Advertisement

                                  
                             
                           அத்தியாயம்–13
      ‘அம்மா..  எத்தனை  முறைதான்  உங்ககிட்ட  இதைப்பத்தி   பேசறது..? உங்களுக்கு   நான்  முக்கியமா..?  இல்லை..   ரேஷ்மா   முக்கியமா..?”  என்றான்  கடுப்பாக.
       ‘எதுக்குப்பா   இவ்ளோ  கோபப்படுற..?    கல்யாணம்ங்கறது..  சாதாரண  விசயமா..?   சாகற வரைக்கும்  உன்  கூடவே  வர  சொந்தம்ப்பா..  எவ்ளோதான்   காசு  பணம்  இருந்தாலும்…   வரப்போற  பொண்ணுகுணம்  சரியில்லைன்னா..  வாழ்க்கை   நரகமாயிடும்..  அந்த  பொண்ணை     உனக்கு  ஒரு  ரெண்டு  மாசமாத்தான்   தெரியும்..   அதுக்குள்ள   அவளைப்பத்தி   அப்படி  என்ன  தெரிஞ்சிக்கிட்ட..? இந்த   காலத்தில யாருக்கும்  கூட்டுக்குடும்பமே   பிடிக்கறது  இல்லை..   கல்யாணம்  செய்தவுடன்   தனிக்குடித்தனம்   போகத்தான்  விரும்புறாங்க..  உன்னை  யாருக்காகவும்..  நான்  விட்டுக்கொடுக்க  மாட்டேன்..”  என்று  லலிதாவும்  கோபமாக   பேசினார்.
      சிவமுகிலன்  தன்  அம்மாவைப்  பார்த்து  சிரித்தான்.  ‘உனக்கு  என்னைப்  பார்த்தா..  சிரிப்பா.. இருக்கா?” என்றார்  தன்  மகனின்  சிரிப்பில்  சற்று  கோபம்  தணிந்தவராக.
       ‘பின்ன  சிரிக்காம  என்னை  என்ன  செய்ய  சொல்றிங்க..?   அபர்ணாதான்  குழந்தைமாதிரி  இருக்கான்னா..  நீங்க  அவளுக்கு  மேல  என்னை  படுத்திறிங்க..  அபர்ணாவைப்  பத்தி  உங்களுக்கு   தெரியாது..  அதனால  அவளைப்  பத்தி  நீங்க  யோசிக்கிறதை  ஒருவகையில  நான்  ஏத்துக்கிறேன்.  
     ஆனா..  என்னைப்பத்தியுமா  தெரியாது..?   நான்  பி.இ.  முடிச்சதுமே  ஃபாரின்   போக  எனக்கு  சான்ஸ்  கிடைச்சது.   ஆனா  நான்  ஏன்  போகலைன்னு  உங்களுக்கு  தெரியுமா..?   உங்களையும்  அப்பாவையும்  தனியா  விட்டுட்டு   கைநிறைய  சம்பாரிச்சு  என்ன  யூஸ்..?  வாழ்ற  வாழ்க்கையை  அழகா  வாழனும்னு  நினைக்கிறவன்  நான்..    பொண்டாட்டிக்காக  உங்களைவிட்டு  கொடுப்பேன்னு  எப்படிம்மா  என்னைப்போய்  இப்படி கேவலமா நினைச்சிங்க..?   நீங்க  இல்லாம  நான்  எப்படியிருப்பேன்..? 
      நான்  யாரைக்  கல்யாணம்  செய்தாலும்..   அவங்கவங்களுக்கான  இடம்   எப்பவுமே   எனக்குள்ள  இருக்கும்.   நீங்க  சொல்ற  மாதிரி  நான்  ரேஷ்மாவைக்  கல்யாணம்  செய்தாதான்..  நான்  உங்களை  விட்டு  பிரியறமாதிரி  ஆகும்..     ஏன்னா  அவ  டாக்டர்..  என்  தொழிலுக்கும்  அவ  தொழிலுக்கும்  சம்மதமே  இல்லை..  அதுவும்  அவ  கவர்ன்மெண்ட்  டாக்டராதான்  ஆகனும்னு  நினைச்சிட்டு  இருக்கா..  அது..   அவளோட   லட்ச்சியம்..   நாம  அதை  தப்புன்னு  சொல்லமுடியாது..  அவளுக்கு  எந்த  ஊர்ல  வேலை  கிடைக்குதோ  அங்க  என்னையும்  கூப்பிடுவா..   உங்களை  விட்டு  நானும்  போகமாட்டேன்..   கொஞ்ச  நாள்ல  அதுவே  பெரிய  பிரச்சனையாகும்.   எனக்கு  நான்  கல்யாணம்  பண்ற  பொண்ணு..   நீங்க  சொன்ன  மாதிரி    என்கூட  மட்டும்  இல்ல..  நம்ம  குடும்பத்தோடதான்  இருக்கனும்.    ரேஷ்மா  எப்பவுமே  அதுக்கு   செட்  ஆக  மாட்டா.”
    ‘ரேஷ்மா  வேணாம்னா..  வேற..” என்று  லலிதா  ஆரம்பிக்கும்போதே..
     ‘அம்மா..  கல்யாணம்ங்கிறதை  நம்ம  குடும்பத்தோட  சந்தோசமா..  நான்  பார்க்கிறேன்..    ஆனா  நீங்க..  உங்களோட  சந்தோசத்தை  மட்டும்தான்   யோசிக்கிறிங்க.  அபர்ணாவைத்தவிர  யாரையும்  கல்யாணம்  செய்துக்கமாட்டேன்.   என்னை  கம்ப்பல்  பண்ணாதிங்க..  எனக்கு  நாளைக்கு  நிறைய  வேலையிருக்கு..  கண்ட  விசயத்துக்காக  என்னை  தேவையில்லாம  தொந்தரவு  செய்யாதிங்க..”  என்று  விடுவிடுவென சென்று  தனதறைக்குள்  அடைந்துகொண்டான்.
      காலை  எட்டு  மணிக்கெல்லாம்.. லலிதா  எப்பவும்  போல  தன்  மகனுக்காக  டிஃபனோடு   டைனிங்  டேபிளில்   காத்துக்கொண்டிருந்தார்.  எட்டரை  மணிக்கு  வந்தான  சிவமுகிலன். 
    ‘ஏன்ப்பா  லேட்?  வா..   சாப்பிடலாம்..”  என்றார்.
     ‘எனக்கு   பசியில்லை..”  என்ற  ஒற்றை  வார்த்தையில்  பதிலளித்துவிட்டு.. ‘அப்பா..  அம்மாவை  சாப்பிட  வைக்காமல்  நீங்க  இனிமேல்  டியூட்டிக்கு  போகக்கூடாது…”  என்று  ஆர்டர்  போல்  சொல்லி..  நிற்க்காமல்  சென்றுவிட்டான்.  
     லலிதாவால்   மகனின்  இந்த  புதிய  பரிமாணத்தை  தாங்கிக்கொள்ளவே  முடியவில்லை.  சிவமுகிலன்  எப்பொழுதும்  தன்  அம்மாவிடத்தில்  இப்படி  நடந்துகொண்டதும்  கிடையாது..
     ‘நான்தான்  சொன்னேன் இல்ல..  அவன்  அந்த  பொண்ணைதான்  கல்யாணம்  பண்ணுவான்னு..  நீ ஏன்  இப்படி  உன்னையே  கஷ்டப்படுத்திக்கிற..?  நான்  உன்  அண்ணன்  பொண்ண  சொல்றேன்னு   வருத்தப்படக்கூடாது.  எனக்கே  ரேஷ்மா  நம்ம  பையனுக்கு  செட்  ஆவான்னு  தோணலை.   அந்த  அபர்ணா பொண்ணு   ரொம்ப  இன்னசென்ட்..  அதை  நானே  நேர்ல  பார்த்திருக்கேன்..  நீ  நினைக்கிறமாதிரியெல்லாம்..  நம்ம  பையனை  நம்மகிட்ட  இருந்து  பிரிக்கிற  அளவுக்கு  அவ  கெட்டவள்  இல்லை..  ஒருமுறை  அந்த  பொண்ணை  நேர்ல  பார்த்தா  நீயே  அதை தெரிஞ்சிக்குவ..  வா..  முதல்ல  சாப்பிடலாம்.. “ என்றார்  சமாதானமாக.
      ‘எனக்கு  ஒன்னும்  வேணாம்..” என்று  கண்கலங்கினார்.
      ’உன்னை  சாப்பிட  வைக்காம..  நான்  ஹாஸ்பிடல்  போகக்கூடாதுன்னு  எப்படி  என்னையே  அதட்டிட்டு  போறான்  பார்த்தயில்ல..?  நீ  சாப்பிடலைன்னா..  அப்புறம்  கோபத்தில  வேற  எதாவது  பண்ணுவான்   பரவாயில்லையா..?”  என  தன் மனைவியை  பரிதாபமாக பார்க்க..
    ‘அவனும்  சாப்பிடாமதான  போயிருக்கான்..  அது  பரவாயில்லையா?”
    ‘இப்ப  கோபத்தில  இருக்கான்.  அவனுக்கும்   வெளில  சாப்பிடுற  பழக்கம்  இல்லை..  அதனால  லன்ச்சுக்கு  கண்டிப்பா   வந்திடுவான்..  அப்ப  பேசிக்கலாம்..  இப்போ  நீ  சாப்பிடு..  எனக்கும்  டைம் ஆச்சி.”
    ‘அவன்   லன்ச்சுக்கு    வந்ததும்  அவனோடவே  சாப்டுக்கிறேன்..  நீங்க  சாப்பிட்டு  கிளம்புங்க.”  என்றார்.
    ‘உனக்கு  நான் முக்கியமில்ல..  புள்ள  மட்டும்தான்  முக்கியமா..? எனக்கும்  சாப்பாடு  வேண்டாம்..  நானும்   கிளம்புறேன்..” என்று  கோபமாக  கிளம்பினார்.
    சிவமுகிலன்  ஒன்பது  மணிக்கே  அலுவலகத்துள்  நுழைவதைப்  பார்த்த  இராமு.. தயங்கியபடியே..  ‘சார்.. குட்மானிங்சார்.. “  என்றான்.
    ‘ம்ம்..”  என்றபடியே  அவனுடைய  கேபினுக்குள்  நுழைந்தான்.  இராமு  வெளியே  நின்றபடியே…
    ‘சாரிங்க  சார்…  நான்  இப்பதான்  வந்தேன்..  ரூம்  கிளீன்  பண்ணனும். “
    ‘உள்ளே  வாங்க   இராமு..  நான்  தான்  சீக்கிரம்  வந்திருக்கேன்..  நீங்க  எதுக்கு  சாரி  கேட்க்கிறிங்க..?   வெளிய  மட்டும்  க்ளீன்  பண்ணுங்க..    இங்க  வேண்டாம்..  எனக்கு   முக்கியமான   வேலையிருக்கு..   யாரும்  உள்ளே  வர வேண்டாம்..  தேவைன்னா  நானே  கூப்பிடுறேன்  நீங்க  போங்க..”  என்று  முடித்துக்கொண்டான்.
    பதினொரு மணிபோல்  வெற்றியின்  அழைப்பு  வர.. ‘சொல்லு  வெற்றி.. “
   ‘சிவா..  எங்க  இருக்க?”
   ‘ஆபிஸ்லதான்..  என்ன  விசயம்  வெற்றி..?”
   ‘ஏண்டா..  சாப்பிடாம  வந்துட்ட..?  அப்பா  ஃபோன்  பண்ணினார்.  உங்க  அம்மா    சாப்பிடாம  இருக்காங்களாம்.. “
    ‘இத  சொல்லத்தான்   கால்  பண்னியா..?  என்று  காலையில்  நடந்ததை   சொல்லிமுடித்து..  நான்  உன்கிட்ட  முன்னாடியே  சொன்னேன்ல…  நான்  ஒரு  வேளை  சாப்பிடலைன்னாவே  போதும்  எங்கம்மா  ஒத்துக்குவாங்கன்னு..  அதுக்குத்தான்  சாப்பிடாம  வந்தேன்..” என்றான்  அசால்ட்டாக.
    ‘நீ  சாப்பிடலைன்னா   பரவாயில்லை..  அதுக்கு  உங்க  அம்மாவை  சாப்பிடவைக்காம  வருவியா..?” 
    ‘நான்  அப்பாகிட்ட  சொல்லிட்டுதான்  வந்தேன்  வெற்றி..”
   ‘உன்  விசயத்தில  யார்  பேச்சையும்  அவங்க   கேட்க  மாட்டாங்கன்னு  உனக்கு  தெரியாதா..?”
   ‘சரி..  நான்  லன்ச்சுக்கு  வீட்டுக்கு  போய்  பார்த்துக்கிறேன்..  வெற்றி  ஒரு  சந்தோசமான  விசயம்..   நான்  பண்ணின  முதல்  ஃபாரின்  ப்ராஜக்ட்  சக்சஸ்ஃபுலா  முடிஞ்சிருக்கு.” என்றான்  உற்ச்சாகமாக.
   ‘ஹேய்..  சூப்பர்..  சிவா..  சந்தோசமான  விசயத்தை  என்ன  இவ்ளோ  சாதாரணமா சொல்ற?” என  அவனும்  சந்தோசிக்க..
    ‘உன்கிட்டதான்  முதல்ல  சொல்றேன்.  எங்க..  அந்த  லூசால..  இதை  கொண்டாடுற   மனநிலையே  எனக்கு  இல்லாம  போயிடுச்சி.” என்றான்  சலிப்பாக.
    ‘அதுவேற  இதுவேற சிவா..  சியரப்மேன்..” என்றான்.
    ‘அதவிடு   வெற்றி…  உன்  விசயம்  என்னாச்சி..?”
     ‘ம்..  அது  சூப்பரா  போய்ட்டிருக்கு.  இந்த  வாரமே..  வெள்ளிக்கிழமை..    எங்களோட  சேர்த்து  கொஞ்சம்  நெருங்கின  சொந்தங்களோட..   பரிசம்  போடுற  ஃபங்சன்  வச்சிருக்கோம்.  வெள்ளிகிழமை   வறோம்னு   இன்னும்  ஆனந்திகிட்ட கூட  சொல்லலை..  அவ  காலேஜ்  கிளம்பியிருப்பா..  நைட்தான்  சொல்லனும்.    நானும்  உன்கிட்டதான்  முதல்ல  சொல்றேன்.”
     ‘கங்ராட்ஜ்  வெற்றி.. “
     ‘வாழ்த்து  மட்டும் போதாது  சிவா..  நான்  வீட்டுக்கு  வந்து  இன்வைட்  பண்றேன்.  நீ  அம்மாவையும் அப்பாவையும்  கூட்டிட்டு  வந்துடு..   இது  நல்ல  சான்ஸ்.. அவங்களும் நம்ம  மாமனார்  வீட்டை  பார்த்தமாதிரி  இருக்கும்..” என்றான்.
     ‘ஓ.கே.  வெற்றி.. நான்  வரேன்..   அப்புறம்  அபர்ணா.. இன்னைக்கு  ஆபிஸ்  வர  ஐடியால  இருக்காளா..?  இல்லையா?”
     ‘அது  தெரியல..  நான்  கிளம்பும்போதே  ரொம்ப  சோர்வாதான்  இருந்தா..” என்றான்.
     ‘சரிவிடு  நான்  பார்த்துக்கிறேன்..” என  முடித்து.. அபர்ணாவிற்க்கு  போன்  செய்தான்  சிவமுகிலன்.  ஆனால்  பேசியது  ஆனந்தி.
      ‘ஹலோ..  நான்  ஆனந்தி  பேசறேன்..   அபர்ணா..   வேலைக்கு  வரமாட்டேன்னு  சொல்லிட்டு  இருக்கா..” என்றாள்
    ‘பக்கத்தில  இருக்காளா..?”
    ‘ம்ம்  இங்கதான்  இருக்கா..”
   ‘ ஸ்பீக்கர்  ஆன்  பண்ணுங்க  ஆனந்தி.. “ என்றான்.    
    ஸ்பீக்கரை  ஆன் செய்து..‘சொல்லுங்க  சிவா..”  என்றாள்.
    ‘உங்க  தங்கைக்கு  அவளோட  ஒரிஜினல்  சர்டிஃபிகேட்ஸ்  எல்லாம்   வேண்டாமாமா..?” என்றான்.
    ‘அச்சோ..  அக்கா..”  என்று  அபர்ணா  பதறியது  சிவாவிற்க்கு  நன்றாக  கேட்டது.  மென்னகை  புரிந்தவன்..
     ‘என்ன  சொல்றிங்க..?” என்றாள்  ஆனந்தி.
     ‘நல்லா  எங்க  கம்பெனியில  டிரைனிங்  எடுத்துகிட்டு..  வேலை  கத்துகிட்டதும்  வேலைக்கு  வரமாட்டேன்னு  சொன்னா..?  நாங்க  விட்ருவோமா..?  அக்ரிமென்ட்  படி..  உங்க  தங்கை  இன்னும்  ஒரு  வருசத்திற்க்கு  இங்கதான்  வேலை  செய்யனும்..  அதை  நான்  தெளிவா  சொல்லிதானே  அப்பாய்ன்ட்  செய்தேன்..   வேலைக்கு  சேரும்போது  நாங்க சொல்ற எல்லாத்துக்கும்  மண்டையை ஆட்டிட்டு..  இப்போ  வரலைன்னு  சொன்னா  என்ன  அர்த்தம்?   அதுவும்  நாங்கெல்லாம்  ரொம்ப  கெட்டவங்க  வேற..   வேலைக்கு  வரலைன்னா..  சர்டிஃபிகேட்ஸ்  எல்லாம்    கிழிச்சாலும்   கிழிச்சிடுவோம்..”  என்று  நக்கலாக  பேசினான்.
     ‘உங்களால   என்ன  செய்ய முடியுமோ  செய்ங்க.. அது  உங்க  இஷ்டம்.” என  ஆனந்தி  சொல்ல..
    ‘அக்கா  என்ன  இப்படி  சொல்ற..?”  என்று  அபர்ணா  பதறினாள்.
     ‘ஆமாம்  நீ  என்கிட்ட   இப்படி  ஒரு அக்ரிமெண்ட்  இருந்திச்சி..  அதுல  நான்  கையெழுத்து   போட்டிருக்கேன்னு  ஏன்  சொல்லலை?” என  திட்ட..
    ‘நானே  மறந்திட்டேன்  ஆனந்தி..  இப்ப  என்ன  பன்றது?”
     போனில்  கேட்டுக்கொண்டிருந்த  சிவாவிற்க்கு  சிரிப்பாக  வந்தது. 
    ‘உங்க  டிஸ்கசன்ல்லாம்  எல்லாம்  எனக்கு  தேவையில்லை.  உங்க  தங்கை  இன்னைக்கு  எப்பவும் போல  ஆபிஸ்  வரனும்..  வந்தே  ஆகனும்..‚” என்றான்  சட்டதிட்டமாக.  ஆனந்தி  அமைதியாக இருக்க..
    ‘கட்  பண்ணிட்டானா..?”  என்று  அபர்ணா  ஆனந்தியிடம்  பேசுவதையும்  கேட்டு  சிரித்துக்கொண்டே  கட்  செய்தான்.
     என்ன   ஒரு  உரிமை..?  கட்  பண்ணிட்டா..னா..வா?  என  நினைத்து..  சற்று  நேரம்  கழித்து..  ஆனந்திக்கு  அழைத்தான்  சிவா.  ஆனந்தி  ஆன்  செய்து..    சிவாவிடம்  பேசாமல்..
    ‘அபர்ணா.. இப்ப  என்ன  பண்ணலாம்னு  இருக்க..  இப்படியே  உக்கார்ந்திட்டு  இருக்காம..  முதல்ல  ஆபிஸ்  கிளம்புற  வழிய  பாரு.  எனக்கு  காலேஜ்க்கு  டைம்  ஆச்சி..  நானும்  கிளம்பனும்..” என்று  மிரட்டி.. அவள்  ரூமிற்கு  வந்து  ‘ஹலோ.. “ என்றாள்.
     ஆனந்தி  அபர்ணாவிடம்  பேசியதை  கேட்ட  சிவா.. ‘தேங்க்யூ   ஆனந்தி..” என்றான்  மனமாற.
    ‘அதெப்படிங்க..  ஃபிரண்டுங்க  ரெண்டுபேருமே..  இப்படி  டார்ச்சர்  பண்ணிதான்  லவ்  பண்ணுவிங்களா..?” என்றாள்  கோபமாக.
    ‘வாங்க போங்க  எல்லாம்  வேண்டாம்  ஆனந்தி..  கால்  மி  சிவா.  அன்னைக்கு  நடந்ததுக்கு  உண்மையாவே  சாரி..  நான்  அப்படி  நடந்துக்கனும்னு  நினைக்கல..“  என  வருந்த..
     ‘அபர்ணா  ரொம்ப  பயந்திருக்கா..  இனி  இப்படியாகாம  பார்த்துக்கோங்க..” என  ஆனந்தி  அறிவுறுத்த..
       ‘கண்டிப்பா..  உங்க  தங்கச்சியே  வந்து  உங்ககிட்ட   சொல்லப்போறா பாருங்க.. சிவா  நல்லவன்னு..” என்றான்  உறுதியாக.
    ‘சரிங்க..  சிவா  நான்  வச்சிடுறேன்..  எனக்கு  காலேஜ்க்கு  டைம்  ஆகுது.” என்று  கட்செய்தாள்.
    அபர்ணா  செய்வதறியாது அமைதியாக  அமர்ந்திருந்தாள்.  ஆனந்தி  ரெடியாகி  வெளியே  வரவும்..  ‘ஏய்  அபர்ணா..  நீ  இன்னும்  ரெடியாகலையா?”
    ‘ஆனந்தி   எனக்கு..  வேலைக்கு  போகவே  பிடிக்கலை..  நம்ம  அத்தான்  அவனுக்கு  ஃபிரெண்டு  தான..?    அத்தான்கிட்ட  சொல்லி  என்  சர்டிஃபிகேட்ஸ்  எல்லாம்   அவன்கிட்டயிருந்து  வாங்கிக்கலாம்.. நான்  வேலைக்கு  போகமாட்டேன்..” என்றாள்.
   ‘சரி  உன்  அத்தான்கிட்ட  கேளு..“  என சொல்ல.. அபர்ணா  வெற்றிக்கு  கால்  செய்தாள்.
   ‘ஹேய்..  அபர்ணா..  எப்படி  இருக்க?”
   ‘அத்தான்..  அந்த  சிவா..  என்  சர்டிஃபிகேட்ஸ்சை  தரமாட்டேன்னு  சொல்றான்..  அக்ரிமெண்ட்  படி  ஒரு  வருசம்  நான்  வேலைக்கு  வந்தே  ஆகனுமாம்..  நீங்க  அவனோட  ஃபிரெண்டுதான..?  என்  சர்டிஃபிகேட்சை   அவன்கிட்ட  இருந்து வாங்கிதாங்க..   நான்னெல்லாம்   அங்க  வேலைக்கு  போகமாட்டேன்..“ என்றாள்.
      ‘அபர்ணா..  பிஸ்னஸ்ல  பொருத்தவரைக்கும்   சிவா  யார்  பேச்சையும்  கேட்கமாட்டான்.  நீ  அக்ரிமெண்ட்ல  சைன்  பண்ணிட்டு..  இப்ப  போகமாட்டேன்னா..   எப்படி  அவன்  ஒத்துக்குவான்..?”
    ‘நீங்க   அந்த  சிவாக்குதான்  சப்போர்ட்  பண்றிங்க..  அப்ப  நான்  உங்களுக்கு  முக்கியமில்லை..  உங்க  ஃபிரெண்டுதான்  முக்கியம்…”
      ‘அப்படியில்லை  அபர்ணா..  எனக்கு  என்  நண்பனை  விட  நீதான்  முக்கியம்..   உனக்கு  அங்க  வேலைக்கு  போக  பிடிக்கலைன்னு   ஆனந்தி  என்கிட்ட  சொன்னா..   நேத்து  நான்  சிவாவைப்  பார்க்கப்  போகும்போது..  அவனைப்  பார்க்க  போகவேண்டாம்னு   நீ சொல்லியும்..  நான்  ஏன் அவனைப்பார்க்கப்  போனேன்  தெரியுமா..? “
    ‘அதெல்லாம்  எனக்கு  தெரியாது..  நீங்க  போனதுனால  நான்  உங்கமேல  கோபமா  இருக்கேன்.” என்றாள்  கோபமாக.
       ‘ஆனா..  எனக்கு  உன்மேல   கோபமே  இல்லை..  உன்  மேல  உள்ள  அன்பாலதான்  நான்  அவனைப்  பார்க்கப்போனேன்.  அபர்ணா..  இங்க  வேலைக்கு  வரனும்னா..  அவளுக்கு  எந்த  தொல்லையும்  நீ  கொடுக்கக்கூடாதுன்னு   அவனை  மிரட்டிட்டு  வந்திருக்கேன்.  சிவா கம்பெனி  விசயத்திலதான்  யார்பேச்சையும்   கேட்க்கமாட்டான்.  ஆனா  பர்சனலா  நான்  என்ன  சொன்னாலும்  கேட்பான்.   அதனால..  நீ  எந்த  பயமும்  இல்லாம..  கம்பெனிக்கு  கிளம்பு..  இனிமே  அவன்  உன்னை  ஒன்னும்  பண்ணமாட்டான்..” என தைரியமளித்தான்.
      ‘ஆனா..  அத்தான்  அவன்  ரொம்ப..”
     ‘அபர்ணா..  நான்தான்  சொல்றேன்ல..?   நீ  இப்படி  பயப்படக்கூடாது..  எதாவதுன்னா  உடனே  எனக்கு  கால்  பண்ணு..  அவனை  நான்  பேசிக்கிறேன்..” என  உறுதியளிக்க..
     ‘அப்ப  நான்  போயேதான்  ஆகனுமா…?” என்றாள்  சோர்வாக.
      ‘உன்னோட  ஒரிஜினல்  சர்டிஃபிகேட்ஸ்   வேணும்னா..  நீ  போய்தான்  ஆகனும்.” என  வெற்றி  சொல்ல..
       ‘சரி..  உங்களை  நம்பித்தான்  நான்  போறேன்..  அதுவும்  ஒரு  வருசத்துக்கு  மட்டும்தான்..  என்  சர்டிஃபிகேட்ஸ்   வாங்கிட்டேன்னா..  நான்  போகமாட்டேன்.” என வேலைக்குப்  போக  தயாராக..
      ‘வெரிகுட்..  அபர்ணா.. ” என்றான்  மெச்சுதலாக.
      ‘சரிங்கத்தான்..  எனக்கு  டைம்  ஆச்சி..  லேட்டா  போனா..  அந்த  சிவா   அதுக்கும்  கத்துவான்…  நான்  கிளம்பறேன்.” என  கட்செய்து..
      ‘ஆனந்தி.. நான்  டிரஸ் பண்ணிட்டு  வந்திடறேன்..” என  ஓடினாள்.  அபர்ணாவிடமிருந்து  போனை வாங்கி..  தனது காதில்  வைக்க..  இணைப்பு  துண்டித்திருக்கவும்..  பெரிதாய்  ஏமார்ந்தாள்  ஆனந்தி.
       வெற்றி  சிவமுகிலனை  அழைக்க..  ‘என்ன..  அந்த  லூசு  உனக்கு  போன்செய்து    ஐடியா..  கேட்டாளாக்கும்..” என்றான்  தன்  காதலியை அறிந்தவனாக.
      ‘எப்படி  சிவா.. இப்படி.. ?” என  ஆச்சர்யமாக கேட்க…
      ‘இப்பதான  வேலைக்கு  வந்தே  ஆகனும்னு  ஒரு  செக்  வச்சேன்.. உடனே  நீ    எனக்கு   கால் பண்றன்னா..  அப்புறம்  வேற  என்னவாயிருக்கும்  வெற்றி..?”  என  சிரிக்க..
      ‘அப்பாசாமி..   நான்  உன்னை  மிரட்டி வச்சிருக்கேன்..  அதனால  சிவா உன்னை  ஒன்னும்  பண்ணமாட்டான்னு  உத்திரவாதம்  கொடுத்திருக்கேன்..  தயவு  செய்து   என்  தலையை  உருள  வச்சிராத..” என  கெஞ்ச..
      பலமான  சிரிப்பொலியோடு.. ‘இது  வேறையா..?” என்றான்.
     ‘அதுமட்டும்  இல்ல  சிவா..  ஒரு  முறைகூட  உன்னை  சார்ன்னு  சொல்லலை.  அதுகூட   பரவாயில்லை..  சிவான்னு  கூட  சொல்லலைன்னா.. பாரேன்..   அவன்..  இவன்னு..  உண்மையா  சொல்றேன்  சிவா..  இதுக்கு  என்  ஆனந்தி  எவ்வளவோ  மேல்..” என்றான்  மெச்சுதலாக.
      ‘ஓஹோ..  அந்தளவுக்கு  உரிமை  வந்திடுச்சா.. “ என  சிவமுகிலனும்  லேசாக  சிரித்து..  ‘காதல்ல..  இதெல்லாம்..  சாதாரணமப்பா…” என்றான்.
     ‘என்னவோ..  பண்ணித்தொலைங்க..  நான்  வச்சிடறேன்.” என  கட் செய்ய..   இரண்டுமுறை  ஆனந்தி  அழைத்திருந்தாள்..
     போடி..  மாமா  மகன்ங்கிறதால    இவ  பேசுவா..   நான்  பேசனுமா..?  எத்தனைமுறை  கெஞ்சினேன்..  ஒருவார்த்தை   என்னை  பிடிச்சிருக்குன்னு  சொன்னாளா..?  இல்ல  ஆசையாதான்  பார்த்தாளா…? என  மனதில்  பொறிந்தான்.
   

Advertisement