Advertisement

அத்தியாயம்–12
       ஆனந்தி  இனிய  தடுமாற்றத்தோடும்  படபடப்போடும்  சமையலறையில்  இருந்தாள். 
      ‘ஆனந்தி…”  என  அழைத்தவாறே..  சமையலறைக்குள்  நுழைந்தாள் அபர்ணா. 
       ஆனந்தி  குளித்து    சிறிய  பார்டர்  வைத்த   இளமஞ்சள்நிற  அழகான சிபான் சேலை உடுத்தியிருந்தாள். அவள்  தலைமுடி  ஈரமாக  இருக்க..   உலருவதற்க்காக   அதை   படர விட்டிருந்தாள்.
       ‘இன்னைக்கு  சன்டேதான..?  எதுக்கு  நீ   தலைக்கு  குளிச்சிருக்க..?  அதுவும்  சேலைவேற  கட்டியிருக்க..?  சன்டேன்னா  நீ  நைட்டியோட  தான  இருப்ப..? நாம எங்கையாவது  வெளில போகபோறமா..?” என்று  அபர்ணா  துளைத்தெடுத்தாள்.
        நீலகண்டனும் அப்பொழுதுதான் ‘டிஃபன்  ரெடியாம்மா..?” என்று  கேட்டுக்கொண்டே  வந்தார்.
      ‘ரெடிதான்ப்பா… இதோ  எடுத்திட்டு வரேன்..”  என  குரல்கொடுத்து..
       ஹாட் பாக்சோடு சமையலறையில்  இருந்து  வெளிவர.. அவளை  அதிசயமாகப்  பார்த்து.. 
      ‘என்னம்மா..  வெளில  போகனுமா..?  ஏதாவது   வாங்கனுமா..?“ என்றார்.  
        நாம  எப்பவும்  போல  இருந்திருக்கனும்.. என ஆனந்திக்கு  தோன்ற  அவஸ்த்தையாய்  ஆரம்பிக்க.. அப்பாகிட்ட  என்ன  சொல்லலாம்.  என்று  யோசிக்கும்போதே..
     ‘உள்ளே  வரலாமா  மாமா..?”  என்றபடி  வெளியில்  நின்றுகொண்டிருந்தான் வெற்றி.
     ‘வெற்றி..  இது  என்ன  கேள்வி..? வாப்பா..” என்றார்  இன்முகமாக.
      வெற்றி உள்ளே  வந்ததும்.. ‘உட்காருப்பா..  முதல்ல  சாப்பிடலாம்.”  
     ‘மாமா…  எனக்கு  இங்க..”  என்று  தடுமாற.. 
      ‘அட  என்னப்பா  நீ..?  இது  உன்  அத்தை வீடு..  எதுக்கு  இப்படி  கில்ட்டியா   இருக்க.. நீ  இங்க  எப்ப  வேணும்னாலும்  வரலாம்.   ஊர்ல  அப்பா  என்ன   சொன்னார்..?  எல்லாரும்  நல்லா  இருக்காங்களா..?”  என்றார்  இயல்பாக.
      ‘நல்லா  இருக்காங்க  மாமா..”  என்று  சொல்லிக்கொண்டே  அபர்ணாவைப்  பார்த்தான்.   அவள்  அமைதியாக   வெறுப்புமல்லாமல்.. சந்தோசமுமல்லாமல்  நின்றுகொண்டிருந்தாள்.  அதை  கவனித்தவன்.. 
       ‘அபர்ணா  குட்டிக்கு  என்னாச்சி..?  நான்  இங்க  வந்தது   பிடிக்கலயா..?   கிளம்பட்டுமா..?  உன்கிட்ட  சாரி  கேக்கதான் வந்தேன்..” என  சிறுகுழந்தையிடம்  பேசுவதுபோல்  வெற்றி  பேச..
       ‘நீங்க  பொய்  சொல்றிங்க..  எங்கம்மாவைப்  பார்க்கத்தான  வந்திருக்கிங்க..?” என்றாள்.
      கோபம்  போயிடுச்சிபோல.  அதுதான்  இப்படி   சகஜமாப்  பேசறா  என்று  நினைத்து..  ‘ம்ம்..  ஆமாம்  அபர்ணா  நீ  சொல்றது  உண்மைதான்..  இருந்தாலும்  நான்  உன்னை  ரொம்ப  படுத்திட்டேன்ல..?  அதான்  உன்கிட்ட   நேர்ல  பார்த்து  சாரிகேட்டுடலாம்னு  வந்தேன்..” என்றான்  மீண்டும்.
     ‘நீங்க ஆனந்தியை  கல்யாணம்  பண்ணினாலும்  நான்  உங்களை  மாமான்னு  கூப்பிடமாட்டேன்.” என்றாள்  முறுக்கியவளாக.
     சிரித்த வெற்றி.. ’சரி..  மாமா  வேண்டாம்.  அத்தான்னு  கூப்பிடுறியா..?”     
     ‘சரிங்க  அத்தான்..”  என்றாள் சமத்தாக.
    ‘ம்ம்  டபுள்  ஓ.கே.   இப்போலயிருந்து  நாம  இரண்டுபேரும்  பிரண்ட்ஸ்..  ஓ.கே. வா…?”  என  பேச்சுக்கள்  இனிமையாக  அபர்ணாவிடம்  மட்டுமே  தொடர..  ஆனந்தியின்  புறம்  திரும்பவே  இல்லை  வெற்றிமாறன்.
       சிவமுகிலன்  வெற்றிக்கு  போன்  செய்ய.. ‘சொல்லு.. சிவா..”  என்றான்.
      ‘நீ  எங்க  இருக்க..?”
      ‘நான்  என்  மாமா.. வீட்ல..  என்  புது  பிரெண்டு   அபர்ணாவோட  பேசிட்டிருக்கேன்..”  என்றான் உல்லாசமாக. 
     ‘அந்த லூசு..   உனக்கு  இப்ப  பிரெண்டாய்ட்டாளா..?  அதுதான்  நீ  இங்க  இருந்தும்  எனக்கு  கால்  பண்ணலையா..?  இன்னும்  கொஞ்ச  நேரத்தில  நீ  நாம  வழக்கமா  மீட்  பண்ற  இடத்துக்கு  வரனும்..” என்றான்.
     ‘சிவா ..  நான்  மட்டுமா..?  இல்ல..”  எனும்போதே..
     ‘நானே  செம  கடுப்புல  இருக்கேன்..  ஒழுங்கா  நீ  மட்டும்  வந்து  சேரு..”  என்று  கட்  செய்தான்.
      தனது  அத்தையிடம்  சென்று  நலம்  விசாரித்து..  ‘அத்தை..   எனக்கு  கெஞ்சம்  வெளில  வேலையிருக்கு..  நான்  போய்ட்டு  உடனே  வந்திடறேன். நாம  நிறைய  பேசவேண்டியிருக்கு..  ஒரு  ஒருமணிநேரத்தில  வந்திடறேன்…”  என  ஹாலுக்கு  வரவும்..
    ‘வெளில  போகனுமா  வெற்றி..?” என்று  நீலகண்டன்  கேட்க..
    ‘ஆமாம்  மாமா..  என்னோட  பிரெண்டு  சிவா  கூப்பிட்டான்.. என்னான்னு  தெரியலை..  கொஞ்சம்    அர்ஜெண்டா  வரசொன்னான்..  நான்  போய்ட்டு  சீக்கிரம்  வந்திடறேன்…” என்றான்.
     ‘அத்தான்  நீங்க  கண்டிப்பா  போக  வேண்டாம்.  அந்த  ஆள்  நல்லவர்  கிடையாது.  நீங்க  அவனோட  பிரெண்ட்சிப்பை  கட்பண்ணுங்க…”  என்றாள்.
      ‘அபர்ணா..  வெளில  கிளம்பும்போது..  இப்படி  சொல்லக்கூடாது.  நல்லவங்க   யாரு..   கெட்டவங்க  யாருன்னு   அவருக்கு  தெரியாதா..? நீ  அமைதியா  இரு.”  என  ஆனந்தி  கண்டிக்க..
     ‘ஆமாம்.. அத்தானுக்கு  எப்படி  அவனைப்  பத்தி  தெரியும்?   எனக்குத்தானே  தெரியும்..” என  அபர்ணா  ஆரம்பிக்க..
     ‘ஏம்மா.. வெற்றியோட  நண்பனைப்பத்தி  உனக்கெப்படி  தெரியும்..?” என்று  நீலகண்டன்  கேட்கவும்..
        ‘அது வந்துப்பா.. அவர்..” என்று  அபர்ணா தடுமாற..
       ஆனந்தி  இடைமறித்து   ‘அப்பா.. இவரை  நான்  பார்த்தே  ஆகனும்னு  ஒருத்தர்   என்னை   கூட்டிட்டு  போனார்ன்னு  சொன்னனே.. அவர்தான்   சிவமுகிலன்.  அன்னைக்கு  இவர்கூட  சிவமுகிலனும்  வந்திருந்திருந்தார்.  எங்களை  மிரட்டிகூட்டிட்டு  போனதனால  இவ  இப்படி  பயந்துக்கிறா..  என  தன்  அப்பாவிற்க்கு  விளக்கமளித்து..  அபர்ணாவிடம்  சொல்லாதே  என்பதுபோல  பார்வையாலேயே  அவளை  அமைதிப்படுத்தினாள். 
      வெற்றி.. ‘மாமா.. நான்  அவனைப்  பார்த்திட்டு  வந்து  அத்தைகிட்ட  பேசிட்டு  உடனே  ஊருக்கு   கிளம்பனும்.  அங்க  கன்ஸ்டரக்சன்  வொர்க்கெல்லாம்  ஒருவாரமாவே  பெண்டிங்கில  இருக்கு..”  என  அவசரமாக  கிளம்பினான்.  வெற்றியின்  பாராமுகம்  ஆனந்திக்கு  அழுகையை  வரவழைக்க..  தந்தை  அருகிலிருப்பதை  நினைத்து   கட்டுப்படுத்தினாள்.
      பிறகு..  அபர்ணாவை   தனது  அறைக்கு  அழைத்து  வந்து..
      ‘உனக்கு  கொஞ்சமாச்சம்..  அறிவிருக்கா..?” என்றாள்  ஆனந்தி.
     ‘நீ  எதுக்கு  அத்தானை அந்தாளை  பார்க்க  அனுப்பின..?” என்றாள்  அபர்ணா.
      ‘ஆபிஸ்ல  நடந்தது   அப்பாக்கு  தெரியக்கூடாதுன்னு..   எத்தனை  முறை  உன்கிட்ட  சொல்றது..?”  என  ஆனந்தி  கடுகடுக்க..
     அபர்ணா… திரு திருவென  முழித்தாள். ‘இங்க  பாரு  அபர்ணா..  உனக்கு  என்ன  பேசனும்னாலும்   நீ  என்கிட்ட  பேசு.  அதவிட்டுட்டு   உன்  அத்தானும்   உனக்கு  பிடிச்சமாதிரிதான்  நடக்கனும்னு    நினைக்கிறது   ரொம்ப  தப்பு..” என்றாள்  ஆனந்தி.
     ‘நான்  அத்தான்கிட்ட  பேசக்கூடாதா..?”  என கண்கலங்கினாள்.
       ‘ஏய்..    நான்  அப்படி  மீன் பண்ணலைடி.. உன்  அத்தான்கிட்ட  நீ  என்னவேன்னாலும்  பேசலாம்..  நான்  எதுக்கு  உன்னை  பேசவேனாம்னு  சொல்லப்போறேன்..?    நீங்க   என்ன  பேசினிங்கன்னு  கூட  நான்  கேட்க  மாட்டேன்.   ஆனா..  உனக்கு  பிடிச்சவங்களோடதான்  அவர்  பேசனும்னு  நீ  நினைக்கிறதுதான்  தப்புங்கிறேன்..   அதோட   நாம  யார்கிட்ட  பேசனும்   யார்கிட்ட  பேசக்கூடாதுன்னு  அவருக்கு  தெரியாதா..?”  என்றாள் .
     ‘ஆமாம்…  அந்தாளு  நேத்து  ஆபிஸ்ல  என்கிட்ட  நடந்துகிட்டது   அத்தானுக்கு   தெரியாது.  தெரிஞ்சிருந்தா.. அவன்  கெட்டவன்னு  புரிஞ்சிகிட்டு..  இப்ப   அவனைப்  பார்க்க  போயிருக்க  மாட்டாரு..” என்றாள்.
      ‘அதுக்காக..  நீ  அப்பா முன்னாடி  இப்படி  பேசலாமா..?  அதுவுமில்லாம  நீ   எல்லார்கிட்டையும்    எங்க  எம்.டி  என்னை  கிஸ்  பண்ணிட்டாருன்னு  சொல்லிட்டு  இருப்பியா..?  இல்ல..  இது  எல்லார்கிட்டையும்  சொல்றவிசயமா..?  இது  வெளிய  தெரிஞ்சா  யாருக்கு  அவமானம்..?  உனக்கும்  நம்ம  குடும்பத்துக்கும்தான்..” என  ஏகத்திற்கும்  திட்ட..
      ‘நான்   என்ன  தப்பு  பண்ணினேன்..?”  என  அழ  ஆரம்பித்தாள்  அபர்ணா.
      ‘நீ  ஒரு  தப்பும்  பண்ணலை..  அது எனக்கு  தெரியும்.  ஆனா  மத்தவங்க  என்ன  நினைப்பாங்க..?   நீ  சிவா  மேல   இருக்க  வெறுப்புல  அவரை  அசிங்கப்படுத்தனும்னு  நினைச்சி   உன்னை  நீயே  அசிங்க  படுத்திக்காத..” என்றாள்   மன்றாடலாக.  
      ‘சரி.. “ என்று  அமைதியாக  தலையாட்டினாள். 
     வெற்றிமாறன்  சிவமுகிலனுக்கு    நேர்  எதிராக  அமாந்திருந்தான். 
     ‘அர்ஜெண்ட்டுன்னு  வர  சொல்லிட்டு  இப்படி  அமைதியா   இருந்தா  என்ன  அர்த்தம்  சிவா..?” என்றான்  வெற்றி.
     ‘அந்த  லூசு  பண்ணின  வேலையிருக்கே…“ என்று  பல்லைகடித்தான் சிவமுகிலன்.
     ‘அப்ப..  நீ  செய்த  வேலைமட்டும்  புத்திசாலித்தனமானதா..?” என்று  வெற்றி  கோபத்தோடு  கேட்க..
      வெற்றியை  முறைத்தான் சிவமுகிலன்..  ‘என்ன  முறைக்கிற..? ஒரு  பொண்ணை  லவ்  பண்றவன்..  முதல்ல  என்ன  பண்ணனும்..?”
     சிவமுகிலன்  அமைதியாக  இருக்கவும்..  ‘முதல்ல  அபர்ணாகிட்ட  உன்  லவ்வை  சொல்லாம..  இப்படி  அவசரப்பட்டு  நடந்துகிட்டா..   எப்படி  தப்பா  நினைக்காம  இருப்பாங்க..?    சரி அபர்ணாவை விடு..  உங்கப்பா  என்ன  சொன்னார்..?” என்றான்  வெற்றி.
       ‘அப்பாக்கு  இது  அதிச்சிதான்..  ஆனாலும்  அபர்ணாவைதான்  கல்யாணம்  பண்ணுவேன்னு..    அவர்கிட்ட  தெளிவா  சொல்லிட்டேன் வெற்றி.    அவர் இதை  அக்சப்ட்  பண்ணிக்குவார்ன்னு   எனக்கு   நம்பிக்கையிருக்கு.  ஆனா  அம்மாவால   இதை  ஏத்துக்கவே   முடியலை..” என்றான்.
     ‘இப்ப  என்ன  பண்லாம்னு  இருக்க..?” என்றான்  வெற்றி
     ‘எங்கம்மாவைப்  பத்தி  எனக்கு  தெரியும்  வெற்றி..  அவங்களுக்கு   நான்  தான்  முக்கியம்..   என்ன..  நான்  இப்படி  பண்ணுவேன்னு  அவங்க  நினைக்கலை..” என்றான்  பாவமாக.
     ‘என்னை  எதுக்கு   அர்ஜெண்டா  வரசொன்ன…?” 
    ‘டாக்டர்தான்  எங்கப்பான்னு  அபர்ணாக்கு  தெரியாது.  ஆனா  என் அப்பாவை  முன்னாடியே   அபர்ணாக்கு  தெரிஞ்சிருக்கு..  என்னதான்  தெரிஞ்சவங்களா   இருந்தாலும்..  இப்படியா லூசாட்டம் எல்லாத்தையும்  சொல்லுவா..?  இவளை  எப்படி  சமாளிக்கிறதுங்கறதுதான்   எனக்கு   பெரிய  பிரச்சனையா  இருக்கு..”  என்றான்  டென்சனோடே. 
      ‘நீ  இது  மட்டும்தான்  பிரச்சனைன்னு  நினைக்கிறியா..?  உங்க ஆளு  இனிமேல்  உன்  கம்பெனிக்கு  வேலைக்கு  வரமாட்டாளாம்..” என்றான்  கூடுதல்   தகவலாக.
     ‘அதுதான்  நேத்தே  என்கிட்ட  சொல்லிட்டாளே.”  என்று    சாதாரணமாக  சொன்னான்.
     ’என்னடா  இவ்ளோ  ஈசியா  சொல்ற..? வேலைக்கு  வரலைன்னா.. எப்படி  அபர்ணாவை  பார்ப்ப..?”
    

Advertisement