Advertisement

    அத்தியாயம்–17
     மாலை ஆறுமணிபோல்  சோர்வாக வந்த  ஆனந்தியிடம்.. 
   ‘என்னம்மா  ரொம்ப  டையர்டா  இருக்க..?” என  நீலகண்டன்  பதற..
    ‘ஒன்னுமில்லைப்பா..“ என்று   அம்மாவின்  ரூமிற்க்கு  சென்றாள்.  சந்திராவைப்   பார்த்ததும்   ஆனந்திக்கு  அழுகை  வர..
    ‘ஆனந்தி.. ஏன் அழற..?” என சந்திரா  கேட்டுக்கொண்டிருக்கும்போதே..  உள்ளே  வந்த  நீலகண்டன்..
    ‘என்னம்மா..  ஏன்  அழற..?” என பதற.. 
    ‘அப்பா..  எனக்கு கிருஷ்ணகிரிக்கு  டிரான்ஸ்ஃபர்  வாங்கிடலாமான்னு     சொல்றார்ப்பா..” என்று  கண்கலங்க..
    ‘அதுக்கு  ஏன்மா  இப்படி  அழற..?  இந்த  யோசனையை  நான்  தான்  வெற்றிகிட்ட  சொன்னேன்..”  என்றார்.
     ‘நீங்க எதுக்குப்பா..    இப்படி  சொன்னிங்க…?  அம்மாக்கு  நல்லாகறவரைக்கும்  நான்  இங்கையே  இருக்கேன்ப்பா..   அம்மா  இப்படி  இருக்கும்போது..   உங்களையெல்லாம்  விட்டுட்டு அங்கப்  போய்  என்னால   எப்படி  இருக்கமுடியும்..?  என்  கல்யாணம்  முடிஞ்சாலும்    கொஞ்சநாள்  இங்கையேதான்  இருப்பேன்.
    அபர்ணா  கல்யாணம்  முடிஞ்சதும்..  நாம  எல்லாரும்  அங்கையே  போய்  செட்டில்  ஆயிடலாம்ப்பா..  நமக்கு  அங்க ஒரு  வீடு  இருக்குன்னு  சொன்னிங்க  இல்ல..?  நீங்க  அந்த  வீட்ல  இருந்துக்கோங்க.    அம்மா..  நீங்க  மாமாகிட்ட  சொல்லுங்கம்மா..  அவர்  உங்க  அண்ணன்தான..?  நீங்க  சொன்னா…  அவர்  கேட்ப்பார்..”  என்றாள்.
      ‘இதுதானா  விசயம்..?  ஏன்மா  உனக்காவது  இப்போ இருபத்தஞ்சி  வயசாகுது.  உன்  அம்மாவை    நான்  என்கூட  கூட்டிட்டு  வரும்போது  அவளுக்கு பதினெட்டு வயசுதான்… அப்போ உங்க  மாமாக்கு  எப்படியிருந்திருக்கும்..?    உங்க  அம்மாவோட  இடத்தை  நீதான்  அங்க  போய்  நிரப்பனும்.  இதை  நான்  அவங்களுக்கு  பண்ற  ப்ராயசித்தமா  நினைச்சிட்டிருக்கறேன்..
      முன்னாடியே  இதெல்லாம்  யோசிச்சிதான்    என்னோட  வேலையை  ராஜினாமா  செய்தேன்..   உன்  அம்மாவை  நான்  நல்லாப்  பார்த்துப்பேன்மா..  நீ  இதைப்பத்தியெல்லாம்   நினைச்சிகிட்டு..  அவங்க  சந்தோசத்தையும்  கெடுத்து..  உன்  சந்தோசத்தையும்   கெடுத்துக்கக்கூடாது.” என்றார்  பொறுப்பான  தந்தையாக.
      ‘எங்கண்ணன்  வீடா  இருக்கவும்  ஆச்சு..  அந்நி அசல்ல  உன்னை  கொடுத்திருந்தோம்னா..   கடைசி  காலத்தில  எங்களை   பார்க்ககூட  விடறாங்களோ  இல்லையோன்ற  பயம்  இருக்கும்..   இப்போ  அப்படியா..?  எங்களை  பார்க்கனும்னு  எப்ப தோணினாலும்  வெற்றி  கிட்ட  சொல்லு..  அவன்  உன்னை  கஷ்டப்படுத்த  மாட்டான்..
      எங்கண்ணனும்  அண்ணியும்  வெற்றிக்கு மட்டும்  இல்ல.. உனக்கும்  அப்பாம்மா  மாதிரிதான்..  நீ  இங்க  இருந்தா..  அவங்களை  யார்  கவனிப்பா..? நீ என்ன  சின்னகுழந்தையா..?   இப்படி  கண்ணகசக்கிட்டிருக்க..?” என  கடிய..
      ‘அபர்ணாவும்.. நான்  இல்லைன்னா..  ரொம்ப  லோன்லியா  ஃபீல்  பண்ணுவாம்மா.. “ என்றாள்  கரகரத்த  குரலில்.
      ‘இன்னைக்கு  அபர்ணாகிட்ட..   சிவா  வீட்ல  பொண்ணுகேட்டதைப்  பத்தி  பேசிடறேன்.   அவ  மனசில  என்ன  இருக்குன்னு  தெரிஞ்சிகிட்டா..  அதுக்கும்  ஒரு  விடை  கிடைச்சிடும்..  சிவா  நல்ல  சாய்ஸ்ன்னு  எனக்கு  தோணுது..  நம்ம  வெற்றிக்கும்    நண்பனா  இருக்கார்..
     வெற்றி  நம்ம  வீட்டு  மூத்த  மாப்பிள்ளைன்றதால..  இனிமே அவர்கிட்டையும்  கேட்டுட்டுதான்  செய்யனும்னு..   வெற்றிகிட்டயும்  யோசனை  கேட்டுருக்கேன்..”  என்றார்  நீலகண்டன்.  
      நீலகண்டனுக்கு  அழைப்பு  வர.. ‘மாமா..  நான்  அங்கதான்  வந்திட்டு  இருக்கேன்..  இன்னும்  பத்து  நிமிசத்தில  வந்திடுவேன்..”  என்றான்.
     ‘சந்திரா..  வெற்றி  வந்திட்டிருக்காப்லயாம்..” என்று  சொல்ல..
     ‘நீ  முதல்ல  போய்  ஃப்ரெஸ்சாயிட்டு  வா..  இன்னும்  இரண்டு  வாரத்தில  கல்யாணத்தை  வச்சிகிட்டு..   இப்படி  அழுது வடிஞ்சா..  வெற்றி  என்ன  நினைப்பான்;…?” என  ஆனந்தியை  கடிந்தார் சந்திரமதி.
     ‘அப்பா..  எனக்கு  இந்த  கல்யாணம்  ரொம்ப  பிடிச்சிருக்குப்பா..  ஆனா..  என்னால..  எப்படி  உங்களைவிட்டு  இருக்கமுடியும்னு தான்  தெரியலை..” என மீண்டும்  அழுதாள்.
     ‘இங்க  பார்  ஆனந்தி..  வெற்றியே  சம்மதிச்சாலும்..  நீ  எப்பவும்   எங்களோடவே  இருக்கிறதுக்கு  நான்  சம்மதிக்க  மாட்டேன்..   டிரான்ஸ்பர்  கிடைக்கிறவரைக்கும்தான்  நீ  இங்க இருக்கனும்..    அபர்ணா  கல்யாணம்  முடிஞ்சதும்   நாங்க  அங்கயே  வந்திடறோம்..  எனக்கும்  எங்க  அம்மாகூட  இருந்த  மாதிரி  இருக்கும்..     உங்க  அம்மாவுக்கும்  அது  சந்தோசத்தை  கொடுக்கும்.  ஆனா  இப்போ  டிரான்ஸ்பர்க்கு  நீ  அப்ளை செய்தேதான் ஆகனும்..‚”  என்றார்  திட்டவட்டமாக.
      ‘முதல்ல  நீ  போய்  குளிச்சி  வேற  டிரெஸ்  போட்டு..  தலைக்கு  கொஞ்சம்மாச்சம்   பூ வை..   வெற்றி  வந்திடப்போறான்..”  என  விரட்டினார் சந்திரமதி.
     ஆனந்தி  குளிக்கசென்ற  அடுத்த  அரைமணிநேரத்தில்  வெற்றி  வந்துவிட..  ‘வாப்பா  வெற்றி  நல்லாயிருக்கியா..?  ஊர்ல  எல்லாரும்  நல்லா  இருக்காங்களா..?” என்றார்  நீலகண்டன்.
    ‘ம்..  ரொம்ப  வருசத்துக்கப்புறம்   அத்தையும்  நீங்களும்  அங்க  வரதால..  எல்லோரும்  சந்தோசத்தில  இருக்காங்க  மாமா..” என  இயல்பாக  சொன்னவன்.. ‘ஆனந்தி  வந்துட்டாளா..?” என்று  நேரடியாக  விசயத்திற்க்கு  வந்தான்.
     ‘வந்துட்டாப்பா..  குளிச்சிட்டு  இருக்கா..“
     ‘உங்ககிட்ட  எதாவது  சொன்னாளா மாமா..?” என்றான் சிறு கோபமாக.
      ‘சொன்னா  வெற்றி..  சின்ன  வயசில  இருந்து   நாங்க  மட்டுமே  உலகம்னு   நினைச்சி  வளர்ந்திட்டா..  நானும்  என்  கல்யாணம்  எப்படி  நடந்தது..  அதனால  உங்கப்பா  சந்திராவைப்  பிரிஞ்சது..   அவர்  வருத்தப்பட்டதுன்னு..  எல்லாமே  ஒரு  குறிப்பிட்ட  வயசுக்கப்புறம்   சொல்லிதான்  வச்சிருக்கேன்.  இப்பகூட அவருக்கு  நாங்க  கொடுத்த  கஷ்ட்டத்தை  நீ  போய்தான்  போக்கனும்னு  சொல்லிட்டிருந்தேன்.    கொஞ்சம்  புரிஞ்சிகிட்டிருப்பான்னு  நினைக்கிறேன்.  நீ  வருத்தப்படாத  வெற்றி..” என்றார்  தன்மையாக.
      ‘போன்லயே அப்படி அழுதா.. எனக்கு  ரொம்ப  வருத்தமாய்டுச்சி..  எதுன்னாலும்  பேசிக்கலாம்  அழாதன்னு  நான்  சொல்லிட்டிருக்கும்போதே  போனைக்  கட்  பண்ணிட்டா..  மறுபடி  எத்தனை  முறை  பண்றேன்  எடுக்கவேயில்லை.  மெசேஜ்  பண்ணினாலும்  ரிப்ளே  வரலை..  அதான்  நேர்ல  வந்தேன்..” என்றான்  குறையாத  கோபத்தோடு.
       ‘வெற்றி..  ஆனந்தி   இந்நேரம்  குளிச்சிருப்பா..  உன்  சத்தம்  கேட்டதும்  ரூம்லயே  இருக்கான்னு  நினைக்கிறேன்.  நீயே  போய்  புத்தியில  உறைக்கிறமாதிரி   புரியவச்சிட்டு  வா..” என்றார்  சந்திரா.
       பதினைந்து  நாட்களில்  திருமணத்தை  வைத்துக்கொண்டு..  இன்னமும்  ஆனந்தி  தன்னைப்பற்றி   கொஞ்சமும்  யோசிக்காமல்  இருக்கிறாள் என்பதை வெற்றியால்  தாங்கிக்கொள்ளவே  முடியவில்லை..  ஆனந்திமேல்  உள்ள கோபத்தில்  தன்  அத்தையின்  பேச்சை  கண்டுகொள்ளாதவனாய்..  இறுகிய  முகத்தோடு  அமைதியாகவே  வெற்றி  அமர்ந்திருக்க..
       வெற்றியின்  நியாயமான  கோபம்  உணர்ந்தவராய்.. ‘என்  வளர்ப்புதான்  சரியில்ல  போல..  கோபப்படாத  வெற்றி..” என்று  சந்திரா  கண்கலங்கவும்..
       பதறியவன்.. ‘என்னத்தை  நீங்க..? பெரிய வார்த்தையெல்லாம்  பேசறிங்க..  விடுங்க ஆனந்தியை  நான்  பார்த்துக்கிறேன்..” என  சந்திராவை  சமாதானம்  செய்து..   
      ஆனந்தியின்  ரூம்  கதவைத்  தட்டினான்.  சத்தம்  வராமல்  போகவும்..
      ‘ஆனந்தி..” என்றான்  கோபமாக.  அமைதியாக  கதவைத்  திறந்தாள்.         உள்ளே வந்ததும்  கதவை  தாழ்போட்ட  வெற்றியின்  கோபமுகத்தில்  பயந்துபோனாள்.
      ‘உனக்கு  என்னை   பிடிக்கலன்னா  தயவுசெய்து   சொல்லிடு..  உன்மேல  எந்த  தப்பும்  வராம..  எல்லாத்தையும்   நானே நிறுத்திடறேன்..” என்றான் கடுப்பாக.    
    ‘இதென்ன  இப்படி  கேக்குறிங்க..?” என  பதறியவள்.. ‘நீங்கதான்  என்னை  பார்க்கிறதும்  இல்ல..   என்னோட  பேசறதும்  இல்ல..  நம்ம  நிச்சயத்தப்பவும்  என்னை  கண்டுக்கவே  இல்ல..” என்றாள்  கண்கலங்கியபடி.
       ‘கல்யாணத்துக்கு  முன்னமே  உன்கிட்ட  பேசறதுக்கு..   நாம  என்ன..  அப்டியே  உருகி உருகி  லவ்  பண்ணியா  கல்யாணம்  செய்துக்கிறோம்..?  நான்  உன்  மாமா  மகன்ங்கிறதாலதான    இந்த  கல்யாணத்துக்கு  ஒத்துகிட்ட..?  இது  ஒரு  அரேன்ஜ்ட்  மேரேஜ்..   அதுவும்  எனக்கு  நானே அரேன்ஜ் செய்துக்கிட்ட மேரேஜ்..   இதுல  கல்யாணத்துக்கு  முன்ன  உன்கிட்ட  பேச  என்னயிருக்கு..?” என்றான் ஆத்திரத்தோடு.
     ‘அம்மாகூட  எதுன்னாலும்  அப்பாகிட்ட  சொல்லுவாங்க.. ஆனா அப்பா  என்கிட்டதான்  சொல்லுவார்.  அம்மாக்கு  நீங்கெல்லாம்  இருக்கிங்க..  ஆனா  அப்பாக்கு  நாங்க  மட்டும்தான்   இருக்கோம்..“ என கண்கலங்க..
      கோபம்  வந்தாலும்..  பொறுமையை இழுத்துப்பிடித்தவன்.. ‘இங்க  பாரு ஆனந்தி..   சிவா   அபர்ணாவை  விரும்பறான்னு  தெரிஞ்சவுடனே..  அவன்  என்  பிரண்டுங்கிறதால  மட்டும்   ஒத்துக்கிட்டேன்னு  நினைக்காத..    சிவாவை  மாதிரி  ஒரு நல்ல சகலை    எங்க தேடினாலும்  எனக்கு  கிடைக்கமாட்டான்.  
      இவ்ளோ நாள்  எங்கப்பாவும்  அத்தையும்  பிரிஞ்சிருந்தது  போதும்..  அபர்ணா  கல்யாணம்  முடிஞ்சதுமே..  அத்தையையும்   மாமாவையும்  அங்கதான்  செட்டில்  பண்ணப்போறேன்..  கொஞ்சம்கூட  யோசிக்காம   மாமாக்கு  யாரும்  இல்லைன்னு  சொல்ற..    ஏன் அவருக்கு  நான் இல்லையா..?  
       அத்தைகிட்ட  பேசினதுக்கப்புறம்தான்  அப்பா  பழையதெம்பு  வந்தமாதிரி  இருக்கார்.   ஊரெல்லாம்  நான்  பார்த்து  சந்திராக்கு  கல்யாணம்  பண்ணியிருந்தாகூட இப்படி  ஒரு  மாப்பிள்ளை   கிடைச்சிருக்கமாட்டார்ன்னு    எவ்ளோ  பெருமையா  எல்லார்கிட்டயும்  சொல்லிட்டிருக்கார்..   என்  தங்கச்சிபொண்ணு  அப்படி  இருக்கா..  இப்படி  இருக்கான்னு.. போறவங்க  வரவங்ககிட்டெல்லாம்   பெருமையடிசிட்டிருக்கார்..  அதையெல்லாம்  கொஞ்சமாச்சம்  நீ  யோசிச்சியா…? 
     இப்பவும்   அப்பாம்மாவை  விட்டுட்டு  எப்படி  வரதுன்னுதான்  யோசிக்கிறியே  தவிர..   கொஞ்சம்கூட என்னைப்  பத்தின  கவலை  உனக்கில்லயில்ல..?” என்று  வருத்தத்தோடு   கேட்க..
     செய்வதறியாது   ஆனந்தி  கட்டிலில்  கவிழ்ந்து  அழவும்.. ‘கல்யாணம்  முடிஞ்சாலும்    டிரான்ஸ்ஃபர்  கிடைக்கிறவரைக்கும்   நீ  இங்கதான் இருக்கிறமாதிரி  வரும்..   அதுவரைக்கும்  என்னை  விட்டுட்டு  இருக்கனுமேன்னு  உனக்கு  தோணவே  இல்லயில்ல..?  சரிவிடு..  இனி  எல்லாம்  உன்  இஷ்டப்படிதான்  நடக்கும்..” என்று  அழுத்தத்தோடு  சொல்லி…   விருட்டென  திரும்பி  கதவை  திறக்க  முற்பட..  சட்டென  வெற்றியின்  கையைப்  பிடித்தாள்.
      அவளிடமிருந்து  கையை  உதறியவன்.. ‘இப்படி ஒரு  கல்யாணம்  வேணுமா  வேண்டாமான்னு  இப்பல்லாம்  எனக்கே  ரொம்ப உருத்தலாயிருக்கு..”  என்றான்  வேதனையாக. 
      ‘எதுக்கு  இப்படி  பேசிறிங்க..? இன்னைக்குத்தான்   எனக்கு  புரியறமாதிரி  சொல்றிங்க..  எப்பன்னாலும்  அபர்ணாகிட்டயே  பேசிட்டிருந்தா..   நான்  எப்படி  உங்களை  புரிஞ்சிக்கமுடியும்..?” என்றாள். அதில்  சிறு  பொறாமை  எட்டிப்பார்க்க..     
       ஆனந்தியை  முறைத்தவன்.. ‘அபர்ணா  உன்னை  மாதிரி இல்ல..  தப்போ  ரைட்டோ..  எதுன்னாலும்  வெளிப்படையா  பேசிடறா..  அதோட  அவ  என்னோட  அத்தைபொண்ணு..  அத்தை  பொண்ணு  மட்டும்தான்..  ஆனா   நீ  எனக்கு  அப்படியா..?  உன்கிட்ட  எனக்கான  உரிமையை  எதிர்பார்த்தேன்..  காதலை  எதிர்பார்த்தேன்..  இது  ரெண்டுமே  நீ  எனக்கு  கொடுக்கல..   இப்போ  உன்னோடான   என்  கல்யாணம்..   என் அப்பாவையும்  அவரோட  தங்கச்சி  குடும்பத்தையும்  சேர்த்து  வைக்கிறதுக்காக  மட்டும்தான்..” என்று  சிறிதும்  காதலின்றி   சொல்லி   கதவைத்  திறந்தான்.
      அங்கே  அபர்ணாவை  பார்த்ததும்   வெற்றிக்கு  முகம்  தன்போல்  இலகுவாக..   தன்னெதிரே  தடுமாறி  நிற்ப்வளை பாசத்தோடு  பார்த்திருந்தான்..
     ‘அத்தான்..  நீங்களா..?  ஆனந்தி  எங்க..?“ என்று  தடுமாறியபடியே.. 
      ‘நான்  அம்மாவைப்  பார்;த்துட்டு  வரேன்..”  என்று  போக  முயற்ச்சித்தவளை…
     ‘ஒரு  நிமிசம்  இரு  அபர்ணா..   எதுக்கு  இப்படி  உளரிட்டு  இருக்க..?  ஆனந்தியைதான  பார்க்க வந்த..?  அப்புறம் ஏன்  அத்தையைப்   பார்க்க  போறேன்னு  கிளம்புற..?  இது  எங்க  பழைய  அபர்ணா  இல்லையே..  என்ன  விசயம்..?”  என  அபர்ணாவை  சிரிப்போடும்   குறும்போடும்  பார்த்தான்.
    அபர்ணா  பதிலின்றி  தடுமாற..   ‘ஹாலுக்கு  வா..  ஒரு  பஞ்சாயத்து  இருக்கு..”  என  அவளின்  கையைப்  பிடித்து  அழைத்து  வந்து  அமரவைக்க..  ‘ஆனந்தி  நீயும்  வாயேன்..”  என  தன்  அக்காவை  துணைக்கழைக்க..
   ‘ஆனந்தியை  மட்டும்  இல்லை  அபர்ணா..    மாமாவையும்  வரசொல்றேன்..  அத்தையையும்  வீல்சேர்ல  உக்கராவச்சி  கூட்டிட்டு வரேன்..”  என்று  சொன்னது  போலவே  செய்தவன்..
       நீலகண்டனிடம்.. ‘என்கிட்ட எதாவது  முக்கியமான  விசயம்  பேசனுங்களா   மாமா..?  போன்  செய்திருந்திங்க..?” என்றான்.
      ‘ஆமா  வெற்றி..   நம்ம  அபர்ணாக்கு  ஒரு  நல்ல  வரன்  வந்திருக்கு..  அதப்பத்தி  பேசறுதுக்காகத்தான்  கூப்பிட்டேன்..” என்றார் நீலகண்டன்.
     ‘முதல்ல  அபர்ணாகிட்ட  கேளுங்க  மாமா..  அபர்ணாக்கு  சம்மதம்னா..  நாம  மேற்கொண்டு  பேசலாம்..”  என்றான்.   சிவா  இல்லாம  வேறயாராவது  பொண்ணு  கேட்டிருந்தா   என்ன  பண்ணலாம்..?  என்ற  குழப்பத்தில்  அபர்ணா இருக்க..  அதை  புரிந்தவன்..
    ‘என்ன  அபர்ணா..  கல்யாணம்  பண்ணிக்கிற  ஐடியா  இருக்கா?”      
    ‘ஆனந்தி..  நீயே  சொல்லு..”  என்றாள்  அபர்ணா.
    ‘ஆனந்தி  சொன்னா..  யாரன்னாலும்  கல்யாணம்  பண்ணிக்குவ..  அப்படித்தான..?” என  நக்கலாக கேட்க..  அபர்ணா  அவஸ்த்தையில் இருக்க..
      ‘இன்னைக்கு  கூட  அபர்ணாகிட்ட  கேட்டுட்டிங்களான்னு  மாப்பிள்ளை  வீட்டுக்காரங்க  கேட்டாங்க..   நாங்க  அவங்களுக்கு  பதில்  சொல்லனும்..    மாப்பிள்ளை  யாருன்னா..” என  சந்திரா  ஆரம்பிக்க..
       ‘ஒரு  நிமிசம்  இருங்க  அத்தை..  அபர்ணா  முதல்ல  கல்யாணம்  செய்துக்கிறேன்னு   சொல்லட்டும்..  அதுக்கப்புறம்  மாப்பிள்ளை  யாருன்னு  சொல்லலாம்..” என்று  அபர்ணாவையே   பார்க்க.. 
    ‘முதல்ல  உங்க  கல்யாணம்  முடியட்டும்..”  என்றாள் புத்திசாலியாக.
    ‘அதெல்லாம்  நாங்க  பார்த்துப்போம்..   நீ   ஓ.கே  சொன்னா..  மாப்பிள்ளை  வீட்ல  எப்பன்னாலும்  ரெடிங்கிறாங்க..” என்று  நீலகண்டனைப்   பார்த்து  சிரித்தான்  வெற்றி.
   ‘அப்ப  நம்ம  சிவாவை  அபர்ணாக்கு  பிடிச்சிருக்கா  வெற்றி..?  உனக்கெப்படி  இது   தெரியும்..?  ஆனந்தி சொன்னாளா..?” என்று  நீலகண்டன்   ரகசியத்தை  போட்டுடைக்க..
    அப்பொழுதும்  விடாமல்..  ‘சிவாவுக்கா மாமா  நம்ம  அபர்ணாவ பொண்ணு  கேட்டாங்க..?  அச்சச்சோ..  அபர்ணாக்கு  சிவாவை  சுத்தமா  பிடிக்காதே..  நீங்க  அவங்ககிட்ட  இந்த  சம்மந்தம்  வேண்டாம்னு  சொல்லிருங்கமாமா..  என்ன  அபர்ணா..?   நான்  சொல்றது  சரிதான..?
     நீ  ஒன்னும்  கவலைப்படாத..  உன்  அத்தான்  நான்  இருக்கும்போது  உனக்கு  பிடிக்காதது  எதையும்..   யாரையும்  செய்ய  விடமாட்டேன்..”  என்று  வெற்றி  தன் காலரை உயர்த்தி  சொல்ல..  அபர்ணா  கண்கள்  கலங்க  ஆரம்பிக்கவும்..  ஆனந்திதான்  மனம்  தாளாமல்..
    ‘அப்பா..  சிவா  எனக்கு  ஃபோன்  செய்தார்..  அவர்  அபர்ணாவைத்  தவிர  யாரையும்  கல்யாணம்  பண்ணமாட்டாராம்..    நாம  எல்லோரும்  சம்மதிக்கும்  வரை  அவர்  வெய்ட்  பண்றன்னு  சொன்னார்ப்பா..” என்று  தன்  தங்கையை  காப்பாற்ற..
     ‘என்ன  அபர்ணா..  நான்  அவங்களுக்கு  ஓ.கே.  சொல்லிடட்டுமா..?”  என்றார்  நீலகண்டன். 
   வெற்றிக்கு   நம்ம  விசயம்  தெரியும்  என்று  சிவமுகிலன்  சொன்னது    சட்டென  நியாபகம்  வர..   தைரியம்  வரப்பெற்றவளாக   வெற்றியை  உற்சாகமாக  பார்த்தபடி.. 
      ‘அப்பா…  என்  அத்தான்    என்ன  சொல்றாரோ..  அதையே  நான்  கேட்கிறேன்..” என  முகம்  சிவந்து  சொன்னவள்..  நில்லாமல்  அவளுடைய  ரூமிற்க்கு  ஓடிவிட்டாள்;.
       கலகலவென  சிரித்த வெற்றி.. ‘பார்ரா..  நம்ம  அபர்ணாக்கு  வெட்கமெல்லாம்  வருது…” என சந்தோசித்தவன்.. 
     ‘சின்னபொண்ணா  இருந்தாலும்.. அபர்ணா  அவ  சம்மதத்தை..  என்னைய  வச்சி சாமார்த்தியமா எப்படி    முடிச்சிட்டான்னு  பார்த்திங்களா  மாமா..?  அவ  அக்காளும் தான் இருக்காளே..  பதினைஞ்சி  நாள்ல  கல்யாணத்தை  வச்சிகிட்டு..  எப்படி அழுது வடிஞ்சிட்டிருக்கா..”  என்று  குரலில்  தன்மைகொண்டும்..  முகத்தில்  கோபம்  கொண்டும்  ஆனந்தியை    பார்க்க..  கலங்கிப்போனாள்.
    ‘வெற்றி..  அபர்ணாக்கு  சிவா  ஓ.கே.வா..” என  நீலகண்டன்  ஆவலுடன்  கேட்க..
    ‘மாமா..  உண்மையாவே..  நம்ம  அபர்ணாக்கு  சிவா  ரொம்ப ரொம்ப  நல்ல  சாய்ஸ்..  எனக்கு  டபுள்  ஓ.கே.  அத்தையும்  நீங்களும்  கலந்து  பேசி..  நல்ல முடிவா  எடுங்க..” என்றான்  புன்னகையோடு.
   ‘நீயே  சொல்லிட்ட..  வேறென்ன  வேணும்..?    அவங்களுக்கு  சம்மதம்  சொல்லிடலாம்..” என  சந்தோசமாக  சொல்ல..
    ஆனந்தி மீது வெற்றி  கோபமாக இருப்பதை  புரிந்துகொண்ட  சந்திரமதி..
    ‘ஆனந்தி..  வெற்றிக்கு  எதாவது  சாப்பிடக்கொடு..  நான்  கொஞ்ச  நேரம்  படுக்கிறேன்..” என்று    தன்  கணவரைப்  பார்க்க..  வீல்சேரில்  அமர்ந்திருந்த  சந்திராவை  தள்ளிக்கொண்டு  நீலகண்டன்   அவர்களின்  அறைக்குள்   போனதும்..  ஆனந்தி  வெற்றியை பார்க்க..
     வெற்றி தன்  மேல்  கோபமாய்  இருப்பதை  நினைத்து  தயங்கியவள்..
    ‘அபர்ணா..   நீயும்  சாப்பிட வா..” என  தன்  தங்கையை  துணைக்கழைக்க..  ஆனந்தியை  முறைத்தவன்..  ‘உன்  முகத்தை  பார்த்ததுமே  என்  வயிறெல்லாம்  நிறைஞ்சிடுச்சி..  உன்  தங்கையையே  கூப்டு  சாப்பாடு  போடு..” என  கடுப்போடு  சொன்னவன்..  நான்கே  எட்டில்  மாடிக்கு  சென்றிருந்தான்.       
     சற்று  நேரத்தில்  மாடிரூம்  சாவியோடு  ஆனந்தி  மேலே  வரவும்..
     அவளின்  அரவம்  கேட்டும்  தன்  மொபைலிலேயே  கவனம்  செலுத்த.. 
    கதவை  திறந்துவிட்டவள்..   ‘இங்கையே  சாப்பாடு  எடுத்துவரட்டுமா..?” என  சன்னக்குரலில் கேட்க..
     ‘கொஞ்சம்  முன்னதான்  எனக்கு  சாப்பாடு  போட  துணைக்கு  அபர்ணாவை  கூப்பிட்ட…?  இப்ப  மட்டும்  எதுக்கு  தனியா  வந்து  நிக்கிற..?  சீக்கிரம்  கீழ  போ..  இல்லன்னா   உங்கப்பாம்மா   உன்னை  தப்பா  நினைப்பாங்க..  என்னோட  தனியா  இருந்தா  உன்  கற்பு  பரிபோய்டும்..   எங்களுக்கெல்லாம்   அப்படி  எதுவுமே  இல்லபாரு..” என்றான் கடுப்பாக.
     ஆனந்தி  கண்கலங்க..  ‘போன்ல  அந்த அழுகை அழுதிட்டு..  பேசிட்டிருக்கும்போதே   போனை  கட்  பண்ற..   திரும்ப  அத்தனை  முறை  கால் பண்றேன்..  அட்டன்செய்து   என்ன  விசயம்னு  கூட  உன்னால  கேட்கமுடியாதா..? 
     நீ அழுத  அழுகையில..  கல்யாண வேலையெல்லாம்  விட்டுட்டு  என்னவோ  ஏதோன்னு  பதறியடிச்சி  வந்திருக்கேன்..   இப்போ  திரும்பவும்  அழுது..  பத்து நிமிசம்  கூட ரெஸ்ட்  எடுக்கவிடாம   என்னை  கிருஷ்ணகிரிக்கு  போக  வச்சிடாத..   அழறதுனா  உன்  ரூம்ல  போய்  அழு..  இரிட்டேட்டிங்கா  இருக்கு..”  என  கடுகடுத்து..
     ‘சாப்பாடு  போடுறாளாம்  சாப்பாடு..  சோத்துக்கு  வழியில்லாமத்தான  இங்க  வந்திருக்கேன்..” என  தன்போல்  எரிச்சலோடு  முனுமுனுத்து  ரூமினுள்  சென்றவன்..  பட்டென  அறைந்து  சாத்தினான்  கதவை.
      தன்  அம்மாவின்  உடல்நிலை  சரியில்லாமல்  இருக்கும்போது.. தன்  சந்தோசம்தான்  முக்கியமென  எப்படி  இருக்கமுடியும்..? என யோசித்தாளே  அன்றி..  வெற்றியின்  விசயத்தில்  தாம்  எங்கு  தவறுகிறோம்  என்று  சுத்தமாக  விளங்கவில்லை  கல்லூரி  ஆசிரியைக்கு.
                           

Advertisement