Advertisement

உப்புக் காற்று


அத்தியாயம் 7 


“நிர்மலா நல்லா இருக்கா?” 

“நல்லா இருக்கு மாமா.” 

“என்ன இந்தப் பக்கம்?” 

“கிறிஸ்துமஸ்க்கு ஊருக்கு வந்தேன். என்னோட பிரண்ட் வேளாங்கண்ணியில் இருக்கான். அவனைப் பார்க்க வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்.” என்றான் கிருபா.

ரோஜா தண்ணீர் எடுத்து சென்று கொடுக்க… “நல்லா இருக்கியா ரோஜா?” கிருபா கேட்க, 

“நல்லா இருக்கேன்.” என்றவள், “அப்பா, என்னை ஸ்டெல்லா வர சொன்னா, நான் அவ வீட்டுக்கு போயிட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டு ரோஜா வெளியே சென்றுவிட…. கிருபா ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தான். 

பால் விற்கும் விலையில், அதை வாங்குவதைப் பற்றி யோசிப்பதே இல்லை. அதனால் வந்தவருக்குக் காபி, டீ கொடுக்கும் வேலையும் இல்லை. 

“வாங்க தம்பி கடையில போய் டீ குடிப்போம்.” என மரியதாஸ் அழைக்க… ரோஜா தான் வீட்டில் இல்லையே… அதனால் அவர் பின்னே சென்றான்.
கடையில் டீ குடித்தபடி பேச்சு கொடுத்தான். 

“ரோஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்துடீங்களா?” கிருபா கேட்க, 

அவர் எங்கே பார்த்தார். ஆனால் அருளைப் பற்றியும் சொல்ல விருப்பம் இல்லாமல்… “இனி தான் பார்க்கணும். கடலுக்குப் போற பையன் இல்லாம… வெளிய செய்யலாம்ன்னு பார்கிறேன்.” என்றார். 

“எனக்கும் எங்க வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க.” 

“உங்க வீட்ல ரொம்ப எதிர்பார்கிறதா நிர்மலா சொல்லுச்சே…. அதுதான் நான் அதைப் பத்தியோ யோசிக்கலை…” 

“அது பார்த்துக்கலாம் மாமா… பின்னாடி செய்றதா சொல்லி எங்க வீட்ல சமாளிச்சுக்கலாம்.” கிருபா சொல்ல.. மரியதாசின் கண்களிலும் ஆசை மின்னியது. இவனைக் கட்டினால் ரோஜா நன்றாக இருப்பாள் என நினைத்து நிம்மதி கொண்டார். கிருபா கடையில் இருந்தே விடைபெற்றுக் கொண்டான். 

அருள் நண்பர்களோடு படத்துக்குச் சென்றுவிட்டு இரவு வரும்போது, ரோஜாவுக்குக் கேக் வாங்கி வந்திருந்தான். மரியதாஸ் திண்ணையில் படுத்து இருக்க… அங்கிருந்த முள் வேலியில் பையை மாட்டினான். 

ரோஜா வாயில் கதவில் சாய்ந்து கொண்டு தான் டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள். அதனால் அருள் வந்ததைப் பார்த்தே இருந்தாள். 
எப்போதும் அவனைக் கண்டதும் மலரும் முகம், இன்று வாடி இருக்க, அவள் இமைகள் அழுது வீங்கி இருப்பது போலத் தோன்றியது. அவளைப் பற்றி யோசனையிலேயே சென்றான். 

“என்னவாகியிருக்கும் ஏன் இப்படி இருக்கா?” என்ற எண்ணத்திலேயே படுத்துக் கிடந்தான். அவனுக்குத் தன்னுடைய வேதனை எல்லாம் பின்னுக்குச் சென்றுவிட்டது. மறுநாளைய பற்றிய நினைவுகள் இல்லாமல்… ரோஜாவை பற்றியே சிந்தித்து உறங்கிப் போனான். 

காலை சீக்கிரமே எழுந்தவன், பல் துலக்கி முகம் கைகால் கழுவிவிட்டு, டீ கடைக்குச் செல்ல… அப்போது தான் மரியதாஸ் அங்கிருந்து சென்றார். அவர் கடலுக்குச் செல்வதை உறுதி படுத்திக் கொண்டு, ரோஜாவை பார்க்கக் சென்றான். 

வீட்டிற்குள் ரோஜா சோர்வாகப் படுத்து கிடந்தாள். அவ்வளவு காலையில் அவன் வருவான் என எதிர்பார்க்கவில்லை. யாரோ உள்ளே நுழையும் சத்தத்தில் கண் விழித்தவள், அருளைப் பார்த்ததும் எழுந்து உட்கார… கதவை அப்படியே விட்டு, அருள் சென்று அவள் அருகில் பாயில் உட்கார்ந்தான். 

அவன் மடியில் தலை வைத்து படுத்து ரோஜா சுகமாகக் கண் மூடிக்கொள்ள, அவள் முகத்தை வருடியவன், “என்ன அச்சு ரோஜா, நேத்து ஏன் அழுத?” என மெதுவாகக் கேட்க, 

“அதைப் பத்தி என்கிட்டே கேட்காதீங்க.” என்றாள் எரிச்சலாக. 

“உங்க அப்பாவுக்கும் உனக்கும் சண்டையா?” 

பதில் சொல்ல விருப்பம் இல்லையென்றாலும், நேற்று கிருபா வந்தது, பிறகு அவள் தந்தை இரவு அவனைப் பற்றியும், அவன் எண்ணத்தையும் சொன்னது, பிறகு இருவருக்கும் சண்டை வந்தது என எல்லாம் சொன்னாள். 

“நான் உங்களை மனசுல நினைச்சிட்டு இருக்கேன்னு அவருக்குத் தெரியும் இல்ல… பிறகு ஏன் இப்படிப் பண்றார்?” 

“வாழப்போறது நான், என்னோட விருப்பம் அவருக்கு முக்கியம் இல்லையா?” 

“நான் அவர் சம்மதத்தோட தானே கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். அப்புறமும் ஏன் என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.” 

“இங்க பாரு இதுக்கு மேல உங்க அப்பாவுக்கு மரியாதை இல்லை. நானும் உனக்காகத் தான் இத்தனை நாள் பொருத்து போனேன், இதுக்கு மேல முடியாது.” 

“நான் நாளைக்குக் கடலுக்குப் போறேன். இந்தத் தடவை கடலுக்குப் போயிட்டு வந்தும், நம்ம கல்யாணம் தான். நீ அதுக்குள்ள முடிஞ்சா, உங்க அப்பாவை சம்மதிக்க வை. இல்லைனா நம்ம இஷ்ட்டபடி கல்யாணம் நடக்கும்.” என்றான் உறுதியாக. 

இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பிறகு அவளைச் சமாதானம் செய்து, அவளைச் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றான். மறுநாள் கடலுக்குச் செல்ல, அனைத்தும் தயார் செய்ய வேண்டியது இருந்தது. 

எப்போது வந்தாலும் திண்ணையில் இருந்து பேசிவிட்டு செல்பவன், இந்த முறை வீட்டிற்குள் இருந்து வரவும், அதைப் பார்த்த பக்கத்து வீட்டுகாரர், “இந்த மனுஷன் ஒழுங்கா ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டு போக வேண்டியது தான…” எனத் தன் மனைவியிடம் புலம்ப. 

“ஆமாம் அருளை விட இவருக்கு நல்ல பையன் கிடைப்பானாக்கும், இவரே அவங்க பேரை கெடுத்து விட்டுடுவார் போல…பேசாம கல்யாணத்தை முடிச்சிட்டு போகலாம்.” என்றார் வனஜாவும். 

மரியதாஸ் கடலில் இருந்து திரும்பியதும், அதையே அவர்கள் அவரிடமும் சொன்னார்கள். 

“ஏன் அண்ணே, பேசாம கல்யாணத்தை முடிச்சிட்டு போக வேண்டியது தான… அவன் வீட்டுக்கு வந்து போறதை பார்த்தா, ஊர் தப்பா பேசாதா…” எனச் சொல்ல… மரியதாஸ் ரோஜாவை முறைத்தவர், அருளிடம் சென்று சண்டை வேறு போட… 

“அடுத்த மாசம் எங்க கல்யாணம் நடக்கிறது உறுதி…. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ.” என அருள் சவால் விட்டான். 

மறுநாள் அருள் கடலுக்குச் சென்றுவிட… ரோஜா அவன் வரும் நாளை எண்ணி காத்திருந்தாள்.


இந்த முறை இலங்கையின் பக்கம் மீன் பிடிக்கச் செல்ல… இவர்கள் எல்லைக்குள் நின்றுதான் மீன் பிடித்தனர். ஆனால் இலங்கையின் கடற்படை இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகச் சொல்லி… அனைவரையும் படகோடு கைது செய்து, அருளையும் அவன் நண்பர்களையும், இன்னும் சில மீனவர்களையும் சிறையில் அடைத்தது. 

சிறைச்சாலை என்றால் சினிமாவில் காண்பிப்பது போல அல்ல… பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு… ஆடை இல்லாமல் வேறு சோதனை செய்வார்கள்… எல்லாம் முடிந்து தான் கடைசியாகச் சிறையில் அடைப்பது. 

அருளுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. தவறு செய்து வந்திருந்தால், அது வேறு, ஆனால் எந்தத் தவறும் செய்யாமல், இப்படிச் சித்ரவதைக்கு உள்ளாவது மிகவும் கொடுமையாக இருந்தது. 

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ரோஜாவுக்கு அருள் சிறை செய்யப்பட்டது தெரியும். அவர்கள் எல்லோரையும் சிறையில் இருந்து விடுவிக்க, இங்கே இருந்த அதிர்காரிகள், அங்கே இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர். 

அருளிடம் கெடுபிடி காட்டிய அதிகாரி… இன்னொரு கைதிக்கு, அவரே போதை பொருட்களை மறைமுகமாகக் கொண்டு வந்து கொடுப்பதைப் பார்த்த அருள்… கேலியாகப் புன்னகைக்க.. அந்த அதிகாரிக்கு அருள் மீது கோபம் வந்துவிட்டது. 

அருளை அடித்துத் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டவர், “உனக்கு வெளியப் போகணும்ன்னு விருப்பம் இல்லையா?” எனக் கேட்க, ஜோசப் எதுவும் பேசாதே என்பது போல அருளுக்கு ஜாடை காண்பிக்க… அருள் அமைதியாக இருந்தான். 

பணம் கொடுத்தால் இப்போது சிறை சாலைக்கு உள்ளேயே எல்லாம் கிடைக்கும். ஏன் அதிக வசதி இருந்தால்… கைதிகள் யாருக்கும் தெரியாமல் வெளியே கூடப் போய் வரலாம். 

பணக்கார கைதிகளின் நிலை இதுவாக இருக்க… சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்தவர்கள் கூட…. முழுதாகக் கெட்டுப் போகும் வாய்ப்பும் இங்கே அதிகம் உண்டு. 
மிகவும் கடினமான நாட்கள். ஆனால் அதை சந்திக்க வேண்டிய நிலையில் அருள் இருந்தான்.

ரோஜா அருள் வரும் வழி பார்த்து கண்ணீருடன் காத்திருக்க… “அவனைக் கல்யாணம் பண்ணா காலமெல்லாம் இதுதான் உன்னோட நிலைமை. இனிமேலாவது நான் சொல்றது கேளு… கிருபாவை கல்யாணம் பண்ணிக்கோ.” என மரியதாஸ் ரோஜாவை வற்புறுத்த ஆரம்பித்தார். 

நடந்த ஒரே நல்ல விஷயம், ஸ்டெல்லா ஜோசப்பின் மீது கொண்டிருந்த நேசத்தை உணர்ந்தாள். அவன் நல்லபடியாகத் திரும்ப வரவேண்டும் எனப் பிரத்தனை செய்தபடி இருந்தாள். 

இதுவரை சரியாக முகம் கொடுத்து கூட அவள் ஜோசப்பிடம் பேசியது இல்லை. இப்போது எப்போது வருவான் என அவள், அவன் வரவிற்காகக் காத்திருந்தாள். 

கிருபா அடுத்தமுறை வந்த போது மரியதாஸ் அவனிடம் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் எனக் கேட்க,
“நான் எங்க வீட்ல பேசுறேன். நீங்க எங்க அம்மா சொல்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்லுங்க. நான் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன், அதை எங்க அம்மாகிட்ட கொடுங்க, மிச்சத்தை அப்புறம் கொடுக்கிறதா சொல்லுங்க.” என அவன் சொல்லிவிட்டு செல்ல… 

“அப்பா நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… அவங்ககிட்டயே பணம் வாங்கிக் கல்யாணம் பண்ணுவீங்களா? அவங்க வீட்ல தெரிஞ்சா என் வாழ்க்கை தானே பாழாய் போகும்.” 

“அது தான் கிருபா பார்த்துகிறேன்னு சொல்றாரு இல்லமா….” 

“கல்யாணத்துக்கு அப்புறம் மிச்ச பணத்துக்கு எங்க போவீங்க?” 

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன் மா…” 

“என்ன பார்த்துபீங்க? நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.” என ரோஜா சொல்லிவிட்டு செல்ல… 

“நான் சொல்றதை தான் நீ கேட்கணும். இந்தக் கல்யாணம் நடக்கும்.” எனப் பதிலுக்கு மரியதாஸ் கத்தி விட்டு சென்றார். 

ரோஜா பக்கத்து வீட்டு வனஜாவிடம் இருந்து கைப்பேசி வாங்கி, நிர்மலாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட… மறுநாள் கிருபாவின் பெற்றோர் வீட்டிற்கே வந்து கத்தினார். 

“வசதியான பையன் எப்ப கிடைப்பான், வளைச்சு போடலாம்ன்னு பார்த்திட்டே இருப்பீங்களா?”

“அவன் மாசம் பண்ணிரண்டாயிரம் சம்பளம் வாங்கிறான். அவனுக்கு ஏத்த மாதிரி உங்களால செய்ய முடியுமா?” என அவனின் அம்மா பேசிக் கொண்டே செல்ல, 

“எங்க அப்பா உங்களைத் தேடி வரலை. உங்க பையன் தான் வந்தார். நீங்க எங்க அப்பாவை பேசுறதை விட்டு, உங்க பையனுக்குச் சொல்லி வைங்க.” என ரோஜாவின் அழுத்தமான பேச்சில், வந்தவர்கள் முனங்கிக்கொண்டே சென்றனர். 

அதன்பிறகு அப்பா மகளுக்கு இடையே பேச்சு வார்த்தை குறைந்து விட்டது. 

சிங்கார சென்னையில் ஒரு பெரிய வீட்டில்… தனது மகனிடமிருந்து கைபேசியைப் பிடிங்கி வைத்த தேவி, “டேய், முதல்ல இந்தப் பாலைக் குடிச்சிட்டுப் படிக்கப் போ… எப்ப பாரு கைல செல் வச்சிட்டு விளையாடுறது.” என்றதற்கு, 

“அம்மா உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க. நான் ஒன்னும் விளையாடலை… மீன் பிடிக்கிற வீடியோ பார்க்கிறேன். எவ்வளவு பெரிய வலைப் போட்டு பிடிக்கிறாங்க தெரியுமா..” என்றதும், பேரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அவனின் தாத்தா, “ எங்க காட்டு நானும் பார்க்கிறேன்.” என வாங்கிப் பார்த்தார். 

நடுக்கடலில் வலையைப் போட்டு மீன் பிடிப்பதும், பிறகு அருள் ஒரு பெரிய மீனுடன் நிற்பதும், வர… பார்த்த பெரியவரின் முகம் யோசனைக்கு மாறியது. கைப்பேசியை எடுத்துக் கொண்டு மனைவி இருக்குமிடம் தேடி சென்றார். 

“கலை… இந்தப் பையனைப் பார்த்திட்டு, உனக்கு யாரு மாதிரி இருக்குன்னு சொல்லு.” என்றதும், தன் கை வேலையை விட்டுவிட்டு வந்த கலை, தன் கணவர் காண்பித்த அருள் இருக்கும் வீடியோவை பார்த்தார். 

“நம்ம மூத்தவன் மகன் பரத் மாதிரி இல்ல இருக்கு.” என்றார் அதிர்ச்சியாக. 

“ஆமாம். எனக்கும் அப்படித்தான் இருக்கு. இந்த வீடியோ யாரு போட்டிருக்கா? யாருகிட்ட கேட்கிறது. எனக்கு ஒண்ணுமே புரியலையே…” என்றார். 

கலை சென்று பீரோவில் இருந்த பழைய ஆல்பத்தைக் கொண்டு வந்து, இருவரும் ஒருவரா எனப் பார்க்க… பதட்டத்தில் அவர் கை நடுங்கியது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் பேரன், “இதுலையே கமெண்ட்ஸ்ல போடலாம்.” என்றதும், அவனை விட்டே அவர்களின் தொடர்பு எண்ணை கேட்டனர். 

அருள் தான் அவர்களுக்குப் பதில் சொல்லும் நிலையில் இல்லையே. அவன் கைப்பேசி காவலர்களிடம் இருந்தது. 

“ஏன் இப்படிப் பண்ண ரோஜா?” எனக் கிருபா கேட்க,
ரோஜா அருளைப் பற்றி எல்லாம் சொல்லி விட்டாள். 

“கடல்ல இருக்க மீனை கொண்டு போய்க் கரையில போட்டா ,அது உயிரோட இருக்குமா? அப்படித்தான் நானும்.” 

“என் மனசுல அருள் தான் இருக்காங்க. என்னால அவங்களையோ இந்தக் உப்புக் காத்தையா விட்டு எங்கும் வர முடியாது.” ரோஜா உறுதியாகச் சொல்லிவிட… கனத்த மனதுடன் கிருபா சென்றான். 

அருளின் வரவிற்காக ரோஜா காத்திருந்தாள். எப்போது வேண்டுமானாலும் ஒருவரின் மனநிலை மாறலாம். இப்போது சரி என்று தோன்றுவது, பிறகு தவறு என்றும் தோன்றலாம்.

Advertisement