Advertisement

அத்தியாயம் 30
கண்டிப்பாக மருத்துவமனையை சுற்றியும் சுபாஷ் ஆதியை  கண்காணிக்க ஆட்களை நிறுத்தி இருப்பான் என்று உணர்ந்த கார்த்திக் வீட்டாரை பத்திரமாக அனுப்பி வைத்த பின் வாசுவை அழைத்து ரகசியமாக பேச அவன் சொன்ன படி வாசு மருத்துவமனை வாசலில் நின்ற ஆதியின் தொண்டர்களை சந்தித்து
“ஐயாவை இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு யாரும் தொந்தரவு செய்யாதீங்க. அவங்க மனைவி உயிருக்கு போராடும் நிலமைல இருக்குறதால அவர் வேற எதையும் யோசிக்கிற நிலமைல இல்ல. கார்த்தி சார் வைப் வேற அண்ணனுக்கு இப்படி ஆச்சேனு அடிக்கடி மயங்கி விழுறாங்க, அதனால அவரும் மனைவியை விட்டு நகராம இருக்காரு. குடும்பமே சோகத்துல இருக்கு கொஞ்ச நாளைக்கு தொந்தரவு கொடுக்காம இருங்க. கட்ச்சி வேலையெல்லாம் தர்மண்ணாவ பாத்துக்க சொன்னாரு” என்று விட்டு உள்ளே சென்றான். 
அந்த தகவல் கண்டிப்பாக சுபாஷை அடைந்தால் அவன் ஆதியை விட்டு விட்டு குடும்பத்தோடு வெளிநாடு பறப்பதை பற்றி மட்டும் யோசிப்பான் என்று கணக்கு போட்ட ஆதி. மருத்துவமனையின் பின் கேட் வழியாக கார்த்திக் மற்றும் வாசுவோடு வெளியேறினான். 
ஏற்கனவே டி.ஜி.பியோடு பேசியதால் அவர் சாந்திப்ரியாவை ரகசியமாக சந்தித்து குமரகுருவின் ஆதரரங்களை காட்ட அதிர்ச்சியடைந்த சாந்திப்பிரியா சுபாஷை அரெஸ்ட் பண்ண தான் உதவி செய்வதாக கூறி அவரோடு புறப்பட்டாள். 
சுபாஷ் பேசும் பொழுதெல்லாம் ஒவ்வொரு காரணம் கூறி டி.ஜி.பி கூறிய நேரத்தில் வந்து சேருவதாக கூறியவள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தாள். 
ஆதியை சந்தித்த டி.ஜி.பி சுபாஷை அரெஸ்ட் பண்ணலாம் என்று கூற 
“இல்ல சார் என் அப்பாவை கொன்னது மட்டுமில்லாம, என் மனைவியையும் கொல்ல பாத்தான். என் மச்சான் வேற தலைல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கான். அவன் வாயாலேயே சொன்னாதான் உண்டு. அதுக்கு நானும் கார்த்திக்கும் முதல்ல தனியா போறேன். கேமரா, மைக்குனு டெக்னோலஜி எவ்வளவோ இருக்கே” 
“அவன் இடத்தை கண்டு பிடிச்சி நீங்க தனியா போனாலும் அவன் உஷாராகிட்டா?  உண்மையை சொல்வான்னு என்ன நிச்சயம்?” 
“எங்களை பார்த்ததும் கண்டிப்பா ஷாக் ஆவான் ஆனா தனியா போனதால நாமளே போய் மாட்டிக்கிட்டதா நினைச்சி முட்டாள் தனமா உண்மைய சொல்வான் சார். தான் தான் அதி புத்திசாலின்னு நினைக்கிற எல்லாருமே இப்படித்தான் செய்வாங்க”
“அது சரி உங்கள செக் பண்ணா? கேமரா இருக்குறது தெரிஞ்சிடுமே!” 
“கன்னு ஏதாவது இருக்குமான்னுதான் செக் பண்ணுவான். கேமரா இருக்கும்னு யோசிக்க மாட்டான்” ஆதி உறுதியாக சொல்ல அவன் சொன்ன படிதான் நடந்தது. 
ஆதியும் கார்த்திக்கும் சட்டை பட்டனிலும், பேனாவிலும் கேமராவை பொருத்திக் கொண்டு போக துப்பாக்கி ஏதாவது வைத்திருக்கிறார்களா என்று மாத்திரம் தான் பரிசோதனை செய்தான் சுபாஷ். 
தனியாக வந்ததை கூட சந்தேகப்பட்டு பாதையை கண்காணிக்க ஆள் அனுப்பியவன் அரைமணிநேரமாக சந்தேகப்படும் படி யாரும் வரவில்லை என்றதும்தான் விட்டு விட்டான். 
ஆனால் சுபாஷின் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி நான்கு வண்டியில் போலீஸ் படையே சுபாஷின் வாக்குமூலத்தை பதிவு செய்ய காத்திருந்ததை அவன் எதிர்பாத்திருக்க வாய்ப்பே இல்லை. 
ஆதியையும், கார்த்திக்கையும் கொன்றொழிப்பதே அவன் முடிவாக இருக்க உண்மைகளை அச்சமின்றி சொன்னவன் தன் காதல் மனைவியும் கேட்டுக்கொண்டிருப்பாள் என்று கிஞ்சித்தும்  நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.  
வாசுவின் அருகில் அமர்ந்து மடிக்கணனியின் வழியாக சுபாஷை பாத்திருந்த சாந்திப்பிரியா தந்தையை கொன்றது தன் கணவன் தான் என்ற அதிர்ச்சி தாங்காமல் வெறி கொண்டு வண்டியிலிருந்து இறங்க முற்பட அவளை அடக்கி வைப்பது வாசுவுக்கே பெரும் பாடானது. 
கார்த்திக் உள்ளே வரலாம் என்று சொன்னதுதான் தாமதம் காட்டாறு வெள்ளமாய் பாய்ந்தவள் சுனாமியாய் சுபாஷை தாக்கலானாள்.  
நல்லவன் வல்லவன் என்று நம்பியிருந்த காதல் கணவனின் மறுமுகம் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்திப்பிரியா மற்ற பெண்களை போல் அழுது கரையாமல் சிங்கப்பெண்ணாய் மாறி கணவனை பந்தாடலானாள். 
மருந்து கம்பனிகளின் வளர்ச்சிக்காக ஏதோ தவறு செய்கிறான் என்ற ஏமாற்றம் நெஞ்சை   அடைத்தாலும் திருத்தலாம் என்று எண்ணி வந்தவள் உயிர் கொடுத்த தந்தையின் உயிரையே பறித்து விட்டான் என்றதும் கொதித்து விட்டாள். 
அவளை யாரும் தடுக்கவில்லை. சுபாஷின் ஆட்களை போலீஸ் கைது செய்ய, மனைவியின் திடீர் தாக்குதலில் நிலை குலைந்தவன் அவளை சமாதான படுத்த முயற்சி செய்ய அங்குள்ள பொருட்களையெல்லாம் அவன் மேல் வீசலானாள் அவன் மனையாள். 
“பாவி மனிஷா… உன்ன புள்ள மாறி  பாத்தாறேடா… அவரை போய் கொல்ல உனக்கு எப்படி டா… மனசு வந்தது? நீ பெத்து வச்சிருக்கியே ரெண்டு புள்ளைங்க அதுங்க கிட்ட போய் உங்கப்பன் கொலைகாரன்னு எப்படி சொல்லுறது?” ஆவேசமாக பேசினாலே ஒழிய கண்களில் துளியேனும் கண்ணீர் இல்லை. எரிந்து கொண்டிருந்த அவன் இதயம் பல முடிவுகளை எடுத்திருந்தது. 
“போலீஸ் அடிச்சிருந்தா கூட இம்புட்டு சேதாரம் இருந்திருக்காது” வாசு நக்கலாக சொல்ல கார்த்திக் அவனை முறைக்க 
“இந்த வீடியோவை உடனே சீனுவுக்கு அனுப்பனும்” என்றவன் அந்த இடத்தை காலி செய்தான். 
கைகள் வலிக்கும் வரை அடித்து ஓய்ந்தவள் “இவரை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துங்க சார். பண்ண எல்லா தப்பையும் ஓத்துக்கிட்டு உள்ள இருப்பாரு. வெளிய வர முயற்சி செய்ய மாட்டாரு” சாந்திப்பிரியா கணவனை கூர்பார்வை பார்த்தவாறு சொல்ல சுபாஷ் அமைதியியே உருவான சிலையானான். 
    
சுபாஷை கைது செய்து வண்டியில் ஏற்றப்பட்டு சென்னை அழைத்து சொல்லப்பட்ட ஆதியிடம் வந்த சாந்திப்பிரியா 
“என்ன மன்னிச்சிடுங்க எம்.எல்.ஏ சார் எங்க குடும்பத்தால் உங்க குடும்பத்துக்கு ஏகப்பட்ட இழப்பு” என்று கையெடுத்து கும்பிட 
“விடுங்க சிஸ்டர். உங்க உதவி இல்லாம உங்க ஹஸ்பனை அரெஸ்ட் பண்ணி இருக்க முடியாது. நன்றி” என்றவன் வணக்கம் வைத்து விட்டு கார்த்திக்கோடு விடை பெற்றான். 
அடுத்து வந்த நாட்களில் சுபாஷை கோட்டில் நிறுத்தி அனைத்து ஆதாரங்களையும் நிரூபிக்க, சுபாஷ் செய்த கொலை, கொலை முயற்சி, சமூகவியல் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட அவன் மறுக்காததால்,  தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 
மருந்து கண்பனிகள் உட்பட சொத்துக்கள் அனைத்தும் சுபாஷ் பெயரில் இருந்ததால் அனைத்தும் முடக்கி விடப்பட்டிருக்க, மருந்து கம்பனியை அரசு பொறுப்பில் கொடுப்பதாகவும் சொத்துக்களை மட்டும் பெற்றுத்தருமாறு சாந்திப்பிரியா தனது வக்கீலிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அத்தோடு சுபாஷிடமிருந்து விவாகரத்தும். சொத்துக்களை விற்று குழந்தைகளோடு வெளிநாட்டில் போய் வாழ்வதென்று முடிவெடுத்திருந்தாள் சாந்தி. 
இதெல்லாம் நடைபெற்று முடிய நான்கு மாதங்கள் எடுத்திருக்க மருத்துவமனையில் இருந்த சீனு மூன்று நாட்களிலும், ராணி இரண்டு வாரங்களிளும், கவி மூன்று வாரங்களிளும் வீடு வந்தாள். 
குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும் கவியை முழுமையான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தி இருக்க, அறையை விட்டு அவளை நகர்த்த மறுத்தார் வரளிநாயகி. 
பண்பாடு, கலாச்சாரம் என்று கட்டி காத்த ஜமீன் குடும்பம், அடுத்த தலைமுறையின் தாய் கவி அவள் குறையோடு இருப்பது மனதை பிசைந்தாலும், எந்த குறையுமே இல்லாமல் குடும்பத்துக்கு வந்த மருமகள் இளவரசி மகனின் மரணத்தால் படுத்த படுக்கையானாள் என்பதை கண்ணால் கண்டவர் பழைய சம்பிரதாயங்களை கொஞ்சம் ஒதுக்கி விட்டு குடும்பத்தாரின் சந்தோசத்தை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்க தீர்ர்மானித்திருந்தார்.
ஆதியும் அவரிடமும், கர்ண விஜயேந்திரனிடமும் உண்மையை மறைத்ததற்காக மன்னிப்பு கேட்க, உன் சந்தோசம்தான் முக்கியம். என்றதோடு தாத்தா பாட்டி இருவருமே, கொள்ளு பேரபாசங்களுக்கு என்ன பேர் வைக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்கள். 
வானதியும், கூட வரளிநாயகியிடம் என்னதான் ஆதி சொல்வதாக கூறி இருந்தாலும் நான் கூறி இருக்க வேண்டும். என்று கூற போதும் இனி இந்த பேச்சு வேண்டாம். குடும்பத்துக்கு ஏற்பட்ட பிரச்சினையெல்லாம் ஒழிய ஒரு பூஜை செய்ய வேண்டும் என்றவர் அதற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்து முடித்தார்.
ராணி எழுந்து நடமாடும் வரை சாந்தினியும் வானதியோடு சேர்ந்து அவளை பார்த்துக்கொள்ள சீனுவின் உடல் தேறியதும் சம்யுத்தோடு, தீப்தி டில்லி செல்ல ஆயத்தமானாள். 
சீனு தீப்தியோடு கடலை போட, அவள் படிப்பு முடியும் வரை திருமண பேச்சை எடுக்கக் கூடாதென்று வரளிநாயகி உறுதியாக சொல்லி இருந்தார்.
மேனகையிடம் சீனுவின் குட்டு வெளிப்பட்டு அவன் முழிக்க, அவள் முறைக்க டில்லி செல்ல புறப்பட்ட தீப்திதான் 
“அத்த இப்போ கூட உங்களுக்கு இஷ்டமில்லன்னா உங்க பையன நான் கட்டிக்க மாட்டேன்” என்று உறுதியாக சொல்ல 
“வாயிலையே போடுவேன்” கையை ஓங்கியவன் அவளை தர தரவென இழுத்துச்சென்று பூஜையறையிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் திலகமிட்டு “இப்போ போ” என்று அன்னையை முறைக்க 
“குங்குமம் மட்டும் எதுக்குடா வச்ச தாலிய கட்ட வேண்டியதுதானே” மேனகை கையை கட்டிக்கொண்டு சொல்ல 
“இங்க பாருமா அவதான் என் பொண்டாட்டி அதுக்காக யாருக்கும் தெரியாம நாலு செவத்துக்குள்ள எல்லாம் தாலி கட்ட மாட்டேன். ஊரறிய தான் தாலி காட்டுவேன். இஷ்டமிருந்தா கல்யாணம் பண்ணி வை. இல்லையா பையன பெத்தேன் என்கிறதையே மறந்துடு” 
“அப்போ நீ எனக்கு பையன்! இல்லனு சொல்லுறியா?” 
“பையன்தான் ஒரு பையன் அம்மாக்கு என்னவெல்லாம் செய்யணுமோ எல்லாம் செய்வேன். ஒரு அம்மாவா எனக்கு என்னவெல்லாம் செய்யணும்னு ஆச படுரியோ! அத மட்டும் மறந்துடு” என்றவன் வெளியேற 
“ஒரு நிமிஷம் இருப்பா.. ” மகனை நிறுத்தியவள் “நான் கல்யாணத்த நிறுத்துறதா சொல்லவே இல்லையே! இவ்வளவு பேசுற?”
“இல்லையா?” தீப்திக்கு கையால் செய்கை செய்தவன் அசடுவழிய தீப்தியால் சிரிப்பை கட்டுபடுத்தவே முடியவில்லை. 
உண்மையில் தீப்திதான் மேனகையிடம் சீனு நடிப்பதையே கூறி இருந்தாள். எந்த பெண்ணாவது உண்மையை கூறி தன் வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளி  போட்டுக்கொள்வாளா? பொய்யில் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க தீப்தி என்றுமே விரும்பியதில்லை. 
சீனுவிடமும் தன் பிறப்பு, வளர்ப்பு பற்றி உண்மையை கூற அவன் அதை சட்டையை உதறி “சொல்லி முடிச்சிட்டியா? மறந்துடு” என்றதோடு விட்டு விட்டான். ஆனால் மேனகை அவன் அன்னை அவள் ஆசிர்வாதம் இல்லாமல், அவள் அனுமதி இல்லாமல் சீனுவை திருமணம் செய்ய அவள் மனம் இடமளிக்கவில்லை. ஆதலால் உண்மையை கூற மேனகை சிரித்து விட்டாள். 
“என்ன அத்த சிரிக்கிறீங்க” தீப்தி ஆச்சரியமாக கேட்க 
“என் பையன் விளையாட்டு பையன்னு நினைச்சி கிட்டு இருந்தேன். பரவால்ல உன் விசயத்துல ரொம்ப சீரியஸா இருக்கான் வா போய் அவனை கவனிக்கலாம்” என்று வந்தவள் தான் மகனிடம் நடிப்பை பற்றி கேட்க இன்னொரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தான். 
தீப்தியை பற்றி எல்லா உண்மையும் அறிந்து கொண்ட மேனகையும், சக்கரவர்த்தியும் முழுமனதாகவே அவளை ஏற்றுக்கொண்டிருந்தனர்.
ஆருத்ராவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மேனகைக்கும், கவியின் பொறுப்பு இளவரசிக்கும் என்றானது. இளவரசி கொஞ்சம் விந்தி விந்தி நடந்தாலும் தனது வேலைகளை தானே செய்து கொள்ளும் படி தேறி இருக்க அவருக்கான வேலை கவியின் அருகில் அமர்ந்து அவளை கவனிப்பதுதான். 
இங்கு ஆருத்ராவுக்கு நான்கு மாதங்கள் கடந்தும் வாந்தி நிற்கவே இல்லை. கார்த்திக் பயந்து மருத்துவரை அணுக பயப்படும் படி ஒண்ணுமில்லை. ஒரேயடியாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுமாறு சொல்ல ஆரு கேட்டால் தானே. அவளை திட்டவும் முடியாமல், கடியாவும் முடியாமல் கார்த்திக் அல்லல் பட 
“எனக்கு இந்த நிலைமை உன்னால் தான்” என்று ஆருத்ரா அவனை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தாள். 
“நானா டி உன்ன இப்போவே குழந்தை பெத்துக்க சொன்னேன். நீதானே இப்போவே வேணும்னு சொன்ன அப்போ அனுபவி. வாய கட்டுறதுமில்லை. சொல் பேசி கேக்குறதுமில்லை. கண்டதையெல்லாம் தின்கிறது அப்பொறம் வாந்தி எடுக்குறது”
“எல்லாம் வயித்துல இருக்குற உன் புள்ள பண்ணுறது. வெளிய வரட்டும் வச்சிக்கிறேன்” முறிக்கிக்கொள்பவள் வாந்தியெடுத்த பின் கையில் ஆப்பிளோடு செல்ல தலையில் அடித்துக்கொள்வான் கார்த்திக்
ஆதி கவியின் உடல் தேறும்வரை அவளை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாலும், அவளை பார்க்காமலோ பேசாமலோ, அவளின் அணைப்போ, முத்தமோ இல்லாமல் இருந்திடத்தான் முடியவில்லை. 
எட்டு மாத கருவை சுமந்து உடல் நன்றாக தேறி இருந்தாலும், எங்கே அவளுக்கும், குழந்தைக்கும் வலிக்குமோ என்று அஞ்சியவாறு இருக்கும் அவன் அணைப்பு. 

Advertisement