Advertisement

அத்தியாயம் 20
சீனுவுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, இயக்கி காதில் வைத்தால் மறு பக்கம் மௌனமாகவே இருந்தது. 
“என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு வை உன்ன பொளந்துடுவேண்டா” 
“என்ன சீனு யார் கிட்ட மல்லு கட்டுற?” என்றவாறே உள்ளே நுழைந்தான் வாசு. 
“யார்னே தெரியலடா காலைல இருந்து போன் மேல போன் போட்டு தொல்ல பண்ணுறான். போன் போட்டா பேசணும்ல, பேசாம கடுப்பேத்துறான். அவன் மட்டும் என் கைல மாட்டட்டும் அவனுக்கு இருக்கு. அனைச்சு வைக்கவும் முடியாது. கர்மம் பேசாம இருக்கவும் முடியாது. எம்.எல்.ஏ பி.ஏவா குப்ப கொட்டுறதுக்கு பதிலா மாடு மேய்க்க போலாம்” கருவியவாறே அலைபேசியை வெறிக்க, 
“ஏன் டா… எங்கப்பன் தூக்க ஸ்கெட்ச்சு போட்டு கொடுத்தா… இப்படி கண்டுக்காம இருக்கீங்க, என் திட்டம் என்ன அவ்வளவு இளக்காரமா இருக்கா” 
“சொந்த அப்பனையே கிட்ணப் பண்ண திட்டம் போட்டவனெல்லாம் சூடு சொரணையோடு பேசக் கூடாது. இங்க ஒருத்தன் யோசனைலயே இருக்கான், இன்னொருத்தன் போலீஸ் ஸ்டேஷன் கதின்னு இருக்கான். யார் கிட்ட பேசுறது” சீனு நொந்த குரலில் சொல்ல 
“ஏன் டா ஏதாவது புதுப் பிரச்சினையா இருக்குமோ?”
“எனக்கு தெரியாமலையா?” வாசுவை கிண்டலாக பார்த்தவன் “இது வேறடா… புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல.. பொண்டாட்டி கூட மொத சண்டை போல அதான் இவனுங்க இப்படி இருக்கானுங்க” நாலும் தெரிஞ்சவன் போல் சீனு பேச அவன் அலைபேசி மீண்டும் அடித்தது. 
“இது வேற… மறுபடியும் கூப்டுறான். நீ பேசு” வாசு கையில் கொடுக்க அவனும் “ஹலோ” என்றான் 
“யாரடா இது புதுசா? ஆதி மாமா குரல் இல்லையே” தீப்தி யோசிக்க வாசு பலமுறை “ஹலோ” என்றிருந்தான்
“ஹலோ… மிஸ்டர் சீனிவாசன் இருக்கிறாரா?” 
“டேய் யாரோ பொண்ணுடா… உன்ன மிஸ்டரெல்லாம்  போடுது” வாசு சிரிக்க, 
“இங்க கொடு…” அலைபேசியை வாங்கியவன் காதில் வைக்க மறு பக்கத்தில் முத்தமிடும் சத்தம் கேக்கவே 
“என்ன இது போன்ல கோளாறா? இல்ல நெட்ஒர்க் ப்ரோப்ளமா? என்ன எழவோ” 
“டேய் லூசு கிஸ் பண்ணா அனுபவிக்கனும், ஆராய்ச்சி பண்ணுற?” 
“கிஸ்ஸா… யாருமா நீ? போனுக்கு கிஸ் பண்ணிட்டு என்னமோ எனக்கே கொடுத்தா மாதிரி பொங்குற” 
“நேர்ல வந்தேன் உன் மண்டைலயே போடுவேன்” 
“யேன்மா… நீ யாரென்றே தெரியல, இதுல இவ்வளவு கோபப்படுற? உன் புருஷன் பாவம் மா..”
“அந்த விளங்கா மூஞ்சி நீதான்” 
“ஐயோ எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல” 
“எப்படி ஆகும்? இப்படி தத்தியா இருந்தா கடைசி வரைக்கும் முரட்டு சிங்களாகவே இருந்து சாக வேண்டியதுதான். வை போன” 
“யாரடா… போன்ல ரொமான்டிக்கா பேசிக்கிட்டு இருந்த” வாசு வார 
“ஆ என் பொண்டாட்டி…” கடுப்பான சீனு 
“ஹாஹாஹா இப்போவே சண்டை ஆரம்பிச்சிருச்சா இனி பஞ்சாயத்தை கூட்ட வேண்டியதுதான். அத்து விட வேண்டியதுதான்” 
“டேய் அவ யாரென்றே தெரியல, சும்மா என்ன வெறுப்பேத்துறா? வேல இல்லாதவளெல்லாம் என்ன வச்சி செய்ய கிளம்பிட்டாங்க” 
“கல்யாணத்துக்கு வந்த மைனா ஒன்னு உன் கிட்ட மாட்டிருச்சுனு தோணுது சீனு… சீக்கிரம் கல்யாணமாக வாழ்த்துக்கள். எங்கப்பா குணமாக முன் தூக்கிடுடா” 
“இவன் ஒருத்தன்… நாளைக்கு பண்ணலாம் அவரை கூட்டிட்டு வா” 
“நாளைக்கு மருத்துவர் கிட்ட போற நாள். எப்படியும் மாலை மங்கின பிறகுதான் வீடு வர நேரிடும். அப்போ தூக்கலாம்” 
சீனு சரியெனும் விதமாக தலையசைக்க வாசு வெளியேறினான். 
தீப்திக்கு வீட்டில் தன் கணவனை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை வழங்கப் பட்டிருக்க சீனுவை பார்த்த உடனே பிடித்தும் விட முதலில் தந்தையிடமே கூறினாள். கவியை கட்டிக் கொடுத்த இடத்தில் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்த சம்யுக்த் தம்பியிடம் பகிர, பித்யுத்தும் உடனே ஆதியிடம் பேசிவிட்டான். 
சம்யுத்தும் ராணுவத்தில் இருந்தவன் தான் முழங்காலில் குண்டு பட வேகமாக நடக்கவோ ஓடவோ முடியாமல்  போக இராணுவத்திலிருந்து விலகி டில்லியில் உளவுத்துறையில் கணணிப் பிரிவில் கமிஷ்னராக இருக்கின்றான். 
சம்யுக்த் அண்ணனாக இருந்தாலும் பித்யுத் முதலில் திருமணம் செய்திருக்க, குண்டடி பட்டதில் ஒரு பக்கம் விந்தி விந்தி நடப்பதால் திருமணத்தை தவிர்த்து வந்தவனை கட்டாய படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர் பித்யுத்தும், வானதியும். 
ராணிக்கு மணம் முடித்து வைப்போமா என்று சித்தார்த்தும், பித்யுத்தும் யோசிக்க அவர்கள் கையில் ராக்கியை கட்டியது போல் சம்யுத்தின் கையிலும் ராக்கியை கட்டி அவனையும் அண்ணனாக்கி அவர்களின் ஆசையில் மண்ணை தூவி விட்டாள் ராணி. 
சாந்தினியும் ஆசிரியையாக பணிபுரிபவள். அதுவும் பின் தங்கிய சொந்த ஊரிலையே கடமையாற்ற வேண்டும் என்று பிடிவாதமாக கல்யாணத்தை தள்ளி போட்டுக் கொண்டு இருந்தவள். வானதி இயற்கை விவசாயம், உரம் பற்றிய விழிப்புணர்வும் மாற்று மண் வளம் என்பனவை பற்றி ஆராய்ச்சி செய்ய சாந்தினியின் கிராமத்துக்கு சென்றிருந்த போதுதான் அவளை சந்தித்தாள். 
நாட்டுப் பற்றும், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் எனும் அவளின் நல்லெண்ணமும் மனதை ஈர்க்க சம்யுத்துக்கு பேசலாம் என்று மனம் சொல்ல ஊனமுள்ள ஒருவரை ஏற்பாளா? என்று ஒரு கணம் தோன்ற அமைதியானாள். 
கடவுள் யாருக்கு யாரை முடிச்சு போடுகிறான் என்று அவன் மட்டுமே அறிவான். அந்நேரம் கவியை சுமந்து கொண்டிருந்த வானத்திற்கு பிரசவ வலி வரவே அந்த கிராமத்தில் உள்ள சிறிய மருத்துவமனையிலையே பிறந்தாள் கவி. 
பித்யுத்தால் உடனே வர முடியாமல் போக சம்யுத்தான் கூடவே இருந்து எல்லாம் பார்த்துக் கொண்டான். அப்பொழுதுதான் சாந்தினி, சம்யுத அறிமுகமானார்கள். அவர்களுக்குள் நட்பு மலர்ந்து காதல் மலர்ந்ததா? அல்லது பார்த்த உடனே காதலா?    கவி பிறந்து ஒன்பது மாதங்கள் கடந்த பொழுதுதான் சம்யுத சாந்தினியை பற்றி வீட்டி சொல்லி திருமணமும் செய்து கொண்டான். 
முதல் குழந்தை தீப்தி அப்பா செல்லம் அவள் பிறந்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்தான் கடைக்கு குட்டி யஷ்வந்த். 
வரளிநாயகி   மற்றும் கர்ண விஜயேந்திரனிடம் பேசிய ஆதி அவர்களை சம்மதத்தோடு வீட்டில் மற்றவர்களிடம் பேச கல்யாணத்தில் துரு துறுவென சுற்றிக் கொண்டிருந்தவளை அனைவருக்கும்  பிடித்துப் போனதில் தீப்தியின் படிப்பு முடிந்த உடன் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்ய சம்பந்தப் பட்டவனுக்கோ விஷயம் பகிர படவே இல்லை. அது தீப்தியின் வேண்டுகோள்.
கவியை போலவே அனைவரிடமும் அன்பாக பழகி அனைவரையும் தன் வசப் படுத்தியவள் சீனுவை காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆதியிடம் சொல்ல 
“ரொம்ப கஷ்டம்” என்றதோடு விட்டுவிட்டான். 
ஆருத்ராவோ ஒரு படி மேல் போய் “உனக்கு டில்லி பசங்க  கண்ணுக்கு தெரியலையா? என்றாள்
“மருமகளே என் பையன் பேசியே கொல்வான் ஜாக்கிரதை” என்கிறார் சக்ரவர்த்தி. 
“என் பையன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவான் ஆனா வெள்ள மனசு டி தங்கம்” நெற்றி முறித்தாள் மேனகை. 
ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று புரியாது முழித்தவளோ! சீனுவிடம் பேசிய பின் மொத்தத்தில் சீனுவை காதலிக்க வைப்பதை விட தீப்திக்கு பாடரில் யுத்தம் செய்வது ஈஸி என்று தான் தோன்றியது.
கவி இளவரிசையோடு தோட்டத்தில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் பூக்களை பறிப்பதும், பட்டாம் பூச்சி பிடிப்பதும்  அவர்களின் அன்றாட பொழுது போக்காக மாறி இருக்க, கவி வந்து சிறிது நாட்களிலையே இளவரசியிடம் நல்ல முன்னேற்றம் வர ஆரம்பித்திருந்தது. 
நாட்டு வைத்தியரும் ஆதியிடம் சொன்னதுதான் “மருந்து மாத்திரையால் மட்டும் நோய் குணமாகாது மனசும் அமைதியா ஒத்துழைக்கணும். உங்கம்மா அப்பா போன சோகத்தை விட்டு இன்னும் வெளிய வரல. அதுல இருந்து விடுபடாம அவங்கள குணப்படுத்துறது கஷ்டம் தான்” 
 
 இன்று அனைத்தையும் மறந்து கவியோடு சக்கரை நாட்காலியில் பட்டாம் பூச்சியை பிடிக்க செல்லும் வேகம்தான் என்ன? முகத்தில் பழைய ராஜகலை. மனதில் மகிழ்ச்சி இருந்தால் தான் முகம் ஜொலிக்கும் என்பார்கள் இளவரசியின் முக ஜொலிப்புக்கு காரணம் கவி மட்டும் தான் என்று ஆதிக்கு நன்றாகவே புரிந்தது. அது கவி ஆதியின் மனைவி என்பதால் வந்ததா? இந்த குடும்பத்தின் மருமகள் என்பதலையா? ஆதியின் வாரிசை சுமந்து தனக்கு பேரன், பேத்தியை பெற்றுக் கொடுக்கப் போகிறவள் என்பதினாலயா? அவர்களை பார்த்தவாறே அவர்களின் அருகில் வந்தமர்ந்தான் ஆதி. 
“என்ன அத்தையும், மருமகளும் பட்டாம் பூச்சு புடிச்சி விளையாடினீங்களா?”
“என்ன அத்தையும், மருமகளும்னு உறவை தூரமாக்குறீங்க? என் அம்மாவும் என் பொண்டாட்டியும்னு சொல்லுங்க” கவி அவனை முறைக்க” 
“அப்படி சொல்லு என் தங்கம்” இளவரசி புன்னகைக்க, 
“ஆதி உனக்கு பல்பு கொடுக்க உன் பொண்டாட்டியே போதும் உஷாரா இரு” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன். உறவுகளை சேர்த்துப்  பார்த்த மனைவியை காதலாக பார்த்து வைத்தான். 
கவியின் அலைபேசி அடிக்கவே “அம்மா பேசுறாங்க” என்றவள் அங்கேயே அமர்ந்து பேச  அவளுக்கு தனிமைக்கு கொடுத்துவிட்டு ஆதி இளவரசியின் சக்கர நாட்காலியை தள்ளிக் கொண்டு தோட்டத்தில் வலம் வரலானான். 
“சொல்லுமா… என்ன உன் பொண்ணு நியாபகம் இப்போதான் வருதா? உன் அப்பா கிட்ட செல்லம் கொஞ்சி முடிச்சிட்டியா?” 
“பொறாமை, பொறாமை…” வானதி கவியை கிண்டல் செய்ய சத்தமாக சிரித்த கவி 
“எனக்கு இளவரசி அத்த இருக்காங்க நான் எதுக்கு பொறாமை படப்போறேன்” வானதியை வெறுப்பேற்றத்தான் சொன்னால் அது வானதிக்கு அளவில்லா  சந்தோஷத்தையும், தன் மகள் இனி தனக்கில்லை என்ற சிறு கவலையையும் கொடுத்தது. 
“சரி… அப்பா.. சித் அப்பா எப்போ பாடர் போறாங்களாம்?”
“இன்னும் ரெண்டு நாள்ல போறாங்களாம். மாப்புள கவனிப்பை பார்க்கணுமே! ஐயோ என்னால முடியல… எத்தனை வருஷ கவனிப்பையெல்லா ஒரே வாரத்துல கொட்டுறாங்க” வானதி பிறந்த வீட்டு பெருமை பாட கவிக்கு ஆதியையும் அவ்வாறு அமர வைத்து தாத்தா பரிமாறுவது கண்ணில் வர சிரிப்பு எட்டிப் பார்த்தது. 
“ராணிமா என்ன பண்ணுறாங்க? நான் போன் பண்ணாலும் பேச மாட்டாங்களா? அப்படி என்ன பிசி?” தன்னனுடைய வளர்ப்பு அன்னையை பற்றி விசாரிக்க 
“அதையேன் கேக்குற உன் மாமா பசங்க கூட ஐக்கியமாகிட்டா… அதுங்களுக்கு மருதாணி இடுறதும், தின்பண்டம் செய்றதும், அதுங்களுக்கு மேக்கப் பண்ணுறதும் என்று தன் கைவரிசையை காட்டி மயக்கி வச்சிருக்கா… அதுங்களுக்கு இவ பின்னாடியே அலையுதுங்க”  
“அப்படியா.. சங்கதி… என் கிட்ட மட்டும் பேச நேரம் இல்லையா இருங்க வச்சிக்கிறேன்” பொய்யாக கோபப்பட அலைபேசி ராணியின் கைக்கு மாற்றப் பட்டு சமாதான பேச்சு வார்த்தை ஆரம்பமானது. 
வானதி ஊருக்கு சென்றாலும் அடிக்கடி அலைபேசியில்  கவி, கார்த்திக்கோடு உரையாடி தான் அருகில் இல்லை என்ற குறை தெரியாது பார்த்துக் கொண்டாள்.
ராணியை பிடித்துப் போய் ஊரில் ஒருவர் மனம் முடிக்க விரும்புவதாகவும், ராணி மறுப்பதாகவும் தெரிவித்த வானதி. எப்படியாவது பேசி சம்மதம் வாங்குமாறு கவியை பணிக்க, 
“ராணிமைக்கு இஷ்டம் இல்லனா விடுமா…” என்று சொல்லி வந்தவள் ஆதி தன் வாழ்க்கை துணையாக வந்த பின் ராணியின் வாழ்க்கையிலும் அவளுக்கு துணையாக ஒருவர் இருந்தாள் நன்றாக இருக்கும் என்று முதன் முதலாக எண்ணலானாள்.    
“உனக்கு காவிய ரொம்ப புடிக்குமா ஆதி” சக்கர நாட்காலியை தள்ளிக் கொண்டிருந்த ஆதியின் கையை பற்றிக் கொண்டு இளவரசி அவன் முகம் நோக்கி ஏறிட்டு கேட்க புன்னகையால் பதில் சொன்னான் ஆதி. 
“உன் மனசுல ஆரூவ பத்தின எண்ணங்கள் சின்ன வயசுல இருந்து இருந்திருக்கும். அவ வேற ஒருத்தர விரும்புறானு தெரிஞ்சதும் அவ  ஆசைப்படி விட்டுக் கொடுத்து கவிய கல்யாணம் பண்ணிக் கிட்டியே! என் மகனை நினச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு” இவ்வளவு நாளும் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான் ஆதி கவியின் அந்நியோன்யத்தை பார்த்த பின் தான் இளவரசியால் நிம்மதியாக இருக்க முடிந்தது. 
“அம்மா…. அம்மா… உன் மகன் அப்படி ஒன்னும் நல்லவன் இல்லமா… டில்லிக்கு படிக்க போன இடத்துல ஒரு பொண்ண பார்த்து அவ அழகுல மயங்கி அவளை தேடி காலேஜ் வாசல்ல தவம் இருந்தவம்மா…” நின்றவாறே ஆதி இழுத்து இழுத்து சொல்ல அவனை ஆச்சரியமாக பார்த்தாள் இளவரசி. 
ஜமீன் பரம்பரையின் மகத்துவம். மானம், மரியாதை என்று ஊட்டி வளர்த்தவன் ஒரு பொண்ணு பின்னாடி அலைஞ்சான் என்றால் அந்த தாயால் நம்ம கொஞ்சம் கஷ்டமாக இருக்க 
“ஏய்… என்ன பொய் சொல்லி என்ன ஏமாத்த பாக்கிறியா? இரு கவி கிட்ட சொல்லுறேன். அவ உன்ன செமத்தியா கவனிப்பா” 
அன்னையின் முன்னாள் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன் “பொய் இல்லமா… பார்த்த உடனே புடிச்சிருந்தது அந்த நேரம் அவ கூட பேசணும் னு தான் அவ படிக்கிறதா நினைச்ச காலேஜ் போய் தேடினேன். அங்க அவ இல்லவே இல்ல. அப்பொறம்… என் படிப்பு… அப்பா… ” மேலும் சொல்ல முடியாமல் தொண்டையடைக்க… 
அவனின் லட்ச்சியம், கனவு என்ன என்று அறிந்த இளவரசிக்கு தந்தையோடான அவன் உறவும் நண்பனை போல் என்பதால் இன்னும் மகனால் கணவரின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது புரிந்தது.
“அப்பொறம் மேல சொல்லு” தானும் கவலைக்குள்ளாகி அவனையும் சோகக் கடலில் ஆழ்த்தாமல் உடனே சமாதானமாகி தன் மகனின் மனதில் இருந்தவள் யார் என்று அறிய முற்பட்டாள். 
“அப்பொறம் சென்னைக்கு போன இடத்துல அவளை பார்த்தேன். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலானு தெரிய வந்தது உடனே அவங்கம்மாவை பார்த்து கல்யாணம் பேசி முடிச்சிட்டேன். கல்யாணமும் பண்ணி கிட்டேன்” முகம் கொள்ளா புன்னகையோடு சொல்லி முடிக்க 
“என்னடா… சொல்லுற அந்த பொண்ணு நம்ம கவியா? நிஜமாவா? அப்போ ஆரு கார்த்திக் தம்பி…” என்னதான் ஆதி வீட்டில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி இருந்தாலும் தன் மகனின் குணமறிந்து இளவரசி ஆருதான் கார்த்திக்கை காதலிக்கிறாள் என்றும் ஆதி அவளுக்கு உதவுகிறான் என்றும் புரிந்து அமைதியாக இருந்தாள். 
 தன் மகனின் மனதில் ஆரு இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்க, கவியல்லவா சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறாள். ஆரு என்று நினைத்து பிரச்சினை பண்ணி இருந்திருந்தால் எல்லார் வாழ்க்கையிலும் பிரச்சினை உருவாகி இருந்திருக்கும். இளவரசியின் மௌனமும், பொறுமையும் மகனின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்திருந்தது. 
“கவிதான் மா.. ஆனா உன் மருமகத்தான் என்ன லவ் பண்ணவே மாட்டேங்குறா… “
“என்னப்பா…” 
“கல்யாணம் பண்ண அன்னைக்கே நான் அவளை எங்க? எப்போ? பார்த்தேன். எவ்வளவு லவ் பண்ணுறேன்னு சொன்னேன். இன்னைக்கி வர ஒரு ஐ லவ் யு சொல்லல” 
அவர்களின் நெருக்கத்தை பார்த்த இளவரசிக்கு அவன் சொல்ல விளைவது நன்றாக புரிந்தது 
“என்ன பா… சின்ன குழந்தை மாதிரி… லவ் பண்ணுறேன்னு சொல்லி கிட்டே இருந்தா தான் காதலிக்கிறதா அர்த்தமா…. செயல்ல காட்டுறா இல்ல அது போதாதா?”
“பத்தலையே! மனசு கேக்க மாட்டேங்குதே! பெரிய குறையா தெரியுதுதே!! நான் என்ன செய்ய” எதையோ இழந்தவனை போல் வார்த்தைகளை  கோர்த்து கோர்த்து சொன்னவன் அறியவில்லை எந்த நிலைமையில் கவி தன் மனதில் உள்ள காதலை அவனிடம் சொல்ல விளைவாள் என்றும், 
 இரத்த வெள்ளத்தில் கவியை கண்டு கண்களில் நீர் வழிய ஆதி கதற போகிறான் என்றும். அந்த நேரத்தில் “பேசாதே லயா” என்பதை தவிர அவனால் ஒன்றுமே சொல்ல முடியாமல் தவிக்க போகிறான் என்றும். 
அந்த குடோனில் கை, கால் கட்டப் பட்ட நிலையில், கண்களும் கட்டப் பட்டு ஒரு துணிப் பையால் முகத்தை மூடி இருக்க,  கதிரையில் அமர்த்தப் பட்டிருந்தார் பச்சைமுத்து. 
‘டேய் யாரடா… யார் டா… என்ன கடத்தினது… என் மகன் எங்கடா….”
“அப்பா… காப்பாத்துப்பா… வாசு  அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தவாறு பாப்ஜி   விளையாடிக் கொண்டே கதறுவதை போல் குரல் கொடுக்க கலவரமடைந்தார் பச்சைமுத்து. 
நாட்டு வைத்தியரை பார்த்து விட்டு வரும் பொழுது வண்டியின் சக்கரத்தை பஞ்சர் செய்து அதை வாசு சரி பார்க்க இறங்க சீனுவால் கடத்தப் பட்டார் பச்சைமுத்து. 
எல்லாம் வாசு போட்ட திட்டம் தான். தந்தையின் முகத்தை மூடி தன்னை  டாச்சேர் செய்வது போல் பாசாங்கு செய்தால் உண்மையை கக்குவார்  என்பது வாசுவின் ஊகம். 
அதற்காக இந்த குடோன் தான் சரியான இடம் என்று தேர்வு செய்த சீனு ஆதியின் உத்தரவின் படி ஆதி, கார்த்திக் வரவுக்காக கார்த்திருந்தனர். பச்சைமுத்து வாய் திறந்தால் ஆதியின் தந்தை தேவசகாயத்தின் மரணம் எவ்வாறு நிகழ்ந்ததென்ற உண்மை வெளியே வரும் அது கவியை மரணம் வரை இழுத்து செல்லும்   என்று இவர்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். 

Advertisement