Advertisement

அத்தியாயம் 24
கவி கருவுற்றிருந்த செய்தியால் ஜமீன் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொள்ளுப்பேரன் வரப்போகும் மிதப்பில் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஊருக்கே உணவு பகிர்ந்துக்க கொண்டிருந்தார் கர்ண விஜயேந்திரன்.
வரளிநாயகியை பற்றி சொல்லவே வேண்டாம் கால்கள் தரையிலையே இல்லை. கவியை கவனிக்க வயதையும் மறந்து படிகளில் ஏறியும் இறங்கியும் சேவகம் செய்து கொண்டிருந்தார். 
வானதியும், ராணியும் கூட கார்த்திக், ஆருவோடு வந்து தங்க ஆரம்பித்து பத்து நாட்களுக்கும் மேலாக இருக்க கவி உண்டான மகிழ்ச்சியில் அவளின் அருகிலையே அமர்ந்திருந்தவர்கள் வரளிநாயகி ஓடியாடி வேலைபார்ப்பதைக் கண்டு அவரை கவியின் அருகில் இருக்கும் படி சொல்லிவிட்டு கவிக்கான சமையல் வேலையை தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வரளிநாயகி இந்த சந்தோசத்தை ஊரோடு பகிர்வது எப்படி என்று ஆதியோடு பேசி பெண்களுக்கு புடவையும், ஆண்களுக்கு வேட்டியும் வழங்க முடிவெடுத்து அதற்கான வேளையில் இறங்கி இருக்க, மேனகையும் சக்கரவர்த்தியும் அவருக்கு உதவி செய்ய ஜவுளி வாங்க சென்றிருந்தனர். 
இளவரசிதான் பாவம் சக்கர நாட்காலியை விட்டு ஓரிரண்டு அடிகள் நடக்க ஆரம்பித்திருந்த நிலையில் மாடிப்படிகளை ஏற முடியாமல் கவியை காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்க அவரின் மனநிலையை புரிந்துக் கொண்ட ஆதி அன்னையை லாவகமாக கைகளில் ஏந்திக்கொண்டு சென்று கவியின் அருகில் அமர்த்த அதன் பின் கவியை விட்டு நகரவே இல்லை.
இன்று காலைதான் கவி கருவுற்றிருக்கிறாள் என்பதையே அறிந்து கொண்டனர் வீட்டார். அதுவும் ஆருத்ராவால் என்பதால் கார்த்திக்கின் மகிழ்ச்சி இரட்டிப்பாக பெருகியது. 
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பின் நள்ளிரவை தாண்டியதால் ஜமீனிலையே அன்றிரவே தங்கிய போது ஆருத்ரா கார்த்திக்கிடம் மனமுருகி  மன்னிப்பு கேட்கலானாள். 
“கார்த்திக் நான் கோபத்துல பேசிட்டேன். உன்னையும், கவியையும் நான் தப்பா எண்ணியதே இல்ல. எனக்குள்ள குழப்பம் இருந்துச்சு என்பது உண்மை. அது உங்க ரெண்டு பேர் நடவடிக்கையினால் இல்ல. எங்க என்ன விட உனக்கு கவி முக்கியா போய் விடுவாளோ! எல்லா சந்தர்பத்திலையும் கவிக்கு நீ முன்னுரிமை கொடுப்பியோ என்கிற பயம் தான். எனக்குள்ள என்னையறியாமளையே! பொறாமையா வளர்ந்து உனக்கும் எனக்கும் நடுவுல கவி இருக்கிறா எங்குற கோபம் தான் நான் அப்படி பேச காரணம்.  சத்தியமா நான் உங்க ரெண்டு பேரையும் தப்பா நினைக்கல. எங்க கவி என் கிட்ட இருந்து உன்ன பிரிச்சிடுவாளோ எங்குற பயம்” குழந்தை போல் திக்கித்திக்கி பேசுபவளை கைகளை கட்டிக்கொண்டு பாத்திருந்தான் கார்த்திக். 
ஆருத்ரா கவியையும், தன்னையும் புரிந்துக் கொண்டாள் என்பது கார்த்திக் உணர்ந்து கொண்டாலும்,  அன்று கார்த்திக் கண்ணீரோடு பேசிய போது ஆருத்ரா கேட்ட மன்னிப்புக்கும் இன்று மனமுருகி கேட்கும் மன்னிப்புக்கும் வித்தியாயாசத்தை நன்கு உணர்ந்தவனாக அவள் பேசுவதை அமைதியாக வேடிக்கை பாத்திருந்தானே ஒழிய அவளை சமாதானப் படுத்தும் எண்ணம் எல்லாம் இல்லாம இருந்தான்.
ஆருத்ரா மனம் விட்டு பேசினால் தான் அவளின் மனபாரமும் நீங்கும், அவள் என்ன நினைக்கிறாள் என்பதையும் தெளிவாக சொல்வாள் என்று அமைதியாகவே இருந்தான் கார்த்திக். 
“சின்ன வயசுல இருந்தே கேட்டதெல்லாம் கிடைச்சதால எனக்கு பிடிவாதம் ரொம்ப ஜாஸ்தி கார்த்திக். உன்ன பார்த்த உடனே புடிச்சிருச்சு. நீ வேணும்னு உள்மனசு சொல்லவும் அடுத்த நாளே உன் ஸ்டேஷன் வாசல்ல வந்து நின்னேன். 
நீ யாரு? என்ன? உனக்கு என்ன பிடிக்கும்? எங்குற வரை தெரிஞ்ச எனக்கு உனக்கும் கவிக்கும் இருக்குற உறவை பத்தி தெரியாம போய்டுமா? 
கவி உன் காதலினு நினைக்கல. ஆனா தங்கச்சினும் எனக்கு தோணல. உங்க ரெண்டு பேருக்கான நெருக்கமும், பேச்சும் நெருங்கிய நண்பர்கள்னு தான் உணர்த்திருச்சு. அப்போவே என் மனசுல பொறாமை தோன்றி இருக்கணும் கார்த்திக். கவி இருக்குற இடத்துல நான் இருக்கணும்னுதான் நினச்சேன் தவிர உங்க கூட இருக்கணும்னு எனக்கு தோணல.
கவி கல்யாணமாகி போய்ட்டா உனக்கும் எனக்கும் நடுவுல வர மாட்டா என்ற நம்பிக்கைலதான் மாமாகிட்ட கல்யாணத்த பத்தி பேச சென்னை வர சொன்னேன். அன்னைக்கி கவி வந்து மாமாகிட்ட கார்த்திக் பெஸ்ட்டு பிரெண்டு என்று சொல்லி ஒரே குடும்பத்துலதான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னா… அப்போ கூட எனக்கு தவறா படல, ஆதி மாமாவை கல்யாணம் பண்ண போறா ஒரே குடும்பம் உறவு முறைல எனக்கு அக்கா எண்றதோட விட்டுட்டேன்.
ஆனா கல்யாணத்துக்கு பிறகும் நீ கவி புராணம் பாடி கிட்டு அவளுக்கு சேவகம் செய்றது எனக்கு பிடிக்கல. அது பொறாமையினால் எங்குறது இப்போ புரியுது. பட் கவி உனக்கும் எனக்கும் நடுவுல வர முயற்சி செய்யவே இல்ல. அதுவும் இப்போ நல்ல புரியுது. நான் தான் ஏதேதோ நினைச்சி   மனச போட்டு குழப்பிக்கிட்டு என்னென்னவோ பேசிட்டேன். மாமாகும் என் மேல கோபம் இருக்கும் ஆனாலும் ஒண்ணுமே சொல்லாம இருக்கிறான் என்றால் அது நம்ம குடும்பத்துக்காக மட்டும் தான். கவிக்கு நான் பேசினது தெரிஞ்சா ரொம்ப மனசோடஞ்சி போவா இல்ல கார்த்திக். நான் ஏன் இப்படி இருக்கேன்” ஏதேதோ பேசியவள் கடைசியில் கணவனிடம் கேள்வி கேட்டு வைக்க 
“எல்லாம் உன் பிடிவாதக் காதலால் தான். உனக்கு நான் மட்டும் வேணும். நான் மட்டும் போதும்னு நினைக்கிற. உன் கூடவே இருபத்திநாலு மணி நேரமும் இருக்கணும்னு  எதிர்பாக்குற அது தப்பு” கார்த்திக் பட்டென்று சொல்ல புரிந்து கொண்ட விதமாக தலையசைக்க ஆருத்ரா விசும்பலானாள்.
“அதான் புரிஞ்சிக்கிட்டியே! திரும்ப எதுக்கு கண்ணை கசக்குற?”
“இல்ல கார்த்திக் அத்த மனசு நோகும் படி பேசிட்டேன். அதனாலதான் அவங்க வீட்டை விட்டு போய்ட்டாங்க” 
“தேவிமாவ என்ன பேசின?” கண்கள் சிவந்தான் கார்த்திக்.  
ஆருத்ரா விசும்பி கொண்டே இருக்க கார்த்திக்கின் கோபம் கூடிக்கொண்டே போக அவளை தன் புறம் திருப்பியவன் உலுக்கியவாறே “சொல்லு என்ன பேசின?” அதட்டலான குரலில் சீறினான்.
அழுதவாறே “நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் பொழுது லேட்டா வந்தாங்க இல்லையா அப்போதுள்ள இருந்து எனக்கு அவங்கள பிடிக்கவே இல்ல. உன் அப்பா வேற ஒரு தடவையாவது போன் பண்ணி உன்ன விசாரிக்கலையா….”
“ஆரு என் பொறுமைய சோதிக்காத தேவிமாவ என்ன சொன்ன….” கார்த்திக் பற்களை கடித்தவாறு, கைகை மடக்கி தொடையில் குத்தியவாறு பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தான். 
“அவங்க உன்ன பாரமா நினைக்கிறதாக நினைச்சி, உன்ன சரியா பாத்துக்கள்லயோ என்கிற கோபத்துல….”
“கோபத்துல…”
“அவங்க காதுபட அம்மாகிட்ட பேசினேனா…”
“அதான் என்ன பேசின?….’
“கார்த்தியை வேலைக்காரனா நடத்துறாங்க, கவிக்கு பாடிகாட்டா வச்சிருக்காங்க, அப்படி இப்படினு அப்போ வாய்க்கு வந்ததெல்லாம் சொன்னேன் கார்த்திக்” குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு மன்னிப்பு வேண்டி நிற்க 
“அறைஞ்சேன்னா…” கையை ஓங்கியவன் ஆருவின் அப்பாவியான முகத்தைக் கண்டு கவியையும் தன்னையும் நினைத்து குழம்பி கண்டபடி பேசியது போல் தான் இதுவும் இருக்கும் என்று புரிய 
“ஆரு… ஆரு… ஆரு… உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனே எனக்கு தெரியல. நான் பெத்த உடனே எங்க அம்மா செத்து போய்ட்டாங்க. அப்போ தேவிமா என்ன கைல ஏந்தினவங்கதான் இன்றுவர மனசுல சுமந்து கிட்டு இருக்காங்க. 
இன்றுவரைக்கும் அம்மா இல்லை என்குற குறை எனக்கு வந்ததும் இல்ல. அம்மா இல்லையே என்குற எண்ணம் வந்ததும் இல்ல. அவங்கள அம்மானு அழைக்காம தேவிமானு அழைக்க வச்சது அவங்கதான் அதுக்கு ஒரே காரணம் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணா அவங்கள நான் அம்மானு கூப்படணும் எந்த குழப்பமும் வந்துட கூடாது எங்குற ஒரே காரணத்துக்காகத்தான். அத்தை என்றோ சித்தி என்றோ கூப்பிட சொல்லாம தேவி அம்மானு கூப்பிட வச்சாங்க. அப்பா கடைசி வரைக்கும் மனசு மாறாம வேற கல்யாணம் பண்ணாம இருப்பாருனு தெரிஞ்சிருந்தா அம்மானே கூப்பிட வச்சிருப்பாங்க. அப்பாவை நம்பி வரும் பொண்ணுக்கு எந்த சங்கடமும் வந்துடக்கூடாதுனு நினச்சவங்க அவங்க. அவங்கள போய் இப்படி பேசிட்டியே!” 
கார்த்திக் பேசப்பேச ஆருத்ரா அவனை ஒருமாதிரி பார்க்க  
என்ன அப்படி பாக்குற? உன் மனசுல ஓடுறது புரியுது. அவங்களே உன்ன வளர்க்கலாம் அப்பா வேற கல்யாணம் பண்ணி அந்த அம்மாக்கு குழந்தைகளை பெத்திருக்கலாமே! நீ அவங்க மகனாகவே இருந்துட்டு போய் இருக்கலாமேன்னு தானே கேட்கவர 
எங்கம்மா மேல அப்பா எவ்வளவு உயிரா இருந்தாங்கனு கண்ணால பாத்தவங்க அவங்க. அம்மாக்கும் அவங்களுக்குமான ஒரே அடையாளம் நான் என்ன போய் அப்பா கிட்ட இருந்து பிரிக்க நினைப்பாங்களா?” 
ஆருத்ராவுக்கு தலை சுத்தாத குறை தான். “பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் பேசாதே என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். வாய் இருக்குனு பேசப்போய் என்னவெல்லாம் பிரச்சினை வந்து விடிந்து விட்டது. தான் கண்டதற்கும் கார்த்திக் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே!” ஆருத்ரா மெளனமாக கார்த்திக்கை பார்த்திருக்க, 
“எனக்கு உடம்பு முடியாம போனா அவங்க தூங்கினதே இல்ல. கத்தி குத்து பட்டு ஆஸ்பிடல்ல இருக்கும் போதும் அவங்க வீட்டுல இருந்தாலும் தூங்காம என்ன பத்திதான் நினைச்சுகிட்டு இருப்பாங்கன்னு எனக்கு தெரியும் அதனாலதான் கவிக்கு சொல்லி தூக்க மாத்திரை கொடுக்க சொன்னேன். உனக்கு ஒன்னு தெரியுமா? ராணிமா வந்த பிறகு தேவிமா கவிய பாத்துகிறத விட்டுட்டாங்க என்ன மட்டும் தான் பாத்துக்கிட்டாங்க. கவிக்கு உடம்பு முடியாம போன போது தான் அவ கூட இருந்தாங்க. எனக்கு கவி எவ்வளவு முக்கியமோ அந்த அளவு என் குடும்பத்துல இருக்குற எல்லோரும் முக்கியம் ஆரு….. உன்னையும் சேர்த்துதான் சொல்லுறேன். புரிஞ்சிக்க, 
எங்க அப்பங்க ஆர்மில இருக்குறதால உடல் காயங்கள் எங்களுக்கு சாதாரண விஷயம், அப்பாவும் சரி, பித்யுத் அங்கிளும்  சரி எத்தனையோ தடவ அடிபட்டு ஆஸ்பிடல்ல இருந்திருக்காங்க, உயிருக்கு போராடும் நிலைமையிலும் கூட இருந்திருக்காங்க, ஒரு மிலிட்டரி குடும்பம் என்கிறதாலையே மனோதைரியம் ரொம்ப அதிகம். அது எங்க கிட்ட இருக்கு. அதுக்காக பாசமில்லாதவங்கனு நீயே நினைச்சிக்குவியா? எங்களுக்கும் வலிக்கும், வேதனை இருக்கும் காட்டிக்க மாட்டோம். தேசத்துக்காக வாழுற உயிர் இது. எந்த நேரமும் தேசத்துக்காக துறக்க தயாராக இருப்போம். அப்படி என்கிறதுதான் எங்க கொள்க அப்படி இருக்கும் போது அடிக்கடி போன் பண்ணி அழுது, நலம் விசாரிச்சு ஸீன் போடுறதெல்லாம் எங்களுக்கு தெரியாது, பிடிக்காது. என்ன தேவையோ அது உள்ளபடி விவரம் சேர்ந்துடும். 
எனக்கு கத்தி குத்து பட்டத்தை அப்பா விசாரிக்கலன்னுதானே ஏதேதோ பேசி இருக்க, அவர் விசாரிக்கலைனு உனக்கு தெரியுமா? ஆஸ்பிடல் டாக்டருக்கே போன் பண்ணி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டாரு. கவி வேற ஒருமணித்தியாலத்துக்கு ஒருக்கா என்ன போட்டோ எடுத்து அனுப்பி கிட்டு இருந்தா கவனிக்கலயா?” 
“இதெல்லாம் நடந்ததா? நா எங்க கவிய பார்த்தேன். உன்ன பார்த்ததிலிருந்து அழுது கிட்டுதானே இருந்தேன்” வாய்விட்டே சொல்ல கார்த்திக்கின் உதடுகளில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. 
“சரி எனக்கு என் அம்மா வேணும் என்ன செய்ய போற?” மார்புக்கு குறுக்காக கையை கட்டிக் கொண்டு கார்த்திக் முகத்தை விறைப்பாக வைத்துக் கொள்ள 
வானதியை அலைபேசியில் அழைத்த ஆருத்ரா மன்னிப்பு வேண்டி நின்று உடனே ஊருக்கு வரும் படி கேட்டுக்கொள்ள வானதியும் சரி என்றவள் அடுத்த நாளே ராணியுடன் வந்திறங்கினாள். 
ஆருத்ரா வானதியுடன் அலைபேசியில் பேசிய பின் கார்த்திக் ஆருவுடன் பேசவில்லை. ஆருத்ராவும் தான் செய்த தவறு புரிந்ததால் அவனை தொந்தரவு செய்யவில்லை. வானதி வந்தால் நிலைமை சரியாகும் என்று புரிய அமைதியானாள். 
அவள் நினைத்தது போல் ராணியுடன் வந்த வானதி அவர்களோடு தங்கியது மட்டுமல்லாது ஆருவோடு சகஜமாக நடந்து கொள்வதை பார்த்த பின்னே தான் கார்த்திக் ஆருத்ராவோடு பேசவே ஆரம்பித்தான். 
அவன் வானதியிடம் சென்று ஆரு பேசியது தனக்கு தெரியும் என்றோ, அதற்காக மன்னிப்போ கேட்கவில்லை. கார்த்திக்கு தெரியும் என்று வானத்திற்கு தெரிந்தாலே சங்கடத்துக்கு உள்ளாவாள் என்பதால் அப்பாவிடம் செல்லம் கொஞ்சி விட்டு வந்ததாக கிண்டல் பண்ணி வளர்ப்பு அன்னையிடம் செல்லம் கொஞ்சலானான். 
வானதியும் ஆரு புரிந்து கொண்டாலே அதுவே போதும் என்றதோடு விட்டு விட்டாள். மேலதிகமான கேள்விகளை கேட்டு அவளை குடைத்தெடுக்கவும் இல்லை. அதனால் அவர்களுக்குள் நடந்த ஒன்றும் வானதி அறியாமலே போனாள்.
துக்கத்தை பகிர்ந்தால் குறையும், சந்தோசத்தை பகிர்ந்தால் இரட்டிப்பாகும். மனக்கசப்பை? என்றும் மனதை விட்டு நீங்காமல் முள்ளாய் குத்திக்கொண்டே இருக்கும்.
அந்த சங்கடத்தை கொடுக்க பிடிக்காமல் தான் கார்த்திக் வானதியிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். வானதியும் ஆருத்ரா அறியாமல் பேசுகிறாள் புரிந்து கொண்டாள் தங்களுக்குள் பிரச்சினை வராது என்பதால் மெளனமாக விலகிச் சென்றிருந்தாள். 
அதுபோலவே ஆருத்ராவும் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்ட அடுத்த வினாடி பெட்டி படுக்கையை கட்டியவள் ரயிலேறி தன் மகனிடம் வந்து சேர்ந்தாள். இனி அவர்களுக்குள் எந்த குழப்பமும் வராது என்பது உறுதி. 
இந்த பத்து நாட்களாக கார்த்திக் மாத்திரமன்றி ஆருத்ராவும் வானதி மற்றும் ராணியிடம் செல்லம் கொஞ்ச கவியும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டாள். 
காலையிலையே வரும் அவள் ராணிமாவின் கையால் சாப்பிட்டுவிட்டுதான் கார்த்தி ஆருவோடு காலேஜ் கிளம்பி செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள இன்று காலை வந்தவள் சாப்பிட்டதை வாந்தியெடுத்தது மாத்திரமன்றி தலை சுற்றி விழப்போக பயந்து விட்டான் கார்த்திக். 
உடனே டாக்டரிடம் அழைத்து செல்லலாம் என்று வானதி சொல்ல ஒருநிமிடம் அத்த என்ற ஆரு தன்தைறைக்கு கவியை அழைத்து சென்று கையேடு கர்ப்ப சோதனை துண்டையும் கொடுக்க விழித்தாள் கவி. 
“போ போய் செக் பண்ணிட்டு வா…” 
“ஒருவேளை அப்படியா இருக்குமோ என்று குளியலறைக்குள் புகுந்தவள் மலர்ந்த முகத்தோடு வர உடனே ஜமீனுக்கு தகவல் பறக்க காலையில் வரும் போது நடந்து வந்த கவி காரில் ஜமீனுக்கு அழைத்து செல்லப்பட்டாள்.
கவியை ஆதியின் அறையில் தங்க வைப்பதா? மாடிப்படி ஏற கூடாதே! கீழே தங்க வைக்கலாம் என்று  பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருக்க கவியை கைகளில் ஏந்திய ஆதி மாடிப்படிகளில் ஏறி இருந்தான்.
குழந்தை உண்டான சந்தோசத்தை கணவனோடு பகிர்ந்துகொள்ள கூட முடியவில்லை. அவளை கையில் ஏந்திய தருணம் அனைவரும் இருந்ததால் வெட்கம் பிடுங்கித்தின்ன தலை குனிந்தவள் தான் அறைக்கு வந்ததும் என்ன பேசுவதென்று அவன் முகம் பார்த்து நிற்க முத்தமிட வந்தவனை தடுத்து நிறுத்தியது வரளிநாயகியின் குரல். 
சிரிப்பை அடக்கிய கவி அதன் பின் அன்புத் தொல்லையில் சிக்கி காலேஜ் செல்வத்தையும் மறந்தாள். 
பகல் சாப்பாடு, மாலை சிற்றுண்டி என எல்லாம் அறைக்கே வர அவளை கீழே செல்லவே யாரும் விடவில்லை. 
ஒருவர்மாற்றி ஒருவர் அதை சாப்பிடு இதை சாப்பிடு என்று அன்பு தொல்லை செய்து கொண்டிருக்க அறையில் சிறை வைக்கப்பட்டாள் கவி.
“எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே! கருவுற்றுதானே இருக்கேன்” கவி சந்தேகமாக அன்னையை ஏறிட வானதியின் முகத்தில் சந்தோசத்தோடு கவலை ரேகைகளும் படிந்திருப்பது கவியின் கண்களில் தென்பட 
“பிரசவத்தில் உனக்கு எந்த பிரச்சினையும் வராதுன்னு டாக்டர் சொன்னாலும் ஏதோ கெட்டது நடக்க போவது போலயே மனசு அடிக்குது” 
“மனச போட்டு குழப்பிக்காதமா..” அன்னையை சமாதான படுத்தியவள் இரவு எப்பொழுது வரும் கணவனை எப்பொழுது சந்திப்பது என்று பேராவல் கொண்டாள். 
இரவும் வந்தது ஆனால் அவளின் ஆசை நாயகனைத்தான் காணவில்லை. மூன்று மாதங்களுக்கு இருவரும் தனித்தனியாகத்தான் தூங்க வேண்டுமாம். இது ஜமீன் முறையாம். பல்லை கடித்தாள் கவி. 
ராணி அவளோடு தங்கிக்கொள்ள அவ்வளவு நாளும் கணவனின் அணைப்பில் தூங்கி எந்திரித்தவளுக்கு இன்று தூக்கம் தூர ஓடி இருந்தது.  
கவிக்கு ஆதியின் மேல் கோபம் கோபமாக வந்தது. ஒரு பெண் கருவுற்றதை அறிந்தால் முதல் முதலில் கணவனிடம்தான் பகிர ஆசைப்படுவாள். தனக்கே ஆரு கண்டு பிடித்து சொல்லப் போய்த்தான் தெரியும். சரி கணவனின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசை வராதா? மனைவி கருவுற்று இருக்கிறாளே அவள் அருகில் இருக்க வேண்டும் என்று கூடவா தோன்றவில்லை. ஜமீன் முறையாம் முறை. அவர்கள் சொன்னார்களாம் உடனே இவர் கேட்டுக்    பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி சரி என்று விட்டாராம்” மனதில் ஆதியை அர்ச்சித்துக் கொண்டிருந்தவள்
 “மூன்று மாதம் தன்னால் ஆதியை பிரிந்து இருக்க முடியுமா? பார்க்கவே விடமாட்டாங்க போல இருக்கே! குழந்தை உண்டானதுக்கே இப்படி என்றால் குழந்தை பிறந்த பிறகு?” உள்ளுக்குள் குளிர்ப்பரவ என்ன செய்வதென்று  நகத்தைக் கடிக்கலானாள். 
“கவி என்னடா தூக்கம் வரலையா?” ராணி எழுந்து அமர்ந்து கொள்ள என்ன சொல்வதென்று விளிக்கலானாள் கவி.
இங்கே ஆதியிடம் சீனுவும் அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தான் “என்னடா மாப்புள தூங்காம என்ன பண்ணுற?”
“தூக்கம் வரல வாக்கிங் போறேன்” என்றவன் சீனுவின் ஜன்னலில் இருந்து குதித்து  திருட்டுத்தனமாக நடைபோட்டு தனதறை உள்ள பக்கம் வந்து நின்றவன் மாடிக்கு எப்படி செல்வது என்று யோசிக்க 
“நா வேணா போய் ஏணியை எடுத்து கொண்டு வரட்டுமா?” ஆதியின் தோளில் பதிந்தது ஒரு கை.

Advertisement