Advertisement

அத்தியாயம் 27
“ஐயோ… முடியலடா சாமி… இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல, வர சொன்னாலும் வர சொன்னான் பகல்ல வர சொல்லி இருக்கக் கூடாது” சீனு ஆலமரத்தடியில் கார்த்திக்கோடு பதுங்கி அமர்ந்தவாறு அவனை கடிக்கும் கொசுக்களை அடித்தவாறே புலம்ப, 
“டேய்  காத்தாதேடா… உன் சவுண்டால அந்தாளு வராம போய்ட போறான்” 
“நா வேணா ஒரு கொசுவாத்திய பத்த வைக்கட்டுமா?” ஆரு அன்பாக கேட்க 
“ஏன் நாங்க இங்க இருக்குறத நெருப்பு வச்சி காட்டி கொடுக்க போறியா? பாசமலர் படம் ஓட்டாம அண்ணனும் தங்கச்சியும் வாய மூடிக்கிட்டு இருக்கணும்” கார்த்திக் அதட்ட  சீனு புலம்ப ஆரு அந்த இருளிலும் கார்த்திக்கை முறைத்தாள்.
ஊர் பிரச்சினை ஆயிரம் இருந்தாலும் தந்தையின் மரணம் ஆதியின் மனதில் ரணத்தை ஏற்படுத்திக் கொண்டே  இருக்க, குமரகுருவை தேடிக் கண்டு பிடிப்பது எப்படி என்ற யோசனையில் இருந்தான் ஆதி.
“என்ன ஆதி பலத்த யோசனையாவே இருக்க, கவிய பிரிஞ்சி இருக்குறது ரொம்ப கொடுமையோ! ரெண்டு மாசம் போயிருச்சு இன்னும் ஒரு மாசம் தானே” அந்த ரொம்பவில் ரொம்பவே அழுத்தம் கொடுத்தான் கார்த்திக் 
“இல்ல ப்ரோ அந்த குமரகுரு மேட்டர்தான் என்ன பண்ணுறதுனு புரியல” 
“ஏன் ப்ரோ எனக்கு ஒரு விஷயம் புரியல குமரகுருவ கண்டு புடிச்சி, வைரஸ அந்த சுபாஷ்  தான் பரப்ப பார்த்தான்னு குமகுரு சொன்னா  நம்புவாங்களா? ஆதாரம் வேணுமே”
 “குமரகுரு வைரஸோட மட்டும் தலைமறைவாகல சுபாஷ் சைன் பண்ண பேப்பரோடத்தான் தலைமறைவாகி இருக்காரு, அது இருந்தா போதும் அவனை கோட்டுக்கு இழுத்து கூண்டுல ஏத்தலாம்” 
“அப்போ உங்க அப்பா ஆக்சிடன்ட் கேஸ்?” 
“என் அப்பா கிட்ட பிஸ்னஸ் பேசி இருக்கான் அவர் முடியாதுனு சொன்னதும் எங்க அவர் தேர்தல்ல ஜெயிச்சா அவன் நினைச்சது நடக்காதுனு அப்பாவை ஆக்சிஷிடன்ட் பண்ணி கொன்னுட்டான். கேஸ் ஆக்சிடண்ட்னு மூடியாச்சு. ரீஓபன்  பண்ண வலுவான ஆதாரம் வேணும். அப்பா ஆக்சிடன்ட் மட்டுமில்லாம சுபாஷ் மாமனார் ஆக்சிடன் பத்தியும் தேடிகிட்டுதான் இருக்கேன். சின்னதா ஒரு விஷயம் கிடைக்கட்டும் இல்ல எவனாச்சும் மாட்டட்டும் அப்போ இருக்கு” 
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே வந்த வாசு ஆதியிடம் ஒரு கவரை கொடுக்க “என்னடா இது யாரு அனுப்பினாங்கனு எந்த டீடைலும் இல்ல மொட்டை கடுதாசியா?” என்றவாறே அதை பிரிக்க குமரகுருவிடமிருந்து வந்திருந்தது அந்தக் கடிதம். 
வந்திருந்தது என்பதை விட அவரே நேரில் வந்து ஜமீன் தபால் பெட்டியில் போட்டுவிட்டு சென்றிருந்தார். 
வணக்கம் 
என் பெயர் குமரகுரு. நீங்கள் சுபாஷ் சந்திரனுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதாக கேள்விப்பட்டேன். உங்களை சந்திக்க வேண்டும், இன்றிரவு பத்து மணியளவில் நெடுஞசாலையிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் டீக் கடைக்கு தனியாக வரவும். 
                                                                                                      குமரகுரு 
“என்னடா இது? சின்னபுள்ளத்தனமா இருக்கு? யாரவது உன்ன போட்டுத்தள்ள பிளான் பண்ணிட்டாங்களோ? லெட்டரை கொண்டு வந்தவன் உள்ளேயே வந்து பேசிட்டு போய் இருக்கலாம். அத விட்டுட்டு டி கடைக்குவா பஜ்ஜி சாப்பிடலாம்னு. எனக்கென்னமோ சரியா படல” கடிதத்தை பறித்து படித்த சீனு தாடையில் கை வைத்தான். 
“ஆமா ஆதி எனக்கும் சரியா படல, நீ ஒரு எம்.எல்.ஏ உன்ன தனியா வர சொல்லுறான். அதுவுமில்லாம கடிதத்தை போட வந்தவன் உள்ள வந்திருக்கலாமே!” கார்த்திக்கும் சீனுவின் கூற்றை ஏற்று பேச 
“சுபாஷுக்கு தகவல் போகும்னு நினைச்சி உள்ள வரலையோ! என்னமோ! போய் தான் பார்ப்போமே! நான் என்ன தனியாவா போகப் போறேன். நான் போக முன்னாடியே நீங்க ரெண்டு பேரும் போய் அந்த ஆலமரத்தடியில் வேவு பாருங்க பத்துமணிக்கு நான் வரேன்” என்று ஆதி சொல்ல 
“அண்ணா அப்போ நான் என்ன செய்யணும்?” நம்மள மிஷன்ல சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற முகபாவனையை கொடுத்தான் வாசு. 
“நீ என் கூட வா… நான் டீ கடைல உக்காந்ததும் என்ன தாண்டி போய்டு. போய் யாராவது வரங்களா? ஆள் நடமாட்டம் இருக்கா? கொஞ்சம் சூதானமாகவே இரு. எல்லார் போனையும் சார்ஜுல போட்டு கொண்டு வாங்க, கன்ஸ்பரன் கால்ல டச்ல இருப்போம்” ஆதி தன் திட்டத்தை கூற அனைவரும் “சரி” எனும் விதமாக தலையசைத்திருந்தனர். 
கார்த்திக்கோடு வெளியே செல்வதாக கவிக்கு அலைபேசியில் தெரிவித்தவன் வாசுவோடு கிளம்ப, ஒருமணித்தியாலத்துக்கு முன் சீனுவோடு கார்த்திக் செல்ல வீட்டைவிட்டு வெளியே வர அவனை பிடித்துக் கொண்ட ஆரு கேள்வி மேல் கேள்வி எழுப்பி அவனோடு வந்திருந்தாள். 
ஆருவைக் கண்ட சீனு “நீ என்னடா இவள கூட்டிக்கிட்டு வந்த? நாம என்ன பிக்னிக்கா போறோம்?” என்று வார 
சீனுவின் தலையில் கொட்டிய ஆரு “ஹனிமூன் போறோம்” என்றவள் முன்னாடி நடந்தாள். 
“நடத்துங்கடா… நடத்துங்க” அவர்களை வசைபாடியவாறு ஆலமரத்தடியை வந்தடைந்தவர்கள் ஆதி வரும் வரை புலம்பித்தள்ள ஆதியும் வந்து சேர்ந்தான். 
ஆதி வந்து அமர்ந்த அடுத்த நொடியே ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்காமலையே குமரகுரு ஆதியை வண்டியில் ஏறுமாறு சொல்ல ஆதியும் வண்டியில் ஏற வண்டி வேகமெடுக்க, ஏற்கனவே இப்படி ஏதாவது நடந்தால் என்ன செய்வது என்று திட்டமிட்டதில் மறைத்து வைத்த வண்டியை எடுத்த கார்த்திக்  வாசுவோடு ஏறிச்செல்ல சீனு ஆருத்ராவை முறைத்தான். 
“எதுக்கு இப்போ என்ன முறைக்கிற? எப்படியும் ட்ரிப்லஸ் போகப்போறதில்ல” 
“நீ இங்க இருந்ததாலதான் வாசுவை கூட்டிக்கிட்டு போனான். இல்லனா நான் போய் இருப்பேன்… வா வீட்டுக்கு போலாம்”
“ஆமா என்னதான் நடக்குது? என்ன பிரச்சினை?” 
“அரசியல்வாதிக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கும் ஊருக்கு நல்லது பண்ண எதுவும் தப்பில்ல” சம்பந்தமில்லாமல் பேசியவன் பதில் சொல்லாது மழுப்பினான்.
ஆதியை ஏற்றிக் கொண்ட  குமரகுரு தங்களை யாரும் பின் தொடர்கிறார்களா என்று கவனமாக வண்டியை செலுத்த தனது வண்டியின் முன் விளக்கை அனைத்து விட்டு வண்டியை குறிப்பிட்ட தூரத்தில் பின் தொடர்ந்தான் கார்த்திக். 
வண்டியை ஒரு கிளைப்பாதையில் நிறுத்திய குமரகுரு 
“முதல்ல என்ன மன்னிச்சிடுங்க சார். நீங்களும் ஒரு அரசியல்வாதி என்பதால உங்கள நம்புறது ரொம்ப கஷ்டம். இந்த ஒருமாசமா உங்கள பாலோவ் பண்ணி உங்கள பத்தி தெரிஞ்சிகிட்ட பிறகுதான் நானே நேர்ல வந்து கடிதத்தை வச்சேன்”
“நீங்க உள்ளேயே வந்து பேசி இருக்கலாம்”
“அந்த சுபாஷ நம்ப முடியாது சார் உங்க ஊர்லயே! உங்க கண் முன்னாடி உங்கள வேவு பார்க்க ஆள வச்சிருப்பான்” குமரகுரு சொல்ல 
அவருக்கு தன் பாதுகாப்பை பற்றி விளக்க இது நேரமல்ல என்று நினைத்த ஆதி “அவன உள்ள தள்ள உங்க கிட்ட இருக்குற ஆதாரம்” நேரடியாகவே விசயத்துக்கு ஆதி வர 
அந்த ஆராய்ச்சி மையத்தின் சீசீடிவி காட்ச்சி அடங்கிய காணொளியை மடிக்கணணியில் ஓட விட்டார் குமரகுரு. அதில் அணித்  தலைவரிடம் சுபாஷ் பேசுவது தெளிவாக இருந்தது. வைரஸை எவ்வாறு? எங்கே முதலில் பரப்ப வேண்டும். அதன் தாக்கம், நோய்க்கான அறிகுறி, பாதிப்பு எல்லாவற்றையும் அணி தலைவர் விலாவரியாக சொல்வதும் அதற்கான மருந்தும், மருந்தின் விலையை பற்றி சுபாஷ் பேசுவதும் இருந்தது. 
“பாவிங்களா மக்கள் ஏற்கனவே பெயர் தெரியாத நோயால் பாதிப்படியிறாங்க இவன் வேற” 
“எல்லாம் காசுக்காகத்தான் சார். சளி, இருமல், தலைவலி மாதிரி நோய்க்கெல்லாம் இப்போ டாக்டரை கேக்காமலையே மருந்து வாங்கி சாப்பிடுறாங்க, அது போல கேன்சர் போன்ற பெரிய நோய்க்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாம இருக்காங்க, சுகர், பிபி மாதிரி நோய் ஒரு ஏஜ் தாண்டினா எல்லாருக்கும் இருக்கு எல்லாரும் மருந்து சாப்பிடுறாங்க, அந்த மாதிரிதான் இந்த வைரஸும் எல்லாருக்கும் வரும் மருந்து சாப்பிட்டு கிட்டே இருக்கணும் அவன் கல்லா கட்டிகிட்டே இருக்கணும்” குமரகுரு வெறுப்பாக சொல்ல 
“அது மட்டும்னு எனக்கு தோணல, வைரஸுக்கான மருந்து அவன் கிட்ட மாத்திரம் தான் இருக்கு அப்போ இது ஒரு பயோ வெப்பானாக கூட பாவிக்க வாய்ப்பிருக்கு இல்லையா?” 
“ஆமா சார் இது எனக்கு தோணலையே! ஒருநிமிடம் சார்” என்ற குமரகுரு மீண்டும் காணொளியை ஓடவிட வைரஸை முதலில் தஞ்சையில் பரப்பத்தான் பேசிக் கொண்டார்கள். ஆனால் அது நடக்காது வேறு மாவட்டம் பார்க்க வேண்டும் என்று தெளிவாக இருக்க 
“ஏன் குமரகுரு வைரஸை கண்டுபிடித்து ஒரு ஆறு, ஏழு மாசம் இருக்குமா? கண்டு பிடிச்ச கையோட நீங்க கொண்டு போயிட்டீங்க இவனுங்க பேசுறது புரியலையே!”
“இல்ல சார் அத கண்டு புடிச்சு மூணு வருசமாக போகுது”
“என்ன சொல்லுறீங்க?”
“வைரஸ கட்டுப்படுத்த இன்னொரு வைரஸ உருவாக்கிறது சகஜம். அப்படி இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கட்டுப்படுத்த உருவாக்கின வைரஸ்தான் இது. அந்த நேரம் இதோட பவர் கம்மினு வச்சிக்கோங்களேன். டெஸ்ட்டு பண்ண ஆட்கள் தேவபட்டது. ஆனா இந்த மாதிரி உயிரோடு விளையாடும் விசயத்துக்கு காசு கொடுத்தாலும் ஏழைபாழைங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு. அரசியல்வாதிகளை புடிச்சி காசு கொடுத்து குறிப்பிட்ட ஊர செலெக்ட் பண்ணி பரப்புவாங்க. அப்படி செலெக்ட் பண்ண பட்ட ஊர்தான் உங்க ஊர் அப்போ இருந்த தஞ்சை எம்.எல்.ஏ மறுத்ததால் அவரை ஆக்சிடன்ட் பண்ணி கொன்னுட்டாங்கனு  பேசிக்கிட்டாங்க” 
“என்ன சொன்னீங்க?” ஆதிக்கு ஏதோ புரிவது போல் இருக்க
“உங்களுக்கு முதல்ல இருந்த எம்.எல்.ஏ”
“அவர் என் அப்பா..” 
“ஓஹ்… மை காட்… லாப்புலயே இருந்ததால நாட்டுநடப்பு எனக்கு அவ்வளவா தெரியாது சார். கடவுள் என்ன சரியான இடத்துக்குத்தான் வர வச்சி இருக்கான்” குமரகுரு பெருமூச்சு விட்டவாறே சொல்ல
தன் தந்தை மக்களுக்காக வாழ்ந்தவர்   அவரிடம் சுபாஷ் பேசி இருக்கும் விஷயம் வெளியே தெரிந்து விடக்கூடும் என்று தான் அவரை கொலை செய்தான் என்ற உண்மை ஆதிக்கு புரிய, “இது சாதாரண அரசியல் கொலையல்ல, தந்தையின் மரணத்துக்கு சுபாஷ் பதில் சொல்லியே ஆகா வேண்டும்” கோபத்தில் கனன்றான் ஆதி. 
இவர்கள் பேசும்வரை கார்த்திக்கும் வாசுவும் மெயின் ரோடில் இருக்க அவர்களை அழைத்த ஆதி குமரகுருவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அதன் பின் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு செய்ய வேண்டும்? என்று வெகு நேரமாக பேசியவர்கள் குமரகுரு  இப்பொழுது இருக்கும் இடத்துக்கு சென்று அவருடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு குமரகுரு தங்களோடு இருப்பதுதான் பாதுகாப்பு என அவருக்கு புரியவைத்து அவரையும் அழைத்துக் கொண்டு ஜமீனுக்கு திரும்பினார்கள்.   
அதற்கு அடுத்த நாளே குமரகுருவை அழைத்துக்கொண்டு சென்னை சென்ற ஆதியும் கார்த்திக்கும் குற்றவியல் பிரிவின் டி.ஜி.பியை சந்தித்து ஆதாரங்களோடு புகார் கொடுத்தனர்.
சுபாஷ் ஒரு வி.வி.ஐ.பி என்பதால் அவனை கைது செய்யும் நடவடிக்கைகள் மிக மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட அந்த நேரத்தில் சுபாஷ் சிங்கப்பூர் சென்றிருந்தான்.
சுபாஷ் கைது செய்யப்படும் வரை குமரகுரு குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருப்பது அவசியம் என்பதால் சென்னையில் இரண்டு நாள் தங்கி அந்த வேலைகளை மேற்கொண்ட ஆதி கார்த்திக்கோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்தான்.
ஆதியின் போன் அடிக்கவே எடுத்துக் பார்த்தவன் புது நம்பராக இருக்கவும் ஒருவேளை குமரகுரு புது எண்ணிலிருந்து அழைப்பதாக எண்ணியவன் இயக்கி காதில் வைக்க 
“ஹலோ மிஸ்டர் ஆதித்ய விஜயேந்திரனா பேசுறது?” என்றது அந்த குரல் 
“ஆமா நீங்க?”
“சுபாஷ் சந்திரன்” 
ஒருகணம் திகைத்தாலும் மறுகணம் சாதாரணமான குரலில் “சொல்லுங்க மிஸ்டர் சுபாஷ்” 
“கார்த்திக் சார் பக்கத்துல தானே வண்டி ஒட்டிக்கிட்டு வராரு? போன ஸ்பீக்கர்ல போடுங்க” 
ஆதியும் ஸ்பீக்கரில் போட்டவாறு கார்த்திக்கு வண்டியை நிறுத்த சொல்ல கார்த்திக்கும் வண்டியை நிறுத்தினான். 
“என்ன மிஸ்டர் ஆதித்யா என்ன ரொம்ப நோண்டுறீங்க போல, இப்போ உங்க ஊர்ல உங்க ஜமீனுக்கு காலேஜுக்கு போற வழில புதுசா ஒருத்தன் தள்ளுவண்டில ஜூஸ் பார் திறந்திருக்கிறானே அவனை பத்தி விசாரிச்சீங்களா?”
கார்த்திக்கும், ஆதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சுபாஷ் தொடர்ந்தான். 
“உங்க பி. ஏ. சீனிவாசன் வண்டிய நிறுத்தி ஜூஸ் வாங்கிகிட்டு நிக்கிறாரு,  உங்க பாட்டியும், உங்க மனைவி, கார்த்திக் மனைவி மூணு பேருமே வண்டில இருக்காங்க, ஜூஸ் விக்கிறவன் சீனு வயித்துல கத்திய சொறுவுவானோ! இல்ல பெரிய வண்டி ஏதாவது வந்து உங்க குடும்பம் உக்காந்து இருக்கும் வண்டிய மோதுமோ! தெரியல பாத்துக்கோங்க, சொல்லிட்டேன்” என்றவன் அலைபேசியை துண்டித்திருக்க ஆதிக்கு பதட்டம் கூடியது. 
“ப்ரோ ரிலாக்ஸ் குரைக்கிற நாய் கடிக்காது” கார்த்திக் ஆதியை சமாதானப்படுத்த முனைய, 
“முதல்ல வண்டிய எடு” கத்தினான் ஆதி.
குமரகுருவோடு ஆதி மற்றும் கார்த்திக்  சென்னை சென்றதால் கவியையும் ஆருவையும் காலேஜ் அழைத்து செல்லும் பொறுப்பு சீனுவினானது. 
சீனு வேகமாக வண்டியை ஓட்டுவான் என்று வரளிநாயகியும் கூடவே வர ஆதியை போலவே வண்டியை உருட்டிக் கொண்டுதான் போனான் சீனு.   
இன்றும் காலேஜ் முடிந்து வந்து கொண்டிருந்தவர்கள் பழ வண்டியை கண்டு ஜூஸ் அருந்த வண்டியை நிறுத்தி இருந்தனர். 
தள்ளு வண்டியாக இருந்தாலும் கரிம பழங்கள் என்ற பெயர் பலகை மக்களை ஈர்த்தது போலும். எல்லா வகையான பழங்களும் வேறு இருந்தது. பக்கத்தில் நீரோடை இருக்க பழங்களை சுத்தமாக கழுவி,  கைக்கு கையுறை அணிந்து, அதீத சுத்தத்தை கடைபிடிக்க கொஞ்சம் கூட்டமாகவே இருந்தது அந்த மினி கிராமிய  ஜூஸ் பார். 
சீனு சென்று ஆடர் கொடுத்தவன் தயாராகும் வரை அலைபேசியை நோண்டிக்கொண்டிருக்க, வரளிநாயகி தன்னை இறங்க விடமாட்டார் என்பதால் கவி அமைதியாக அமர்ந்திருக்க, ஆரு இறங்கி செல்பி எடுத்துக்கொண்டிருந்தாள். 
“கவிமா… காத்து சிலுசிலுனு வீசுது வா அந்த மரத்தடில போய் கொஞ்ச நேரம் உக்காந்து இருக்கலாம். இந்த காருல உக்காந்தே இடுப்பு வலிக்குது” என்ற வரளிநாயகி காரைவிட்டு இறங்க கவியும் சந்தோசமாக இறங்கினாள். அந்த சந்தோசம் இன்னும் சற்று நேரத்தில் காணாமல் போகப்போவது அறியாமல்.
சீனு  தீப்தியோடு பேசியவாறு காரை விட்டு சற்று தள்ளி நடந்து சென்று ஒரு மரத்தடியில் நின்றிருக்க, பாதையை கடந்த ஆரு செல்பி எடுப்பதில் மூழ்கி இருந்தாள். வரளிநாயகியும் கவியும் சீனுவுக்கு எதிர் திசையில் உள்ள மரத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தனர். 
ஆதி சீனுவுக்கு அழைக்க அது பிசியாக இருப்பதாக வர மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய, கவிக்கு அழைக்குமாறு கார்த்திக் கூறவும் தான் ஆதிக்கு அந்த எண்ணமே தோன்றியது. கவிக்கு அழைக்க கவியின் அலைபேசி காருக்குள் அடித்து ஓய்ந்தது. ஆதியின் மனம் அடித்துக்கொள்ள அவனால் சிந்திக்கக் கூட முடியவில்லை. கார்த்திக் வேகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். 
“ஆரு… ஆருக்கு எடு… ” கார்த்திக் கத்த ஆதி அவசர அவசரமாக ஆருவுக்கு அழைத்தான்.   
அழைப்பு அடிக்கவும் ஆரு இயக்கி காதில் வைக்கும் வரை ஆதியின் படபடப்பு கூடிக்கொண்டே போக 
“என்ன மாமா?”  அவன் பதட்டம் அறியாமல் எரிச்சலாக ஆரு
   
“எங்க இருக்கீங்க? சீனு போன் பிசினு வருது, லயா போன் எடுக்கவே இல்ல”
“சீனு தீப்தி கூட கடலை போடுறான். கவி பாட்டி கூட உக்காந்து இருக்கா” ஆரு கண்களுக்கு பட்டத்தை சொல்ல 
“எங்க இருக்கீங்க?”
“ஜூஸ் குடிக்க வண்டிய நிறுத்தினோம்” ஆரு சொல்ல ஆதியின் இதயம் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. 
“ஆரு முதல்ல  போய் போன சீனுக்கு கொடு அவசரம்” ஆதி கத்திய கத்தில் மிரண்ட ஆரு பதறியடித்துக் கொண்டு சீனுவின் அருகில் ஓட பாதையை மாறும் பொழுது வந்த வண்டியில் மோதப் போனவள் சுதாரித்து விலகி இருந்தாள்.   
தீப்தியோடு பேசியவாறே அதைக்கண்ட சீனு கத்தியவாறு ஆருவின் பக்கம் வர பைக்கில் வந்த இருவரில் பின்னாடி அமர்ந்திருந்தவன் இரும்பு கம்பியால் சீனுவின் தலையில் அடிக்க எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்தவன் இரத்தம் வழிய மயங்கி சரிந்தான். 
கூட்டமும் கூட கார்த்திக்கின் வண்டியும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தது. அதிர்ச்சியில் உறைந்த ஆரு சாலையை கடந்து வர வரளிநாயகி கத்துவது கேட்கவும் வண்டியிலிருந்து வேகமாக இறங்கிய ஆதி அந்த பக்கம் திரும்ப ஒருவன் கவியின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு ஓடிக் கொண்டிருந்தான். 
கவி இரத்த வெள்ளத்தில் மடிந்து சரிய வரளிநாயகியும் கவியோடு சரிய கார்த்திக், ஆதி இருவரும் கவியிடம் ஓட, ஆரு சீனுவை கட்டிக் கொண்டு கதறலானாள்.

Advertisement