Advertisement

                          
                                  
                        அத்தியாயம் –2
      அலுவலகத்தில்  மதிய இடைவெளியின்  போது   அபர்ணாவின்  நினைவெல்லாம்  தன் அப்பாவையே சுற்றிவந்தது..   ஏன் அப்பா திடீரென்று  இன்னைக்கு   ஆபிஸ் போகலை..? எவ்வளவு வற்புறுத்தினாலும்   வீட்ல  இருக்கமாட்டாரே..   என்னாச்சி  இவருக்கு…?  என்ற  யோசனையில்  சாப்பிடாமல்  இருந்து  மதிய  உணவு இடைவெளி நேரம் முடியவே.. அப்படியே லன்ச் பாக்சை மூடிவைக்கும்போது.. அவளுக்கு நேர் எதிரே வந்து நின்றான் அவளுடைய   பாஸ்  சிவமுகிலன்.  
    அதிர்வுடன் எழுந்து நின்றாள். அவனை  தூரத்திலிருந்து   பார்க்கும்போதே   அவளுக்கு  நடுக்கம்   வந்துவிடும்.   இன்று   நேரெதிரே  குறைந்த  இடைவெளியில்  காணவும்..   பெரிதாய்  அதிர்ந்திருந்தாள்.
      ‘சாப்பிடும்போது  கனவு கண்டுட்டு இருந்துட்டு..  இப்ப  சாப்பிடாம  பசியோட வேலைசெய்வியா….?” என  கடுகடுத்தான். 
     ஏங்கிருந்துதான்  பார்ப்பானோ…? நான் ஏதாவது   செய்தா மட்டும் கரெக்டா கண்டுபிடுச்சுடுவான்..  என்று  மனதில்தான்  நினைத்தாள்.
     ‘என்ன அமைதியா இருக்க..?  கேள்வி கேட்டா பதில் செல்ல தெரியாதா..? மனசில  என்னை தான  திட்டிட்டு இருக்க..?”  என  முறைத்தான்.
     ‘அப்படியெல்லாம் ஒன்னும்  இல்லைங்க  சார்.” என  திணறினாள்.
      ‘எந்தப் பிரச்சனையாயிருந்தாலும் அத சரிசெய்ய பார்க்கனும்.  அதவிட்டுட்டு சாப்பிடாம இருந்தா..  எல்லாம் சரியாயிடுமா…?” என்றான்  கர்ஜனையாக.
    ‘ஒரு பிரச்சனையும் இல்லைங்க  சார்.” என்றாள்  குறலிறங்கியபடி.
    ‘அப்ப ஏன் சாப்பிடலை…?” என்றான்  சிறு  உரிமையோடு.
     தன்  தந்தை  இன்று  வீட்டில்   இருந்ததால்..  குழப்பத்தில்  இருந்த  அபர்ணா..   தற்போது  சிவமுகிலனின்  தேவையில்லாத  கேள்விகளால்  கடுப்பாகிபோனாள்.  ஆனால்  அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு 
     ‘சார்…  நிறைய  வேலை இருக்கு நான் போகவா..? ப்ளீஸ் சார்..” என  வெறுப்பை  உள்ளடக்கியபடி  கேட்டாள்.
     ‘ஓ..ஹோ  நான் பேசிட்டு இருக்கும்போதே போறேன்னு   செல்ற அளவுக்கு..  உனக்கு  தைரியம்  வந்திடுச்சா..?  அதுவும் நான் கேட்ட கேள்விக்கு பதில் கூட செல்லாம..?” என  கோபப்பார்வை  பார்க்க..
     ‘சார்.. சாரி சாரி.. ங்க.. சார்..  நீங்க என்ன கேட்டிங்கன்னு  மறந்திடுச்சு.” என்று  பயத்தோடு  அவனை  பார்க்க..
     ‘அப்போ உன்னுடைய மைண்ட் இங்க இல்ல..  அப்படிதானே..?”   இது என்னடா வம்பா போச்சி.. இன்னைக்கு   என்   நேரமே  சரியில்ல போல..  என தவிப்பாய்  அபர்ணா  நினைக்க.. 
     ‘என்ன.. மறுபடியும்  அமைதியாயிட்ட..? என்னை   என்னன்னு   நெனச்ச..? உன் முன்னாடி நின்னுகிட்டு   உன்னுடைய    மூஞ்சிய    பார்த்துகிட்டு   இருக்கறது   மட்டும்தான்   என்னுடைய வேலைன்னு  நினைச்சியா..?  ஒழுங்கா சாப்டிட்டு   இன்னும்  பத்து   நிமிசத்தில   என்னுடைய கேபின்க்கு வரனும்..  ஓக்கே….?” என  அழுத்தத்தோடு  சொல்ல.. 
    ‘எஸ்  சார்…” என்றாள்  விறைப்பாக.
     பிறகுதான்  அவ்விடம்  விட்டு  நகர்ந்தான்  சிவமுகிலன்.
    அவன் கிளம்பிய பிறகுதான்  அவளுக்கு   மூச்சே  வர..  அப்பாடா.. என்றிருந்தது.   கேபின்  கதவருகே  நின்று அவளின் முக ரியாக்சனை பார்த்துவிட்டு   சின்ன  சிரிப்புடன் உள்ளே சென்றான்.
      சிவமுகிலன் வயது இருபத்து  எட்டு.  நல்ல உயரம்.  மாநிறத்திற்கும்  சற்று  மேலான  நிறம்.   தனது  உடற்கட்டில்  அதிக  கவனம்  செலுத்துபவன்  ஆதலால்   ஜாகிங்..  உடற்பயிற்ச்சி   என   அவனின்  காலைப்பொழுதை  முழுதாய்  அற்ப்பணிப்பான்.  அழகாக  சீரமைத்திருக்கும்  அடர்ந்த  கேசம்.  அடர்த்தியான  நீண்ட புருவம்.. கூர்மையான  நாசி..  வலிமையான  ஆண்மகன்  நானென பறைசாற்றும்  அடர்ந்தமீசை..     தேவைப்படும்போது  மட்டும்  உதிர்க்கும்  சிரிப்பு..  என்று  அனைவரையும்  வசீகரிப்பவன்.  அம்மா   லலிதா..  இல்லத்தரசி.  அப்பா..  முத்துகிருஷ்ணன் டாக்டர்.  அக்கா  ஊர்மிளா..   அரசு மருத்துவமனையில்  டாக்டராக  பணிபுரிகிறாள்..   ஊர்மிளாவின்  கணவரும்  மருத்துவரே.
      சிவமுகிலனை அவருடைய  அப்பா..  எவ்வளவோ  வற்புறுத்தியும்  தான்  விருப்பப்பட்ட  டாக்டருக்கு  படிக்க  வைக்க முடியவில்லை.  எனக்கு  இஷ்டமில்லை  என்று  தெளிவாக  சொல்லிவிட்டான்.   அவனுக்கு  பிடித்த  இன்ஜினியரிங்  படித்துவிட்டு..  பணவசதி  இருந்தும்..  அப்பாவின்  சூரட்டி  கையெழுத்து  மட்டுமே   போதும்  என்று   வங்கியில்   லோன் பெற்று.. சிறிதாக  ஆரம்பித்த  கம்பெனியை..    தனது  விடா முயற்ச்சியில்   இப்போது  நல்ல  உயரத்திற்க்கு  கொண்டு  சென்றிருந்தான்.   அவன்   முன்னேற்றத்தின்   சாட்சியாக.. 
        ஒரு  பெயர்  பெற்ற  பாரின்  கம்பெனியிடம்   இருந்து  பெரிய ஆர்டர்  வந்திருக்க..  அதனை  வெற்றிகரமாக  செய்துமுடிக்கவே..  அயராது  உழைத்துக்   கொண்டிருந்தான்.
     சிவமுகிலனுக்கு  அலுவலகத்திலும் நல்ல பெயர்தான்..  பெண்களிடத்தில் அதிகம் என்று சொல்லமுடியாது.  முடிந்தவரை  வைத்துக்கொள்ள மாட்டான்.  நடுத்தர வயதுடைய  இரண்டு   பெண்கள்..  நிறைய ஆண்கள்  வேலைபார்க்கிறார்கள். இவளுடைய   வயதிலும்   இவளோடு   சேர்த்து..  பதினோரு   பேர்  வேலை  பார்க்கிறார்கள்  அவர்களிடமும்  அப்படித்தான்.  ஆனால்  எதாவது  தேவை   என்று  யார்  கேட்டாலும்   நியாமாக   இருக்கும்   பட்சத்தில்   உடனே செய்து   கொடுப்பான்.  தேவையில்லாமல் பேசினால் உக்கிரமான முறைப்புடன் உங்க வேலைய மட்டும் பாருங்க..  என்று  கர்ஜித்துவிட்டு   விறைப்பாக சென்றுவிடுவான். 
      வேலைக்கு  சேர்ந்து  இரண்டு மாசம்தான்  ஆகுது..  இத்தனைநாள்   இவனிடம்  தப்பித்துவிட்டு..  இன்று  மாட்டிக்கொண்டோமே  என்ற யோசனையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.   அது சரி..  வேலை விசயத்தில் தவறு என்றால் இவன் கேட்கலாம்..  ஆனால் நான் சாப்பிடாமல் இருப்பது என்னுடை பர்சனல்.  இவன் எதற்க்கு அதைக் கேட்டான்..? நாம்  ஏன் அதற்க்குப்போய் பயந்தோம்..?
      ச்ச…  தைரியமாக நீங்க ஏன் சார் இதையெல்லாம் கேட்கறிங்கன்னு  கேட்டிருக்கலாமே..? என்று  காலம் கடந்து   யோசித்தாள்.
     யோசனையோடு நடந்து வந்தவள்.. தனது வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில்   அவளின்  கம்ப்ய10ட்டர் வேறு   ஆன்  ஆகமாட்டேன்  என்று  மக்கர் செய்ய..  போச்சிடா இது  வேறையா என்று  நினைத்து.. தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
      ‘ஹேய் என்னப்பா…?” என்றாள் பக்கத்து சீட் மீனா. 
      ‘ஒன்னுமில்லை மீனா..  நிறைய வேலை பென்டிங் இருக்கு. இப்பபோய் இந்த கம்ப்யூட்டர் வேற ஆன் ஆகாம மக்கர் பண்ணுது.  ஏற்கனவே  எனக்கு  இன்னைக்கு   டைம்  சரியில்லை..  இதுல  இது  வேற..” என்றாள்  சலிப்புடன்.
      ‘ஏய் அபர்ணா.. உன்னுடையது மட்டும்  ஏன் ஆன் ஆகலை..? நீ தள்ளு நான் பார்க்கிறேன்..” என  மீனா   அபர்ணாவின்  அருகில் வரவும்..
      ‘அப்ப உன்னுடைய வேலையை யார் பார்ப்பா..?” என்றான்.. கோபமான குரலில் சிவமுகிலன்.
      ‘சா…..ர்..” என்று  இருவரும் ஒரே நேரத்தில் திடுக்கிட்டனர்.
      ‘நான்  உன்னை  லன்ச்  முடிச்சிட்டு  என்  கேபினுக்கு  வரசொன்னனே..?  ஏன்  வரலை…?“ என்று  அபர்ணாவின்  கண்களைப்  பார்த்து  கேட்டான்.
      அடடா..  அதுக்குள்ள  மறந்திட்டோமே..  என்று  நினைக்கையில்..
     ‘சரியாப்போச்சி..  ஆக   இன்னைக்கு வேலைசெய்ய  செய்யற  ஐடியாவில  நீங்க  இல்ல.. அப்படிதான..?” என்றான்.  ஆனால் முகத்தில்  அவ்வளவு ஆத்திரம். 
     மீனாவிடம்.. ‘இங்க ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லமாட்டிங்க.. நீங்களே சரி பார்த்திடுவிங்க…  ம்ம்..?” என்றான்  எள்ளலாக.
       ‘நோ சார்.. . சாரி சார்..” என்றாள் மீனா.
      ‘என்ன அபர்ணா பதிலே காணும்..? உனக்கு  பிரச்சனைன்னா  என்கிட்ட  வந்து  சொல்லாம அடுத்தவங்களையும்   இப்படிதான் வேலை செய்யவிடாம செய்வியா..?” என்றான்  சற்று  இலகுவாக.
      அவளுக்கு மட்டுமல்லாமல்  அவனுடைய அந்த கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாரிடமும் தேவையில்லாமல் பேசாதவன்.. மரியாதையோடு பழகுபவன்..  இப்படி  இவளை மட்டும்  அதுவும்  என்றும்  இல்லாமல்  இன்று   ஒருமையில்  பேசுகிறான்  என்றால்  எப்படி அதிர்ச்சியாகமல் இருக்க முடியும்..?   அதற்க்குள் அடுத்த அதிர்ச்சியாக அவளுடை சீட்டில் அமர்ந்து கமப்ய10ட்டரை  ஆன் செய்ய நினைக்கும்போது..  மீனாவைப்  பார்த்து…
      ‘நீங்க  உங்க  வேலையைப்  போய்  பாருங்க.”  என  கர்ஜித்து..  
      அபர்ணாவைப்  பார்த்து..  ‘நகரு..  நீ  இப்படி  நின்னா..?  நான்  எப்படி  பார்க்க முடியும்…?” என்றான்  உரிமையாக.
       மந்திரித்து விட்டவள்  போல  அவள்  உடல்  அன்னிச்சையாக  நகர்ந்தது.  அதற்க்குள் அவன் என்ன செய்தானோ..  அந்த பாழாய்ப்போன கம்ப்யுட்டர் ஆன் ஆகவும்..  அவள் முகத்தில்  கலவரம்   பிறக்க..   பிறகு எப்படியோ  ஆன்  ஆனதே  என  நிம்மதியும்  வந்தது.
    ஆனால்  அவளைப்  பார்த்து  சிவமுகிலன்  முறைத்தான்.   அவனின் முக வாட்டத்தை  கண்டவுடன் அவள் முகம் மீண்டும்  பயத்தை ப10சியது.
      ‘தேங்க்யு சார்..”  என்றாள் விறைப்பாக.
      ‘ஒரு சின்ன விஷயம்..  அத சரிபார்க்க உன்னால   முடியாதா..?  இப்படி   இன்னசென்ட் மாதிரி முகத்தை வெச்சிகிட்டு..   உன்னுடைய வேலையை என்னையே  செய்ய வெச்சதுமில்லாம..  இப்படி சின்னதா ஒரு தேங்க்யு சொன்னா…? அத  வெச்சிகிட்டு  நான்  என்ன செய்யட்டும்..?”  என  கேட்க..
       பதில்  சொல்ல  தெரியாமல்  தவித்துப்போனாள்  அபர்ணா.
      அவளின்  தவிப்பை  ரசித்தவன்.. ‘தேங்க்சுக்கு  பதிலா  உன் வேலையை   ஒழுங்கா  முடிச்சி..   என்ன  டென்சன்  பண்ணாம  இரு..  அது போதும்..  என்ன…?” என  உரிமையாக  கேட்க..   சிலையாகிப்போனாள்  அபர்ணா.
      ‘மறுபடியும்  அமைதியாய்ட்டியா..? நான் கொஸ்டின் பண்னும்போது  ஆன்சர்  பண்னாம  இப்படி   இன்னொருமுறை   அமைதியா  இருந்து பாரு.. அப்ப  தெரியும்..  நடக்கறது   என்னன்னு…?” என்று கத்திவிட்டு புயல் வேகத்தில் அவனிடத்திற்க்கு   விரைந்துவிட்டான்.
       அபர்ணா  தன் வேலையை மிகக் கவனமாக பிழையின்றி செய்துமுடித்தாள்.  பிறகு   கடிகாரத்தைப் பார்க்க.. அது  இரவு ஏழுமணி என்றது.   மிகவும் சோர்வாக  உணரவும்..
        ‘ராமு அண்ணா..    எனக்கு ஒரு டீ வாங்கி தரிங்கலாண்ணா…?” என்று  கெஞ்சலோடு  சொன்னவள்.. ராமு  வந்தாரா..?  இல்லையா என்று கூட பார்க்காமல் அப்படியே டேபிளில் படுத்துக்கொண்டாள். ஐந்து நிமிடத்தில் டீ வரவும்..  அவளது கைப்பேசயில்  அவளது அக்காவின்  அழைப்பு வருவதற்க்கும் சரியாக இருக்க..   போனை  ஆன்  செய்ய..  அந்தப்புறம்  ஆனந்தி..
       ‘லேட்  ஆகறமாதிரி  இருந்தா..  ஒரு   போன்  பண்ணுன்னு  எத்தனை முறை   சொல்றது..?” என  கடுகடுக்க..
      ‘சாரிக்கா..  ஒர்க்  டென்சன்ல  மறந்திட்டேன்..  இதோ  இப்போ  கிளம்பிடுவேன்..  இன்னும்  கொஞ்ச  நேரத்தில  வந்திடறேன்..”  என்று  சொல்லி  முடித்து  அவள்  எழுந்திரிக்கும்போது  சரியாக  டீயை  தட்டிவிட..
    ‘அச்சோ… சாரி ராமு அண்ணா.. நான் கவனிக்..” அப்படியே அவள் வார்த்தை தந்தியடித்தது.  அங்கு டீயை  கையில் வைத்துக்கொண்டு  சிவமுகிலன்  நின்றிருந்தான்.
     ‘நீ.. ங்களா?  சார்…” நான் ராமு அண்ணான்னு   நினைச்சிட்டேன்..” என்று  பதறினாள்.
     ‘இப்ப  மணி ஏழு..  ஆபிஸ்ல  ஒருத்தரும் இல்லை.   ராமு  மட்டும்  உனக்கு  டீ வாங்கி தரனும்கிறதுக்காகவே   ஆபிஸ் டைம் முடிஞ்சகூட  இருப்பாரா..?  நீ அவருக்கு  தனியா இதுக்கு சம்பளம் குடுக்கிறியா..?  என்றான்.   அவன்  முகத்தில்  கோபமும் இல்லை..  அமைதியும் இல்லை..  சற்று   வித்யாசமாக  இருந்தான்.
     ‘சரி.. சரி.. அந்த கேண்டீன் பாய் இதுக்கே..  என்ன சார்..  டீ  வாங்க  நீங்களே  வந்திருக்கிறிங்கன்னு  கேட்டான்.  அதனால  மறுபடியெல்லாம்  என்னால  டீ  வாங்கி தர முடியாது.  நீ  வா.. நாம  வெளில  போய் டீ குடிச்சிட்டு  போலாம்.” என்று  கூலாக  சொன்னான்.
     ‘என்னது..? நான் உங்க  கூடவா..  என்று மனதில் நினைத்ததை  அவளது உதட்டசைவு   காண்பித்துக்  கொடுத்தது. 
     ‘இப்ப என்ன..? நான் முன்னமே சொல்லியிருந்தேன். நான் ஏதாவது பேசினா  பதில் சொல்லனும்ன்னு.   நீ  இப்படி அமைதியா இருந்தா..  அப்புறம்  டென்சன்ல  நான்  ஏதாவது  சொல்லிடபோறேன்  வா..” என்றான்  உரிமையாக.
     ‘அது… வந்துங்க   சார்..  ஏற்கனவே  லேட்  ஆனதுனால..   எங்க  அக்கா  பயந்திட்டா..   அதனால நான்  உங்ககூட..   என்னால  வ..ர   முடியாதுங்கசார்.  ப்ளீஸ் சார்..  நீங்க  தப்பா  நினைக்காதிங்க சார்..”  என்று  திக்கி  திணறி  தன் வாதத்தை முடித்தாள்.
      யோசமையோடு  அவளை  பார்த்து..  ‘சரி   வா..  ரொம்ப டைம் ஆச்சி..  நான் ட்ராப் பண்றேன்.” என்றான்  விடாமல்.
   ‘இல்…லை..  பரவாயில்லைங்க சார்  நான் போய்க்குவேன் சார்..” என்றாள்.
    ‘ஏன்?  என்கூட வரமாட்டியா…?  நான்  ஒன்னும்  உனக்காக  சொல்லலை..  இவ்ளோ  நேரம் ஆச்சி..  உனக்கு வழில ஏதாவது பிரச்சனைன்னா..   உங்க  வீட்ல  என்னைதான  கேட்பாங்க..  நான் தானே பதில் சொல்லனும்.?”   என    பேசிக்கொண்டிருக்கும்போதே  அவனுக்கு  கைப்பேசி அழைப்பு வர.. 
    ஆன் செய்து..  ’ம்ம்.. சொல்லுங்கமா..” என்றான்.
    ‘என்னப்பா  இன்னைக்கு சீக்கிரம் வரன்னு சொல்லிட்டு இப்படி லேட் பண்ற..?  இங்க  எல்லோரும்  உனக்காக  காத்திட்டு இருக்காங்க..  ஊர்மிளாவும்  மாப்பிள்ளையும்  கூட  வந்திட்டாங்க..” என்றார்.
     ‘கொஞ்சம்  வேலைம்மா.. இன்னும்  ஒரு சின்ன வேலை இருக்கு.  அதமுடிச்சிட்டு நான் ஒரு அரைமணி நேரத்தில கண்டிப்பா வந்திடுறேன்.. கொஞ்சம்  நீங்க சமாளிங்கமா ப்ளீஸ்..” என  தன்  அம்மாவிடம்  கெஞ்சலாக சொன்னான்.
     அவளுக்கு ஆச்சரியமாகிப்போனது.. இதபார்ரா இவன் இப்படி பணிவாக்கூட பேசுவானா..?   அப்புறம் ஏன் இங்க மட்டும் ஏதோ இஞ்சி  திண்ண  மாதிரியே  இருக்கான்.  என்று நினைத்துக்கொண்டே அவனையே  விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.  அம்மாவுடன் பேசிமுடித்தவுடன்…
   அவளைப்பார்த்து..  ‘கிளம்பலாமா..?” என்றான்.
   அவள் மீண்டும்  தன் விளக்கத்தை ஆரம்பிக்க.. அவன் இடைமறித்து
   ‘இங்கபார்..  இன்னைக்கு எனக்கு  பர்த்டே..   எனக்காக  என் வீட்ல  எல்லாரும்  காத்திட்டு   இருக்காங்க.  எனக்கும் டைம் ஆகுது.    சோ.. என் டைம் வேஸ்ட் பண்ணாம  வா..  எப்படியும் இந்த டைம்ல உன்னைய  தனியாவிட்டுட்டு  எவ்வளோ  நேரம்  ஆனாலும்  நான் போகமாட்டேன்.” என்றான்  உறுதியாக.
     மறுபடியும்  அவள் தயங்கி நிற்க்கவும்..  இது ஆபிஸ் டைம் கிடையாது.. அதனால நீ  என்னை ஒரு  நண்பனா  நினைச்சிகிட்டு வா..”  என்றான் மீண்டும்   பிடிவாதமாக.  
      இந்த  டிராபிக்ல  வீடுபோய்  சேரவே  எப்படியும்  அரைமணி  நேரத்துக்கும்  மேல ஆகிடும்..  சரி  இவரோடுதான்  போலாமா..  என்ற  யோசனையில் அவளின்  முகபானை இருக்க..
    ‘என்ன போலாமா..?” என்றான் மீண்டும்..  சரி என்பது  போல்  மெதுவாக தலையசைத்தாள்.
   ‘ஓகே..  கம்.” என்றான்  சந்தோசமாக.
   அவள் காரின் பின்புறம் அமர செல்லவும்..  ‘ நீ பின்னாடி உட்கார்ந்தா எனக்கு எப்படி உன் வீட்டு அட்ரஸ் தெரியும்…? வந்து முன்னாடி உட்காரு..” என்றான்  உரிமையாக.
   அதற்க்கும் அவள் யோசிக்க.. ‘அதுமட்டுமில்லாம நீ பின்னாடி உட்கார்ந்தா   நான் உனக்கு டிரைவர் மாதிரி  எனக்கு தோணும்.” என்றான்  முகவாட்டமாக.
    தன்  முதலாளியை  டிரைவராக்க  விரும்பாமல்  முன்னால் வந்தமர்ந்தாள்..
    ‘சீட்பெல்ட்  போடு..”  என்றான்.
    ’எனக்கு தெரியாது.‚” என்று  அசடு  வழிந்தாள்.
    பரவால்லையே..  தெரியாதா..?  என  மனதில்  சந்தோசித்தவன்.. பெல்ட்  போட்டுவிட அவள் பக்கத்தில் நெருங்கவும்..  அவள்..   ‘இல்ல..  நீங்க சொல்லுங்க..  நான்  போட்டுக்கிறேன்.” என்றாள்  அவசரமாக.
    உசார்தான்  என  நினைத்து.. ‘சரி..”  என்று அவனுடைய சீட் பெல்ட்டை கழற்றி..   மீண்டும்   போட்டுக்காட்டினான்.
  அவள் சரியாக போட்டுக்கொள்ளவும்..  ‘ம்ம்..  சீட்  பெல்ட்ல  இருந்தே  க்ளாஸ்  எடுக்கனுமா..? என  உல்லாசத்தோடு  முனகி   காரை எடுத்தான்.
     அவள் அமைதியாகவே இருக்கவும்.. அவனும் அமைதியாகவே சென்றுகொண்டிருந்தான்.  இன்னைக்கு  நம்ம  பர்த்டேன்னு  சொல்லியும்..  ஒரு  வாழ்த்து  கூட  சொல்ல மாட்றாளே..?  இவகிட்ட  எப்படி  ஆரம்பிக்கலாம்..?  என  யோசித்து..   சரி.. இன்னைக்கு  தான பேசவே  ஆரம்பிச்சிருக்கோம்..  எங்க  போய்ட போறா..? பார்த்துக்கலாம்..  என்று  மனதில்  நினைத்துக்கொண்டே  ஒன்றும்   பேசாமல் அவள்  வீட்டிற்க்கு  பக்கத்து தெருவில்  காரை  நிறுத்தினான்.
     ‘என்ன இங்க இறங்கிக்கிறியா..? இல்லை உன் வீட்டிலேயே ட்ராப் பண்ணனுமா..? எனக்கொன்னும்  பிரச்சனையில்ல..  உனக்கு  ஓ.கேன்னா சொல்லு..  உன் வீட்டு  முன்னாடி  காரை நிறுத்துறேன்..” என  கிண்டலோடு  சொல்ல..
     சுற்றிலும்  பார்த்துவிட்டு..  அச்சோ.. நம்ம வீட்டுக்கு  பக்கத்து  தெருவுக்கு  வந்ததுகூட  தெரியாம  உக்கார்ந்திருக்கோமே..  நம்மவீட்டுகிட்ட  இவரோட  கார்ல  போயிருந்தோம்..   ஆனந்திகிட்ட  அவ்ளோதான்.. என  மனதினுள்  பதறியவள்.. 
    ‘சார் நான்.. நான்.. இங்கையே நான் இறங்கிக்கிறேன்.  ஆனா  இந்த  டோர்.. “ என்று  தயங்க.. 
      ‘ஒரு நிமிசம்..”  என்றான்.  அபர்ணா  என்ன  என்பதுபோல  பார்த்தாள்.
     ‘எனக்கு  விஷ்  பண்ண மாட்டியா..? என்றான். அவள் யோசனையுடன்  பார்க்கவும்..  ‘நான் தான் சொன்னனே.. எனக்கு இன்னைக்கு பர்த்டேன்னு.” என்றான்  ஆவலாக.
      ‘ஹாப்…பி   பர்த் டே சார்.. என்று  வழுக்கட்டாயமாக  புன்னகையை  வரவழைத்து  சொன்னாள். 
     அதை  புரிந்தவன்.. ‘அவ்வளவு தானா..?” என்றான் ஏமாற்றமாக.
     இன்னுமென்ன  என்பதுபோல்  கேள்வியுடன் அவனைப் பார்க்கவும்.. 
     ’இல்ல.. ட்ராப் பண்ணனுதுக்கு ஒரு தேங்ஸ் கிடையாதா..?”  என்று  லேசாக  சிரித்தான்.
     ‘ஓ…. ரியலி சாரி சார்..   தேங்க்யூ சார்..” என்றாள் உண்மையாக.
     ‘ஹ்ம்ம்…  எப்படிதான் உன்கிட்ட குப்பகொட்ட போறேன்னு தெரியலடா சாமி..”  என்ற  சற்று சத்தமாக  அவளுக்கு  கேட்க்கும்படித்தான்  சொன்னான்.   ஆனால் அவள் அவனை கவனித்தால் தானே..  அவள்தான் இறங்குவதற்க்கு  கார்  கதவைத் திறக்கும் வழியறியாமல்.. போராடிக் கொண்டிருந்தாளே.   இது…. வேறையா.? என நினைத்துக்கொண்டு.. அவனே இறங்கிவந்து  காரை   திறந்துவிட்டான். 
   ‘நான் வரேன் சார்..“ என்று விடைபெற்றாள்.
   ‘ஒரு நிமிஷம் நில்லு..“  என்றான்  அவசரமாக.
    அவள் நிற்க்கவும்.. ’எம்.காம்.  படிச்சிருக்கிற..?  ஆனா..  ஒரு  கார்  டோர்  ஓபன்  பண்ண தெரியலை..?   முதல்ல ஒரு டிரைவிங் கிளாஸ்க்கு போற வழிய பாரு..” என்றான்  உரிமையாக.
   ‘சரிங்க சார்.” என்றாள்.
   ‘ஓ.கே. பாய். டேக் கேர்.” என  இலகுவாய்  சொல்லி  கிளம்பினான்.
   அப்பாடா..  என்று மூச்செடுத்து.. பிறகு விரைவாக நடந்து வீடு நோக்கி சென்றாள்.

Advertisement