Advertisement

     ‘அப்பா.. “ என்றான்  தயக்கத்தோடு.
     ‘இதென்ன  சத்திரம்னு   நினைச்சியா..?  சொல்லாம  கொள்ளாம  மூனுநாளா  எங்கடா  போன..?” என  சந்திரவாணன்  கர்ஜித்தார்.
     ‘அத்தையை   கண்டுபிடிச்சிட்டேன்ப்பா..  நேத்து  நைட்  அவங்க  வீட்லதான்  தங்கியிருந்தேன்..” என  தயக்கத்தோடு  சொல்ல..
     ‘வெற்றி..” என  தன்  மகனை  கட்டியணைத்து.. ‘எப்படியிருக்கா  சந்திரா..?” என்றார்  தன்  முகத்தை  வேறுபக்கம்  திருப்பியபடி..  குரல்  கோபமாக  வந்தாலும்  கண்கள்  குளம்  கட்டியது.
     ‘அத்தைக்கு   இப்ப  மூனுமாசமா   உடம்பு  சரியில்லப்பா..  மாமா  வேலையை   ரிசைன்  செய்துட்டு   அத்தையை  ரொம்ப  நல்லா  பார்த்துக்கிறார்..  மாமா   ரொம்ப  நல்ல  டைப்  ப்பா..”  என்றான்.
     நீலகண்டன்  முகம்  நினைவில்  வர..’ம்ம்..” என  மருகினார்.
     ‘இப்பவும்   அத்தை  மட்டும   வேணும்..  மாமா  வேணாம்னா  எப்படிப்பா..?” என்றான்  குற்றம்  சாட்டும்  குரலில்.
     ‘வெற்றி..  அந்தாளு   உங்கத்தை  மனசை  கெடுத்துட்டு..  ஒன்னுமே  தெரியாதமாதிரி  நாடகமாடியிருக்கார்..  என்னால  அதைத்தான்  தாங்கவே  முடியல..  அந்தாளோட  போகும்போது   உங்கத்தைக்கு  பதினெட்டு  வயசுதான்..   பச்சபுள்ளையை   பறிகொடுத்தமாதிரி   எனக்கு  எப்படியிருந்துச்சி  தெரியுமா..?  அந்தாளோட  உதவி  இல்லாம  சந்திரா  அந்தளவுக்கு  பேசியருக்கமாட்டா..” என்றார்  இன்றும்  குறையாத  கோபத்தில்.
      வெற்றிக்கு  தன்  அத்தை  காதல்  கல்யாணம்  என்றுதான்  தெரியும்..   அதுவும்  ஒருநாள்  வேலையாட்கள்  வீட்டை  சுத்தம்  செய்ய..    பெரிய பெட்டியினுள்  உள்ள  ஒரு   போட்டோவில்  தன்  அப்பாவை  ஆசையாய்   அணைத்திருக்கும்   தன்  அத்தையை..   இது  யாரென  தன்  அம்மாவிடம்  கேட்க..  பிறகு   தன்  அம்மா  சொல்லிதான்  தனக்கு  ஒரு  அத்தை  இருக்கிறார்கள்  என்றும்..   சிறுவயதில்   நாலுவருடமாக  தன்னை  பேணிகாத்தார்  என்றும்  தெரியவந்தது.
     வெற்றியின்  அம்மா  சந்திராவைப்  பற்றி  சொல்லும்போதே..  அப்பாவிடம்  இதுபத்தி  கேட்காதே..  என்று  கண்டிப்போடு  சொல்லியிருந்தார்.  அதன்பிறகு   நீண்ட  வருடம்  கழித்து..  சந்திரவாணனுக்கு   ஹார்ட்அட்டாக்  வரவும்..  அந்தநேரம்   அவரை  பார்க்க  வந்த  பங்காளி  ஒருவர்..  சந்திரா  கோயமுத்தூரில்தான்  உள்ளார்  என்பதையும்   அவருக்கு  இரு  பெண்பிள்ளைகள்  இருப்பதையும்   தெரிவிக்க..   மீண்டும்  ஒருமுறை  சேர்ந்தா  பிறக்கப்போறோம்  என்று  புத்தி  எடுத்துரைக்க..  கூடவே    தனது   தங்கை  மகள்களை   பார்க்க..   தாய்மாமனான  எனக்கில்லாத  உரிமை  அவங்கப்பனுக்கும்  கிடையாது  என்று  உரிமையோடு   மனம்  அலைபாய..   சந்திராவை   பார்க்க  வேண்டுமென்ற  தன்  விருப்பத்தை    மகனிடம்  தெரிவித்தார்.
      ஆனால்  தன்  அத்தைதான்  மாமாவை  விரும்பினார்  என்பது   வெற்றியோடு  சேர்த்து..   இதுவரை   யாரும்  அறியாதது.   நீலகண்டனுக்கும்   அதை   புரியவைப்பதற்க்கான   சந்தர்ப்பத்தை   சந்திரா  அளிக்காமல்  போக..  வெற்றியின்  குடும்பத்தினருக்கு     தீராத  பகையாளியனார்  நீலகண்டன்.
      ‘எனக்கு   என்  தங்கை  மட்டும்  போதும்..” என்றார் வீராப்பாக.
      ‘மாமாவும்  வேணாம்.. அத்தையோட   பொண்ணுங்களும்  வேணாமா..?” என்றான்  கோபமாக.
       ‘என்  தங்கை  பொண்ணுங்கடா  அவங்க..   நான்தான்  தாய்மாமன்..  எனக்கில்லாத  உரிமை  வேற  யாருக்கு  இருக்கு..?” என்றார்  உரிமையாக.
       ‘மாமா  இல்லாமத்தான்  அத்தைக்கு   பிள்ளைங்க  வந்தாங்களா..?” என  நீலகண்டனுக்காக  மீண்டும்  மீண்டும்  வெற்றி  பேச..  தன்  மகனை  முறைத்துப்பார்த்தார்  சந்திரவாணன்.  
        ‘காதலிச்ச  பெண்ணை  கைவிடாம..   கல்யாணம்  செய்து..  இத்தனை  வருசமா  உங்க  நினைப்பே   அத்தைக்கு   வராதளவுக்கு   பார்த்துக்கிறார்ன்னா..   அவரோட  பாசத்தை  நாம  புரிஞ்சிக்க  வேணாமாப்பா..?  
         இரண்டு  குழந்தைங்க  பிறந்தப்பவும்..  பிறந்த  வீட்டுக்கு  அனுப்பாம   தாய்க்கு  தாயா..  பார்த்திருக்கிறார்..  இப்போ  கூட  அத்தைக்கு  பக்கவாதம்  வந்து  மூனுமாசமா  படுத்த  படுக்கையிலதான்  இருக்காங்க..   அத்தையை  குளிக்க  வைக்கிறதிலயிருந்து..  சாப்பாடு  ஊட்டிவிடற  வரைக்கும்   மாமா  கண்ணுக்குள்ள  வச்சி  தாங்கறார்..  
         ஒரு  நல்ல  ஆம்பிளைக்கு  அழகே..  கட்டினவளை  கண்கலங்காம  பார்த்துக்கிறதுதான்..   மாமா  ஆம்பிளைன்னு  நிரூபிச்சிட்டார்..  இதுக்குமேல  வேற  என்னவேணும்..?  உங்களால  மாமாவை  ஏத்துக்க  முடியாதுனா..   அத்தை  எங்கயிருக்காங்கன்னு  நான்  சொல்லமாட்டேன்.. 
      இத்தனை  வருசம்  கழிச்சி..  மருமகன்  எடுக்கிற  வயசிலயும்   அவரை  அவமானப்படுத்த   நான்  விடமாட்டேன்..” என்றான்  உறுதியாக.
      சந்திரவாணன்  அமைதியாகவே  இருக்க..  வெற்றி  தன்  அப்பாவை  முறைத்துப்  பார்க்க..    ‘நான்  சாகறதுக்குள்ள  கல்யாணம்  செய்துக்குவியா..?  இல்லயா..?” என்றார்  கோபமாக.
       ‘கல்யாணம்  செய்துக்க  நான்  ரெடியாத்தான்  இருக்கேன்..  நீங்கதான்  ஒத்துக்கமாட்றிங்க..” என்றான்.
       ‘நான்  பார்க்கிற  பொண்ணைத்தான்  நீ  கல்யாணம்  செய்துக்கனும்..  திரும்பவும்..  ஆனந்தி..  கீனந்தின்னு  ஆரம்பிச்ச..  அவ்ளோதான்..” என்றார்.
      ‘என்  கல்யாணத்துக்காவது   அத்தையை  கூப்பிடுவிங்களா.?”
      ‘என்  தங்கையை  மட்டும்  கூப்பிடுவேன்..” என்றார்  முறைப்பாக.
      ‘எப்படியும்   பொண்ணு கேக்கனும்னா  பொண்ணுவீட்டு  படியை  மிதிச்சிதான  ஆகனும்..?” என்றான் 
       சந்திரவாணன்  யோசனையோடு  முகம்  சுருக்கி  வெற்றியை  பார்க்க..
      ‘என்  சந்திராத்தையோட  மூத்த  பொண்ணு  ஆனந்தியைத்தான்   நான்  காதலிக்கிறேன்..  அவளைத்தவிர  வேறயாரையும்   நான்  கல்யாணம்  செய்துக்கமாட்டேன்..  இனி  எப்போ  என்  கல்யாணம்னு   நீங்கதான்  முடிவு  பண்ணனும்..” என்றான்  முடிவாக.
     அதிர்ச்சியில்  விழிவிரித்தாலும்..  சந்திரவாணன் முகம்  பிரகாசத்தை  காட்ட..  ‘சீக்கிரம்   அத்தை  வீட்டுக்கு  போய்..  என் மாமாகிட்ட  பொண்ணு  கேக்குற  வழிய  பாருங்க..  ஆனந்திகிட்ட  உன்னைத்தவிர  வேறயாரையும்   நான்  கல்யாணம்  செய்துக்கமாட்டேன்னு  சொல்லிட்டு  வந்திருக்கேன்..”  என்று  சொல்லி  அவன்  பாட்டிற்கு  தனதறைக்குள்  சென்றுவிட.. 
       ‘ஏங்க..  இரண்டு  வருசமா  ஆனந்தி..  ஆனந்தின்னு  நம்ம  சந்திரா  பொண்ணைத்தான்  சொல்லிட்டிருந்திருக்கான்..   பேசாம  போய்  பொண்ணு  கேட்டுலாங்க..” என்றார்  மாலா.
       ‘என்னால   அந்த  நீலகண்டன்  வாசப்படியை  மிதிக்க  முடியாது  மாலா..” என  சந்திரவாணன்  வருந்த..
       ‘உங்க  தங்கைகிட்ட  உங்களுக்கில்லாத  உரிமையா..?  என்  தங்கையை   கூட்டிட்டு  போனல்ல..?  இப்போ  பாரு  உன்  மகளை  கூட்டிட்டு  போறேன்னு   சொல்லாம..   நீங்க  ஏங்க  இப்படி  தயங்குறிங்க..?”
      ‘நாம  போனாலும்  அந்தாளு   என்னை  மதிக்கமாட்டான்..” என்றார்  தவிப்பாக.
       ‘அந்த  அண்ணன்  ரொம்ப  நல்லமாதிரின்னு  வெற்றியே  சொல்லிட்டான்..  அப்படியெல்லாம்  தப்பா  எதுவும்  நடக்காது..  அதோட  சந்திரா  உங்களை  விட்டுகொடுக்கமாட்டா..    உங்க  தங்கைக்காக   கொஞ்சம்  கோபத்தை  குறைச்சிட்டிங்கனா..   நம்ம  மகனுக்கும்   அவனுக்கு  பிடிச்ச  வாழ்க்கை  அமைஞ்சிடும்…  விட்டுபோன  உறவும்  சேர்ந்தமாதிரி இருக்கும்.. “ என்று  மாலா  எடுத்துரைக்க.. 
       ‘ஒரு  டீ  கொடு  மாலா..” என  பணித்து..   தனது  ஈச்சேரில்  அமர்ந்து  யோசனையில்  ஆழ்ந்தார்.
      அடுத்தநாள்  காலை  தனதறையிலிருந்து  இறுகிய  முகத்தோடு   வெற்றி  வெளியே  வர..  ‘வெற்றி..  ஆனந்தி  ரொம்ப  அழகா  இருப்பாளா..?” என  மாலா  ரகசியக்  குரலில்  கேட்க..
       வெற்றியின்  இறுகிய  முகம்  இலகுவாக..  ‘ம்ம்..  ரொம்ப  அழகா இருப்பாம்மா..” என்றான்   அங்கிருந்த  சந்திரவாணனுக்கும்  கேட்கும்படி.
        ‘அண்ணா..   சக்ஸசா..?” என  காயத்திரி  கேட்க..
      ‘என்  வாழ்கையை  விட..  நம்ம  அப்பாவோட  ஈகோதான்  காயு  முக்கியம்..” என்றான்  தன்  அப்பாவை  பார்த்தபடி.
      ‘என்  தங்கையை  பார்கனும்னு  சொன்னா..  அவ  பொண்ணை  யாருடா  உன்னை  பார்க்க  சொன்னது..?” என்றார் குரலில்  கோபம் கொண்டும்..  முகத்தில்   சந்தோசம்  கொண்டும்.
      தன்  அப்பாவை  புரிந்தவன்..  உள்ளுக்குள்  சிரிப்போடு.. ‘எனக்கு  உரிமையான  பொண்ணு..  நான்  பார்த்தேன்..  இனிமேலும்  பார்ப்பேன்..  உங்க  தங்கையை  நீங்க  பார்த்துக்கோங்க..  அவங்க  பொண்ணை  நான்  பார்த்துக்கிறேன்..” என்றான்   உரிமையோடும்..  செல்ல  முறைப்போடும்.
       ‘நீயே  எல்லாம்  பார்த்துக்குவியா..?  நாங்க  தேவையில்லையா..?”
       ‘நீங்க  தேவையில்லன்னு  நினைச்சிதான்   இரண்டுமாசமா  உங்ககிட்ட  கெஞ்சிட்டிருக்கேனா..?” என்றான்  கோபமாகவே.
       நீண்ட  நேர  அமைதிக்குப்  பிறகு..  ‘வெற்றி..” என்றார் வாஞ்சையாக.
      அவனும்.. ‘என்னப்பா…?” என்றான்  தன்  கோபம்  குறைத்து.
      ‘சந்திராதான  நான்  வேணாம்ன்னு  சொல்லிட்டுப்  போனா..?  இந்த  கல்யாண  விசயமெல்லாம்  அப்புறம்  பார்த்துக்கலாம்.  என்னோட  தங்கச்சியா..  அவதான்   முதல்ல   என்கிட்ட  போன்லயாவது  பேசனும்.   இந்த  அப்பாவுக்காக   இதையாவது  செய்வியா..?” என  தழுதழுத்தார்.
      ‘அதெல்லாம்  ஒரு  பெரிய  விசயமே  இல்லப்பா.  அத்தை  ரொம்ப  நல்லவங்கப்பா.” என்றான்  உற்ச்சாகமாக.
       ‘டேய்.. டேய்..  என்கிட்டையே  வா..  அதுவும்  சந்திராவைப்பத்தி.. எல்லாம்  என்  நேரம்டா..” என  இன்பமாக  சலித்துக்கொண்டார்.
       ‘அப்பா..   நாளைக்கு   அத்தை  வீட்டுக்கு  போய்ட்டு..  அங்கயிருந்து   அத்தையை  உங்ககூட  பேசசொல்லட்டுமா..?” என்றான்  கெஞ்சலாக.
       ‘உன்னைப்  பார்த்தா..  நாளைக்கு  போறமாதிரி  தெரியலையே..  என்னவோ  இப்பவே   கிளம்பறமாதிரியில்ல  இருக்கு..?” என்றார்  சிரிப்போடு.
       ‘கண்டுபிடிச்சிட்டிங்களா..?  சாப்பிடதும்  கிளம்பப்போறேன்..” என்றான்  உல்லாசமாக. 
       ‘கிறுக்கு  பயலே..”என செல்லமாய்  திட்டி  அவ்விடம் விட்டு  நகர்ந்தார்.
       அன்றிரவு..  வெற்றி  ஆனந்திக்கு  போன்  செய்ய..  அவள்  எடுக்காமல்  போக..   கடுப்பாகி  நாளை  ஊருக்கு  வருகிறேன்  என  குறுஞ்செய்தி  அனுப்பி வைத்தான்.

Advertisement