Advertisement

அத்தியாயம் 22
கார்த்திக் பதறியடித்துக் கொண்டு ஜமீனை அடைய மதில் சுவறுகளில் எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை தவிர மாளிகையையே கும்மிருட்டில் இருந்தது. காவல்நிலையத்தில்  வேலை முடிந்தும் வீடு செல்ல மனமில்லாது அமர்ந்திருந்தவனுக்கு கவியின் அலைபேசியிலிருந்து குறுந் செய்தி வந்திருக்கவே! அதில் சீக்கிரம் ஜமீன் மாளிகைக்கு வரும் படி இருக்க என்ன விஷயம் என்று கேட்டு பதில் அனுப்பியவனுக்கு பதிலும் வரவில்லை. கவியின் அலைபேசிக்கு அழைத்துப் பார்க்க அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே பதில் வந்தது. கவிக்கு என்ன பிரச்சினையோ என்று அடித்துப்புப் பிடித்து வண்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு வர மாளிகையே இருளில் மூழ்கி இருந்தது. 
 
வழக்கமாக ரவுன்சில் செல்வதால் ஜீப் வண்டியில் டார்ச் லைட் வைத்திருப்பவன் அதை கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான்.  கார்த்திக்கின் சிந்தனையோ “கேட்டில் இருக்கும் காவலாளியும் இல்லை. மாளிகை இருளில் இருக்கு, ஆதி வேற சென்னை போவதாக சொன்னான். அந்த சுபாஷால் வீட்டாருக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ!” என்றிருக்க  உள்மனமோ “அப்படி எதுவும் இருக்காது” என்றது. 
கார்த்திக் உள்ளே அடியெடுத்து வைக்கவும் அத்தனை மின் குமிழ்களும் எரிய வீட்டாரனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாட ஆசுவாசமடைந்தான் கார்த்திக். ஆருத்ராவின் கைகளில் அவனுக்கான பார்த்டே கேக் இருந்தது. முகம் கொள்ளா புன்னகையில் அவள் முகம். அந்த அதீத மின் விளக்குகளின் ஒளியில் தேவதையாய் மனைவி தெரிய கார்த்திக்கின் காதல் மனம் ஒருகணம் நின்று துடித்தது. தலையை உலுக்கிக் கொண்டவன் கவியை  தேட ஆதியின் அருகில் நின்றிருந்தாள் கவிலயா.
கவியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சிக்காகவே ஆருத்தாவின் புறம் அடியெடுத்து வைத்த கார்த்திக் கேக்கின் மீதிருந்த ஒற்றை மெழுகுவர்த்தியை மெதுவாக ஊதியனைக்க அவன் முகத்துக்கு நேராக கேக்கை பிடித்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் முத்திலும் அவன் மூச்ச்சுக்காற்றுப் பட்டு மேனி சிலிர்க்கலானாள். 
எத்தனை நாள் ஒதுக்கம்? எத்தனை நாள் பிரிவு? எத்தனை நாள் ஏக்கம்? கணவனின் மூச்சுக்கு காற்றுப் பட்டதும் அலைக்கழிந்துக் கொண்டிருந்த அவள் மனம் அடங்கி விட்ட மாயம்தான் என்ன? அந்த அளவுக்கு கார்த்திக் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து கொண்டவள் அதை அவன் உணர்ந்து கொள்ளாமல் போனதை நினைத்து ஒரு கணம் மனம் வருந்தினாள். மறுகணமே கணவனோடு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக  இருக்க போகும் தருணத்தை இழக்க விரும்பாமல் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டாள். 
“என்ன பொம்மு. கேக்க உன் கைலயே வைச்சிருக்கியே கட் பண்ண எண்ணமில்லையா?” ஆதி சத்தமாக சொல்ல 
“அப்படியே லவட்டிட்டு வீட்டுக்கு கொண்டு போய்ட போறா மாப்புள. சீக்கிரம் புடுங்கி மேசைல வை” சீனு சொல்லியவாறே ஆருத்ராவின் கையில் இருந்த கேக்கை எடுத்து மேசையில் வைத்து சிறிய கத்தியை கார்த்திக்கின் கையில் கொடுத்தான். 
“இந்த பர்த்டே செலெப்ரேசன் தேவையா?” என்று ஆதியை ஒரு பார்வை பார்த்து வைத்தான் கார்த்திக். அதில் வீட்டில் தனக்கும், ஆருத்ராவுக்குமான பிரச்சினை உட்பட சுபாஷால் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினை, ஆதியின் அப்பாவின் மரணம் வரை இருந்தது. 
கவியின் தோள் மீது கை போட்டு தன் புறம் இழுத்துக் கொண்ட ஆதி கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்தான். அது எல்லா ஏற்பாடும் கவியினுடையது அவள் சந்தோசம் எனக்கு முக்கியம் என்றிருந்தது. கவியின் சந்தோசம் எனக்கும் முக்கியம் எனும் விதமாக புன்னகைத்தான் கார்த்திக். 
“என்ன ஆதி சார். நடு சபைல எல்லாரும் இருக்கும் போது இப்படி பட்டுனு மேல்ல கை போடுறீங்க” கவி அவனிடமிருந்து விலக முயற்சித்தவாறே கெஞ்ச  
ஆதி கை போட்ட நோக்கம் வேறு, கவி தடுமாறவும் வேண்டுமென்றே அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டவன் “என் பொண்டாட்டிமேல கை போட்டேன். யாரும் தப்பா என்ன சொல்லிட போறாங்கன்னு இப்படி நடுங்குற ? எல்லாரும் கார்த்தி மேல தான் கண்ண வச்சிருக்காங்க”
“முதல்ல கைய எடுங்க” என்றவள் ஆதியிடமிருந்து  நழுவி கார்த்திக்கின் அருகில் நின்று கொண்டு ஆதிக்கு நாக்கை துருத்தி பழிப்பு காட்ட ஒரு விரல் கொண்டு மிரட்டினான் ஆதி.
கரகோசத்துக்கு மத்தியில் கார்த்திக் கேக்கை வெட்ட ஆருத்ரா ஆசையாக கணவனின் முகம் நோக்கி நிற்க, முதல் துண்டை கவியின் புறம் நீட்டி இருந்தான் கார்த்திக். ஆருத்ராவின் முகம் விழுந்து விட கவிக்குமே கார்த்திக் மேல் கோபம் வந்தது
“கார்த்தி முதல்ல உன் பொண்டாட்டிக்கு ஊட்டு” கவி கடிந்தவாறே சொல்ல 
“அவ நேத்து வந்தவ கவி நம்ம ப்ரெண்ட்ஷிப் அப்படியா நீ பொறந்ததிலிருந்தே இருக்கே! எப்போதும் முதல் துண்டு உனக்குத்தான் கொடுப்பேன். காலம் காலமாக வந்த பழக்கத்தை உடனே மாத்த முடியுமா?” கார்த்தி ஆருத்ராவை சீண்டவேன்றே சொல்ல 
ஆருத்ராவின் முகம் இன்னும் கறுத்தது. தனக்கு கார்த்திக்கின் மனதில் இடமே இல்லையா என்ற ஏக்கம் பிறந்து தன்மீதே கழிவிரக்கம் ஏற்பட கண்களின் ஓரம் நீர் நிரம்ப ஆரம்பிக்க யாரும் பார்த்து விடாமல் புன்னகைத்தவாறே இமைத்தட்டி உள்ளிழுத்தாள். 
“கார் கீ…. அவ நேத்து வந்தவ தான். ஆனா உன் கூட கடைசி வரைக்கும் வர போறவ அவதான். எங்க சீக்கிரம் ஊட்டு” ஒற்றை வரியில் ஆருத்ராவுக்கும், அவனுக்குமான பந்தத்தை அழகாக சொல்லி அன்னையாய் அவனை மிரட்ட
 அக்கணம் ஆருத்ராவின் மேல் இருந்த கோபம் கூட அவன் கருத்தில் தோன்றவில்லை கேக்கை ஆருத்ராவுக்கு ஊட்டி விட்டவன் அவளின் மலர்ந்த முகம் கண்டு இத்தனை நாள் பிரிவின் தாபம் கிளர்ந்துக் கொண்டு எழ கன்னத்தில் முத்தமிட போனவன் இருக்கும் சூழலை உணர்ந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
“இப்போயாச்சும் என் அம்முக்கு நான் ஊட்டலாம்ல? இல்ல அதுக்கும் ஆதி சார் கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா?” ஆதியை முறைத்தவாறே கேக்க 
“ஏன் டா… நான் ஏதாவது சொன்னேனா? என்ன ஏன் டா நடுல இழுக்குறீங்க? நல்லா வருவீங்க? ஆமா அதென்ன அவளுக்கு மட்டும் ஊட்டுறனு சொல்லுற என்ன எங்களுக்கெல்லாம் வாயில்லயா?” 
“அப்படி போடுடா மாப்பு… போலீஸ்காரன் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணுறான் இங்க கொண்டுவா” சீனு கேக்கை பிடுங்காத குறையாக கொண்டு போக கையில் இருந்த துண்டை ஆதிக்கும் கவிக்கும் ஊட்டி விட்டான் கார்த்திக். 
அவர்களை பாத்திருந்த ஆருத்ராவோ தன்னால் மட்டும் ஆதியை போல் அவர்களின் உறவை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாமைக்கு என்ன காரணம் என்று ஆராயலானாள்.
வீட்டு பெரியவர்கள் பார்ட்டியில் கலந்துக் கொண்டாலும் இளையவர்கள் பேச்சிலையோ, கேக் வெட்டும் நிகழ்ச்சிளையோ கலந்து கொள்ளாமல் ஓரமாக போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருக்க, இளவரசியும் ஆர்வமாக சக்கரநாட்காலியை விட்டிறங்கி சோபாவில் அமர்ந்திருந்தாள். 
அவர்களுக்கு உண்பதற்கான உணவுகளை ஒரு சிறிய மேசை ஏற்பாடு செய்து கொடுத்திருக்க உண்டவாறே இவர்கள் போடும் ஆட்டத்தை பாத்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
“இப்போ தான் மெயின் ஷோ” கவி ப்ரொஜெக்டரையும், ஸ்க்ரீனையும் கொண்டுவந்து வைக்க அதை பொருத்தும் வேலையில் இறங்கினர் ஆதியும், சீனுவும். 
“என்னப்பா எம்.ஜி. ஆரு படம் பார்க்க போறோமா?” வரளிநாயகி நிமிர்ந்து அமர்ந்துக் கொள்ள 
“ஆமா பாட்டி படம் தான். எம்.ஜி ஆர் வரமாட்டாரு  கார்த்திக் தான் வருவான் பரவால்லையா?” சீனு சிரிக்க அவரால் சீனுவை முறைக்க மட்டுமே முடிந்தது. 
“மாப்புள நீங்க படமெல்லாம் நடிச்சிருக்கிறீங்களா? சொல்லவே இல்ல” மேனகை வெகுளியாக கேக்க சக்கரவர்த்தியும் ஆர்வமானார். 
சினிமா ஊருக்குள் பரவ முன்னமே ஜமீனில் சினிமா பாத்தவர்கள் அந்த நியாபகத்தில் ப்ரொஜெக்டரை கண்டதும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை கேட்க சீனு கிண்டலடிக்க ஆரம்பித்தான். 
“கார்த்திக் இவங்க வாய மூடவாவது ஒரு விளம்பர படத்துலயாவது நடிச்சிடு”
“ஏன் டா…” கார்த்திக் கடிய 
“அமைதி அமைதி படம் வரப்போகுது” என்றவாறு கவியின் அருகில் வந்தமர்ந்தான் ஆதி. 
பெரியவர்கள் சோபாவில் அமர்ந்திருக்க, உணவு வைத்திருந்த மேசையை அகற்றி பாயை விரித்து இளையவர்கள் கீழே அமர்ந்து கொள்ள, இளவரசியின் காலின் கீழ் அமர்ந்திருந்தாள் கவி. அவளின் அருகில் ஆதி, சீனு ஆரு கடைசியாக கார்த்திக் அமர்ந்திருந்தனர். 
“அப்படியென்ன படம் காட்ட போறாங்க” மேனகை சக்கரவர்த்தியின் காதை கடிக்க 
“ஒருவேளை மாப்புள திருடனை ஓடிப் போய் புடிச்சத படமா எடுத்து போடுறாரா இருக்கும்” என்று விட்டு சத்தமாக சிரிக்க 
“அப்பா சிரிப்பு வந்தா வெளிய போய் சிரிச்சிட்டுவா… பூச்சாண்டி வந்திருக்கானு ஊருக்குள்ள சாப்பிடாம அட்டகாசம் பண்ணும் குழந்தைகளாவது பயந்து போய் சாப்பிட்டு விட்டு தூங்கிடும்” சீனு சீரியஸ்ஸாக சொல்ல மேனகை கணவனைத்தான் முறைத்தாள். 
திரை தெளிவாகத் தெரியவென மிதமான வெளிச்சம் மட்டும் இருக்க மற்ற எல்லா மின் குமிழ்களும் அனைக்கப்பட்டிருந்தது.  சீனுவின் கையில் தொலையியக்கியை கொடுத்த ஆதி கவியை ஒட்டி அமர்ந்து கொண்டு அவளின் இடது கையை தனது வலது கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொள்ள அவன் தோள் மீது தலை சாய்ந்தாள் கவி. 
கார்த்திக்  ஆருத்ராவின் அருகில் அமரவும் அவன் தோள் லேசாக உரச அவளின் உடலில் ஜிவ்வென்று மின்சார அலைகள் பாய உடல் பதறலானாள். விழியுருத்திப் மெதுவாக அவன் முகம் நோக்க அவனுக்கு அப்படி எந்த தாக்கமும் இல்லை போலும் தள்ளி அமர்ந்தவன் அமைதியாக திரையை நோக்கிக் கொண்டிருந்தான். 
ஆருத்ராவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தள்ளி உட்காரும் அளவுக்கு தான் வேண்டாதவளாகிப் போய் விட்டேனா? கல்யாணமான நாள் முதல் அவனை பிரிந்து இருக்க முடியாதேன்னு அவள் தான் பிதற்றி இருக்கிறாள். அவளோடு கூடிக் கழித்த போதும் சரி, கொஞ்சிக் குலாவிய போதும் சரி கார்த்தி ஒரு தடவையாவது “உன்னை விட்டு இருக்க முடியாது” என்று சொன்னதே இல்லை. 
அன்று நடந்ததற்கு அன்றே மன்னிப்பும் கேட்டு விட்டேன். இன்னும் கோபத்தை இறுகப் பிடித்திருப்பவனை என்னவென்று சொல்வது. தான் தான் கார்த்திக்கை காதலிக்கிறேன் அவன் மனதில் தான் இல்லை. என்ற முடிவுக்கே வந்திருந்தாள் ஆருத்ரா. 
ஆருத்ராவின் அருகில் சங்கடமாகவே அமர்ந்திருந்தான் கார்த்திக். “இப்படி பக்கத்துல ஒட்டி கிட்டு இருந்தா கோபத்தை எப்படி டி இழுத்து பிடிச்சி வைக்கிறது” ஓரக்கண்ணால் அவள் முகம் நோக்க மிதமான வெளிச்சத்தில் அவள் கண்களில் நீர் நிரம்பி பளபளத்தது கார்த்திக்கின் கண்ணில் பட்டு விட கண்ணீரை துடைக்க பரபரக்கும் கையை மறுகையால் பிடித்து அடக்கிக் கொண்டான். 
“பொம்மு நீ ஒரு அடம்பிடிக்கும் குழந்தை அன்னைக்கி என் கண்ணீரை பார்த்து தாங்க முடியாம மன்னிப்பு கேட்டியே ஒழிய கவியையோ, என்னையோ இன்னும் புரிஞ்சிக்கல. அது உன் கண்ணுளையே தெரியுது. இப்போ நான் உன்ன மன்னிச்சி ஏத்து கிட்டா நீ மீண்டும் மீண்டும் அதே தப்ப செய்வ. என் கிட்ட பேசின மாதிரி கவி கிட்ட பேசி வச்சா அவ தாங்க மாட்டா. எனக்கு வேற வழி தெரியல” ஒரு பெருமூச்சு விட்டவனின் கண்ணுக்கு அன்று ஆதி சொன்னதும் வந்து போனது 
“கார்த்திக் ஆரு ரொம்ப செல்லமா வளர்ந்தவ, தன்னோடபொம்மையை யாருக்கும் விட்டுத்தர மாட்டா… யாரும் அத தன்னிடமிருந்து பிடுங்கிடுவாங்களோனு பயத்தினாலையே புத்தி கெட்டு ஏதாவது பண்ணுவா. உன்னையும் அவ அந்த மனநிலைலதான் பாக்குறா அவளை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு” 
“ஆதி நான் பொம்மையும் இல்ல. அவ குழந்தையுமில்ல. நான் அவ புருஷன். யாரும் அவ கிட்ட இருந்து என்ன கழவாண்டி கொண்டு போக போறதுமில்லை. அவளுக்கு சைக்காலஜி ப்ரோப்ளம்னா ட்ரீட்மெண்ட் பண்ணலாம். அவளுக்கு இருக்குறது பிடிவாதம் அத ஒன்னும் பண்ண முடியாதே!”
“சரி இப்போ அவளை ஒதுக்கி வச்சிருக்கிறியே! கடைசி வரைக்கும் இப்படியேவா இருக்க போற?” 
“கண்டிப்பா இல்ல… என்னுடைய கோபம் என்ன? வருத்தம் என்னனு அவ உணர வேணாமா? சொத்துக்காக அவளை கல்யாணம் பின்னதாக பட்டுனு சொல்லிட்டாளே! அவளுக்கிருக்கும் சொத்தை பத்தியோ! ஏன் இந்த ஜமீன் சொத்தை பத்தியோ என்னைக்காவது உன் கிட்ட கேட்டிருப்பேனா? காதலிக்கிறேன்னு சொல்லி கல்யாணம் மட்டும் பண்ணிக்கிட்டா போதாது ஆதி… நம்பிக்கை வேணும் அது அவ கிட்ட இல்லையே!”
“கார்த்திக் நீ ஓவரா யோசிக்கிற அவ கோபத்துல சொன்னது”
“கோபத்துல மனசுல இருந்துதானே வந்தது. அதுவும் கவியையும் என்னையும் போய். அவளுக்கு சந்தேகமா இருந்திருந்தா கல்யாணத்துக்கு முன்னாடி விசாரிச்சு இருக்கணும். இல்ல உன் கிட்ட பேசி இருக்கணும். அவ பேசினது உன் பொண்டாட்டிய மறந்துடாத” 
“ஏத்தி விட பாக்குறியா?” ஆதிக்கு கோபம் கலந்த புன்னகை எட்டிப் பார்த்தது.  கார்த்திக்கிடம் பல தடவை பேசி பார்த்தும் ஒரே மாதிரிதான் தன் முடிவை கூறினான்.
கவியை பேசியது ஆதியின்  உள்ளுக்குள் கனன்றுக் கொண்டு தான் இருக்கின்றது. கோபப்பட்டு ஆருவை அடிப்பதாளையோ! கண்டிப்பதாளையோ! பிரச்சினை இன்னும் பெரிதாகுமே ஒழிய தீர்வாகாது. அக்கணம் அவன் தன் கோபத்தை எவ்வாறு அடக்கிக் கொண்டான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கோபத்தை அடக்கி பொறுமையை கடை பிடித்ததால் தான் ஆருத்ரா பேசியது அவர்கள் மூவரை தவிர இன்று வரை வேறு யாருக்கும்  தெரியவுமில்லை. கார்த்திக்கையும் சமாதானப் படுத்த முடிந்தது. 
ஆதி மட்டும் கோபப்பட்டு பேசி இருந்தால் ஆருத்ரா அழுது கொண்டு ஜமீனுக்கு ஓடி இருப்பாள். நடந்தது அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கவியால் இதை தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா? இவ்வளவு பிரச்சினையிலும் கார்த்திக்கின் பிறந்தநாளைத்தான் கொண்டாட  முடியுமா? 
ஒவ்வொரு தனி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனையும், அவன் சார்ந்தவர்களையும் பாதிக்கும், அதை மனதில் வைத்து செயல் பட்டாலே குடும்பத்தில் வரும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். 
திரையில் கார்த்திக்கின் சிறிய வயது புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்க ஒவ்வொன்றுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருந்தாள் கவி. குடும்பப் புகைப்படங்களும், கவியோடான புகைப்படங்களும் அதில் அடங்கும். 
கார்த்திக்கின் எட்டு வயது புகைப்படமொன்று குர்தா அணிந்து தலையில் பெரிய முண்டாசு கட்டி திலக மிட்டிருக்க, கவி ஐந்து வயதில் சுடிதார் அணிந்து நெற்றியில் திலகமிட்டு கார்த்திக்கு “ராகி” எனும் ராக்ஷ பந்தன் கயிற்றை கட்டிக்க கொண்டிருக்கும் புகைப்படம் அது. 
அந்த புகைப்படத்தை பார்த்ததும் “என் வாழக்கையே புரட்டிப் போட்ட புகைப்படம் இது” கார்த்திக் சொல்ல 
“அப்படி என்ன இருக்கு” சீனு யோசனையாக கேக்க 
“கவி மட்டும் ராகி கட்டலன்னு வை.. தேவிமா… கவிய எனக்கு கட்டி வச்சி இருப்பாங்க” ஆருத்ராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சொல்ல முகம் மாறினாள் ஆருத்ரா. 
“அதென்ன மாப்புள புதுக்கதை?” சக்கரவர்த்தி கதைக் கேக்க 
“புதுக் கதையில மாமா.. எங்கப்பாவும், கவி அப்பாவும் மேங்கோ ப்ரெண்ட்ஸ் இல்லையா அவங்களுக்கு அப்போவே ஒரு ஆச கவிய எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு அப்போவே அவங்க ஆசைல ராக்கிய கட்டி மண்ணை போட்டுட்டா கவி” என்றவன் ராகியை பற்றி விளக்கமளித்தான். 
“ஏன் மா… கவி ஐஞ்சு வயசுல ராகிய காட்டினியே அதற்கு பிறகு கார்த்திக்கை கட்டிக்கணும்னு தோணவே இல்லையா” ஆதிதான் ராகம் பாடியவாறு கேட்டான் 
அவனுக்கு நன்றாகத் தெரியும் அவள் பதில் என்னவாக இருக்கும் என்று. சிறிய வயதில் அறியாமல் ராகியை கட்டி விட பதறிய தேவி கயிறை அந்த கணமே கழற்றி  எறிந்திருந்தாள். கடவுள் கவிக்கும், கார்த்திக்கும் போட்ட முடிச்சு எந்த பந்தத்திலும் அடங்காதது. வானதி தமிழ் நாட்டை சேர்ந்தவள் ராகியை பற்றி பெரிது படுத்தாமல், அறியாமல் செய்து விட்டாள் என்று மனதை தேற்றிக் கொண்டாள். ஆனால் தீப்தி அதை புகைப்படம் எடுத்ததோ, பல வருடங்கள் கடந்து அது புகைப்படமாக கார்த்தி, கவி கைகளில் கிடைத்ததும் அவள் அறியவில்லை. புகைப்படம் கிடைக்காவிட்டாலும் கார்த்திக்கு அந்த சம்பவம் நன்றாக நினைவிருந்தது. புகைப்படத்தை பார்த்த பின்பே கவிக்கு முற்றாக நியாபகத்தில் வந்தது. அதன் பின்னே பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற தயங்கினாள். எல்லாம் கடவுளின் திருவிளையாடல் என்று வானதி அறியாமல் இருந்தாள். 
அவன் தோளில் அடித்த கவி “அப்பாவை யாராச்சும் கல்யாணம் பண்ணுவாங்களா?” இதற்கு மேலும் ஆருத்ராவுக்கு புரியவைக்க தேவை இல்லை என்று ஆதியும், கார்த்திக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
ஆருத்ராவின் மனதில் நிம்மதி பரவுவதற்கு பதிலாக பாரம் ஏறிக்கொண்டது. அன்று கோபத்தில் கார்த்திக்கை பேசும் பொழுது 
  “சி… வெக்கமா இல்ல உங்களுக்கு? கட்டின பொண்டாட்டி முன்னாடியே அவ வயித்த தடவி விடுறீங்க? அவளுக்கு ஒன்னுனா இப்படி துடிக்கிறீங்க? என்ன எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? அவளையே பண்ண வேண்டியதுதானே! ஒரு வேல  சொத்துக்காக தான் என்ன கல்யாணம் பண்ணினீங்களோ! சொத்துக்கு சொத்தும் ஆச்சு. கூடவே உங்க ஆசை நாயகியும்” என்று அவள் வாக்கியத்தை முடிக்கும் முன்பே கார்த்திக் கையை ஓங்கியதில் மருண்ட விழிகளால் அவனை பார்த்தவள் ஆதியின் சத்தத்தில் திகைத்து நின்று விட்டாலே ஒழிய அடுத்து அவள் சொல்ல விளைந்தது “{கவி} அவளுக்கும் நீ இல்லாமல் எந்த வேலையும் ஓடாதே என்னிடம் சவால் விட்டதற்காக அத்தானை கல்யாணம் செய்து கூடவே உன்னையும் வைத்துக் கொண்டிருக்கிறாள்” எவ்வளவு பெரிய வார்த்தை அதை மட்டும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக எனக்கா பேசும் ஆதி அத்தான் கார்த்திக்கிடம் பேசி இருக்கமாட்டார். கவியின் முகத்தை எவ்வாறு பார்ப்பது. 
“கடவுளே! என் கண்கள் அவர்களை தப்பாக என்றுமே பார்க்கவில்லையே! இருந்தும் ஏன் என் நாவில் சனி வந்து இவ்வாறெல்லாம் பேசிவிட்டேன். பெண்களுக்கு பொறுமை ரொம்ப முக்கியம் என்பார்கள் கோபத்தில் வார்த்தையை விட்டு விட்டேனே! அள்ள முடியாமல் தவிக்கின்றேன்! கோபத்தில் தான் சொன்னேன் மனதிலிருந்து சொல்லவில்லை என்று கார்த்திக்கு எப்படி புரிய வைப்பேன்” கரகரவென கண்களிலிருந்து நீர் வழிய முழங்காலில் முகம் புதைத்தவள் கண்ணீரை துடைக்கலானாள். 
ஏற்கனவே சிவந்த நிறம் கொண்டவள் மூக்கும் சிவந்து. முகமும் சிவந்து கண்ணீரை கட்டுப்படுத்த வழி தெரியாமல், அங்கிருந்து எழுந்து செல்லவும் வழி தெரியாமல் தடுமாறி நிற்க கார்த்திக் தண்ணீர் கிளாஸை அவள் புறம் நீட்டி இருந்தான். அதை வாங்கி மடமடவென அருந்தி முடித்தவள் அவனிடமே திருப்பி கொடுக்க அதை பெற்றுக் கொண்டவன் ஆறுதலாக அவளின் கையை பிடித்துக் கொள்ள திரையில் கவியின் பிஎப் கார்த்திக், கார்த்திக்கின் ஜிஎப் கவிலயா என கொட்டை எழுத்தில் பாடசாலை சுவரில் எழுதப்பட்ட புகைப்படம் வர ஆருத்ரா கார்த்திக்கின் முகம் நோக்கி நின்றாள். 
“ஆகா… வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டதே” கார்த்திக் ஆதியை நோக்க 
அவனும் வடிவேல் பாணியில் “என்னது இது?” என்று கவியிடம் கேட்டு கொண்டிருந்தான்.

Advertisement