Advertisement

அத்தியாயம் 11
கார்த்திக் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். என்ற விஷயம் கேள்விப் பட்டு தஞ்சையிலிருந்து கிளம்பி இருந்தனர் ஆதியின் வீட்டார். தகவல் சொன்னது ஆருத்ரா. அவள் அழுத அழுகையில் கார்த்திக் இனி பிழைக்க மாட்டான் என்ற எண்ணமே அனைவருக்கும். 
மருத்துவமனை கட்டிலில் கண்மூடி படுத்திருந்தான் கார்த்திக். அவனது வலது கையை பற்றியவாறு ஆருத்ரா கண்ணீரில் கரைந்து விசும்பிக் கொண்டிருக்க, இடது புறத்தில் கவி அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். புத்தகத்தை படிப்பவளின் கண்களோ நொடிக்கொருதரம் கார்த்திக்கையும், ஆருத்ராவையும் பார்க்கத் தவறவில்லை.  
“இவ உண்மையாகவே அழுறாளா? இல்ல கண்ணுல க்ளிசரினை உத்தி வச்சிட்டு வாயால சவுண்ட் மட்டும் கொடுக்குறாளா? மூக்கு வேற செர்ரி மாதிரி சிவந்து போய், ஆளு வேற ஆப்பிள் கலரா மாறிட்டா. போலீஸ்காரனுக்கு பொண்டாட்டியாக போறவ இந்த சின்ன காயத்துக்கே இப்படி கண்ணீரை தண்ணீரா சிந்துராளே! இன்னும் ஆழமா கத்தி குத்தி பட்டு இன்டெர்னல் ஓர்கன்ஸ் டேமேஜ் ஆகி இருந்தா? இவ உண்மையிலயே! டாக்டருக்கு படிக்கிறாளா?” ஆருத்ராவை மொய்த்த கவியின் பார்வை இவ்வாறே இருந்தது. 
ஆருத்ராவின் அழுகைக்கு காரணம் காதல் என்பதை அறியாத கவியும் அவளை எடை போட மயக்கத்தில் இருந்த கார்த்திக்கு அந்த சத்தம் எரிச்சலை ஊட்டியதோ! கண்ணை மெதுவாக திறந்தவன் 
“ப்ளீஸ் முதல்ல அழுறத நிறுத்து, தல வலிக்குது” என்று விட்டு கண்ணை மூடிக் கொண்டான். கார்த்திக் அழுகையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட பின் ஆருத்ராவின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும் விசும்பல் ஒலி முற்றாக நிற்கவில்லை.  மெல்லிய விசும்பல் ஒலி ஆருவிடமிருந்து வந்து கொண்டிருந்தது. 
சித்தார்த்தும், பித்யுத்தும் இராணுவத்தில் இருப்பதால் இரத்த காயங்கள் கவிக்கும், கார்த்திக்கும் சாதாரண விசயமாகிப் போக, ஒரே பெண் குழந்தையான ஆருத்ரா பிறந்ததிலிருந்து தூசி கூட படாதவாறு கைகளிலையே தூக்கிக் கொண்டிருக்க, அவள் விளையாடும் போது விழுந்த சரித்திரமே! இருக்க வில்லை. 
அப்படிப்பட்டவள் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்ததன் காரணம் அன்பு மாமாவின் மரணம் தான். ஏதோ குருட்டு தைரியத்தில் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தவள் பிள்ளைப்பேறு மருத்துவராக  வேண்டும் என்ற கனவோடு இருக்க, 
“ஆரு உனக்கு இந்த துறை சரிப்பட்டு வராது” என்று ஆதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக சேர்ந்தாள். 
என்றோ ஒருநாள் பயந்து தன்னால் முடியாது என்று ஆரு பின்னங்கால் பிடரியில் பட ஓடி வருவாள் என்று ஆதி மற்றும் சீனு எதிர் பாத்திருக்க, இரண்டு வருடங்களை வெற்றிகரமாக கடந்துக் கொண்டிருக்கின்றாள். 
கவியின் மூலம் விஷயம் கேள்விப்பட்ட உடனே ராணிமா… கார்த்திக்கு தேவையானவற்றையும் அருகில் இருக்கும் கவிக்கு தேவையானவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தவர் அவனை அறைக்கு மாற்றிய பின்னபே! வீடு சென்றார். 
மாலை வீடு செல்லும் போதுதான் வானதி வந்தாள். அவளை வேண்டா வெறுப்பாக பார்த்து வைத்தாள் ஆருத்ரா.
 “சொந்த பையனாக இருந்தால் இப்படி ஏனோ! தானோ! என்று கடைசியில் வருவாங்களா? யாரோ  பெத்தவன்  தானே! அதான் இப்படி பண்ணுறாங்க, பொண்ணு வந்ததிலிருந்தே புஸ்தகம் படிக்குது, கொஞ்சமாச்சும் கண்ணு கலங்குதா? கல் நெஞ்சக்காரி” மனதுக்குள் நினைத்தவள் தன்னவனை இனி தான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள். 
“டாக்டர் என்ன சொன்னாரு?” வானதி ஆருவை ஏறிட அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள். அதைக் கண்டு கவிக்கு சுள்ளென்று கோபம் ஏற வானதி கண்ணாளையே! மகளை அடக்க 
“நாளை காலைல டிஸ்சர்ஜ் பண்ணலாம் னு சொன்னாரு” கவி அனல் பறக்க சொல்ல 
அவளை முறைத்தவாறே கார்த்திக்கின் அருகில் வந்த வானதி தலையை கோதி விட்டு “அப்பாக்கு மெஸேஜ் பண்ணிட்டேன் பா.. நீ கண்ணு முழிச்சதும் பேசுறேன்னு சொன்னாரு. கவிபாவும் பேசுவாரு. உடம்ப பாத்துக்க, டாக்டரை பாத்து நைட்டுக்கு உனக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும் னு கேட்டுட்டு செஞ்சி எடுத்து வரேன். நீ ரெஸ்ட் எடு” என்றவள் கவியிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டாள். 
ஆருவின் என்னமோ! “என்னமாதிரியான அப்பா… பையன் ஆஸ்பிடள்ள படுக்கிறான். ஒரு போன் பண்ணி கேக்காம, இவங்க சொன்னதை கேட்டுட்டு எப்படி அவரால இருக்க முடியுது?” மனதுக்குள் பொறுமியவாளின் எண்ணம் வலுப்பெற்றது.
ஆருத்ரா அறியாதது கார்த்திக்கின் நிலையை இரண்டு அப்பாக்களுக்கு போட்டோவோடு கவி குறுஞ்செய்தி மூலம் ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவையென்று அனுப்பி வைத்தாள் என்பதே!
“மாப்புள….” கத்தியவாறே! சக்கரவர்த்தியும், மேனகையும் வர பின்னால், தாத்தா பாட்டியும் வந்தனர். மேனகை ஒப்பாரி வைக்க, சக்கரவர்த்தியும் புலம்பித் தள்ள அவ்வறையே! கலவர பூமியாக கார்த்திக்கு “கத்த வேண்டாம்” என்று கத்த தோன்றியது. 
“சீ..சீ.. வாய மூடுங்க ரெண்டு பேரும். நாம என்ன எழவு வீட்டுக்கா வந்திருக்கோம்” உள்ளே வந்த சீனு அதட்ட அவன் பின்னால் வந்த நர்ஸ் அதட்டவே அங்கே சத்தம் அடங்கியது. 
டாக்டரை பார்த்து விட்டு வந்த ஆதி அறையில் உள்ள அமளி துமளியை கண்டு கவி திகைத்து நிற்பதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் வரளி நாயகியையும், கர்ண விஜயேந்திரனையும் ஒய்வெடுக்குமாறு சொல்லி வாசுவோடு அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அனுப்பி விட்டு மெதுவாக கவியை நெருங்கியவன் 
“என்ன டாக்டரம்மா.. அதிர்ச்சியாக நிக்குறீங்க? எங்க வீட்டுல தினம் இப்படித்தான்” அவள் புறம் சாய்ந்து சொல்ல 
“பெரும……. ஆஸ்பிடல்ல எப்படி நடந்துக்கணும் னு தெரியாத… வங்களா இருக்காங்க, படிச்சவர் தானே நீங்க சொல்லிக் கொடுக்களையா?” அங்கே நடக்கும் கூத்தை கண்டு சிரிப்பு எட்டிப் பார்க்க அடக்கியவாறே கவி. 
“வா வெளிய போய் பேசலாம். இவங்க அடங்க மாட்டாங்க” கவியின் கையை பிடித்தவன் வெளியே வந்து கதவை மூடி  சற்று தள்ளி சென்று அங்கே உள்ள பெஞ்சில் அமர்ந்துக் கொண்டு அவளையும் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான். 
ஆதி கையை பிடிப்பான் என்று எதிர்ப்பார்க்காத கவி அவன் தொடுகையில் எழும் படபடப்பை அடக்க வழி தெரியாமல் தவிக்கும் பொழுதே  அவள் அமர்ந்த பின் கையை விட அவன் பேச ஆரம்பித்த போது தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
கவியின் முக மாறுதல்களை ரசித்தவாறே “ஆரு சொன்ன விதத்துல கார்த்திக் ஐ.சி.யு ல இருக்கானு நினச்சேன்” ஆரு அழுத அழுகையையும் சொன்ன விதத்தையும் சொல்ல 
ஆதி தொட்ட கை குறுகுறுக்க மறுகையால் இறுக்கிப் பிடித்தவாறே அவன் சொல்வதை செவி மடுத்தவள் “இங்க வந்ததிலிருந்து கார்த்திக் கண்ணு முழிக்கிற வரைக்கும் அழுதா. இவ இப்படி இருந்தா கார்த்திக் நிம்மதியா டியூட்டி பார்க்க முடியாதே!” யோசனையாக கவி 
“அவளே! புரிஞ்சிப்பா..” ஆதி அமைதியாக சொன்னவன் “என்ன நடந்தது? எப்படி? கவியின் முகம் பார்க்க 
“ஆரு கூட கோவிலுக்கு போய் இருக்கான். வெளிய வந்தவன் சந்தேகப் பட்டு ஒருத்தன விசாரிக்க போய் ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல அவன் குத்திட்டான். அவனை புடிச்சி போலீஸ் ல ஒப்படிச்சிட்டு தான் எனக்கு போன் பண்ணான். வேற விவரம் அவன் கிட்ட தான் கேக்கணும் கத்தி ரொம்ப ஆழமா இறங்கள தையல் கூட ஐஞ்சு தான். நாளைக்கு வீட்டுக்கு போலாம் னு டாக்டர் சொல்லிட்டாரு ‘” கவி யோசனையாக சொல்ல 
டாக்டர் சொன்னது ஆதிக்கும் தெரியும் என்பதால் குத்தியவனை பற்றி சிந்தித்தவாறே “சரி நா என்ன எது னு பாக்குறேன்” அத்தோடு அப்பேச்சை முடித்துக் கொண்டவன் “ஆமா கல்யாணத்துக்கு எல்லாம் தயாரா?” சாதாரணமாக கேக்க 
“ம்ம்”
“நீ தயாரா…?” 
“ம்ம்” 
“அப்போ கல்யாணத்து பிறகு தண்டனை தருவேன்னு சொன்னேனே! மறக்கலையே!”
“…..” ஆதியின் பார்வையும் குரலும் வேறு கதை சொல்ல கவியின் இதயம் வேகமாக துடிக்க அவளிடம் பதில் இல்லை. 
அவளின் பாவனை சிரிப்பை மூட்ட நொடியில் சுதாரித்தவன் “அதான் மா… நீ மன்னிப்பு கேக்குறேன்னு சொன்னியே! நா தண்டனை தருவேன்னு சொன்னேனே!.. சரி அத விடு சாப்டியா?” கொஞ்சம் நேரத்துக்கு முன் பேசியது இந்த ஆதியா என்பது போல இருந்தது அவன் குரல்
“இல்ல … கார்த்தி கூட இருந்ததுல பசிக்கல”
“பசிக்கலயா? சாப்பிட தோனலயா?” ஆதி புருவம் உயர்த்த 
“ம்ம்.. தோணல” புன்னகைத்தவாறே கவி 
“வா கான்டீன் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வரலாம்” எழுந்துக் கொண்ட ஆதி கையை நீட்டி கவியை அழைக்க 
“தக்காளியும்.. ஐ மீன் ஆருத்ராவும் சாப்பிட்டு இருக்க மாட்டா..” எங்கே அவன் கையை பிடித்தால் தனக்குள் ஏற்படும் மாற்றம் அவனுக்கு தெரிந்து விடுமோ! என்று ஆதியின் கையை பிடிக்க தயங்க 
அதைக் கண்டு கொள்ளாது “நல்லா பேரு வைக்கிற.. அவள பத்தி உனக்கு தெரியாது கொஞ்சம் ரூமை எட்டிப் பாத்துட்டு வா” என்றவன் கண்ணடித்து சிரிக்க கவியோ அதில் மயங்கி அவன் சொல்வதை செய்ய கார்த்திக் அனுமதிக்கப் பட்டிருந்த அறையை நோக்கி சென்றாள். 
கவி கண்ணாடியினூடாக எட்டிப் பார்க்க, பின்னால் இருந்து அவள் தோள் தொட்டு எட்டிப் பார்த்த ஆதியும் “நான் சொல்லல? வா போலாம்” என்றவாறு கவியின் தோளை விடாது அணைத்தவாறே நடக்க கவியின் உடலில் மின்சார அதிர்வலைகள் பாய்ந்தன. 
சிறிது நேரத்துக்கு முன் கார்த்திக் அனுமதிக்கப் பட்ட அறையில்….
“மாப்புள…. ஐயோ… இப்படியாகிருச்சே! நான் யார் கிட்ட சொல்வேன்? நடக்க கூடாதது நடந்திருச்சே! என் பொண்ணால தான் இப்படியாகிருச்சுனு ஊரே பேசும்!” மேனகை புடவை முந்தியால் கண்களை துடைத்தவாறு பேச
“ஐயோ திருடன ஓட விட்டு சுடுவேன்னு சொன்னீங்களே! கத்தியோடு வந்தா இப்படி கத்திக் குத்து வாங்கி படுத்த படுக்கையா இருப்பீங்க னு சொல்லலையே! மாப்புள?” சக்கரவர்த்தி புலம்ப ஆருத்ரா பெருங்குரல் எடுத்து மீண்டும் அழுக ஆரம்பிக்க கண்மூடி தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் திடுக்கிட்டு எழுந்து ஒரு கணம் என்ன நடக்குது என்று புரியாமல் பாத்திருந்தான். 
மாறி மாறி மேனகையும், சக்கரவர்த்தியும் புலம்ப,  சீனு வந்து அவர்களை அடக்கிக் கொண்டு இருக்கும் போதே கார்த்திக்கிடம் வந்த தாத்தா.. பாட்டி இருவரும் நலம் விசாரிக்க தனக்கு ஒன்றுமில்லை என்று அவர்களை ஆறுதல் படுத்தகியவன் பின்னால் வந்த ஆதியிடம் “முடியல” என்று செய்கை செய்ய 
பதறியவாறே ஆருத்ரா “வலிக்குதா? ரொம்ப வலிக்குதா? டாக்டரை கூப்பிடவா”
“பொம்மு கொஞ்சம் போய் உன் மூஞ்ச பாரு அழுது யாரோ போல இருக்க, போ..போய்  முகத்தை கழுவிட்டு வா” ஆருத்ராவை அனுப்பிய ஆதி கார்த்திக்கின் முகம் நோக்கி குனிந்து, சிரிப்பை அடக்கியவாறு “இனி இப்படித்தான் இருக்கும் தம்பி… பழகிக்க”  என்றவன் தாத்தா பாட்டியை அனுப்பி விட்டு கவியோடு வெளியேற கடுப்பானான் கார்த்திக். 
“மாப்புள போலீஸ் இல்ல இதெல்லாம் அவருக்கு சாதாரண காயம். உங்களுக்கு இப்படியாகிருச்சே னு சாப்பிடாம வேற வந்துட்டோம் பசி உயிர் போகுது” சக்கரவர்த்தி வயிறை தடவியவாறு சொல்ல 
“ஆமாம் மாப்புள ஆனா.. சாப்பாடை கையோட கட்டிக் கொண்டு வந்துட்டோம்” மேனகை தான் எதோ பெரிய சாதனை செய்தது போல் சொல்ல கார்த்திக் ஆருத்ராவைத் தான் முறைத்தான். 
“நான் கூட சாப்பிடல, என்ன கொண்டு வந்த?” இது சீனு.
“அரு குட்டி  நீ சாப்பிட்டியா?” சக்கரவர்த்தி ஆருத்ராவின் கன்னங்களை தடவியவாறே செல்லம் கொஞ்ச 
“எங்க பா.. இவரோடு கோவில் போய்.. பீச் போய் அப்படியே எங்கயாச்சும் நல்ல ஹோட்டல் போய் சாப்பிடலாம் னு நினச்சேன். அதுக்குள்ளே இப்படி ஆகிருச்சு” 
“நா என்ன கொண்டுவந்த னு கேட்டேன்” சீனு அன்னையை அதட்ட 
“இருடா….” என்றவள் ஒவ்வொரு பாத்திரமாக திறக்க 
“ஐ… நாட்டுக்கு கோழி குழம்பு” சீனு 
“கத்திரிக்கா கூட்டு” ஆரு 
“பீன்ஸ் வறுவல்” சீனு 
“மூள அவியலா?” ஆரு 
“அப்பளம், தயிர், சாம்பார், மிளகு ரசம்.. எதையுமே விடலையா? பைல விருந்தே வச்சிருக்கியே! சீக்கிரம் போடு பாக்கும் போதே பசி பத்திக் கிட்டு வருது” 
“இருடா மகனே இன்னும் ஒரு பை இருக்கு” சொல்லியவாறே மேனகை இன்னொரு பையில் இருந்த அனைத்தையும் வெளியே கடைப் பரப்ப கார்த்திக்கின் அறையில் இருந்த சோபாவில் அனைவரும் அமர்ந்துக் கொண்டனர். 
“சரியான லூசுக் குடும்பம்” என்று திட்டிக் கொண்டிருந்த கார்த்திக்கும் சாப்பாட்டின் வாசனை பசியை தூண்ட அவர்களை ஏக்கமாக பார்த்தான் 
ஒரு பெரிய தட்டில் அனைத்தையும் அடுக்கி ஆருத்ராவின் கையில் கொடுத்த மேனகை “மாப்புளைக்கு ஊட்டியவாறே நீயும் சாப்பிடு” என்று சொல்ல 
“தட்டை வாங்கிக் கொண்டவள் அவசர அவசரமாக பிசைந்து ஒரு வாயை உள்ளே தள்ளி “அவர் பாஸ்டிங் ல இருக்குறாரு இன்னும் நாலு மணித்தியாலத்துக்கு சாப்பிட கூடாது” என்றவாறே முழுங்க 
“கிராதகி” கார்த்திக் வாய்க்குள் கடித்துத் துப்ப 
“ஐயோ பாவமே! அவர் பாத்துக் கொண்டு இருக்கும் போது நாம சாப்ட்டா வயிறு வலிக்காது?” சக்கரவர்த்தி சத்தமாக சிரிக்க, 
“டேய் லூசு அப்பா… அவரே வலில கஷ்டப்பப்படுறாரு. அவரை போய் கலாய்ச்சிக் கிட்டு, பேசாம சாப்பிடு”
“ஏன் மாப்புள உங்கள பார்க்க வச்சி நாம சாப்பிடறது நல்லாவா இருக்கு” மேனகை கார்த்திக்கிடமே ஆலோசனைக்கு கேக்க 
“நீங்க சாப்பிடுங்க அத்த எனக்கு தூக்கம் வருது” என்றவன் திரும்பி கண் மூடி படுத்துக் கொண்டான். அதன் பின் அங்கே சிரிப்பலைகளோடு பாத்திரங்களின் ஓசைதான் கேட்டது. அக்காட்ச்சியை பார்த்து விட்டே ஆதியும், கவியும் கான்டீன் நோக்கி நடந்தனர். 
“ஆமா உங்க அத்த குடும்பத்த எப்படி சமாளிக்கிறீங்க?” கவி யோசனையாக 
“சின்ன வயசுல இருந்தே பார்த்து பழகிட்டதால அவங்கள புரிஞ்சிக்க முடியும். சமாளிச்சிடுவேன். என்ன சாப்பிடுற?”
“உங்க அத்த கட்டிக் கொண்டு வந்ததுல ஏதாவது மிச்சம் மீதி இருக்கும் காபி மட்டும் போதும்” 
“ஹாஹாஹா அப்போ அங்கேயே சாப்பிட்டு இருக்கலாமே! நாம போகும் போது வெறும் தட்டுதான் மிஞ்சும். நானும் சாப்பிடல உனக்கு என்ன பிடிக்கும் னு சொல்லு சேர்ந்து சாப்பிடலாம்” 
“தோசை சொல்லுங்க” 
தன் மனதுக்கு பிடித்தவளோடு இன்னும் சிறிது நேரம் இருக்கவே அவளை அழைத்துக் கொண்டு கான்டீன் வந்தான் ஆதி.  அவனுக்கு இருக்கும் வேலைப் பளுவில் அவளைக் காண தஞ்சையிலிருந்து புறப்பட்டு வருவது நடக்காத காரியம். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட அவன் தயாராக இல்லை. கவியை பற்றி எல்லா விஷயங்களையும் அறிந்துக் கொள்ள ஆவல் இருக்க அலைபேசியில் அவளோடு சரியாக பேச நேரம் கிடைப்பதில்லை. கார்த்திக்கிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்றாலும் தனக்கும் கவிக்கும் இடையில் பாலமாக யாரும் இருக்க ஆதி விரும்ப வில்லை.  
“உனக்கு என்னெல்லாம் பிடிக்கும்” சாப்பிட்டவாறே ஆதி கேள்விகளை தொடுக்க 
“எதுல?”
“சாப்பாடு, ஸ்போர்ட், பூ, பழம், நடிகர், எல்லாம் சொல்லு..”
“இங்க? இப்பொவேவா?”
“ஏன் லிஸ்ட் நீண்டு கொண்டே போகுமா? இடம், நேரம், காலம் பாக்குற? கல்யாணத்து அப்பொறம் பேச நேரம் இருக்காது” கடைசி வாக்கியத்தை அழுத்தி சொல்ல 
“….” ஆதியின் குரலின் வித்தியாசத்தை ஆராய்ந்தாள் கவி. 
“நா ஒரு எம்.எல்.ஏ மா… ரொம்ப பிசியா இருப்பேன் அத சொன்னேன். நீ என்ன நினைச்ச” அவளின் ஆராச்சியை முடக்கி அவளையே மடக்கினான் கேடி எம்.எல்.ஏ. 
“ஊற ஏமாத்துற னு சொன்னதுக்கே தாம், தூம் னு குதிச்சான் இவன் வேற அடிக்கடி புரியாத பாஷைல பேசுறான். சந்தேகப் படுறேன் னு சொன்னா மலையேறுவான்” கவியின் மனம் அலர்ட் பண்ண. 
“சாப்பாட்டுல எல்லாம் பிடிக்கும், ஸ்போர்ட் கிரிக்கட், தளபதி மட்டும் தான் புடிக்கும், பூல ரோஜா,, மல்லி.. பழம்.. எல்லாம் தான்.. வேற என்ன பிடிக்கும் னு யோசிச்சு கிட்டு இருந்தேன்” ஆதியின் கேள்விக்கு மழுப்பி பதில் சொன்னாள் கவி. 
“என்னையே மடக்க பாக்குறாளே!” புன்னகைத்தவாறே ஆதி “எனக்கு என்னெல்லாம் பிடிக்கும் னு கேக்கவே இல்லையே! கேக்க தோணலயா? கேக்க பிடிக்கலையா?”
ஆதியின் கேள்வி கவியை குற்றம் சாட்டுவது போலையே இருக்க, கல்யாணம் பேசிய நாளிலிருந்து அவனின் பதவி கண்ணை உறுத்த அவன் பேசி விட்டு சென்ற அன்று மனதில் இருந்த சஞ்சலம் நீங்கினாலும், கல்யாணம் செய்து கொள்ள போகிறவனை பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவல் தன்னிடம் தோன்றவில்லை என்பது ஆதி கேட்ட பின் தான் கவிக்கு புரிந்தது. 
சற்றும் தயங்காமல் “உண்மையிலயே தோணல. நீங்களே சொல்லுங்க” 
“நான் சொல்லி நீ தெரிஞ்சிக்கிறத விட கல்யாணத்துக்கு பிறகு தானா தெரிஞ்சிக்கும் பொழுது சுவாரஸ்யம் இருக்கும்” அதே புன்னகை முகம் மாறாமல் ஆதி. 
“அடப்பாவி அரசியல்வாதி னு நல்லாவே ப்ரூப் பண்ணுறான். என் கிட்ட எல்லாம் கேட்டுட்டு அவனை பத்தி தானா தெரிஞ்சிக்கவாம்” கவி  மனதில் நினைக்க, அவளின் முகம் அவள் நினைப்பதை காட்டிக் கொடுத்ததோ! 
“நான் உன்ன காதலிக்கிறதால உன்ன பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும் னு ஆச படுறேன். நீ என்ன பத்தி தெரிஞ்சிக்கும் போது காதலிக்க ஆரம்பிச்சிடுவ. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு அம்மு மா..” மனதில் நினைத்தவன் முகத்தில் காட்டாது 
“டி, காபி ஏதாவது சாப்பிடுறியா?”
“காபி…”  “மனசுல என்ன நினைக்கிறான்னே கணிக்க முடியல கவி உன் பாடு திண்டாட்டம் தான்” மனதில் நினைத்தவாறே!
“நீங்க பார்மல் டிரஸ் போடவே மாட்டீங்களா?”  அதிமுக்கியமான கேள்வியை கேக்க 
“போடுவேன். அன்னைக்கி ரெஸ்டூரண்ட்டுல போட்டிருந்தேன்!” 
“நா எங்க ட்ரெஸ்ஸ பாத்தேன்” கவி வாய் விட்டே முணுமுணுக்க, 
அவர்கள் சந்தித்த அன்று நடந்தவைகள் இருவரின் மனக்கண் முன் தோன்ற முகம் புன்னகையை பூசிக்க கொண்டது. 
காபியை மெதுவாக ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்ட பின்னே கார்த்திக்கின் அறையை நோக்கி நடந்தனர் இருவரும். 

Advertisement