Advertisement

அத்தியாயம் 19
கார்த்திக் கொலை வழக்கில் பிசியாக ஆதி சீனுவோடு சென்னைக்கு கிளம்பி சென்றிருந்தான். அது சுபாஷின் தொழில்களையும், அதில் அவன் செய்து வைத்திருக்கும் குளறுபடிகளை அலசி ஆராய்வதற்கே! 
ஆதியின் செல்வாக்கை பயன் படுத்தி போலீஸ் புகார்களை பெற்றுக் கொண்டவன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, தானே நேரில் சென்று அவர்களை சந்தித்து பல தகவல்களை திரட்டலானான். 
கவியோடு அலைபேசியில் கூட உரையாட நேரமில்லாது வேலையில் மூழ்கியவன் வாய்ஸ் மெசேஜ் மாத்திரம் அனுப்பிக் கொண்டிருக்க கவிதான் கணவனின் அருகாமை இல்லாமல் தவிக்க ஆரம்பித்தாள். 
ஒரு கட்டத்திற்கு மேல் வாய்விட்டே வீட்டுக்கு வரும் படி சொல்லி விட ஆதிக்கும் அவளை பார்த்தால் தேவலாம் என செய்து கொண்டிருந்த வேலையை சீனு மற்றும் வாசுவிடம் ஒப்படைத்து விட்டு தனியாக வண்டியோட்டிக் கொண்டு தஞ்சையை அடைந்தான்.
கவிக்காக மல்லிகை பூவை ஆசையாசையாக வாங்கி வந்தவன் அவள் அறையில் இல்லாது போகவே “இந்த லயா எங்க போனா?” வீடு முழுவதும் கவியை தேடிய ஆதித்யா அவளது அலைபேசிக்கு அழைக்க அது கட்டிலில் கிடந்தது. இந்த நள்ளிரவில் அவள் எங்கே சென்றாள் மனது அடிக்க ஆரம்பிக்க அவனது அலைபேசியும் அடித்தது. ஆரு தான் அழைத்திருந்தாள்.
லயாவையும் காணவில்லை. இவள் வேறு அழைக்கிறாளே! என்ன பிரச்சினை என்று மனம் பதற “சொல்லு பொம்மு. என்ன இந்த நேரத்துல” மனம் பதறினாலும் குரலில் கொஞ்சமேனும் பதட்டம் இல்ல. மறுபக்க செய்தியை வைத்தே அவன் எதிர்வினை பிரதிபலிக்கும்
“உன் பொண்டாட்டி என் புருஷன் மடில கொஞ்சி கிட்டு இருக்கா” அத்தான் என்று செல்லம் கொஞ்சுபவள் எடுத்த எடுப்பிளையே! கோபமாக பேசி அலைபேசியை அனைத்திருந்தாள்.
“இந்த நேரத்துல அங்க எதுக்கு போனா? ஆருவின் பேச்சும் சரியில்லை” யோசித்தவாறே பின்னாடி தோட்டம் வழியாக நடந்தவன் கார்த்திக்கின் வீட்டை அடைய ஆருத்ரா கதவை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள். 
ஆதி உள்ளே வரவும் வழி விட்டவள், கண்கள் சிவக்க, கோபமூச்சுக்களை வாங்கியவாறு அங்கேயே நிற்க 
அத்தை மகளின் கோபம் அணைக்க பாசம் தலை தூக்கினாலும் அவனின் காதல் கொண்ட மனம் மனைவியின் நிலையை அறிய ஆவல் கொண்டு  “லயா எங்க?” ஆதியின் கேள்விக்கு மாடிப்படியை காட்டியவள் கோபமான முகத்தோடு கதவை சாத்தலானாள். 
மாடிப்படிகளில் தாவி ஏறிய ஆதி கார்த்திக்கின் அறையை அடைய அவனோ முதுகுக்கு ஒரு தலையணையை வைத்து  கால் நீட்டி கட்டிலில் அமர்ந்திருக்க அவன் மடியில் தலை வைத்து தூங்கி இருந்தாள் கவி. கார்த்திக்கின் கையோ அவளின் தலையை வாஞ்சையாக தடவிக் கொண்டிருந்தது.
“என்ன இவ சொல்லாம கொள்ளாம இங்க வந்திருக்கிறா?” என்ற எண்ணம் தோன்ற உள்ளே வந்தவன் கார்த்திக்கிடம் “என்ன” என்று செய்கை மூலம் கேக்க 
“அவளுக்கு பீரியட்ஸ் டைம் ரொம்ப வயிறு வலிச்சதுன்னா என் மடில தான் தூங்குவா. நீ வேற ஊர்ல இல்லையா அதான் என்ன தேடி வந்துட்டா. ” வழக்கமாக என்றும் நடப்பது தான் இருந்தாலும் ஆதி என்ன நினைப்பானோ என்று சங்கடமாகவே கார்த்தி சொல்ல
 
கைகளை மார்ப்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு மனைவியையே பாத்திருந்தவன் தன்னை அவள் தேடிய காரணம் புரிய கணவனாக கர்வம் கொண்டாலும், அவளின் சங்கடமான நேரத்தில் கூட அவளருகில் தன்னால் இருக்க முடியவில்லையே! என்ற குற்ற உணர்ச்சியும் தலைத்தூக்க புருவம் நீவியவன் “அவ இங்கயே தூங்கட்டும் கார்த்தி” என்று விட 
“அப்போ நீயும் இங்கயே இரு, நானும் ஆருவும் பக்கத்து அறையில் தூங்குறோம்” ஆதியின் பதிலை எதிர்பாராது கவியின் தலைக்கு  தலைகாணியை வைத்தவன் சிறு புன்னகையை சிந்தியவாறே கதவை சாத்திக் கொண்டு வெளியேறினான்.
கவியின் அருகில் வந்த ஆதி வேதனையில் சுருங்கியவாறே தூங்கும் மனைவியின் முகத்தில் இருந்த முடிகளை காதோரம் ஒதுக்கியவன் அவளின் நெற்றியில் முத்த மிட்டு. “சாரி டி. இந்த மாதிரி நேரத்துல கூட உன் பக்கத்துல, உனக்கு ஆறுதலா நிற்க முடியாம போய்ட்டேன். என்ன எவ்வளவு தேடியிருந்தா வாய் விட்டே வானு கூப்பிட்டிருப்ப. உன்ன நல்லா பாத்துக்கணும். எந்த குறையுமே இருக்கக் கூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனா வேலைல மூழ்கினா எல்லாத்தையும் மறந்துடுறேன் டி. உன் மனசுல கார்த்திக்கு தான் எப்போவும் முதலிடம் நான் உன்ன காதலிச்சாலும், நீ என்ன காதலிக்கலையோ னு சில நேரம் தோணும்.  நீ இன்னைக்கு என்ன தேடுனதுல நான் தான் உன் மனசுல முழுசா இருக்கேனு புரிஞ்சிக்கிட்டேன். லவ் யு டி பட்டு” அவளின் கைகளை வருடியவாறே பேசிக் கொண்டிருந்தான் ஆதி.
இங்கே கார்த்திக் வெளியே வரவும் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ஆரு. அவளை பொருட்படுத்தாது மற்ற அறையினுள் கார்த்திக் நுழைய கணவனின் புறக்கணிப்பில் ஆருத்ராவின் கோபம் பன்மடங்காக பெறுக அவன் பின்னாலையே வந்தவள் “சி… வெக்கமா இல்ல உங்களுக்கு? கட்டின பொண்டாட்டி முன்னாடியே அவ வயித்த தடவி விடுறீங்க? அவளுக்கு ஒன்னுனா இப்படி துடிக்கிறீங்க? என்ன எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? அவளையே பண்ண வேண்டியதுதானே! ஒரு வேல  சொத்துக்காக தான் என்ன கல்யாணம் பண்ணினீங்களோ! சொத்துக்கு சொத்தும் ஆச்சு. கூடவே உங்க ஆசை நாயகியும்” ஆரு தன் வாக்கியத்தை முடிக்கவில்லை ஆருவை அடிக்க கை ஓங்கி இருந்தான் கார்த்திக். 
அறையில் நுழைந்த உடன் ஆருத்ரா பேச ஆரம்பிக்கவும், திகைத்தவன் அவள் கடைசியாக சொன்ன வாக்கியத்தில் ருத்ரமூர்த்தியாகவே மாறி இருந்தான். கையில் ஒரு அருவாள் இருந்திருந்தால் மனைவியை வெட்டி சாய்த்திருப்பான். அவனின் துப்பாக்கி வேறு அறையில் இருக்க ஆருவின் உயிர் தப்பியது. கணவனின் ஓங்கிய கை அவள் கன்னத்தில் விழுந்திருந்தால் கண்டிப்பாக கடைவாய் பல் கழன்று தெறித்திருக்கும். ஆதியின் “பொம்மு” என்ற அதட்டல் குரலே கார்த்தியை சுயநினைவுக்கு வர வைத்திருந்தது.
 
ஆருத்ரா ஜமீனின் ஒரே பெண் வாரிசாகக்கிப் போக அனைவரினதும் செல்லமானாள். அவள் எது கேட்டாலும் உடனே கிடைக்க, அதுவே அவளை அடம்பிடிக்கும் குழந்தையாக மாற்றி இருந்தது. பணமும் குவிந்துக் கிடக்க அவள் ஆசையாக கை நீட்டுபவைகளெல்லாம் கிடைக்கவே! தான் எது நினைத்தாலும் நடக்க வேண்டும், எது கேட்டாலும் கிடைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டாள். 
அதுவே தான் கார்த்திக்கின் விஷயத்திலும் நடந்திருந்தது. கார்த்திக்கை பார்த்த உடன் பிடித்து விட்டது. அது காதல் தான் என்று முடிவு செய்து யாரிடம் கூறினால் கார்த்திக் கிடைப்பான், என்று அறிந்தவளாக ஆதியிடம் கூற ஆதியும் கவியை காதலிப்பதால் ஆருவின் மனநிலையையே! அவளின் குணத்தையோ! அக்கணம் மறந்து கார்த்திக், ஆரு கல்யாணத்தை நடாத்தினான்.
ஆருவின் மனநிலையே! தனது பொம்மையை யாரிடமும் பகிர பிடிக்காத குழந்தையின் மனநிலை. கார்த்திக் தனக்கு மட்டும் தான் சொந்தம். தன்னை தவிர பிறர் உரிமையோ! உறவோ கொண்டாடக் கூடாதென்ற எண்ணம். 
அதே போல் கார்த்திக்கும் தன்னை தவிர பிறரிடம் அதிக உரிமையும் எடுத்துக் கொள்ள கூடாது, தனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன்னையே சுற்றிவர வேண்டும்  என்ற எண்ணப் போக்கை வளர்த்து வைத்திருந்தாள்.
இரண்டு நாட்களாக வீடு வராத கணவன் வீடு வரவும் தங்களது சந்தோஷமான நேரத்தில் குறுக்கிட்ட கவியின் மேல் கோபம் கொண்டவள். கார்த்திக் கவிக்கு சேவகம் செய்வதைக் கண்டு அவளின் ஆழ்மன குணம் அவளை சீண்டியிருக்க, ஆதியை அழைத்தவள். கார்த்திக் மனதில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தப்பாக அர்த்தமிட்டு பேசி இருந்தாள். 
அவள் மனதில் அப்படி எந்த சந்தேகமும் இல்லை. கோபம், ஆத்திரம் கண்ணை மறைக்க யாரிடம் என்ன பேசுறோம், அவர்களின் மனம் புண்படுமா என்ற சிந்தனையில்லாமல், அறிவிழந்து வார்த்தையை கொட்டி இருந்தாள். 
ஆரு தனதறையை பகிர சம்மதிக்க மாட்டாள் என்று அவளை அறிந்து வைத்திருந்த ஆதித்யா அவர்கள் வேறொரு அறையில் தூங்க போவதாக சொல்லலாம் என்று வெளியே வந்தவன் ஆருத்ராவின் ஆவேச குரலில் என்ன ஏதோ என்று  கதவை திறந்துக் கொண்டு அறையில் நுழைய ஆதியின் காதிலும் அவள் கடைசியாக பேசியது தெளிவாக விழவே “பொம்மு” என்று கத்தி இருந்தான்.
“பொம்மு என்ன பேசுற? நீ உன் புருஷன மாத்திரம் அசிங்க படுத்தல என் பொண்டாட்டியையும் சேர்த்து அசிங்க படுத்துற” கர்ஜனை குரலில் சீறினான் ஆதி.
இன்று பேசா விட்டால் என்றுமே பேச முடியாது என்ற ஆதங்கம் ஆருவிடம் “இவருக்கு என்றைக்குமே!  கவிக்கு பிறகுதான் நான். அத்தான் நீ இப்படியே கூறு கெட்டு கண்ண மூடி கிட்டு இரு, இவங்க ரெண்டு பேரும் எங்க கண் முன்னாடியே கொஞ்சி குலாவட்டும்” என்றவள் கட்டிலில் தொப்பென்று அமர்ந்து கண்ணீர் வடிக்கலானாள்.
தான் பேசியதில் கணவன் மனது கலங்கி இருக்கும் என்று நினைக்காமல். இத்தனை நாள் வாழ்க்கையில் கணவனையோ! கவியையோ! அவர்களின் உறவையே! புரிந்துக் கொள்ள முயற்சி செய்யாமல் தன் நிலையை மாத்திரம் நினைத்து கதறி அழுது கொண்டிருந்தாள்.
தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த கார்த்திக் “ஏன் ஆதி நீங்களும் எங்களை சந்தேக படுறீங்களா?” வருத்தம் தோய்ந்த குரலில்  ஆதியை ஏறிட்டவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 
கவி, கார்த்திக் உறவை நன்கு புரிந்து கொண்டிருந்தவனோ! தனக்கும் கவிக்கும் இடையில் கார்த்திக்கால் எந்த பிரச்சினையும் வரவே வராது என்று நன்கு  அறிந்திருந்தமையால் அவன் அச்சமெல்லாம் எங்கே ஆருவுக்கும், கார்த்திக்கும் இடையில் பிளவு வந்து விடுமோ என்றிருக்க,
“கார்த்தி பொம்மு ஏதோ ஒரு கோபத்துல புரியாம பேசுறா, ப்ளீஸ் அவளை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு” ஆதி கெஞ்சலாக கார்த்தியை பார்க்க
“யாராவது அம்மா, பொண்ணு  கூட தப்பு பண்ணுவாங்களா? அவ எனக்கு அம்மா…..” சொல்லும் போதே! தொண்டையடைத்து குரல் கனத்து ஒலித்தது.
கண்களை துடைத்துக் கொண்டவன் “தேவிமா… எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பாத்தப்போ நா மறுத்த ஒரே காரணம் கவி எனக்கு அம்மா என்கிறதால மட்டும் தான்” கம்பீரமான கர்ஜனைக் குரலில் தெளிவாக சொல்லிவிட்டு
ஆழமாக மூச்செடுத்து நெஞ்சை நீவிக் கொண்டவன்  “அவ தேவிமா வயித்துல இருக்கும் போதே “உன் அம்மா திரும்பி பொறப்பாங்க” னு அப்பா சொன்னதை நம்பினேன். தேவதை போல கவி கிடைச்சா. என் அம்மாவே கவி ரூபத்துல பொறந்தா சந்தோஷப்பட்டேன்” கவியை கையில்  ஏந்திய தருணம் அவன் கண்களுக்குள் வர   முகம் புன்னகையை தத்தெடுத்தது.
“சின்ன வயசுல அவளுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவுன்னு டாக்டர் சொன்னாங்க. எட்டு வயசுல மஞ்சள் காமாலை, அம்மை, டெங்கு மூணு ஒரேயடியா வந்து படுத்த படுத்த படுக்கையாகிட்டா. மருந்து மாத்திரனு பக்கவிளைவால அவளுடைய ஒரு கிட்னி வேலை நிறுத்தம் செய்ய ஆபரேஷன் பண்ணி அகற்ற வேண்டியதா போச்சு”    வெறுமையான குரலில் பேசிக் கொண்டே போக வானதி சொன்னதுதான். ஆருவுக்காக ஆதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
என் அம்மா திரும்ப என்ன விட்டுட்டு போக கூடாதென்று அவளை அப்படி பாத்து கிட்டேன். வளர வளர மறுபிறப்பு பத்தி பெருசா நம்பிக்கை இல்லாம போச்சு. அவ என்ன விட சின்னவ இல்லையா அவள என் பொண்ணா பாத்தேன். அவ வயசுக்கு வந்த பிறகு மாசாமாசம் வயித்து வழில துடிக்கிறப்போ அவளை விட நான் துடிச்சேன். கல்யாணம் ஆகி குழந்தை பொறந்தா இந்த பிரச்சினை சரியாகிடும் னு டாக்டர் சொன்ன பிறகு தான் நிம்மதியானோம். அவளால ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியாம போய் இருந்தா கண்டிப்பா நானே  அவளை கல்யாணம் பண்ணி கடைசி வர கூடவே காவலனா இருந்திருப்பேன்.   அவளுக்கு எல்லாமா நானா இருந்தேன். நல்ல நண்பனா, அண்ணாவா, அப்பாவா…  எந்த இடத்துலயும், யார் கிட்டயும் விட்டு கொடுக்கல. ஆதி அவ வாழ்க்கைல வந்த பிறகுதான் என் தலையில இருந்த பாரமே குறைஞ்சுப் போச்சு. நீ அவளை நல்லா பார்த்துப்ப என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் ஆரு கூட என் வாழ்க்கையை சந்தோசமா தொடங்கவே முடிஞ்சது. அவ என் கூட பொறந்திருந்தா ஆரு இப்படி பேசி இருக்க மாட்டால்ல” கண்ணீர் வழிய பேசுபவனை ஆறுதல் படுத்த முடியாமல் ஆதி நிற்க ஆருத்ரா திகைத்து நின்று விட்டாள்.
கார்த்திக் பேசப் பேச தான் பேசியதன் வீரியம் ஆருவுக்கு புரிய மேலும் கதறி அழலானாள். கண்களில் நீர் வடிய அமர்ந்திருந்த கார்த்திக்கின் காலைக் கட்டிக்க கொண்டு “கார்த்தி என்ன மன்னிச்சிச்சு, மன்னிச்சுடு” ஆருத்ரா கதற அவள் பேசிய வார்த்தைகள் அவன் காதில் ஒழித்துக் கொண்டிருக்க ஆருத்ராவின் கதறல்கள் காதில்  விழவே இல்ல. அவளை வெறித்த பார்வை பார்த்து அமர்ந்திருந்தான்.
ஆதிக்கும் தெரிஞ்ச விஷயம் தான். கவியை பெண் கேட்டு வானதியிடம் சென்ற பொழுது எல்லா உண்மையையும் மறைக்காது சொல்லி இருந்தாள் வானதி. 
கவியின் உடல்நிலையைக் கொண்டுதான் கார்த்திக்கு கவியை மனம் செய்து வைக்க என்ன அதுவே நாளடைவில் அவர்களின் ஆசையாகிப் போனது. எப்படியாவது இந்த திருமணம் நடக்கும் என்றிருக்கும் பொழுது தான் ஆதி வந்து பெண் கேட்டான். 
தான் கவியை சந்தித்ததையும், காதல் கொண்டதையும் கூற ஆதியை நன்கறிருந்து இருந்தமையால் உண்மையை வானதி கூறி கவி வாழ்வில் பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க கார்த்திக் தான் அவளுக்கு சரியான துணைவனாக இருக்க முடியும் என்று ஆதிக்கு புரிய வைக்க முயல.  
கவி எந்த நிலையில் இருந்தாலும் அவள் தான் எனக்கு மனைவி என்று உறுதியாக இருந்தான் ஆதி. 
அத்தோடு கார்த்திக், கவி உறவை பற்றி அலசி ஆராய்ந்து விட்டே சென்றிருந்தததால். கண்டிப்பாக கல்யாணம் செய்து வைத்தால் அவர்கள் சந்தோசமாக வாழ மாட்டார்கள் என்றும் கூற, யோசனையில் விழுந்த வானதி கார்த்திக்கின் வாழ்க்கையை நினைத்து கவலைக் கொள்ள ஆருத்ராவை பற்றியும் கார்த்திக் மீதான அவளுடைய காதல் பற்றியும் எடுத்து கூறிய பின்னே இந்த திருமணத்துக்கு சம்மதித்த வானதியிடம் கவியை பற்றி வீட்டில் தானே சொல்லி விடுகிறேன் என்று விட இல்லை தானே  பேசுவதாக மறுத்த வானதியிடம் பேசும் விதத்தில் பேசி சம்மதம் வாங்கியவன் வீட்டாரிடம் அதை பற்றி மூச்சு விடவில்லை.
கவியின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் வானதியிடம் பெற்றுக் கொண்டு இந்தியாவிலையே தலை சிறந்த மருத்துவரை அணுகி, அவளுடனான தாம்பத்திய வாழ்க்கை, மற்றும் குழந்தை பிறப்பை பற்றி தெளிவு பெற்ற பின்னே அச்சம் நீங்கி கவியுடனான வாழ்க்கையை  ஆரம்பித்தான். 
கவி கார்த்திக் உறவை அவன் என்றுமே சந்தேகப் பட்டதும் இல்லை. கொச்சை படுத்த நினைத்ததுமில்லை. ஆருத்ரா ஆத்திரத்தில் வார்த்தையை விட்டிருக்க, கார்த்திக்கை எவ்வாறு சமாதானப் படுத்துவதென்றே யோசிக்கலானான். 
கார்த்திக்கு கவி எப்படியோ! ஆதிக்கும் ஆரு அப்படியே! அவனுக்கு அவள் குட்டித் தங்கை. உறவுமுறை, என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் மனதில் இருப்பதுதான் உண்மையான உறவு. 
ஆரு ஆதியை விரும்பி இருந்தால் அவன் மறுத்தால் கூட அவனை அடைந்திருப்பாள். அவ்வளவு பிடிவாதம் பிடிப்பவள் ஆருத்ரா. 
கார்த்திக்கை காதலிப்பதாக வந்து நின்ற போது கூட கார்த்திக்கின் கழுத்தில் கத்தி வைத்தாவது அவனை கல்யாணம் செய்து கொள்வாளே ஒழிய அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள். 
கவி கார்த்திக் உறவை பற்றி ஆதி தெளிவாக ஆருவிடம் சொல்லி இருந்தான். கவி தன் மனைவி என்றானால் கல்யாணத்துக்கு பின் அவர்களிடையே நல்ல உறவு இருக்கும். புரிந்துக் கொள்வாள் என்று ஆதி நினைக்க இப்படி வார்த்தையை விட்டு விடுவாள் இரு அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆருவும் கோபத்தில் பேசிவிட்டாளே ஒழிய அவள் மனதி அப்படி எந்த எண்ணமும் இல்லையென்று கார்த்திக்கு எவ்வாறு புரிய வைப்பது ஆதிக்கு தலை பாறாங்கல் போல் கனத்து வலிக்க அவனும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திரு விட்டான். இது எதுவுமே அறியாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் கவிலாயா.

Advertisement