Advertisement

                                 
                                         
          
                                   அத்தியாயம்–8
     அபர்ணா  தயங்கித்  தயங்கி  அலுவலகத்தினுள்  நுழைந்தாள்.  அவள்  வருவதை உணர்ந்தாலும்..   அவளை  கண்டுகொள்ளாமல்  தனது  வேலையில்  கவனமானான்  சிவமுகிலன்.   இவளுடைய  சீட்டில்  தான்  அமர்ந்து  வேலைசெய்து  கொண்டிருந்தான்.  அதைப்பார்த்தவளுக்கு  பயம் இன்னும்  சற்று  அதிகமானது.  
       அவன்  அருகினில்  வந்து..  மெதுவாக  ‘குட் மார்னிங்  சார்…” என்றாள்.  அவனிடம்  பதிலில்லாமல்  போகவே..  தவிப்போடு    ஐந்து  நிமிடத்தை   கடந்து..  ‘சார்  நான்  பண்…றேன்..”  என்றாள். 
    யாரது  என்பது  போல  அவளைப்  பார்த்து.. ‘ஓ..  வந்துட்டியா..?  ஒரு  விஷ்கூட  பண்ணாம.. நான்  வேலை  சரியா செய்யறேனான்னு  பார்த்திட்டிருந்தியா..?” கடுப்பாக..
    ‘சார்.. நா..ன்… விஷ்… பண்ணினேன்.” என கண்கலங்கினாள்.   
    ‘நான்  போன் செய்தப்ப  அட்டன்  பண்ணாம  என்ன பண்ணிட்டு  இருந்த..? அதுக்கு   முதல்ல பதில சொல்லு..” என கத்த..
      தூங்கினேன்னு   சொன்னா  அவ்ளோதான்  நான்..  என்று  நினைத்து.. 
      ‘சாரிங்க  சார்..” என்றாள்.
     ‘எனக்கு  சாரி  வேண்டாம்..   நான்  ஆறுமுறை  போன்  செய்தேன்.  ஏன்    அட்டன்  பண்ணலை…?  எனக்கு  இப்பவே  பதில்  வேணும்..” என  மிரட்ட
     ‘அது…  வந்து…  நான்.. தெரியாம…. தூங்கிட்டேன்.”  என்று  தலைகுனிந்த  நிலையிலேயே  சொன்னாள்.
      ‘வாட்…?”   என்று  சட்டென்று  இருக்கையை விட்டு  எழுந்த  வேகத்தில்..    ஒரு அடி   பின்னால்   தள்ளி  நின்றாள்  பயத்தில்.
      ‘ம்ம்…  மகாராணி   நல்லா  தூங்கினதுமில்லாம..  இங்க  வந்து   பயந்தமாதிரி  அழவேற  செய்றியா..?   இப்ப  மணி ஒன்பதரை  ஆகுது.  இன்னும்  ஒரு  அரைமணி  நேரத்தில.. பெண்டிங்  வேலையெல்லாத்தையும்  செய்து  முடிச்சிடுவியா..?” என்றான்.
      ‘சார்  நான் இன்னைக்கு  எவ்ளோ  நேரம் ஆனாலும்  முடிச்சிட்டே  போறேன் சார்.  இனிமேல் இதுமாதிரி  நடக்காம  பார்த்துக்கிறேன்.” என்றாள் வரவழைத்த  தைரியத்தோடு..
       ‘ஏய்  லூசு…  நான்  இந்த  டாக்குமென்செல்லாம்   இப்ப பத்து  மணிக்குள்ள  அனுப்பனும்.  உனக்கு  புரியுதா..?  இல்லையா…?   அர்ஜென்ட்  இல்லன்னா..    நான்  எதுக்கு  உன்னை  எட்டு  மணிக்கெல்லாம்  வரசொல்வேன்..?   எவ்ளோ  நேரம் ஆனாலும்   நீ  முடிப்ப…   அதுக்கு  அந்த  பாரின்  கம்பெனிகாரன்  ஒத்துக்குவானா..?” என  ஏககடுப்பில்  கத்த…
       பயத்தில்     என்னசெய்வது  என அறியாமல்  தவித்தாள்..  சற்று  நேரம்  அமைதிக்குப்  பின்  பாவம்…   இதற்க்குமேல்  தாங்கமாட்டாள் என்று  நினைத்தவனாய்..  
     ‘சரி.. எப்படின்னாலும்  வேலையை  முடிக்க  மாட்ட..   வா.. ஒரு  பத்து  நிமிஷத்தில   வெளிய  போய்  சாப்பிட்டு  வந்திடலாம்.” என்றான்  இலகுவாக.
        ‘இல்லைங்க  சார்..  நான்..  எனக்கு  பசியில்லை.. என்னால  முடியற  அளவுக்காவது    முடிக்கிறேன்.”  என்றாள்  அவனோடு  உணவருந்த  செல்வதை  தவிர்க்கும்   விதத்தில்.
      ஆனா…  நான்  ஆறு  மணிக்கெல்லாம் இங்க  வந்திட்டேனே..   நான்   இன்னும்  சாப்பிடலை… எனக்கு  பசிக்குது..” என்றான்.
      ‘நீங்க   போய்  சாப்..” எனும்போதே..
     ‘கொஞ்சம்  நிறுத்திறியா..?  நீ  சாப்பிடலைன்னு  வெற்றி  சொன்னார்.  உன்னை  சாப்பிட  வைக்கலைன்னா..  வெற்றி  என்னை  திட்டுவார்..  ஒழுங்கா  வா  என்னோட..”  என்று  அதட்டினான்.
     மீண்டும்  அமைதியாகவே  அபர்ணா   நின்றிருக்க.. ‘வேலைக்குத்தான்  லாய்க்கு  இல்லை.. ஒழுங்கா  சாப்பிடவாவது  வா…” என்றான் நக்கலாக.
      சிவமுகிலனின்  நக்கல் பேச்சில்  அப்படி  ஒரு  ஆத்திரம்   கிளம்ப.. 
      ‘நான்  யாருக்காகவும்  சாப்பிட  வரமாட்டேன்..   வேலைக்கு   நான்  லாய்க்கு  இல்லைன்னா..  வேலைக்கும்  இனிமே  வரல..”  என  கத்தி..    அழுது   கொண்டே   நிற்காமல்  வேகமாக  வெளியே  போகவும்..  திடீரென  முளைத்த  அவளின்  தைரியத்தில்  அதிர்ச்சியாகி  மீள்வதற்குள்..    அபர்ணா  வெளியே  சென்றிருந்தாள்.
      வெளியே  வந்து  பார்க்க..  நடந்தாள்  என சொல்லமுடியாது..  கிட்டதட்ட  ஓடிக்கொண்டிருந்தாள்.  காரை  எடுத்தவன்  விர்ரென  அவள்  அருகில்  நிறுத்தி..  அவள் கையை  பிடித்து  இழுத்து  காருக்குள்  தள்ளி  கதவை  அரைந்து  சாத்திவிட்டு..    தானும்  அமர்ந்து  காரை   எடுப்பதற்க்குள்  அவள்  கதவை  திறக்க  முயன்றுகொண்டிருக்க..   மீண்டும்  எள்ளலான  பார்வையோடு  காரை  ஸ்டார்ட்  செய்து  வேகமாக  ஓட்டினான்.
      ‘சீட்பெல்ட்  போடு..” என்ற  சிவமுகிலனின்  பேச்சை  காதில்  வாங்காமல்..  ஜன்னல்  புறம்  திரும்பிக்கொண்டு.. ‘என்னை   முதல்ல  இறக்கி   விடுங்க..“ என்றாள்  காட்டமாக.
      ‘முடியாது..”  என்றான்  திடமாக.
      ‘நீங்க  இறக்கி  விடலைன்னா..     எங்க  என்னை  கூட்டிட்டுப்  போனாலும்..  நீங்க  என்ன  சொன்னாலும்..  நான்  எதுவுமே  கேட்கமாட்டேன்…”  என்றாள்  பிடிவாதமாக.  
       அபர்ணாவின்  குழந்தைத்தனமான  கோபத்தை  ரசித்தபடி  காரை  ஓட்டிக்கொண்டிருந்தான்.    ஜன்னல்புறமாக  திரும்பியபடியே  ஹேன்ட்  பேகின் உள்ளேயே..  ஆனந்திக்கு  போன் செய்து..   ‘ஆனந்தி..  என்னை  கடத்தறாங்க..”  எனும்போதே..  போனை  பறித்து..  ‘ஹலோ..”  என்றான்.
      ‘ஹலோ…  யாரு  நீங்க..?   அபர்ணாக்கு  என்னாச்சி..?”  என்றாள்  பதட்டமாக.
        ‘நான்  சிவமுகிலன்  பேசறேன்..  வெற்றி  உன்தங்கை  சாப்பிடாம  வந்ததா  சொன்னார்.   சாப்பிட கூப்பிட்டா  வரமுடியாது..  எனக்கு  பசியில்லைன்னு  சொல்றா..  அதனால  கம்பெல்  பண்ணி  கூட்டிட்டு   போய்ட்டிருக்கேன்.  அதைதான்  உங்க  தங்கை  இந்த  லட்சணத்தில  சொல்றா..   டிரைவ்  பண்ணிட்டிருக்கேன்..  நான்  வைக்கிறேன்..“ என்று  மொபைலை  தானே  வைத்துக்கொண்டான்.
      ‘நீங்க  ஹோட்டல்  கூட்டிட்டுப்போனா  நான்   கத்துவேன்..”  என்றாள். 
       முறைத்தவன்.. ‘நீ  இப்படி  சில்லியா  பிகேவ்  பண்ணினா..  உண்மையாவே  உன்னை  கடத்திட்டு  போய்டுவேன்..”  என்றான்.
     ‘என்  போனைக் கொடுங்க..” என்றாள்.
     ‘அதெல்லாம்  கொடுக்கமுடியாது..  வாய  மூடிட்டு  இரு..” என்றான்.
     ஒரு இடத்தில்  காரை  நிறுத்தி  தான்  இறங்கியதும்..     காரை  லாக்  செய்தவன்..  சற்று  நேரத்தில்   பார்சல்  டிபனோடு   காருக்குள்  வந்து.. 
      ‘சாப்பிடு..”  என்றான்.
      ‘எனக்கு  வேண்டாம்…”  என  கத்த..
      வெற்றியிடம்  இருந்து  சிவமுகிலனுக்கு  கால் வர..  ‘ம்ம்  சொல்லு  வெற்றி…” என்றான்.
       வெற்றி   ஆனந்தி  வீட்டில்  தன்  அத்தையும்  மாமாவும்  தன்னை  ஏற்றுக்கொண்டதை   சந்தோசமாக  சொல்லிமுடித்து..  ‘அப்பவும்  இந்த  ஆனந்தி  பிடியே  கொடுக்கலடா..” என  ஏமாற்றமாய்  சொல்லி..  ‘அபர்ணாவை  ரொம்ப  திட்டிடாதடா..  பாவம்   உன்மேல  இருக்க  பயத்தில  அலறியடிச்சி   சாப்பிடாம  கூட  கிளம்பிட்டா..” என  வெற்றி  மீண்டும்  நியாபகப்படுத்த.. 
      ‘நீதான  அபர்ணா  சாப்பிடாம  வந்திருக்கான்னு  சொன்ன..?  அதுக்குத்தான்  சாப்பிடவைக்க  வந்தேன்.  வேற  ஒன்னும்  பண்ணலை.”  என்றான்  கடுப்பாக.
       ‘சரி  நான்  வைக்கிறேன்..” என  வெற்றி  இணைப்பை  துண்டித்ததும்  ஆனந்தி  லைனில்  வரவும்..
       ‘இந்தா..   ஒழுங்கா  சாப்பிடத்தான்  வந்தேன்னு  சொல்லனும்..  இல்லை  இன்னைக்கு  நைட்  நீ   என்னோடதான்  இருப்ப..”  என்று   மிரட்டி.. போனை  நீட்டினான்.   இவள்  வெற்றி  என்று  நினைத்து..
      ’நான்  யார்கிட்டையும்  பேசமாட்டேன்.. எதுவும்  சாப்பிட மாட்டேன்..”என்றாள்.
       சிவமுகிலன்.. ‘உன்  அக்காகிட்ட  கூட பேசமாட்டியா..?” என்றதும்  உடனே   போனை வாங்கினாள்.
      ‘ஆனந்தி..”  என  பதட்டமாக  அழைக்க..
      ‘அபர்ணா..  நீ  நைட்டும்  ஒழுங்கா  சாப்பிடலை..  காலைலையும் சாப்பிடலை.  சாப்டிட்டு  சீக்கிரம்  வேலையை  முடிச்சிட்டு  வீட்டுக்கு  வா…  உனக்கு  ஒரு  சர்ப்ரைஸ்  இருக்கு..” என்றாள்.
       ‘நான்  வேலையை  ரிசைன்  பண்ணப்போறேன்.  நான்  இனி  வேலைக்கு  போகமாட்டேன்.. எனக்கு  இப்பவே  வீட்டுக்கு வரனும்..” என்றாள்  சிறுகுழந்தையாய்.
       ‘எனக்கு  உன்  வேலையை  விட  நீதான்  முக்கியம்..   நாம    அதைப்பத்தி  நம்ம  வீட்ல  வச்சி  பேசிக்கலாம்..  இப்போ  உங்க  எம். டி  நீ  சாப்பிடலைன்னா  உன்னை  விட  மாட்டார்.    சீக்கிரம்   சாப்பிடு.  அப்பதான  நீ  சீக்கிரம்  வீட்டிற்க்கு  வரமுடியும்.” என்றாள்  பொறுமையாக. 
     ‘சரி..“ என்றதும்  சிவமுகிலன்  போனை  வாங்கிக்கொள்ள..
    ‘இந்த  டிபனுக்கு  நீங்க  பணம்  வாங்கினாதான்  நான்  சாப்பிடுவேன்.” என்றாள் வீம்பாக.
     ‘சரி  வாங்கிக்கிறேன்  சாப்பிடு..” என சிரித்தான்  உள்ளுக்குள். 
      சாப்பிட்டதும்.. ‘நான்தான்  சாப்பிட்டேனே..  போலாம்..” என்றாள்.
     ‘ஆமா..    இப்ப ஒரு  அரைமணி  நேரமா..  என்னை  சார்ன்னு  கூப்பிடாம..  போங்க  வாங்கன்னு  மட்டும்  பேசிறியே.  நான்  என்ன  உன்  வீட்டுக்காரனா..?  இல்ல. மாமனா..   மச்சானா..?” என  கேட்க..
       அபர்ண தலைகுனிய.. ‘இப்ப  ஆபிஸ்  போறோம்..  அங்க  வந்து..  எதாவது  சத்தம்  போட்டன்னு  வை..“ என  மீண்டும்  மிரட்ட..
    ‘நான்  ஆபிஸ்  வரமாட்டேன்  நான் ரிசைன்  பண்றேன்..”  என்றாள் வீராப்பாக.
    ‘நீ  ரிசைன்  பண்ணு  இல்ல.. என்னவோ  பண்ணு..  ரிசைன்  லட்டர்  கொடுக்கிறதுக்கும்   ஆபிஸ்  வந்துதான  ஆகனும்.?”  என  கேட்க..  மீண்டும்  அமைதியானாள்.
     அலுவலகத்திற்க்குள்  நுழைந்ததும்..   நேராக  அவன்   கேபினுக்குள்    செல்ல.. அவனிடம்  இருந்த  அவளுடைய   போனை அப்பாதுதான்  உணர்ந்தான்.  மீண்டும்  அபர்ணாவின்  இருக்கைக்கு  வந்து..  அவளின்  மொபைலை   நீட்ட..   இதை  பார்த்த  அனைவரும்  ஒருவரையெருவர்   ஆச்சர்யத்தோடும்   அதிர்ச்சியோடும்  பார்த்திருந்தனர்.  
      சிவாவும்   தான்  முன்பே   கொடுத்திருக்கவேணும்  என  அவஸ்த்தையாய்  நினைத்தபடி  உள்ளே  போனான்.
     ‘என்ன  அபர்ணா  நீPயும்  சாரும்  ஒன்னா  வரிங்க..?”  என  மீனா  கேட்க..   சிறிதும்  யோசிக்காமல்..
     ‘சாப்பிட போனோம்.” என்றாள்.    சிவமுகிலனிற்க்கு  அது  நன்றாக  கேட்க.. ‘போச்சிடா..” என  தலையில்  கையை வைத்துக் கொண்டான். 
    ‘இராமு….”  என்று  அழைத்து..   ‘எல்லாரையும்   ப்ராஜக்ட்  ஒர்க்கை  எனக்கு  மெயில் பண்ண சொல்லுங்க..” என்றான்.
     இராமு  சொன்னதும்..  அனைவரும்  அவரவரது  வேலையில்  கவனமானார்கள்.  இவள்  மட்டும்  அமைதியாக  அமர்ந்திருந்தாள். அதை கவனித்தவன்   அவளை போனில் அழைத்தான்.  தன்  இருக்கையிலிருந்து  அவனைப்  பார்த்துக்கொண்டே  அட்டன் செய்தாள்.
      ‘உன் வொர்க்கை  மெயில் பண்னு..”  என்றான்.  அவள்  மாட்டேன்  என்பதுபோல   தலையசைத்தாள்.
    ‘உடனே நீ  இங்க  வா..” என்று  கட் செய்ய.
     அபர்ணா  உள்ளே  வந்ததும்..  சிவமுகிலன்  அவளை  முறைக்க..  
     ‘நான்  தான்  என்   வொர்க்கை  முடிக்கலையே..”  என்றாள்.
     ‘உன்னோட  ஒர்க்கையும்  சேர்த்து   நானே  முடிச்சிட்டேன்.  நீ  மெயில்  மட்டும்  பண்ணு..  கோ அன்ட்  குவிக்..” என  விரட்ட..
     அபர்ணா  கதவருகே  சென்றதும்.. ‘மெயில்  செய்துட்டு  வந்து  என்னைப்பாரு.” என்றான்.
     சொன்னவேலையை  முடித்ததும்..  சிவாவை  பார்க்க வந்தவள்..  பர்மிசனே  கேட்காமல்  உள்ளே  வந்தாள்.
      மனதிற்க்குள்  சிரித்துக்கொண்டவன்.. ‘பார்மிசன்  கேட்காம  இப்படிதான்  உள்ளே  வருவியா..?   இது  என்ன  உன்  மாமியார்  வீடா..?”  என்றான்.
   திருதிருவென  முழித்தாள்.  ‘ம்.. சட்டமா  சார்கூட  சாப்பிட போனேன்னு  எல்லார்  முன்னடியும்   சொல்லியிருக்க..   கதவைத்தட்டாமலே  உரிமையா  உள்ள  வர்ற..  அப்புறம்  யாராவது  எதாவது  சொன்னா    நான்  பொறுப்பில்லை..” என்றான்  லேசாக  சிரித்தபடி.
       அவனின்  சிரிப்பை  கண்டுகொள்ளாமல்.. ‘நான்  மன்டே  ரிசைன்  லட்டர்  கொடுக்கபோறேன்..” என்றாள் வீராப்பாக.
      ‘ஆமா..  நீ  வேலைக்கு  சேர்ந்து  மூனுமாசம்  தான்  ஆகுது.   அதுக்குள்ள  வேலையை  ரிசைன்  பண்றன்னு  சொல்றியே..   இந்த  கம்பெனியில   அதுக்குதான்   உன்னை  டிரென்  பண்ணாங்களா?” என்றான்.
       ‘அதெல்லாம்  எனக்கு  தெரியாது..  எனக்கு  இங்க  வேலை  செய்ய  பிடிக்கலை…   நீங்க  என்னை  திட்டுறிங்க..   என்னை  யாருமே   இப்படி  திட்டினதில்ல..“  என்றாள் உதடு  துடிக்க..
     ‘வேலையே  வேணாம்னு  சொல்ற அளவுக்கு.. அப்படியென்ன  உன்னை  மோசமா  திட்டிட்டேன்..?”  என்றான்  யோசனையாய்.
     ‘வேலைக்கு  லாய்க்கு  இல்லைன்னு..  அப்புறம்.. அவ  இவ..  அப்டின்னு..    அப்புறம்  கம்பெல்  பண்ணி  சாப்பிட  வைக்கிறது..  இன்னும்  நிறைய…”  என்றாள்.
       ‘பின்னே  ஒழுங்கா  வேலை செய்யலைன்னா..  கொஞ்சுவாங்களா..?  வெற்றி   எனக்கு  ரொம்ப  வேண்டப்பட்டவர்.  அவர்   சொந்தகாரியா  வேற  ஆகிட்ட.. அவரே எனக்கு போன்செய்து..  உன்னை  சாப்பிட  வைக்கசொன்னா..   நான்   அதை   செய்யாம  எப்படி  இருக்க  முடியும்.?” 
      ‘அவர்  ஒன்னும்  எனக்கு  சொந்தகாரர்  இல்லை.. “என்றாள்  கடுப்பாக.

Advertisement