Advertisement

                                   அத்தியாயம்–4
      ஆனந்தி  காலேஜிற்க்குள்  சென்றதும்..   அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது.   நான் இன்னைக்கு சந்தித்தே ஆக வேண்டும்..  எப்ப வரனும்..  எங்க வரனும்னு சொல்லுங்க..  போன் பண்னுங்க..   இல்லைன்னா மெசேஜ்  பண்னுங்க.   நீங்க   எதுவுமே பண்னலைன்னா     உங்களை  நேர்ல மீட் பண்ணுவேன்..   அந்த    நிலைமைக்கு என்ன   கொண்டு வந்திராதிங்க..  அப்புறம்  உங்களுக்குதான் பிரச்சனையாயிடும்.   என்றிருந்தது அந்த குறுஞ்செய்தியில்..
       அவளுக்கு  ஒரே பதட்டமாகிவிட்டது.  யார் இவன்..? இப்படியே  இரண்டு மாசமா  டென்சன் பண்றான்..  பார்த்தா டீசன்ட்டா இருக்கான். தப்பாகவும்  நடந்துக்கிறதில்ல…  நல்லா படிச்சவன் போலவும்..    வசதியா   பெரிய இடத்து  பிள்ளைபோல    இருக்கான்..   அந்த இன்னொருவன் யார்..?  நான்   அவனை   கல்யாணம் பண்ணிக்கனும்னு..   இவன் ஏன் என்னை  டார்ச்சல் பண்றான்..   என  பலவற்றையும்  நினைத்து  தவித்துப்போனாள்.   அன்று அவளால் வகுப்பில் பாடத்தைகூட   ஒழுங்காக   நடத்தமுடியவில்லை..    இந்த மூன்று நாளாகத்தான் என்னை பார்க்கவேண்டும் என்று மிகவும் தொல்லை பண்றான்.     நாம அபர்ணாகிட்ட சன்டே இதுபத்தி பேசலாம்னு  நினைச்சோம்.  ஆனா இன்னைக்கே பேசிட வேண்டியதுதான். என்று நினைத்துக்கொண்டாள்.
       இங்கு அபர்ணாவும்    நாம இப்படி முட்டாளாக இருக்கிறோமே..  நம்ம வீட்டு அட்ரஸ்  நம்ம சாருக்கு எப்படி தெரியும்..?   நம்மளை ஏன்  என்றுமில்லாமல்..   நேத்து  மட்டும் அவ்வளவு கேர் எடுத்தார். இதெல்லாம் போக   என்னை  எப்படி அவர்  ஒருமையில் பேசலாம்..? என  கோபத்தோடு  அவனை மேலும்  சிலபல  வார்த்தைகளில்  மனதினுள் திட்டித்தீர்த்து..  தான்  செய்யவேண்டிய  வேலைகளை    நினைத்தவள்     முயன்று  வேலையில் கவனமானாள். 
      சரியாக ஒருமணியளவில் சிவமுகிலன் அபர்ணாவை கைப்பேசியில் அழைத்தான்.   அவளுக்கு அது புதிய நெம்பராக இருக்கவே..   அவ்வழைப்பை  தவிர்த்துவிட்டாள்.  மீண்டும் அழைப்பு வந்தது.    மிகவும் சலிப்போடு   மொபைல் எடுத்து பார்க்க..   இம்முறை  அது அவளுடைய அக்காவின் அழைப்பு.    
   ’ஏய் ஆனந்தி… என்ன இந்த நேரத்திலே கூப்பிடுற…? ஏதாவது முக்கியமான விசயமா?”  என்றாள்.
    ‘ஆமாம்  அபர்ணா.. உன்னால  இன்னைக்கு   பர்மிசன் போட்டு வர முடியுமா?” என்றாள்  பதட்டமாக..
   ‘ஹேய்…. ஏதாவது பிரச்சனையா…?”  என  இவளும்  பதற..
    ‘நீ  பதட்டப்படாத..    நான் நல்லாதான் இருக்கேன்..   நான் சன்டே ஒரு விசயம் பேசலாம்னு சொன்னனேன் இல்ல..?   ஆனா இப்ப திடீரென கொஞ்சம் அவசரமா  இன்னைக்கே   பேச வேண்டிய தாயிடுச்சி.. வீட்ல  வச்சி   பேச முடியாது.   கண்டிப்பா  அப்பாகிட்ட இது பத்தி சொல்லலாம்.. ஆனா இப்ப வேண்டாம்..  நாம   பேசிட்டு  அப்புறமா அப்பாகிட்ட செல்லிக்கலாம்  சரியா…?” என்றாள்.
   ‘சரி . ஓ.கே. நான் சார்கிட்ட கேட்டுட்டு..  உனக்கு சொல்றேன்.” என்றாள்.
   ‘ம்ம். ஓ.கே. பாய்.”
   சார் லன்ச்சுக்கு கிளம்பிட்டா  வர இரண்டு மணிக்கு மேலே ஆகும்..  அதனால முதல்ல சாரைப் போய் பார்த்து..  எப்படியாவது பர்மிஷன் வாங்கிடலாம். என்று நினைத்து   அவன் கேபினுக்கு சென்றாள்.  வெளியில் நின்று கதவை தட்டி..
   ’ மே ஐ  கம் இன் சார்..?” என்றாள்  சன்னக்குரலில்.
       முக்கியமாக யாருடனோ போனில்  பேசிக்கொண்டே அவள் வெளியில் நிற்ப்பதை  பார்த்து.. ‘எஸ்…” என்றான்.
     இவள் உள்ளே சென்றும் அவன் பேசிக்கொண்டுதான் இருந்தான். 
     ‘இல்ல..  நீ ஒன்னும்   கவலைப்படாத..     இன்னைக்கு கண்டிப்பாக நேர்ல பார்த்து  இந்த விஷயத்திற்க்கு ஒரு முடிவு  பண்ணலாம்.  நானும்  கொஞ்சம்  ஹார்டாதான் பேசியிருக்கேன்.   அவங்க முகத்தை பார்த்தா பாவமாதான்  இருக்கு.” என  பேசிக்கொண்டே  அபர்ணாவின்  பயந்த முகத்தை  பார்த்தவன்..
     ‘இப்ப   ஒரு முக்கியமான வேலையிருக்கு..  சோ  ஐ கால் யூ பேக். பாய்…” என  இணைப்பை  துண்டித்தவன்..
   ‘என்னங்க  மேடம்.. என்ன பார்க்கறதுக்கு உங்களுக்கு டைம் கிடைச்சிடுச்சா..?” என்றான்  அழுத்தமாக.
    அவள் புரியாமல் பார்க்கவும்.. ’என்ன அப்படியே  ரொம்ப பயந்தமாதிரி  பார்க்குற..?   என்  போனை  அட்டன்  பண்ணாததுமில்லாம..   நான்   கால்செய்து  அரைமணி கழிச்சி..   இப்பதான் வந்து   பார்க்கனும்னு தோணுதா  உனக்கு..?”  என்று  கோபப்பார்வை பார்த்தான்.
    இவன்  எப்போ நமக்கு  கால்செய்தான்  என்ற  யோசனையோடு..  அமைதியாக நிற்க்கவும்.. ’இப்பவும் இப்படி அமைதியா நின்னு  என்னை டென்சன் பண்ணதான் வந்தியா நீ…?” என  கத்தினான்.
    நினைவிற்க்கு  வந்தவள்.. ‘சார்..  நா….ன்..   ஐயம்  சாரி.. நீங்க  கால்பண்ணது  எனக்கு தெரியாது.” என  திக்கினாள்.
    ‘இப்படி ஒரு பதில்  சொல்லத்தான் என்  போனை  அட்டன்பண்ணாம விட்டியா..?” என்றான்  அழுத்தமாக.
    ‘இல்லைங்க சார்  அது உங்க நெம்பர்ன்னு எனக்கு தெரியாது.  நீங்க எப்பவுமே ராமு  அண்ணாகிட்டதான சொல்லிவிடுவிங்க..  அதனால நான் நீங்கன்னு   நினைக்கலைங்க சார்..  எதோ  அன்நௌன்  நம்பர்ன்னு  நினைச்சிதான்  நான்  அட்டன் பண்ணல..  ஐம் சாரி சார்.” என்றாள் பயத்துடன்.
    ‘முதல்ல உன்  போனை  என்கிட்டகொடு..?” என  கைநீட்டினான்.
    அவள் தயங்கிக்கொண்டே  கொடுத்தாள்.   வாங்கியவன்..  ஒரு நிமிடத்தில் அதை அவளிடமே கொடுத்து.. ‘என் நெம்பரை சேவ்  செய்திருக்கேன்.  இனி   எப்பன்னாலும்   என்    போனை நீ அட்டன் பண்ற..  ஓ.கே..?” என்றான் கண்டிப்புடன்.
    சரி என்பதாய் தலையசைத்தாள். 
   ‘இப்ப மட்டும் நான் கூப்பிட்டேன்னு   எப்படி தெரிஞ்சது உனக்கு..?” என்றான்  சந்தேகத்தோடு.
     ‘இல்லைங்க  சார்..  நீங்க கூப்பிட்டிங்கன்னு எனக்கு தெரியாது..  நானாகத்தான் உங்களைப்  பார்க்க வந்தேன்..” என  தலைகுனிந்தாள்.
     இப்போது  அதிசயமாக ஐந்து நிமிடம்  அவளைப் பார்த்துக்கொண்டே  இருந்தான்.  பிறகு தான் நிமிர்ந்து அவனைப் பார்க்க.. மீண்டும் சிவமுகிலன்  அமைதியாகவே  இருக்கவும்..  அவளுக்கு  கண்களில் நீரே வந்துவிட்டது.
      ‘ஹேய்…  இப்ப எதுக்கு அழற..? நீயாத்தான என்ன பார்க்க  வந்த..?  நீதான  என்னன்னு சொல்லனும்..?  அதவிட்டுட்டு இப்படி அழுதா என்ன அர்த்தம்..? நீயா.. எதாவது   என்கிட்ட கேட்கனும்னாலும்  நான்தான்  உன்கிட்ட முதல்ல பேசனுமா..?” என  கோபமில்லாமல் கேட்டான்.  அவள் கண்ணீரை பார்த்தவுடன் அவனுடை கோபம் சற்று குறைந்திருந்தது.
     அவளுக்கும் சற்று பயம் போனதுதான்.. ஆனால் அவளுக்கே  தெரியும்..   இன்னும்  எவ்வளவு  பென்டிங்  வேலை  இருகிறதென்று..   எனவே  பர்மிஷன் கேட்கத் தயங்கி..   மீண்டும்   அவள் அமைதியாக இருக்கவும்.. அவன் முகம் மறுபடியும்  கடினமாக  மாற..  அவன் முகத்தைப் பார்த்தவள் உடனே பேச ஆரம்பித்தாள். 
   ‘அது..  எனக்கு  ஒரு  ஹாஃப்   டே   பர்மிசன்  வேணும்..   ப்ளீஸ் சார்.” என்றாள்  தயங்கித்தயங்கி.
   ‘ஏன்..? என்ன விஷயம்..?” என்றான். அவள்   போனை வாங்கி பார்த்தபோதே  கால் லாகில் அவளுடைய அக்காவின் அழைப்பு வந்திருப்பதை  பார்த்துவிட்டான்.  நம்மகிட்ட  என்ன  ரீசன்  சொல்றான்னு  பார்ப்போம்..  என  நினைத்திருக்க..
    ‘என்   அக்கா  போன் பண்ணிருந்தா..  எப்பவும் இப்படி  ஒர்க்டைம்ல  கூப்பிட்டதில்லை..  ரொம்ப டென்சனா  வேற பேசினா..    ஏதோ பிரச்சனையாம்..  என்கிட்ட பேசனுமாம்..   அதனாலதான்..” என்றாள்  தயக்கத்துடன்.
      பரவாயில்லையே..  உண்மையைத்தான்  சொல்றா   என  நினைத்து..   ‘நீ போனா..  உன் அக்கா பிரச்சனையை தீர்த்திடுவியா….? முதல்ல  என்ன பிரச்சனைன்னாவது  உனக்கு தெரியுமா?” என்றான்  எள்ளலாக.
       இவன் எதற்க்கு  கேட்க்கிறான்..?  என்பதுபோல  அபர்ணா  பார்க்கவும்..  அதை  புரிந்தவன்.. ‘இல்ல..  நீ வேற..  ஏதோ பிரச்சனைன்னு  சொல்ற..   நீ   தனியாப்  போய்  உனக்கு   ஏதாவது   ஆச்சினா..  அதுக்கு  நான்தான பொறுப்பு..?   லீவ்  இருந்திருந்தினா    நான்  உன்னை  கேட்கமாட்டேன்..  இங்க  வந்திட்டு  பர்மிஷன்ல   போற..  பின்ன ஏதாவதுன்னா   என்னதான கேட்பாங்க..?  அதனாலதான் கேட்டேன்..” என  நீட்டி  முழக்கினான்.
     ‘இல்லைங்கசார்..  என்ன  பிரச்சனைன்னெல்லாம் தெரியாது..  நேத்து  சன்டே பேசலாம்னுதான்  சொன்னா… ஆனா…   இப்ப கால்செய்து எப்படியாவது  பர்மிஷன் கேட்டுட்டு  எனக்கு   போன் பண்ணுன்னு   பதட்டமா  சொன்னா.”  என்று  பர்மிசன்  கொடுத்துவிடு  என்பதுபோல..  சிவமுகலனையே   தவிப்பாக  பார்த்தாள்.    இதைப்பற்றி   பேசத்தான் கூப்பிட்டிருப்பாங்க..  என  நினைத்தவன்..
   ’நீ லன்ச் சாப்டியா..?” என்றான்.  அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
   ‘முதல்ல போய் சாப்பிடு..  நான்  கொஞ்ச நேரத்தில  உன்னை கூப்பிடுறேன்.”  என  தன்  வேலையில்  கவனமானான்.
   ‘இல்லைங்கசார்  எனக்கு பசி இல்லை.” என்றாள்  மறுப்பாக.
    ‘நீ  சாப்பிட்டினாதான்   உனக்கு  பர்மிஷன் கொடுக்கறதைப்பற்றி  என்னால  யோசிக்க முடியும்.   உனக்கு எப்ப   பசிக்குதோ அப்ப சாப்டுட்டு..   என்ன  வந்து பாரு.. அதுக்கப்புறம்   நீ போலாமா..  வேணாமான்னு நான்  முடிவு  பண்றேன்.” என்றான்.
     ’தேங்கயூ சார்.” என  உற்ச்சாகமாய் வெளியே  வந்தவள்..  முதலில் அவளுடை அக்காவிற்க்கு   நடந்ததை   கூறிவிட்டு..  வேகமாக சாப்பிட  ஆரம்பித்தாள்.
   அதற்க்குள்  சிவமுகிலன்  வெற்றிமாறனுக்கு   போன் செய்து.. ‘நீ ரெடியா இரு வெற்றி  நான் ஒரு   அரை மணி நேரத்தில   உன்னை கூப்பிடுறேன்..  கண்டிப்பா  இன்னைக்கு   ஈவினங்குள்ள  மீட் பண்ற மாதிரி  பார்க்கிறேன்.” என்றான்.
    அவள் அதற்க்குள் சாப்பிட்டு வந்து.. ’மே ஐ கம் இன் சார்.” என்றாள்.
    அப்பொழுதுதான்   சாப்பிட ஆரம்பித்தவன்..  ‘எஸ்…”   என்றான்  சின்ன  சந்தோசத்துடன்.  
     பிறகுதான்  அவன்  சாப்பிட்டு  கொண்டிருப்பதை  பார்த்தவளுக்கு  உள்ளே  செல்ல  சங்கடமாக இருந்தது.  அனுமதியளித்து  போகவில்லையென்றால் அதற்க்கும்  திட்டுவான்.. என  நினைத்தவள்   தயங்கிக்கொண்டே சென்றாள்.   அவள் உள்ளே  வந்ததும்..
     ’சாப்டியா..?”  என்றான்  கரிசனையாக. ஆம் என்பதாக தலையசைத்தாள். 
     எப்பப்பாரு நல்லா மண்டைய  மண்டைய  உருட்டத்தான் கத்துவைச்சிருக்கிறா.. மொதல்ல இதுக்கொரு முடிவு  கட்டணும்.. என நினைத்துக்கொண்டு.. 
    ‘பசியே இல்லைன்னு சொன்ன..?  இப்ப எப்படி அதுக்குள்ள  சாப்பிட்ட..?”
    அபர்ணா அமைதியாக இருக்கவும்.. ‘சரி.. நீ  பதில் சொல்றதுக்குள்ள  நான் சாப்பிடட்டுமா..? ஏன்னா  எனக்கு ரொம்ப பசிக்குது.” என  முகம்  சுருக்கினான்.
    ‘சாரிங்க சார்.. நீங்க சாப்பிடுங்க நான் வெளிய வெய்ட் பண்றேன்.” என்றதும்..  அவசரமாக..
    ‘நோ.. நோ.. ஒரு  நிமிசம்  இரு..   நீ  சும்மா  வெளில  வெய்ட்  பண்றதுக்கு பதிலா..   எனக்கு கொஞ்சம்  சாதம்  பரிமாறமுடியுமா?”  என அசால்ட்டாக கேட்டு  அவளை அதிர்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு சென்றான்.
   ‘சா..ர்…  நா..னா?” என்றாள்  மலைப்பாக.
    ‘ஆமா..  இங்க நீ தான இருக்குற..?   எனக்கு இப்படி நானே  போட்டு  சாப்பிடறது  கொஞ்சம் இல்ல  ரொம்ப  கஷ்டமான விஷயம்..  அதனாலதான்  லன்ச்சுக்கு தினமும்  வீட்டுக்கே  போய்டுவேன்.. இன்னைக்கு  நீ வேற  என்கிட்ட பர்மிஷன் கேட்டியா… உனக்கு  பர்மிஷன்  லட்டர்ல  கையெழுத்து போடனும்.   உனக்காகதான் நான்  ராமுவை அனுப்பி  கேண்டின்ல  லன்ச் வாங்கிவர சொன்னேன்..”  என்று ஒரு நீண்ட விளக்கம் கொடுத்து  அவளையே  பார்த்தான். 
     இதுவரை  சிவமுகிலனின்  அருகில்  யாரும்  சென்றதில்லை.. அவனின்  இருக்கைக்கு  நேர்  எதிர்தான்  நின்றோ..  அல்லது  உக்கார்ந்தோ  பேசுவார்கள்..   முடிந்தவரை  யாரிடமும்  தனித்து  பேசும்  அளவிற்கு  வைத்துக்கொள்ளமாட்டான்.   வேலைக்கான  விபரங்கள்  அனைத்தும்  மெயிலில்  அனுப்பிவிடுவான்..  அவசர   தகவலென்றாலும்  இராமுவிடம்தான்  சொல்லி  அனுப்புவான்.
    இவன்  என்ன  இன்னைக்கு  நம்மகிட்ட  இவ்ளோ  பேசுறான்..  அதுவும்  கோபமில்லாம  வேற  பேசுறான்.. இவன்  எப்படி  பேசினாலும்..  நாம  எப்படி  இவன்  பக்கத்தில  நின்னு  இவனுக்கு  சாப்பாடு  போடறது..  என்று  அபர்ணா  சங்கடமாக   நின்றிருக்க..
   ‘என்ன பரிமாறியா..? இல்லையா..?” என்றான்…  நீ  பரிமாறலைன்னா  நான்  சாப்பிடமாட்டேன்  என்பதுபோல.
    சரி  என்பதாய்  தலையசைத்து  மெல்ல  அவனின்  ப்ளேட்டை பார்த்தாள்.  பார்சலில்  இருந்து  கொஞ்சமாய்  சாதம் மட்டும் போட்டிருந்தான்.   அந்த  ஐந்தடி  டேபிளை  தயக்கத்தோடு  மெல்ல  நடைபயின்று  அவனருகில்  வந்தவள்..   குழம்பு.. பொரியல்.. கூட்டு என..  ஒவ்வொரு  சிறிய  பொட்டலங்களையும்  பிரித்து   கவனமாக  பரிமாறி..   சாப்பிடுங்க  என்பதுபோல்  அவனைப்  பார்க்க..
      வானில்  பறக்கும்  நிலையில்  இருந்தன்  சிவமுகிலன்..  ‘நீ கொஞ்ச நேரம்  இங்கையே உட்காரு   நான் இதை சாப்பிட்டு ரசம் வாங்கிக்கிறேன்..” என்றான்  சாப்பாட்டில்  கவனம்  வைத்து.
     தலைகுனிந்து அமர்ந்துகொண்டாள்  அருகிலிருந்த  குசனில்.    ப்பா.. என்ன வாசனைடா சாமி.. அப்படி என்னதான் போடுவாளோ..?  இதுவரை நான் அறிந்திராத புதுவிதமான வாசனை..  என  நினைத்து..  அவளின்  வாசனையை  ஆழ்ந்து  அனுபவித்து..    பிறகு  உற்ச்சாகமாக சாப்பிட்டான்.  சற்றுநேரத்தில்   அவனே ரசம் போட்டு     சாப்பிட்டதைக்கூட அவள் கவனிக்கவில்லை..   அத்தனை  சங்கடத்தில் இருந்தாள்  அவனின்  அறையில்.  அவனுடைய   போன் அவனை அழைக்க..  
     ‘சொல்லுங்கம்மா…“  என்று சொன்னபிறகுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
     ‘சாப்பிட ஏன்ப்பா வரலை…?” என்றார் அவனின் அம்மா.
    ‘இல்லம்மா..  இன்னைக்கு ஒரு அர்ஜண்ட்  வேலை..   நான் இங்கையே சாப்பிட்டுக்கிறேன்…  நீங்க எனக்காக வெய்ட் பண்ணாதிங்க.. டைம்க்கு சாப்பிடுங்கம்மா…” என  அன்பை  தோய்த்த  குரலில்  பதிலளித்து..   அபர்ணாவை   பார்த்தபடியே..
      ‘ம்மா..  ஈவ்னிங்   நான்  வரதுக்கு  கொஞ்சம் லேட்டாகும்.  ஒரு முக்கியமான வேலையிருக்கு..” என்றான்.
    ‘சரிப்பா..   நீ    என்னைக்கும் இப்படி  வெளில  சாப்பிட்டதில்ல..  வேலைமேல  கவனத்தை  வச்சிக்கிட்டு  வயித்தை   காயப்போட்றாதப்பா..” என்றார்  பரிவோடு.
    ‘நீங்க  கவலைப்படாதிங்கம்மா..  எனக்கு  இங்க  உங்களமாதிரியே  அன்பா பரிமாற..   ஆள் இருக்காங்க…” என  அபர்ணாவை  ஆழ்ந்து   பார்த்தான்.   என்ன..?  அன்பா  பரிமாற..  ஆள்  இருக்காங்களா..? என  மனதினுள்  திடுக்கிட்டு..   விழி விரித்து   பார்த்தாள். 
     அவளின்  முகரியாக்சனை   பார்த்தவன்..  ‘சரி நான் அப்புறம் பேசறன் மா..” என்றவன்..    ‘தேங்க்ஸ்…”  என்றான்  மந்தகாசமான  பார்வையோடு. 
     ஏனோ   சிவமுகிலனின்  செயல்கள்     மனதை  உறுத்த..   மேலும்  சங்கடமாக  உணர்ந்தாள்  அபர்ணா.
    ‘உனக்கு பர்மிஷன் வேணுமா? வேணாமா..?” என்றான்  குழைவாக.
    ஆம் என்பது  போல்  வேகமாக  தலையாட்டவும்.. ‘சரி போ..”   என்றான்.
    பிறகுதான் அவள் முகம் தெளிவானது.  ‘சார்.. தேங்க்யூ சார்” என கிளம்பினாள்.
      வெளியே  வந்ததும்  ஆனந்திக்கு  போன்செய்து..    நான் எங்க வரட்டும் என கேட்க..  
     ‘எனக்கும் ஒரு ஐடியாவும்   தெரியலை..   நம்மகூட இன்னொருத்தரும்  வருவார்.  அதனால நீயே  ஒரு ஐடியா இருந்தா சொல்லு..” என்றாள்.
     ‘என்னது   இன்னொரு  ஆளா..?” என  அபர்ணா  திடுக்கிட..
     ‘அந்தாள்   நல்லவர்தான்  அபர்ணா..  நீ  நேர்ல  வந்ததும்  எல்லாம்  சொல்றேன்..   எங்க  மீட்  பண்லாம்னு  சொல்லு..”என்றாள்  ஆனந்தி.
     ‘அப்போ   அந்த  ஆள்கிட்யே கேட்டுப்பார்..“ என்றாள் அபர்ணா.
     ஆனந்தி   சிவமுகிலனுக்கு  அழைப்புவிடுத்தாள்.    
     ‘எங்க  மீட் பண்ணலாம்  சொல்லுங்க?” என்றான்  சிவமுகிலன்.
     ‘எனக்கு தெரியலை..   இதுவரைக்கும்   நான்   பேமிலி விட்டு  தனியா  எங்கையும்   போனதில்லை..   அதனால  நீங்களே பாதுகாப்பா ஒரு நல்ல இடம் சொல்றிங்களா?” என்றாள்  தன்மையாக.
   ‘அவன்  நான் அட்ரஸ் மெசேஜ் பணறேன்.”  என்று   ஒரு  குறுஞ்செய்தியை  அனுப்ப..     அதை  படித்து..  அவனுக்கு   அழைப்பு  விடுத்தவள்..
    ‘ம்..ஓ.கே.” என்றாள்.
    ‘உங்ககூட  யாராவது வரங்கலா..?” 
   ‘என் தங்கையும்  வருவா..” என்றாள்  ஆனந்தி.
       ‘எதுக்குங்க  தேவையில்லாத  பிரச்சனை..?  நீங்க  மட்டும்  வாங்க.” என்றான்.
       ‘நான் வரனும்னா.. என் தங்கையும் கண்டிப்பாக வருவா..” என  ஆர்டர் போல் சொன்னாள்.” என்றாள்.
       ‘ஏன்  இவ்ளோ கோபப்படுறிங்க..? உங்களுக்கு  பிரச்சனையில்லைன்னா..     கூட்டிட்டு  வாங்க..   எனக்கு  ஒன்னும்  இல்லை..”என்றான்   சமாதானமாக.
              ‘சரி… அப்போ  காபிடே  ரெஸ்டாரண்ட் வந்துடுங்க..   உங்க காலேஜ் பக்கத்திலதான்   இருக்கு..   நான் ஒரு ஒருமணிநேரத்தில  அங்க வந்திடறேன்..” என்றான்.
              அபர்ணாவிடம்..   ‘அபர்ணா..  நீ எங்க காலேஜ்  பக்கத்தில இருக்கிற  காபிடேக்கு வந்திடு..”  என  தகவலளித்து..  பதட்டத்தோடே   இருந்தாள். 

Advertisement