இனி உன்னை விட்டு ஒரு நொடி அகல மாட்டேன் என்பது போல மயூரியின் கையை இறுக்கப் பிடித்து கொண்டு இருந்தார் வள்ளி. அழுது அழுது கண்கள் சிவந்து போய் இருக்க அதற்கு மாறாக உதட்டில் மலர்ந்த புன்னகையோடு மயூரி அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு கையில் மோரோடு வந்த வெள்ளையம்மா “ எதுக்குடி இப்ப ஒப்பாரி வச்சிட்டு இருக்க , தொலைஞ்ச பொண்ணு பத்தரமா திரும்பி வந்துருக்குன்னு சந்தோஷப்படுவியா அத விட்டு “
என்று திட்டியபடி மோரை மயூரி மற்றும் ஆர்யன் கையில் கொடுக்க, இருவரும் சிரித்த முகமாக அதை வாங்கி குடித்தனர்.
இருவரும் குடித்து முடித்த பின் வெள்ளையம்மா “ இம்புட்டு நாளா எங்க தாயி இருந்த, எங்கள தேடி ஏன் வரல்ல தாயி” என்று தரையில் அமர்ந்து வருத்தமாக பேசவும், மயூரி
“ அது வந்துங்க…” என்று அவள் பேச போவதை தடுத்து வெள்ளையம்மா “ என்ன தாயி இங்க போட்டு பேசுற வாய் நிறைய பாட்டின்னு கூப்பிடு தாயி..” என்று ஆசையுடன் சொல்லவும் , சிரித்த முகமாக
“பாட்டி….” என்று அவள் அழைக்கவும் மகிழ்ந்த வெள்ளையம்மா
“போதும் தாயி, இது போதும், எங்க உன்ன பாக்கவே முடியாம போய்டுமோன்னு நாங்கலாம் எம்புட்டு துடிச்சி போனோம் தெரியுமா, அதுவும் என் மருமக, பாவம் அவ நீ போன பிறகு கடவுளே துணைன்னு இருந்துட்டா “ என்று வள்ளியை பார்க்க, அவள் மயூரி முகம் வருடி
“மயிலு…, என்ன ஆச்சும்மா உனக்கு நீ எங்க இருந்த இத்தன நாளா“
“அதும்மா… என்ன யாருன்னு…” என்று சொல்ல ஆரம்பித்தவளை கைபிடித்து தடுத்த ஆர்யன், கண்களால் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு
“அது மயூரிய யாரோ ஒருத்தன் தூக்கிட்டு சென்னைக்கு வந்திருக்கான். அங்க இருந்து இவ தப்பிக்க பார்க்கும் போது தான் ஆக்சிடன்ட் ஆயிருக்கு, அதுல பழசு எல்லாம் மறந்து அவ யாருன்னு தெரியாம இருந்தவள ஆஸ்ரமத்துல சேத்துடாங்க, அங்க தான் வளர்ந்தாள், அங்க இருந்து தான் நாங்க லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று அழகாக ஒரு கதையை சொன்னான்.
“அப்போ இப்போ மட்டும் எப்படி அக்காக்கு பழசு ஞாபகம் வந்துச்சு “ என்று அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த மஞ்சுளா தங்கப்பாண்டியின் இளைய மகள் கேட்க, அதற்கு அவன்
“ இப்போ தான் ட்ரீட்மென்ட் க்கு ஆஸ்பிட்டல் போனோம் அந்த ட்ரீட்மென்ட்டில்ல தான் இந்த ஊர் நினைவு வந்து இங்க வந்தோம். என்னும் அவளுக்கு முழுசா எதுவும் நினைவு வரல “ என்று பொய்யான கதையை உண்மை போல சொல்லி முடித்தவனை, மயூரி என்ன இது என்பது போல பார்க்க, அதற்கு அவன் தலையை மறுப்பாக ஆட்டி அவளை அமைதியாக்கினான்.
“ இதெல்லாம் சரி, அதென்னா மயூரின்னு அக்காவ கூப்பிடுறிங்க அக்கா பேரு மயிலிசை தான “ என்று அறிவுத்தனமாக மஞ்சுளா பேச, அவள் தலையில் கொட்டிய வெள்ளையம்மா
“கிறுக்கு, அதான் அவர் தெளிவா சொல்றாருல புள்ளைக்கு நினைவு எதுவும் இல்லன்னு அதான் புதுசா பேரு வச்சிருப்பாங்க “
“அட பாட்டி, எனக்கு பாட்டியா இருந்துட்டு எப்படி நீ என்ன விட புத்திசாலியா இருக்க “ என்று மஞ்சு கன்னத்தில் கை வைத்து கேட்க
“இது கூட தெரியல என்னத்த உனக்கு சொல்லி தறங்களோ அந்த காலேஜில “ என்று இவர்கள் ரெண்டு பேரும் பேசிக்கொண்டே போக, மயூரி
“அம்மா நான் எப்படி தொலஞ்சி போன” என்று வள்ளி முகம் பார்க்க
“அப்போ உனக்கு அஞ்சு வயசு இருக்கும், உன் தம்பி என் வயித்துல ஒன்பது மாசம் , அந்த நேரம் பார்த்து ஊர் திருவிழா வேற மயிலு, உங்க அண்ணாக்கு வேற அம்மம் போட்டுருந்திச்சி, அதுனால உங்க பாட்டி கூட இங்க இல்லை அப்பாவுக்கும் வேலை அதிகமா இருந்துச்சி, வீட்டுக்கு நேரம் போய் தான் வருவாங்க மயிலு, அப்போ இந்த பக்கத்து வீட்டு பசங்களாம் தினமும் திருவிழாக்கு போய்டு வந்து உன் கிட்ட சொல்லுவாங்க, அதுல உனக்கும் திருவிழாவிற்கு போக ஆசைன்னு ஒரே அடம் பிடிச்ச, அதான் நானு… உன்னை பக்கத்து வீட்டு அக்கா கூட அனுப்பினேன், என் தப்பு தான் மயிலு , அது தப்பு தான் நான் அனுப்பிருக்க கூடாது உன்ன“
என்று கண்கள் கலங்கி அழுபவரின் கண்ணை துடைத்த மயூரி, பேச்சை மாற்றும் விதமாக
“ அண்ணாவும் தம்பியும் என்ன பன்றாங்க ம்மா”
“ அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சி பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு இருக்கும்மா, அவன் சென்னைலயே கம்ப்யூட்டர் வேலை பாக்குறான், அப்படியே அவன் அங்கேயே தங்கிட்டான் மயிலு, இங்க திருவிழாவுக்கு மட்டும் தான் வருவான்.”
“அப்போ தம்பி..”
“அவன் இங்க தான் படிச்சிட்டு கம்பெனி வச்சிருக்கான். அதோட விவசாயமும் பாக்குறான் மயிலு “ என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது ஜீப் வந்த சத்தம் கேட்க, வள்ளி
“இதோ உன் தம்பி வந்துட்டான் மயிலு “
என்று அனைவரும் வாசலை பார்க்க அங்கே வீரப்பாண்டி , தங்கப்பாண்டி, மாறன் என்று மூவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் மூவரும் வெள்ளை சட்டை போட்டு வந்திருக்க, அவர்களை பார்த்த ஆர்யனுக்கு “ அப்படியே வேஷ்டி விளம்பரத்த பாக்குற மாதிரியே இருக்கே “ என்று தான் தோன்றியது.
உள்ளே வந்த மூவரும் முதலில் கண்டது வள்ளியைத் தான். அவர் கண்கள் கலங்கி இருந்தாலும் உதடு சிரித்தபடி இருக்க முகமும் பிரகாசமாக இருந்தது. எத்தனை வருடம் பிறகு அவர் முகம் இப்படி மகிழ்ச்சியாக இருப்பதை மூவரும் வியந்து தான் பார்த்தன.
அதுவுமின்றி மயூரியின் கையை விடாமல் இறுக பிடித்திருப்பதிலேயே வீரபாண்டிக்கு புரிந்து போக, அவர் மயூரியை நோக்கி சென்று
“மயிலு….” என்று குரல் நடுங்க அழைக்க, மயூரிக்கு முதலில் அவர் யார் என்று தெரியாமல் இருக்க, திரும்பி அவள் அன்னையை தான் பார்த்தாள், அவர் “அப்பா மயிலு “ என்று புன்னகைக்கவும், உடனே மயூரி சந்தோஷத்தில் வேகமாக எழுந்திருக்க அதில் அவள் வயிற்றில் சுருக்கென்று வலி எடுக்கவும்
“அம்மா..” என்று வயிற்றை பிடித்தவளை
“ மயிலு பார்த்தும்மா..” என்று அவளை பிடித்து மீண்டும் அமர வைத்தவர் அவள் அருகிலேயே அமர்ந்துகொண்டார்.
“என் மயிலு , என் தங்கம் என் சின்னபுள்ளயா இது, எப்படி வளந்துட்டா, அப்படியே உங்க அம்மா போலவே இருக்க மயிலு, என் சின்னபுள்ள எப்படி இருக்க, எங்க இருந்த தாயி இத்தனை நாளா, ஏன் தங்கம் வரல, இந்த அப்பா எங்க எல்லாம் உன்ன தேடுன தெரியுமா, எல்லாம் ஏன் தப்புதான் மயிலு மன்னிச்சிரும்மா “ என்று மயூரியின் கையை கண்ணில் வைத்து அழுத படி பேச, மாறன்
“இது நம்ம அப்பா தானா, இப்படி பாசத்த பொழியிறாறு, இந்த மாதிரி ஒரு நாள் ஆவது நம்மல இப்படி கொஞ்சிருப்பாரா” என்று மனதோடு பேசிய படி பெருமூச்சு விட்டான்.
“ சரி, அழாதடா தம்பி, அதான் பொண்ணு வந்துட்டாள “ என்று பேசியபடி ஆர்யன் அருகே இருந்த சேரில் அமர்ந்தவர். ஆர்யனையே உற்று பார்த்த படி
“அப்புறம் தம்பி நீங்க எந்த ஊரு “ என்று தங்கப்பாண்டி கேட்டதை கேட்டு மாறன் பல்லை கடித்தபடி
“இதோ ஆரம்பிச்சிட்டாருல, அவர் செக்கிங்க நான் கூட திருந்திடாங்களோன்னு தப்பா நினைச்சிட்டேன் “ என்று தலையில் அடிக்காத குறையாக நின்று கொண்டிருந்தான்.
சிறுவயதில் இருந்து போட்டோவில் மட்டும் பார்த்து வளர்ந்த அவன் அக்கா திரும்பி பத்திரமாக வீடு வந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாத படி செய்யும் அவனின் பெரியப்பா தலையில் கல்லை போடும் கோபம் மாறனுக்கு.