Advertisement

“அம்மா நாளைக்கு ஹாஸ்பிடல் போய் எல்லா டெஸ்ட்டும் பண்ணிடலாம் என்ன?” என்றாள். 

இந்த மட்டுக்குமாவது இறங்கி வந்தாளே என நினைத்த புவனா அமைதியாக இருக்க… ரேஷ்மா உள்ளே சென்று விட்டாள். 

“இவ மட்டும் அருளைப் பார்த்து அப்படிச் சொல்லி இருந்தா, அவன் என்ன பண்ணி இருப்பான்?” ஸ்ரீநிவாஸ் கேட்க, 

“வேற என்ன? வாங்க அத்தை நம்ம வீட்டுக்கு போவோம்ன்னு என்னை இழுத்திட்டு போயிருப்பான்.” என்றார் புவனா சிரிப்புடன். 

“ஆனாலும் நீ உங்க அண்ணன் மகன் வந்ததும், கேட்க ஆள் இருக்குன்னு தெம்பாத்தான் இருக்க…” 

“என்ன இருந்தாலும் சின்னதுல நான் தானே அவனை வளர்த்தேன். அந்தப் பாசம் இருக்கும் இல்ல… அதோட மாதவன் இங்க இருந்தா அவனும் இப்படித்தான் இருந்திருப்பான்.” புவனா சொன்னதற்கு அமோதிப்பது போல… ஸ்ரீநிவாஸ் அமைதியாக இருந்தார். 

ரோஜா கர்ப்பமாக இருப்பதால் தேவி எப்போதாவது பார்க்க வருவார். ரோஜா அவரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் பேசிக்கொண்டு இருப்பாள். 

அவள் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள் என்பது கூடத் தேவிக்குப் பெரிதாக இல்லை. “காலேஜ் போற போல..” எனக் கேலியாகத் தான் கேட்டார். இவள் படித்து அப்படி என்ன ஆகிவிடப் போகிறாள் என்ற இளக்காரம். 

அதற்கு எல்லாம் சேர்த்து மலர் பெரிய ஆப்பாக வைத்தாள். அவள் படித்த கல்லூரியில் வேலைப் பார்க்கும் இளநிலை பேராசிரியரை விரும்பினாள். அவர்கள் வேறு ஆட்கள். அந்தப் பையன் வீட்டிற்கே வந்து தைரியமாக உட்கார்ந்து பேசினான். 

“நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலைனா.. நாங்களே பண்ணிப்போம். அது உங்களுக்குதான் அவமானம்.” என்றான். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டியதாகத்தான் இருந்தது.

தேவி புவனாவிடம் மாப்பிள்ளையைப் பற்றி ஹாஹா… ஹோஹோ… எனப் புகழ… ஏற்கனவே கலை எல்லாவற்றையும் அருளிடமும், புவனாவிடம் சொல்லி இருந்தார், இருந்தாலும் நமக்கு என்ன எனக் கண்டு கொள்ளாமலே விட்டனர். 

“பரவாயில்லை, ரேஷ்மா கொஞ்சம் துடுக்கான பெண் தான். ஆனா அவளா எல்லாம் மாப்பிள்ளை தேடிக்களை… வீட்ல பார்க்கிறாங்கன்னு தானே இருக்கா… நாம பரத்தை சொன்ன போது கூடப் பண்ணிகிறேன்னு தானே சொன்னா…பவித்ராவும் அப்படித்தான். ஆனா இந்த மலர் மட்டும் ஏன் இப்படிப் பண்ணா?” எனக் கலை சொல்லிவிட,
அதில் தேவி ரொம்பக் காண்டாகி, கண்டபடி கலையைப் பேசிவிட… தன் மகளைச் சொன்னது செல்வத்திற்கும் கோபம். அதனால் அவர் மனைவி பேசியதை தடுக்கவில்லை. 

கோபத்தில் கலை பேரனின் வீட்டிற்கு வந்துவிட்டார். தேவியும் கண்டுகொள்ளவில்லை. 

கலை மன வருத்தத்தில் இருக்க… “என்ன பாட்டி எங்களோட இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா… இவகிட்ட போய் இருக்கிறதான்னு நினைக்கிறீங்களா? இது உங்க மகன் வீடு, பேரன் வீடு தானே…” ரோஜா சொல்ல… 

“அப்படி இல்லைமா, வயசானவ எதோ தெரியாம சொல்லிட்டேன்னு விடாம, எப்படிப் பிடிவாதமா இருக்கா… எங்க மகனும் அவ பேச்சை தானே கேட்கிறான்.” கலை புலம்ப… 

“எங்களுக்கும் உங்களை விட்டா யாரு இருக்கா பாட்டி, எனக்கும் அப்பா அம்மா இல்லை. அவளுக்கும் இல்லை. நீங்க எங்களோட இருந்தா… எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.” என்றான் அருள். 

சாரதி அங்கேயும் கலை இங்கேயுமாக இருந்தனர். அருள் சாரதியையும் இங்கே தான் இருக்கச் சொன்னான். “வேண்டாம் டா எதோ சண்டை போட்டு விலகின மாதிரி ஆகிடும். அதோட ராஜீவ் என்னை விட்டு இருக்க மாட்டான்.” என்றார். 

தேவி மாமியார் சென்றது நல்லது என நிம்மதியாக இருந்தார். ஆனால் பேச்சுக்குப் புவனாவிடம், “நாங்க அவங்களைப் போகச் சொல்லலை, அவங்களா தான் போனாங்க. அதனால அவங்களே வரும் போது வரட்டும்.” என்றார். 

“பரவாயில்லை நீ கூப்பிடாத, இங்க இருந்ததை விட… அங்க நல்லா இருக்காங்க. கொள்ளுப்பேரன் வேற வரப்போறான், அவனை வளர்த்திட்டு இருக்கட்டும். இத்தனை நாள் உன் பிள்ளைகளை வளர்த்தாங்க. இனி அவனுக்குப் பண்ணட்டும்.” எனப் புவனா பதிலுக்கு நன்றாகவே குத்தினார். 

“உங்க அக்காகிட்ட தான் பேச கத்துக்கணும்.” என்றார் தேவி தன் கணவரிடம். மலரின் படிப்பு முடிந்ததும், திருமணம் எனப் பேசி வைத்திருந்தனர். 

ரேஷ்மாவுக்கு ஒரு நல்ல இடம் வர… மாப்பிள்ளை வீடு பார்க்க, அருளும் அவர்களோடு சென்றிருந்தான். பையன் சொந்த பிசினஸ் செய்தான். அதுதான் எப்படியோ என யோசனையில் இருந்தனர். அருள் தான் பையனோடு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தான். 

வரும் வழியிலேயே சொல்லிவிட்டான். “நல்ல திறமை இருக்கு. நல்லா நம்பிக்கையா பேசுறான். பின்னாடி இன்னும் நல்லா வருவான். பெண்ணைக் கொடுங்க.” என்றான். 

ரேஷ்மாவுக்கும் பையனை பிடித்து விட அந்த இடமே முடிவானது. ரோஜாவின் பிரசவத்திற்கு முன் திருமணத்தை வைக்க நாள் குறித்தனர். நாத்தனாரின் திருமணம் ஆயிற்றே பவித்ரா ஒரு மாதத்திற்கு முன்பே வந்திறங்கினாள். 

தங்கை வந்ததும் தான் அருள் ரோஜாவுக்கு வளைகாப்பும் செய்தான். வீட்டிலேயே முக்கியமானவர்களை மட்டுமே அழைத்துச் செய்தனர். வளைக்காப்பு முடிந்ததும், நாத்தனாரின் திருமணதிற்கு மாமியாருக்கு உதவப் பவித்ரா அங்கே சென்று விட்டாள். 

ரேஷ்மாவுக்கும் பவித்ராவுக்கும் நன்றாக ஒத்துப் போகும், ரோஜா விஷயத்தில் தான் இருவரும் முட்டிக் கொண்டனர். இப்போது மீண்டும் இருவரும் ஒன்றாக இருந்தனர். 
ரேஷ்மாவின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிய… பவித்ரா ரோஜாவின் பிரசவம் முடிந்து தான் கிளம்புவதாக இருந்தது. 

“நீ தனியா போவியா மாதவனோட போயேன்.” அண்ணன் சொன்னதற்குப் பவித்ரா மறுத்து விட்டாள். 

“பாட்டியால வேலை எல்லாம் பண்ண முடியாது. நான் கொஞ்ச நாள் இருந்தா தான் சரியா வரும். எனக்கும் குட்டீஸ் பார்க்க ஆசையா இருக்கும் இல்ல…” 

“நீ அங்க இருந்து என்னனென்னவோ வாங்கிட்டு வந்த, ஆனா ஒண்ணுமே எங்களுக்குக் காட்டலை…” 

“அது பாட்டி தான் சொன்னாங்க. குழந்தை நல்ல படியா பிறக்கட்டும் அதுக்குப் பிறகு எடுக்கலாம் சொல்லிட்டாங்க.” 

“சரி, பாட்டி சொன்னா எதாவது காரணம் இருக்கும்.” 

ரோஜாவின் கடைசி ஒருமாதம், பவித்ரா உடன் இருந்ததால்தான் உண்மையில் சமாளிக்க முடிந்தது. பவித்ரா வீட்டை பார்த்துக்கொள்ள… பாட்டி அவளுக்கு உதவினார். ரோஜாவால் ஒரு இடத்தில் உட்கார முடியாமல் திணறி விட்டாள். எப்போது குழந்தை பிறக்கும் என்றாகிவிட்டது. 
கொடுத்த தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் அவளுக்கு வலி வர… அருள் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்ப… பாட்டி பவித்ராவை உடன் செல்ல விடவில்லை. 

“ஏன் பாட்டி?” என்ற அருளிடம். 

“ரோஜா வலியில துடிக்கிறதைப் பார்த்தா இவ பயந்துக்காவா டா.. அவ மாசமா இருக்கும் போது, அதை நினைச்சு பயந்திட்டே இருப்பா… அவ இங்க இருக்கட்டும். நான் புவனாவை வர சொல்றேன்.” என்றார். 

அருளும் புவனாவும் மருத்துவமனையில் இருக்க… ரோஜா மதியம் வரை வலியில் மிகவும் சிரமப்பட்டு விட்டாள். மதியத்திற்கு மேல் ரோஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அங்கே மகிழ்ச்சி மட்டுமே. 

ரோஜா குழந்தையுடன் வீட்டிற்கு வர… குழந்தை பிறந்தது தெரிந்து உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து விட்டு சென்றனர். 

பவித்ராவுக்குதான் அதிக வேலை. வீட்டையும் பார்க்க வேண்டும் வரும் விருந்தினர்களை உபசரிக்கவும் வேண்டும். ஆனால் சின்ன முகச் சுளிப்புக் கூட இல்லாது பவித்ரா செய்தாள். ரோஜாவுகுத்தான் கஷ்ட்டமாக இருக்கும். அவள் அருளிடம் தான் புலம்புவாள். 

“பாவம் அவங்க எல்லா வேலையும் செய்றாங்க.”
குழந்தையின் உடை என்பதால் பவித்ரா அவளே துவைக்க, அருள் வந்தவன், “எங்களால உனக்கு ரொம்பக் கஷ்ட்டம் இல்ல.. நீ தான் நிறைய வேலை பார்க்கிற.” என்றான். 

“நான் யாருக்குப் பார்க்கிறேன். உனக்குத் தானே அண்ணா. இல்லை நமக்குப் பார்க்க வேற யாரு இருக்கா சொல்லு… நாமே பார்த்துக்க வேண்டியது தான். உனக்கு நான், எனக்கு நீ.” 

“நீ எனக்காகச் சொல்ற, உன்னைப் புவனா அத்தை அப்படியெல்லாம் விட மாட்டாங்க பவித்ரா.” அது என்னவோ உண்மை தான். 

“இப்ப நான் இங்க இல்லைனா இதெல்லாம் யாரு செய்வா?” பவித்ரா கேட்க, 

“ரோஜா செய்ய முடியாது. நான்தான் செய்யணும்.” 

“உனக்குப் பதில் நான் செய்றேன்னு போய்ச் சொல்லு உன் பொண்டாட்டிகிட்ட… அவங்களை நிம்மதியா இருக்கச் சொல்லு…. நம்ம அம்மா இருந்தா செய்ய மாட்டாங்களா?” 
முப்பது நாள் ஆனதும், எல்லோரையும் அழைத்து பெரிய ஹோட்டலில் பெயர் சூட்டு விழாவை சிறப்பாக நடத்தினர். 

பவித்ரா இரண்டு மாதங்கள் வரை இருந்துவிட்டே அமெரிக்கா கிளம்பினாள். அவளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே ரோஜாவுக்கு தெரியவில்லை. அவள் மட்டும் இல்லாது இருந்தால்.. தான் எவ்வளவு சிரம பட்டிருப்போம் என அவளுக்கு நன்றாகத் தெரியும். இந்த நன்றியுணர்ச்சி அவளுக்கு எப்போதுமே பவித்ராவிடம் இருக்கும். 

“இந்தக் குட்டியோட ரெண்டு மாசம் ஜாலியா இருந்தேன், இப்ப அங்கப்போனா அத்தைக்குப் போர் அடிக்கும். நீயும் என்னோட வரியா?” பவித்ரா மருமகனை கையில் வைத்துக் கொஞ்ச… 

“உனக்கு வேணும்ன்னா நீயே ஒன்னு பெத்துக்கோ.” என்றார் பாட்டி. பவித்ரா பதில் சொல்லாது சிரித்தபடி கிளம்பிவிட்டாள். 

அதன்பிறகு அருளுக்கும் ரோஜாவுக்கும் நாட்கள் வேகமாகச் சென்றது என்பதை விடப் பறந்தது. இரண்டு பேர் என்பது மாறி, இப்போது மகனுடன் ஒரு முழுக் குடும்பம் ஆகி இருந்தனர். 

மகன் வயிற்றில் ஏழு மாதமாக இருந்த போது முதல் வருட பரிட்சையை எழுதி முடித்து இருந்தாள். எல்லாவற்றிலும் பாஸ் ஆகி விட்டாள். இரண்டாம் வருத்திற்கு இப்போதுதான் வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தாள். கலை இருந்ததால் கவலை இல்லை. 

அதிகாலையே எழுந்துகொள்ளும் அவர்களின் மகன், தந்தையோடு ஒரு ஆட்டம் போட்டு விடுவதால்… காலை உண்டதுமே கண்ணைக் கசக்குவான். 
ரோஜா வகுப்புக்கு கிளம்பும் முன் பாலைக் கொடுத்துத் தொட்டிலில் போட்டு விட்டு சென்றால்… எப்படியும் இரண்டு மூன்று மணி நேரம் நன்றாகத் தூங்குவான். அப்படியே எழுந்தாலும் கலை பார்த்துக் கொள்வார். அதனால் நிம்மதியாக இருப்பாள். 

கலைக்கு ரோஜா அதிக வேலைகள் எல்லாம் வைக்க மாட்டாள். காய் கறிகள் நறுக்கிக் கொடுப்பார். மற்ற நேரம் எல்லாம் பேரனை வைத்துக் கொண்டு இருப்பார் இல்லையென்றால் டிவி பார்ப்பார். 

வெகு நாட்களாகவே ரோஜாவின் மனதிற்குள் ஒரு தவிப்பு. இங்க வந்ததும் தன் அடையாளம் முற்றிலும் மறைந்து போனதா… அல்லது நாமே மறந்து விட்டோமா என்று… தன்னுடைய முந்தைய வாழ்க்கை கனவு போல இருந்தது. அதை அருளிடம் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் இருந்தாள். 

Advertisement