நெஞ்சம் 17

மயூரி சொன்னதைக் கேட்டு வேகமாக மறுத்து மாறன் தலையசைத்து “ ஐயோ அக்கா அவங்க என் சீனியர் “  என்று பதறி சொல்ல

“ஓ… விண்ணைத் தாண்டி வருவாயா லவ்வா “ என்று கிருபா சிரிக்க அவன் தலையில் தட்டிய ஆர்யன்

“அவனைக் கொஞ்சம் பேச விடு கிருபா “

“அப்படியே நான் அவன் வாயை மூடிட்டு பேச கூடாதுன்னு சொல்ற மாதிரி சொல்றியேடா. நான் பாட்டுக்கு தான நிக்குறான். ஓவரா உன் மச்சானுக்கு சொம்பு தூங்காத நானும் உனக்கு மச்சான் தான் பாத்துக்கோ“

“ப்ச்… ஆமா மொதல்ல நீ ஏன்டா இங்க வந்த. நீங்க சொல்லிட்டு வந்திருந்தா இவ்வளோ குழப்பம் இருந்திருக்காதுல“

“ போன்ல இங்க பிரச்சனைன்னு சொன்னதும் பசங்களைக்கூட விட்டுட்டு என்னமோ ஏதோன்னு வந்தேன் பாத்திய உனக்காக என் தப்புதான்டா “

“ டேய் நான் அப்படி மீன் பண்ணல “ என்று இருவரும் பேசிக்கொண்டே போவதை பார்த்த அதித்தி “ அடச்சி சண்டை போடாதீங்க . அண்ணா கம்முன்னு இரு “ என்று அதட்டி விட்டு மாறன் புறம் திரும்பி

“நீங்க சொல்லுங்க ..” என்று மாறன் முகம் காண , அவனோ “ என்ன சொல்லனும் “ என்று இவர்கள் பேசியதில் அனைத்தையும் மறந்து போய் விழிக்கவும் மயூரி மீண்டும் அவன் முதுகில் ஒன்று பட் என்று வைக்க “ அய்யோ அக்கா அடிக்காத “  என்று கத்தியபடி முதுகை தேய்த்தால்..

மாறன் அடிவாங்குவதை கண் குளிர பார்த்த படி விக்ரமன் சிரிப்புடன் நிற்பதை பார்த்த மாறன்

“ என்ன மட்டும் அடிக்காத க்கா எனக்கு ஹெல்ப் பண்ண விக்கியையும் கவனி “ என்று குழந்தை போல கை நீட்டி நிற்பவனை பார்த்து தலையில் அடித்தவள்.

விக்ரமன் காதை பிடித்து இழுத்து மாறன் அருகே நிறுத்த “  அக்கா பிஞ்சு காதுக்கா பிஞ்சிடும் விடுங்க க்கா …”

“கத்தாமா என்ன ஆச்சு மொழி யாரு, இந்த பொண்ணுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் தெளிவா சொன்னீங்கன்னா தப்பிச்சீங்க. இல்ல நானே போய் போலீஸைக் கூட்டி வந்து மைனர் மேரேஜ்னு அரஸ்ட் பண்ண வச்சிருவேன் “ என்று கண்களை உருட்டி மிரட்டியவளை பார்த்து இருவரும் ஒன்றுபோல

“சொல்லிறோம் அக்கா.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க “ என்று அவர்கள் பாவமாக முகத்தை வைத்து சொல்லியதில், மயூரிக்கு சிரிப்பு வர பார்க்க அதை அப்படியே விழுங்கி கொண்டு “ம்ம்ம் சொல்லுங்க “ என்று அதட்டவும் சொல்ல தொடங்கினர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிந்து மாறன் விக்ரமன் இருவரும் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகியிருந்தனர்.

மாறன் விக்ரமன் இருவரும் பிறந்ததில் இருந்து ஒன்றாக தான் வளர்ந்தனர். பன்னிரண்டாவது வரை ஒரே பள்ளியில் தான் பயின்றனர். கல்லூரியும் ஒன்றாக செல்லவே ஆசைப்பட்டனர்.  மாறனுக்கு விவசாய படிப்பில் சேர ஆசை விக்ரமனுக்கு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க ஆசை.

அவர்கள் ஆசைப்படியே மதுரையில் உள்ள கல்லூரியில் படிக்க சென்றனர். ஹாஸ்டலில் தங்கிதான் இருவரும் படித்தனர். இவர்கள் ஊரில் இருந்து அந்த கல்லூரியில் இவர்களுடன் பத்து பேர் சேர்ந்து படித்தனர்.

இருவருமே சாதியில் மிகவும் ஊறிப்போய் இருந்தனர் அவர்கள் தந்தை போல. இவர்கள் வளர்ந்த சூழல் அப்படி அதனாலேயே சாதி இவர்களின் அங்கமாக தான் இருந்தது.

அதையே ஊர் விட்டு சென்ற பிறகும் கடைப்பிடிக்க தனியாக இவர்கள் சாதி பிள்ளைகளை கொண்டு ஒரு குழுவையே உருவாக்கி வைத்திருந்தனர் அதில் இரண்டாம் மற்றும் கடைசி ஆண்டு மாணவர்களையும் சேர்த்து கொண்டனர்.

இப்படி கல்லூரி வாழ்க்கையும் நன்றாக சென்றது. அன்று இவர்கள் கல்லூரி கலை விழா அனைவரும் அவரவர் திறமையை மேடை வழியே வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அங்கு இவர்களின் குழுவும் தனியாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் அந்த குரல் காதில் இன்பமாக வந்து கேட்டது. அவளின் இசை

“ தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

உயிருக்கும் நேர்…உயிருக்கும் நேர்….”  என்று பாடல் சத்தம் கேட்டு யார் என்று திரும்பி பார்த்து

“யாருடா  அந்த அக்கா, நல்லாப் பாடுறாங்கல்ல? குரல் சூப்பரா இருக்கு “ என்று மாறன் கேட்டதற்கு அவனின் நண்பன்

“அவங்க தமிழிசை அக்காடா, சூப்பரா பாடுவாங்க கவிதையும் எழுதுவாங்க, பாட்டுனாலே அக்காவ தான் கூப்பிடுவாங்க. அக்கா இங்க செம ஃபேமஸ் “

“ஓ…. “ என்று அனைவரும் பாடலை ரசிக்க தொடங்கினர்.

தமிழிசை யாழினியின் அக்கா மூன்றாம் வருடம் பி.ஏ தமிழ் படித்து வருகிறாள். அந்த கல்லூரியில் இவளை தெரியாதவர் யாரும் இல்லை மிகவும் நன்றாக படிக்கவும் செய்வாள் பாடவும் செய்வாள்.

அன்று தான் முதன் முறை அவளை இவர்கள் பார்த்தது. அவர்கள் அனைவருக்கும் தமிழை “ இந்த அக்கா நல்லா பாடுறாங்க “ என்றளவு மட்டும் தெரியும்.

அதன் பின் ஒரு நாள் இவர்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக சினிமாவிற்கு காலேஜை கட் அடித்துவிட்டு சென்றிருந்தனர்.

அங்கு இவர்கள் சென்ற தியேட்டருக்கு தான் தமிழும் அவளின் நண்பர்களுடன் வந்திருந்தாள். அவளை அங்கு பார்த்தாலும் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளாமல் இவர்கள் பாட்டுக்கு படத்தை பார்த்து முடித்து வெளியே வந்தனர் .

அப்போது இவர்கள் குழுவில் பாலாஜி என்பவன் பஸ்ஸில் ரன்னிங்கில் தான் ஏறுவேன் என்று ஓடி ஏற முயலும் போது கை வழுக்கி கீழே விழுந்து விட தலையில் பலத்த அடி இவர்கள் அனைவரும் பயந்து போய் என்ன செய்ய என்று திகைத்து நிற்கும் நேரத்தில்

“ஏ… என்ன பாத்துட்டு இருக்கிங்க உங்க ஃபிரண்டு தான, புடிங்க “  என்று அதட்டவும் மாறன் பாலாஜி கையை பிடித்து தூக்க தமிழ் அவளிடம் இருந்த தண்ணீர் மற்றும் கர்ச்சிப்பை வைத்து ரத்தம் வராதபடி அழுத்தி பிடித்தவள்.

“என் முகத்தையே பார்க்காம போய் ஆட்டோ எதவது வருதான்னு பாருங்க “  என்று கத்தவும் அவள் அருகே இருந்த இன்னொரு பெண் “ தமிழ் வேண்டாம்டி யாரவது பாத்த நாமும் மாட்டுவோம் “

“மாட்டுனாலும் பரவாயில்லை நான் பாத்துக்குறன் உனக்கு பயமா இருந்த நீ கிளம்பு “ என்று அவளை அனுப்பி வைத்து விட்டு

ஆட்டோவில் மாறன் விக்ரமன் உடன் அவனை கூட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்த்து முடித்து,  அதற்கு பணமும் கொடுக்க அதை பார்த்த விக்ரமன் “இல்ல…, நாங்களே பாத்துக்குறோம் க்கா உங்களுக்கு ஏன் “

“ஓ… நீயே பாத்துப்பியா, எப்படி உங்களை விட்டு ஓடி போனவனுங்க கிட்ட கேக்க போறியா என்ன “ என்று அவனை முறைத்த படி பணத்தை கட்டியவள் இவர்களை பார்த்து

“ கடனா தான் தரேன் திருப்பி தந்துறனும் சரியா “ என்று சொன்னதும் மூவரும் வேகமாக தலையசைக்க,  மூவரையும் மேலும் கீழும் பார்த்தவள் “ மூணு பேரும் என்ன டிப்பார்ட்மென்ட் “

“ நான் மாறன் பி.எஸ்.சி. அக்ரி பஸ்ட் இயர் “

“நான் விக்ரமன் பி.பி.ஏ பஸ்ட் இயர் “

“நான் பாலாஜி பீ.காம் பஸ்ட் இயர் “ என்று மூவரும் அவர்களை அறிமுகம் படுத்திக்கொள்ள அவர்களை பார்த்த தமிழ் “ மூணு பேரும் மூணு டிபார்ட்மென்ட் எப்படி ஃபிரண்டு ஆனீங்க “ என்று ஆச்சரியமாக பார்க்க

“நாங்கலாம் ஒரே ஊரு க்கா “ என்று மாறன் சொன்னான்.

“ஓ… அதான் ஒரே மாதிரி ஃபுட் போட் அடிச்சிங்களா “ என்று தமிழ் முறைக்கவும் மூவரின் தலையும் தரையை பார்க்க

“அங்க என்னத்த தேடுறிங்க. இங்க என்ன பாருங்க இன்னொரு தடவ இப்படி கட் அடிச்சிட்டு பஸ்ல ஃபுட் போட்னு பாத்தேன் பிச்சுருவன் “ என்று மிரட்டி விட்டு கிளம்பியவளை

“அக்கா ஒரு நிமிஷம் “ என்று நிறுத்திய மாறன்

“ உங்க வீடு எங்க க்கா “ என்ற கேள்வியில் ஒற்றை புருவம் உயர்த்திய தமிழ் “ அத தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற “

“நான் ஒன்னும் பண்ண மாட்டன் க்கா ஈவினிங் லேட் ஆகிருச்சி அதான் தூரம்னா உதவலாம்னு “

அதை கேட்டு லேசாக சிரித்தவள் “ இங்க இருந்து கொஞ்சம் தூரம் தான் பரவாயில்லை நான் பாத்துக்குறன் நீங்க போங்க “

என்று அவள் சொல்லியும் இவர்கள் தயங்கி இவளையே பார்த்தபடி நிற்கவும் “என்ன இப்போ உங்களுக்கு “

“இல்ல பஸ்லயாவது ஏத்தி விட்டுட்டு போறோம் க்கா “  என்ற விக்ரமனை பார்த்தவள் “ சரி வாங்க “ என்று சொல்லி முன்னே செல்ல இவர்கள் பின் சென்று அவளை பஸ் ஏற்றிவிட்டே சென்றனர்.

அன்றிலிருந்த கல்லூரியில் தமிழை பார்க்கும் போதெல்லாம் மாறன் மற்றும் விக்ரமன் பேசிவிட்டு தான் வருவார்கள்.

தமிழும் இவர்கள் இருவரையும் தம்பியாக நினைத்தே பழகி வந்தாள். நாள் செல்ல செல்ல தான் தமிழுக்கு இவர்களின் சாதி பற்று தெரிய வந்தது.

அது தெரிந்த பின் இருவருக்கும் இது தவறு இப்படி இருக்க கூடாது என்று பல முறை எடுத்து சொல்லியும் இருவராலும் முழுதாக அதிலிருந்து வெளிவர முடியவில்லை.

இப்படியே முதல் ஆண்டும் நிறைவுக்கு வர தமிழ் கல்லூரி படிப்பை முடித்து சென்றுவிட்டாள் .

கல்லூரியை முடித்து சென்றாலும் மாறன் மற்றும் விக்ரமனுடன் போன் மூலம் தொடர்பில் தான் இருந்தாள் . இப்படியே இவர்களின் படிப்பின் கடைசி  ஆண்டு படிப்பின் முதல் மாதம் தமிழிடம் இருந்து கால் வர அவள் அழைத்த இடத்திற்கு சென்றனர்.

அது ஒரு பதிவு அலுவலகம் அங்கு ஒரு பையனுடன் பதட்டத்தில் நின்று கொண்டிருந்தாள். மாறன் மற்றும் விக்ரமன் அங்கு வந்ததை பார்த்து மகிழ்ந்த தமிழ் “ தாங்கஸ்டா வந்ததுக்கு நீங்களும் வர மாட்டிங்களோன்னு நினைச்சேன் “  என்று பெருமூச்சி விட

“என்னக்கா இது இங்க ஏன் எங்களை வரச்சொன்ன “ என்ற மாறனைப் பார்த்து சிரித்த தமிழ் “  இப்போ எனக்கும்  இங்க கல்யாணம் அதுக்குத்தான் உங்களை வரச்சொன்ன “ என்று சிரித்தவளை அதிர்ந்து தான் இருவரும் பார்த்தனர்.