Advertisement

                                   
                                   அத்தியாயம்–11   
          சிவமுகிலனால்  தாளவே  முடியவில்லை..    மிகவும்  டென்சனாக  இருந்தான்.  இப்படி  ஒரே  நாள்ல  நம்ம  இமேஜை  டேமேஜ்  பண்ணிட்டாளே..  என  கொதித்திருந்தான்.   சிவமுகிலன்..  இயற்க்கையாகவே   யாரிடமும்  எதையும்  அதிகமாக  பகிர்ந்து  கொள்ள  மாட்டான்.   அதிலும்  அவன்  அப்பாவிடம்   அழுத்தமாகவேதான்   இருப்பான்.  அம்மாவிடமும்  ஜாலியாக  இருப்பானே  தவிர..  சொந்த  விசயங்களை  பகிர்ந்து  கொள்ள  மாட்டான்.. 
    அவனுக்கு  இருக்கும்  ஒரே  நண்பன்..  வெற்றி  மட்டும்தான்.   அபர்ணா விசயத்தையும்  கூட   வெற்றியே  கண்டுபிடித்தானே  தவிர..  இவனாக  எதுவும்  சொல்லவில்லை.    டென்சன்  குறையவே  இல்லை..  இன்னும்   அலுவலகத்தில்தான்   இருந்தான்.
      அவனின்  அப்பா  போனில்  அவனை  அழைத்தார்.  அழைப்பைப்   பார்த்ததும்  என்னசொல்வாரோ  என  மிகவும்   சங்கடமாக  உணர்ந்தான். 
      மூன்றாவது  அழைப்பில்  எடுத்தவன்.. ‘சொல்லுங்கப்பா…” என்றான்.
      ‘எங்க  இருக்கப்பா..  ஏன்  இன்னும்  வீட்டுக்கு  வரலை..?  உன்  அம்மா  பக்கத்திலதான்  இருக்கா… என்னைப்போட்டு  படுத்தி எடுக்கறா..   நீ  மெதல்ல வா..” என்றார். 
      ஒரு  வழியாக  வீட்டிற்கு  கிளம்ப..  வீட்டினுள்  வந்ததும்.. ‘ஏன்ப்பா  இவ்வளவு  லேட்..?” என்றார்  பதட்டமாக.
     ‘அம்மா  நான்  என்ன  சின்ன குழந்தையா..?  வேலை  முடிஞ்சா  வரப்போறேன்..”  என  தன்  அம்மாமுகத்தைப்   பாராமலே  சொன்னான்.
     ‘அது இல்லப்பா..  நீ  மதியம்  சாப்பிடவும்  வரலை..  எந்த  வேலையா இருந்தாலும்  இவ்ளோ  நேரம்   சாப்பிடாம  இருந்தா..  உடம்பு  என்னத்துக்கு  ஆகும்..?”  என்றார்  கவலையாக.
     பிறகுதான்.. ’நீங்க  சாப்டிங்கலாம்மா..?”  என்றான். 
     ‘நீ  சாப்பிடாம  இருக்கும்போது..  என்னால  எப்படி சாப்பிட  முடியும்..?” 
     ‘என்னம்மா..  நீங்க..?  முதல்ல  சாப்பிடுங்க..” என  பதறியவன்..  
     ‘பழனி..”  என்று  கத்தினான்.  பழனி  அவர்கள்  வீட்டு  சமையல்காரர்.    சமையலில்  குறை  என்றால்  கூட  அமைதியாக  சாப்பிட்டும்  சிவமுகிலனின்  கோபக்குரலில்   தன்  வயதை  மறந்து  வேகமாய்  வந்து  அவன் முன்  நிற்க..
     ‘அம்மா..  சாப்பிடாம  இருக்காங்க..  அவங்களை  சாப்பிட  வைக்கக்கூட  உங்களால  முடியலைன்னா..  அப்புறம்  என்ன வேலை  செய்றிங்க..?”  என்று  கத்தினான்.
      ‘தம்பி..  நான்  எவ்ளவோ  சொல்லிப்பார்த்தேன்..  நீங்க  வரட்டும்ன்னுட்டாங்க..” என்றார்  பாவமாக.
       ‘ஏன்  லலிதா..  நான்  லன்ச்சுக்கு  வந்ததும்..  குடிக்க  தண்ணிகூட  கொடுக்காம  என்னை  உன்  பையன்கிட்ட    அனுப்புனியே..    நானும்  சாப்பிடாம..  அந்த  பொண்ணை  வேற  அவங்க  வீட்ல  விட்டுட்டு   வந்து..   இத்தனை  நேரமாச்சி..   இரண்டு  பேரும்  என்னை  சாப்பிட  சொன்னிங்களா..?“  என்றார்.
      ‘நீங்களாவது  அம்மாக்கு  புரிய  வைச்சி  இரண்டுபேரும்  சாப்பிட வேண்டியதுதான..?”  என  தன்  தந்தையிடமும்  கடிந்து..
    ‘முதல்ல  இரண்டு  பேரும்  சாப்பிடுங்க..” என்றான்  கடுப்பாகவே.
    ‘யாரோ  ஒரு  பொண்ணுக்கு  பிரச்சனைன்னதும்  நீ  என்னை  மறந்திட்டல்ல..?  போடா..  எனக்கு  சாப்பாடு  வேணாம்..” என்றார்  லலிதா. 
    குழந்தையாய்  முறுக்கிக்கொள்ளும்   அம்மாவை  பார்த்தவன்..   இவங்க  அபர்ணாக்கு  அம்மாபோல   என  நினைத்து.. ‘சாரிம்மா..  என்  செல்ல  அம்மால்ல..?  சாப்பிட  வாங்க..”  என்று  லேசாக  சிரித்தான்.
    ‘ம்ம்… இப்பதான்  நீ  அழகா இருக்க.”  என்று  திருஷ்டி  கழிக்க..
    ‘அம்மா..  லலிதா..  உன்  பையன்  அழகை  அப்புறம்  ரகிக்கலாம்…  எனக்கு  பசிக்குது  வா…”  என்றார் முத்துகிருஷ்ணன்.
     ஒரு வழியாக  சாப்பிட்டு..  ‘அம்மா..  எனக்கு  டையர்டா  இருக்கு..  கொஞ்சம்  ரெஸ்ட்  எடுக்கிறேன்..  யாரும்  டிஸ்டர்ப்  பண்ணாதிங்க..” என்று ரூமில்  அடைந்து  கொண்டான். 
       சிவமுகிலன்  அதிகாலைவரை  தூக்கமில்லாமல்  தவித்து..   ஆறு  மணிக்கு  மேல் தான் அவனையறியாமல்   தூங்கினான்.  எப்பொழுதும்போல்  மகன்    ஜாகிங் சென்றிருப்பான்   என்று  நினைத்திருந்தார் லலிதா. 
       எட்டுமணி  ஆகவும்.. ‘பழனி..  டிபன்  ரெடியா..? சிவா  இப்ப வந்திடுவான்.   லேட்  ஆனா  சாப்பிடாம  கம்பெனிக்கு  ஓடிடுவான்.” என்றார்.
       அம்மா  தம்பி  இன்னைக்கு  ஓடறதுக்கு  போகலைன்னு  நினைக்கிறேன்.  ரூம்  உள்பக்கமா  தாழ்போட்டுருந்துச்சி..   வழக்கத்தில இல்லாம  இன்னைக்குதான்  ஏதோ அசந்து  தூங்கறார்ன்னு..  நான்  கதவைக்கூட  தட்டலைம்மா.“ என்றார்  பழனி.
    ‘இதை  அப்பவே  சொல்லமாட்ட..?   நேத்தே  ரொம்ப  சோர்வா  தெரிஞ்சான்.  ஒரு வேளை  காய்ச்சலோ  என்னவோ..”  என  பழனியைத்  திட்டிக்கொண்டே  அவனின் ரூமிற்க்கு  சென்றார்.
    ‘சிவா… சிவா..” என  லலிதா  கத்த..
    ‘ஏன்  லலிதா    இப்படி  சத்தம்  போடுற..?” என  முத்துகிருஷ்ணன்  வெளியே  வர..
     ‘ஏங்க..  சிவா  இன்னைக்கு  ஜாகிங்  போகலை..  உள்ளதான்  இருக்கான்.” என்றார்  பதட்டமாக.
     ‘ஒருநாள்  ஜாகிங்  போகாததுக்கா   இப்படி பதறுற..?  ஏதாவது  வேளை  இருந்திருக்கும். நைட்  லேட்டாகூட  தூங்கியிருப்பான்..”  என  அமைதிப்படுத்த..
      ‘இப்படி  ஒரு நாளும்  சிவா  இருந்ததில்லையே..   என்னன்னு  தெரியலை.. நேத்தே   சோர்வாதான்  இருந்தான்.”  என்றார்  மீண்டும்..
      ‘நல்லா  தூங்கி  எழுந்தா  டையர்ட்னஸ்  போய்டும்..  இன்னைக்கு  சன்டே  தான..?  அவனை  எழுப்பாத..” என்றார் ஒரு  டாக்டராக.
      ‘அதெல்லாம்   இல்லை  நான்  இப்ப அவனைப்  பார்த்தே  ஆகனும்..” என  லலிதா  ‘சிவா.. சிவா..” என  கதவைத்தட்ட..
      ‘ம்ம்.மா…. ப்ளீஸ்… டோன்ட்   டிஸ்டர்ப்  மீ… எனக்கு  தூக்கம்  வருது.”  என்றான்  சோர்வான  குரலில்.
      ‘சிவா… சிவா…  ஏன்  இன்னும் நீ  எழுந்திருக்கலை..? உடம்புக்கு  என்னப்பா?  முதல்ல  கதவைத்திற.. மணி  எட்டரையாகுது..  பாலாவது  குடிச்சிட்டு   தூங்குப்பா..”  என்றார்.
     ‘கா..ட்..  இந்த  அம்மா இருக்காங்களே…”  என  சலிப்பாக  வந்து  கதவைத்திறந்தவன்..  அவர்  முகத்தைப்  பார்க்காமலே  மீண்டும்   படுத்துக்கொள்ள..   
      அவன்  நெற்றி..  கழுத்து..  கை..  கால்.. என அனைத்து  பாகங்களையும்  தொட்டுப்பார்த்தவர்..  ‘என்னங்க.. தொட்டுபாருங்க..“ என லலிதா பதற..
      ‘சிவா…” என அழைத்துப்பார்த்தார்.  அவன்  முகமே  திருப்பவில்லை.
      ‘சிவா… நீ  முழிச்சிட்டுதான்  இருக்க..  முதல்ல  அம்மாவைப் பாரு.. எப்படிப்  பயப்படுறா..?” என்றார்  சற்று  கோபமாக.
      மெதுவாக  எழுந்து  தன் அம்மாவிடம்..  ‘எனக்கு  ஒன்னுமில்லைம்மா.  இன்னும்  கொஞ்ச   நேரத்தில  நானே  கீழே  வரேன்..  நீங்க  போங்க.”  என்றான்  சோர்வாக.
       ‘ஏங்க..  இவன்  கண்ணைப்பாருங்க  எப்படி  சிவந்திருக்குன்னு.”  என லலிதா  மீண்டும்  பதற..  முத்துகிருஷ்ணனும்  அதை  கவனித்தார்தான்.  ஆனால் தன் மனைவியிடம்  எப்படி  சொல்லமுடியும்..?  என்றுமில்லாமல்  இவன்  குடித்திருக்கிறான் என்று..  அதிலும்  இவன்  குடித்திருப்பது  லலிதாவிற்க்கு   தெரிந்தால்..  அப்புறம்   இவளை  சமாதானம்  செய்ய  நாமதான்  தண்ணியடிக்கனும்..  என்று  நினைத்திருக்க.. 
      ‘என்னங்க.. என்ன  இப்படி  அமைதியா  இருக்கிங்க.?” என்று  லலிதா  கத்த..
      சலிப்போடு  இரு  கைகளையும்  தன்  தலையில்  வைத்துக்கொண்டு.. 
     ‘அப்பா  அம்மாக்கிட்ட  எனக்கு  ஒன்னுமில்லன்னு  சொல்லுங்க..   நீங்க  சொன்னாதான்  என்னை  தூங்க விடுவாங்க.” என  தன்தந்தையை  துணைக்கழைத்தான்.
      ‘உன் விசயத்தில    யார் சொன்னாலும்   உன் அம்மா  கேட்கமாட்டாப்பா..   அதனால  முதல்ல   எழுந்து..  நல்லா  தெளியறவரைக்கும்  குளிச்சிட்டு..   கீழே வா..  ரொம்ப  நேரம்  இவளை  சமாளிக்க  என்னால  முடியாது..” என  ஒவ்வொரு  வார்த்தையையும்  அழுத்தத்தோடு  சொல்ல..
      ‘என்ன  தெளியனும்..?  நோயாளிகளையே பார்த்துப்பார்த்து.. அவங்ககிட்ட  பேசறமாதிரியே   இங்கையும்  பேசாதிங்க.  அவன்  வருத்தப்படுவான்.” என  தன்  மகனுக்காக  பரிந்து  பேச..
       ‘நான்  என்ன  தப்பா  சொல்லிட்டேன்  லலிதா..?”  என  தன்  மகனை    அமர்த்தலாகப்  பார்த்து..  ‘தூ..க்கம் தெளியறவரைக்கும்  நல்லா  குளிக்கதான  சொன்னேன்.  அவன்  குளிச்சி  கீழே  வருவான்  நீ வா..”  என்று   தன்  மனைவியை  அழைத்துச் சென்றார்  கிருஷ்ணன்.
        தான்  தண்ணியடித்ததை  அப்பா  கண்டுபிடித்துவிட்டார்   என தெரிந்ததும்.. சிவமுகிலனுக்கு  உண்மையாகவே  போதை  தெளிந்துவிட..   இந்த  அபர்ணா  விசயத்தில..   நான்  என்ன  செய்தாலும்..  இந்த  அப்பாகிட்ட  தப்பிக்கவே  முடியலையே…?     எல்லாம்  இந்த  லூசால  வந்தது.   என்று  தான்  செய்த  தப்புக்கு  அபர்ணா திட்டிதீர்த்து..  பின்  குளிக்கச்சென்றான்.
        சிவமுகிலன்  கீழே  வர..  ‘வாப்பா.. இப்ப  எப்படி இருக்கு..?”  என லலிதா  கபடிமின்றி  கேட்க..
       ‘ம்மா.. எனக்கு  ஒன்னும்  இல்லைம்மா..   நைட்  தூங்கறதுக்கு  கொஞ்சம்  லேட்டானதால..   இப்ப  கொஞ்சநேரம்   சேர்த்து  தூங்கிட்டேன்.   அதுக்கு   போய்  இப்படி  பயப்படுவிங்களா…?”  என்றான்.
      ‘இல்லைப்பா   இந்த  கம்பெனி  ஆரம்பிச்சதிலிருந்து..  நீ  எப்பவும்   உன்  வேலையை   டைம்க்கு  முடிச்சிடுவ..  இந்த  ஏழு வருசமா..  நீ  என்ன  வேலையிருந்தாலும்   ஜாகிங்  போகாம  இருந்ததில்லையா…?   நீ  இன்னைக்கு  ஜாகிங்  போகலைன்னு  பழனி  சொன்னதும்  எனக்கு  பதட்டமாய்டுச்சி..”  என்றார்  லலிதா.
      ‘சிவா  வா..  வெறும்  வயித்தோட  இருக்காத.. முதல்ல  சாப்பிடு..”   என்றார்  முத்துகிருஷ்ணன்.
       ‘இல்லைப்பா எனக்கு  பசிக்கலை..  நான்  அப்புறம்  சாப்பிடறேன்.  நீங்க  சாப்பிடுங்க..”  என்றான்.
       முத்துகிருஷ்ணன்.. ‘லலிதா..  இவனுக்கும்  இருபத்தெட்டு  வயசாய்டுச்சி.  இன்னும்  நீயே  கவனிச்சா… அவனுக்கு   போதுமா…?  உன்  மகனுக்கு  கல்யாணம்  செய்தாதான்  இனி  எல்லாம்  சரியாகும்னு  நினைக்கிறேன்..“  என்றார்.
        ‘ஏங்க..  நானும்  மூனு  வருசமா  சொல்லிட்டுதான  இருக்கேன்.  அப்ப  என்ன  சொன்னான்.  இப்ப தான்மா  கம்பெனி  ஆரம்பிச்சிருக்கேன்..  இன்னும்   கொஞ்ச  நாள்  ஆகட்டும்ன்னான்.    இப்பவும்   போன வருசம்  பிறந்தநாள்ல  இருந்து  பொண்ணுபார்க்க  கேட்டுட்டு  இருக்கேன்.  இப்ப   இந்த  வருச  பிறந்தநாளே  முடிஞ்சிருச்சி. இன்னும்  ஒருபதிலும்  சொல்லமாட்றான்..   நான்  என்னங்க   பண்ணட்டும்..?” என  அங்கலாய்க்க..
      ‘அதெல்லாம்  அப்ப..  நீ   இப்ப  கேட்டுபாரு..  அவன்  கல்யாணத்துக்க  ஒத்துக்குவான்.” என்றார்   சாப்பாட்டில்  கவனம்  வைத்து.
        ‘நீங்க  என்ன சொல்றிங்க..?  அவன் உங்ககிட்ட  கல்யாணம்  பண்ணிகறேன்னு  சொன்னானா..?  சிவா  நீ  ஏன்  என்கிட்ட  சொல்லலை..?“  என்றார்  செல்ல  கோபத்துடன்.
      ‘அம்மா  நான்  யார்கிட்டையும்  எதுவும்  சொல்லலை.“ என  தன்  அப்பாவைப்  பார்த்து  முறைத்தான்.
      ‘ஏம்ப்பா..  உன்மாமா  பொண்ணுக்கு  நீன்னா  ரொம்ப  பிடிக்கும்.   நீதான்  எதுவுமே  சொல்லமாட்ற..“  என்று  தன்  அண்ணன்  மகள்  ரேஷ்மாவை  மருமகளாக்கிக் கொள்ள  மகனிடம்  அடிதளம்  போட்டார்  லலிதா.
     ‘அம்மா…   நான்  அவளை  கல்யாணம்  பண்ணமாட்டேன்னு   உங்ககிட்ட   எத்தனை  முறை  சொல்றது..?” என்றான்  சலிப்பாக.
    ‘ஏம்ப்பா..  அவளும்  நல்லா  அழகா  கலரா  இருக்கா..    இந்த  வருடத்தோட  டாக்டர்  படிப்பையும்  முடிச்சிருவா.  உங்க  அப்பாவே  என்கிட்ட  ரேஷ்மா  வருங்காலத்தில  நல்லா  வருவா..  அதீத புத்திசாலின்னு  பாராட்டியிருக்கார்..“ என்று  அடுக்கிக்  கொண்டே  போனார்  லலிதா.
    ‘அம்மா…    இன்னைக்கு   எங்கையும்  போகாம..  உங்களோட  வீட்ல   இருக்கலாம்னு  முடிவு  பண்ணியிருக்கேன்.  நீங்க  இப்படி   அவளைப்  பத்தியே  பேசிட்டிருந்திங்க..  நான்  இப்பவே  கிளம்பிடுவேன்.” என்றான்  கோபமாக.
      ‘சரி..  சரி..  சாப்பிடு..  இனிநான்  பேசல..” என்று  இட்லியை  வைக்க..  சிவமுகிலன்  சாப்பிடும்வரை  அமைதியாக  இருந்த  லலிதா..  அவன்  சாப்பிட்டு  தனதறைக்குள்  சென்றதும்..   முத்துகிருஷ்ணனிடம்..
      ‘ஏங்க..  நீங்க  சொன்னா.. அவன்  ரேஷ்மாவை  கல்யாணம்  பண்ணிப்பான்.”  என்றார்  ஆவலாக.
     ‘லலிதா.. உன்  மகன்  இந்த  வருசம்  கண்டிப்பா  கல்யாணம்  பண்ணிப்பான்.  நீ  ஒன்னும்  கவலைப்படாம  இரு.” என்றார்  முனுமுனுப்பாக.
      ‘இப்படி  ரகசியமா  சொல்றிங்கன்னா..  நீங்க  ஏதோ  என்கிட்ட  மறைக்கிறிங்க..   என்னன்னு  சொல்லுங்க..?  என்றார்  பிடிவாதமாக..
       ‘நீ  கோபப்பட  மாட்டன்னா  நான்  சொல்றேன்..”  என்றார்.   இன்னும்  பதட்டமான  லலிதா..   ‘முதல்ல  என்னன்னு  சொல்லுங்க…?” என்றார்.
      அலுவலகத்தில்  நடந்ததை   லலிதாவிடம்..  மறைத்து.. ‘உன்  மகன்  ஒரு  பொண்ணை  லவ்  பண்றான்.  யார்  சொன்னாலும்  அவன்  அவளைத்தான்  கல்யாணம்  பண்ணிக்குவான்..” என்றார்  உறுதியாக.
      ‘என்ன  சொல்றிங்க..?    என்  மகன்  ஒரு  ஏமாளி..   அவனுக்கு  அதெல்லாம்  தெரியாது. கண்டிப்பா..  அந்த  பொண்ணுமேல  தான்  தப்பிருக்கும்.  நாம  அவனுக்கு  புரிய  வைக்கலாம்.   இந்த  காலத்தில   யாரையும்  நம்ப  முடியாது..”   என்றார்  லலிதா.
       ‘உன்  பையன்  என்ன  சின்ன  குழந்தையா..?   எதுவுமே  தெரியாம  இப்படி  அடுத்த  பொண்ணு  மேல   பழி  போடக்கூடாது..   முதல்ல  நீ  ஒன்னு  தெரிஞ்சிக்க.  இவன்  லவ்  பண்ற  பொண்ணுக்கு..  இவனைக்  கண்டாலே  பிடிக்கலை.    அந்த  பொண்ணு  யாருன்னு  எனக்கும்  தெரியும்.  அவ  ரொம்ப  இன்னசென்ட்…  நீ  நினைக்கிற   மாதிரியான  பொண்ணு  அவ  இல்லை.  அத  முதல்ல  புரிஞ்சிக்கோ..” என்றார்  கடுப்பாக
      லலிதாவால்   தாங்கவே  முடியவில்லை.  ’இருங்க   நான்  அவன் கிட்ட இப்பவே  இதப்பத்தி  பேசறேன்.”  என  எழப்போக..
     ‘வேண்டாம்..  இன்னொரு  நாளைக்கு  பேசலாம்..” என்று  முத்துகிருஷ்ணன் சொல்ல  சொல்ல..   காதிலேயே  வாங்காமல்  மகனின்  அறை  முன்  நின்று..
     ‘சிவா..   சிவா..”  என கதவை  அந்த  தட்டு தட்டினார்.
     ‘என்னம்மா..?” என்றான்  உள்ளிருந்தபடியே…
     ‘முதல்ல  கதவைத்  திற..”  என்றார்.  
      சிவா  கதவைத் திறக்க..  கோபமாக  உள்ளே  சென்று  பெட்டில்  அமர்ந்தார்.  ‘ஏன்  இவ்ளோ  கோபமா  இருக்கிங்க..?”  என்றான்.
     ‘அப்பா  சொல்றதெல்லாம்  உண்மையா..?” என்றார். அதற்க்குள்  முத்துகிருஷ்ணனும்  வந்திருந்தார்.
     ‘அப்பா..  என்ன  சொன்னார்..?” என்றான்.
     ‘நீ  யாரையாவது  காதலிக்கிறியா..?  இல்லதானே..?” 
      ‘வேற  என்ன  சொன்னார்…?” என்றான். 
     ‘ஓஹோ..  அப்ப  இன்னும்   நிறைய  விசயத்தை  நீங்க  என்கிட்ட   மறைக்கிறிங்க  அப்படித்தான..?”  என்று  கணவனை  குற்றம்  சுமத்தினார்  லலிதா.  அலுவலகத்தில்  நடந்ததை  அப்பா  சொல்லவில்லை  என்பதை  புரிந்துகொண்டான்.  சற்று  நேரம்  சிவமுகிலன்  அமைதியாக  இருக்கவும்..
    ‘நீ  கல்யாணம்  பண்ணிக்கிறியா…?  நான்  உன்  மாமாகிட்ட   நம்ம  ரேஷ்மாவை   பொண்ணு  கேட்கட்டுமா…?”  என்றார்.
    ‘அம்மா…  நான்  மறுபடியும்   சொல்றேன்..  இன்னைக்கு  உங்களோட  சந்தோசமா…  வீட்ல  இருக்கலாமன்னு   இருக்கேன்..  நீங்க  ரேஷ்மாவைப்  பத்தி  பேசினிங்கன்னா…  நான்  இப்பவே  வெளில  கிளம்பி  போய்டுவேன்.” என்றான்  எரிச்சலாக.
    ‘என்னங்க  நீங்களாச்சம்   இவனுக்கு  சொல்லுங்க..”
    ‘அப்பசரி..  நீங்க  அந்த  ரேஷ்மாவைப்பத்தியே   நல்லாப்  பேசுங்க.. நான்  கிளம்புறேன்..”  என்று  கிளம்பியே  விட்டான்.
    ‘என்னங்க..?  இவன்  என்ன  இப்படி  பண்றான்..?” என லலிதா  பரிதவிக்க..  கிருஷ்ணன்  தன்  மனைவியை  பாவமாக  பார்க்க..
    ‘ஏங்க…  உங்களுக்கு  நல்லா  தெரியுமா..? அவன்  உண்மையாவே  அந்த  பொண்ணை  காதலிக்கிறானா..?”   என்றார்  நம்பாத  பார்வையோடு.
    ‘அப்ப…  நான்  பொய்  சொல்றனா..? நான்  உன்  புருசன்..  நீ  என்னை  நம்ப மாட்டியா..?” என்றார்  கோபமாக.
  ‘உங்களுக்கு   தெரியும்ன்னு  சொன்னிங்களே.  அந்தப்  பொண்ணு  யாருங்க..?  நல்ல  குடும்பமா..?  நம்ம  சிவாக்கு   படிப்பில  அந்தஸ்த்தில.. எல்லாம்   ஈடாஇருப்பாளா..?”  என்றார்  இறங்கிய  குரலில்.
       ‘சிவாவோட  கம்பெனியிலதான்  அந்த  பொண்ணு   ஒர்க்  பண்ணுது.  அந்த  பொண்ணோட  அப்பா  என்னோட  பிரெண்டுதான்..  அவர்  ரொம்ப  நல்லவர்..  ஆனந்தின்னு  அந்த   பொண்ணுக்கு  ஒரு  அக்கா  இருக்கா.. அந்த  பொண்ணோட   அம்மாக்கு  கொஞ்ச  நாளைக்கு   முன்னாடிதான்..  பக்கவாதம்  வந்துச்சி..  என்கிட்டதான்  ஒரு  மூனு   மாசமா ட்ரீட்மெண்ட்  எடுத்திட்டு  இருக்காங்க..  அவ்ளோதான்  அவங்களைப்  பத்தி  எனக்கு  தெரியும்..   ஆனா  அந்தப்  பொண்ணை  இவன் லவ்  பண்றது   எனக்கு  நேத்துதான் தெரியும்…” என்றார்.

Advertisement