Advertisement

     அத்தியாயம்–10
       ஆனந்தி  அபர்ணாவை  உள்ளே  கூட்டிச்சென்றதுதான்  தாமதம்.   
     ‘ஆனந்தி..” என  அழுகையோடு  ஆரம்பித்து..  அன்று  காலையில்  இருந்து  என்ன  நடந்ததோ  அதை  அப்படியே ஒன்றுவிடாமல்  சொல்லி  தமக்கையை  கட்டிக்கொண்டு  அழுதாள்.
      ‘நான்  இனிமே  அந்த  வேலைக்கு  போகவே  மாட்டேன்.”  என்றாள்.
      ‘நீ  சொல்றது  சரிதான்..   இனிமே  நீ  அங்க  போகவே  வேண்டாம்..  ஆனா  நான்  ஒரு  விசயம்  சொன்னா  நீ  கேட்டுக்குவ  தான?”  என்றாள்.
       என்ன  என்பது  போல  பார்த்தாள். ‘என்ன  சூழ்நிலை  வந்தாலும்..  நீ  இதை  நம்ம  அப்பாகிட்டையும்..  அம்மாகிட்டையும்..  சொல்லவேகூடாது.”  என்றாள்.
     ‘அதெப்படி  சொல்லாம  இருக்க  முடியும்..?  எந்த  விசயம்ன்னாலும்  எங்ககிட்ட  மறைக்கக்கூடாதுன்னு  அப்பா  சொல்லியிருக்கிறார்.  அதுவும்  இது  கெட்ட  விசயம்.  இதை  எப்படி  மறைக்க  முடியும்?  அது  தப்பு…” என  ஆனந்திக்கு   புத்திபுகட்டினாள்.
    ‘தப்புதான்..  ஆனா  நீ    இப்ப  அப்பாகிட்ட  சொன்னா..   அவரால  அதை  தாங்கவே  முடியாது.  அவரே  நம்ம  அம்மாக்கு  உடம்பு  சரியில்லைன்னு   ரொம்ப  கவலையோட  இருக்கார்.  அதுக்காகத்தான்  அவர்   வேலையைக்கூட  ரிசைன்  பண்ணிட்டார்..  அவரோட  நிலைமையை   நாமே  சரியாப் புரிஞ்சிக்கலைன்னா..  அவர்  என்ன  பண்ணுவார்..?  அதுவும்   நீ தான  அவரோட  பட்டு செல்லம்..  உன்மேல  அவர்  எவ்ளோ  பாசம் வைச்சிருக்கார்..?  அவரால  இதை  எப்படி  தாங்க  முடியும்..?  அதனாலதான்  சொல்றேன்.  நம்ம  அம்மாக்கு  சரியானதும்..    அம்மாகிட்ட  கண்டிப்பா  இதைப் பத்தி  சொல்லிடலாம்.   சரியா..?“ என்றாள்  கெஞ்சலாக. 
      ‘சரி..  நீ  சொன்னா  சரியாத்தான்  இருக்கும்..” என்றாள்.
      ‘மணி  ஆறாயிடுச்சி..  வா.. நாம    டீ  வைக்கலாம்..” என  கிச்சனுக்குள்  அழைத்துப்போனாள்.
     ‘அபர்ணா  நியாபகம்   வைச்சிக்க..  இன்னைக்கு  நடந்ததைப்  பத்தி   நான்  சொல்றவரைக்கும்   யார்கிட்டயும்  நீ  சொல்ல  கூடாது.”  என்று  நினைவூட்டினாள்.
     ‘இல்லக்கா..  நான்  சொல்லமாட்டேன். “ என்றாள் உறுதியாக.
     ஆனந்தியும்  அபர்ணாவும்  கிச்சனிலிருந்து   வெளியே  வர..
     ‘குட்டிம்மா.. வந்தாச்சா?   முகமெல்லாம்  ரொம்ப   சோர்வா  இருக்கு..  நீ  போய்  ப்ரெஸ்  ஆகிட்டு  வாம்மா.“ என்றார்  வாஞ்சையாக.
     அபர்ணா  தனதறைக்குள்  செல்ல..  ‘அம்மா  உன்கிட்ட  பேசனும்னாமா  வா..” என  ஆனந்தியை  சந்திரமதியிடம்  அழைத்துச்  சென்றார்  நீலகண்டன்.     
      ‘நேத்து  வெற்றி  உன்கிட்ட  எதோ  பேசனும்னு  சொன்னானே..  என்ன  கேட்டான்..?” என  நேரடியாக  விசயத்திற்கு  வந்தார்  சந்திரமதி.
      சிறு  வெக்கத்தோடு.. ‘அவரை  பிடிச்சிருக்கான்னு  கேட்டார்  மா..” என்றாள். 
     ‘உனக்கு  வெற்றியை  பிடிச்சிருக்கா..?”
     ‘நீங்களும்   அப்பாவும்  என்ன  சொல்றிங்களோ  அதுதான்..” என்றாள்.
     ‘எனக்கு  வெற்றியை   பிடிக்கல..” என  சொல்லி  தன்  மகளை  பார்வையால்  ஆராய..  அதிர்ச்சியாய்  விழிவிரித்தாள்  ஆனந்தி.
    உள்ளுக்குள்  சந்தோசமாய்  உணர்நத  சந்திரா.. ‘வெற்றி   அவன்  குடும்பத்தைப்பத்தி   எதாவது  சொன்னானா..?” என்றார்.
     ‘இல்லைம்மா  அதெல்லாம்  எதுவும்  சொல்லலை..? “
     ‘நீயும்  எதுவும்  கேட்கலையா…?   வேற  என்னதான்..  சொன்னான்..?”
    ‘அவர்  என்கிட்ட..   என்னைத்தவிர  வேறயாரையும்  கல்யாணம்  செய்துக்கமாட்டேன்னு  சொன்னார்மா..” என்றாள் முகம்சிவந்து.
    ‘உனக்கு  அவனை  பிடிச்சிருக்கா  சொல்லு..  வெற்றி  யார்ன்னு  நான்  சொல்றேன்..” என  ஆனந்தியிடம்  கேட்க…  அங்கு  வந்த  அபர்ணா  
   ‘எனக்கு அவரைப்  பிடிக்கலைம்மா.”  என்றாள்.
   ‘அபர்ணா கொஞ்சம்  அமைதியா  இரு..  நீ  சொல்லுமா…?” என்றார்  ஆனந்தியிடம்.
     ‘உங்களுக்கும்   என்   அபர்ணாக்கும்  பிடிச்சா..  எனக்கும்  ஓ.கே.தான்மா..”  என்று  மறைமுகமாக  தன்  சம்மதத்தை  தெரிவித்தாள்.
      ‘வெற்றி  வேறு  யாருமில்லைம்மா…  என்  அண்ணன்  பையன்தான்.  எனக்கு  கல்யாணம்  ஆகும் போது..  அவனுக்கு  நாலு  வயசு.   சின்ன  குழந்தைல  அவன்  என்கிட்டதான்   சாப்பிடுவான்..  என்கூடதான்  விளையாடுவான்..  என் ஜடையை  பிடிச்சிகிட்டுத்தான்  தூங்குவான்.   நான் உங்கப்பாவோட  வந்ததும்..  என்னை  மறக்கமுடியாம  ரொம்ப  தவிச்சானாம்.    எப்பப்பாரு  அழுதிட்டே இருந்தானாம்.    என்  அண்ணன்  என்மேல  உள்ள  கோபத்தில..  நான்  சாமிகிட்ட  போயிட்டேன்னு   சொல்லி  அவனை  சமாதானப்  படுத்தியிருக்காங்க..”  சற்று   நேரம்  அமைதியாக  இருந்தார்கள். 
        ‘ஆனா.. இப்போ.. என்  அண்ணன்தான்  அவனுக்கு  சொல்லியிருக்கார்.   அப்புறமாதான்  அவன்  நம்மளை  தேடியிருக்கான்.  எனக்காக   ஆரம்பித்த  தேடல்தான்… ஆனா  உன்னைப்  பார்த்ததும்..  அவனுக்கு  ரொம்ப  பிடிச்சிருச்சி..    இப்ப  சொல்லுமா..   எங்களுக்கு  வெற்றி  மாப்பிள்ளையா  வந்தா  ரொம்ப  சந்தோசம்..  ஆனா…  உன்  சம்மதமும்  ரொம்ப  முக்கியம்..”  என்று  தன்  மகளையே  ஆசையாக  பார்த்தார்  சந்திரமதி.
       ஆனந்திக்கு  பேசுவதற்க்கு  வார்த்தையே  இல்லை..  சற்றுநேர  அமைதிக்குப்பிறகு..  கண்களில்  நீர்வழிய..  ‘எனக்கும்  அவரை  இப்ப  ரொம்ப  பிடிச்சிருக்குமா..” என்றாள்.
      ‘ஏய்  ஆனந்தி..  அப்ப  உண்மையாவே  அவர்  நமக்கு  மாமாவா..?”  என  ஆச்சர்யமாக  கேட்டாள்  அபர்ணா.
       ‘அபர்ணா..   வெற்றியோட  அண்ணன்  என்னை  எவ்வளவோ  திட்டினார்.   அவர்  உன்  அம்மாமேல  வச்ச  அன்புதான்   காரணம்.   இப்ப வெற்றி  நம்மை  தேடிவந்ததுக்கும்   அதே  அன்புதான்  காரணம்.   வெற்றியோட  அப்பா  இந்த  கல்யாணத்துக்கு  சம்மதிக்கிறாரோ  இல்லையோ..  ஆனா.. இனிமே  வெற்றியை  மரியாதையில்லாம   பேசக்கூடாது.”  என்றார்  நீலகண்டன்.
      அப்போ  அன்னைக்கு  உண்மையாத்தான்  சிவாகிட்ட  நமக்காக  பேசினாரா..?  என  பெருமையாக  நினைத்தவள்..  ‘சரிப்பா..  அவர்  திரும்ப  இங்க  வந்தார்னா  அவர்கிட்ட   சாரி  கேக்கிறேன்..” என்றாள்  மனதாற. 
      ‘வெற்றிமேல  இருக்கிற  கோபம்  போச்சா  உனக்கு..?” என்றார்.    
      ‘அம்மா  எனக்கு  என்  அக்காமேல  பாசம்  இருக்கிற  மாதிரிதானே.. உங்களுக்கும்  உங்க  அண்ணன்மேல  பாசம்  இருக்கும்..  உங்களுக்காக  இனி  அவரை மரியாதை  இல்லாம  பேசமாட்டேன்..” பெருந்தன்மையாக.
      காலையில்  இருந்த  மனநிலையில்  இருந்து..  அபர்ணா  முழுதாக  வெளிவந்தாள்.
      ‘ஆனந்தி   வெற்றிக்கு  தலைமுடி  நீளமா  இருந்தா   ரொம்ப  பிடிக்கும்..   இப்ப  வயசானதுனால  என்முடியெல்லாம்  கொட்டிடுச்சி..   அவன்  நியாபகமாத்தான்   உன்முடியை  நான்  வெட்டவிடவே  மாட்டேன்..  உன்  முடி  எங்கத்தை  கேட்டான்னா..    என் முடியெல்லாம்   என் பொண்ணுகிட்ட  இருக்குன்னு  சொல்லிடுவேன்..   இப்படி  திடீர்ன்னு  வந்து  நிப்பான்னு    நான்  நினைக்கவேயில்லை.   அதுவும்  எனக்கு  மருமகனா..  நான்  இப்ப ரொம்ப  சந்தோசமா   இருக்கேன்.    ஆனாலும்..  என்  அண்ணன்  என்ன  சொல்வாரோன்னுதான்  பயம்மா இருக்கு.”  என்றார்
     ‘அம்மா..  நீங்க  ஒன்னும்  கவலைப்படாதிங்க..  எல்லாம்  அவர்  பார்த்துக்குவார்.  என்ன  ஆனாலும்  நான்  உன்னைதான்  கல்யாணம்  பண்ணிக்குவேன்னு  சொல்லிட்டுதான்   போயிருக்கார்.” என்றாள்  ஆனந்தி.
     ‘ம்ம்… அப்படியா..? ஒன்னுமே  சொல்லலைன்ன..?”  என்றாள் அபர்ணா.
     ‘ஏய்.. சும்மா  இரு அபர்ணா..” என்று  ஓடியே விட்டாள்  ஆனந்தி.
      ரூமிற்க்குள்  சென்றதும்..  என்னவோ   இன்றுதான்  தன்  முடியைப் புதிதாய்ப்  பார்ப்பதுபோல்  ஜடையை  பார்த்திருந்தாள்.    அரைமணிநேரம்  பொறுத்து..  ஆசையாக  வெற்றிக்கு  கால் செய்தாள்.
     வெற்றி  அட்டென்  செய்ய..   ‘மாமா…”  என்றாள்.
    ‘ஹேய்..   ஹலோ..  இது..ஆ..ஆனந்திதானா..?”   என்றான்.
    ‘ம்ம்..  எனக்கு உங்களைப்   பார்க்கனும்..”
    ‘ஆனந்தி…  என்ன..?  என்ன  சொன்ன..?   நான்.. இப்ப..போய்.. ஏண்டி  என்னை   இப்படிப்  படுத்தற…? நான்  இப்பதான்  இங்க வந்தேன்.  அங்க  இருக்கும்போது   ஒத்த  வார்தை  ஆசையா  பேசல..  இப்போ  மாமாவா..?  என  அங்கலாய்த்து.. ‘சரி.. வீடியோ  கால்ல  வரியா..?”  என்றான்.
      ‘ம்ம்..” என்று  கனெக்ட்  செய்தாள்.  அவன்  முகத்தைப்  பார்த்ததுமே     அழுகை  வந்தது   ஆனந்திக்கு.
      ‘ஏய்  எதுக்கு  அழற..?”  என்றான்  கண்கள்  மின்ன..   கண்களில்  நீர்  வந்தாலும்..  சிரித்துக்கொண்டே  ‘என்  முடி  எப்படி  இருக்கு..?”  என்று  தன்  பின்னலை  முன்னே  எடுத்துவிட்டாள்.
      ‘முடி  மட்டுமா..  அழகாயிருக்கு…  எல்லாமே  அழகாத்தான்  இருக்கு..” என்று  கிறங்கினான்.
      ‘நீங்க  ஏன்  என்கிட்ட எதுவுமே  சொல்லலை..? “ என்றாள்.
      ‘ஓ..ஹோ..  தெரிஞ்சிடுச்சா..?  அப்போ..  எனக்காக  நீ  பேசலை.  நான்  உன் மாமாமகன்..    அதுக்காகத்தான்  பேசற  அப்படித்தான..?“ என்றான்  கோபமாக.
      ‘நேத்தே  உங்களை  பிடிச்சிருக்குன்னு  சொன்னேன்தான..?” என்றாள்  கெஞ்சலாக.  அந்தபக்கம்  பதில்  இல்லாமல்  போக..  ‘ஹலோ.. மாமா.. மாமா..” என்றழைத்து   தன்  மொபைலை  ஆராய  அவன்  கட்செய்திருக்கிறான்  என்று   பிறகுதான்  தெரிய..  அழுகை  முட்டிக்கொண்டு  வந்தது  ஆனந்திக்கு.
      வெற்றிக்கும்  ஆனந்தியிடம்   கோபமாக பேசிய  பிறகு     வெற்றிக்கு   இருப்பே  கொள்ளவில்லை. நேராக  வெற்றி  சென்றது.. அவனுடைய  அப்பாவிடத்தில்தான்.

Advertisement