ஆர்யன் சொன்னதைக் கேட்ட வள்ளி மயூரி கையை இறுகப் பிடித்தபடி “தம்பி ஒரு பத்து நாள் மட்டும் தங்கிட்டு போங்க தம்பி “ கலங்கி போய் கேட்டு நின்றார்.
“ எந்த நம்பிக்கையில எங்கள இங்க சொல்றிங்க, தொலைஞ்சு போன பொண்ணு வந்திருக்களே, அவளுக்கு என்ன ஆச்சி, எது ஆச்சின்னு கூட விசாரிக்க நேரம் இல்லாம என்ன பத்தி விசாரிச்சிட்டு. நான் உங்க சாதி இல்லன்னதும், எதோ எதிரிய பாக்குற மாதிரி பார்க்கிறவங்க கூட எப்படி நாங்க இருக்க “
“ அவுங்க இந்த வீட்டுக்கு வர மாட்டாங்க தம்பி நான் மட்டுமாவது இருந்து பாத்துக்குறனே “
“இல்லை ங்க தப்பா நினைச்சிகாதிங்க, எனக்கு என் மயிலு முக்கியம்” என்று மயூரியை பார்க்கவும் அவள் எழுந்து அவன் அருகே சென்று நின்று கொண்டாள்.
இதை பார்த்த வள்ளிக்கு அழுகை மேலும் அதிகம் தான் ஆனது.
அதை பார்த்த ஆர்யனுக்கு மனம் உருக தான் செய்தது, ஆனால் அதற்காக இந்த ஊரில் தன் மனைவியை விட முடியாது, இப்போது இவர்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் பின்னாடி வேறு சாதி பையனை திருமணம் செய்ததுக்கு பின்னாடி ஏதாவது செய்துவிட்டால்.
அதற்கு பயந்தே ஆர்யன் இங்கிருந்து கிளம்பும் முடிவு எடுத்தான்.
“அம்மா அழாத ம்மா.., நான் சென்னைல தான் இருப்பேன், நீ அங்க வா ம்மா என் கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போ நான் உன்ன பாத்துக்குறேன் “
“ தங்கம் அம்மாவுக்காக ஒரு மூணு நாளாவது இருந்துட்டு போம்மா…” என்று அதையே திருப்பி சொன்னாரே தவிர மயூரி பேசியது எதுவும் அவர் காதில் விழவில்லை.
வள்ளிக்கு பயம் எங்க மயூரி சென்ற பிறகு அவளை பார்க்க இவரை அனுப்ப மாட்டார்களோ என்று அதனாலேயே மயூரியை மூன்று நாளாவது இங்கே இருக்கும் படி கெஞ்சி கொண்டு இருந்தார்.
தன் மகளுடன் மூன்று நாளாவது இருந்து விட வேண்டும் என்ற ஆசையில்.
அப்போது ஆர்யன் முன் வந்த மாறன்
“மாமா…. “ என்று அழைக்கவும் மயூரி மற்றும் ஆர்யன் இருவருமே அவனை வியந்து தான் பார்த்தனர்.
“வந்ததுல இருந்து வாயே திறக்காம இருந்தான். இப்போ என்னனா மாமான்னு முறையா கூப்பிடுறான் “ என்று நினைத்தபடி பார்த்தான் ஆர்யன்
“மாமா, கொஞ்சம் பொறுமையா நான் பேசுறத கேளுங்க. “
“என்ன பிரதர் “ என்று எதோ சொல்ல போனவனை தடுத்து
“மாறன், மாறன்னு கூப்பிடுங்க மாமா “
‘இங்க முறை தான் குறையா இருக்கு, இவ வேற ‘ என்று முனங்கிய ஆர்யன்
“சரி மாறன், நீங்களே சொல்லுங்க உள்ள அவங்க சொன்னத கேட்டுட்டு தான இருந்திங்க. சொந்த பொண்ணையே, வெளிய யார் கிட்டயும் பொண்ணுன்னு சொல்ல கூடாதுன்னு சொல்ற இவுங்க கூட அவ்வளவு கஷ்டப்பட்டு என் மனைவிய எப்படி நான் இருக்க வைப்பனுன்னு நீங்க நினைக்கிறிங்க.”
“மாமா, அவுங்கள்ள மட்டும் பார்க்காதீங்க, அம்மாவயும் கொஞ்சம் பாருங்க மாமா“
“அவுங்களும் இந்த ஊர்ல தான இருக்காங்க மாறன், அவுங்களால என் மனைவிக்கு எதவது ஆகிடுச்சுன்னா, அப்போ நான் என்ன பண்ண , மாறன், அப்பவும் உங்க அம்மா காகன்னு போக சொல்றிங்கல “.
“மாமா நீங்க யார நம்புறிங்களோ இல்லையோ என்னை நம்பி இங்க தங்குங்க என் அக்காவ நான் பாத்துக்குறேன் “
“உங்க அப்பாவ மீறி உங்களால என்ன பண்ண முடியும் மாறன், இப்போ கூட உள்ள அமைதியா தான இருந்திங்க “
“மாமா, நான் பேசாம இல்ல மாமா “
“ இங்கயே உங்களால ஒன்னு பண்ண முடியாத போது, நாளைக்கே உங்க அக்கா வயித்துல வளர்ற எங்க குழந்தைய நம்ம சாதில்ல வராதுன்னு எதவது பண்ணிட்டா, அப்பவும் நீங்க இப்படி தான் பேசுவிங்க மாறன்“ என்று ஆர்யன் பேசி முடிக்கும் முன்
“மாமா….” என்று கோபத்தில் உரக்க கத்தியிருந்தான் மாறன்.
“சாரி மாறன், உங்களுக்கு கஷ்டமா இருந்தாலும் நிதர்சனம் என்ன இப்படி எல்லாம் யோசிக்க வைக்குது. என்ன நம்பி வந்தவள நான் தான பத்திரமா பாத்துக்கனும் “ என்று மாறன் கோப முகத்தை பார்த்து தெளிவாகவே பேசினான் ஆர்யன்.
ஆர்யன் பேசும் பேச்சில் கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திய மாறன்
“ மாமா, இந்த ஊருல சாதின்றது பரம்பரை பரம்பரையா அவுங்க அப்பா அம்மா சொல்லி மூளைல பதிய வச்சது. அது இவங்களுக்கு ஏதோ கடவுளை வழி வழியா வேண்டுற மாதிரி. அதுல சொல்றது நல்லதோ கெட்டதோ அதை தான் பண்ணணும்னு சொல்லி கொடுத்து அதுலையே வளர்ந்தவுங்க . அதுனாலயே அதுல இருந்து வெளி வர முடியாம அதுலயே மூழ்கி போய் இருக்காங்க.
அப்படி இருக்க இவுங்களுக்கு இது தப்புன்னு புரிய வச்சாலும் அது ஏத்துக்க நேரம் எடுக்கும். அதை புரிஞ்சிட்டு கொஞ்சம் டைம் கொடுங்க மாமா. சாதின்னு என்ன தான் அப்பாவும் பெரியப்பாவும் இருந்தாளும் ஒரு உயிரை எடுக்குற அளவு கொடூரமானவுங்க இல்லை. அப்படி மட்டும் இவுங்க இருந்திருந்தா நானே உங்கள இங்க இருந்து அனுப்பி வச்சிருப்பன் “
“ எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற”
“நான் சின்ன வயசுல இருந்து இவங்கள பாத்து தான் வளர்ந்திருக்கிறேன் மாமா, சாதி வெறியில கொல்ற அளவு கொடூரமானவுங்க இல்ல இந்த ஊர் காரங்க”
“அதை நான் எப்படி மாறன் நம்புறது”
“நீங்க இங்க யாரையும் நம்ப வேண்டாம் என்ன நம்புங்க நான் எங்க அக்காவ பாத்துப்பேன் பத்தரம்மா “ என்று மாறன் பேசியதை ஆ…என்று தான் மயூரி பார்த்து இருந்தாள்.
“என் மேல இவ்வளவு பாசமாடா தம்பி “ என்று மனதோடு நினைக்க மட்டும் தான் முடிந்தது, ஏனோ அவனிடம் சட் என்று பேச வர வில்லை.
மாறன் என்ன தான் பேசினாலும் மனது சரி என்று சொன்னாலும் மூளை வேண்டாம் என்னு எச்சரித்து கோண்டு தான் இருந்தது.
அந்த பயத்தில் ஏதோ சொல்ல ஆர்யன் வாயை திறக்க போக சரியாக அந்நேரம் பார்த்து அவன் போன் சத்தம் போட்டது, உடனே அதை எடுத்து பார்த்தான் ஆர்யன். அவனின் நன்பன் கிருபா தான் அழைத்திருந்தான்.
“ஒரு நிமிஷம்“ என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் ஆர்யன்.
அவன் பின்னேயே மயூரியும் “இதோ வந்துறேன் அம்மா “ என்று சொல்லிவிட்டு சென்றாள்.
ஹாலில் நின்றபடி அனைவரும் இவர்களை தான் பார்த்திருந்தனர். ஆர்யன் போனில் எதோ கோபமாக பேசுவது தெரிந்தது, பின் மயூரி போனை வாங்கி பேசுவதும் தெரிந்தது.
பின் போனை வைத்து விட்டு ஆர்யனிடம் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு எதோ பேசவும் பின் தலையை ஆட்டுவது தெரிந்தது.
இப்படி பத்து நிமிடம் கழித்து இருவரும் உள்ளே வந்தனர். மயூரி தான் பேசினாள் “ பத்து நாள் இங்கேயே இருந்துட்டே போறோம் ம்மா நீங்க அழாதீங்க “
அதை கேட்ட வள்ளி அவளை அணைத்துக்கொண்டு “சாரி ம்மா சாரி ம்மா …” என்று மீண்டும் அழுக அவரை சமாதானம் செய்து உட்கார வைக்கவே வெகு நேரம் ஆனது.
ஆர்யன் முகம் கடுமையுடனே இருந்தது அவன் இங்கு வரும் போது இருந்த மகிழ்ச்சி இப்போது கிஞ்சித்தும் அவன் முகத்தில் காணவில்லை.
இருப்பினும் எதுவும் பேசாமல் இருந்தவன் எழுந்து காருக்குச் சென்று மயூரிக்கு மாற்று உடை எடுத்து வந்தான்
“ இங்க எங்கு குளிக்க பாத்ரூம் இருக்கு “ என்று பொதுவாக கேட்கவும், வெள்ளையம்மா
“அது பின்னாடி இருக்கு தம்பி தொட்டியோட இருக்கும் “ என் கை நீட்டி வழி காட்ட
“ம்ம்ம்” என்று சொன்னபடி மயூரிக்கு கை கொடுக்க, அவன் கையை பிடித்தபடி மயூரி எழுந்து சென்றாள்.
பின்னே சென்றவன் மயூரி குளிக்கும் வரை அங்கே வெளியேவே நின்று கூட்டி வருவதை பார்த்த வெள்ளையம்மா வள்ளியை பார்த்து.
“ உன் பொண்ணு கொடுத்து வச்சவ தான்டி, ராணி மாதிரி பார்த்துக்கிற புருஷன் கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும், நமக்கும் தான் அமைஞ்சிருக்கே எல்லாம் எகிருட்டி அடிக்க தான் லாக்கி “ என்று பெருமூச்சு விட
“ பாட்டி….இதான் சாக்குன்னு உன் பசங்களோட தாத்தாவயும் திட்டுற “
“உங்க தாத்தாவ நான் ஏன்டி மறைச்சி திட்டுறேன். நேரவே திட்டுவேனே அந்த மனுஷன, மனைவி நான் திட்டலாம் மத்தவுங்கல தான் திட்ட விட மாட்டன் “
“அ…ரொம்ப தான் பாசம் தாத்தா மேல உனக்கு “ என்று மஞ்சு மீண்டும் இலகுவாகி வெள்ளையம்மாவிடம் வம்பு பேசியபடி இருந்தாள்.
மயூரி குளித்து முடித்துவிட்டு அதே போல வேறு ஒரு ப்ரக்னன்ஸி ட்ரெஸ் ஒன்றை போட்டு பாத்ரூம் விட்டு வெளியே வந்தவள்
“ஆரி பக்கத்துல இருக்க ட்ரெஸ் கடைக்கு போய் சுடிதார் கொஞ்சம் எடுத்து வரலாமா “
“ஏன் இந்த ட்ரெஸ்க்கு என்ன, யாரோ எதோ சொல்றாங்கன்னு சுடிதார் போட்டுட்டு கஷ்ட பட போறியா மயிலு “
“அப்படி இல்லை டென் டேஸ் தான போட்டா என்னென்னு தான்”
“நானும் அதையே தான் சொல்றேன் வெறும் டென் டேஸ் தான். நீ நீயா இரு நான் பார்த்துக்குறன் “ என்று பேசியபடி மயூரியின் கையைப் பிடித்து வந்து அமர வைத்தவன்.
நிமிர்ந்து வள்ளியை பார்த்து “ மயிலு மதியம் எதுவும் சாப்பிடல்லை டெப்லட் வேற அவ போடணும் “
“என்னது என்னும் சாப்பிடல்லையா? மணி இரண்டு இருக்கோமே என்ன தம்பி இவ்வளவு நேரம் என்ன பண்ணிங்க, மஞ்சு நீ வீட்டுக்கு போய் சாப்பாடு கட்டி எடுத்துவா “ என்று வள்ளி சொல்லிக்கொண்டு இருக்கும் போது
“ வள்ளி…. ஏ..புள்ள வள்ளி … ஒரு வார்த்த போனுல கூப்டு சொன்னியாடி பொண்ணு வந்திருக்கிறத“ என்று குரல் கேட்டு அனைவரும் வாசலை பார்க்க அங்கே மீனாட்சி கையில் சாப்பாடு பையுடன் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
“அக்கா…., நீங்க இங்க எப்படி… என் பொண்ணு வந்திருக்கது உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அதிர்ந்தபடி வள்ளி கேட்டார்.
“ அதுவா கொழுந்தன் தான் சொல்லி அனுப்புனாரு, என் பொண்ணு மாப்பிள்ளையோடு வந்திருக்கா இங்க இருந்து சாப்பாடு எடுத்துப் போங்க மதனின்னு , முதல்ல ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல வள்ளி, அப்பறம் தான் புரிஞ்சதும் ஓடி வந்துட்டேன்.
ஆனா வள்ளி உன் புருஷன் பொண்ணு வந்தத கூட வெறப்பா தான் சொல்லிட்டு போறாரு, என்னன்னு நம்ம அத்தை புள்ளைய பெத்து வளர்த்துச்சோ. எல்லாம் ஒரு தினுசா தான் இருக்காங்க. இதுல வெளில யார் கிட்டயும் சொல்லாத ன்னு வேற சொல்றாரு என்னம்மோ போ,“
என்று அவர் பாட்டுக்கு உள்ளே இருந்த வெள்ளையம்மாவை கவனிக்காமல் வாசலில் நின்ற வள்ளியை பார்த்தே பேசி கொண்டு இருந்தார்.
வள்ளி அவர் பேச்சை நிறுத்த பார்த்து கை அசைத்து சைகை செய்ய அதை எதையும் கவனிக்காத மீனாட்சி,
“ சரி அதை விடு எங்க புள்ள, புள்ளைய பார்க்க வந்த, நீ என்னன்னா வாசல்ல நிக்க வச்சே பேசுற, நகரு வள்ளி “ என்று உள்ளே நுழைந்தவர் அங்கிருந்த வெள்ளையம்மாவை பார்த்து
“அய்யோ இந்த கிழவி இங்கயா இருக்கு “ என்று அதையும் சத்தமாக சொல்லிவிட்டு பின் பயந்து
“அய்யோ, அத்தை.. அது வந்து சாப்பாடு “ என்று பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்.