ராஜனின் மௌனத்தில் தங்கம் “ சரி வேண்டாம் விடு. நம்ம விக்கிக்கு வேற பெண்ணை பார்த்துடுவோம் “ என்று எழ போன தங்க பாண்டியை
“அச்சோ.. அண்ணா, அவசர படாதீங்க இருங்க. இவர் கிட்ட நான் பேசுறேன் “ என்று அவரை அமர வைத்தவர் அவர் கணவர் பக்கம் திரும்பி
“என்னங்க, ஏன் இவ்வளவு யோசிக்கிறிங்க ? வேற சாதின்னு, நம்ம தங்கம் அண்ணாவே பாக்காத போது உங்களுக்கு என்ன. நீங்க இவ்வளவு சாதி வெறியரா இருப்பிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை “
“அடச்சி நீயே ஏதாவது யோசிச்சி பேசாத. நான் அதுக்குலாம் பாக்கல.” என்று தங்க பாண்டி புறம் திரும்பி
“தங்கம் இப்போ நமக்கு சரி, வேற சாதினாலும் பரவாலன்னு போய் கேக்குறோம். ஆனா அவங்களும் நம்ம மாதிரி யோசிப்பாங்களன்னு தெரியலயே. நம்ம பாட்டுக்கு போய் கேட்டு அவுங்க வீட்டுல ஒத்துக்காம அந்த புள்ளைக்கு பிரச்சன எதவது வந்துட்டா? அதான் யோசிக்கிறன் தங்கம் “
“ அட இதுக்கா இவ்வளவு யோசனை. அதை நான் பாத்துகுறன் ராஜன் நீ கவல படாம இரு “ என்று சமாதானம் செய்தவர் வீரா புறம் திரும்பி
“நம்ம சின்ன சாமிக்கு போன் போட்டு ஊர் தலைவர கூட்டிட்டு அந்த பெண்ணு வீட்டுக்கு போக சொல்லு நாம்ம அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்போம் ன்னு சொல்லு”
“சரி ண்ணா “ என்று சின்ன சாமிக்கு போன் செய்ய போய்விட்டார் வீரா
“இப்போவே போய் பேச போறோமா தங்கம் “
“ பின்ன அந்த புள்ளைக்கு நீ நானுன்னுல மாப்பிள்ளை நின்னுட்டு இருக்காங்க அவனுங்களுக்கு முன்ன முடிக்க வேண்டாமா”
“அதுவும் சரி தான் ண்ணா நீங்க போய் பேசிவிட்டு வாங்க நம்ம போய் நாளைக்கே பூ வச்சிட்டு வந்துருவோம். நாளைக்கு நல்ல நாள் வேற “
“சரியா சொன்ன ராஜாத்தி உன் பொஞ்சாத்தி இருக்க வேகத்துக்கு நீ கொஞ்சம் கூட இல்லையேடா “
“ அண்ணா பேசி முடித்துவிட்டேன் இப்போ கிளம்புனா சரியா இருக்கும் “
“சரி வாங்க புறப்படுவோம் “ என்று மூவரும் எழுந்து நிற்க ராஜாத்தி
“அந்த போனை இங்க கொடுங்க “ என்று ராஜனிடம் இருந்து போனை வாங்கியவர் அவரின் பட்டன் போனை அவரிடம் கொடுத்து விட்டு
“வீரா தம்பி இதுல என் மருமக வேதா போட்டோவ அனுப்பிட்டீங்களா “
“இல்ல இதோ அனுப்புறேன் அண்ணி “ என்று வேதா போட்டோவை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.
அவர் அனுப்பியதும் அதை அவருக்கு தெரிந்த வகையில் போனை தட்டு தடுமாறி திறந்து போட்டோவை ஆசையாக பார்த்தவர்
“ஆ… வந்துட்டு தம்பி . சரி பார்த்து போயிட்டு உடனே கால் பண்ணுங்க “ என்று சொல்லிவிட்டு போனை எடுத்து வெளியே சென்றவர்.
இவர் முன்ன வரும் அனைவருக்கும் வேதாவை காட்டி “ என் மருமக அழகா இருக்காகல “ என்று காட்டி கொண்டி செல்ல. இதை பார்த்திருந்த ராஜன் தலையில் அடித்துக்கொண்டு அவர் பைக்கில் ஏறினார்.
அன்றே ராஜாத்தி ஊருக்கே வேதா தன் மருமகள் என்று தண்டோரா வைத்து அடிப்பது போல பரப்பி விட்டார்.
இவற்றை பார்த்திருந்த தங்கபாண்டி “ நல்ல வேலை நம்ம மீனாட்சி இப்படி இல்ல நம்ம நில்லுனா நின்னுறுவா. ராஜன் தான் பாவம் எப்படி இத்தனை வருஷம் இவுங்கள வச்சி சமாளிச்சானோ தெரியல.”
என்று நினைத்தவாறே வண்டியில் ஏறி அமர்ந்தார்.
தங்கபாண்டிக்கு தெரியவில்லை ராஜனின் அன்பில் தான் ராஜாத்தியால் இப்படி சுதந்திரமாக அவர் கணவரிடம் பேச முடிகிறது என்று.
மனைவியை அடக்கி வைப்பது மற்றும் ஆண்மை ஆகாது அவர்களின் இயல்பை தொலைக்க விடாமல் அவர்களை அவர்களாக வாழ வைப்பதும் ஆண்மை தான்.
வண்டியில் மூவருமாக வேதா வீட்டுக்கு சென்றனர். அங்கு இவர்கள் சென்று சேரும் நேரம் தான் அந்த ஊரின் தலைவரும் வந்திருந்தார்.
“வாங்க…வாங்க…..சின்ன சாமி சொன்னார். எதோ நல்ல விஷயமா பேசனும் வாங்கன்னு. ஆனா நீங்க வருவீங்கன்னு சொல்லவே இல்லையே “ என்று அந்த ஊர் தலைவரான மாரிமுத்து சிரித்தபடி பேச
“அது அந்த நல்ல விஷயத்தை நேர்ல பார்த்து நானே சொல்லலாம்னு தான் அப்படி சொன்ன சொல்லிருந்தேன் “ என்ற தங்கபாண்டியை வாய் கொள்ளாத சிரிப்புடன் அவர் பார்க்க அப்போது வீட்டு வாசலுக்கு வந்த முருகர்
“என்ன வாசல்லயே நின்னு பேசுறிங்க உள்ள வாங்க “ என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சேரில் அமர வைத்தவர்.
“ ஜோதி குடிக்க மோரை எடுத்து வா “ என்று சத்தம் போடவும் ஜோதி சமையல் அறையில் இருந்து மோர் டம்ளருடன் வெளியே வந்து அனைவருக்கும் அதை கொடுத்து விட்டு ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டார்.
“ அப்பறம் பேச கூப்பிட்டு அமைதியா இருக்கிங்க “ என்று காலி டம்ளரை அருகே டேபிளில் வைத்தார் மாரி முத்து .
“ இல்ல எப்படி தொடங்குறதுன்னு தான் பாத்துட்டு இருந்தோம் “ என்று வீரா அவன் அண்ணாவை பார்க்கவும் தங்க பாண்டி
“ இவர் ராஜன் யாருன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் ராஜாத்தி சூப்பர் மார்கெட் வச்சி நடத்திட்டு இருக்கார்.”
“ ஆ… இவரைத் தெரியாமலங்க ஊர்லயே பெரிய கடை அங்க கிடைக்காத பொருள் ஏதாவது இருக்கா என்ன “
“ஆமாங்க அந்த கடை முதலாளி தான் இவர். இவருக்கு ஒரே பையன் தான் பேரு விக்ரமன். என் பையனும் அவனும் சேர்ந்து எதோ பெரிய கம்பெனி வச்சி நடத்துறாங்க.”
“ஆ… தெரியுமே நம்ம ஊர்ல சின்ன சின்ன விவசாய விளைச்சலை நல்ல விலைக்கு வித்து தர கம்பெனி தான, ஊரே உங்க பசங்கள தான் தூக்கி வச்சி பேசுது தங்கமான பசங்க. ஏன் என் நிலம் விளைச்சல் கூட அங்க தான் போகும் தம்பி சொல்றது தான் விலை “
என்று ஓவராக புகழ் பாடும் மாரி முத்துவை சந்தேகமாகவே வீரா பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன தலைவர் ரொம்ப சாம்பிராணி போடுறாரு “ என்று யோசித்த படி தான் கேட்டுக்கொண்டிருந்தார் என்றார் முருகரோ
“எம்புட்டு பெரிய மனுசங்க நம்ம வீட்டுக்கு ஏன் வந்துருக்காங்க என்னன்னு தெரியலையே “ என்று மனதில் புலம்பிய படி இருந்தார்.
“ஆமா ஆமா நேரம் ஆகுதுல “ என்று ஆமாம் சாமி போட்டார் மாரி முத்து. அவரை கண்டு கொள்ளாத தங்க பாண்டி அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருந்த முருகரை அழைத்து மாரி முத்து அருகே அமர வைத்தவர்.
“இதோ பாரு முருகா ராஜன் பையன் என் பையன் மாதிரி தங்கம். அவனுக்கு உன் பொண்ண ரொம்ப பிடிச்சுப் போச்சு அதான் அதை பத்தி பேச வந்தோம் “ என்று உடைத்து விட்டார்.
தங்கபாண்டி சொன்னதை கேட்டு மாரிமுத்து அதிர்ந்து போய் எழுந்தே விட்டார்.
அவர் அதிர்ச்சி எதையும் பொருட்படுத்தாமல் ராஜன்
“ஆமா முருகா, எங்களுக்கு பொண்ண பிடிச்சிருக்கு அதான் எங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க கேட்க வந்தோம். நீதான் ஒரு முடிவு சொல்லணும் “
இவர்கள் பேசுவதை கேட்ட மாரிமுத்து மனதிலே, “சாதி பார்க்காம இப்படி கல்யாணம் பண்ணி இவர் வைப்பாருன்னு முன்னவே தெரிந்து இருந்திருந்தா என் பொண்ணைப் பேசி முடிச்சிருப்பனே.
அதுக்கென்ன இப்பவும் நேரம் ஒன்னும் ஆகல வீரப்பாண்டி மகனுக்கு நம்ம பொண்ண பேசி முடிச்சிருவோம். இந்த சம்பந்தம் மட்டும் நடந்துச்சுன்னா விவசாய சங்க தலைவரா ஆகிடுவேன். அதுக்கு அப்பறம் நம்ம சொல்றது தான் விலை. மாமனார்னு கம்பெனில யும் நான் சொல்ற விலை தான்“
என்று மனதில் பெரிய கணக்கு போட்டவர் சிரித்த படி அமர்ந்து
“என்ன முருகா யோசிக்கிற நல்ல சம்பந்தம் வீட்ட தேடி வருது சரின்னு சொல்லாம முகத்தைப் பார்த்துட்டு இருக்க “
“ அது வந்துங்க நாங்க உங்க சாதி இல்லை “ என்று அவர் தயங்க ராஜன்
“அட எல்லாம் தெரிஞ்சி தான் வந்துருக்கோம். எந்த காலத்துலங்க இருக்கீங்க இப்போ போய் சாதி பார்த்துட்டு “
“ஆமா முருகா நல்ல அடக்கமா பொண்ண பெத்து வளர்த்திருக்க இது போதாத என்ன “ என்று தங்கபாண்டியும் சொல்ல
இதை கேட்டிருந்த ஜோதி “ என்னது நம்ம பொண்ணு அடக்கமா? இவுங்க வீடு மாறி வந்துடாங்களோ “ என்று தான் யோசித்து கொண்டிருந்தார்.
“ம்ம்ம் அவங்களே சொல்லிட்டாங்க இதுக்கு மேல ஏன் தயங்குற “
“நான் அதுக்கு மட்டும் தயங்கல ங்க “
“என்னன்னு சொன்னா தான தெரியும் முருகா தைரியமா சொல்லுங்க “ என்று மாரி முத்து ஊக்க
“உங்களுக்கு தெரியாதது இல்லை இதை நம்ம மட்டும் முடிவு பண்ண முடியாது. சங்கம்னு ஒன்னு இருக்கு அவங்கள்லாம் வந்து பின்னாடி பிரச்சனையா ஆகிடும்னு பார்க்குறேன்.” என்று சொன்னார் சிறுது இடைவேளை விட்டு
“அப்பறம் நான் உங்க அளவு வசதியும் இல்ல நீங்க கேக்குற சீர் செய்ய முடியுமா தெரியல “
“இதையாப்பா இவ்வளோ நேரம் யோசிட்டு இருந்த. இங்க பாரு எத்தனை சங்கம் வந்தாலும் அதை நாங்க பார்த்துக்கிறேம். நீ பயப்படாம சரி சொல்லு “ என்று வீரா செல்ல
“ சீர் பத்திலாம் யோசிக்காதீங்க உங்களுக்கு முடிஞ்சதை செய்யுங்க எனக்கு இருக்குறது என் பையன் மட்டும் தான். அவன் பொண்டாட்டிக்கு நாங்க செய்ய மாட்டோமா. அதெல்லாம் எதுவும் எதிர் பார்க்க மாட்டோம் “ என்று ராஜன் புன்னகைக்க
“ இப்போ உன் முடிவு என்ன “ என்ற தங்கபாண்டியை, மற்றும் அங்க இருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு கண்களை மூடி திறந்தவர் கண் முன்னே சிரித்த முகத்துடன் நிற்கும் அவர் மகள் தெரிய அவளுக்கு கிடைக்க போக இருக்கும் நல்ல வாழ்க்கையை இழக்க விரும்பாதவர்.
அதுவும் ஊர் தலைவர் இவர் பக்கம் இருக்கும் தைரியத்தில்
“சரி, எனக்கு இதுல சம்மதம் “ என்று சொல்லிவிட்டார். அதை கேட்ட மூவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
அந்த சந்தோஷத்துடனே ராஜன் “சந்தோஷம் ங்க அப்போ நாளைக்கே பூ வைக்க என் மனைவியோடு வந்துறோம் “
“ஜோதி போய் பொண்ணு கைல பலகாரம் ஏதாவது கொடுத்து விடு “ என்று முருகர் ஜோதியை பார்த்து சொல்ல
“அச்சோ வேண்டாம்ங்க, என் மருமகளை நாளைக்கு என் பொண்டாட்டி கூட வந்தே கண் நிறைய பார்த்து போறேன் “ என்று சிரித்த ராஜன் முகத்தில் அவன் மனைவி மீதான அன்பு அழகாக வெளிவர அதியிலேயே ஜோதிக்கு கொஞ்ச நேரம் முன் வரை இருந்த உறுத்தல் நீங்கி விட முழு திருப்தி .
இப்படி பட்ட தந்தைக்கு பிறந்தவன் அவரை போல தான் தன் மகளையும் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் சந்தோஷம் அடைத்தார்.
பின் மூவரும் சொல்லிக்கொண்டு செல்ல எழுந்திருக்கும் நேரம் மாரி முத்து
“ தங்கம் கொஞ்சம் நில்லுங்க. அப்படியே இன்னொரு சம்பந்தத்தையும் பேசிட்டு போங்களேன் “ என்று நிறுத்தியவரை புருவம் சுருக்கி அனைவரும் பார்க்க தங்கம்
“சொல்லுங்க மாரிமுத்து என்ன என்னொறு சம்பந்தம் “ என்று கேள்வியாக பார்க்க
“வேற யாருக்கு உங்க தம்பி பையனுக்கும் என் மகளுக்கும் தான் “ என்று பற்கள் தெரிய சிரித்தவர் சொல்வதை போன் வழியாக கேட்ட மாறன் பல்லை கடித்தபடி
“எனக்கு பொண்ணு தற இவன் யாருடா“ என்று கத்தியிருந்தான்.