Advertisement

                    
    
   
                                அத்தியாயம் — 24
      ‘ருத்துகுட்டி..  என்  செல்லமில்ல.. வேணாம்டா..  அப்பா  பாவம் ல..? நிறைய  ஒர்க்கிருக்கு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என  வெற்றி  என்ன  கெஞ்சிக்கேட்டும்   அவனின்  லேப்டாப்பை  கொடுக்கமறுத்தான்   மூன்றுவயது  ருத்ரன். 
     ஆனந்தி  சிரித்துக்கொண்டிருக்க..  ‘அம்மாவும்  மகனும்  ஆட்டம்  காட்டுறிங்களா..?  இருடி..  என்  பொண்ணு  கொஞ்சம்  பெருசாகட்டும்  அப்புறம்  இருக்கு  உங்க  ரெண்டுபேருக்கும்..” என்று சபதமிட்டான்  தொட்டிலில்  உறங்கிக்கொண்டிருந்த  தனது  ஐந்துமாத  குழந்தையைகாட்டி.
     தன்  சொல்பேச்சை  தட்டாமல்  செய்துமுடித்த  மகனை  ஆசையோடு  பார்த்திருந்தாள் ஆனந்தி..   வெற்றியின்  மகன்  லேப்டாப்பை  எங்கும்  எடுத்துவைக்கவில்லை.  அது  இருந்த  இடத்திலேயேதான்  இருந்தது..
      ஆனாலும்  வெற்றியின்  மகன்  லேப்டாப்பை  சுற்றி  தன் பிஞ்சுவிரலால்  ஒரு  வட்டம்  வரைந்துவிட்டானென்றால்  வெற்றி  அதை  மீண்டும்  தொடக்கூடாது  என்பதுதான்  ருத்ரனின்  சட்டம்..   கடந்த  ஆறுமாதமாக  தன்  மகனுக்கு  ஆனந்தி கொடுத்திருக்கும்  பயிற்ச்சி.      
      வட்டம்  போட்டபிறகு  வெற்றி  லேப்டாப்பை  தொட்டுவிட்டால்  இரவில்  தன்  தந்தையின்  கதைகளை  கேட்கமாட்டான்..  நெஞ்சினில்  படுத்துறங்கமாட்டான்..  ருத்ரனின்  சட்டத்தை மீறினால்  இதுபோல  பல  பின்விளைவுகள்  உண்டு  வெற்றிக்கு.
     ‘நான்  யார்கூடவும்  பேசமாட்டேன்..” என்று  வெற்றி  கோபிக்க..
      ‘ப்பா..  கண்ணு  கெத்துதும்..”  என்று  ருத்ரன்  சமாதானம்  செய்ய.. 
      ‘ஒர்க்  இருக்குடா  செல்லம்..  முடிக்கலனா  அப்பாவோட  மிஸ்  நாளைக்கு  அப்பாவை  அடிப்பாங்க..”  என்று  வெற்றி  பாவமாய் முகம்  சுருக்க..
      ‘ம்மா…” என  ருத்ரன்  ஆனந்தியை  கெஞ்சும்தோரணையில்  பார்க்க..
       ‘ம்கூம்..  அடிகூட  வாங்கிடலாம்.. ரொம்பநேரம்  லேப்  பார்த்தா..  அப்பாக்கு  கண்ணுதெரியாம  போய்டும்..” என  ஆனந்தி  குழந்தையை  பயமுறுத்த..
       ‘அப்பா..  கண்ணுதா  வேணும்..  அப்பா  ஸ்ட்ராங்..  அதிவாங்கினாலும்   அப்பாக்கு  வலிக்காது..” என்று  வெற்றியின்  கையை  உயர்த்திகாட்ட..  சிரித்தவன்.. 
     ‘நல்லா  பேசக்கத்துகிட்டடா..” என  மகனை  தூக்கி  கொஞ்சினான். 
     ஆனந்தியின்  வயிற்றில்  ருத்ரன்  ஏழுமாத  குழந்தையாய்  இருக்கும்போது   ஆனந்திக்கு  டிரான்ஃபர்  கிடைத்திருக்க..   அதன்பின்  ஆனந்தியின்  வாழ்வில்  ஆனந்தம்  மட்டுமே  நிறைந்திருந்தது.
                        ||||||||||||
      ‘என்ன  சந்திரா  இது…?”  என  கிச்சனிலிருந்து  வேகநடைபோட்டு   மனைவியின்  கையை  எட்டிப்பிடித்தார்  நீலகண்டன்.
     ‘உங்களாலதான்   நான்  இன்னும்  சரியா  நடக்காம  இருக்கேன்..” என்று  நீலகண்டனை  சந்திரமதி  முறைக்க..
     ‘நாலுவருசத்துக்கப்புறம்  இப்போ இரண்டு  மாசமாதான்  கொஞ்சமா  நடக்க ஆரம்பிச்சிருக்க..    இப்போ  தனியா  நடந்தே  ஆகனுமா…?” என  கடிய..
     ‘மாலா..  உங்கண்ணனுக்கு  கோபப்பட  தெரியும்னு..  இன்னைக்குத்தான்  எனக்கு  தெரியுது..” என்றபடி  சந்திரவாணனும்  மாலாவும்  வருகை புரிய..
     ‘வாங்க..  வாம்மா..” என்று  வரவேற்ற  நீலகண்டன்..
       ‘காயுமா.. அப்பாம்மா  வந்திருக்காங்க  தண்ணிஎடுத்திட்டு  வாடா..” என காயத்ரியை  அழைத்தவர்..  ‘ரொம்ப  வீக்கா இருக்கா..  கீழே ஏது  விழுந்துட்டா  என்னங்க  பண்றது..?  சொன்னா  புரிஞ்சிக்கிறதே இல்ல..  நான்  இல்லாத  நேரமா  பார்த்து  ஸ்டிக்கூட  எடுத்துக்காம  வாசல்  வரைக்கும்  நடந்து  வந்திடறா..” என  வருந்தி  குற்றம்  சுமத்த..
     ‘ஏன்  சந்திரா  மாப்பிள்ளையை  இப்படி  படுத்துற..?” என்று  சந்திரவாணனும்  குறைபட..
     ‘அண்ணா..  டாக்டரே    முடிஞ்சவரைக்கும்  தினமும்  வீட்டுக்குள்ளவே  நடந்து  பாருங்கன்னுதான்  சொல்றார்.. இவர்தான்  என்னை  எதுவும்  செய்யவிடாம  ரொம்ப  படுத்துறார்..” என்றார் சலிப்பாக.
      ‘நீங்க  இங்கவந்து  நாலுவருசமாச்சி..   என்னதான்  சிரிச்சிபேசினாலும்  மாப்ளமுகத்தில   ஒருவாட்டம்  இருந்திட்டேதான்  இருக்கும்..   இப்போ  இரண்டுமாசமா  நீ  நடக்க  ஆரம்பிச்சதுக்கப்புறம்தான்   அவர்முகத்தில  நிம்மதி  தெரியுது..  உன்  நல்லதுக்குத்தான  சொல்றார்..  மாப்ள  என்ன  சொல்றாரோ  அதுபோல  இரும்மா…” என்றார்  சந்திரவாணன்.
     ‘போ ண்ணா..   என்  கையால  அவருக்கு  சாப்பாடுபோட்டே   நாலுவருசமாகுது..  இன்னமும்  எதுவும்  செய்யவிடாம  சமையல்கூட  அவரே  பார்க்கிறார்..” என்றார்  தன்  கணவர்மீது  கரிசனையாக.
     ‘விடு சந்திரா  செய்யட்டும்..   எனக்கெல்லாம் இப்படியொரு  சான்ஸ்  கிடைச்சா..  உங்கண்ணனை  நல்லா  வேலைவாங்கிடுவேன்..” என்று  மாலா  சிரிக்க..
     ‘அச்சோ..  என்ன  பேச்சு பேசுறிங்கண்ணி..?  இனி  எப்பவும்  விளையாட்டுக்கு  கூட  இப்படி  அபத்தமா  பேசாதிங்க..” என்று  சந்திரா பதற..   நீலகண்டனும்   அக்கறையாக  கண்டித்தார்  மாலாவை.
     ‘அப்பா…” என  தண்ணீரோடு  வந்தாள்  காயத்ரி.
       மகளிடம்  தண்ணீர்  வாங்கியவர்.. ‘அப்பாம்மாவை  மறந்து..  அப்டியே  அத்தைபுள்ளையாகிட்ட..” என்றார்  சிரிப்போடு.
      ‘அத்தைபுள்ள  இல்லண்ணா..  சரியான  மாமாபுள்ள..  ரெண்டுபேரும்  எந்நேரமும்  ப்ராஜக்ட்  ஒர்க்குன்னு   லேப்டாப்போடதான்   இருக்காங்க..” என்றார் சந்திரா.
      காயத்ரிக்காக..  கோவையில்  தான்  வேலைசெய்த  ஐ.டி. கம்பெனியில்..  வீட்டில்  இருந்தபடியே  ஆன்லைனில்  வேலைசெய்வதாக  கேட்டு..  காயத்ரி  எனக்கு  மகள்போல..  பக்கத்திலிருந்து  தானே கைட்செய்வதாக  சொல்லவும்..   முப்பதுவருடங்களாக   எந்த  சலுகையும்  எதிர்பாராமல்..  நீலகண்டனின்  நேர்மையான  உழைப்பிற்கும்..   திறமைக்கும்  அடிபணிந்து  அந்நிறுவனத்தினர்  அதற்கு  ஒப்புதல்  அளிக்க..  காயத்ரிக்கு  அனைத்தும்  சொல்லிக்கொடுத்தார்  நீலகண்டன்.
      கடந்த  இரண்டு வருடமாக  காயத்ரி  தனது  அத்தைவீட்டில்தான்  வசிப்பது.  இப்பொழுது  காயத்ரி தனது  பணியில்  நன்றாக கற்றுத்தேர்ந்திருந்தாள்.  அவளின்  சம்பளமும்  முப்பதாயிரத்திற்கு  மேல்.
     ‘நீங்கபார்த்து   சொல்லவும்தான்  இதுக்குகூட  சதீஸ்  சம்மதிச்சாப்ல..   அப்பா  அம்மான்னு  உங்களையும்  அண்ணியையும்தான்  முறைவச்சி  கூப்பிடறது..  எங்களை  அத்தை மாமான்னு  சொல்றதில்ல..  வாங்க  போங்கங்கிறதோட  சரி..  அதுவும்  தேவைப்பட்டாத்தான்  பேசறது..  உங்ககிட்டமாதிரி  எங்ககிட்ட  சகஜமா  பேசறதில்ல..” என  சதீசை  வழக்கம்போல்  குறைபட..
     ‘போகப்  போக  சரியாய்டுவாப்ல  விடுங்கண்ணி..” என்று  சந்திரா  ஆறதலளிக்க..  ‘அதெப்படி  அத்தை..?  சதீசை  குறைசொல்லலன்னா  அம்மாக்கு  தூக்கம்  வராதே..” என்று  காயத்ரி  சிரிப்போடே  சொல்ல..
      ‘ம்ம்..  மருமகனை  குறைசொல்லனும்னு  எனக்கு  வேண்டுதல்..  ஒழுங்கா  எங்கப்பாம்மாவை  அத்தைமாமான்னு  சொல்லுன்னு  அங்க  சொல்லத்தெரியல..  இங்க  வந்திட்டா  என்னை  பேசறதுக்கு..” என மாலா  நொடிக்க..
     ‘சந்திரா..  நாளைக்கு   காயத்ரிக்கு  நலங்கு  வைக்கனும்..   என்  சின்னமருமக  எப்போ  வருதாம்..?” என்றார்  சந்திராவணன்.
     ‘கிளம்பிட்டாங்களாம்  ண்ணா..  இன்னும்  அரைமணிநேரத்தில  வந்திடுவாங்களாம்..  இப்போதான்  அபர்ணா  போன்  செய்தா..  அதிசயமா  சிவாதம்பியும் பத்துநாளைக்கு லீவ்  போட்டுருக்கு.. கல்யாணம்   முடியிறவரைக்கும்   ரெண்டுபேரும்  இங்கதான்  இருக்கப்போறாங்களாம்..” என்றார்  சந்திரா.
     ‘அபர்ணாக்கு  வாந்தியெல்லாம்  நின்றுச்சாமா..?” என  சந்திரா  கேட்க..
     ‘ம்ம்  நின்றுச்சாம்  அண்ணி..  ஸ்கேன்  எடுக்கறதுனாதான்  இவ  ஹாஸ்பிட்டல்க்கு  போறா..  மத்தபடி  எல்லாமும்..  சம்மந்தியும்..  அவர்பொண்ணும்  ரொம்ப  அக்கறையா  பார்த்துக்கிறாங்க..”  என்றார் பெருமையாக.
     ‘அப்புறம்   சதீஸ்தம்பி  என்ன  சொல்றார்..?” என்றார்  நீலகண்டன்.
     ‘அந்த தம்பி    பிடிச்சபிடியிலேதான்  நிக்கிறார்..  ரொம்ப  பிடிவாதம்..” என  முகம்  சுருக்கினார்  மாலா.
      ‘அப்டி  கோவிக்ககூடாதுமா..   சந்திராவை  கல்யாணம்  பண்ணும்போது  என்கிட்டகூட   எந்த  சொத்துபத்தும்  கிடையாது..  இப்போ  நாங்க  மேலவரலையா..?   பிடிவாதம்  பிடிச்சாலும்..  வாடகை  வீட்ல  இருந்தவங்க  இப்போ  சொந்தமா  வீடுகட்டிட்டாரில்ல..?” என்றார் மெச்சுதலாக.
       சந்திரா.. ‘இன்னும்  கொஞ்சம்  பெருசா  கட்டுங்க..  நாங்க  பணம்தரோம்னு  சொன்னதுக்கு   ஒத்துக்கவே  மட்டன்னுட்டார்..” 
     ‘ஒரு  பெட்ரூம்..  ஹால்..  கிச்சன்..  பூஜைரும்னு..  நல்லாதான  கட்டியிருக்கார்..  மேலயும்   ரூம்போட்டுருக்காப்ல..  இவளுக்குத்தான்  மனசே  அடையல..” என்றார்  சந்திரவாணன்.
      ‘நம்ம  சிவாதம்பியே   அதிகசம்பளம்  தரேன்..  அங்கயே  வந்திடுங்கன்னு  கேட்டுச்சி..    இங்க  என்னை  நம்பி   சிலம்பம்..  வாலிபால்  கோச்சிங்னு  நிறை  குழந்தைகள்  இருக்காங்கன்னும்..    அதோட   எங்கப்பாம்மாக்கு  இந்த  ஊர்தான்  பிடிச்சிருக்கு..  இங்கவிட்டு  வேற  எங்கையும்   போமாட்டேன்னு   அதுக்கும்  மறுத்திட்டாப்ல..
      இந்த  வெற்றியும்   சதீசுக்கு  எந்த  கண்டிசனும்   நாம  போடக்கூடாது..  அவன்  மனசுபோலவே  இருக்கட்டும்..  அதைதான்  காயுவும்  விரும்புவா..  நாமளும்   காயுவை  பக்கத்திலயிருந்து  பார்த்துகிட்டமாதிரி  இருக்கும்னு  சப்போர்ட்  பண்றான்..” என  மருகியவர்..  அங்கு வந்த  வெற்றியைப்  பார்த்ததும்  கப்பென  அமைதியானார்  மாலா.
     ‘வா  வெற்றி…  என்ன  அதிசயம்..?” என  நீலகண்டன்  வியந்து  சந்தோசத்தோடு  அழைக்க..
      ‘அபர்ணா  ஊருக்கு  வரேன்னு  சொல்லியிருப்பா..  அதான்  பையன்  எல்லா  வேலையையும்  விட்டுட்டு  வந்துட்டான்..” என்று  பெருமையோடு  சந்திரா  சொல்ல..
       நீலகண்டன்  சந்திராவை  முறைக்க.. கணவனின்  மனமறிந்தவர்..
      ‘போங்க..  உங்களுக்குத்தான்  வெற்றி  மருமகன்..  எனக்கு  அவன்  வெற்றிதான்..  நான்  அப்படித்தான்  சொல்லுவேன்..” என  வழக்கம்போல்   சந்திரா  உரைக்க..
      ‘உன்னை  திருத்தவே  முடியாது..” என  சொல் லிக்கொண்டிருக்க..
      ‘ருத்ரா  தாத்தாட்ட  போ..” என்று  தன் மகனை  காரிலிருந்து  இறக்கியவன்..  மகளை  தன்  தோள்மேல்  போட்டபடி  இறங்க..
     ‘அத்தா…hhன்..” என்றபடி  அபர்ணா  காருக்குள்ளிருந்தபடியே  கத்த..
      சிவமுகிலன்  தன்  மனைவி  இறங்க  கைகொடுக்க..   காரிலிருந்து  இறங்கிய   ஏழுமாத  கர்பினி   எந்த  மாற்றமுமின்றி   வழக்கம்போல்  துள்ளலாய்  வெற்றியருகே  வர..
       ‘ஏய்..  பார்த்து..   பார்த்து..  அபர்ணா..” என்றவன்  தன்  மகளை ஒருகையில்   பிடித்து..  மறுகையில்  அபர்ணாவை  பிடிக்க..
      ‘கொஞ்சம்  கூட  மாறவே  மாட்றா  வெற்றி..  இப்படித்தான்  அங்க  வீட்லயும்   தடதடன்னு  படியில  இறங்குறா..” என்று  சிவா புகார்  வாசிக்க..
     ‘ஏன் மாமா  வந்தும்  கோபப்படுறிங்க..?” என்று  சிவாவை  நக்கலடிக்க..
      ‘வாய  மூடுறி..” என்று  வெக்கத்தோடு  சிவா  அதட்ட..
      ‘நீ  ஏன்  சிவா  வெக்கப்படுற..  எங்கப்பா  சொன்னதிலயிருந்து  நல்லபிள்ளையா  அபர்ணா  உன்னை  மாமான்னு  கூப்பிடுறா..   அவங்கக்காவும்தான்  இருக்காளே..” என்று  வெற்றி  பொய்யாய்  சலிக்க..
      ‘இங்கன்னா  பரவால்ல  வெற்றி..  கம்பெனிலயும்  மாமா  மாமான்னே  கூப்ட்டு  கொல்றா..   கூப்டாதடின்னா   எத்தனைபேர்  இருந்தாலும்   நீ  என்  புருசன்தானன்னு   அதையும்  எல்லாருக்கும்  கேக்குறமாதிரி  சத்தமாவே  கேட்டுவைக்கிறா..” என்று  கடுகடுக்க..
      ‘அத்தான்..  பட்டும்மாவை  என்கிட்ட  கொடுத்திட்டு  மாமாவோட  பேசுங்க..     அவர் கம்ப்ளைன்ட்  நீண்டுகிட்டே  போகும்..” என்று  வெற்றியிடமிருந்து  குழந்தையை  வாங்க  கை நீட்ட..
      ‘முதல்ல  வீட்டுக்குள்ள  வந்து  உக்காரு.. அப்புறம்  தரேன்..” என்று  தன்  குழந்தையை  தோள்மீதுபோட்டு  ஒருகையில்  பிடித்து..  அபர்ணாவையும் மற்றொரு  குழந்தையைப்போல்  கைப்பிடித்தே  அழைத்துவந்தான்.
      ‘வாங்க  தம்பி..” என  சிவாவை  வரவேற்ற சந்திரா..  ‘வாசல்ல  வச்சே  மீட்டிங்கை  ஆரம்பிச்சிட்டிங்களா..?” என   கேட்க.. 
       ‘ஆமாங்கான்ட்டி..” என  சிரிப்போடு  சொன்னவன்..  பிறகு  வெற்றியின்  பெற்றோர்..  மாமனார் மாமியார் என  ஒவ்வொருத்தராய்  நலம்  விசாரித்தவன்..
       ‘ஹாய்  ருத்துகுட்டி..” என்று  வெற்றியின்  மகனை  தூக்கி கொஞ்சிக்கொண்டே.. ‘ஆனந்தி  எப்ப  வருவாங்க  வெற்றி…?” என்றான்.
      ‘ஈவ்னிங்   செவன்க்கு  மேல  ஆகிடும்  சிவா..  நாளைல  இருந்து  அவளும்  பத்துநாளைக்கு  லீவ் போட்டுருக்கா..” என்றான்  சந்தோசத்தோடு.
     சிவா.. ‘அப்புறம்  காயு..  உன்  ஒர்க்கெல்லாம்  எப்படி  போகுது…?” 
      ‘சூப்பரா  போகுதுண்ணா..  மாமா  செம்மையா  கைட்  பண்றார்..” என்றாள்   சந்தோசத்தோடு.
      ‘அவர்  நாளேட்ஜ்க்கு  முன்ன..  நான்கூட  ஒன்னுமே  இல்ல  காயு..  எதாவது  டௌட்ன்னா  நானும்    அங்கிள்ட்டதான்  கேட்டுக்கிறேன்..” என்றான்  பெருமையாக.
       ‘ஊர்மி  அப்பாம்மால்லாம்  எப்பதம்பி  வராங்க..?” என்று  சந்திரா கேட்க..
      ‘கல்யாணத்துக்கு  ஒருநாள்  முன்ன  வந்துருவாங்க ஆன்ட்டி..  ஊர்மிக்குத்தான்  அபர்ணாவை  அனுப்ப  மனசே  இல்ல..  கவனமா இருன்னு  அத்தனைமுறை  சொல்லியனுப்பினா..” என்றான்  பெருமையாக.
      ஒருமணிநேரம்  வரை  பேசிக்கொண்டிருந்து..  ‘மாப்ள..  அங்க  வீட்ல  யாருமே  இல்ல..  காயுவை  கூட்டிட்டு  நாங்க  கிளம்பறோம்..  வெற்றி  இன்னைக்கு  இங்கதான்  இருக்கப்போறானாம்..   ஆனந்தியும்  காலேஜ்லயிருந்து   நேரா  இங்கதான்  வரதா  சொன்னுச்சி..  இன்னைக்கு  ஒருநாள்  இங்கயிருந்திட்டு..   நாளைலயிருந்து    கல்யாணம்  முடியறவரைக்கும்  எல்லாரும்  அங்கதான்  இருக்கனும்..” என்று  அன்பு  கட்டளையிட்டு   காயத்ரியை  அழைத்துச்சென்றார்  சந்திரவாணன்.
   
      ‘வெற்றி..  காயுவோட  ஒர்க்  ரொம்ப  பிடிச்சதால..  மெயின்பிரான்ச்ல  இருந்து  யார்  இந்த  நியூ கேன்டிடேட்டை  கைட்பண்றாங்கன்னு  கேட்டுருக்காங்க..    காயுவோட  நியூ எம்.டி என்பேரை  சொல்லவும்..  மெயின்  பிரான்ச்ல  வேலைசெய்ய என்கிட்ட  கேக்குறாங்க..   நல்லசம்பளம்  தருவாங்க..  உங்கத்தை  வேணாம்னு   சின்னகுழந்தையாட்டமா  அடம் பண்றா..  கொஞ்சம்  சொல்லுவெற்றி..” என்றார்  நீலகண்டன்.
     ‘அத்தை  சொல்றது  சரிதான்  மாமா..  ஐ.டி ஒர்க்கெல்லாம்  மென்டலி  டார்ச்சல்  வேலை..  உழைச்சது  போதும்  ரெஸ்ட்  எடுங்க..” என்றான்  அத்தைக்கு  ஆதரவாக.
      ‘அதுக்கில்ல  வெற்றி..  நம்ம  சதீசை  எடுத்துக்கோ..   அவ்ளோ  குறைஞ்ச  வருமானத்திலயும் சின்ன  சின்ன உதவிதான்னாலும்..  எத்தனை  குழந்தைகளை  கேர்  எடுத்துக்கிறான்..   இத்தனை  வசதியிருந்தும்   யாருக்கு  என்ன  செய்தோம்னு   என்னை  யோசிக்கவச்சிட்டான்..  கொஞ்சநாள்   அடுத்தவங்களுக்காக  உழைக்கலாமேன்னு  தோணுது..  மனசுக்கு   நிறைவா  இருக்கும்ல..?” என்றார்.
       வெற்றி  தன்  மாமாவை  பெருமையாய்  பார்த்திருக்க..  அதை  கவனித்த  சந்திரா  வெற்றியை  முறைக்க.. ‘உங்க  விருப்பம்மாமா..” என்று  நழுவிக்கொண்டான்.
                                 ——————————-
       அனைவரின்  ஆசிர்வாதத்தோடு  காயத்ரி  சதீசின்  திருமணம்  நடந்து  முடிந்திருக்க..    தாலிகட்டி   அரைமணிநேரம்வரை  மனமேடையில்  இருந்தவன்..   அதன்பின்   சதீசை  சுற்றி  அவனின்  மாணவ  மாணவிகளின்  படை  சூழ்ந்துகொள்ள   அவர்களோடு   ஐக்யமானான். 
      அவனிடம்  இலவசமாக  பயிலும்  அனைத்து   மாணவ  மாணவிகளும்   வறுமைக்கோட்டிற்கும்  கீழுள்ளவர்களே.  மாணவர்களின்  குடும்பங்களையும்   அழைத்திருந்தான்  தன்  திருமணத்திற்கு.   திருமண  சாப்பாடு  அவர்களுக்கு  மிகப்பெரிய  விருந்தாக  இருக்க..  அவர்களுக்கு  தானே  முன்னிருந்து   பரிமாறினான்.  
      காணக்கிடைக்காத  விருந்தை  ரசித்து  உண்டுகொண்டிருந்தார்கள்  மாணவர்களோடு  சேர்த்து  அவர்களின்  பெற்றோர்களும். 
      ‘தம்பி..   உங்களாலதான்   என்  பொண்ணு   மாநில  அளவில விளையாடறதுக்கு  தேர்வாயிருக்கா..   அதுலயும்  நல்லா  விளையாண்டா   இன்னும்  பெரியாளா  வருவாளாமே..” என  பெருமையாக  கேட்க..
      ‘உங்க  பொண்ணோட  திறமையாலதான்மா   அவ  தேர்வாயிருக்கா..  இன்னும்  கொஞ்சநாள்ல   தேசிய  அளவில  விளையாடப்போறா  பாருங்க..” என்றான்  சதீசும்  பெருமையாக.
      ‘உங்க  தங்கச்சியாட்டம்   பார்த்துக்கிறிங்க..   என்ன  செஞ்சி  உங்க  கடனை  அடைக்கப்போறோமோ…” என  கண்கலங்க..
      ‘தங்கையாட்டம்னு  சொல்றிங்க..  அப்புறம்  எப்படிம்மா  அது  கடனாகும்.?   கவிதா…  அப்பாம்மாவை  கூட்டிட்டு  போய்  சாப்பிட  உக்காரவை..” என  கட்டளையிட்டு  அடுத்த  மாணவனின்  பெற்றோரிடம்  பேசிக்கொண்டிருந்தான்.
      சதீசின்  மீதிருந்த   குறைகளெல்லம்  களைந்தவராய்..  தன்மருமகனை  பெருமையாய்  பார்த்திருந்தார்  மாலா. 
      சதீசை  கவனித்திருந்த  சந்திராவும்  நீலகண்டனிடம்.. ‘ஏங்க  எதோ  வேலைசெய்யப்போறேன்னு  சொன்னிங்களே..  உங்க  விருப்பம்போல  செய்ங்க..” என  மனநிறைவோடு  சொல்ல..   நீலகண்டன்  வியப்போடு  மனைவியைப் பார்க்க..
     ‘நிஜமாத்தான்  சொல்றேன்..  அதோட  எனக்கும்  இந்த  குழந்தைகளுக்கு  எதாவது  செய்யனும்னு  தோணுது..” என்க..
      ‘சூப்பர்  சந்திரா..” என்று  நீலகண்டன்  தன்  மனைவியை  காதலோடு  பார்க்க..  ‘மாமா..  இங்கையுமா..?” என்றபடி  வெற்றி  தன் மாமாவிடம்  வர..
      வழக்கம்போல்  பொய்யாய்  முறைத்தவர்.. ‘வெற்றி..  உன்  அத்தை  நான்  வேலைசெய்ய  ஓ.கே  சொல்லிட்டா..” என்றார்  சந்தோசத்தோடு.
       ஒருமணிபோல்  புதுமணத்தம்பதிகளோடு   அனைவரும்  வெற்றியின்  வீட்டிலிருக்க..  காயத்ரியின்  வீட்டிற்கு   வந்தபிறகுதான்  சதீஸ்..  வெற்றி  சிவா..  நீலகண்டன்  என  தன்  குடும்பத்தினரிடம்  சற்று  இயல்பாக  பேச  ஆரம்பித்தான்.
       ‘சாரிங்க..  மண்டபத்தில  யாரோடவும்  சரியா  பேசமுடியல.. ஸ்டூடண்சோட  டைம்  ஸ்பென்ட்  பண்ணலனா..  சின்னபசங்க  பாவம்  ஏமாந்திடுவாங்க..  அவங்க  அப்பாம்மால்லாம்   நாம  உதாசினப்படுதினதா நினைச்சிடுவாங்கன்னுதான்  அவங்களோடவே  இருக்கமாதிரி  ஆகிடுச்சி..” என்றான்  வருந்திய  குரலில்.
      ‘பரவால்ல  சதீஸ்..” என  வெற்றி  தேற்ற..
      ‘நீலகண்டன்  தாம்  வேலை  செய்யப்போவதாகவும்..  மாதம்  ஐம்பதாயிரம்  வரை  மாணவர்களுக்கு  கொடுப்பதாகவும்  சதீசிடம்   அன்பு  வேண்டுகோள்  விடுக்க..
       ‘அப்பா..  ஐம்பதாயிரம்தானா..?  உங்க  லெவலுக்கு  இன்னும்  நிறைய  தருவாங்களே..” என்றான் சம்மதத்தோடு.
      நீலகண்டன்  சந்தோசிக்க.. ‘நாங்க  கொடுத்தா  மட்டும்  ஏன்  வேண்டாங்கிற..?” என்று  சிவாவும்  வெற்றியும்  உண்மையான  கோபத்தோடு  சண்டைக்கு  கிளம்ப..
      ‘அச்சோ  ரெண்டுபேரும்  மச்சான்கிட்ட  இப்படி  சண்டைக்கு  கிளம்பினா..  இந்த  சின்ன  பையன்  பயந்துடமாட்டானா.?” என  பயந்தவன்போல்  கேட்க..
       வெற்றி  கோபமாகவே  இருக்க.. ‘கோவிக்காதிங்க  மாமோவ்..  நான்  தனியா  செய்தாதான்  எனக்குள்ள  ஒரு  ஆத்மதிருப்தி  கிடைக்கும்.. என்னவோ  தெரியல..  நீலாப்பா பேச்சைமட்டும்  என்னால  மீறமுடியமாட்டுக்குது.. 
      உங்களுக்கு  செய்யனும்னா..   திறமையிருந்தும்  வெளிப்படுத்த  முடியாத  நிறைய  குழந்தைகள்  இருக்காங்க..  என்னோட  ஃபிரெண்ட்  நேசனல் லெவல்ல  கோச்சா  இருக்கான்..   கிட்டதட்ட  நூறு ஸ்டூடண்ஸ்க்குமேல  அவன்கிட்ட  இருக்காங்க..   அவன்கிட்ட  உங்களைப்பத்தி  சொல்றேன்..  நீங்க  அவங்க  மூலமா  செய்ங்களே..” என்றான்  தன்மையாக.
       சிரித்த  வெற்றிமாறன்.. ‘இதென்ன..? புதுசா  மாமாங்கிற..?” என்றான்.
      ‘அம்மாதான்  அப்படி  கூப்பிடசொன்னாங்க..  எனக்கும்  பிடிச்சிருக்கு..  என்னங்க  சிவாமாமா..   நான்  சொல்றது  சரிதானுங்கோ..” என கேட்க..
       ‘அச்சோ..  ஏற்கனவே  இங்கொருத்தி  மாமா  மாமான்னு  டார்ச்சர்  பண்றா.. நீ  வேறயா  சதீஸ்…?” என்றான்  வெக்கத்தோடு.
       நேரம்  இனிமையாக சென்றுகொண்டிருக்க..  ஆனந்தி  பால்  பழம்  கொடுக்க..  மனமக்கள்  சாப்பிட்டதும்..  காயத்ரி  தனதறைக்குள்  சென்றிட..
      ‘சதீஸ்..  கொஞ்சநேரம்  ரெஸ்ட்  எடுங்க..” என்று   காயத்ரி  ரூமை  ஆனந்தி  காண்பிக்க..
       ‘எப்பவும்   நாலுமணிக்கு  எழுந்து  பழக்கம்தான்.. எனக்கொன்னும்  டையர்டா  இல்லக்கா..   நான்  மாமாங்களோட  இருக்கேன்.. “ என்க..
       ‘கல்யாணத்திலயும்   ஸ்டூட்ணஸ்சோடவே  இருந்திட்டிங்க..   காயுவை  கண்டுக்கவே  இல்ல..  காண்டாகிடப்போறா…  போங்க  சதீஸ்..”என்றாள்  சிரிப்போடு.
      ‘ஆமாம்ல..  பாய்  மாமூஸ்..” என  சிரிப்போடே  மனைவியின்  அறைக்குள் சென்றான்.
                        
        அடுத்து  வந்த  நாட்களில்..  சதீசின்  அன்பு வேண்டுகோளுக்கிணங்கி..   சந்திரா  நீலகண்டன்..  சந்திரவாணன்  மாலா..   வெற்றி..  வெற்றியின் மகன்  ருத்ரன்   என  அனைவரும்  காலை  ஆறுமணிக்கெல்லாம்   சதீசோடு   கிரௌண்டிற்கு  சென்றிடுவர். 
       தன்  பேரனோடுதான்  சந்திராவும்.. மாலாவும்  நடைபயில்வது..  வெற்றியும்  ஜாகிங்..  உடற்பயிற்ச்சி   செய்வது..  என  புதுவழக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டான்..  நீலகண்டனும்  சந்திரவாணனும்   சின்ன  சின்ன  உடற்பயிற்சிகளோடு   மாணவர்களோடு  சிறிதுநேரம்  செட்டில்  விளையாட  ஆர்வம்  காட்டத்தொடங்கினர்.
      மாணவ மாணவிகளோடு  காலைப்பொழுதை  செலவிடுவது   அனைவருக்குமே  பிடித்திருக்க..  அங்கு    உறவுகளின்  பிணைப்பும்  வலுவானது. 
                      இனி எல்லாம்  சுபமே..

Advertisement