Advertisement

உறவால் உயிரானவள் 16
மெதுவாக கண்களை திறந்த கவி தான் எங்கே இருக்கின்றோம் என்று புரிய அன்னை சொன்னதும் நியாபகத்தில் வந்தது. 
“காலையிலையே எந்திரிச்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு உன் கையாள எல்லாருக்கும் காபி போட்டு குடுக்கணும்” 
“காபி மட்டுமா? டிபன், லன்ச் எல்லாம் செய்யணுமா? அப்பொறம் வாச்சது ஒரு மருமக அடிமைனு நல்லா கொடும படுத்துவங்க” கவி கண்சிமிட்டி குறும்பாக சிரிக்க, 
“இந்த வாய் கொழுப்புதான் அடங்க மாட்டேங்குது,  இருடி மாப்பிள்ளைக்கிட்ட சொல்லியே வாயிலையே ரெண்டு போட சொல்லுறேன்” 
“போடுவாரு, போடுவாரு” அன்று கேலியாக சொன்னது இன்று அவன் முத்தம் தந்த தித்திப்பு நியாபகத்தில் வர முகம் வெக்கத்தை தத்தெடுத்தது. 
கண்ணாடியினூடாக அவளின் முகச் சிவப்பை  ரசித்தவாறே “என்ன லயா கண்ணை திறந்துக்கிட்டே கனவு காணுற”  என்ற ஆதியின் குரல் பக்கவாட்டில் ஒலிக்க கவி கண்களை அவன் பக்கம் திருப்பினாள்.   
ஆதி இடுப்பில் துண்டுடன் கண்ணாடியின் முன் நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்தான். அவனின் உடலில் இருந்த ஈர மினுமினுப்பு, அவன் குளித்துவிட்டான் என்பதை பறை சாற்ற, அருகிலிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள்,
“என்னங்க மணி ஆறு கூட ஆகல. குட் மோர்னிங்” என்றவாறே எழுந்தமர்ந்தவள்
“என்ன இது ட்ரெஸ்ஸு போட மொதல்ல தலை வாருறீங்க” 
“சின்ன வயசுல எங்கம்மா என்ன குளிப்பாட்டி தலைதுவட்டின உடனே எண்ணெய் தடவி தலைவாரி விடுவாங்க.  பழகிருச்சு” என்று புன்னகைத்தவாறே அவளருகில் அமர்ந்த ஆதி தன் நெற்றியை அவள் நெற்றியோடு செல்லமாய் முட்டி அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தவாறே “குட் மார்னிங் மேடம்..” என்றவன் அவளின் கைகளை பிடித்துக் கொண்டு 
“என் வாழ்க்கைல என் படிப்பை தவிர மத்ததெல்லாம் வீட்டாரோட இஷ்டம் என்று இருந்துட்டேன். அதனாலதான் உன்ன தேட கூட முயற்சி செய்யல. வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தால் சந்தோசமா வாழ்ந்திருப்பேனா? இல்ல வாழ்க பூரா சந்தோசமா இருக்குற மாதிரி நடிச்சிருப்பேனா னு தெரியல. ஆனா கண்டிப்பா மனசுல ஒரு குறை இருந்துக் கிட்டே தான் இருக்கும். நீ என் வாழ்க்கைல வந்த சந்தோசம் இருக்கே! இதுக்கு மேல ஒரு சந்தோசம் உலகத்துல இருக்கா தெரியல. அப்படி ஏதாவது இருந்தாலும் அதெல்லாம் உன்னைவிட பெருசா இருக்காது. என்னோட வாழ்கையில முதல் முறையா ஒரு முழுமையான இரவு. அது உன்னோட உறவால தான் அமைஞ்சிருக்கு. என் வாழ்க்கைல வந்து என் உயிருல கலந்து, என்னை முழுமையடைய செய்ததற்கு ரொம்ப நன்றி லயா… எனக்கு எவ்வளவு அதிசயமா இருக்கு தெரியுமா என்னோட ரூம் குள்ள நீ இருக்க நம்பவே முடியலை” என்று தன் உணர்வுகளை கொட்டியவன் அவளின் உச்சந்தலையில் மென்மையாய் இதழ் பதிக்க 
கணவனை காதலாக பார்த்திருந்த கவிலயா  அவன் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்துக் தன் இதழை அவன் இதழின் மேல் பொருத்த அவளிடமிருந்து இப்படியொரு முத்தத்தை எதிர் பார்க்காத ஆதியும் ஆழ்ந்து அனுபவிக்கலானான்.  
வரளிநாயகியின் மிரட்டல் குரல் கனவிலும் ஒலித்ததோ! கண்களை திறந்த ஆருத்ரா… 
“ஐயோ மணி என்னனு தெரியலையே! குளிச்சுட்டு சாமி கும்புட சொல்லி பாட்டி சொன்னதை செய்யலைன்னா ரணகள மாகிடுமே!” 
கணவனின் வீட்டில் முதல் நாள் என்ற அச்சம் என்பதை விட வரளிநாயகியின் மீதான அச்சமே ஆருத்ராவை ஆட்கொண்டது. 
ஆருத்ராவின் புலம்பலிலையே  உறக்கம் லேசாய் கலைய, விழிகளை பிரிக்காமலேயே தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஆருத்ராவை  கைகளால் துழாவினான் கார்த்திக். அவள்  கிடைக்காமல் போகவே கண்களை திறந்தவன் அவளை தன்புறம் இழுக்க, வேகமாய் ஆரு கார்த்திக்கின்  மேலையே விழு, இருவரின் முகங்களும் வெகு நெருக்கத்தில் உரசிக் கொண்டன. 
“ஆரு” என்று மென்மையிலும் மென்மையாக அழைத்து, அவள் மூக்கோடு அவன் மூக்கை உரச, உருகும் தங்கம் போல் குலையத் தொடங்கினாள் பெண்ணவள். 
 
அவள் முகத்தையே பார்த்திருந்தவன் அவளின் வெக்கப் புன்னகையை சம்மதமாக கொண்டு அவளின் ரோஜா இதழ்களை தன் இதழ் கொண்டு தீண்ட, மொத்தமாய் கரைந்து உருகினாள் ஆரு. 
மென்மையாய், மேன்மையாய் அவன் அவளை ஆட்க் கொள்ள, சிணுங்கி, கிறங்கி ஆருத்ரா அவனை தன்னுள் பொதித்துக் கொண்டாள்.
சூரியன் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்து கொண்டிருக்க, ஆதி இன்று வரமாட்டான் என்பதால் தென்னந்தோப்பில் தானே பொறுப்பாக நின்று செய்ய வேண்டிய வேலைகளை உத்தரவிட கிளம்பியிருந்தான் சீனு. 
“ஏய் பொண்ணு நில்லு எங்க போய் கிட்டு இருக்க? இந்த பக்கமெல்லாம் போகக் கூடாது” 
என்னதான் கிண்டலும், கேலியாக இருந்தாலும், வேலையென்று வந்தா வெள்ளைக்காரனாக மாறும் சீனு ஒரு பெண் தனியாக நடந்து செல்வதை பார்த்து அவள் கண்டிப்பாக இந்த ஊர் காரியாக இருக்க வாய்ப்பில்லையென்று அவளின் உடையே சொல்ல அவளை நிறுத்தினான். 
கல்யாணத்தில் ஓடியாடி வேலை பார்த்தவனை அடையாளம் கண்டு கொண்டவளோ
“இங்க ஒரு பெரிய கூவா  {கிணறு} இருக்காமே!” அவள் தமிழில் ஹிந்தி வாடை அப்பட்டமாக வீச 
அந்த காலைப்பொழுதிலும் சுறுசுறுப்பாக இருந்த சீனுவின் குறும்புத்தனம் தலைதூக்க “ஏன் தற்கொலை பண்ணிக்க போறியா? காதல் தோல்வியா?” 
அவனை முறைத்து பார்த்தவள் “யாராய் பார்த்து என்ன கேள்வி கேக்குற? நான் முரட்டு சிங்கள்” தமிழ் படங்களின் தாக்கம் அவள் பேச்சில் 
“ஆமா அவன் அவன் கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காம அலஞ்சிக் கிட்டு  நிக்குறான். இதுங்களும் முரட்டு சிங்கள்னு கிளம்பிட்டா நாட்டுல சனத்தொகை பாதியா குறைஞ்சிடும்”  முணுமுணுத்தவன் “இந்த பக்கமெல்லாம் போகக் கூடாது” தனக்கு ஒரு அடிமை சிக்கியதாக நினைத்த சீனு அதிகாரம் பண்ண 
“ஏன் போகக் கூடாது உன் அப்பன் வீட்டு சொத்தா?” கோபமாக அவளும் 
“ஆயா வீட்டு சொத்துமா?” பதிலுக்கு பதில் சொன்னாலும் அதுதான் உண்மையென்றது சீனுவின் மனது. 
தன்னிடம் யாருமே இப்படி பேசியதில்லை “போடா டேய்” என்று முறைத்தவாறே தனது நடையை தொடர்ந்தாள் தீபிகா. 
“ஏய் பொண்ணு நில்லு சொல்ல சொல்ல எங்க போற?” சீனுவும் அவள் பின்னாலையே போக அவளோ! கிணற்றை அடைந்திருந்தாள். 
அங்கே சுற்று சுவர் ஏதுமின்றி பாதையோடு பாதையாக பெரிய வட்டக் கிணறு ஒன்றிருக்க, வேகமாக நடந்தவள்  கிணற்றினுள் எட்டிப் பார்க்க,  கிணற்றினுள் இறங்க அடுக்கடுக்காய் படிகளோடு, அவ்வளவு பெரிய கிணறை எதிர் பார்க்காதவள் உள்ளே இறங்கலாமா? வேண்டாமா?என்று யோசிக்கும் வேளையில் 
தான் குறும்பாக நினைத்தற்கு மாறாக நிஜமாகவே! இவள் தற்கொலைத் தான் பண்ணபோறாளோ! என்றஞ்சிய சீனு அவளின் கையை பிடித்து இழுக்க அதை எதிர் பாராத தீபிகாவும் அவன் மேல் வந்து மோத அவளின் இடையோடு சேர்த்து இறுக அணைத்திருந்தான் சீனு. 
எங்கே அவள் குதித்து விடுவாளோ! என்றஞ்சி சீனு அவளை விடாது “சொன்னா கேளு, இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு, இங்க குதிச்சு செத்து கித்து போய்ட்டீனா? அப்பொறம் வீண் பிரச்சினை வரும்” 
வீட்டில் மங்களகரமாக இரண்டு கல்யாணம் நடந்த வேளையில். ஊருக்குள் வெளியூர் பொண்ணு தற்கொலை பண்ணிக்க கொண்டால்? தேவையில்லாமல் கண்டபடி வதந்திகள் பரவி அது ஆதியை மற்றுமன்றி கார்த்திக்கையும் பாதிக்கும் என்று எண்ணினான் சீனு. 
அவன் சொல்வது எதுவுமே அதிர்ச்சியில் இருந்த தீபிகாவுக்கு புரியவில்லை. மாறாக குளிர்ந்து போன காலைவேளையில் ஒரு ஆணின் இறுகிய அணைப்பில் தேகம் ரெண்டும் உரச அவனின் உடலின் சூடு அவள் மேல் பாய சொல்ல முடியாத அவஸ்தைக்குள்ளானவள். 
“விடு டா… என்ன…  விடு டா… என்ன… ” என்று கத்தியவாறே அவனிடமிருந்து விலக திணற 
“என்னமோ! நான் உன்ன ரேப் பண்ண போற மாதிரி கத்துற? காப்பாத்த போறேன் மா?” என்றவன் விடாது அவளை மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டான். 
அவனிடமிருந்து விலக முடியாமல் போக அவனின் தோள்பட்டையை நன்றாக கடிக்க வலி தாங்க முடியாமல் சீனு கையை தளர்த்த அவனிடமிருந்து விலக்கியவள் தன்னை சமநிலைக்கு கொண்டு வர பெரிய பெரிய மூச்சுக்கலை இழுத்து விட 
“ராட்சசி இப்படியா டி பண்ணுவ? உன்ன போய் காப்பாத்த போனேன் பாரு என்ன சொல்லணும்” ஒரு உள் பனியன் மாத்திரம் அணிந்திருந்தவன் தோள்பட்டையில் அவள் பற்களின் தடங்கள் நன்றாகவே தெரிய அவளை கண்டபடி திட்டலானான். 
“காப்பாத்த பார்த்தியா? யார் கிட்ட இருந்து? என்ன கதவிடுற?” குர்தாவின் கைகளை மேலே தூக்கியவாறே “நான் கிக் பாக்சிங் சாம்பியன்” என்று கால்களை மாற்றி கைகளை மடக்கி அடிக்கும் போஸில் நிற்க 
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் “சும்மா காமடி பண்ணாத, நல்ல படியா ஊர் போய் சேறு” 
கோபத்தின் உச்சியில் இருந்த தீபிகாவோ சீனுவின் வயிற்றில் ஒரு குத்துவிட வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தவன் தாங்க முடியாத வலியால் கைகை நிலத்தில் அடிக்க அவனை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலானாள் தீபிகா.
“யேமா… யாருமா நீ? நீயெல்லாம் தற்கொலை பண்ணுற குரூப் இல்ல, கொலை பண்ணுற குரூப். இப்படியா ஒரு பச்சை புள்ளய அடிப்ப? குட்ட முடியோடு அலையும் போதே உஷாரா இருந்திருக்கணும். யார் வீட்டு பொண்ணுமா நீ” 
சீனு முனகியவாறே இருக்க கிணற்றினுள் இறங்கிய தீபிகா முகத்தையும், கைகாலையும் அலம்பிவிட்டு மேலே வர 
“அப்போ நீ தற்கொலை பண்ண பார்க்கலயா? இது தெரியாம உன் கிட்ட வம்ப விலை கொடுத்து வாங்கிட்டேனே!” வலியிலும் கேலி பேசினான் சீனு.
“கிணத்துல குளிக்கலாம் னு வந்தேன்” ஏனோ அவனின் வலி நிறைந்த முகம் தீபிகாவின் மனதை அசைக்க கையை நீட்டி சீனு எழுந்துக்கொள்ள உதவி செய்ய 
“நல்லா வச்சி செஞ்சிட்டு கைய நீட்டுறத பாரு, குன்பூ பண்டா” திட்டியவாறே அவள் கையை பிடித்து எழுந்து நின்றவன் “சத்தியமா இனி தற்கொலை பண்ணிக்க போறவள மட்டும் காப்பாத்தவே மாட்டேன். குளிக்க குதிப்பியோ? குழி னு குதிப்பியோ ஆள விடு, எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல கண்ட இடத்துல பட்டிருந் தா?” வலியில் வாய் அடங்காமல் புலமித் தீர்க்க
“விட்டா அழுத்துடுவா போல இருக்கே லேஸாதான் அடிச்சேன்?” தீபு அவனை சமாதானம் செய்ய 
“இதெல்லாம் உங்க ஊருல லேசான அடியா? போமா.. போய் வேலைவெட்டிய பாரு” வலியால்  முனகியவாறே சீனு நடக்க அவனோடு சேர்ந்து நடந்தவாறே 
“இங்க குளிக்க இந்த கிணத்த தவிர வேற எங்கேயெல்லாம் இருக்கு?”
“அந்த பக்கம் போனா… ஒரு பெரிய பம்ப் செட் மோட்டார் ரூம் தெரியும். பக்கத்துல தொட்டி கூட இருக்கும். அதுல குளி. யாரும் வரமாட்டாங்க, நீச்சல் தெரியுமில்ல” அவன் சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்கவில்லை. 
“யாரப்பாத்து? நானெல்லாம் நேசரி போற டைம்லயே நீச்சல் குளத்துல குதிச்சவ?” என்று ஆரம்பித்து, அவள் நீச்சல் போட்டியில் கலந்துக்க கொண்டு பரிசு பெற்றது வரை தனக்கு நீச்சல் தெரியும் என்பதை ஐந்து நிமிடங்கள் செலவழித்து விளக்கியிருந்தாள் தீபிகா. 
“என்ன இவ ஜென்ம சனி போல கூடவே வரா?” நொந்தவாறே காதை குடைந்து விட்டு “நல்ல வேல ரெத்தம் வரல” சத்தமாக சொன்னவன் “போமா… போ அந்த பக்கம் தான் பம்பு செட்டு இருக்கு” 
“சரிங்க சீனு மாமா” 
“என்னது மாமாவா?”
“ஆமா கார்த்திக் எனக்கு அண்ணன், ஆரு அண்ணினா… நீங்க மாமா தானே?”
ஆனால் சீனுவுக்கு அவளை எங்கயும் பார்த்த மாதிரி நியாபகத்தில் இல்லை. “சரி எப்படியோ சொந்தமாகிட்ட பொழச்சி போ…” என்றவன் நகர போகும் அவனையே ஆசையாக பார்த்திருந்தாள் அவள்.
சாப்பாட்டு மேசையில் வீட்டார் அனைவரும் அமர்ந்திருக்க கவியை எதிர்பார்த்து காத்திருந்தான் ஆதி. 
“ஆதி எங்கடா உன் பொண்டாட்டி? பூஜையறைக்கு போறத பார்த்தேன் ஆள விட்டு வர சொன்னா அங்க இல்ல பதில் வந்தது.  சரி உன் கூடத்தான் இருப்பான்னு இருந்துட்டேன். நீ வேற தனியா வந்து உக்காருற? என்ன உன் பொண்டாட்டிய ஒரே நாள்ல அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிட்டியா?” வரளிநாயகி கேலி பேச 
“அதிகாரம் பண்ணும் பாட்டிக்கு இப்படியும் பேச வருமா” என்று சீனு தான் அவரை அதிசயமாக பார்த்திருந்தான். 
புன்னகைத்த ஆதியோ பதில் பேசாதிருக்க அவனின் சந்தோசமான மனநிலையை முகமே காட்டிக் கொடுக்க, வரளிநாயகியின் மனதும் நிறைந்தது. 
“எல்லாரும் இங்கதான் இருக்கோம். ஏன் சாப்பிடாம இருக்கோம்” புரியாத பார்வை பார்த்தவராக சக்கரவர்த்தி கேக்க மேனகை அவரை முறைக்க சீனு தலையில் அடித்துக் கொண்டான். 
 
சக்கர நாற்காலியின் சத்தம் கேக்கவே அனைவரின் பார்வையும் அப்பக்கம் செல்ல கவி இளவரசியோடு வந்து கொண்டிருந்தாள். 
பூஜையறைக்கு சென்று தனது வாழ்க்கையில் காதலோடு ஆதியை தந்ததற்கு கடவுளை வணங்கி தங்களது வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாதென்று பிராத்திணையையும் வைத்தவள் நேராக சென்றது இளவரசியை காணவே! 
அலைபேசியில் உரையாடும் பொழுது அவர் அறையை விட்டு எங்குமே செல்ல மறுக்கிறார் என்பதை புரிந்துக் கொண்ட கவியோ! கூட்டுப் புழுவாக தனக்குள்ளேயே ஒடுங்கி இருக்கும் அவரை கல்யாணத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுத்தாள். 
அதன் முதல் கட்டமாக அவருடைய அறைக்கு வந்த உணவை திருப்பி அனுப்பி அவரை சாப்பாட்டறைக்கு அழைக்க, இளவரசி மறுக்கவே கெஞ்சி, கொஞ்சி அழைத்து வந்தாள் கவி. 
இளவரசிக்கு ஆதி சாப்பாடு ஊட்டுவான் அல்லது மேனகை வேறு யாரையும் வரளிநாயகி அனுமதிக்கவே மாட்டார். இரண்டு வருடங்களாக அறையிலையே அடைபட்டிருந்த  கவியோடு வரும் இளவரசியை பார்க்க கண்டிப்பாக கவி இந்த ஜமீனுக்கு ஏத்த மருமகளாக இருப்பாள் என்று புரிந்துக் கொண்டார் வரளிநாயகி. 
அனைவரும் தனக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று புரியவே ஆதியின் அருகில் இருந்த கதிரையை நகர்த்தி  இளவரசியின் சக்கர நாற்காலியை தள்ளி அவரை இருத்தியவள் தானும் அவரருகில் அமர்ந்துக் கொள்ள வரளிநாயகி கர்ண விஜயேந்திரனுக்கு பரிமாறியபின் மேனகை சக்கரவர்த்திக்கு பரிமாற அதை புரிந்துக் கொண்டு கவி ஆதிக்கு பரிமாறி விட்டு இளவரசிக்கும் பரிமாறினாள்.  
ஆண்கள் சாப்பிட ஆரம்பிக்க, பெண்கள் அவர்களின் தேவைகளை கவனிக்க இளவரசிக்கு ஊட்டலானாள் கவி. 
அவள் வீட்டில் இந்த பாகுபாடில்லை. பசித்தால்  தாங்களே பரிமாறி சாப்பிட்டு கொள்வார்கள். பாரம்பரியமான குடும்பங்களில் இன்னும் இந்தப்பழக்கம் இருக்கு. எப்படியும் இளவரசிக்கு ஊட்டியபின் தான் சாப்பிடணும் என்று கவி இருக்க அவளின் மனதை படித்தது போல் 
“அந்த காலத்துல, வீட்டுக்காக வியர்வை சிந்தி உழைச்சிட்டு வரும் ஆணிவேரான ஆண்களுடைய பசியை தான் முதல்ல போக்கணும். அடுத்து எப்பவுமே! ஓயாம ஓடியாடி விளையாடும் வளரும் குழந்தைகளுக்கு பசியாற உணவு கொடுக்கணும். அப்புறம் தான் வீட்ல இருக்க பொம்பளைங்க சாப்பிடணுமாம். காலாகாலமாக அப்படித்தான் இருக்கு. 
என் மாமனாருக்கு இது சுத்தமா புடிக்கல. ஆம்பளைகளுக்கு அத்தனை கறியையும், கூட்டு பொரியலையும் அள்ளி வச்சிட்டு பொம்பளைக நீங்க எலும்பையும், வெறும் சோறு திம்பீங்களான்னு சண்டைக்கு வருவாரு. 
காலாகாலமாக பின்பற்றுறத மாத்த வேணாம் னு அத்தையும் சொல்ல அவங்களுக்குள்ள இத வச்சே ஒவ்வொருநாளும் சண்டை வரும். கடைசில சரி நீ சாப்பிடாத, அவங்கவங்க புருசனுக்கு அவங்கவங்க பொண்டாட்டிங்களே பரிமாறனும். சாப்பிட்டு முடிக்கும் வர கூடவே இருக்கணும். கூட சேர்ந்து சாப்பிடணும்னா சாப்பிடலாம் னு முடிவுக்கு வந்துட்டாங்க. அதுதான் இங்க நடக்குது. நீ போட்டு சாப்பிட்டாலும் சரி. உன் புருஷன ஊட்ட சொன்னாலும் சரி யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” 
  
 “விசேச வீடுகள்ல ஆம்பளைகளையும், பிள்ளைகளையும், சாப்பிட வச்சி அனுப்பிட்டு, பொம்பளைங்க ஒன்னு கூடி பேசுற நேரமே எங்க சாப்பாட்டு நேரமா தான் இருக்கும். மத்த நாள் எல்லாம் நின்னு நிதானமா மூஞ்சி பாத்து சிரிக்க நேரம் எங்க இருக்கு” மேனகை சொல்ல 
“சாப்பாட்டு அப்படியெங்குறது ஒரு மனுசனுக்கு முழுமையான நிறைவை கொடுக்குறது. வயிறு நிறைய திருப்தியா உண்டா மனசு நிறையும் னு சொல்வாங்க. சாப்பாட்டு நேரத்துல குடும்பம் மொத்தமும் ஒண்ணா இருந்து பேசி, சிரிச்சு சாப்ட்டா சந்தோசம் நிலைக்கும். சந்தோசத்தை பகிர்ந்துக்கிறோம். அப்பா அம்மா கிட்ட இதைத்தான் புரிய வைக்க முயற்சி செய்தாரு. நானும் தான்” என்கிறார் கர்ணன் விஜயேந்திரன். 
 “இவ்வளவு விஷயம் இருக்க?” என்று மலைப்பாக பார்த்திருந்தாள் கவி.
 

Advertisement