்ம்..”, சூர்யா.
“சார், CCTV இருந்ததே?  யார் வந்தாங்கன்னு தெரிலையா?”, ஷானு.
“நோ. ரெண்டுமே ஆஃப் பண்ணியிருக்காங்க”
“யாரு?”
“சாம்பசிவம், இங்க வேலை பாக்கறவர், மினிஸ்டர் பையன் மணி சொன்னாரு  அதனாலதான் ஆஃப் பண்ணினேன்னு சொல்றார், அமைச்சருக்கு தூரத்து உறவு, நம்பகமானவர்”
“சர்வைலென்ஸ் வேண்டாம்னு சொன்னா… ஒருவேளை லேடிஸ் கூப்ட்டுருப்பாங்களோ?”
“யா, என்னோட யூகமும் அதான்”.
இவர்கள் இருவரும் பேசும்போதே “ம்ம்ம். யூகம்.. கெஸ்”, மனதுக்குள் தமிழை மொழிபெயர்த்ததை வாய்விட்டு முணுமுணுத்தாள் சூர்யா.
மறுமுனையில் சிவா சார் பேச்சினை நிறுத்த, சூர்யாவின் எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த ஷானு முறைத்தாள்.
சூர்யாவிடமிருந்து அசட்டு சிரிப்பு + ஒரு சாரி சத்தமின்றி வந்தது.
அங்கே அந்த பீச் வீட்டில் சிவராமன் அருகே ஒரு கான்ஸ்டபிள் எதோ கேட்க வர, “ஓகே. எல்லாமே போன்-ல பேச முடியாது, நாளைக்கு அதுல்கர் உங்களை காண்டாக்ட் பண்ணுவார்”, என்று அழைப்பை துண்டித்தார். அந்த காவலர் வந்து சொன்ன விஷயம் அவருக்கு அத்தனை உவப்பானதாக இல்லை, காரணம் அனைத்து தமிழக மீடியாவும் அந்த கடற்கரை வீட்டின் வாசலில் இவரைக் காணக் காத்திருந்தது.
அமைச்சர் வேறு, சில உண்மைகளை மறைக்குமாறு அன்புடன் (?) கேட்டிருக்க, ‘படுத்தறாங்க’, முணுமுணுத்துகொண்டே சென்றார்.
ஷானு கேஸ் குறித்து தீவிரமான யோசனையில் இருக்க, சூர்யா அவளது அலைபேசியையே பார்த்தபடி பரவச நிலையில் (25% அதிர்ச்சி + 25% மகிழ்ச்சி + 25% படபடப்பு + 25% நன்றி கடவுளே feel = பரவச நிலை-ன்னு அனுபவசாலிங்க சொல்றாங்க ) இருந்தாள். சில நிமிடங்கள் பொறுத்து, “மேம் ரசவாதி-ல சொன்னா மாதிரியே நடக்குது மேம்”, என்றாள், அதே பரவசத்துடன்.
புருவம் சுருக்கி, ஏதோ ஏடாகூடமாக சொல்லப்போகிறாள் என்பதை கணித்து, “என்ன நடக்குது?”, கேட்டாள் ஷானு. சூர்யா சொல்ல வருவது அவளது முக பாவம் வைத்தே இவளுக்கு கொஞ்சம் புரிந்தாற்போல் இருந்தது.
நாம எதை தீவிரமா அடைய  விரும்புறோமோ, அதை இந்த யூனிவெர்ஸ் நமக்காக நம்ம கிட்ட கூட்டிட்டு வரும் ன்னு ரசவாதி-ல paulo coelho சொன்னாரில்ல?”, என்று சூர்யா மிக தீவிரமாக கேட்க…
நமுட்டு சிரிப்பினை வாயிலேயே அதக்கி, “ஓ அப்டியா சொன்னார்?”
“ம்ச். ஆமா மேம், நீங்க கூட அருமையான புக்குனு சொன்னீங்களே?”
“ஆமா..”, ஷானு.
“பாருங்க., துல்கரோட ரெண்டு வார்த்தை பேசமுடியுமா ன்னு நினச்சேன், எனக்காக.. ஒரு கேஸே உருவாக்கி..,  இந்த உலகம் அதுக்கான வாய்ப்பை கொடுக்குது பாத்தீங்களா?”, என்றால் ஆர்வமாக.
இதழ் பிரிய சிரித்து, “ஓஹோ? அப்போ அந்த நாலு பேர் செத்துப்போனதுக்கு உன்னோட ஆசைதான் காரணமா?”, என்று கேள்வி கேட்க…
சட்டென “எதே?”, தலையை உலுக்கி தன் பரவச நிலையில் இருந்து தரைக்கு இறங்கி, “அட மேம், அது இன்வெஸ்டிகேஷன், இது டத்துவம், நம்ம நீலாக்கா சொல்லியிருக்காங்க தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது”
“யாரு நீலாக்கா?”
“மேம், வரவர உங்களுக்கு மறதி அதிகமாயிட்டே வருது, போன கேஸ்-ல நம்மகூட ஒர்க் பண்ணினாங்களே?”
“ஓ அந்த ப்ரொபெஸர்…”
“யா யா”, என்று கொஞ்சம் சடைத்துக் கொண்டு, “சரி வாங்க இப்போ இந்த கேஸை பாக்கலாம்”, ஓரப்பார்வையோடு சீரியசானாள், சூர்யா. ஒரு சின்ன நோட் பாட் & பேனா கையில் குறிப்பெடுக்க தயாராய்.
“ம்ஹ்ம். அந்த நாலு பேரோட மொபைல் நம்பர்ஸ், அவங்க கடைசியா யார் கூட பேசினாங்கன்னு டீடெயில்ஸ், லேண்ட் லைன் கால்ஸ் விசாரிக்கணும்”
“எஸ்”
“அந்த மால்-ல கேமராஸ் இருந்தா அதோட புட்டேஜ், போன் தொலைச்சவங்க யாரு,  எங்க எப்போ தொலைச்சாங்கன்னு தகவல்..”
“…”, குறிப்பெடுத்துக் கொண்டு நின்றாள்.
“ம்ச். காஸ் ஆப் டெத், என்ன யூஸ் பண்ணி மர்டர்-ன்னு கேக்க நினச்சேன், சிவராமன் சார் கட் பண்ணிட்டாரு”
“பி.எம். ரிப்போர்ட்-ல பாத்துடலாம் மேம்”
“அதுக்கு முன்னாடி சாருக்கு போட்டோஸ் வேணும்னு ஒரு மெசேஜ் பண்ணு”
சில நொடிகளில் தகவலை அனுப்பிவிட்டு, ” மேம், நம்ம டிபார்ட்மென்ட்-ல கேட்டாலே கிடைக்குமே?”
“நோ, நாம இதுல இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம்னு சிவா சார் நினைக்கிறார்”
சின்னதாய் ஒரு தோள் குலுக்கலோடு, “ஓகே. மெசேஜ் போட்டுட…”, சில நொடி இடைவெளியில், “ட்டுட்டேன்….”, சூர்யா.
“இந்த மெயின் ரோட்-ல ட்ராபிக் சர்வைலென்ஸ், இங்க அக்கம் பக்கத்து வீட்ல இருக்கிற..”, பேசும்போதே…
‘டிங்டிங்’ ‘டிங்டிங்”டிங்டிங்”டிங்டிங்”டிங்டிங்”டிங்டிங்’, வாட்ஸப் தகவல்கள் ஷானுவின் அலைபேசியில் வந்தவண்ணம் இருந்தன.
“போட்டோஸ்..?”
“யா, போட்டோஸ்.. கொஞ்சம் டீடெயில்ஸ்”, ஷானு சொன்னதும்,  சூர்யா ஷானுவின் அருகே சென்று பேசியில் வந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்தார்கள். நான்கு உயிரற்ற உடல்கள் பிரேமுக்குள் அடங்கியிருந்தார்கள், வெவ்வேறு கோணங்களில்.
“சிவியர் பாய்சனிங் மாதிரி தெரியுது. நாலுபேரும் வயிறு மடங்கி, கோணல் மானலா படுத்துட்டு இருக்காங்க”
“எஸ் மேம், வாய் பாருங்க, ட்ரை அண்ட் பேல்”
“ம்ம். சத்தம் போடக்கூட முடியாம செத்து போயிருக்காங்க”
“எனி கெஸ் ?”
“ரெண்டு மூணு இருக்கு, ஆனா கண்டிப்பா சயனைட் இல்ல”
“ம்ஹூம்?”
“சயனைடா இருந்தா இவ்ளோ அசைய முடியாது, உடனடி மரணம்தான்.”
“எஸ்..”
“ஒருத்தன் வாஷ் பேசின் பக்கத்துல விழுந்து இருக்கான். இன்னொருத்தன் ஹாலேர்ந்து ரூம்க்கு போற வழில கால் ஸ்லிப் ஆகி விழுந்தா மாதிரி தெரியுது”, போட்டோ வை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே சொன்ன ஷானு, “பட் எழுந்துக்க ட்ரை பண்ணி இருக்கான், ஸீ அவனோட விரல்கள் தரைல அழுந்தின தடம் தெரியுது பாரு”
“எஸ் மேம்”, அடுத்த படத்திற்கு போனதும், “இவன் மொபைல் யூஸ் பண்ண ட்ரை பண்ணி இருப்பான்னு நினைக்கறேன், பெட்-ல அவன் பக்கத்துலயே செல் கிடக்கு பாருங்க”
“ம்ம்”
“மேம், வேற ஒரு மெசேஜ் கூட இருக்கு. ஆனா வேற நம்பர்லேர்ந்து”
“ம்ம். பாத்திட்டு தான் இருக்கேன். ப்ராபபிலி…”
“துல்கர்”
“ஆமா, அதுல்கர்தான்.  ஃபீனிக்ஸ் மால்-ல காபி ஷாப் ஒன்னு இருக்காம். நாளைக்கு ஈவினிங் அங்க பாக்கலாம்னு சொல்லி இருக்கார்”
கேட்டதும் அப்படியே சூர்யாவின் முகத்தில் ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரம் பாய்ந்தது. “பிரபஞ்ச ஆற்றலே, உனக்கு கோடான கோடி நன்றி”, என்று வானத்தைப் பார்த்தாள்.
ஷானு இதழ் பிரியா புன்னைகையோடு தனது ஆராய்ச்சியை தொடர்ந்தாள்.
மாலைக்குள் அவர்கள் இருவரும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்தவர்களை பற்றிய தகவல்களோடும், அந்த ஹோட்டலின் வரைபடத்தை மனதில் இருத்தியும், சில பணியாளர்களை மறைமுகமாக விசாரித்தும் அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.
********************
நேரம் : அதே.
இடம் : சென்னையில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரி தேசிய நெடுஞ்சாலை.
அன்று காலை நடந்த கார் விபத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த உருவம் யாரென தெரியாமல் தலையில் இருந்த தொப்பியை கழற்றி தனது வழுக்கையை கர்சீப்பால் துடைத்துவிட்டபடி நின்றுகொண்டிருந்தார் காவல் துறையின் இளநிலை ஆய்வாளர் ஒருவர். அருகே அப்பளமாய்க் கிடந்த காரின் பின்புறம் மதிவாணன் வீட்டிற்கு வந்த பெண்ணின் ஸ்டோல் எனப்படும் சிறிய துப்பட்டா சிதிலமான நிலையில் கிடந்தது.

Advertisement