தமிழிசை வீட்டில் அவள், அவள் அப்பா சிவநேசன், அம்மா சித்ரா, தங்கை யாழினி என்று நால்வர் மட்டுமே. வீட்டின் மூத்த பெண் என்று செல்லம் எதுவும் காட்டாமல் இருவரையும் ஒன்று போல தான் வளர்த்தனர்.
அவள் வீட்டிலும் எல்லா அக்கா தங்கைளைப் போல இருவரும் சண்டை போட்டு மட்டையை உடைக்காத குறையாக தான் இருப்பார்கள். இருவரும் ஒன்றுபோல வீட்டில் இருந்தாள் எப்போதும் வீட்டில் இந்தியா பாக்கிஸ்தான் போர் தான் நடக்கும் .
சிவநேசன் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி கொண்டிருந்தார். அது மட்டும் இன்றி அவர் சாதி சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உறுப்பினராகவும் இருந்தார்.
அம்மா அப்பா இருவருமே அவர்களின் சாதியை சொல்லி சொல்லி வலத்தாளும் அவர்களின் மகள்கள் இருவரும், அதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் போனது தான் அதிசயம்.
தமிழிசைக்கு பாடல் பாடுவது என்றால் மிகப் பிடிக்கும். அதைவிட தமிழில் அந்த பாடலை பாடுவது மிக மிகப் பிடிக்கும். அவள் பெயரிலே தமிழை சுமந்ததாலயோ என்னவோ தமிழ் மொழி மீது அலாதி பிரியம்.
அந்த பிரியத்தின் விளைவாகவே கல்லூரியில் தமிழ் துறையில் ஆசையாக சேர்ந்தாள். அதுவே அவள் வாழ்க்கையை வேறு பாதையில் அழைத்து செல்லும் பாதையாக மாறியது .
இவள் டிப்பார்ட்மெண்ட் சீனியர் ராஷித் மேடையில் தமிழ் அழகாக பேசுவான். பட்டிமன்றம் அளவு கூட சென்று பேசியிருக்கிறான். ஒரு முறை அவனின் உரையை நேரில் சென்று கேட்க அதிலிருந்து அவன் மீது ஈர்ப்பு வந்து விட்டது இவளுக்கு.
அந்த ஈர்ப்பு தான் அவன் வந்து இவளிடம் காதல் சொல்லும் போது சம்மதிக்கவும் வைத்து விட்டது. இப்படி மூன்று வருடம் தமிழின் படிப்புடன் அவர்களின் காதலும் அருமையாக வளர்ந்தது.
தமிழுக்குத் தெரியும் வீட்டில் இவள் காதலை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள் என்று அதற்கு பயந்தே யாரிடமும் சொல்லாமல் மனதில் பூட்டி வைத்திருந்தாள். அந்த பூட்டு அவிழும் நாளும் வந்தது,
கல்லூரி முடித்த கையோடு வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட அதில் பயந்து போனவள் எடுத்த முடிவின் விளைவே, இப்போது இங்கு வந்து நின்று கொண்டிருக்கிறாள்.
தமிழ் சொன்னதை கேட்டு இருவரும் திடுக்கிட்டு போய் “ என்ன சொல்றிங்க க்கா இங்க உங்களுக்கு கல்யாணம்மா “ என்று அதிரவும், அவள்
“ஆமா இங்க தான்டா கல்யாணம், எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க அதான் இந்த முடிவு “ என்று ராஷித்தை அழைத்து இவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
இவர்களும் அவனை பார்த்து பேருக்கு சிரித்து வைத்தனர். தமிழ் “ ராஷித் பக்கம் அவுங்க பிரண்ட்ஸ் வந்துடாங்க என் பக்கம் யார கூப்பிட யோசிக்கும் போது நீங்க தான் நியபகத்துக்கு வந்திங்க அதான் கூப்டன் “ என்று சிரித்தவளை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்றனர்.
“உங்க வீட்டுல ஒத்துக்கலயா க்கா “ என்று விக்ரமன் கேட்க, அதற்கு அவள் “ நான் வீட்டுல சொல்லியிருந்தா தான ஒத்துக்கறதுக்கு “ என்று சொல்லியதை கேட்ட மாறன்
“சொல்லவே இல்லையா, ஏன்? சொல்லி பாத்துருக்கலாம் தான, ஒரு வேளை அவுங்க சம்மதிச்சிருந்தா “
“இல்ல சம்மதிச்சிருக்க மாட்டாங்க மாறன். எங்க அப்பாவ பத்தி எனக்கு தெரியும், அவர் இந்த மதம் சாதி ரெண்டும் பாப்பாரு “ என்று அவள் சொன்னதை கேட்டு இருவருக்கும் தோன்றியது இதுவே
“ சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் ஏன் லவ் பண்ணிங்க “. இவர்கள் மனதில் நினைத்ததை படித்தது போல தமிழ் “ நானும் முயற்சி பண்ண இவர லவ் பண்ண கூடாதுன்னு ஆனா இந்த மனசு எங்க கேட்டுச்சு “ என்ற ராஷித்தை திரும்பி பார்த்து சிரிக்கவும் , விக்ரமன்
“இதிலெல்லாம் நல்லா பேசு, ஒரு வார்த்தை உன் லவ் பண்தி முன்னாடியே சொன்னியா க்கா “ என்று கோபமாக திரும்ப மாறன் அவன் தலையில் தட்டி
“ இவர் பெரிய காதல் கடவுளு, இவர் கிட்ட சொல்லாம யாரும் லவ் பண்ண கூடாது பாரு “
“ப்ச் தலையில அடிக்காத மாறா வளர்ற புள்ள “ என்று இவர்கள் சண்டை தொடரும் முன்னேயே தமிழ்
“ டேய் டைம் ஆச்சிடா.. நீங்க பொறுமையா காலேஜ் போய் கூட சண்ட போடுங்க மொதல்ல எங்க கல்யாணத்தை முடிச்சிடலாம் “ என்று சொல்லி அழைத்து சென்றாள்.
தமிழிசைக்கும் ராஷித்துக்கும் நல்ல படியாக திருமணம் முடியா அனைவரும் அங்கிருந்து பெங்களூருக்கு இரயலில் ஏத்தி விட சென்றனர்.
தமிழ் கிளம்பும் முன் மாறன் மற்றும் விக்ரமன் இருவரும் அவர்களின் செலவு போக மிச்சம் சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் இருந்து கடனாக வாங்கிய பணம் என்று மொத்தம் இருபதாயிரம் பணத்தை அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க கையில் திணித்து விட்டே சென்றனர்.
அதன் பின் தமிழை நேரில் பார்க்கவில்லை என்றாலும் போன் மூலம் பேசி தொடர்பில் தான் இருந்தனர். இப்படி இருக்க இவர்கள் கல்லூரி கடைசி தேர்வு நடக்கும் நேரத்தில் தமிழ் அவளின் வளைகாப்புக்கு இருவரையும் அழைத்தாள்.
அந்த அழைப்புக்கு இணங்கி இருவரும் தேர்வு முடிந்து பெங்களூர் நோக்கி சென்றனர் அவரவர் வீட்டுக்கு தெரியாமல்.
இரயிலில் செல்லும் இருவருக்கும் தெரியாது இவர்கள் திரும்பி மதுரைக்கு வரும்பொழுது ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாறி வர போவது.
ஒன்பது மாத வயிற்றுடன் அழகாகப் புடவை அணிந்து கன்னத்தில் சந்தனத்துடன் தமிழை அமர வைத்திருந்தனர். வீட்டுலயே மிக எளிமையாக நிகழ்ச்சியை வைத்திருந்தனர்.
அக்கம் பக்கத்தினர் ராஷிதுடன் வேலை செய்பவர்கள் என்று சொற்பமாகத்தான் ஆட்கள் வந்திருந்தனர். அனைவரும் தமிழை ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றுவிட விக்ரமன் , மாறன் மற்றும் ராஷித் நண்பர்கள் ஒரிருவர் மட்டுமே இருந்தனர்.
விக்ரமன், மாறன், தமிழிடம் வந்து வெள்ளியில் வளையல் போட்டு சந்தனம் தடவி வளை பூட்டினார்கள். வளையலை பார்த்த தமிழ் “ என்னடா பெரிய மனுசன் மாதிரி காச இப்படி செலவு பண்றீங்க உங்களுக்குன்னு சேர்த்து வைங்கடா கொஞ்சம் “
“எங்களுக்கு தான , அதெல்லாம் பொறுமையா சேத்துக்கலாம் . இப்போ எங்களுக்கு எங்க அக்காக்கு செய்யணும் அவ்வளவு தான் “ என்று விக்ரமன் சொல்லியதை கேட்டு தமிழ் கண்கள் கலங்கி
“ நேத்துவர எனக்குன்னு என் ராஷித்த தவிர வேற யாரும் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தான். ஆனா இன்னைக்கு எனக்குன்னு என் தம்பிங்க இருக்காங்க எனக்கு சந்தோஷமா இருக்கு “ என்று கண்களை கசக்க மாறன் தமிழ் அழுவதை பார்க்க முடியாமல் பேச்சை மாற்றும் விதமாக
“சரி அதை விடு… பாப்பாக்கு பேர் சூஸ் பண்ணி வச்சிடாங்கள?” என்று கேட்டதும் தமிழ் முகம் மலர்ந்து
“ஆ… சூஸ் பண்ணிடோமே…” என்று ஆர்வமாக சொல்லவும்
“என்ன பாப்பான்னு தெரியாம எப்படி சூஸ் பண்ண க்கா “ என்று மாறன் சந்தேகமாக பார்க்க , அவன் பார்வையில் தோளில் அடித்த தமிழ்
“நான் பாப்பா பேர் சொல்றேன் அதை வச்சே நான் எப்படி கண்டுபிடிச்சன்னு சொல்லு” என்று தமிழ் சொல்லவும் இருவரும் ஆர்வமாக தலையசைத்தனர்,
“ சாதி, மதம் ன்னு எத்தனை வேறுபாடு இருந்தாலும் காதல்ன்ற ஒன்னால, இந்த தமிழும் ராஷித்தும் சேர்ந்திருந்தாலும் எங்களுக்கு பொதுவான ஒன்னு நாங்க ரெண்டு பேரும் உயிரா நினைச்ச ஒன்னு எங்க மொழி அதேபோல எங்களல உருவான உயிர் செம்மொழி “ என்று சிரிக்க விக்ரமன் தலையை சொரிந்தபடி
“ஓ…சரிக்கா சூப்பர சொன்னிங்க க்கா…. ஆமா பாப்பா போற எப்போ சொல்ல போறிங்க“ என்று முழித்தவன் தலையில் கொட்டிய மாறன்
“ கழுதை கிட்ட கவிதையா சொன்னா இப்படி தான் நிக்குமா “
“போற கேட்டதுக்கு ஏன்டா கொட்டுற உன் கிட்டயா நான் கேட்டேன்.” என்று மாறனை முறைத்துவிட்டு “ அக்கா நீ சொல்லுக்கா பாப்பா பேரு என்ன “
அதை கேட்டு தலையில் அடித்து கொண்ட தமிழ் “ நீ எப்பவுமே இப்படி தான் இருப்பியாடா, உன் கிட்ட போய் இப்படி சொன்ன பாத்தியா என் தப்பு தான் “
“இப்பவும் பேர சொல்லாம திட்டிட்டு இருக்கா க்கா “ என்று பாவமாக முகத்தை வைக்கவும் தமிழ்
“செம்மொழியா…..நல்ல இருக்கு நல்ல இருக்கு “ என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது நான்கு பேர் வீட்டுக்குள் முகம் மூடி அணிந்தபடி நுழையவும்.
அவர்களை கதவு அருகே இருந்த ராஷித்தே முதலில் பார்த்து “ யார் நீங்க “ என்று அவன் கேட்டு முடிக்கும் முன் அவனை சரமாரியாக கையில் இருந்த கட்டை இரும்பு ராட் சுத்தியல் என்று அனைத்தையும் வைத்து அடிக்க தொடங்கினர்.
அவர்களை தடுக்க வந்த ராஷித்தின் நண்பர்களையும் அடித்து போட்டுவிட்டு தமிழ் புறம் வர இவற்றை பார்த்திருந்த தமிழ் பயத்தில் ராஷித் என்று கத்தி கொண்டு அவன் அருகே செல்ல போக.
அவளைத் தடுத்துப் பிடித்த விக்ரமன் “ அக்கா இங்கேயே இரு அங்க போகாதே “ என்று பிடித்துக்கொண்டான்.
மாறன் சென்று ராஷித்தை காப்பாற்ற முனைய அவனுக்கும் கையில் காலில் அடி விழ கீழே விழுந்தான் மாறன். அதன் பின் அந்த நால்வரும் தமிழ் பக்கம் சென்றனர்.
அவர்களை பார்த்து தமிழ் பயந்து போய் அவளின் வயிற்றை பிடித்தபடி பின்னோக்கிச் செல்லவும் அவளை மறைத்தபடி விக்ரமன் வந்து நின்றான்.
மாறன் விக்ரமன் இருவரும் கல்லூரி மாணவர்கள் தான், ஆனால் அடிக்க வந்தவர்களோ கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் கையில் பொருட்களை வைத்து வந்திருந்தனர். வருபவர்களை சுலபமாக அடித்து வீழ்த்த இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றும் இல்லையே.
விக்ரமனையும் போட்டு அடித்து தள்ளி விட்டு தமிழின் வயிற்றில் கட்டையை வைத்து அடித்து விட அவள் “ அம்மா…. “ என்ற அலறலுடன் மயங்கி கீழே சரிந்தாள்.
பேச்சு மூச்சு இன்றி மயங்கி இருப்பவளை பார்த்து விட்டு இவர்கள் சென்று விட்டனர்.
ராஷித் அங்கேயே இறந்து போய்விட்டான். மாறன் விக்ரமன் இருவரும் எல முடியாமல் எழுந்து தமிழ் அருகே சென்று பார்க்க அவள் லேசாக மூச்சு விட்டு கொண்டிருந்தாள்.
உடனே இருவரும் சேர்ந்து அவளை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அது ஒரு தனியார் மருத்துவமனை அங்கு முதலில் போலீஸ் கேஸ் என்று சேர்க்க மாட்டேன் என்று சொல்ல இவர்கள் இருவரும் காலில் விழுந்து கொஞ்சம் பணம் தந்து என்று சிகிச்சை பார்க்க ஒத்துக்க வைத்தனர்.
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தான் குழந்தையை பெற்றெடுத்தாள் தமிழ். குழந்தையை பத்திரமாக இந்த உலகுக்கு கொண்டு சேர்த்துவிட்டு அவள் கடமை முடிந்தது என்று அவள் மூச்சை நிறுத்திக் கொண்டாள்.
பிறந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டு எங்கு செல்ல என்ன செய்ய என்று விக்ரமன் மற்றும் மாறன் தமிழின் உடல் முன் கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்தனர்.