Advertisement

உப்புக் காற்று 


இறுதி அத்தியாயம் 1

இருவரும் சாப்பிட்டு முடிக்க, பவித்ராவும் மாதவனும் வீடியோ காலில் வந்தனர். 

“என் தங்கச்சி என்னை நம்ப மாட்டா… எப்பவும் வீடியோ கால் தான் செய்வா… எங்க நான் திரும்பக் கடலுக்குப் போயிருக்கப் போறேனோன்னு பயம்.” என ரோஜாவிடம் சொல்லியபடி தொடர்பை ஏற்றான். 

“டேய் ! என்னடா இப்படி என்னை ஒரு காட்டுவாசிக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க…” பவித்ரா சொல்ல… அருள் சிரித்தான். ஏனென்றால் பவித்ரா இருக்கும் இடம், நகரத்தை விட்டு வெளியே கிராமம் போலத்தான் இருக்கும். 

“எப்படி அண்ணி அங்க தனியா இருக்கீங்க போர் அடிக்கலை…” 

“நான் படிச்சிட்டு இருக்கேன் ரோஜா… இங்க ஒரு பரீட்சை எழுதிட்டா… நானும் இங்க வேலைக்குப் போகலாம்.” என்றாள் பவித்ரா. 

சிறிது நேரம் பேசியவர்கள், மாதவன் அலுவலகம் கிளம்ப வேண்டும் என வைத்து விட்டனர். பவித்ராவும் ரோஜாவும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை பேசி விடுவார்கள். 

இன்று ராஜீவுடன் பேசியது, பவித்ரா சொன்னது எல்லாம் வைத்து, “நானும் மேல படிக்கட்டுமா…” என ரோஜா சொல்லிவிட்டு அருள் என்ன சொல்வானோ என்பது போலப் பார்க்க… 

“படி.. யாரு வேண்டாம்ன்னு சொன்னா….” என்றதும், ரோஜாவின் முகம் மலர… 
“இங்க பக்கத்திலேயே காலேஜ் இருக்காம். நாம நாளைக்கே போகலாமா…” என்றாள் ஆர்வமாக. 

மனைவியின் அலும்பு தாங்காமல், “சரி..” என்றான் அருள் சிரித்துக் கொண்டே… 

மறுநாள் காலை அருள் இருக்கும் போதே, வீட்டிற்கு வந்த கலை… “ரோஜாவை கூடிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடுப்பா…” என்றதும், இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. திடிரென்று எதற்கு மருத்துவமனைக்கு எனக் குழப்பத்தில் பார்த்தனர். 

“ரோஜா இங்க வந்து இன்னும் குளிக்கலை… நானும் பத்துநாள் போகட்டும்ன்னு இருந்தேன்.” என்றதும்தான், விஷயம் இருவருக்கும் உறைத்தது. 

அப்படியும் இருக்குமோ என்ற ஆர்வத்தில் அருள் அப்போதே ரோஜாவை மருத்துவமனை அழைத்துக் கொண்டு சென்றான். டெஸ்ட் எல்லாம் எடுத்துக் கர்ப்பம் என உறுதி படுத்திவிட… 

“நாற்பத்தைந்து நாள் ஆச்சு, ஆனா இவளுக்கு வாந்தி தலை சுத்தல் ஒண்ணுமே இல்லையே…” என அருள் மருத்துவரிடம் கேட்க, 

“எல்லோருக்கும் அப்படி இருக்காது.” என்றார் மருத்துவர். இருவரும் அவரிடம் மற்ற விவரங்கள் கேட்டுவிட்டு வெளியே வந்தனர். 

அருளுக்கு இந்த விஷயத்தை முதலில் பவித்ராவிடம் தான் சொல்ல என நினைத்தான். அவள் உறங்க சென்றிருப்பாள் எனத் தெரியும் இருந்தாலும் பரவாயில்லை என அழைத்தான். 

“என்ன அண்ணா இந்த நேரத்தில கூப்பிட மாட்டியே…” 

“இல்லை ஒரு குட் நியூஸ் அதுதான் உனக்கு முதல்ல சொல்லலாம்ன்னு…” 

என்னோவோ எனப் பயந்து போயிருந்த பவித்ரா நல்ல செய்தி என்றதும், பதட்டம் வடிந்து, சிறு புன்னகையுடன் கட்டிலில் நன்றாகச் சாய்ந்து உட்கார… பக்கத்தில் மாதவனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். 

“என்ன சொல்லு?” 

“இரு ரோஜா சொல்வா…” என அருள் ரோஜாவிடம் கொடுக்க…
அவளுக்கு மட்டும் வெட்கமாக இருக்காதா… “நீங்களே சொல்லுங்க.” என்றாள். 

“யாரவது ஒருத்தர் சொல்லுங்களேன்.” பவித்ரா ஆர்வம் தாங்காமல் கேட்க, 

“குட் நியூஸ் சொல்றார் புரியலையா… என்ன குட்டீஸ் வருதா இருக்கும்.” என்றான் மாதவன் சரியாக. 

“ஆமாம் அதுதான்.” என்றான் அருள். 

“ஓ… நான் ரொம்ப ஹாப்பி. நான் இப்ப இருந்தே குட்டிக்கு ஷாப்பிங் பண்ணுவேன்.” பவித்ரா சொல்ல… 

“வாழ்த்துக்கள் மச்சான்.” என்றான் மாதவன். 

அருள் ரோஜாவிடம் கொடுக்க… “பார்த்து இருங்க அண்ணி. நீங்க பாட்டி சொல்றபடி கேளுங்க. நமக்குப் பாட்டி இருக்காங்க கவலையில்லை.” பவித்ரா சொன்னதற்கு ரோஜா சரி என்றாள். 

“சரி டி நாங்க இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்கோம். நான் நைட் கூப்பிடுறேன்.” 

“சரி அண்ணா…” 

அருள் மகிழ்ச்சியுடன் இருக்க.. ரோஜா முகம் வாடி தெரிய… 

“என்ன ரோஜா ஏன் ஒருமாதிரி இருக்க?” அருள் என்னவோ எனப் பயந்து போய்க் கேட்க, 

“இனிமே நான் காலேஜ் போக முடியாது இல்ல…” என்றவளின் கண்கள் கண்ணீரை சிந்த… அருளுக்குக் கஷ்ட்டமாகப் போய்விட்டது. 

படிக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெண். இப்போதும் எங்கே படிக்க முடியாதோ என்ற அவளின் கவலை நியாயமானதே… 

“ஏன் போக முடியாது? தினமும் காலேஜ் போகணும்ன்னு எல்லாம் இல்லை. வாரக் கடைசியில மட்டும் போற காலேஜ் எல்லாம் இப்ப இருக்கு. வா நான் உன்னைச் சேர்த்து விடுறேன்.” என்றான். 

“இந்த மாதிரி நேரத்தில போகலாமா?” 

“கர்ப்பமா இருக்கிற பொண்ணுங்க வேலைக்கே போறாங்க. எவ்வளவு பொம்பளைங்க கட்டட வேலை பார்க்கிறாங்க. நீ உட்கார்ந்து தானே படிக்கப் போற… ஒன்னும் ஆகாது வா…” என்றவன், வீட்டின் அருகே இருக்கும் கல்லூரி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றான். 

தபால் வழிக் கல்வி தான். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வகுப்புக்கு வர வேண்டும் என்றனர். அறை நாள் மட்டுமே வகுப்பு. 

“எனக்குக் கணக்கு தான் பிடிக்கும். நான் கணக்கே எடுத்துக்கிறேன்.” என்றாள் ரோஜா. 

இன்னும் ஆறு மாதங்கள் தான் இருந்தது. முதல் வருட பரிட்சைக்கு, பரவாயில்லை எனச் சேர்த்துக் கொண்டனர். 

“இந்தத் தடவை பரீட்சை எழுது. மார்க் குறைஞ்சா பரவாயில்லை. அடுத்தத் தடவை பார்த்துக்கலாம். மூன்னு வருஷத்தில முடிக்கணும்ன்னு இல்லை… நாம பொறுமையா பத்து வருஷத்தில கூட முடிச்சுக்கலாம்.” வரும் வழியில் அருள் கேலி செய்ய… 

“அது நீங்க, நான் இல்லை.” என்றாள் ரோஜா துடுக்காக…… அருளுமே அலுவலகத்தில் எல்லாம் இப்போது கணினி மயம் என்பதால்… தனது அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் ஒரு பையனிடமே… ஓய்வு நேரத்தில் கணினி கற்றுக் கொள்கிறான். 

படிப்தற்கு வயது தடையே இல்லை… கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் இருக்க வேண்டும். 

குழந்தை வேறு உண்டாகி இருப்பதால்… அதோடு கல்லூரியில் வேறு சேர்ந்திருப்பதால்… ரோஜாவை கையில் பிடிக்க முடியவில்லை. கலை வீடு துடைக்கும் பெண்ணிடமே, மற்ற வீட்டு வேலைகளையும் செய்து கொடுக்கச் சொல்லி விட்டார். சமையல் ஒன்று தான். அதுவும் அருளும் காலையில் எழுந்து மனைவிக்குச் சமையலில் உதவுவான். அதனால் நிம்மதியாகக் கல்லூரி சென்று வந்தாள். 

காலையிலயே டிபன் செய்யும் போதே, குழம்பு பொரியல் எல்லாம் வைத்து விடுவாள். சாதம் மட்டும் மதியம் வந்து வைப்பாள். ஒருநாள் விட்டு ஒரு நாள் தானே வகுப்பு. 

வீட்டிற்கு அருகே என்பதால்… அவளே நடந்தே சென்று விடுவாள். காலை ஒன்பதில் இருந்து பன்னிரண்டு மணி வரைதான் வகுப்பு. 

அவள் கல்லூரிக்கு கிளம்பி செல்வதே ஒரு தோரணையாக இருக்கும். அருள் அதை ரசித்துப் பார்த்திருப்பான். தன்னை அவள் திருமணம் செய்த போது கூட இப்படி ஒரு மகிழ்ச்சியை, அவள் முகத்தில் கண்டது அவன் இல்லை. 

இடைவேளையில் அவள் குடிக்கப் பழசாறு தினமும் அவன்தான் அவளின் பையில் வைத்து அனுப்புவான். நல்லவேளை அவளுக்கு மசக்கை எதுவும் இல்லை. இல்லையென்றால் மிகவும் சிரமம். அவள் எதை உண்டாலும், தன் அம்மாவுக்குச் சிரமம் வைக்காமல், அவள் குழந்தை ஏற்றுக் கொண்டது. 

ரோஜா கல்லூரிக்கு செல்வது மாதவனுக்கும் பவித்ராவுக்கும் மிகவும் மகிழ்ச்சி. புவனா அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வார். வரும்போது எதாவது செய்து கொண்டு வருவார். அதே போலக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். இவர்களும் எப்போதாவது அவர் வீட்டுக்குச் செல்வார்கள். அப்போதும் நன்றாகக் கவனிப்பார். 

இவர்களும் ரேஷ்மாவை மதிக்க மாட்டார்கள், ரேஷ்மாவும் மதிக்க மாட்டாள். அவளுக்குத் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்தனர். 

ஒருமுறை இவர்கள் சென்றிருந்த போது, அறைக்குள் இருந்து, “அம்மா, சாப்பாடு ரெடியா… இங்க எடுத்திட்டு வாங்க.” என ரேஷ்மா குரல் கொடுக்க.. 

“இவளை எங்கையாவது தூரமா கட்டிக் கொடுக்கணும். பக்கத்தில கட்டிக் கொடுத்தா… அப்பவும் இங்க வந்து உட்கார்ந்திட்டு என்னை வேலை வாங்குவா…” எனப் புவனா புலம்பியபடி எழுந்துகொள்ள, அவர் களைப்பாக இருப்பதைப் பார்த்த அருள், அவரைத் தடுத்து உட்கார வைத்தான். 

சிறிது நேரம் காத்திருந்த ரேஷ்மா வெளியே வர… “வேலை தான் பண்ண மாட்டேங்கிற, உனக்குப் போட்டுக் கூடச் சாப்பிட முடியாதா… ஏன் அத்தையை வேலை வாங்கிற?” என்றான் அருள். 

“அவங்க எங்க அம்மா நான் கேட்பேன். அதுவும் எனக்கு வேலை செய்யணும்ன்னு எல்லாம் அவசியம் இல்லை…” என ரேஷ்மா திமிராகப் பதில் சொல்ல.. 

“அவங்களும் உனக்கு வேலை செய்யணும்ன்னு அவசியம் இல்லை. நாங்க ஒன்னும் அவங்களை உங்க வீட்டுக்கு சும்மா கட்டிக் கொடுக்கலை… அம்மானாலும் ஒரு மனசாட்சி வேண்டாம், வேலைக்காரி மாதிரி வேலை வாங்குவியா நீ.” 

“நானும் தானே வேலைக்குப் போறேன்.” 

“இப்படி எல்லாம் பண்றதுன்னா நீ ஒன்னும் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். ஏன் பவித்ரா ரோஜா எல்லாம் வீட்டு வேலை பார்க்கலையா? உனக்கு மட்டும் என்ன?” 

“இன்னைக்கு இங்க இருக்கப் பழக்கம் தான் நாளைக்குப் போற வீட்லயும் வரும். அத்தை நீங்க கொஞ்ச நாள் நம்ம வீட்ல வந்து இருங்க. இவளே எல்லா வேலையும் செஞ்சு பழகட்டும். அப்பத்தான் அதோட கஷ்ட்டம் தெரியும்.” என அருள் சொல்ல.. 

“ஆமாம் நானும் எங்க அம்மாகிட்ட போய் ரெஸ்ட் எடுத்திட்டு சாப்பிட்டு வரேன்.” என்றார் புவனா. 

“அப்பா பாருங்கப்பா… இவன் எப்படிப் பேசுறான்.” என ரேஷ்மா தன் தந்தையைத் துணைக்கு அழைக்க… 

“நான் உனக்குச் சப்போர்ட் பண்ணா.. என் பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு பொட்டி கட்டிடுவா போல, அண்ணன் மகன் இருக்கான்னு தைரியம் வேற உங்க அம்மாவுக்கு.” 

“நீ எதுக்கும் அவங்க சொல்ற மாதிரி கேளேன் டா. உங்க அம்மாவுக்கும் உடம்பு முன்ன மாதிரி இல்லை. அவ வெளிய காட்டிக்க மாட்டேங்கிறா… ஆனா அவளுக்கு உடம்புக்கு முடியலை.” என்றார் ஸ்ரீநிவாஸ் கவலையாக. 

உண்மையாகே புவனாவுக்கு உடம்பு முடியவில்லை… எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் பிரச்சனை தான். அவருக்கு மென்சஸ் நிற்கும் சமயம். அதனால் ரொம்பவே படுத்தியது. 

“இருக்கும் போது நமக்கு அம்மாவோட அருமை தெரியாது. எங்க அம்மா இருந்த போது, நான் ஒரு வேலையும் பண்ணது இல்ல… எங்க அம்மா இல்லாத போது, நான் எவ்வளவு கஷ்ட்டபட்டேன் தெரியுமா?” 

“நான் இப்ப நல்லா இருக்கேன், ஆனா கூட வச்சு பார்த்துக்க எங்க அம்மா தான் இல்லை.. இப்ப அப்பாவும் இல்லாம போயிட்டார். ஆனா நான் எங்க அப்பாவுக்காவது கொஞ்சம் பார்த்தேன். ஆனா எங்க அம்மாவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலை… அந்த வருத்தம் எனக்கு எப்பவுமே இருக்கும்.” 

சொல்லும் போதே ரோஜாவுக்குக் கண்கள் கலங்கி விட… “நீ அப்ப சின்னப் பொண்ணு ரோஜா…நீ வேணுமுன்னே செய்யாம இல்லை.” என்றான் அருள். 

“இன்னும் எத்தனை நாள் இங்க இருப்ப… கல்யாணம் பண்ணி போற வரை அம்மாவை நல்லா பார்த்துக்கோ… உங்க அண்ணனும் பவித்ராவும் இங்க வர்ற வரை, நீதான் அவங்களைப் பொறுப்பா பார்க்கணும்.” 

“பவித்ரா இங்க வந்த பிறகு அவ பார்ப்பா… அவ சரியா அத்தையைக் கவனிக்கலைனா.. நான் அவளையும் இப்படிக் கேட்பேன்.” 

எல்லோரும் சொல்லவும் தான் ரேஷ்மாவுக்கு நிலைமை விளங்கியது. அம்மாவுக்கு எதாவது ஆகி விடுமோ என நினைக்கும் போதே நடுக்கமாக இருந்தது. 

அருளும் ரோஜாவும் சென்றதும், “நீங்களே எல்லா வேலையும் பண்ணிட்டு, ஏன் மா என் மேல பழியைப் போடுறீங்க. உங்க அண்ணன் மகன் வேற அந்த ஆட்டம் ஆடுறான். நீ யாருடான்னு கேட்டிருப்பேன். அதுக்கும் காது கிழிய அட்வைஸ் பண்ணுவான். அதனாலதான் விட்டுட்டேன்.” என்றவள், 

Advertisement