அதிர்ச்சியில் வாயில் கை வைத்தபடி மஞ்சு நின்று கொண்டிருக்க “ பாத்திரத்தை கீழே போட்டு என்னத்த பார்த்திட்டு இருக்கிற “ என்ற குரலில் களைந்தவள் யார் என்று பார்க்க தின்னையில் அமர்ந்து அரிசி பொறுக்கியபடி ஒரு பாட்டி
“பாத்திரத்தை எடுக்காம என்னத்த பார்த்து நிக்குறடி..” என்று அதட்டவும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வேகமாக நடந்து இல்லை ஓடி தான் சென்றாள்.
வீட்டுக்கு வந்த விக்ரமன் மற்றும் மாறன் கண்களாலேயே பேசிக்கொண்டு மதிய உணவுக்கு அருகருகே அமர்ந்து கொண்டனர்.
மீனாட்சி மற்றும் வள்ளி தான் உணவை எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.
தட்டில் ஆட்டு குடல் வறுவல், எலும்பு குழம்பு, நாட்டுக்கோழி தொக்கு என்று தட்டே நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. அதை பார்த்து எச்சிலை விழுங்கியவன் லேசாக மாறன் புறம் சாய்ந்து
“நம்ம ஆக்டிங்க சாப்பிட்டு முடிச்ச பிறகு ஆரம்பிக்கலாமாடா “ என்று தட்டை பார்த்தபடியே கேட்க
“அதுவும் சரி தான்டா, நமக்கு சோறு தான முக்கியம். டீச்சரா முக்கியம் “ என்று மாறன் அடிக்கண்ணால் விக்ரமனை பார்க்க அவன்
“ யாருடா அது இங்க சோறு முக்கியம்னு சொன்னவன். காதலுக்காக எதையும் கொடுப்பான் இந்த விக்ரமன் “ என்று சாப்பாட்டை பிசைந்து முதலில் மொழிக்கு ஊட்டியவன் அடுத்த உருண்டை உருட்டி
“டேய் மாறா இந்த வாயை திற “ என்று ஊட்டி விட அந்நேரம் சரியாக மஞ்சு உள்ளே நுழையவும் இதை பார்க்கவும் சரியாக இருந்தது.
இதை பார்த்து மீண்டும் பாத்திரத்தை கீழே விட அந்த சத்தத்தில் அனைவரும் அவளை தான் திரும்பி பார்த்தனர்.
மஞ்சு வாயைப் பிளந்தபடி இவர்கள் இருவரையும் தான் பார்த்தாள்.
“அடியே மஞ்சு பாத்திரத்தை கீழ போட்டு அப்படி என்னத்த டி வாயைப் பிளந்திட்டு பாக்குற “
“அது, ம்மா….அண்ணா ஊட்டி …” என்று புலம்பியவளின் தலையில் கொட்டிய மீனாட்சி
“பாத்திரத்தை எடுத்து உள்ளே போடி, விட்டா நாள் பூராவும் பொலம்புவா “ என்று உள்ளே அனுப்பிவிட மஞ்சு சமையல் அறையில் இருந்து இவர்கள் இருவரை தான் நோட்டமிட்டு கொண்டிருந்தாள்.
அதற்கு ஏற்றாற்போல மாறனும் விக்ரமனுக்கு கண்ணை காட்டி விட்டு“ டேய் விக்கி இத சாப்பிட்டு பாருடா சூப்பரா இருக்கு “ என்று மாற்றி மாற்றி ஊட்டி விட என்று அலப்பறை செய்து கொண்டிருக்க, இவர்களை பார்த்த வெள்ளையம்மா
“அடச்சி ஒழுங்க சாப்பிடுங்க, எதோ அவனுக்கு கையில்லாத மாதிரி ஊட்டி விட்டு இருக்க. அங்க பாரு அந்த சின்னப் பிள்ளையே அழகா சாப்பிடிறத “ என்று திட்டிய பிறகு தான் அமைதியானார்கள்.
சாப்பிட்டு முடித்த பிறகும் விக்ரமன் மாறன் இடித்துக் கொண்டே சுற்றுவதை பார்த்த மஞ்சு
“அம்மா அம்மா.. இங்க வாம்மா…” என்று மீனாட்சி கையை பிடித்து இழுத்தபடி பின்னே கிணற்றுக்கருகே அழைத்து சென்றாள்.
அங்கே வள்ளி பாத்திரம் விளக்கிக்கொண்டு இருக்க அருகில் பின் திண்ணையில் வெள்ளையம்மா ஆடுகளை கட்டி வைத்தபடி இருப்பதையும் பார்த்து விட்டு திரு திரு வென முழக்கவும்.
“எதுக்குடி இங்க கூட்டி வந்த “ என்று மீனாட்சி கேட்டதுக்கு
“அது ம்மா வந்து …” என்று சுற்றி இவர்களை பார்த்து நிற்கவும், வள்ளி
“என்ன மஞ்சு ஆச்சி உனக்கு, மதியம் இருந்து உன் முகமே சரியில்லை என்ன ஆச்சி”
“என் பேரன பத்தி சொல்ல அப்படி என்னடி இருக்கு… அவன் தங்கம்ல “
அதைக் கேட்ட மஞ்சு “ ஆறு வயசுப் பிள்ளையை கூட்டி வந்து நான் தான் அப்பான்னு சொல்றான். அப்பவும் பேரனை தங்கம்ல…பித்தாலல….ன்னு ஏலம் விடுறத பாரேன் “ என்று மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது.
மஞ்சுவின் முகத்தைப் பார்த்த வள்ளி “ நான் எதுவும் நினைக்க மாட்டேன் நீ என்னன்னு சொல்லு “
“அது சித்தி நான் மதியம் சாப்பாடு எடுத்துப் போனேன்..ல. அங்க அப்பாவும் சித்தப்பாவும் அண்ணா காலேஜ்ல யாரையும் லவ் பண்ணலனு பேசிட்டு இருந்தாங்கலலா”
“அப்போவே தெரியும்டி… என் பேரனை பத்தி. அவனுக்கு இந்த காதல் கீதல்லாம் வராதுன்னு “
“அத்தை செத்த பொறுங்க, அவ சொல்ல வரதை சொல்லி முடிக்கட்டும் “ என்று மஞ்சு முகம் பார்க்க, அவள்
“ இப்போ நான் சொல்றத கேட்டு கோச்சிக்காதிங்க சித்தி எனக்கும் அண்ணனை ரொம்ப பிடிக்கும் “
“அடச்சி கண்ட கண்றாவிய போய் யோசிச்சிட்டு இருக்க, அதை காலைலயே யோசிக்க கூடாதுன்னு சொன்னேன் தானடி “ என்று வெள்ளையம்மா அதட்டவும் பயந்து போய் மஞ்சு நிற்க, வள்ளி
“அவங்களை விடு மஞ்சு. நீ சொல்ல வந்ததை சொல்லி “ என்று எதோ யோசித்தவராக அவர் சொல்ல மஞ்சு
“ அது சித்தி இந்த விக்கி மாறன் அண்ணா நடவடிக்கை சரியே இல்லை சித்தி. மதியம் கூட சாப்பாட்டை ஊட்டி விட்டு சாப்பிடுறாங்க எப்போ பாரு இந்த விக்ரமனும் அண்ணா கூடவே சுத்துறான் “
“அவனுங்க சின்ன வயசுல இருந்து இப்படி தான் சுத்துவாங்க. அதுல என்னத்த புதுசா கண்ட மாதிரி பேசுற “ என்று இம்முறை மீனாட்சி பேச
“அதும்மா இப்போ வெளிய வாசல்ல. .. அந்த பையன் கூட விளையாடுறன்னு… இந்த விக்கி அண்ணா மாறன் அண்ணாவ தூக்கி சுத்திட்டு இருந்தான் “
“அட அந்த குரங்குங்க அப்படி தான் சேட்டை செஞ்சிட்டு சுத்தும். அத பாத்துட்டா நீ இப்படி பதறிட்டு இருக்க “
“ப்ச்…. அம்மா….. நான் சொல்றத முழுசா கேளும்மா, எனக்கு என்னம்மோ அந்த பையன, மாறன் விக்கி அண்ணா ரெண்டு பேரும் சேந்து பெத்துக்கிட்ட புள்ளன்னு நினைக்கிறேன் “ என்று சொன்னது தான் தாமதம் வெள்ளையம்மா
“அட எடு அந்த வெளக்குமாற, சின்ன கழுதை என்ன கண்டாரவிய பேசுற “ என்று கையில் இருந்த குச்சியால் அடிபோட போக அவள் பயந்து வள்ளி பின்னே சென்று அமர்ந்து கொண்டாள்.
“சித்தி காப்பாத்து சித்தி.. பாட்டி அடிக்க வராங்க, நான் வேனும்னு என் அண்ணனை சொல்லுவன நீங்க வேன அவுங்க ரெண்டு பேரையும் பாருங்க அவுங்க பண்றது பூரா எனக்கு தப்பா தான் தெரியுது “
அதை கேட்டு அங்கே ஒரு நிமிடம் அனைவரும் எதுவுமே பேசவில்லை வள்ளி பாத்திரம் விளக்கும் சத்தம் மட்டுமே கேட்க அதை பார்த்த வெள்ளையம்மா
“ அடியே வள்ளி, அவ உன் புள்ளைய தான்டி தப்பா சொல்லிட்டு இருக்கா. அவள குமட்டுலயே ரெண்டு குத்து குத்தாம பேச விட்டு வேடிக்க பார்த்துட்டு இருக்க “
“ உண்மை எதுன்னு என் பையனா வந்து சொல்லாம நான் என்னன்னு பேச அத்தை. அவனா சொல்லாம நான் எந்த முடிவும் அவன் விஷயத்துல எடுக்க முடியாது அத்தை “
என்று சொல்லியவர் விளக்கிய பாத்திரத்தை எடுத்து கொண்டு சமையல் அறைக்கு செல்ல
வெள்ளையம்மா “ என்ன மீனாட்சி இவ இப்படி பேசிட்டு போற, உன் பொண்ணு வேற எதேதோ ஒலறிட்டு இருக்கா எனக்கு உடம்பு எல்லாம் பதறுதுடி “
“எனக்கும் அதான் ஒன்னும் புரியல அத்தை“
“என்ன புரியல உங்களுக்கு. வேணும்னா ரெண்டு பேரும் வந்து பாருங்க. தின்னையில அண்ணணுங்க என்ன பண்ணுறானுங்கன்னு “ என்று இருவரையும் அழைத்து சென்றாள்.
வெளியில் மண்ணில் குச்சியை வைத்து மொழி விளையாடுவதை ஒரு பக்க தின்னையில் இருந்து யாழினி மற்றும் அதித்தி பார்க்க, மறு பக்க தின்னையில் இருந்து மாறன் தோளில் விக்ரமன் கைபோட்ட படி பார்த்து கொண்டிருந்தான்.
இவர்களை வராண்டாவில் மறைந்து இருந்து மூவரும் எட்டி பார்த்தபடி நிற்க, மஞ்சு “ பாத்தியா பாட்டி நான் சொன்னேன் ல ரெண்டு பேரும் எப்படி உக்காந்துட்டு இருக்காங்கன்னு பாரு “
“ஒன்னா தானடி உக்காந்து இருக்காங்க இதுல எதுவும் எனக்கு தப்பா தெரியலையேடி “
என்று வெள்ளையம்மா சொல்லி வாயை மூடவில்லை விக்ரமன் மாறன் கழுத்தில் விரல் வைத்து கூச செய்ய மாறன் கழுத்தை சுருக்கி கொண்டு
“விக்கி….” என்று அவன் என்னமோ சாதகமான குரலில் தான் அழைத்தான். ஆனால் இங்கு பார்க்கும் மூவருக்கும் “ விக்கி….” என்று சிணுங்கலான குரலில் அழைத்தது போல தெரிய வெள்ளையம்மா
“ மீனாட்சி…. என்ன புடி டி… எனக்கு நெஞ்சு அடைச்ச மாதிரி வருதுடி தண்ணி எடுத்து வாடி “ என்று அமர்ந்து விட மஞ்சு வேகமாக சென்று தண்ணி எடுத்து வந்தாள்.
அதை வாங்கி குடித்து முடித்தவள் “ மீனாட்சி உன் பொண்ணு சொன்னத கேட்டதுல இருந்து என் கண்ணுக்கும் எல்லாம் தப்பா தான்டி தெரியுது….” அதை கேட்ட மீனாட்சி தயங்கிய படியே
“அத்தை தப்பா நினைச்சுக்காதீங்க, நான் இப்படி சொல்றனேன்னு. எதுக்கும் இதை உங்க மகனுங்க கிட்ட சொல்லி வைங்க உண்மையா இருந்தா இத என்னனு அவுங்க தான பாக்கணும் “
“அதுவும் சரிதாண்டி அவன்கிட்ட சொன்னா இது என்னன்னு விசாரிப்பான் “ என்று எழுந்து நின்றவர் சாமி அறை சென்று
“அப்பா என் பேரனை நீதான்யா இதுல இருந்து காப்பாத்தணும் “ என்று காசை முடிந்து வைத்தவர் திருநீரை எடுத்து பூசிக்கொண்டு மீனாட்சியை அழைத்துக்கொண்டு பெரிய வீட்டிற்கு சென்றார்.
பாட்டி யாரையும் கவனிக்காமல் மீனாட்சி உடன் செல்வதை பார்த்த மாறன் உள்ளே தலை திருப்பி பார்க்க மஞ்சு இவர்களை தான் குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தாள்.
மாறன் பார்த்தும் தலையை திருப்பி புத்தகத்தை படிப்பது போல அமர்ந்து கொள்ள மாறன் இதழில் மெல்லிய புன்னகை , மாறன் புண்ணகையை பார்த்த விக்ரமன்
“என்னடா மாறா முகம் ப்ரைட்டா இருக்கு மாமன் ரொமன்ஸ்ல அழகி கூடிட்டு போல “ என்று சிரித்தவனை பார்த்து
“அடிச்சிருவேன் எருமை மாமான்னு அசிங்கமா பேசாத” என்று மிரட்டவும்
“நீ செய்ய சொன்னதுலாம் அசிங்கமா தெரியல, நான் என்ன மாமன்னு சொன்னது, அசிங்கமா போயிட்டா “ என்று நாக்கை அவன் கன்னத்தில் அடக்கிய படி விக்ரமன் பேச மாறன்
“ப்ச் சரி அதை விடு, நீ போட்ட போடுல பாட்டி ஜெட் ஸ்பீட்ல போறாங்க போலடா “
“என்னது அதுக்குல்ல சந்தேகம் வந்துட்டா பாட்டிக்கு. நான் என்னும் ஆரம்பிக்கவே இல்லையேடா. நான் என்னும் எவ்வளவு சீன் யோசிச்சு வச்சிருந்த தெரியுமா “
“என்னது…… ஆரம்பிக்காமலாடா இத்தன பண்ண நீ “ என்று மாறன் ஷாக் ஆகவும்
“அது சும்மா ரிகர்சல்டா. இனிமே தான் டீப்பா போனும்னு எத்தன ரொமன்டிக் வீடியோ பாத்து வச்சிருந்த. அதுக்குள்ள பாட்டி கெடுத்துடாங்களே ச்சா “ என்று சலித்தவனை மேலும் கீழும் பார்த்த மாறன்
“டேய் விக்கி நடிக்கத்தானேடா செய்றா “ என்று இவனுக்கே சந்தேகம் வர அவனின் சட்டை மேல் பட்டனை கை கொண்டு மாறன் மூடிய படி பார்க்கவும், விக்ரமன் அவன் கையை தட்டிவிட்டு
“நான் இருக்க நீ கஷ்டப்படலாமடா “ என்று நெருங்கி அவன் மேல் பட்டனை போட்டு விட்டு ஒற்றை கண்ணை அடிக்க அதை பார்த்த மஞ்சு
“சித்தி …….” என்று கத்திய படி ஓடி விட விக்ரமன் சத்தமாக சிரித்தபடி
“உன் வீட்டுல இருக்க டிக்கெட்டுக்கு இந்த பட்டன் சீன் ஒன்னு போதும் போலடா “ என்று சிரிக்க அங்கு பக்கத்து திண்ணையில் இவற்றை பார்த்திருந்த யாழினிக்கு மனதில்
“என்னடா பண்றிங்க எனக்கே பொறாமையா இருக்கே “ என்று கண்களாலேயே நெருப்பு விட்டாள். அதை பார்த்த அதித்தி
“என்ன யாழி ஃபீலிங்கஸா “ என்று அதித்தி அவளின் தோளில் இடித்து கேட்கவும் யாழினி உடனே முகத்தை மாற்றி கொண்டு
“அது க்கா…”
“சும்மா ஃபன்னுக்கும்மா, ரொம்ப பயப்படாத.” என்று அவள் தோளில் தட்டி “ இவுங்க பண்றது பார்க்க காமெடியா இருக்குல “
“ம்ம்ம் ஆமாம்கா சிரிப்பா தான் இருக்கு “
“ இது தான் சாக்குன்னு, விக்ரமன் நல்லா மாறன வைச்சி செய்றன். பாவம் மாறன் அவன் பன்ற ரொமன்ஸுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காரு “
“ம்ம்ம் க்கா “ என்று தலையை தலையை யாழினி ஆட்ட அதித்தி
“நீங்க எத்தன வருஷமா லவ் பண்றீங்க யாழி. யார் முதல்ல ப்ரொப்போஸ் பண்ணா “ என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்று யாழினி யோசிக்கவும் அதித்தி
“சும்மா சொல்லு யாழி. நான் உன் அக்கா மாதிரி தான் ஒன்னும் நினைக்க மாட்டேன் “
“நீங்க வேற க்கா. உங்க கிட்ட சொல்ல என்ன. அவங்க இது வரை என்கிட்ட லவ்வே சொன்னதில்லை “
“என்ன யாழி சொல்ற “ என்று அதித்தி ஷாக் ஆக பார்க்க யாழினி பெருமூச்சு ஒன்று விட்ட படி
“ஆமா க்கா அவர் லவ்வே சொன்னது இல்ல. ஆனா அவர் கண்ணுல எனக்கான காதலை நிறைய பார்த்திருக்கேன். நானும் அவர் என்னைக்காவது சொல்லுவாரு சொல்லுவாருன்னு வெயிட் பண்ணி இங்க வந்து உட்கார்ந்தது தான் மிச்சம் “
“அட பொண்ணே என்ன சொல்ற “
“இங்க உங்ககிட்ட சொல்லும் போது தான் எனக்கே விஷயம் தெரியும் “
“அடிப்பாவி லவ் சொல்லாமலே லவ் மேரேஜ்க்கு ரெடி பண்ண பிளான் போட்டிருக்காரா உங்க ஆளு போச்சி போ “
“ம்ம்ம் க்கா நானும் பார்க்கிறேன், என்னைக்கு என் கிட்ட அந்த மூணு வார்த்தைய சொல்ல போறார்னு “ என்று அங்கு விக்ரமன் உடன் சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் மாறனை தான் பார்த்திருந்தாள்.