Advertisement

அத்தியாயம் 15
“ரொம்ப சந்தோசமாக இருக்கு பித்யூ…”  பித்யுத்தின் அண்ணன் சம்யுக்த் பித்யுத்தை அணைத்தவாறே “கவிய கார்த்திக்குகே கல்யாணம் பண்ணி கொடுப்பனு நெனச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா என் பொண்ண கார்த்திக்கு கட்டிவச்சிருப்பேன்” 
“போங்க டேட் கார்த்திக் எனக்கு ராக்கி ப்ரோ”  தனது குட்டை முடியை சிலுப்பியவாறு தீபிகா சினுங்க 
சத்தமாக சிரித்த  சம்யுக்த் “உன் தலையெழுத்து நல்ல பசங்களுக்கெல்லாம் ராக்கிய கட்டிவிடுற, உன் கழுத்துல தாலி கட்ட ஆப்பிரிக்கால இருந்துதான் மாப்புள கொண்டு வரணும்” உனக்கு ஒரு கறுப்பன்தான் சிக்குவான் என்று சொல்லாமல் சொல்ல 
“சவுத்தாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவாங்க. வெள்ளை தோல் அங்கேயும் இருக்கு” அப்பாவையே மடக்கினாள் தீபிகா. 
“வாலு என்ன பேசுறா பாருங்க” தீபிகாவின் அன்னை சாந்தினி கடிய தம்பியோ வீடியோ கேமில் கவனத்தை வைத்திருந்தான். 
 “குழந்தையை திட்டாதீங்க அண்ணி” பித்யுத் சொல்ல 
“தீபு வா போய் உன் அண்ணியை பார்க்கலாம்” சாந்தினி தீபிகாவை அழைத்து செல்ல
“கவியும் கார்த்திக்கை அண்ணனா நினைச்சதால தான் இன்னைக்கி நாம இங்க இருக்கோம்” சித்தார்த்தும் வந்து அமர்ந்துக்கொள்ள பழைய கதைகளும், ராணுவ கதைகளும் பரிமாறப்பட ஆருத்ராவை வானதியும், ராணியும் உள்ளறையில் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். 
அதேபோல் ஜமீனில் கவியை அலங்காரம் செய்து வரளி நாயகியின் முன் நிறுத்த அவரின் காலில் விழ போனவளை  பிடித்து நிறுத்தியவர் 
“முதல்ல பூஜையறைக்கு போய் பெரியவங்கள தரிசனம் பண்ணலாம்” கவியை பூஜையறைக்கு அழைத்து வந்த வரளி நாயகி “விளக்கேத்தும் போது பாத்திருப்ப இந்த போட்டோல இருக்குற எல்லாரும் நம்ம முன்னோர்கள். புது வாழ்க்கையை துவங்க போற ஆசிர்வாதம் வாங்கிக்க” அவர் சொன்ன படியே ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் கவி. 
“கல்யாணம் ஆனவுடன் கவி ஆதியோடு கடமைக்காக காலில் விழுந்திருப்பாள் வீட்டுக்கு வந்த உடனே அவளுடைய ஆதிக்கத்தை தொடங்குவாள்” என்று அங்கே நடப்பதை பார்த்திருந்தாள் மேனகை.
பூஜையறையில் இருந்து வெளியே வந்த கவி வரளிநாயகி மற்றும் இளவரசியிடம் ஆசீவாதம் வாங்கிக் கொண்டபின் மேனகையின் காலிலும் விழ இதை சற்றும் எதிர்ப்பு பார்க்காத மேனகை மனதில் இருந்த கசடு நீங்கியவாறே ஆசீர்வாதம் செய்ய கவியின் கையில் பால் செம்பை கொடுத்து அவளை ஆதியின் அறைக்கு அனுப்பி வைத்தார் வரளி நாயகி. 
பால் செம்போடு முதலிரவு அறைக்குள் நுழைந்த ஆருத்ரா கணவனை தேட அவனோ பால்கனியில் யாருடனோ! போனில் பேசிக் கொண்டிருந்தான். 
“சரியான கடமை தவறாத போலீஸா இருப்பான் போலயே” தனக்குள் முணுமுணுத்தவள் பால் செம்பை கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு நிமிர, பால்கனி கதவில் சாய்ந்து அவளைத்தான் பாத்திருந்தான் கார்த்திக். 
“காட்டுல இருக்குற புலி பாக்குற மாதிரியே இருக்கு. நாமளே முந்துகிட்டு பேசிடுவோம்” மாலையில் இருந்து மனதுக்குள் ஒத்திகை பார்த்த  வார்த்தைகளை மீண்டும் நியாபகப் படுத்தி 
“இங்க பாருங்க நா படிக்கணும். இந்த முதலிரவெல்லாம் அப்பொறம் வச்சுக்கலாம் முதல்ல ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிஞ்சிக்க கிட்டு வாழ்க்கையை தொடங்கலாம். நான் சொல்லுறது சரிதானே! என்ன சொல்லுறீங்க?” பட படவென சொன்னவள் புடவை முந்தியை திருக்கியவாறே அவனின் பதிலுக்கு காத்திருக்க, சத்தமாக சிரித்தான் கார்த்திக்.
“போனிலையே பேசிப் பேசி தங்களுக்குள் நெருங்கியபின் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்க இன்னும் என்ன இருக்கு” ஆருத்ரா பேசும் பொழுது  உள்ளுக்குள் கனன்ற கோபத்தை அடக்கியவாறு அவளையே பார்த்திருக்க,  அவள் பேசி முடித்த பின் உதடுகளில் மலர்ந்த குறுஞ்சிரிப்பு  போலீஸ்காரனின் கண்ணில் சிக்க அவள் நாடகத்தைக் கண்டு கொண்டவன்
“உப்… இவ்வளவுதானா? நானே இத எப்படி சொல்லுறதுனு யோசிச்சு கிட்டு இருந்தேன். நல்ல வேல நீயே சொல்லிட்ட. எதுக்கு டென்ஷனா இருக்க? கூல்… இப்படி வந்து உக்காரு” அவனும் அவளிடம் சமாதானமாக பேச
“அடாப்பாவி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையே உண்மையாக்குவான் போல இருக்கே!” அவனிடமிருந்து அப்படியொரு பதிலை எதிர்ப்பார்க்காத ஆரு கார்த்திக்கை முறைக்க 
“ஆமா நா உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி எங்கயோ! பாத்து இருக்கேன்” ஆதி தன்னிடம் சொன்னதை முதலிரவில் ஆரு சொல்லுவாள் என்று எதிர்பார்த்த கார்த்திக் ஆருத்ராவின் முகத்தையே! பார்த்து யோசிப்பது போல் பாவனை செய்ய
தான் குடித்து விட்டு வண்டியோட்டியதை சொன்னால் எங்கே அவன் கோபம் கொண்டு இந்த இனிமையான பொழுதை வீணாக்கிடுவான் என்று தோன்ற “நல்ல டெக்னீக். பசங்க தெரியா…த பொண்ணுங்க கிட்ட நம்பர் வாங்க இப்படித்தான் பேசுவாங்க. நீங்க என்ன பொண்டாட்டி கிட்டயே இப்படி பேசுறீங்க” 
“நிஜமாவா? எனக்கு தெரியல?” புன்னகைத்தவாறே சொல்ல அவனை கூர்ந்து பார்த்தவள் பொய் சொல்லுறானா உண்மை சொல்லுறானா என்று கண்டு பிடிக்க முயன்றாள்.     
“நா உன்ன எப்படி கூப்பிடனும்?” 
“மாமா என்ன பொம்முன்னுதான் கூப்பிடுறாரு” ஆதியின் நினைவில் முகம் மலர 
“ஓஹ்.. சார் உன்ன பொம்மு… னா கூப்பிடுறாரு?” தெரியாதவன் போல் கேட்டவாறே மனைவியை நெருங்கி அமர்ந்தான் கார்த்திக்
“என்னது சாரா? அவரு உங்களுக்கு அண்ணன் முறை. அண்ணான்னு கூப்பிடுங்க?” அவன் புறம் திரும்பி அதட்ட
“செத்தேன். கவி என்ன சார் னு தான்  கூப்பிட சொன்னா. அப்போ தான் நமக்கு பொறக்க போற குழந்தையை, அவங்களுக்கு பொறக்க போற குழந்தைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியுமாம்” குரலை தாழ்த்தி ரகசியம் பேசினான் அந்த வளர்ந்த ஆண் மகன். 
கணவனின் அருகாமையில் மயங்கி நிற்க வேண்டிய மனமோ  தடம் மாறி எங்கையோ ஓரத்தில் பதுங்கி இருந்த கவியின் மீதான வெறுப்பு முளைவிட  மூளை விழித்துக் கொண்டது   
“அட லூசுங்களா? மாமா சொன்னது சரிதான் போல” மனதுக்குள் நினைத்தாலும் சிரித்து வைத்தவள் “கவி னா உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ!” பொறாமை எட்டிப் பார்த்தது ஆருவின் குரலில். 
“ம்.. அவ என் அம்மு மா… ஷி ஐஸ் தி குயின் ஒப் மை ஹார்ட்” நெஞ்சை தடவியவாறே சொல்ல ஆருத்ராவின் விழிகளில் கோபம் அனல் மூண்டது. 
கவி என்றாலே தன்னிலை மறக்கும் கார்த்திக், இதயத்தில் இடம் கொடுக்க வேண்டியவள் தான் மட்டும் தான் என்று மனைவி எதிர்பார்க்கின்றாள் என்று புரியாமல் பேச
“குயினாம் குயின். அந்த கவிய பதவில இருந்து தூக்கி உன் மனசுல நான் சிம்மாசனம் போட்டு உக்காரல என் பேர் ஆருத்ரா இல்லடா என் ஐ.பி. எஸ்  புருஷா…” மனதினில் சபதம் எடுத்துக் கொண்டாள் அந்த காவல்காரனின் மனைவி.
“ஆமா ஆரு நீ  வயித்துல இருக்கும் பொழுது உங்கம்மா என்ன சாப்பிட்டாங்க இப்படி கலரா இருக்க?” 
“தெரியல” கோபத்தில் இருந்தவளோ கணவனின் பேச்சு செல்லும் திசையை உணரவில்லை. 
“என்ன சாப்பிட்டாங்கனு கேட்டு தெரிஞ்சிக்க அப்போ தான் நம்ம குழந்தைகளும் பொம்மை மாதிரி கொளுகொளுன்னுனு உன்ன மாதிரி கலரா பொறக்கும்.  ஆமா உனக்கு எத்துணை குழந்தைகள் வேணும்” சொல்லியவாறே ஆருவின் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்துக் கொண்ட கார்த்திக் தன் ஒற்றை விரல் கொண்டு அவளின் இதழ் வருட 
கணவனின் தொடுகையில் உடல் சிலிர்த்து பேச்சற்று சிவந்தாள் ஆரு. 
“என்ன ஆரு பதில் சொல்லாம இருக்க?” என்றவன் மூச்சுக்குகாற்று  சுடும் நெருக்கத்தில் அவளின் இடையில் கையிட்டு  தன்னருகில் இழுத்துக் கொள்ள அவன் நெஞ்சில் சாய்ந்து கண்மூடிய ஆரு மோனநிலைக்கு போக தன் கரம் கொண்டு அவள் கன்னம் தங்கியவன் அவள் இதழ்களை மொத்தமாக முற்றுகையிட்டான். 
அவனின் கரங்களோ தன்னவளை உணரத் தொடங்க, அக்கணம் தன் காதல் கைகூடிய சந்தோசம் ஆருவின் மனதை நிறைக்க கணவனின் உணர்வுகளையும், தேவையையும் உணர்ந்தவளாக அவனின் கைகளில்  தஞ்சமடைய அங்கே ஒரு அழகான கூடல் இனிதாக ஆரம்பமானது. 
கவியோ மெதுவாக அடியெடுத்து ஆதியின் அறையை அடைய  கதவு திறந்தே இருக்க உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று தடதடக்கும் இதயத்தோடு வாசலிலையே நின்று கொள்ள  
“வெல்கம் லயா உன் ரூமுக்கு வர என்ன தயக்கம்? என்ன யோசனை?” கவி எதிர்பாராத நேரத்தில் அவள் முன் வந்து நின்ற ஆதி அவள் கையை பிடித்து  உள்ளே அழைத்து வந்து சோபாவில் அமர்த்தி கையில் இருந்த பால் செம்பையும் மேசையின் மீது வைத்து விட்டு   
“ஒரு ஐஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு இப்போ வந்துடுறேன்” என்றவன் அறையோடு இருந்த இன்னொரு அறையினுள் புகுந்துக் கொண்டான். 
கவியின் கல்யாணக் கனவோ கார்த்திக்கை பிரியக் கூடாதென்றத்தில் தொடங்கி ஆதி ஒரு அரசியல்வாதி என்றதில் கோபப்பட்டு அவனின் நற்குணங்களின் கொஞ்சம், கொஞ்சமாக அவன்பால் மனம் சாய்ந்தாலும் அலைபேசியிலாவது உரையாடி நெருங்கி பழகாததால் வீட்டில் நிச்சயக்கப் பட்ட திருமணத்தில் பெண்களுக்கு ஏற்படும் அச்சமும், வெட்கமும் கலந்த உணர்வில் தவித்துக் கொண்டிருந்தவள் ஆதி விலகியதும் மூச்சை இழுத்து விட அப்பொழுதுதான் அந்த  விசாலமான அறையே அவள் கண்ணில் பட்டது. 
ஜமீன் அரண்மனையும் சினிமாவில் வருவது போல பிரம்மாண்டமாகவே இருக்க உள்ளே வந்ததிலிருந்து ஒரு வித அச்சம் கவியின் மனதில் குடிகொள்ள வீட்டாரின் அன்பான பேச்சால் விலகி இருந்த பயம் ஆதியின் அறையை பார்த்ததும் மீண்டும் வந்தது. 
பெரிய ஜன்னல்களும், பால்கனியும், பெரிய கட்டிலும், சோபா, டிவி, குளிர்சாதனப்பெட்டி, என்று மினி வீடாக அவ்வறை இருக்க, நாலு புறத்திலும் பெரிய கதவுகள். அவள் எந்த வழியாக வந்தாள் என்றே யோசித்து தான் வெளியே செல்ல வேண்டும் போல் இருந்தது. 
“என்ன இது சந்திரமுகி ரூம்  மாதிரியே இருக்கு. ரூம பார்த்தாலே பயமா இருக்கே!” நடிகர் வடிவேலுவின் பாணியில் சொல்லியவாறே ஒவ்வொரு பொருளிலும் இருந்த கலைநயத்தை ஆராய்ந்தவள்   
கட்டிலும் பூ அலங்காரத்தில் ஜொலிப்பதை கண்டு தான் அவ்வறைக்கு வந்த நோக்கம் புரிய மீண்டும் கவியின்  இதயம் அடிக்க ஆரம்பித்தது.  
கதவுதிறக்கும் சத்தத்தின்பின் ஆதியின் காலடி சத்தம் கேட்க கவியின் இதயமோ பந்தயக் குதிரையின் வேகத்தில் துடிக்க,  அவளின் பின்னால் வந்து நின்ற ஆதியோ எதுவும் பேசாது நிற்க பின்னால் திரும்பி பார்க்க பயந்து கவியோ 
“ஆதி….” என்று கத்த
“ஹேய் கவி நான் தான்” 
அவன் புறம் திரும்பியவள் அவனின் மார்பில்  அடித்தவாறே “இப்படியா வந்து பயமுறுத்துறீங்க?”
“நீ ஏதோ பெரிய யோசனையில் இருந்த அதான் உன்ன டிஸ்டப் பண்ண வேணாம் னு…” அவளின் கைகளை பிடித்துக் கொண்டே சொல்ல கவியும்  இயல்பு நிலைக்கு திரும்பினாள். 
“லயா… நா உன் கூட கொஞ்சம் பேசணும். பேசலாமா?”
“எதுக்கு அனுமதி கேக்குறான்” என்ற பார்வையை கவி வீச 
  
“இல்ல முதலிரவு அறைக்கு பல கனவோடு வந்திருப்ப, இவன் பேசியே கொல்லுறான்னு நினைக்கிறிய…” குறும்பாக சிரித்தவாறே ஆதி. 
அவனை முயன்று முறைத்தவள் “என்ன பேசணும் சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு தூக்கம் வருது” ஒருகையால் முகத்தில் விழும் கூந்தலை பற்றி திருக்கியவாறே கவி. 
“ஹாஹாஹா சரி போய் தூங்கு நாளைக்கு பேசலாம்”  ஆதி வேண்டுமென்றே சொல்ல 
‘இல்ல இல்ல நீங்க என்ன சொல்லணுமோ சொல்லுங்க” கவி தடுமாற 
அவளை மேலும் சோதிக்காது “சரி வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு அறையோடு இருந்த இன்னொரு அறைக்குள் செல்ல அது அவனின் மினி நூலகமாக இருக்க, கவியும் ஆவலாக பார்வையிடலானாள். 
கதோவோடு இரு புறத்திலும் நான்கு வரிசையில் புத்தகங்கள்  அகரவரிசையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, நடுவில் படிக்கவென மேசையும் கதிரையும் இருந்தது. சுவரில் ஓவியங்களும் மாட்டப் பட்டிருக்க, புத்தகங்கள் தூசி படியாதவாறு நேர்த்தியாக பராமரிக்க படுவது கவியின் கண்ணில் பட்டது. 
 
“இப்படி உக்காரு கவி” என்றவன் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தவாறே எப்படி ஆரம்பிக்கிறது என்று புருவம் உயர்த்த கவியும் அவனுக்கு எதிர்புறம் அமர்ந்து அவன் என்ன சொல்ல போறானோ என்று நகத்தைக் கடிக்கலானாள். 
“கவி நான் படிக்கும் காலத்துல ஒரு பொண்ண காதலிச்சேன்” நிறுத்தி நிதானமாக ஆதி சொல்ல 
இப்படி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்க்காத முகபாவத்தை கொடுத்த கவி “இப்போ என்ன? அந்த பொண்ண மறக்க முடியாது அதனால என் கூட வாழ முடியாது னு சொல்ல வாரீங்களா?” கோபமா? வேதனையா? எது நெஞ்சம் நிறைத்தது என்று புரியாத அளவுக்கு அவளின் குரல் இருக்க 
“என்ன சொல்ல போறேன்னு பொறுமையா கேக்காம இவ பாட்டுக்கு என்னென்னமோ சொல்லுறா” அவளையே பாத்திருந்த ஆதியின் எண்ணம் இவ்வாறிருக்க அவளை தடுக்க வில்லை. 
“சொல்லி முடிச்சிட்டீங்களா? நான் போய் தூங்கவா?” பட்டென்று எழுந்துக்க கொண்டவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள 
“நான் லவ் பண்ண பொண்ணு யாரென்று தெரிஞ்சிக்கும் ஆசை உனக்கில்லயா?” அமர்ந்தவாறே ஆதி 
“இல்ல” பட்டென்று சொன்னாலும் மனதின் மூலையில் “யாரந்த வீணாப்போனவ என்று தெரிஞ்சிக்க கவி” என்று குரல் வர அசையாது அங்கேயே இருந்தாள் கவி. 
அவள் கோபமே அவள் மனதில் தான் இருப்பது ஆதிக்கு மகிழ்ச்சியை கொடுக்க “அங்க சுவருல ஒரு ஓவியம் இருக்கு போய் பாரு” சொல்லியவாறே கண்களாலும் உத்தரவிட கவியின் கால்கள் தானாக அப்பக்கம் நகர்ந்தன. 
சுவரில் மாட்டப் பட்டிருந்த ஓவியமோ மெல்லிய துணியால் மூடப்பட்டிருக்க “பெரிய உலக அழகி போட்டோ கூட தூசி படக் கூடாதாம்” முணுமுணுத்தவாறே துணியை விலக்கியவள் அங்கே தன்னுடைய புகைப்படம் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன் விழிவிரித்துப் பார்க்கலானாள்.
அவளின் பின்னால் வந்து நின்றவனோ! “எப்படி இருக்கா என் காதல் தேவதை?”  
தன் மனதில் இத்தனை வருடங்களாக யாரிடமும் சொல்லாமல் பூட்டி வைத்த காதலை ஒரு ஓவியத்தின் மூலம் சொல்லிவிட்டான் ஆதி. 
ஆதியை முதன்முதலில் காபி ஷாப்பில் சந்தித்ததாக நினைத்துக் கொண்டிருந்த கவிக்கும்  அவன் தன்னைத்தான் காதலித்தான் என்பது அளவுக்கடந்த மகிழ்ச்சியை கொடுக்க கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. அது அவன் மனதில் தான் மட்டும் தான் என்ற நிம்மதியில் வந்த கண்ணீர்.
காதலித்து கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கொள்கையெல்லாம் கவிக்கு இல்லை. அவள் வாழ்க்கை கார்த்திக்கோடு பிணைந்திருப்பதால் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று மாத்திரம் தான் எண்ணினாள். ஏதோ கார்த்திக்கு ஆருத்ராவை பிடிச்சிருக்கு என்ற காரணத்துக்காக ஆதியை கல்யாணம் செய்ய நினைத்தவள் பெரிதாக அவனை பற்றி அறிந்துக் கொள்ளும் முயற்சியெடுக்க வில்லை. 
கண்களில் நீரோடு ஆதியின் புறம் திரும்பியவள் என்ன கேட்பதென்று ஓவியத்தையே காட்ட 
“உங்கம்மாவை எனக்கு ஏற்கனவே தெரியும். அம்மா சொல்லி இருப்பாங்க, அப்போ நான் காலேஜ் பைனல் இயர்ல இருந்தேன். அவங்க காலேஜ்ல ஒரு உரையாற்ற போனப்போ தான் உன்ன முதன் முதலா பார்த்தேன். சுடிதார்ல, ஒரு பையோடு மரத்தடில அமர்ந்து ஏதோ எழுதிக் கிட்டு இருந்த. பார்த்த உடனே உன்ன புடிச்சு போச்சு. உன் கிட்ட வந்து பேசினேன். நீ தான் தலையை தூக்கவே இல்ல” 
“நிஜமாவா?” 
“நீ என்ன எழுதிக் கிட்டு இருந்த னு நான் கவனமா பார்த்திருந்தா உன்ன தேடி அலைஞ்சிருக்க வேண்டி இருக்காது” என்றவாறே பெரிதாக புன்னகைக்க அவனை புரியாது பார்த்தாள் கவி. 
“நீயும் அந்த காலேஜ்ல படிக்கிறதா நினைச்சி ஒரு வாரமா காலேஜ் வாசல்ல தவம் கிடந்தேன். உன்னைத்தான் பார்க்க முடியல. நீ என்ன எழுத்துறானு கவனிச்சு பார்த்திருந்தா ப்ளஸ் டூ எக்ஸாமுக்கு படிக்கிறது தெரிஞ்சிருக்கும். உன்ன தேடி ஸ்கூல் வாசலுக்கு கண்டிப்பா வந்திருக்க மாட்டேன்” மீண்டும் சிரிக்க கவி அவனை முறைக்கலானாள். 
“பின்ன சின்ன பொண்ண ஏமாத்த பாக்குறான்னு என்ன தூக்கி உள்ள வைப்பாங்க” 
“காலேஜ் பாஸ்ட் இயர்னா… பெரிய பொண்ணா?” 
“சுடிதார்ல நீ செகண்ட் இயர் மாதிரி இருந்த” அவளை அணுஅணுவாக ரசித்ததை சொல்லாது  கள்ளத்தனமாக சிரித்து வைக்க 
அவனின் பார்வையை புரிந்துக் கொண்டவளோ!  “உங்கள…” என்றவள் சில அடிகளை கொடுக்க 
“ஐயோ அம்மா.. யாராவது காப்பாத்துங்க, பாஸ்னைட்டுனு கூட்டிட்டு வந்து  வச்சி வெளுக்குற” ஆதி பொய்யாக கத்த 
அவனின் காதை திருகியவள் “ஏன் என்ன தேடலை” முகத்தை சுருக்கியவாறே கவி 
“படிப்பு முக்கியமா பட்டுச்சு, நீ எனக்கு னு கடவுள் எழுதி இருந்தா கண்டிப்பா என் கண்ணுல மாட்டுவனு இருந்துட்டேன்” அசால்ட்டாக சொல்ல கவிக்கு அவனை முறைக்க மட்டுமே முடிந்தது. 
அவளின் முறைப்பை கண்டு  “உங்கம்மாவ எத்தனையோ தடவ சந்திச்சு இருக்கேன். ஏன் டில்லில உங்க வீட்டுக்கு கூட ரெண்டு தடவ வந்தேன். ஒரு பேச்சுக்காச்சும் எனக்கொரு அழகான பொண்ணு இருக்கா னு இன்டெர்டியுஸ் பண்ணி வச்சாங்களா? இல்லையே! அந்த கார்த்திக் பய கூட என் கண்ணுல சிக்கல, சிக்கி இருந்தா அவனை பார்க்கவாவது வீட்டுக்கு வந்திருப்பேன். ஏன்  வீட்டுக்கு வந்தா நீயாவது ஒரு கப் காபியோடு வந்து அறிமுகப் படுத்திக்க வேணாமா? வந்திருந்தா நான் உன்ன மீட் பண்ணி அப்பொறம், குஜால் பண்ணி” என்றவாறே நெருங்க 
“அப்போ நீங்க வீட்டுக்கு வந்த நேரம் நான் உங்களுக்கு காபி கொடுக்காததுதான் நீங்க என்ன சந்திக்க முடியாம போனதுனு சொல்ல வாரீங்களா?”
“ஆப்கோர்ஸ் அதுதான் காரணம்” ஆதி அடித்து சொல்ல 
“சரிங்க காபி போட்டு தரேன் முதல்ல இருந்தே ஆரம்பிக்கலாம்” கவியும் குறும்பாக சொல்லி சிரிக்க 
“ஆமா பால் செம்ம அங்கேயே வச்சிட்டு வந்துட்ட” என்றவாறே கவியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆதி நகர 
“ஒரு நிமிஷம் உங்களுக்கு ஓவியம் எல்லாம் வரையத்தெரியும் என்று சொல்லவே இல்ல” மீண்டும் ஓவியத்தின் மீது பார்வையை செலுத்தினாள் கவி. 
“அது நான் வரையல நான் சொல்ல சொல்ல என் பிரெண்டு வரஞ்சி கொடுத்தான்” அவளை பின்னாலிருந்து அணைத்தவாறே ஆதி. 
மனதில் இருக்கும் முகத்தை வரைவது கூட இலகுவானது, தன் மனதில் உள்ளதை சொல்ல சொல்ல இன்னொருவர் வரைவதென்றால்? அந்த முகம் எவ்வளவு ஆழமாக பதிந்திருந்தால் தான் சாத்தியமாகும் என்ற உண்மை கவிக்கு புரிய ஆதியின் மேல் கரைகடந்த காதல் பெருகியது. 
“கவி போலாமா பால் ஆறிட போகுது” தான் சொல்லவேண்டியதை சொல்லியாச்சு செய்ய வேண்டியது பாக்கி இருக்கு என்று ஆதி குறிப்புக் காட்ட 
“அது ஏற்கனவே ஆறிப்போய்த்தான் இருந்துச்சு. ஆமா நீங்க என்ன லவ் பண்ணுறீங்க சரி இன்னும் ப்ரொபோஸ் பண்ணவே இல்லையே” அவன் அணைத்திருந்த கைகளை பிடித்துக் கொண்டு கேட்க 
“ப்ரொபோஸ் என்னடி ப்ரோபோமன்ஸ்சே பண்ணுறேன்” என்றவாறு அவளை கையில் ஏந்தியவன் அறைக்குள் நுழைந்தான்.

Advertisement