காலை உணவு உண்டு முடித்து அனைவரும் கூடத்தில் அமர்ந்தவாறு மாறன் மற்றும் விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மொழி இருவர் மடியிலும் அமர்ந்தபடி கதை பேசும் அழகையும் அதற்கு இருவரும் பதில் சொல்லும் அழகையும் ஆ… என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது மீனாட்சி “ டேய் விக்கி, அதான் சாப்பிட்டு முடிச்சிட்டல்ல போய் குளிச்சிட்டு வந்து அந்த கைலிய மாத்திட்டு வாடா… உன்ன பாக்க முடியல “
“போங்க பெரியம்மா, எந்நேரம் எங்க வீட்டுக்கு நியூஸ் போயிருக்கும். இப்போ மட்டும் நான் அங்க போனான் ராஜன், என்ன பேத்து எடுத்துருவார் “
“அடேய் விக்கி, உங்க அப்பனை பேர் சொல்லி சொல்லாதன்னு எத்தனை தடவைடா சொல்ல “
“ அது சின்ன வயசுல இருந்து பழகிருச்சு பெரியம்மா “ என்று இளித்து வைத்தான்.
“ சரி வீட்டுக்கு போகலனாலும் பரவாயில்லை போய் குளிச்சிட்டு மாறன் துணியைப் போட்டு வா நாத்தம் தாங்கலடா “ அதை கேட்டு விக்ரமன் அவன் மீது மோர்ந்து பார்த்தபடி
“ ஆமா லைட்டா ஸ்மெல் வர ஆரம்பிச்சிருச்சு “ என்று எழுந்து சென்றவனை பார்த்து தலையில் அடித்த மீனாட்சி
“ இவன் ஒருத்தன் தினுஸு, தினுஸா எல்லாம் பண்ணுவான் “ என்று அவரும் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
விக்ரமன் சென்றபின் கால் ஒன்று வர, மாறன் அதில் பேச பிஸியாகி விட்டான். மொழிக்கு என்ன செய்வதென்று புரியாமல் சுற்றி அனைவரும் பார்த்தபடி இருந்தான்.
ஆர்யன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருக்க வெள்ளையம்மா பாய் போட்டு தூங்கி கொண்டிருந்தார். அவர் அருகே கால்நீட்டி அமர்ந்தபடி மயூரி டாபில் ஏதோ செய்துகொண்டு இருக்க மொழியின் கண் அவளிடமே பதிந்து போனது.
முதலில் அவனை கவனிக்காத மயூரி பின் கவனித்து அவனை அழைக்கவும் மொழி திரும்பி மாறனை பார்க்க மாறன் ஒன்றும் புரியாமல் “ என்ன மொழி ஏதாவது வேணுமா “ என்று கேட்டு வைக்க மொழி
“ நான் அவுங்க கிட்ட போகட்டுமா “ என்று மயூரி பக்கம் கைநீட்டி கேட்கவும் , மாறன் சிரித்த முகமாக அவன் காதில் எதோ சொல்லி அனுப்பினான். அதை பார்த்த மயூரி, மொழி அவள் அருகே வந்து அமர்ந்ததும்
“ என்னடா சொல்லி அனுப்புனாரு, உங்க அப்பா “ என்று அவன் தோளில் கைபோட்டு கேட்கவும் மொழி
“அதுவா ….அப்பா அவுங்க தான் உன் அத்தை. அவுங்கள நீ… பத்தரமா பாத்துக்கணும், அவுங்க கிட்ட சேட்டை பண்ண கூடாது, சமத்தா இருக்கணும்னு சொன்னாங்க …..அத்தை “ என்று அரிசி பற்கள் தெரிய சிரிக்கவும் அதை கேட்டு மயூரியும் மகிழ்ந்த முகமாக அவள் அருகே இருந்த பையை திறந்து டேரிமில்க் சாக்லேட் ஒன்றை எடுத்து நீட்டினாள்
“ஐ… சாக்கி…தேங்க்ஸ்….அத்தை “ என்று வாங்கி அதை வாயில் வைத்து கடிக்க போக
“நில்லு, நானே திறந்து தரேன்டா “ என்று அதை வாங்கி கவர் கிழியாமல் திறந்து அவனிடம் தரவும் , அதை வாங்கி சாப்பிட்ட படி மொழி
“அத்தை , அந்த கவரை வச்சு என்ன பண்ணப் போறீங்க “ என்று சாக்லேட்டை உண்டபடி மொழி கேட்க
“ நான் என்ன பன்றன்னு பாரு… தெரியும் “ என்று சொல்லியவள், அதை சிறு சிறு மடிப்பாக மடித்து பட்டாம்பூச்சி செய்து அதை
“இந்த இது உனக்குத்தான் “ என்று மொழியிடம் தர அதை பார்த்து
“ஐ… பட்டாம்பூச்சி… சூப்பர் அத்தை… எப்படி அத்தை செஞ்சீங்க, சூப்பரா இருக்கு. எனக்கும் செய்ய சொல்லித்தாங்க… அத்தை “ என்று அவள் கையை பிடித்து கெஞ்சவும், சிரிப்போடு தலையசைத்த மயூரி ஒரு சாக்லேட்டை எடுத்து அவள் சாப்பிட்டு விட்டு பின் இன்னொரு சாக்லேட்டை அருகில் கோடிங் செக் செய்து கொண்டிருந்த ஆர்யன் வாயில் திணிக்க அவன்
“என்னடா…இது “ என்று வாய் சொன்னாலும் அதை மறுக்காமல் சாப்பிட்டான். பின் மயூரி செய்ய செய்ய மொழியும் அவளை போலவே செய்தான்.
இருவரும் ஒன்று போல பட்டாம்பூச்சியை செய்து முடிக்க மொழி “ எப்படி இருக்கு அத்தை “ என்று அவன் செய்ததை காட்ட , அதை வாங்கியவள்
“அழகா பண்ணிருக்கீங்கடா தங்கம் “ என்று கன்னம் கிள்ளி கொஞ்சவும், லேசாக வெட்க பட்ட படி மொழி
“இது உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தா அத்தை “
“அதுவா எங்க அம்மா தான் சொல்லி தந்தாங்க, நான் என் தம்பிக்கு கத்து தரணும்னு ஆசையா கத்துக்கிட்டேன். ஆனா அது தான் முடியாம போயிடுச்சு “ என்று மொழியின் தலை கோத மொழி
“ஏன் சொல்லி தற முடியல அத்தை “
“ம்ம்ம்…ஏன்னா நானு தொலஞ்சி போயிட்டேன், என் தம்பி வரதுக்கு முன்னாடி. அதான் சொல்லி தர முடியல “
“தொலஞ்சி போய்டிங்கலா”
“ஆமா அம்மா அப்பா பேச்சு கேக்காம அடம்பிடிச்சி திருவிழாவிக்கு போனேன். அங்க வழி தெரியாம தூரமா போயிட்டேன் . திரும்பி வரதுக்குள்ள என் தம்பி பெரியவனா ஆகிட்டான். இப்ப எப்படி அவனுக்கு நான் சொல்லி தறது “ என்று அவள் பாட்டுக்கு ஏதோ நினைவில் பேசிக்கொண்டு இருந்தவளை வாடிய முகத்துடன் மாறன் பார்த்துக்கொண்டிருந்தான்.
மயூரி அம்மா கற்றுத் தந்தது என்று சொல்லும் போதே என்னவென்று பார்க்க தொடங்கியவன். அவள் மேலும் பேச பேச தொண்டை அடைக்க அங்கேயே அமர்ந்துவிட்டான்.
சிறு வயதில் இருந்து அவன் அம்மா இவனை நன்றாக பார்த்துக்கொண்டாலும் அவர் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்காதவன்.
எப்போதும் ஏதாவது வேண்டுதலை செய்துகொண்டிருப்பார். அவரை அவரே வருத்திக்கொண்டு இருந்த நாட்கள் அதிகம். முதலில் ஏன் எதற்கு என்று புரியவில்லை என்றாலும் காலம் செல்ல செல்ல காரணம் தெரிந்தது.
அவன் அக்கா மயிலிசை காணாமல் போனதில் இருந்து தான் இவர் இப்படி ஆகிவிட்டார் என்று தெரிந்த நாளிலிருந்து இவரை சந்தோஷமாக வைக்க முயலாத நாள் இல்லை இருந்தும் பலன் பூஜ்ஜியம் தான்.
அதனாலேயே அக்கா தொலைந்து போனதற்காக அக்காவை திட்டியும் இருக்கிறான். நேரில் மயூரி வந்து உன் அக்கா நான் என்று சொல்லும் போதும் அவளிடம் பேச தடுத்ததும் இதுவே.
இப்படி இவன் இருக்க மயூரியோ இத்தனை வருடமும் என்றாவது தனது குடும்பத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இப்படி அனைத்தையும் நினைவு வைத்திருப்பதை கண்டு கலங்கி தான் போனான்.
அப்போது அவனுக்கு தோன்றியது இதுவே “ எப்படியாவது அக்காவை இந்த ஊர் முன்னாடி நிற்க வைத்து , எங்க அக்கா இவங்கன்னு காட்ட வேண்டும் . அக்காவை அம்மாவுடன் சந்தோஷமாக இருக்க வைக்க வேண்டும். “ என்று உறுதி எடுத்தபடி அப்படியே அமர்ந்திருக்க அப்போது வெளியில் இருந்து
“ டேய் விக்ரமா…. வெளிய வால ….என்ன காரியம்ல பண்ணிட்டு வந்திருக்க வெளிய வால….விக்ரமா.. “ என்று சத்தம் கேட்க மாறன் என்னவென்று பார்க்க எழுந்து சென்றான்.
அவன் பின்னாலேயே அனைவரும் சென்றனர். விக்ரமன் அப்போது தான் குளித்து வெளியே வந்தான். வெளியே வந்தவன் அவன் அப்பா சத்தம் கேட்டு
“ அய்யோ ராஜன் வந்துட்டாரு…தப்பிச்சிருடா விக்கி “ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டவன் பின் புறத்தில் இருந்த கிணற்றின் பின்னே மறைந்து கொண்டான்.
வெளியே சென்ற மாறன் “ ஏன் ப்பா வெளியவே நிக்கிறிங்க உள்ள வாங்க “ என்று அவரை அழைக்க, ராஜன் முகத்தை திருப்பியபடி
“ என்ன அப்படி கூப்பிடாதிங்க தம்பி, அப்பா அப்பான்னு கூப்பிட்டு இம்புட்டு விஷயத்தை மறச்சிட்டீங்களே “
“அப்பா… அது அப்படி இல்ல ப்பா…” என்று மாறன் தலை குனியவும் தொண்டையை சிருமிய ராஜன்
“ நான் நடந்து முடிஞ்சத பத்தி பேச வரல, எங்க அவன் அவன வர சொல்லு, இன்னைக்கு அவன் காலை உடைச்சி அதை சூப் வச்சி குடிக்காம விட மாட்டேன் “ என்று கத்த அந்த சத்தம் கேட்ட விக்ரமன் அவன் கால்களை இறுக பிடித்துக்கொண்டு
“பயப்படாதிங்க செல்லம், நான் உங்கள கைவிட மாட்டேன். அந்த ராஜன் கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்திருவேன் உங்கள “ என்று அவன் நடுங்கும் கால்களை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான்.
வெளியில் மாறன் “ அது வந்து ப்பா அவன் சந்தைக்குப் போயிருக்கான். எங்க பையனுக்கு பொம்மை வாங்க “ என்று சொன்னது தான் தாமதம் உடனே அவர் வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு
“ அவன் அங்கயா இருக்கான் இதோ வரேன்டா “ என்று சென்றுவிட்டார். இதை பார்த்திருந்த ஆர்யன் மாறன் தோளில் கை வைக்க உடனே அவன் என்ன என்பது போல திரும்பி பார்க்கவும்
“ம்ம்ம் போலாம் , நான் கூட உங்க கிட்ட பேசணும் தான் இருந்தேன் “ என்று இருவரும் பின்னே சென்றனர்.
பின்னே கிணற்று அருகே வந்த ஆர்யன் “ என்ன பிரச்சனையில மாட்டியிருக்கீங்க மாறன், எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு மெல்லிய புன்னகையை உதிர்த்த மாறன்
“ இப்போ சொல்ல முடிஞ்சிருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பேன். ஆனா இப்போ முடியாது மாமா “
அதை கேட்டு காற்றை இழுத்து ஊதிய ஆர்யன் “ சரி விடுங்க மாறன் எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லுங்க. எதவது ஹெல்ப்னா தயங்காம கேளுங்க நான் பண்றேன்” என்று ஆர்யன் சொன்னதை கேட்டு கண்கள் பிரகாசிக்க மாறன்
“ மாமா மாட்டிக்கிட்டாங்க “ என்று எண்ணியவன் கேட்ட உதவியில் உண்மையில் ஆர்யன் மாட்டிக்கொண்டது போல தான் முழித்தான். அதே நேரம் கிணற்றின் பின்னே இருந்து எழுந்த விக்ரமன்
“ இதுக்கு ஒத்துக்காதீங்க மாமா….” என்று கத்தியபடி எழுந்து நின்றான். அவன் கேட்ட உதவி அப்படி.
அடுத்தநாள் காலை யாழினி பெட்டியுடன் இவர்கள் வீட்டு முன்னே நின்று கொண்டிருந்தவள், தயங்கியபடி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை தட்டினாள்.
அப்போது எழுந்து வந்த வள்ளி “ யாரு வேணும் உங்களுக்கு “ என்று ஏதோ யோசித்தபடி அவர் கேட்கவும் , யாழினி
“அது வந்து அண்ணா… “ என்று திணறியபடி நிற்க வள்ளியின் பின்னால் இருந்து “ யாழிம்மா! நீ இங்க என்ன பண்ற “ என்று சத்தம் கேட்டு திரும்ப ஆர்யன் நின்று கொண்டிருந்தான்.
“மாப்பிள்ளை இவங்கள உங்களுக்கு தெரியுமா “ என்று யோசனையுடன் பார்க்க, ஆர்யன் அவர் பார்வையை தவிர்த்த படி
“என் தங்கச்சி யாழினி அத்தை. இங்க வர்றேன்னு சொல்லாம வந்து நிக்குறா “ என்று இறங்கி சென்று அவள் பெட்டியை வாங்கி கொண்டு உள்ளே அழைத்து சென்றான்.
வள்ளியும் நெற்றி சுருங்க யோசித்தபடி உள்ளே சென்றார்.
யாழினியை அங்கே பார்த்த மாறன் “ யாரு மாமா இவங்க “ என்று முகத்தை சீரியஸாக வைத்தபடி பேசவும் , அருகில் இருந்த விக்ரமன்
“ பல்ல பல்ல காட்டுறவன கூட நம்புங்க மக்களே இப்படி சீரியஸா மூஞ்ச வச்சிருக்கவன மட்டும் நம்பிடவே நம்பிடாதீங்க “ என்று மெதுவான குரலில் பேச அதை கண்டுகொள்ளாத மாறன் நிற்க, ஆர்யன்
“என் தங்கச்சி மாறன் பேரு யாழினி “
“ஓ…. சரி மாமா “ என்று புதிதாக கேட்பது போல இவன் சொல்ல விக்ரமன் மீண்டும் “ யாழ் னு சொல்லிருந்த நல்லா தெரிஞ்சிருக்கும் “ என்று மாறன் காதை கடிக்க , மாறன் அவன் காலிலே நன்றாக மிதித்துவிட்டான்.
“ஆ…… எருமை எருமை, ஏன்டா காலை மிதிச்ச “ என்று அவனை திட்ட,
“ஓ… அது காலா நான் எதோ கட்டைன்னுல நினைச்சேன்“ என்று சிரித்துக்கொண்டான்.
அதில் கடுப்பாகி விக்ரமன் மாறன் கழுத்தை பிடிக்க வர அதே நேரம் வீட்டின் முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது “இப்போ யாரு “ என்று எட்டி பார்க்க வெளியே இருந்து கிருபா
“நண்பா….” என்று உள்ளே வந்து ஆர்யனை அணைத்துக்கொள்ள ஆர்யன் முகம் வெளிறிப்போனது.
உள்ளே வந்த கிருபாவை அனைவரும் புரியாமல் பார்க்க கிருபா “ஹலோ எவ்ரிஒன், நான் கிருபா ஆர்யன் ஓட நண்பன் மற்றும் அவன் தங்கத்தோட ஹஸ்பண்ட் இல்ல தங்கச்சி…யோட ஹஸ்பண்ட்” என்று சிரிக்கவும்.
இப்போது அனைவரது பார்வையும் யாழினி புறம் திரும்பியது. “ இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா“ என்று அதிர்ந்து பார்க்க.
அப்போது உள்ளே நுழைந்த அதித்தி, ஆர்யனின் தங்கை “ என்ன விட்டு வர்றதுலயே இருங்க கிருபா “ என்று பேசியவள் ஆர்யனை பார்த்துவிட்டு
“ அண்ணா ,அண்ணி எப்படி இருக்கீங்க“ என்று சிரித்த முகமாக வந்து நின்றாள்.