நெஞ்சம் 38

விக்ரமன் கல்யாணம் முடிவான செய்தி காட்டுத்தீ போல சுற்றி இருந்த அனைவரையும் சென்று அடைந்தது.

முதலில் பலர் இதை புரளி என்று தான் எண்ணினர். ஏனென்றால் தங்கம், அவர் சொந்தக்கார பையனுக்கு அதுவும் அவர் தலைமையில் சாதி மாற்றி திருமணமா என்று யாரும் நம்ப தயாராக இல்லை.

தங்கம் அனைத்து சாதி சங்க மீட்டிங்குகளிலும் முதல் ஆளாக சென்று கலந்து கொள்பவர். சாதி என்றால் அவர் சுவாசம் என்பது போல தான் பேசுவார்.

ஏன் சங்கத்திலேயே பலர் அடுத்து இவர் தான் தலைவராக வருவார் என்றளவு பேசும் படி தான் அவரும் நடந்தார். அப்படி இருப்பவரின் தலைமையில் சாதி மாற்றி திருமணமா

“யாருப்பா நீ… சும்மா சொல்லாதப்பா. அவர் யாரு அவர் தலைமையில இப்படி கல்யாணமா போய் வேற யார் கிட்டயவது சொல்லு “  என்று முதலில் நகர்ந்து தான் சென்றனர்.

ஆனால் நாள் செல்ல செல்ல இது புரளி இல்லை இது தான் உண்மை என்று தெரிய வந்ததும் தங்கத்தை பார்க்க தான் முதலில் அனைவரும் சென்றனர்.

தங்கமும் விட்டு கொடுக்காமல் அடித்து பேசினார் அவர் பேசியதை கேட்ட அனைவருக்குமே

“ஏப்பா… இது நம்ம தங்கம் தான ? இல்ல ஆவி கீவி புகுந்துட்டா “ என்று வாயை பிளக்கும் படி

“ இதோ பாருங்க அந்த பெண்ணைப் பார்த்து அவனுக்கு கல்யாணம் பேசுனதே நான் தான். எதோ இத்தன நாள் புத்தி கெட்டு போய் இருந்துட்ட இப்போ தான் சரியா எல்லாம் செய்றேன் அதை தடுக்க வராதீங்க “

என்று தனி ஆளாக நின்று பேசி அனுப்பினார்.

ஆம் தனி ஆளாக தான் நின்றார் எப்போதும் கூட நிற்கும் தம்பிக்கு இப்போதெல்லாம் நேரமே கிடைப்பது இல்லை போல.  அவன் பெண்ணை பார்க்க என்று சென்று விடுகிறான்.

தங்கத்தும் இவற்றைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்க தம்பியை கண்டு கொள்ளாமல் தான் இருந்தார்.

“சரி மகளை பார்க்க தானே செல்கிறார் “ என்று விட்டுவைத்தவர் காதில் அந்த செய்தி வந்து சேரும் வரை அமைதியாக தான் இருந்தார்.

வீரா இப்போதெல்லாம் தினமும் அந்த சிறுவனுடன் பைக்கில் சுற்றுகிறார் என்ற செய்தி கேட்டு அவரிடம் இருந்த அமைதி பறந்து போய் விட தங்கம்

“ சங்கத்தை விட்டு வெளிய வந்து, எல்லார் கிட்டயும் பேச்சு வாங்கி, பேச்சு கொடுத்துன்னு இத்தனை கஷ்டத்துக்கும் காரணமே அந்த பொடுசு தான். அதை எல்லாம் மறந்து அவன கூட்டிட்டு பைக்கில்ல சுத்துறான இந்த வீர”

என்று கோபம் தலைக்கு சென்றாலும் அதை வெளிப்படுத்த தான் முடியவில்லை. அதை வெளிக்காட்டும் சூழலும் அவரை சுற்றி இல்லை. முதலில் அவரை தேடி வந்த சங்கம் இப்போது அந்த பெண் வீட்டையும் ராஜனையும் போய் பார்க்க போவதாக தகவல்.

அந்த தகவல் வந்ததும் இவருக்கு கீழே வேலை பார்ப்பவர்களை வைத்து இவரிடம் பேச அழைத்து வந்து விடுவார்.

இவை அனைத்தையும் அவர்களுக்கு தெரியாமல் தடுத்து அடுத்த பிரச்சனை வராமல் பார்த்து கொள்ள போதும் போதும் என்று ஆகி விட்டது.

தங்கத்து துனையாக அவர் ஊர் மக்கள் நின்றனர். அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் இவர்கள் குடும்பம் உதவி செய்து கொண்டிருக்கிறது அதற்காகவே தங்கம் என்ன சொன்னாலும் தலையசைக்கும் கூட்டம் ஒருபுறம் என்றாள் அவர்களிடம் வேலை பார்ப்வர்கள் ஒருபுறம் என்று இவர் பக்கம் தான் ஆட்கள் அதிகம்.

அதுனாலயே இந்த சாதியை தூக்கி சுமப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இங்கு தங்கம் மட்டும் தனியாக இவர்களை சமாளிக்க வில்லை தங்கத்துக்கு தெரியாமல் மாறன் அவனின் ஆட்கள் வைத்து மறைமுகமாக அனைவருக்கும் பாதுகாப்பு கொடுத்து இருந்தான்.

இப்படி ஊரில் இத்தனை பிரச்சனை இருக்க அது எதையும் கண்டு கொள்ளாமல் இங்கு வேதா மற்றும் விக்ரமன் அவர்களின் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தனர் அவரவர் கைப்பேசி வழியே.

“ நம்பு வேதாளம்… எனக்கே எங்க அம்மா தான் ட்ரெஸ் எடுத்து தருவாங்க. என்னை எடுக்கச் சொன்னா ஜோக்கர் மாதிரி தான் எடுத்து வருவேன் “

“பொய் சொல்லாதடா….  டெய்லி என்ன பாக்க வரும் போதெல்லாம் செம்ம செமையா டிரெஸ் போட்டு வருவ இப்போ என்னன்னா செலக்ட் பண்ண தெரியாதுன்னு சமாளிக்கிற “

“ நான் ஏன்டி பொய் சொல்ல போறன். டெய்லி போடுற ட்ரெஸ் எல்லாம் ஒன்னு மாறா செலக்ட் பண்ணுவான், இல்ல எங்க அம்மா செலக்ட் பண்ணுவாங்க. நான் ஒரு நாளும் ஒரு ட்ரெஸையும் நானே எடுத்து போட்டது இல்லடி “

“ம்ம்ம்ம்……விக்கி…. அப்போ நம்ம கல்யாணத்துக்கு நீ ட்ரெஸ் செலெக்ட் செய்ய மாட்டியா “ என்று வேதா சினுங்க

“ அச்சோ…வேதாளம் நான் சொல்றத கேளுடி. நான் செலக்ட் பண்றத விட உன் மாமியார் செலக்ட் பண்ற புடவை சூப்பரா இருக்கும்டி நீ நம்பி போ. எங்க அம்மா நல்ல புடவையா எடுப்பாங்க “

“பிச் போடா… நான் எவ்ளோ ஆசையா இருந்தன் தெரியுமா “ என்று அவள் சலித்துக் கொள்ளவும்

“ வேதா… ஃபீல் பண்ணுறியாடி “ என்று சீரியஸான குரலில் விக்ரமன் கேட்கவும்

“சீ.. இல்ல சும்மா தான் இப்படி பேசுன டா. நீ செலக்ட் பண்ணா என்ன அத்தை பண்ணா என்ன “ என்று வேதா சிரிக்க,  வேதா சிரிப்பின் பின் இருந்த வருத்தம் அவனுக்கு புரிய தான் செய்தது.

ஆசை காதலனையே கணவனாக வரப் போகிறான். அப்படி பட்ட திருமணத்தை எப்படி கொண்டாடி தீர்க்க வேண்டும் என்று நினைத்திருப்பாள். ஆனால் இங்கு நடப்பது என்று பெருமூச்சு ஒன்றை விட்டவன்.

“ சரி என்ன பண்ற வேதா “ என்று பேச்சை மாற்றினான். அதை புரிந்துகொண்டு அவளும் அதை விட்டு இயல்பாக மற்றதை பேசிக்கொண்டு இருந்தாள்.

இங்கு வீட்டில் மறுநாள் வேதாவுடன் புடவை எடுக்கப் போவதாக மயூரியிடம் சொல்ல அதை ஆர்யன் மறுத்துவிட்டான்.

சீமந்தத்திற்கு அவன் மனைவிக்கு புடவையை அவனே எடுத்து தருவதாக சொல்லிவிட்டான்.

மயூரி திருமணத்தை பார்க்க முடியாம‌ல் போனது னாலே சீமந்தத்தை நன்றாக செய்ய யோசித்து மண்டபம் எல்லாம் பார்த்திருந்தனர்.

ஏதோ மயூரிக்கு திருமணம் செய்வது போல புடவை எடுக்க வேண்டும் அதற்கு ஏற்ற நகை போட வேண்டும் என்று வீரா வள்ளியிடம் அத்தனையையும் பேசியிருந்தார்.

ஆனால் இவை அனைத்தையும் கேட்ட ஆர்யன் புடவை நகை என் மனைவிக்கு நான் தான் செய்வேன் மற்றது நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல வீரா முறைத்த படி தான் நின்றார் ஆர்யனை அல்ல மாறனை.

ஆர்யனை எப்படி முறைக்க முடியும் அவர் தான் மருமகன் ஆயிற்றே அதனாலேயே அவருக்கும் சேர்த்து மாறனை அழைத்து முறைத்து கொண்டிருந்தான்.

மாறன் அவன் மாமா மற்றும் அப்பா இடையே மாட்டிக்கொண்டு முழிக்க தான் செய்தான்.

வீராவும் மாறனிடம் தான் சொல்லி அனுப்புவார் ஆர்யனும் மாறனிடம் தான் மறுத்து பேசுவான்.

இருவரும் ஏனோ நேராக பேசிக்கொள்ள மாட்டார்கள்.

இவன் அவனிடம் சொல்ல அவர் சொன்னதை இவனிடம் சொல்ல என்று ஒரு கட்டத்தில் கோபமாக கத்தி விட்ட மாறன்

“புடவை நீங்க எடுங்க மாமா “ என்று ஆர்யனிடம் சொன்னவன் வீராவிடம்

“அக்காவுக்கு பண்ணி வச்சிருக்க நகைய மட்டும் அக்காவுக்கு போடுங்க புதுசா போட வேண்டாம் “ என்று சொல்ல அதற்கு ஆர்யன் எதோ மறுத்து பேச வர அவனை தடுத்த மாறன்

“அம்மா இத்தனை வருஷமா அவுங்க பெண்ணுக்காக சேர்த்து வச்சது.

என்னைக்காவது  அவுங்க போண்ணு வந்துற மாட்டாங்களான்னு சேர்த்து வச்சது மாமா. இத நகை ன்னு சொல்றத விட அம்மா ஓட நம்பிக்கை ன்னு சொல்லலாம் மாமா. அதை வேண்டாம்ன்னு சொல்லாதீங்க “

என்று அவன் வாயை அடைத்து விட்டான். அதன் பிறகு அவனும் எதுவும் பேசவில்லை.

இப்படியே நாட்கள் சென்று மறுநாள் சீமந்தம் என்று இருக்க அன்று இரவு மாணிக்கம், லட்சுமி, தினகரன் என்று மூவரும் மயூரிக்கு புடவை வளையல் பூ நகை என்று அனைத்தையும் வாங்கி வந்து இறங்கினர்.

மாணிக்கம் வந்ததில் மயூரிக்கு அத்தனை மகிழ்ச்சி என்றால் அவரின் வருகையில் ஒருவர் பொறாமையில் பொங்கிப் போய் இருந்தார்.