நெஞ்சம்-4

காலை வெயில் முகத்தில் அடிக்க அது எதுவும் உணராத மாறன் மொழியுடன் போனில் பேசியபடி இருந்தான்.  பின்னேயே நேரமாவதை உணர்ந்து மொழியிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி சென்றான்.

இங்கு பள்ளி முன் பைக்கில் இருந்து இறங்கிய விக்ரமன் “ அப்பறமா வீட்டுக்கு வறேன் மாமா அத்தைய கேட்டதாகச் சொல்லு…” என்று கையாட்டி விட்டு திரும்ப இவன் போன் “ குறும்பா…..என் உலகே நீ தான்டா….” என்று பாடல் ஒலிக்கவும் யார் அழைத்திருப்பார் என்று கண்டுகொண்டவனாக போனை வேகமாக எடுத்து

“ டேய் பேபிம்மா….” என்று அஸ்கி வாய்ஸில் சுற்றும் முற்றும் பார்த்தபடி பேச, அங்கே மறுபக்கம் இருந்து மொழி “ அப்பா…..நீங்க ஏன் இப்படி பேசுறிங்க …” என்று அவனும் விக்ரமன் போல அஸ்கி வாய்ஸில் பேச அதை கேட்டு சிரித்தபடி அங்கிருந்த புளிய மரத்தடியில் நின்றவன்

“ அப்பா ஸ்கூல்க்கு ஒரு வேலையா வந்திருக்கேன்டா அதான் இப்படி பேசுறேன் ”

“என்ன ஸ்கூல்லா…ஐ… அப்பாவும் என்ன மாதிரி ஸ்கூலுக்கு போறாங்க சூப்பர் அப்போ நீயும் என்ன மாதிரி ஹோம் வர்க் பண்ணுவியா ப்பா” என்று கட்டிலில் குதித்தபடி மொழி பேச

“டேய் பேபி…” என்று சிரித்தவன் “ நீ தான் ரொம்ப சேட்ட பண்றியாமே அதான் உன் யாழினி அம்மாக்கு துணையா ஒரு டீச்சர் அம்மாவ ரெடி பண்ண வந்துருக்கன்டா “

“என்னது டீச்சர் அம்மாவா…. ஆனா மாறன் அப்பா வேற சொன்னாங்களே…நீங்க பொய் தான சொல்றீங்க… “

“அப்போ அவன் கிட்ட மொதல்ல பேசி முடிச்சிட்டு அப்பறம் தான் என் கூட பேச வந்திருக்கியா மொழி, போ உன் பேச்சுக் கா..” என்று விக்ரமன் முகத்தை திருப்ப, உடனே மொழி

“அது அப்பா….” என்று சோகமான குரல் வர, குழந்தை என்ன சொல்ல என்று திணறி நிற்பது புரிந்த விக்ரமன் “ பேபிம்மா……. சும்மாடா…” என்று அழைக்கவும் மொழி கட்டிலில் எழுந்து நின்று கொண்டு

 “ப்பா…..போ… நான் பயந்துட்டேன்  நீ கா விட்டதும் “ “ என் பேபிம்மா கிட்ட போய் நான் கா.. விடுவேனாடா அது சும்மா சொன்ன “

“அப்போ உனக்கு கோபம் இல்ல தான”

“நான் என் பேபி கோப பட போறன் , உன் ரெண்டு அப்பாவும் என்னைக்கும் உன் மேல கோப பட மாட்டோம் சரியா”

“ம்ம்ம் …ப்பா” அப்போது தான் மொழி முகமே தெளிந்தது, இப்படியே இருவரும் பேசி முடித்து போனை வைத்த விக்ரமன் நிமிர்ந்து பார்க்க, அப்போது பார்த்து பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வர அவர்களை கண் இமைக்காமல் விக்ரமன் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

“விக்கி அந்த டீச்சர்ஸை நீ பார்க்குற பார்வையே சரியில்லடா..” என்று அவன் தோளில் மாறன் கை வைக்க, அதில் பயந்து நெஞ்சில் கை வைத்தபடி “அம்மா….” என்று விக்ரமன் அலற, அவனை பார்த்து முறைத்த மாறன் “நான் தான்டா, பயப்படாத”

“போட பக்கி…,  பின்னாடி வந்து இப்படி பேசாதன்னு எத்தனை தடவ சொல்றது இதுல பயப்படாதன்னு டயலாக் வேற “

“என்னடா விக்கி இப்படி பட்ட பகல்ல கை வச்சதுக்குலாம் பயப்படுற, எப்போ தான் இப்படி பயப்படுறத விடப்போறியோ “

“உக்கும் அது இந்த ஜென்மத்துல நடக்காது.., நீ நடக்குற காரியத்தை பேசிடா…” என்று நேரத்தை பார்த்தவன் “சரி  வாடா மாறா டைம் ஆச்சு …” என்று இருவரும் உள்ளே சென்றனர்.

 முதலில் இருவரும் பள்ளியை ஒரு முறை முழுதும் சுற்றி பார்த்தனர். பின் காலை பிரேயர் முடிந்த பிறகே தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றனர்.

தலைமை ஆசிரியர் அறையில் இவர்கள் இருவரையும் வரவேற்று அமர வைத்த பிரின்சிப்பல் கட்டிட விஷயமாக பேச தொடங்கினார்.

அப்போது பார்த்து விக்ரமனின் போனில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்க உடனே அவன் “ நீங்க பேசிட்டு இருங்க இதோ வந்துடுறேன்”

என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தவன் தலைமை ஆசிரியர் அறைக்கு இடது புறம் மறைவாக நின்றபடி சுவற்றில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு பேசினான்.

“ சார் நம்ம கூட டையப் வைக்க வந்திருக்காங்க சார் “ என்று விக்ரமனின் பிஏ எடுத்ததும் மொட்டையாக சொல்ல, விக்ரமன் “ இதைச் சொல்லவா இத்தனை முறை கால் பண்ண நீயே பேச வேண்டியது தானடா” என்று போனில் எகிற,  சஞ்சீவோ

“சார்….எஸ்.கே கம்பெனில இருந்து வந்துருக்காங்க சார் “ என்று ஆர்வமாக பேசினான். அதை எதுவும் கண்டு கொள்ளாத விக்ரமன்

“யாரா இருந்தா என்ன சஞ்சீவ், நீங்களே போய் பேசுங்க” என்று விக்ரமன் சொன்னதை கேட்ட சஞ்சீவ் “ சார் அவங்க எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா சார்,  அவுங்க கிட்ட நான் எப்படி பேச “

“ப்ச, யாரா இருந்தாலும் வாயால தான் பேசணும் சஞ்சீவ்…….. “ என்று இழுக்க, அதை கேட்ட சஞ்சீவும்

“சார்….” என்று பதறவும், விக்ரமன்

“சஞ்சீவ்…” என்று அதட்டியவன் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு விட்டு “ அவுங்க எவ்வளவு பெரிய கம்பெனியா இருந்தாலும் இப்படி டீலிங் பத்தி பேச வருத முன்னாடியே இன்பார்ம் பண்ணியிருக்கணும் அப்படி பண்ணாம வந்தா நம்ம என்ன பண்ண முடியும் சஞ்சீவ் “

“இப்போ நான் என்ன பண்ண சார்”

“ இப்போ போய்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வரச் சொல்லு சஞ்சீவ்“ என்று வைத்து விட்டான்.

போனை வைத்துவிட்டு அங்கேயே சிறிது நேரம் சாய்ந்தபடி கண்களை சுழல விட்டு கொண்டு இருந்தான் விக்ரமன்.

அப்போது விக்ரமனின் பின்னால் இருந்து “ப்பூ…..” என்று சத்தம் கேட்டு பயந்த விக்ரமன் “ம்மா….” என்று கத்தியபடி நெஞ்சில் கை வைக்க “சரியான பயந்தகோளி இதுக்கு போய் இப்படி பயப்படுற “ என்று புன்னகை முகமாக நின்றவளை பார்த்த விக்ரமன்

“ஏ வேதாளம் என்ன பயந்தாங்கொளின்னு கூப்டாதன்னு எத்தன வாட்டி சொல்றது கேக்க மாட்டியா..” என்று முறைத்தபடி கத்தியவனின் கத்தலைக் கண்டுகொள்ளாமல்

“ஆமா… பயந்தாங்கொளி… இங்க என்ன பண்ற….” என்று ராகமாக இழுத்தவளின் மண்டையில் நங் நங் என்று கொட்டும் எண்ணம் வந்தாலும் அதை காட்டாமல் அவளை மேலிருந்து கீழே வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு

“அதுவா….இந்த ஸ்கூல்ல மரத்துல ஒரு வேதாளம் தொங்கிட்டு ரொம்ப இம்ச பண்ணுதாம் அதான் அதைத் தூக்கிட்டு போலாம்னு வந்தேன் “ என்று நக்கலாக பேசியவனை பார்த்து முறைத்த வேதா

“ வேதாளத்த எல்லாம் தூக்க ஒரு தைரியம் வேணும் அதுக்குலாம் நீங்க சரிபட்டு வர மாட்டீங்க “

“தூக்குறப்ப தெரியும் நான் சரிபட்டு வருவேனா இல்லையான்னு “ என்று அவள் கண்களை பார்த்த புருவம் உயர்த்தி சொன்ன தொனியில் தலையை வேறுபக்கம் திருப்பிய வேதா பேச்சை மாற்றும் பொருட்டு

“ எந்த இடத்துல கிளாஸ் கட்டி தர போறீங்க “ என்று விக்கரமன் முகம் பார்க்காமல் பேச,  அதில் அவளை பார்த்து சிரித்தபடி விக்ரமன் “ அங்க தான் கட்டி தர போறோம், எட்டு கிளாஸ் ரூம்ஸ் “ என்று கை நீட்டி இடத்தை காட்ட, உடனே வேதா

 “ பிள்ளைங்க படிக்க கிளாஸ் ரூம் மட்டும் போதுமா, இந்த பாத்ரூமெல்லாம் கட்டி தரமாட்டீங்களா” என்று அந்த இடத்தை பார்த்தபடி பேசியவளை இவன் பக்கம் திருப்பிய விக்ரமன் “ ஏன் இங்க ஏற்கனவே பாத்ரூம் இல்லையா”

“இல்லாம இல்லை… பாத்ரூம் இருக்கு தான், ஆனா ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு சீலிங் இல்லாம அங்க அங்க பைப்லாம் உடைஞ்சு பாசி பிடிச்சுன்னு நல்லா இருக்காது “

“ஓ… நாங்க அத சரியா கவனிக்கலயே”

“சரி இப்போ தான் நான் சொல்லிட்டேன்ல பாத்ரூம்மும் சேத்து கட்டி கொடுத்துடுங்க சரியா “ என்று ஆர்டர் போடும் வேதாவை முறைத்த விக்ரமன்

“ வேதாளம் சொல்றத நான் ஏன் கேக்கணும் “  என்று அவளை சீட்ட, வேதா

“கேட்டா கேளு இல்லனா போ…ரொம்ப தான் பண்றான் “ என்று அவனை விட்டு நடந்து சொல்பவளை “ஏ…வேதாளம்…. “ என்று கத்தி அழைக்க, அவன் அழைப்பில் கோபமாக திரும்பியவளை பார்த்து

“ எத்தன பாத்ரூம் கட்டுனா பசங்களுக்கு சரியா இருக்கும் “ என்று சிரித்தவனை பார்த்து முகத்தை சுழித்த வேதா

“அத இந்த டீச்சர் கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும், போய் நல்ல இன்ஜினியரா பாத்து அவர் கிட்ட கேளுங்க “ என்று முகத்தை தோளில் இடித்தபடி செல்பவளையே விக்ரமன் கண் இமைக்காமல் பார்க்க.

“விக்கி…. இங்க என்னடா நடக்குது..” என்று மாறன் தொளில் கை வைக்க அதில் மீண்டும் பயந்து கத்தின விக்ரமன் “ வெங்காயம் இத முன்னாடி வந்து கேக்க மாட்டியாடா “ என்று திட்டியவன் மாறனின் முகத்தில் இருந்த புன்னகையில் வெட்கப் பட்டபடி

“அது வந்து மாறா….” என்று இழுக்க “ டேய் விக்கி இது ஸ்கூல்லு, இங்க வெக்க படுறன்னு பசங்கள பயப்படுத்திறாதடா, எதுவா இருந்தாலும் வெளிய போய் பேசுவோம் “ என்று வெளியே விக்ரமனை அழைத்து சென்றான்.