“ அண்ணா அடுத்து என்ன பண்ணப்போறீங்க “ என்று வீரா கேட்ட கேள்வியில் அவரை திரும்பி பார்த்தவர்
“ அந்த டீச்சர் பொண்ணு யாருன்னு தெரியுமா வீரா “
“இல்லை தெரியாது ண்ணா “ என்று மறுப்பாக தலையசைத்தவர் பின் “ அந்த ஸ்கூல்ல கேட்டா சொல்லுவாங்க தான ண்ணா “
“ஆனா ஸ்கூல் இப்போ லீவ்ல இருக்கே வீரா “
“ஆமா அதை மறந்துட்டேனே “ என்று நன்றாக யோசித்த வீரா
“அண்ணா நம்ம பக்கத்து ஊருச் சின்னச்சாமி பொண்ணு அவளும் டீச்சர் தான் அந்த ஸ்கூல்ல தான் வேலை பாக்குறா அவ கிட்ட கேட்டா சொல்ல மாட்டா “
“ அப்போ அவனுக்கு உடனே கால் பண்ணி விசாரி வீரா “ என்றதும் போனை எடுத்து போன் செய்து விசாரித்த வீரா
“நம்ம பக்கத்து ஊரு முருகன் பொண்ணு ண்ணா பேரு வேதாஸ்ரீ யாம்.”
“ஓ…. அப்போ வாடா தம்பி கிளம்புவோம் “ என்று வெளியே சென்றவரை புரியாமல் தான் பார்த்தார் வீரா.
இப்போது தன் அண்ணா எதுக்கு போகிறார் உன் சாதிக்கு எங்க சாதி பையன் கேக்குதான்னு சண்டை போட போராரா இல்ல விக்ரமனுக்கு அந்த பொண்ண முடிச்சி வைக்க போரார என்ற குழப்பத்துடனே அவர் பின்னே புல்லட்டில் ஏறி அமர்ந்தார்.
புல்லட் நேராக வேதா வீட்டுக்கு செல்லாமல் ராஜன் கடை பக்கமாக போவதை பார்த்தவருக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
ராஜன் கடை முன் பைக்கை நிறுத்திய தங்க பாண்டி தன் தம்பியுடன் அந்த சூப்பர் மார்க்கெட் உள்ளே சென்றார்.
இவர்கள் இருவரையும் பார்த்த ராஜன் “ வாங்க வாங்க என்ன இந்த பக்கம் ஏதாவது சோலியா வந்தீங்களா “
என்று அருகே வந்து கேட்க, தங்கப்பாண்டி
“ எல்லாம் நல்ல விஷயமாக தான் பேச வந்திருக்கிறோம் ராஜன். முதல்ல உன் மனைவிக்கு போன் போட்டு இங்க பக்கத்துல இருக்க கோவிலுக்கு உடனே வர சொல்லு நல்ல விஷயம் கோவில்ல வச்சு பேசுனா நல்லா இருக்கும் “
அதை கேட்ட ராஜன் முகம் மலர்தவராக “ எந்த கோவிலுக்கு வர சொல்லட்டும் தங்கம் “
“நம்ம ஊரு ராமர் கோவிலுக்கே வர சொல்லு “
அதற்கு உடனே தலையசைத்து ராஜாத்திக்கு போன் பேச சென்று விட்டார் ராஜன்.
ராஜன் நகர்ந்ததும் தங்கப்பாண்டி “ வீரா அப்படியே சின்ன சாமிக்கு போன் பண்ணி அந்த டீச்சர் போட்டோவ நல்ல காரியத்துக்கு தான்னு சொல்லி அவங்க வீட்டுல வாங்க சொல்லு. வாங்கியதும் உனக்கு போன்ல அத அனுப்ப சொல்லு “ என்று சொல்லவும் தலையசைத்த வீரா
“சரி ண்ணா இதோ சொல்றேன் “ என்று அவரும் சென்றுவிட்டார்.
பின் ராஜன் கடையை கடை பையன் ஒருவன் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு அவர் பைக்கில் அவர் வர அவரை தொடர்ந்து வீரா தங்க பாண்டியை அழைத்து கொண்டு புல்லட்டில் பின் சென்றான்.
கோவிலுக்குள் மூவருமாக உள்ளே நுழைந்து முதலில் ராமரை வணங்கி விட்டு அங்கே இருந்த ஒரு தூணின் அருகே சென்று அமர்ந்து விட்டனர்.
அவர்கள் வந்து சிறிது நேரத்தில் ராஜாத்தி பரபரப்புடன் வேகமாக கோவிலுக்குள் நுழைந்து சுற்றி இவர்களை தேடியவர், இவர்களைப் பார்த்ததும் நேராக அங்கே செல்ல பார்க்க உடனே ராஜன் கண்களாலேயே ராமரை காட்டி வணங்க சொல்லவும் தான் தவறு புரிந்து தலையில் கொட்டிய படி ராமர் முன் சென்று நின்றார்.
அங்கே கண்ணார ராமர் சீதா இருவரும் தம்பதிகளாக காட்சி அளிப்பதை பார்த்தவர் கைகள் கூப்பி
“ நான் உன்ன பார்க்காமல நேர அங்க போனதுக்கு கோபத்துல ஏதாவது பண்ணிடாத ப்பா. உனக்கு தான் என்ன பத்தி தெரியும்ல நான் அப்படி தான் அவசரக் குடுக்கை ன்னு.
அதுனால என்ன மன்னிச்சிரு ப்பா. அப்பறம் என் பையனுக்கு நடக்க இருக்க நல்லத முன்னாடி நின்னு நீ தான் ப்பா நல்லபடியா நடத்தி வைக்கணும் “ என்று மனதார வேண்டி முடித்தவர் பின் ராஜன் அருகே சென்று நின்றுவிட்டார்.
ராஜாத்தி வந்த பிறகே தங்க பாண்டி பேச தொடங்கினார்.
“இதோ பாரு ராஜன், இந்த விக்கி பையன் மாறன் கூட சேர்ந்துட்டு அந்த சின்ன பையன அவன் புள்ளன்னு சொல்லிட்டு திரிறது உனக்கு தெரியாம இருக்காது. “
தங்க பாண்டி சொன்னதை கேட்டு ராஜனுக்கு கோபம் தலைக்கு ஏற பல்லை கடித்த படி “ இந்த விக்கி பையன் தனியா சிக்கட்டும் தான் இருக்கிறேன் தங்கம். அவன் மட்டும் மாட்டட்டும் பிழிஞ்சிடுறன் ”
“அட அதை விடுப்பா அவன் மாட்டும் போது பாத்துக்கோ.நான் இப்போ அதை பத்தி பேச வரல ப்பா நம்ம விக்கி இப்படி சொல்லிட்டு திரியுறது தெரிஞ்சும் ஒரு பெண்ணு கட்டுனா உன் மகனை தான் கட்டுவன்னு இருக்கு அந்த புள்ளைய பத்தி தான் பேச வந்தன் “
“என்னது என் மகனையா கட்டிப்பேன்னு அடம் பண்ணுது தெளிவா விசாரிச்சியா ப்பா வேற ஏதாவது பையனா இருக்கப் போகுது “
“அட என்னப்பா உன் பையனை நீயே இறக்கி பேசுற நம்ம விக்கிக்கு என்ன குறை பையன் வைரம்ல. “ என்று வீரா சொல்லவும் ராஜாத்தி
“அப்படி சொல்லுங்க தம்பி, இவருக்கு இதே வேலையா போயிடுச்சு எப்ப பாரு அவன குறை சொல்லிட்டே இருக்குறது. போன ஜென்மத்துல அவனுக்கு மாமனாறா பிறந்திருப்பார் போல“
என்று ராஜாத்தி நொடித்து கொள்ள ராஜன் “ அடியே செத்த சும்மா இருடி “ என்று அவரை அதட்டியவர் தங்கபாண்டி புறம் திரும்பி
“நீங்க சொல்லுங்க தங்கம் அவ கடக்குற வெண்கலப் பானைக்குள்ள மாட்டுன எலி மாதிரி “
“அதான் ராஜன் அந்த புள்ள பக்கத்து ஊரு தான் ரொம்ப நல்ல புள்ள. நம்ம ஸ்கூல் டீச்சர் பாக்க லட்சணமா நம்ம விக்கிக்கு பொருத்தமா இருப்பா “ என்று அருகில் வீராவிடம் கண் காட்டவும் அவன் போனில் வந்த வேதாவின் புகைப்படத்தை காட்டினார்
“இவங்க அப்பா முருகர் அம்மா ஜோதி இரண்டாவது பொண்ணு தான் இந்த புள்ள வேதாஸ்ரீ மூத்த புள்ளைக்கு கல்யாணம் ஆகி பையன் ஒன்னு இருக்கு நல்ல குடும்பம் சுத்தி எல்லாம் விசாரிச்சிட்டேன் ராஜன் “
வேதாவின் புகைப்படத்தை பார்த்த இருவருக்குமே முழு திருப்தி ராஜாத்தி பெண்ணை பார்த்து விட்டு கற்பனையிலேயே திருமணம் முடிந்து இருவருக்கும் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்று வரை ஜெட் வேகத்தில் சென்று பார்த்துவிட்டார்.
வீராவின் போனை திருப்பி தரும் போது ராஜாத்தி “ என் மருமக படத்தை இவர் போனுக்கு கொஞ்சம் அனுப்பிடுங்க தம்பி “ என்று தான் சொல்லி கொடுத்தார்.
அவரின் மருமகள் என்ற அழைப்பிலேயே அவர் சம்பந்தம் தெரிந்து விட ராஜன் “ அப்புறம் என்ன தங்கம், என் பொண்டாட்டிக்கும் பிடிச்சிருச்சு எனக்கும் பிடிச்சிருச்சு பின்ன பேசி முடிச்சிருவோம் தங்கம் “
ராஜன் சொன்னதை கேட்டுத் தங்கம் வீரா தொடயில் இடித்து பேச சொல்ல வீரா
“ ஈசியான விஷியத்தலாம் இவரு பேசிட்டு பிரச்சனைய மட்டும் என் கிட்ட கொத்து விடுறதே இவருக்கு வேலையா போய்டு “ என்று நினைத்து கொண்டு
“அதுல தான் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு ராஜன் “ என்று மென்று விழுங்கினார் வீரா அதிலயே என்ன வர போகிறதோ என்று ராஜாத்தி பதைபதைக்க கேட்க
“அது அந்த புள்ள நம்ம சாதி இல்ல அண்ணா. அதுக்குன்னு ரொம்ப கீழ இல்லை, அதுக்குன்னு மேலனும் சொல்ல முடியாது . அதுக்குன்னு சமம்னும் சொல்ல முடியாது.
அது நம்ம சாதி மாதிரி தான். அன நம்ம சாதி இல்லை. அதுக்குன்னு தப்பு இல்ல அன தப்புதான். அதுல ஒன்னும் பெரிசா இல்ல. இல்ல தானே அண்ணா “ என்று வீரா என்று நன்றாக ஒலறி வைத்தான்.
அதை பார்த்த தங்கபாண்டி “ இவன போய் பேச விட்டோம் பாரு. என்ன சொல்லணும் “ என்று முனங்கியவாறாக
“ என்ன வீரா இந்த காலத்துல போய் சாதி பாப்பியா என்ன . நம்மலாம் எந்த காலத்துல இருக்கோம் அவன் அவன் வானத்துக்கே அசால்டா போயிட்டு வந்துட்டு இருக்கான் இப்போ போய் சாதின்னு பேசிட்டு இருக்க.
நம்ம என்ன பக்கத்து நாட்டு பொண்ணையா கல்யாணம் பண்ணி வைக்க சொல்றோம். நம்ம நாட்டு புள்ள தங்கம் மாதிரி பொண்ணு நல்ல குணம் இது போதாதா என்ன “
என்று மூச்சுப் பிடிக்க பேசியவரை வாயை பிளந்தபடி பார்த்த வீரா
“ நேத்து வர மத்த சாதி அலுங்க கையால தண்ணி வாங்கி குடிக்க யோசிக்கிறவரு இன்னுக்கு என்னன்னா ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்னு போறடுற அளவு அடிச்சு விடுறாரு “ என்று நினைத்து கொண்டான்.
வீரா வாயை பிளந்து அதிர்ந்து பார்பதை பார்த்த தங்கபாண்டி அவர் காலில் நறுக்கென்று கிள்ளிவிட அவர் வலியில் “ஆ…” என்று சத்தமாக கத்தி விட்டார்.
வீரா கத்தவும் என்ன என்று அனைவரும் அவரை பார்க்க அப்போது தான் நினைவு வந்தவராக “ஆ.. ஆமான்னு சொல்ல வந்தேன் அண்ணா சொல்றது சரி தானே “ என்று இழித்து வைத்து சமாளித்தார்.
“இதோ பாரு ராஜன் இதுக்கு மேல உன் கிட்ட என்னத்த மறைச்சிட்டு பொண்ண பிடிச்சி போய் முதல்ல மாறனுக்கு தான் கேட்க போலாம்னு இருந்தோம். ஆனா அந்த போண்ணுக்கு உன் மொவன பிடிச்சிருக்கு. விஷயம் தெரிஞ்சி தான் சரின்னு உன் கிட்ட சொல்ல வந்துருக்கோம். இதுக்கு அப்பறம் உன் முடிவு தான் “
என்று மூச்சுப் பிடிக்க பொய்யை வாரி வழங்கியவருக்கு அவார்டு தர தான் தோன்றியது வீராவுக்கு.
இத்தனை உருட்டு உருட்டியும் ராஜன் முகம் யோசனையாகவே இருக்க தங்கம் ஒரு வித எதிர்பார்ப்புடன் ராஜன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி தான் இருந்தார்.
இங்கு ராஜன் பதில் சொல்வதற்குள் ராஜாத்தி “ அப்பா ராமரே எனக்கு இந்த பெண்ணே மருமகளா வந்துட்டா என் கணவருக்கு மொட்டை அடிக்கிறேன் ப்பா “ என்று ராஜன் தலையை மொட்டை அடிக்க ப்ளேன் போட்ட படி இருந்தார்.