நெஞ்சம் 11

யாழினியிடம் போன் பேசி முடித்த மாறன் யோசனையாக முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமன் அருகே சென்றான் .

“அப்புறம் மாறா… என்ன சொல்றாங்க என் யாழினி டார்லிங் “  என்று விக்ரமன் நக்கலாக மாறனிடம் கேட்க,  அவன் உடனே கோபமாக

“அவள அப்படி கூப்பிடாதன்னு எத்தன வாட்டி சொல்றது எருமை. யாழினி ன்னு மட்டும் கூப்பிடு”

“தாங்கள் மட்டும் யாழ் என்று கூப்பிடும் போது நாங்கள் டார்லிங் போட்டு கூப்பிட கூடாதா “ என்று கைகளை விரித்து நின்றான்.

“டேய் விக்கி…” என்று மாறன் பல்லை கடிக்கவும்

“சரி…. டென்ஷன் ஆகாத… பேசல, ஓகேவா “ என்று விக்ரமன் சொன்ன பிறகும் மாறன் யோசனையாகவே இருக்க விக்ரமன்

“என்ன ஆச்சிடா, ரொம்ப தின்க் பன்ற “

“அது நாளைக்கு நாம மொழிய பாக்க வறோம் ன்னு சொன்னோம்லடா,  அத தான் யோசிக்கிறேன் எப்படி போறதுன்னு “

“எப்படினா…. எப்பவும் போல தான்டா, பிளைட்ல போலாம் “

“டேய் பக்கி விக்கி, நான் அதை சொல்லல டா, இந்த சிச்சுவேஷன்ல எப்படிடா போறது ன்னு யோசிக்கிறேன்“

“அக்காவை விட்டு எப்படி போறதுன்னு யோசிக்கிறியா “

“ஆமாடா நான் வேற மாமா கிட்ட நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டன் அதான் இப்போ எப்படி மொழிய பாக்க போறதுன்னு யோசிக்கிறன் “

“ரொம்ப யோசிக்காத மாறா இப்போதைக்கு நான் மட்டும் போய்டு வரேன் பத்து நாள் கழிச்சி நீ போறத முடிவு பண்ணிக்கலாம் “

“ம்ம்ம்..டா “ என்று இங்கு இப்படி சென்று கொண்டிருந்த அதே நேரம் அங்கு பெரியவீட்டில் தங்கப்பாண்டி தரகரை வர வைத்திருந்தார்.

அவரை பார்த்த வீரபாண்டி “ என்ன அண்ணா இது “  என்று யோசனையாக கேட்க,  தங்கப்பாண்டி அவரை தனியே அழைத்து சென்று

“நம்ம மாறனுக்கு தான் பொண்ணு பார்க்கச் சொல்லிருந்தன்டா, அதுல ஒரு பொண்ணு ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்திருக்குன்னு சொன்னாங்க அதான் முடிச்சிடலாம்னு பார்க்கிறேன் “

“இப்போவேவா…, மாறன் ஒரு வருஷம் போகட்டும்னு சொன்னானே…ண்ணா “

“அவன் பேச்ச கேட்டா வேற எதவது பொண்ண கூட்டி வந்துருவான் வீரா. அவன் போற போக்கே சரியில்ல, இன்னைக்கு அவன் பேசுனத பார்த்தாயா கலப்பு திருமணம் தப்பே இல்லை  மாதிரி சொல்றான். இது சரியில்ல வீரா … அதான் இந்த பொண்ணையே முடிச்சிடலாம்னு பாக்குறன் “

“பொண்ணு யாரு..ண்ணா “

“ பொண்ணு கொம்பிலி கொட்ட வீரமணி பொண்ணு. அதான் அந்த பொரிய தூணிகடை வச்சிருக்கவரு. பொண்ணு நல்லா படிச்ச பொண்ணு நம்ம மாறனுக்கு ஜோடி நல்லா இருக்கும் “

“மாறன் கிட்ட சொல்லிடிங்களா..ண்ணா “

“இதோ இந்த போன்ல  ஃபோட்டோவ அனுப்பி வச்சிருக்கேன் வீரா “ என்று அவர் சொல்லி முடிக்கும் முன் மாறனிடம் இருந்து அழைப்பு வர

“வீரா பாத்துட்டான் போல அவனே கால் பண்றான் பாரு “ என்று மகிழ்ச்சியாக போனை எடுத்து காதில் வைத்தார்.

அங்கே திடீரென்று வந்த வாட்சப் நோட்டிபிகேஷன் சத்தத்தில் போனை எடுத்து பார்க்க எதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார் அவன் பெரியப்பா.

அந்த புகைப்படத்தை பார்த்தபடி “ யாரு இந்த பொண்ணு “ என்று முனங்கிய படி பார்க்க , உடனே விக்ரமன் “என்ன பொண்ணுடா “ என்று போனை எட்டி பார்த்தான்.

அதில் ஒரு பெண் புடவை கட்டி பூ வைத்து சிரித்த முகமாக ஃபோட்டோவில் இருக்கவும் , விக்ரமன் வாய் விட்டு சிரித்த படி

“ வாலு போயி கத்தி வந்துச்சி டும் டும் டும் டும்…”  என்று போனைப் பிடுங்கியவன் உள்ளே ஓட “ டேய் பக்கி… போனை தா..டா…” என்று மாறன் துரத்த விக்ரமன் மேலும் பாடினான்

“கத்தி போய் விறகு வந்தது டும் டும் டும் டும்….” என்று ஓடியவன் முன்னே வந்த மீனாட்சியை பார்க்காமல் அவர் மீது மோதி, இவன் கீழே விழுந்து விட்டான், உடனே மீனாட்சி

“அச்சோ…ஆத்தா… எருமை கணக்கா வந்து மோதுரியேடா படுபாவி, கொஞ்சம் விட்டுருந்தா நான் விழுந்திருப்பேன்“ என்று மீனாட்சி அவனை அடிக்க

“ மோதியது நான்தான் பெரியம்மா ஆனா விழுந்ததும் நான்தான அப்படி இருக்க அடியும் எனக்கே தரிங்க“ என்று இடுப்பை தேய்த்தபடி இவன் எழுந்து நிற்க,  மஞ்சு

“இப்போ வீட்டுக்குள்ள எதுக்கு கழுதை மாதிரி கத்திட்டு விளையாடிட்டு இருக்க “ என்று அவனை முறைக்க, உடனே விக்ரமன்

“நான் எவ்வளோ அழகா உன் அண்ணாவோட நிலைமையை ரசிச்சி பாடிட்டு வந்தா கத்துறன்னு கிண்டல் செய்ற உன்ன …” என்று அவளை அடிப்பது போல போகவும் அந்த நேரம் பார்த்து மாறன் அவன் கையில் இருந்த போனை பிடுங்கி கொண்டான்.

உடனே விக்ரமன் சத்தமாக அனைவரும் கேட்டும் விதமாக “ டேய் மாறா பொண்ணு போட்டோவை எல்லாருக்கு  காமிடா “ என்று போட்டு கொடுத்து விட்டான்.

அதில் அவனை முறைத்த மாறன் “ விக்கி…..” என்று அவனை பிடிக்க போக அதற்குள் அவனை அங்கிருந்த அனைவரும் பிடித்து போட்டோவையும் வாங்கி பார்த்து சூப்பர் என்றும் சொல்லிவிட்டனர், மாறனுக்கு முள் மேல் நிற்கும் உணர்வு தான்.

இங்கு யாழினி மாலை மாறன் அனுப்பியிருந்த மெசேஜை சோகமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகத்தை பார்த்துவிட்டு அவள் அருகே அமர்ந்த அமுதா

“என்ன ஆச்சு யாழி..” என்று அவள் தலை வருடவும் அதில் உணர்வு வந்தவள் அருகில் அமுதா அமர்ந்திருப்பதை ஒன்றும் புரியாமல் பார்த்து பின் சுதாரித்து

“அது ஒன்னும்மில்லம்மா கடையில கொஞ்சம் வேலை அதிகம் அதான் டயட் “ என்று ஒருவழியாய் சமாளிக்க,  அவன் சமாளிப்பைக் கண்டுகொண்ட அமுதா

“டயட்னா ஒரு ரெண்டு நாள் வீட்டுல லீவ் எடுத்துட்டு ரெஸ்ட் எடு…ம்மா நாளைக்கு அவனுங்க இரண்டு பேரும் வேற வந்திருவாங்கள “  என்று கொக்கி போட, அவள்

“இல்லம்மா விக்ரமன் மட்டும் தான் வராங்களாம், அவங்களுக்கு எதோ வேலை இருக்காம் “ என்று முகம் மீண்டும் வாடிவிட,  அமுதா

“ஓ…இதுக்குதான் சோக கீதம் வாசிச்சிட்டு இருந்தியா யாழி “ என்று அமுதா சிரிக்கவும் யாழினிக்கு முகம் செவ்வணம் போல சிவந்துவிட அதை மறைக்கும் விதமாக

“ நைட் சாப்பாடு செய்ற டைம் ஆயிடுச்சி, நான் போறேன் ம்மா “ என்று எழுந்து ஓடிவிட்டாள்.

அன்றிரவு யாழினிக்கு தூக்கமே வரவில்லை ஏனோ மனது முழுவதும் மாறன் தான் நிறைந்து இருந்தான். அருகில் படுத்திருந்த மொழியை பார்த்த படி அவன் தலைமுடியை ஒதுக்கி வைத்தவள்

“ மாறன்….” என்று அவன் பெயரை முணுமுணுத்துக் கொண்டாள்.  கண்கள் முன்னே அவன் தான் வந்து நின்றான் கண்கள் மட்டும் சிரிக்க, ஒற்றை புருவம் உயர்த்தி மீசையை நீவி விட்டு கொண்டே “யாழ்….”

என்று அழைப்பது போல பிரம்மை வர கைகள் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். “தலைக்கு குளிச்சிட்டு பின்னாத யாழ், முடிய ஃப்ரியா விடு உனக்கு அழகா இருக்கும் “ என்று மாறன் குரல் கேட்க, அவள் பால் முகம் சிவந்து செவ்வணம் போல் காட்சியளித்தது.

இப்படி இங்கு யாழினி மாறனின் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இவளுக்கு மட்டும் மாறனின் திருமணம் விஷயம் தெரியவந்தால் என்ன ஆகுமோ.

மறுநாள் காலை எழுந்து அனைத்து வேலையையும் முடித்துவிட்டு கடைக்கு செல்ல போக வெளியே வந்து கொண்டு இருந்தாள் யாழினி.

“மொழி பாட்டியை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும், உன் அப்பா வந்ததும் சமத்தா இருக்கணும், வெளிய போனா அப்பா விட்டு எங்கயும் போக கூடாது சரியா “ என்று டிவி பார்த்துக்கொண்டிருந்த மொழியிடம் சொல்ல மொழி

“டொன்டு வரி மம்மி நான் இரண்டு பேறயும இன்னைக்கு முழுக்க நல்லா பாத்துக்கறன்” என்று டிவியில் கண்களை பத்தித்தபடி சொல்பவனின் தலையை கலைத்து விட்டபடி ,  அமுதா பக்கம் திரும்பி

“அம்மா பாத்து இருங்க எதவதுன்னா கால் பண்ணுங்க டைமுக்கு சாப்பிடுங்க “ என்று பேசிக்கொண்டு இருந்த அதே நேரம் மொழி

“அப்பா……” என்று சோபாவில் இருந்து குதித்து இறங்கி சென்றான். அவன் சத்தத்தில் யாழினி மற்றும் அமுதா திரும்பி பார்க்க மாறன் தான் நின்று கொண்டிருந்தான்.

கண்கள் சிவந்து முகம் இறுகி போய் நின்றவன் யாழினி பக்கமே திரும்பாமல் மொழியின் தலையை வருடிய படி “ நான் மொழிய என் கூட கூட்டி போறன் எங்க ஊருக்கு “ என்று சொன்னதை கேட்டு யாழினி உடைந்தே போனாள்.

மொழினா, மொழிய மட்டுமா அப்போ நான், நான் வேண்டாமா என்று கலங்கி போய் யாழினி பார்த்தாள்.