Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 8 


இரு நாட்டு அரசாங்கமும் பேச்சு வார்த்தை நடத்தி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு வழியாக அருளும் மற்றவர்களும் ஊர் திரும்பினர். அவன் முன்தின இரவில் வந்தது, ரோஜாவிற்கு மறுநாள் காலை தான் தெரிய வந்தது. 

அதுவும் பக்கத்து வீட்டு வனஜா சொல்லித்தான் தெரியும். “ரோஜா அருளு நேத்து ராத்திரியே வந்திடுச்சு. உங்க அப்பா இருந்ததுனால தான் நான் சொல்லலை.” 

அவர் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தவள், எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் தன்னைப் பார்க்க வருவான் எனக் காத்திருந்தாள். ரோஜா வேகமாக வீட்டு வேலை முடித்து, குளித்துவிட்டு வந்த பிறகும் கூட அருள் வரவில்லை. 

அவளே அவனைத் தேடிக் கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று பார்த்தாள். அங்கேயும் அருள் இல்லை. பிறகு அவன் எப்போதும் இருக்கும் கடற்கரையிலும் இல்லை. 

அவனைத் தேடிக் கொண்டு நடந்தவளின் கண்களில் தூரத்தில் கடற்கரையோடு ஒட்டியிருந்த கருங்கல் குவியல் தென்பட… ஒரு வேலை அங்கிருப்பானோ என நினைத்து அங்கே சென்றாள். 

கடற்கரையில் இருந்து கடலுக்குச் சிறிது தூரம் வரை பெரிய கருங்களால் ஆன பாதை. பாறைகளால் ஆனது என்பதால் கரடுமுரடாகே இருக்கும். அந்தப் பாதையின் முடிவில், அருள் வானத்தை வெறித்தபடி படுத்து இருந்தான். பாறையின் இரு பக்கமும் அலை அடித்தது. இரவில் அலை இன்னும் வேகமாக அடிக்கும், பாறைகளும் நீரில் முழ்கி விடும். அப்போது இந்த இடம் பாதிக்கு மேல் நீரில் மறைந்து விடும். 

அவன் அருகில் சென்று நின்றவள், “இங்க தான் இருக்கீங்களா? ஏன் என்னைப் பார்க்க வரலை?” எனக் கேட்க, 

“வரணும்னு தோணலை… அதனால வரலை. அதுக்கு இப்ப என்ன?” அருள் எரிந்து விழ… 

“என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” 

“எப்படி வேணா இருந்திட்டு போகட்டும். நீ உங்க அப்பா பேச்சை கேளு.” என்றான். 

“என்ன திடீர் மாற்றம்?”

“அவர் உன்னோட நல்லதுக்குத்தான் சொல்வார்.” அருள் சொல்ல… ரோஜா அவன் முகத்தைக் கூர்மையாக ஆராய்ந்தாள். 

“என்ன?” 

“ஜெயில்ல எதாவது போதி மரம் இருந்திருக்குமோ…” ரோஜா இழுக்க… 

“ஜெயில் என்ற வார்த்தை அவனுக்குக் கசப்பான நினைவுகளை நியாபகப் படுத்த… முகத்தைச் சுருக்கியவன், “இப்ப ஏன் அதை நியபகப்படுத்துற.” என்றான். 

“ரொம்பக் கஷ்ட்டபடுத்தினாங்களா?” ரோஜா கண்கலங்க… 

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை.” 

“உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. இனிமே அப்படி எதுவும் நடக்காம பார்த்துக்கலாம். நீங்க அந்தப் பக்கம் போகாதீங்க.” 

“ம்ம்..இப்பவும் தான் அவங்க எல்லைகுள்ள போகலை… அப்பவும் தான் கைது பண்ணாங்க. எல்லைப் பிரச்சனை இங்க மட்டும் இல்லை… எல்லா இடத்திலேயும் இருக்கு.” 

“சரி விடுங்க நமக்கு இதெல்லாம் அனுபவிக்கனும்ன்னு இருக்கு.” 

“எனக்குத் தான் இருக்கு… நீ ஏன் உன்னையும் சேர்த்துக்கிற? நீ உங்க அப்பா சொல்றதைக் கேளு.” 

“எனக்கு உங்க அப்பா மேல அவ்வளவு கோபம் இருந்தது. ஆனா இப்ப அவர் நினைக்கிறதுல என்ன தப்புன்னு தோணுது.” 

“இந்தத் தடவை திரும்பி வந்த மாதிரி எப்பவும் வருவேனா தெரியாது. நீயாவது வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இரு.” 

அவர்கள் இருந்த கருங்கல் பாதையின் இருபுறமும் ஓயாது அலை அடிக்க… அதற்குக் குறையாத வேகத்தில் ரோஜாவின் மனமும் துடித்தது. 

“எப்படி இவனால் இதைச் சொல்ல முடிகிறது?” என ஆதங்கத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருந்தாள். 

“என்ன?” அருள் கேட்க, 

“இல்லை உங்களை மட்டும் கடல்ல தள்ளி விடலாமா… இல்லைனா நானும் சேர்ந்து விழலாமான்னு பார்கிறேன். உன்னை விரும்பின பாவத்துக்கு நானும் சேர்ந்து தான் குதிக்கணும்.” என்றாள் ஆத்திரமாக. 

“என்ன பேசுற நீ?” 

“நீங்க பேசினதுக்கு நான் பேசுறது பரவாயில்லை.” 

“நிஜமாவே மனசு விட்டு போச்சு ரோஜா…. என்ன பிழைப்பு இதுன்னு ஆத்திரமா வருது.” 

“உயிரை பணயம் வச்சுத் தான் கடலுக்குப் போறோம். ஆனா உயிர் மேல இருக்கிற அக்கறை எல்லாம் பின்னாடி போயிடுது.” 

“மழை, காத்து, புயல் இது எல்லாம் மட்டும் இல்லாம…மத்த நாட்டு அதிகாரிங்க கிட்ட இருந்தும் படகை பத்திரமா பாதுகாத்து முதலாளிகிட்ட ஒப்படைக்கணும். அதுக்குள்ளே பாதிச் செத்து பிழைக்கிறோம்.” 

“ஆளுங்களைக் கைது பண்ணிட்டுப் போறது மட்டும் இல்லாம படகையும் சேதம் பண்ணிடுறாங்க.” 

“உங்க படகை அப்படி எதுவும் பண்ணிட்டாங்களா?” 

“இல்லை… இந்தத் தடவை ஏதும் ஆகலை. ஆனா எப்பவும் அப்படி இருக்காது.” 

“காத்துல ஆடுற படகு மாதிரி தான் மீனவர்களின் வாழ்க்கை கூட நிலை இல்லாதது. நீ உங்க அப்பா சொல்றது கேளேன் ரோஜா.” 

“இந்த வாழ்க்கை எனக்குப் புதுசா? நாம வாழ்க்கையே இப்படி அல்லாடுகிறது தான். என்னை இதுக்காக மனசை மாத்திக்கச் சொல்றது, உங்களுக்கே நியாயமா இருக்கா?” ரோஜா கேட்க, அருள் அமைதியாக இருந்தான். 

“நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க பண்ணிக்காம போங்க. ஆனா நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிகிறது எல்லாம் முடியாது.” என்றவள், பிறகு பேசவே இல்லை. 

அருள் அவள் முகத்தைப் பார்த்தவன், “நான் உன்னை ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன் இல்ல…. உங்க அப்பா சம்மதிச்சதுமே நாம கல்யாணம் பண்ணிப்போம். அவரைக் கஷ்ட்டபடுத்தி நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம்.” 

ரோஜா பதில் சொல்லாமல் இருக்க… “என் மேல கோபமா?” என அருள் அவள் கையைத் தொட… 

“உங்களுக்கு இந்த வாழ்க்கை ரொம்பக் கஷ்ட்டமா இருக்கு இல்ல….” 

“நம்ம வாழ்க்கையே போராட்டமா தான் இருக்கும்ன்னு விதி இருந்தா என்ன பண்றது விடு… எல்லாம் பழகிடுச்சு.” அருள் சொல்ல… ரோஜா அவனைக் கவலையாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

“ஹே… எதோ ஒரு குழப்பத்தில பேசிட்டேன். இங்க பக்கத்தில வா…” என்றவன், அவளை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டவன், அவள் மடியில் தலை வைத்து படுக்க… ரோஜா அவன் சிகையைக் கோதி கொடுக்க… அருளும் சுகமாகக் கண் மூடிக்கொண்டான். 

ரோஜா குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதிக்க… உடனே கண் திறந்தவன், அவள் பிடரியில் கைக் கொடுத்து, அவளை இன்னும் தன் அருகில் இழுத்து, அவள் இதழ்களைச் சிறை செய்தான். 

சிறிது நேரம் சென்று ரோஜா விலக… அவள் பெயருக்கு ஏற்றார் போல, அவள் இதழும் ரோஜா நிறம் கொண்டிருந்தது. 

“சரியான முரடு…” என அவள் உதட்டை தொட்டுப் பார்க்க… 

“இரு நானே தடவி கொடுக்கிறேன்.” என்றவன், மீண்டும் அவளை அருகில் இழுத்து, இந்தமுறை மிருதுவாக அவள் இதழில் முத்தமிட்டான். 

“போதும் போங்க…” என ரோஜா அவனைத் தள்ளி விட்டு எழுந்து நிற்க… 

“உங்க அப்பா சம்மதிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ரொம்ப அவசரப்பட்டுச் சொல்லிட்டேனோ….” என் அருள் அவளைப் பார்த்து குறும்பாகப் புன்னகைக்க… 

“அதெல்லாம் சொன்னது சொன்னது தான்.” என்றவள், திரும்பி நடக்க… அருளும் அவளுடன் இணைந்து நடந்தான். 

இருவரும் கரைக்கு வந்த போது, ரேணு அங்கே இவர்களுக்காகக் காத்திருந்தாள். 

“ரேணு எப்படி இருக்கீங்க?” ரோஜா அவளிடம் நலம் விசாரிக்க… 

“நான் நல்லா இருக்கேன். நீ நல்ல இருக்கியா?” என்றவள், அருளைப் பார்த்து, 
“எப்படி இருக்கீங்க அருள்? உங்களைப் போன்ல பிடிக்கவே முடியலை. கடலுக்குப் போய் இருக்கீங்கன்னு நினைச்சேன். அப்புறம் தான் நீங்க இலங்கையில இருக்கிறது தெரியும்.” 

“இனி ஒன்னும் பிரச்சனை இல்லை தான…” 

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. உங்க ஆராய்ச்சிக்கு இன்னும் எதாவது தேவைப்படுதா?” 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அருள். நாம உங்க வீடியோ போட்டோம் இல்ல…” 

“ஆமாம் அதுக்கு என்ன?” 

“இல்லை…. அதுல ஒருத்தர் உங்களைப் பார்க்கனும்ன்னு சொன்னார். நீங்க பதில் போடலை… அப்புறம் நான் விசாரிச்சேன்.” 

“என்கிட்டே ஒன்னும் சொல்லலை… ஆனா உங்களைப் பார்க்கனும்ன்னு மட்டும் சொன்னாங்க.” 

“யாரு அது?” 

“பேரு சாரதின்னு சொன்னார்.” 

“நீங்க யாரு எங்க இருக்கீங்கன்னு கேட்டார்.” 

“நான் உங்களைப் பத்தி சொன்னேன். உங்க போன் நம்பர் கேட்டார், அது மட்டும் கொடுத்திருக்கேன்.” 

“நேத்து தான் நியூஸ்ல நீங்க வந்தது பத்தி சொன்னாங்க. அதுதான் நேர்ல பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்.” 

யாராவது வணிகர்களாக இருக்கும். மொத்தமாக மீன் வாங்க நினைத்து இருப்பர்கள் என அருள் எண்ணி, அதைப் பற்றி மேலும் அவன் அக்கறை காட்டவில்லை. ஆனால் அன்று மாலையே வயதான தம்பதியர் மற்றும் இன்னொரு நபர், அவனைப் பார்க்க அங்கேயே வந்துவிட்டனர். 

அருள் மதியம் உண்டுவிட்டு, நன்றாகப் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான். யாரோ கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டுக் கண் விழித்தவனுக்கு, ஒரு நொடி தான் எங்கே இருக்கிறோம் என ஒன்றும் புரியவில்லை. 

சுற்றிலும் ஒரே இருட்டு, மீண்டும் கதவு தட்டப்பட… பிறகே தான் இருப்பது வீட்டில் என்பதை உணர்ந்து எழுந்து சென்று கதவை திறந்தான். 

வெளியே பாண்டியுடன் இன்னும் சிலர் நின்று கொண்டிருந்தனர். “அண்ணே உங்களைப் பார்க்கனும்ன்னு சொன்னாங்க.” என்றதும், அருள் வந்தவர்களைப் பார்த்தான். 

அருள் அவர்களை யார் என்பது போலப் பார்த்தான். அதனால் அவன் பரத் தானா என உறுதி படுத்தும் எண்ணத்தில் வந்தவர்கள் அவனையே பார்க்க… இருட்ட ஆரம்பித்து விட்டதால்… விளக்கை போட்டவன், “யாரு வேணும் உங்களுக்கு?” என்றான். 

“உள்ள போய்ப் பேசுவோமா பா…” எனச் சாரதி கேட்டதும், அவர்களுக்கு ஒதுங்கி வழிவிட்டவன், பாண்டியிடம் அவர்களுக்குக் குடிக்கக் கலர் வாங்கி வர சொல்லிவிட்டு உள்ளே சென்றான். 

அதற்குள் அவர்கள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து இருக்க… அவர்கள் எதிரே சுவற்றில் சாய்ந்தபடி நின்றவன், அவர்களே பேசட்டும் என்பது போலப் பார்த்து இருந்தான். 

“இந்தப் பையனுக்கு நம்மை யாருன்னே தெரியலையே… ஒருவேளை இவன் பரத்தா இருக்க மாட்டானோ…” எனச் சாரதியின் இளைய மகன் செல்வம் தனது பெற்றோரிடம் கிசுகிசுக்க… 

“அப்ப அவன் சின்னப் பையன். இத்தனை வருஷத்தில நம்மை மறந்திருக்கலாம்.” என்ற கலை…. 

“உன் சொந்த ஊரு என்ன? உன் அப்பா அம்மா யாருப்பா?” என அவன்தான் தங்கள் பேரானா என உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்டார். அப்போது பாண்டி குளிர்பனத்துடன் வந்தவன், அவர்களிடம் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டு, அவனும் அங்கேயே நின்றான். 

“ஏன் கேட்கிறீங்க?” 

“உனக்கு எங்களைத் தெரியுதா?” 

“இல்லையே…” 

“உன் அப்பா அம்மா பேர் என்ன?” எனச் சாரதி கேட்க, 

“எனக்குத் தெரியாதுங்க, நான் ஒரு அனாதை.” என அருள் சலிப்பாகச் சொல்ல…
அநாதை என்றதும், பெரியவர்கள் இருவரும் இவன் அவர்கள் பேரன் இல்லையோ எனக் கலங்கி போனார்கள். 

“உங்க அப்பா அம்மா யாருன்னே உனக்குத் தெரியாதா?” அவர்கள் கேட்க, அருள் இல்லை எனத் தலையசைக்க…அதைப் பற்றி அவன் பேச விரும்பமாட்டான் என உணர்ந்த பாண்டி, அவர்களுக்கு விளக்கம் சொன்னான். 

“இவருக்குப் பத்து வயசா இருக்கும்போது, சுனாமியில அடிச்சிட்டு வந்தவரை, எங்க ஆளுங்கல்ல ஒருத்தர் காப்பாத்தி கரை சேர்த்தார். அருள் அண்ணனுக்கு அதுக்கு முன்னாடி தான் யாரு, என்னன்னு எல்லாம் மறந்து போச்சு.” என்றான். 

“எந்த இடத்திலப்பா…” 

“வேளாங்கண்ணியில்?” என்றதும், பெரியவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“உன்கிட்ட அந்த வயசுல எடுத்த போட்டோ எதாவது இருக்கா?” செல்வம் கேட்க, வேண்டா வெறுப்பாக அருள் தான் பள்ளியில் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தைக் கொண்டு வந்து காட்டினான். 

அவர்கள் அதை வாங்கிப் பார்க்க… கலை தன்னிடம் இருந்த பரத்தின் புகைப்படத்தைப் பார்த்து, இருவரும் ஒருவரே என உறுதிபடுத்திக் கொண்டவர், கண்கள் நிறைய அருளை பாசமாகப் பார்த்தார். 

“இங்க பாருப்பா?” என்றவர், அருளை அருகில் அழைத்து இரண்டு புகைப்படங்களையும் காட்டினார். 

“நீதான் சின்ன வயசுல நாங்க இறந்திட்டதா நினைச்ச எங்களோட பேரன் பரத்.” என்றதும், அருள் அதிர்ச்சியாகி நின்று விட… அருளுக்குப் பின்னால் நின்று புகைப்படங்களை எட்டி பார்த்த பாண்டி, இதை ஜோசஃபிடம் சொல்ல, அவன் வீட்டிற்கு ஓடினான். 

“நான் உன்னோட அப்பாவை பெத்த அம்மா கலையரசி. இவரு உன் தாத்தா சாரதி, இவன் உன் சித்தப்பா செல்வம்.” எனக் கலை பேசிக் கொண்டே செல்ல… அருள் இன்னும் திகைப்பில் இருந்து விலகவில்லை. 

ஜோசப் அவன் வீட்டில் இல்லை. ஸ்டெல்லாவின் வீட்டில் இருந்தான். பாண்டி அங்குச் சென்று விஷயத்தைச் சொல்ல…. கேட்ட எல்லோருக்குமே திகைப்பு. ஜோசப்பும், மோசஸ்சும் உடனே அருள் வீட்டிற்குச் செல்ல… ரோஜாவிடம் இந்த விசயத்தைச் சொல்ல… ஸ்டெல்லா ஓடினாள். 

ஜோசப்பும் மோசஸ்சும் சென்ற போது அருள் இன்னும் திகைப்பில் இருந்து விலகாமல் இருந்தான். சாரதியே தாங்கள் யார் என்று அறிமுகம் செய்துகொள்ள… மோசஸ் அவர்களுடன் பேச… ஜோசப் அருளுக்குத் துணையாக நின்றான். 

மோசஸ் அருளைப் பற்றித் தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொன்னார். 

“அப்பா அம்மா எங்க?” அருள் திகைப்பிலிருந்து வெளியே வந்து கேட்க… சாரதி கலை இருவரின் முகமும் வாடியது. 

“உன்னை அவங்ககிட்ட இருந்து பிரிச்ச சுனாமிதான், அவங்களையும் எங்ககிட்ட இருந்து பிரிச்சது.” 

ஒருவேளை தன் அப்பா அம்மா உயிருடன் இருப்பார்களோ… என்ற அருளின் எதிர்ப்பார்ப்பு வீணாக… அவன் கண்கள் கண்ணீரை சிந்தியது. 

“அவங்க போனாலும் நீ இருக்கியே ராசா… எங்களுக்கு அதே சந்தோஷம்.” எனக் கலை எழுந்து அவனின் கண்ணீரை துடைக்க… பாட்டி என அருள் அவரைக் கட்டிக் கொண்டு கதறினான். 

அங்கே ஸ்டெல்லா வந்து அருளின் உறவினர்கள் அவனைத் தேடிக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்ல… ரோஜாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 

கடவுள் அவன் வாழ்க்கையில் விளக்கேற்றி விட்டார் என நினைத்தவள், உடனே அருளின் வீட்டிற்கு ஓடினாள். கூடவே மரியதாசும் ஆர்வம் தாங்காமல், அவளைப் பின் தொடர்ந்தார். அதற்குள் ஊருக்குள் விஷயம் பரவி இருக்க.. அருள் வீட்டின் முன்பு நிறையப் பேர் நின்றிருந்தனர். ரோஜாவும் அவர்களுடன் நின்று பார்த்தாள். 

அருள் தனது தாத்தா பாட்டியுடன் வெளியே வர… அவர்களின் வசதியான தோற்றத்தை பார்த்து ரோஜாவுக்கு நிம்மதியாக இருந்தது. இனி இந்த நிலை இல்லாத வாழ்க்கையில் இருந்து அவனுக்கு விடுதலை அல்லவா… முகம் மலர செல்லும் அவர்களையே பார்த்து இருந்தாள். 

அருளுக்கு நல்ல வாழ்க்கை அமையப்போவது உறுதி… ஆனால் இவள் கனவு கண்ட வாழ்க்கை அவளுக்குக் கிடைக்குமா? அதை எல்லாம் யோசிக்காமல்… அருளிர்காகச் சந்தோஷப்பட்டது அந்தப் பேதை உள்ளம்.
 

Advertisement