Advertisement

அத்தியாயம் 14
நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்த இரு தந்தைகளோடும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் கவி. ஆதி பல தடவைகள் அலைபேசியில் அழைத்தும் பதில் வராது போகவே கார்த்திக்கை அழைக்க அவனும் ஆருவோடு பேசிக் கொண்டிருப்பதால் கவி தந்தைகளோடு இருக்கிறாள் என்று குறுந்செய்தியை தட்டி விட 
“இன்னும் ஒரு வாரம் தானே அதற்குபின் நான் தான் உனக்கு முக்கியமா இருக்கணும்” தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டவன் கவியை பார்க்க ஆவல் தோன்றினாலும் அடுத்த வளைவில் இருக்கும் அவள் வீட்டுக்கு செல்ல அவனுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதால் என்ன செய்வதென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான். 
“ஆதி என்னப்பா… ஏதாவது பிரச்சினையா? கல்யாண வேலையில் ஏதாவது விட்டு போய்யிருச்சா?” கர்ண விஜயேந்திரன் யோசனையாக 
“அது ஒன்னும் இல்லங்க அவன் பொண்டாட்டி அவனை கண்டுக்காம அவ அப்பாக்கள் கூட கூட்டு சேர்ந்துட்டாளாம். இவன் கூட பேசவே மாட்டேன்னு சொல்லிட்டாளாம். அதான் நம்ம பேரன் சோகமா இருக்கான்” வரளி நாயகியும் சோகமான முகத்தை வைத்தவாறு சொல்ல 
“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. மாமா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிறார் இல்ல அதான் அவ கொஞ்சம் பிசி. அப்பொறம் கல்யாணம் ஆகா போகுதில்ல நல்லா அப்பாவை கொஞ்சிக்கிறா” படபடவென ஆதி பேச முதியவர்கள் இருவரும் சிரிக்கலாயினர். 
“என்ன சிரிப்பு” 
“பொண்டாட்டிய விட்டுக் கொடுக்காம பேசுற நீ பொழச்சிக்குவடா… ” அவனின் தோளில் தட்டியவாறே தாத்தா நகர 
“இங்க வாப்பா..” வரளி நாயகி ஆதியை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு “ஆமா கவிய எப்போ, எங்க பார்த்த, எப்படி உன் மனசுல இருக்குறத சொன்ன? ஏன்னா அன்னைக்கி பொண்ணு பாக்க போனப்போ கவி உன்ன ஒரு தடவைதான் பார்த்ததாக சொன்னா” யோசிக்கும்  பாவனையில் பாட்டி 
இருமியவாறே ஆதி என்ன பதில் சொல்வதென்று முழிக்க 
“ஆனா நீ எங்கயோ, எப்பவோ பாத்திருக்க, புடிச்சதாலதான் ஆரு காதலிக்கும் விசயத்த சொல்லாம நீ காதலிக்கிறேன்னு சொன்ன” 
“பாட்டி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா…” கொஞ்சம் அதிர்ச்சியாகவே ஆதி கேக்க 
“என் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது பேராண்டி. கவி ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு அவதான்  பொருத்தமா இருப்பா.. அவளை பார்த்த அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்” 
“தாங்க்ஸ் பாட்டி” என்றவன் அவரின் மடியில் படுத்துக் கொள்ள அவனின் தலைக் கோதலானார் வரளி நாயகி. 
இந்த ஏழு நாட்களும் ஆதிக்கு சோதனையாகவே இருந்தது, கவியை பார்க்க முடியவில்லை, குரலையாவது கேட்கலாம் என்றால் அவளோ அவனோடு பேச தயாராக இல்லை. 
ஆனால் கார்த்திக்கும் ஆருவும் அதிக நேரத்தை அலைபேசி உரையாடலிலையே கழித்தார்கள். ஆருவோ அவள் மனதில் உள்ள காதலை கார்த்திக்கு சொல்லவும் இல்லை. கார்த்திக்கும் தன் மனதில் உண்டான காதலை ஆருவிடம் பகிரவும் இல்லை. இவ்வாறே இவர்களின் நாட்கள் நகர நிச்சயதார்த்த நாளும் வந்தது.  
  
நிச்சயதார்த்தத்தை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருக்க, உற்றார் உறவினர்கள் ஒன்றுகூடி ஆதி, கவி, மற்றும் கார்த்திக் வீட்டாரோடு அவையில் அமர்ந்திருந்தனர். 
ஆதியும், கார்த்திக்கும் பட்டு வேட்டிச் சட்டையில் அமர்ந்திருக்க, ஆருத்ராவும், கவியும் பட்டுப் புடவையில் அமர்ந்திருந்தனர். 
ஏழு நாட்கள் மிக நீண்ட கொடிய நாட்கள் போல் இருந்தது ஆதிக்கு, கவியை கண்கள் நிரப்பிப் பார்த்திருக்க, அவனின் பார்வையை தாங்காது வெட்கப்பட்டு தலைக் குனிந்த கவி அதன்பின் தலையை நிமிர்த்தவே இல்லை.  
 
கார்த்திக்கும், ஆருவும் எதிர் எதிரே அமர்ந்து கண்களாளேயே பேசிக் கொண்டிருக்க சீனுதான் அவர்களை வாரிக் கொண்டிருந்தான்.
சித்தார்த்தின் அக்காவும், கார்த்திக்கின் தாய்வழிப் பாட்டியுமான சகுந்தலாவின் அன்னையும் மற்றும் தந்தையும் வானதியின் குடும்பத்தாரோடு வருகை தந்திருந்தனர். சித்தார்த்தும் பழசையெல்லாம் மறந்து பேச கண்ணீரில் கரைந்தவாறே உருக்கமாக பேசி ராசியானார்கள் அக்காவும், தம்பியும். 
கவிக்கு பக்கபலமாக இரு மாமன்களும் இருக்க பித்யுத்தின் ஒரே அண்ணனும் குடும்பத்தோடு வருகை தர மனநிறைவோடு கல்யாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆதியின் அன்னை இளவரசி சக்கர நாட்காலியில் அமர்ந்திருக்க, அவனுக்கான சடங்குகளை மேனகையும், சக்கரவர்த்தியும் செய்ய கார்த்திக்கான சடங்குகளை வானதியும், பித்யுத்தும் செய்தனர். பெற்றோர்கள் மாலையிட்டு சந்தனம்,  பன்னீர் கொண்டு நலங்கு செய்தபின் இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப் பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு நிச்சயதார்த்த பத்திரிக்கையும் வாசிக்கப்பட்டது. 
இரு ஜோடிகளுக்கும் நிச்சயதார்த்தத் துணியும், அணிகலன்களும் வழங்கப்பட ஒரே மாதிரியான நீல நிற பட்டுப் புடவையில் பொருத்தமான அணிகலன்களோடு கவியும் ஆருவும் தயாராகி வர  பச்சைநிற கரை பட்டு வேட்டியில் தயாராகி ஆதியும், கார்த்தியும்  அமர்ந்திருந்தனர். சபையோரை வணங்கிய கவியும், ஆருவும் இருவரும் அமர உறவினர்கள் மஞ்சளரிசி தூவி ஆசிர்வதித்தனர். 
ஆதியோ அவனுக்கான மோதிரத்தை பிளாட்டினத்திலும், அதே வடிவில் தங்கத்திலான மோதிரத்தை கவிக்கும் வடிவமைக்க, கார்த்திக்கின் விருப்பப்படி அவர்களுக்கு தங்கத்திலான மோதிரங்கள் வடிவமைக்கப்பட்டு அவையில் வைக்கப்பட்டிருந்தது.  மாலையும் அணிவிக்கப்பட நிச்சயதார்த்த மோதிரம் மாற்றச் சொல்ல இரு ஜோடிகளும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைத்தவர்களாக மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்.  
வருகை தந்தோரின் வாழ்த்துக்களோடும், விருந்தும், பாட்டுக்கு கச்சேரி என்றும், அன்றைய நாள் கழிய மண்டபத்திலிருந்து அனைவரும் வீடு திரும்பினர். 
  
ஆதி கவியை ஏக்கமாக பார்த்தவாறே செல்ல கார்த்திக்கோ காரில் அமர்ந்த நொடியிலிருந்து அலைபேசி வழியாக ஆருவோடு பேச ஆரம்பித்திருந்தான்.
ஆருவின் அலைபேசியை பிடுங்கிய சீனு “டேய் மாப்புள அடங்குடா இப்படியே பேசிக்கிட்டு இருந்தா நாளைக்கு என்ன பேசுவ? நாளைக்கும் கொஞ்சம் பேச மிச்சம் வை” என்றவன் ஆருவிடம் அலைபேசியை கொடுக்காது போக்கு காட்டிக் கொண்டிருந்தான். 
நாளை கோவிலில் நடக்கும் திருமணத்துக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை வரளி நாயகி ஏவிக் கொண்டிருக்க வேலைகளும் துரிதமாக நடந்துக் கொண்டிருந்தது. இருஜோடிகளும் எப்பொழுது இரவு வரும் என்று காத்திருந்தது  எப்பொழுது விடியும் என்று கனவுகளோடு உறங்கினர்.
மன்னர் ஆட்ச்சியின் போது இந்த ஜமீனின் திருமண அழைப்பு முதலில் அரசனுக்கு அனுப்பப்படும். அரசனால் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அரசனின் அனுமதியோடும், அங்கீகாரமும் இந்த திருமணத்துக்கு கிடைத்து விட்டது என்பதற்கு சாட்சியாக அரசன் அரசு ஆணைக்கோலை அனுப்பி வைப்பான். இன்றோ அதற்கு பதிலாக திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக் கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச் சாத்தி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
வீட்டு வாசலில் முகூர்த்த கால் நட்டு பூர்ண சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண் சட்டியில் ஐந்து சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்து நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழிப்புடையதாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு பாலிகை இட்டு அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து தாம்பூலம் கொடுத்து  உபசாரம் செய்து அனுப்பி விட்டு, நடுக்கூடத்தில் முகூர்த்த அரிசி அள்ளிப்போட்டு விட்டு ஆதியும் ஆருவும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியபின் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் எந்தவொரு தடங்களும் வராது என்பது ஜமீன் குடும்பத்தாரின் ஐதீகம்.
அதே போல் தங்கள் வீட்டிலும் வானதி செய்ய கவியும், கார்த்திக்கும் பிரிந்திருந்த சொந்தங்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டபின் கோவிலுக்கு சென்றனர். 
  
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதால் இரு குடும்பத்தாரும் மாப்பிளை வீடென்றாகிப் போக, ஆதியும் கார்த்திக்கும் ஒன்றாகவே கோவிலுக்குள் வர மேளதாளத்துடன் வாண வேடிக்கையுடன் சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுத்து இரண்டு மாப்பிள்ளையையும் கோவிலுக்குள் அழைத்து சென்றனர். 
அனைத்து வளங்களும் பெற்று இவர்கள் வாழ வேண்டும் என்று இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் திலகமிட்டு மரியாதை செய்துக் கொண்டபின் தொடங்கிய காரியம் நிறைவேறும்வரை எந்தவொரு தீங்கும் மணமக்களை நெருங்க விடாமல் தடுக்கப் காப்பும் கட்டப்பட்டது.
தங்களுடைய ஊர் கோவிலில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் வரளி நாயகியும் கர்ண விஜயேந்திரனும்  உறுதியாக நின்றனர். 
பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர். அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.
மேலும், கோயிலில்/வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சாலச் சிறந்தது என்று கருதினர். 
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாகவும்  இருந்தது. 
அக்கால மக்கள் ஜாதக  தோஷமுடையவர்களும் கோவிலில் கல்யாணம் செய்துக்க கொண்டால் எந்த பிரச்சினையும் வராது என்றும் நம்பினார். எனவே, கோயில்களில் மாங்கல்யம் சூட்டிக்கொள்வதே சாலச் சிறந்தது என்று பரம்பரை பரம்பரையாக ஜமீன் திருமணங்கள் கோவிலிலையே நடைபெற்று வருகின்றன. 
ஆதி, கவி மற்றும் கார்த்திக் ஆருத்ராவின் திருமணங்களும் கோவிலிலையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  
மணமகன்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருக்க இருவரின் பார்வையும் மணப்பெண்கள் வரும் திசையை நோக்கியே இருக்க ஒரு பக்கம் கிண்டல், கேலிகள் அரகேர அதையெல்லாம் கண்டு கொள்ளாது எதோ பலவருடங்கள் சந்திக்காத காதலியை சந்திக் காத்திருக்கும் தவிப்பில் அமர்ந்திருந்தனர்.  
ஐயர் மணப்பெண்களை அழைத்து வரும் படி குரல் கொடுக்க ஆருத்ரா வெக்கப்பட்டு குனிந்த தலை நிமிராமலும், கவி ஒருவித இனம் புரியாத படபடப்போடும் தோழிகளுடன் உறவுக்கார இளசுகளும் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வந்து தங்களது துணையின் வலப்பக்கத்தில் அமர வைக்கப்பட்டனர். 
 “ஏய் ஆரு செம்மயா இருக்க…டி. எங்கடி இவ்வளவு அழகையும் ஒளிச்சு வச்சிருந்த?”ஆருத்ராவின் காதில் கார்த்திக் கிசுகிசுக்க 
அணிந்திருந்த சேலையின் நிறத்துக்கு சிவந்து போன ஆருத்ராவோ “நேத்து ஒண்ணுமே சொல்லல” என்று சினுங்க 
“நான் நேத்து உன்ன மட்டும் தான் பார்த்தேன். இன்னைக்கி நீ தூரத்துல வரும்போது அணுஅணுவா ரசிக்க முடிஞ்சது” குறும்பாக கண்சிமிட்டினான் கார்த்திக். 
ஆதியின் தோள் உரச அமர்ந்த கவி ஆதியின் அருகில் தடம் புரளும் மனதை கட்டுப் படுத்த வழி தெரியாது அமர்ந்திருக்க கவியின் தவிப்பு ஆதிக்கு புரிந்தது என்னவோ அவளை பார்த்து மெதுவாக புன்னகைத்தவன் ஆறுதலான பார்வையை வீசினான்.
இடது கை மோதிர விரலில் பவித்திரம் அணிவித்து இடக்கை மணிக்கட்டில் ரட்சாபந்தனம்  கயிறு கட்டப்பட்டு பெண் வீட்டார் ஒருவர் முன் வந்து தேங்காயும் உடைக்கப்பட்டது.
ஜமீன் பரம்பரை என்பதால் எந்த சடங்கும் விட்டுப் போகாமல் வரளி நாயகி பார்த்துப் பார்த்து  ஒவ்வொன்றாய் செய்ய மணமக்களின் பெற்றோர் இரு பகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோருக்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்தபின் 
ஆரு, மற்றும் கவியின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு  ஒன்றை கையில் கொடுத்து சக்கரவர்த்தியும், பித்யுத்தும் இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் மூன்று முறைகள் சொல்ல, இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகளின் பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று தங்கள் மகளைக் பாதுகாக்க வேண்டும் என்று தந்தைமார்கள்  வேண்டிக் கொண்டனர்.  
ஆதியின் சம்மதம் கிடைத்தவுடன் வானதி  நீர் விட்டு தாரை வார்க்க பித்யுத் கவியை ஆதியின் கரங்களில் ஒப்படைத்தான். ஆதியோ கவியின் கையை விடாது இறுகவே பற்றிப் பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான். 
இதே மாதிரி சக்கரவர்த்தியும், மேனகையும் ஆருத்ராவை கார்த்திக்கு தாரை வார்க்க அக்கணம் மங்கள வாத்தியம் முழங்க, பெண் வீட்டார் ஒருவர் முன்வந்து தேங்காய், உடைக்க, மணமகன்கள் இருவரும் தங்களது துணைவியை தானம் எடுத்துக் கொண்டனர். 
ஜமீனின் தாலியோ லட்சுமியின் திரு உருவம் பொருத்தப்பட்டு, கொடியும், தாலியும் அருகில் இருக்கும் இரு தங்க நாணயங்களும் கோர்த்து ஒன்பது பவுனில் செய்யப்பட்டிருந்தது.  
தாலியோடு கூடிய கூறைப் புடவைத் தட்டுகளை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெற எடுத்துச் செல்லப்பட்டது.
பிறகு ஆதி கவிக்கும், கார்த்திக் ஆருவுக்கும் கூறை பட்டைக் கொடுக்க, மணமகள்கள் இருவரும் உறவுக்கார பெண்களோடும், தோழிகளோடும் சென்று கூறை பட்டுடுத்தி  மீண்டும் மணவறைக்கு அழைத்து வர குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம்,குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்து கொண்டிருக்க, மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்பட்டது.
கூறைப் புடைவை அணிந்து வந்த கவியின் இடுப்பில் தர்ப்பையில் செய்த கயிற்றை “இந்த ஜமீனுக்கு மருமகளாக வரும் இவள் நல்ல மனம் கொண்டவளாகவும், சுமங்கலியாக ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று  கணவனை நல்லொழுக்கத்துடன் பின்பற்றும் விரதத்தை மேற்கொள்பவளாகவும், இவளைத் தர்ப்பையாகிய கயிற்றால், விவாகம் என்னும் புனிதமான காரியத்துக்காகக் கட்டுகிறேன்” என்று வரளி நாயகி கட்டிவிட்டு தேவதைகளை வேண்டும் தேவதா சம்பந்தம் உள்ள மந்திரம் சொல்ல
மணமகள்கள் இருவரும் மீண்டும் தங்களது வாழ்க்கைத் துணையாக வரப் போகும் மணமகன்களின் வலப் புறத்தில் அமர குறித்த சுப முகூர்த்த நேரத்தில்  இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றிய ஆதியும் கார்த்திக்கும் கெட்டி மேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்” என்ற மந்திரம் ஓதப்பட்டு கவியின் முகம் நோக்கிய ஆதி அவளின் சம்மதம் கிடைத்தபின் அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்ட, கார்த்திக்கும்  மனநிறைவோடு ஆருத்ராவின் கழுத்தில் தாலி கட்டினான்.
 தாலி முடிச்சில் குங்குமம் இட்டு குருக்கள் சொன்னது போல் ஆதியும், கார்த்திக்கும் தன் கையை பின்னால் கொண்டு வந்து ஆதி கவியின் வகிட்டில், கார்த்திக் ஆருவின் வகிட்டில் குங்குமத் திலகமிட்டனர்.
ஆருவும் கவியும் எழுந்து  “இரு மனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை வளமானதாக்குவோம்” என்ற பிரார்தனையோடு இறைவனை வணங்கியபின் தங்கள் துணைவருக்கு மாலை சூட்ட மணமகன்களும் தங்கள் துணைவியருக்கு மாலை அணிவித்தனர்.  இவ்வாறு மூன்று முறை மாலை மாற்றிக் கொண்டனர்.
 
 அதன்பின் மணமக்கள் அக்கினியை மூன்று முறை வலம் வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி “அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு ஓமக் குண்டத்தில் இட்டனர்.  
தீபாராதனை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சையை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு சந்தனம் கொடுத்து ஆசி வழங்கினார் குருக்கள்.
‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் இணை பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகன் மணமகளின் கையை பிடிக்கவேண்டும் இதனைக்  கூறியவாறு ஆதி கவியின் கையை பிடித்து நடக்க கார்த்திக்கும் ஆருவும் அவர்களைத் தொடர்ந்தனர்.
கவியின் கால் கட்டை விரலைப் பற்றி, ஆதி தன் வலது கைக் கட்டைவிரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்யும் பொழுது குருக்கள் மந்திரம் ஓத அதன் பொருளை உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
“ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன். நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் – பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம். நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம். நான் ஸாமாவாக இருக்கிறேன்.  நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்.  நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய். இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் – பிற செல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ உடன் வருவாயாக!” 
அதன்பின் மணமகன்கள் இருவரும் துணைவியர்களின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைத்து மெட்டியை அணிவித்தனர்
இரு ஜோடிகளையும் அழைத்துக் கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பித்தார்.
“பெரியவா கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்கோ” என்று குருக்கள் பணிக்க
மணமக்கள் முதலில் கர்ண விஜயேந்திரன் மற்றும் வரளி நாயகியின் காலில் விழுந்து ஆசி பெற ஆனந்தக் கண்ணீரோடு அவர்களும் ஆசீர்வாதம் செய்ய ஆதியும், கவியும் இளவரசியிடமும் ஆசிர்வாதம் வாங்கியபின் தொடர்ந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் மணமக்கள். பெரியவர்களும் நிறைவாக, மணமக்களுக்குப் அட்சதை தூவி ஆசி கூறினார்கள்
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் சேர்த்து வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கப்பட்டது.
திருமணத்தை கண்டு மகிழ மக்கள் வெள்ளம் போல் திரள, கூட்டத்தை கட்டுப் படுத்தவென ஊர் முழுக்க அங்கங்கே வெண்திரையும் பொருத்தப்பட்டு நேரடி ஒளிபரப்பாகும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
 
மனமக்களுக்காக உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு செல்ல முதலில் மணமகள் மணமகனுக்கு ஊட்ட நண்பர்களும் மற்றவர்களும் செய்த கலாட்டாவுடன் மனவிருந்து முடிந்தது.    
நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் கணையாழி தேடி எடுக்கும் சடங்கு நடைப்பெற்றது. மூன்று முறைகள் நடைபெறும் இந்நிகழ்வு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மோதிரம் எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் அவர்கள் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
கோவிலில் இருந்து வீடு சென்ற மணமக்களை இரண்டு சுமங்களிப் பெண்கள் ஆரத்தியெடுக்க வலதுகாலை வைத்து உள்ளே நுழைந்த மணமக்கள் பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி கடவுளை வணங்கி தாங்கள் ஆரம்பிக்கப் போகும் வாழ்க்கைக்காக பிரார்த்தித்தனர்.
.
அடுத்த சடங்காக வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்று உணர்த்த முதன் முதலில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாக பால், பழம் கொடுத்தனர். 
 

Advertisement