Advertisement

அத்தியாயம் 26
சில வருடங்களுக்கு முன் தெருவோரத்தில் தள்ளு வண்டி கடையொன்றை நடத்தி வந்த பிரேமா என்பவர் சாலை விபத்தில் காலமாக ஆனாதையானாள்  அவளுடைய ஒரே மகள். பிறந்ததிலிருந்தே தந்தையாரேன்று அறியாத, தாயையே நம்பி இருந்த அந்த இளம் குருத்து அன்னை இறந்த பின் வயிற்று பசிக்காக என்ன செய்வதென்று அறியாமல் சிக்கனலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள். 
அன்னை இறந்த அதிர்ச்சி, தனக்கிருந்த வாடகை அறையிலிருந்து வெளியேற்றம் என அந்த ஏழு வயதில்லையே பல அதிர்ச்சசிகளை பார்த்தவள் பேச்சு திணற ஆரம்பித்தாள். 
ரோட்டில் பிச்சையெடுப்போரோடு தெருவோரம் தூங்கி எந்திரித்து பசிக்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவளை கடத்திச் சென்று காமுகர்கள் பந்தாட நினைக்க அவர்களிடமிருந்து தப்பியோடியவள் ராணியின் முன் வந்து விழ அவளிடம் அடைக்கலமானாள். 
அவளை துரத்தி வந்தவர்களை பார்த்த உடனே ராணிக்கு விஷயம் புரிய கோழிக் குஞ்சாய் வெட வெடவென  நடுங்கும் சிறுமியை ஆட்டோவில் ஏற்றியவள் வீட்டுக்கு அழைத்து வந்தாள். 
அன்னை இறந்த அதிர்ச்சியில் திக்கிக் திக்கி பேசியவள், முற்றாக பேச்சை நிறுத்தியிருந்தாள். அவளை குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டுவது, தூங்க வைப்பது என்று எல்லாம் ராணி கவனித்துக்கொள்ள அவளிடம் மட்டும் ஒட்டியவள் வெளியே செல்லவே அஞ்சினாள்.
அவளின் பெயரும் யாருக்கும் தெரியவில்லை. ஆதலால் அனைவரும் அவளை “முன்னி” என்று அழைக்க ஆரம்பித்திருக்க ராணி அவளை தத்தெடுக்க எண்ணி வானதியிடம் பேச வானதியும் அதற்கான வேலைகளில் ஈடுபட்ட சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. 
பாடசாலையிலிருந்து வெளியே ஒருநாள் சுற்றுப்பயணம் சென்ற தீப்தி உட்பட அவளுடைய வகுப்பு மாணவர்கள் அனைவரும் குண்டு வெடிப்பில் சிக்கி இறந்த செய்தி வீட்டாரை அடைய, சாந்தினி முற்றாக உடைந்துப்போனாள். 
இறந்த குழந்தையின் உடல் கூட சரிவர கிடைக்காத நிலையில் சம்யுத அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, மயக்க நிலையிலையே இருக்கும் கர்ப்பிணியான சாந்தினியை பார்த்துக்கொள்வது வானத்திற்கு பெரும்பாடாகிப்போனது. 
அழுது அழுது கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை தன் பிஞ்சு கரம் கொண்டு  கண்ணீரை துடைத்தாள் முன்னி. அவளை இறுக அணைத்துக் கொண்ட சாந்தினி தீப்தி வந்து விட்டதாக கதற அன்றிலிருந்து முன்னி அனைவருக்கும் தீப்தியானாள். 
சாந்தினியின் அன்பும், சம்யுத்தின் வழிகாட்டலும் தன் வாழ்க்கையில் ஒளி வீச கூட்டிலிருந்து வெளியே வந்திருந்தாள் தீப்தி. 
பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது அத்தியவசியம் என சம்யுக்த் அவளை கராத்தே வகுப்பில் சேர்த்து விட கிக் பாக்சிங்கில் விருப்பம் தெரிவித்தவள் அதில் கலந்து கொண்டு அசத்திக் கொண்டிருக்கிறாள். அவள் லேசா குத்தினத்துக்கே சீனு துடித்தது அதனால் தான்.
தீப்திக்கும் சீனுவுக்கும் திருமணம் பேசிய போது உறவுமுறை சிக்கலை வரளிநாயகி   முன் வைக்க, ராணி தனக்கு தங்கையென்றும் தீப்தியை தான் வளர்த்தாலும் அவள் என்றுமே ராணியின் மகள் தான் என்றும் விளக்கமளித்தார் சம்யுத். 
வரளிநாயகிக்கு தீப்தியின் பிறப்பு பற்றின குழப்பங்கள் இல்லை. கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்று நினைப்பவர், ஏழை பெண்களின் திருமணத்தை முன் நின்று நடத்துபவர். ஒரு பெண்ணின் பிறப்பைக் கொண்டு வாழ்க்கையை தீர்மானிக்க முனையவில்லை. தீப்தியை அனைவருக்கும் பிடித்திருந்தது. அதுவே சம்மதம் சொல்ல போதுமானதாக இருந்தது.
தீப்திக்கு தொடர்ப்பை ஏற்படுத்திய சீனு தீப்தி அலைபேசியை இயக்கும் வரை என்ன பேசுவதென்று யோசிக்கலானான். 
அலைபேசி அடிக்கவும், அதில் சீனுவின் எண் வரவும் மலர்ந்த முகத்தோடு இயக்கி காதில் வைத்த தீப்தி 
“ஹலோ… யாரு பேசுறது” என்று தமிழிலையே கேட்க 
“நான் சீனு பேசுறேன்” 
“யோவ் யாருயா நீ… சீனு… சின்னு… னு கிட்டு நீ என்ன ப்ரைமினிஸ்டரா? பேர சொன்ன உடனே சொல்லுங்க சார்னு சொல்ல? சொல்லித்தொலையா என் வெண்ண”
“நானே எல்லாரையும் வாருவேன் இவ எனக்கு மேல இருக்காளே! ஆமா இந்த குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!” சீனு புலம்ப 
“யோவ் போன் பண்ணிட்டு நீ பாட்டுக்கு புலம்பினா எனக்கு எதுக்கு போன் பண்ண? போன் பண்ணா விஷயத்தை சொல்லு” தீப்தி வேண்டுமென்றே சீனுவை அதட்ட 
“சீனு இவளையெல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியும்னு நினைக்கிறியா?” அவன் மனசாட்ச்சி வேறு கேள்வி கேட்க 
“எனக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டுதான் வேணும் நீ மூடிக்கிட்டு இரு” 
சீனு மனசாட்ச்சியோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது அலைபேசியை அனைத்திருந்தாள் தீப்தி.
“இவ ஒருத்தி….” மீண்டும் அழைப்பு விடுத்தவன் அவள் ஹலோ சொன்னதும் “அடியேய் பொண்டாட்டி நான் உன் மாமா பேசுறேன் டி” என்று விட ஒருகணம் சிலிர்ப்போடு திகைத்த தீப்தி ரகசியமாக புன்னகைத்தவாறு 
“எந்த மாமா?” 
“உன் புருஷன் மா…”
“ஐயோ எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல” தீப்தி பொய்யாய் அதிர்ச்சியடைய 
“சரி நான் பண்ணிக்கிறேன். என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” 
“பரவால்லயே ரொம்ப தைரியமான ஆளுதான் இப்படி ஸ்ட்ரைட்டாவே கேக்குறீங்க. ஆனாலும் பாருங்க நீங்க யாருன்னுதான் எனக்கு தெரியல” 
“வீடியோ கால் பண்ணுறேன் அப்போ தெரிஞ்சிடும் நான் யாருன்னு” என்றவன் வீடியோ காலில் அழைத்து பேச தன்னவனை காண போகும் ஆவலில் தீப்தியும் சந்தோசமாக பேச ஆரம்பித்தாள். 
“உன்ன பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. எங்க சொல்லு பார்ப்போம்” சீனு தன் கைவரிசையை காட்ட,
“என் பேராவது தெரியுமா?”
“அது தெரியும். தீப்தி தானே உன் பேர். என் பேர் என்னனு தெரியுமா? சீனிவாசன்”
“ஸ்ரீவத்சனா?” 
“அவ்வளவு ஸ்டைலா எங்கம்மா வைச்சாங்க சீனிவாசன்னு வச்சிட்டாங்க, சீனு, சீனுனு கூப்பிடுறாங்க” சோகமாக சொல்ல 
“சிலபேருக்கு தன் சொந்த பேர் என்ன என்பதே தெரியாது. அதுக்கு இது பரவா இல்ல” தீப்தி தன்னை நினைத்து சொல்ல 
“அது என்னவோ உண்மை தான். ஆமா உனக்கு என்ன பிடிச்சிருக்கா?” சட்டென்று கேட்டு விட 
அவன் முகத்தையே பார்த்திருந்தவள் “எங்க அப்பா பாக்குற மாப்பிளையத்தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன். நீங்க அப்பா கிட்ட வந்து பேசுங்க” தீப்தியும் சிரிக்காமல் சொல்ல 
“ஆ… உங்க அப்பாக்கு பிடிக்கலைன்னா கல்யாணம் பண்ண மாட்டியா?”
“மாட்டேன்” தீப்தியும் பட்டென்று சொல்ல 
“தூக்கிட்டு போய் தாலி காட்டுவாண்டி இந்த சீனு” மீசையை நீவியவாறே  வசனம் பேச 
“யாரு நீயா? அன்னைக்கு சும்மா ஒரு குத்து விட்டதுக்கு வயித்த புடிச்சுகிட்டு கீழ உருண்டவன் தானே நீ. பாத்து தம்பி மேல கை வச்சா பாடாத இடத்துல பட்டுடும்” 
“இருடி எகத்தாளமாவா பேசுற… கல்யாணத்துக்கு அப்பொறம் வச்சிக்கிறேன்”
“தாலி கட்டி பொண்டாட்டி ஆனா பிறகு  எதுக்குடா வச்சிக்கிற?”
“ஏன் டி நீ எப்போவுமே இப்படியே? இல்ல பொறந்ததுல இருந்தே இப்படியா?” வாயில் கைவைத்தான் சீனு. 
“சகவாசம் சரியில்ல மாமா அதான்” தீப்தி கழுத்தை நொடிக்க
“அப்படி யார் கூடத்தான் பழகுற நீ” சீனு யோசனையாக   
“உன் கூடத்தான்” தீபத்தி பட்டென்று சொன்னவள் “எப்படி” எனும் விதமாக புருவம் உயர்த்த 
“சான்ஸே இல்ல என்னையே மிஞ்சுடுவ. எனக்கேத்த ஜோடிதான் போ” 
ரொம்ப நாள் பழகியவர்கள் போல்  விடியும்வரை ஏதேதோ பேசியவர்கள் அலைபேசியை வைக்க மனம் இல்லாமல் வைத்தனர். 
சீனு மனம் நிறைந்த சந்தோசத்தில் தூங்க முனைய அவன் தினமும் எழுந்துகொள்ள வைத்திருந்த அலாரம் அடிக்கவே 
“டேய் இன்னைக்கு நான் லீவு” என்றவன் அதை ஆஃப் செய்தவன் தூங்க முயற்சி செய்ய அப்பொழுதுதான் அவனுக்கு ஆதியின் நியாபகம் வந்தது. 
“அடப்பாவி பொண்டாட்டிய விட்டு தூரமா இருக்க சொன்னா… இப்படி ஒரேயடியா போய் பாட்டிகிட்ட கையும் களவுமா மாட்ட போறான். எனக்கும் சேர்த்துதான் ஆப்பு வைப்பாங்க” புலம்பியவாறு ஆதிக்கு அழைக்க 
“என்னடா மாப்புள நல்லா தூங்கினியா?”
“உன் வாயில வசம்பை வச்சு தேய்க்க. பொண்டாட்டிய பார்க்க போனவன் போனோமா, பார்த்தோமா, வந்தோமான்னு இருக்கணும். நீ வந்திருந்தா உன்ன காரணம் காட்டி நான் தூங்கி இருப்பேனே! தூங்க விட்டாளா அந்த ராட்சசி. பாட்டிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? சீக்கிரம் வாடா? உன்னாலதான் என் தூக்கம் போச்சு நான் இன்னைக்கு லீவு” என்றவன் இழுத்து போர்த்தியவாறு தூங்க ஆரம்பித்தான். 
“விடிய விடிய போன்ல கடலை போட்டு என்னால தூக்கம் போச்சா இருடா மகனே உனக்கு வைக்கிறேன் ஆப்பு” ஆதி அவன் அலைபேசிக்கு வரும் எல்லா அழைப்புகளையும் பதிவு செய்வதால் அவர்கள் பேசிய ஆடியோவை தீப்திக்கு அனுப்பி வைத்தான். 
வரளிநாயகிடம் சென்று கவி காலேஜ் போவதை பற்றி பேச வேண்டி இருப்பதால் தனதறையிலையே குளித்து துணி மாற்றி கீழே  வந்தவனை பிடித்துக் கொண்டார் சக்கரவர்த்தி. 
“என்ன மாப்புள மேல இருந்து வாறீங்க?உங்கள சீனு ரூம்ல இல்ல தங்க சொல்லி அத்த உத்தரவு போட்டிருக்காங்க”
“குளிச்சிட்டு துணி மாத்த போனேன் மாமா?”
“உண்மையை சொல்லுங்க? குளிக்க காலைல போனீங்களா? இல்ல ராத்திரியே ஷிப்ட் ஆயிட்டீங்களா?”
“போங்க மாமா” என்று அவரை சமாளித்தவன் வரளிநாயகியை தேடிச்செல்ல பூஜையை முடித்த அவர் வெளியே வந்து கொண்டிருக்க, அவர் முன் நின்றவன் காலில் விழ என்றும் போல் “உன் மனசு படியே எல்லாம் நடக்கட்டும்” என்று அவர் வாழ்த்தினார். 
“எங்க பாட்டி எல்லாம் என் மனசு போலையா நடக்குது” பெருமூச்சு விட 
“ஏன் டா   ராசா அப்படி சொல்லுற? உனக்கென்ன குறை?”
“எனக்கென்ன குறை? என் பொண்டாட்டிக்குத்தான் மனக்குறை?”
“உன் பொண்டாட்டிகா? நம்ம கவிக்கா? ஐயோ புள்ளத்தாச்சி பொண்ணு மனசு கஷ்டப்படும்படி என்ன ஆகிருச்சுனு தெரியலையே!” வரளிநாயகி பதற 
“பெருசா ஒன்னும் இல்ல பாட்டி… அவ படிக்கணுமில்ல, காலேஜ் போகணும் இப்படியே வீட்டுக்குள்ள இருக்க முடியுமா? படியேற கூடாது, இறங்க கூடாதுனு சொல்ல அவளுக்கு வியாதி ஒன்னும் இல்லையே!” 
ஆதி பேச ஆரம்பிக்கும் பொழுது ஒவ்வொருத்தராக அங்கே வர வானதி ஆதியை மெச்சுதலான பார்வை பார்க்க, 
“ஏன் ராசா அடுத்த வருஷம் படிப்பை தொடர்ந்தா போதாதா?” வரளிநாயகி மனமே இல்லாமல் கேட்க 
“நானே கூட்டிட்டு போய் காலேஜ்ல விட்டு கூட்டிட்டு வரேன். உங்களுக்கு திருப்தி இல்லனா நீங்களும் கூட வாங்க… கவி கூடவே இருங்க. மாடிக்கு போக வர மேற்கு பக்கமாக ஒரு லிப்ட் போட்டுடலாம் அம்மாக்கும் உதவியாக இருக்கும்” சொல்லியவாறே இளவரசியின் முகம் பார்க்க அவரின் முகமும் மலர்ந்தது. 
வரளிநாயகி யோசனையாகவே இருக்க “அட இன்னும் என்ன யோசிக்கிற நாயகி சரினு சொல்லு அதான் நம்ம பேரனே பாத்துக்கிறேன்னு சொல்லுரானே! இன்னும் என்ன?” கர்ண வியயேந்திரன் சொல்ல அரைமனதாக தலையசைத்தார் வரளிநாயகி. 
அதன் பின் கவியை காலேஜ் அழைத்து செல்வது அழைத்து வருவது ஆதியின் பொறுப்பானது. வரளிநாயகியும் அவர்களோடு வந்து கவியின் வகுப்பறையை பார்த்த பின்தான் சரி என்றார். 
கவிக்கு பெரிதாக மயக்கமோ, வாந்தியோ இருக்கவில்லை. அதுவே அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. இல்லையேல் அதையே காரணம் காட்டி வீட்டில் இருத்தி இருப்பார்கள். 
ஒருவாரத்துக்குள் லிப்டும் போடப்பட, எந்த பிரச்சினையுமில்லாமல் கவி காலேஜ் சென்று வந்து கொண்டிருந்தாள். என்ன காலேஜ் செல்ல ஆதி வண்டியை உருட்டிக் கொண்டுதான் போகவேண்டி இருந்தது, கொஞ்சமேனும் வேகமாக செல்ல வரளிநாயகி அனுமதிக்கவில்லை.
ஆதி அனுப்பிய ஆடியோவால் கொதித்த தீப்தி சீனுவை லெப்ட் அண்ட் ரைட்டு வாங்க, இந்த ஒருவாரமாக அவளை சமாதானப்படுத்தும் வேலையில் இருந்தான் சீனு. 
தீப்தியிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் பொழுதெல்லாம் ஆதியிடம் சீனு முகம் திருப்ப, . வாசுவுக்கு தீப்தி, சீனு காதல் விவகாரம் தெரிய வாசு அவனை வார ஆரம்பித்திருந்தான்.
ஆதியும், கவியும் காலேஜ் அனுப்புவதே மேல் என நினைத்து மூன்று மாத இடைவெளியை பெரிது படுத்தாமல், அதை பற்றி பேசாமல் மௌனம் காத்தாலும் இரவில் மொட்டைமாடியில் ரகசிய சந்திப்பு நடாத்தி வந்தனர். 
ஆருத்ரா புரிந்து கொண்டு வானதி, ராணியோடு சுமூகமாக நடந்து கொள்வதை கண்கூடாக பார்த்த பின் அவளுடன் பழையபடி இழைய ஆரம்பித்திருந்தான் கார்த்திக். 
“நாம போன வேகத்துக்கு நான்தான் முதல்ல நல்ல செய்தி சொல்லணும்னு நினச்சேன். படிப்பு, அது, இதுனு தள்ளி போட்டதால் கவி முந்திகிட்டா” ஆரு பெருமூச்சு விட்டவாறே சொல்ல 
“அதனால என்ன உன் படிப்பு முடியட்டும் அப்பொறம் குழந்தையை பத்தி யோசிக்கலாம்”  கார்த்திக் சொல்ல 
“ரெண்டு பேருக்கும் ஒண்ணா கல்யாணமானதால பாக்குற எல்லாரும் இதே கேள்வியை கேட்டு தொல்லை பண்ணுறாங்கப்பா… பதில் சொல்ல முடியல”
“கழுத்துல ஒரு போர்ட்டு மாட்டிக்க… ‘இப்போதைக்கு குழைந்தை பெத்துக்க ஐடியா இல்ல’ எப்படி” கார்த்திக் சிரிக்காமல் சொல்ல அவனை முறைத்த ஆருத்ரா 
“இருங்க கேள்வி கேக்குறவங்க பூராத்தையும் உங்க பக்கம் திருப்பி விடுறேன். அப்போ தெரியும் உங்களுக்கு” கருவியவள் அதன்படியே செய்திருந்தாள்.
கார்த்திக்கொடு போகும் போது யாராவது குழந்தையை பற்றி பேச அவர்களை உரிமையாக பாட்டி, அத்த, சித்தி என விழித்தவள் தன் கணவனுக்கு இப்பொழுதே குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கொஞ்சம் புத்திமதி செல்லுமாறும் வேண்டி நிற்க, ஆளாளுக்கு கார்த்திக்கை வச்சி செய்ய ஆரம்பித்திருந்தனர். 
ஆருத்ரா விளையாட்டாக ஆரம்பித்தது கடைசியில் அவன் கேஸ் விஷயமாக வெளியே போனாலும் அவன் என்றுமே பேசியும் கூட இல்லாத கிழவிகள் சூழ்ந்து புத்திமதி என்ற பெயரில் ரம்பம் போட கடுப்பானவன் ஆருத்ராவின் மேல்தான் கொலை வெறியானான். 
வீட்டுக்கு வந்தவன் கோபமாக ஆருவை திட்ட ஆரம்பிக்க வானதியும், ராணியும் விழுந்து விழுந்து சிரிக்க, அவள் காலுக்கு மேல் கால் போட்டு ராணி செய்த பஜ்ஜியை சாப்பிட்டு கொண்டிருந்தாள். 
“என்ன கார்த்திக் இதுக்கே இப்படின்னா இன்னும் கொஞ்ச நாள்ல எங்க அம்மா, பாட்டி, தாத்தான்னு எல்லாரும் கேக்க ஆரம்பிப்பாங்களே அப்போ என்ன செய்வ?”
“உன்ன…” கைகள் இரண்டையும் ஆருவின் கழுத்துக்கு நேராக கொண்டு சென்றவன் கோபமாக எழுந்து செல்ல 
“கார்த்தி நில்லுடா… ஆரு படிப்பை காரணம் காட்டி இப்போதைக்கு குழந்தை வேணாம்னு சொல்லுற உன் முடிவு நல்லதுதான் ஆனா அவ ஆசைக்கும் மதிப்பு கொடுக்கணும் இல்ல” வானதி சொல்ல 
“கவி உண்டான பொறாமைல வீம்புக்கு தனக்கும் குழந்தை வேணுமென்கிறா” கார்த்திக் கோபத்தில் சொல்ல சாப்பிட்டு கொண்டிருந்த ஆரு கலங்கிய கண்களோடு எழுந்து அறைக்குள் ஓடிவிட்டாள். 
“டேய் ஏன் டா… இப்படி பேசுற போ… போய் அவளை சமாதானப்படுத்து” கார்த்திக்கை வானதி துரத்த மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் ஆருத்ராவை தேடிச்சென்றான். 
ஆரு பொறாமையில் குழந்தை வேண்டும் என்று நினைக்கவில்லை ஆசையில்தான் கேட்கிறாள் என்று கார்த்திக்கும் நன்கு அறிவான். கிழவிகள் போட்ட அறுவையில் கொதித்து போய் வந்தவன் ஆரு கூலாக பேசவும் கோபத்தில் வார்த்தையை விட்டிருந்தான். 
இதுவே தங்களுக்குள் எல்லாம் சுமூகமாக நடந்திருந்தால் ஆருத்ரா அதை பெரிதாக எண்ணி இருக்கமாட்டாள். ஆனால் அவள் பேசியதை இன்னும் மனதில் வைத்துக் கொண்டுதான் கார்த்திக் இவ்வாறு பேசுகிறான் தன்னை மன்னிக்கவே மாட்டான் என்றுதான் அவள் கண்கள் கலங்கியது.
அறைக்குள் வந்த கார்த்திக் தேம்பித்தேம்பி அழும் ஆருவை எவ்வாறு சமாதானப் படுத்துவதென்று தலையில் கை வைத்தவன் அவள் தோள் மீது கை வைக்க அவனையே கட்டி அணைத்து அவன் மார்பிளையே தஞ்சமடைந்தவள் கதறி அழலானாள்.
“நான் சத்தியமா இன்னொரு தடவ அந்த தப்ப பண்ண மாட்டேன் கார்த்திக், எனக்கு குழந்தையே வேணாம் கார்த்திக், என்ன மன்னிச்சிட்டேன்னு மட்டும் சொல்லு கார்த்திக், சொல்லு கார்த்திக்”
தப்பை உணர்ந்தவள் மனவேதனை அது, அந்த குரல் வேதனையின் குரல், கதறும் குரல். அவளின் கதறலைக் கண்டு கார்த்திக்கின் நெஞ்சம் கனத்தது. 
ஆரு குழந்தையை போன்றவள் தெரியாமல் தவறு செய்து விட்டாள். உணர்ந்து விட்டாள். மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அவளை காயப்படுத்தினால் அவள் தனக்குள்ளேயே ஒடுங்கி, மனநோயாளியாவாள். அவளை அந்த நிலைமைக்கு உள்ளாக தானே காரணமாவதா? கார்த்திக்கு தன்மேலையே கோபம் வந்தது.
“ஆரு இங்க பாரு ஏதோ கோபத்துல சொல்லிட்டேன் டி… என்ன மன்னிச்சிடு… இனிமேல் கவிய சம்மந்த படுத்தி  ஒன்னும் பேச மாட்டேன். இது செத்துப்போன எங்க அம்மா, தேவிமா, ராணிமா, நான் உயிரா நினைக்கிற கவி, நீ… நம்ம காதல் மேல சத்தியம்” ஆருவுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்று என்னென்னவோ பேசினான் கார்த்திக். 
“தெரியும் கார்த்திக் நீ கோபத்துல தான் சொன்னன்னு தெரியும் ஆனா தாங்க முடியல ரொம்ப வலிக்குது. நான் கோபத்துல சொன்ன போ உனக்கும் இப்படித்தான் வலிச்சிருக்கும் இல்ல” என்றவள் மீண்டும் அழ
“அப்போ இவ நான் பேசினது நினைச்சி அழலையா…” மனதில் கொஞ்சம் நிம்மதி பரவ 
“ஏய் லூசு அதையே நினைச்சி இப்படி அழுது பயமுறுத்தாத… பார்க்கவே அசிங்கமா இருக்கு… அங்க பாரு உன் மூஞ்சிய பார்க்கவே முடியல” என்றவன் அவளை திருப்பி கண்ணாடி முன் நிறுத்த அழுது சிவந்திருந்த முகத்தைக் கண்டு ஆருவுக்கே ஒரு மாதிரியாக கார்த்திக்கின் மார்பில் முகம் புதைத்தாள். 
“ஆரு எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கிறியா?’
“சத்தியமா? என்ன சத்தியம்”  தலையை உயர்த்தி கணவனை ஏறிட்டாள் ஆரு. 
“இனிமேல் கண்டதையும் யோசிச்சு இப்படி அழமாட்டேனு சத்தியம் பண்ணு பார்க்க சகிக்கல” சீரியஸ்ஸாக பேச ஆரம்பித்தவன் கடைசியில் சிரிக்க அவனை துரத்த ஆரம்பித்தாள் ஆருத்ரா. 
ஆனால் விளையாட்டினூடாக அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தவன் எதற்கும் அழக்கூடாது, போல்டாக இருக்கணும், பேஸ் பண்ணனும் என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிய தலையை ஆட்டுவித்தாள் அவன் மனையாள்.

Advertisement