Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 6 


அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க…. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மரியதாஸ் வீட்டில் இருக்க.. மதியம் போல ரேணு அவளைத் தேடிக் கொண்டு வந்தாள். 

ரோஜா தன் தந்தைக்கு அவளை அறிமுகம் செய்து வைக்க… ரேணு, தன்னுடைய ஆராய்ச்சிக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். 

பிறகு வீட்டிற்குள் சென்று ரோஜாவுடன் பேசிக் கொண்டு இருந்தாள். அப்போது தான் ரோஜா சமையலை முடித்து இருந்தாள். கருவாட்டுக் குழம்பின் வாசம் மூக்கை துளைக்க…ரேணுவுக்குப் பசியைத் தூண்டியது. 

“என்ன சமையல் இவ்வளவு வாசனையா இருக்கு.” ரேணு கேட்க, 

“கருவாட்டு குழம்பு…” என்றவள், “சாப்பிடுறீங்களா?” எனத் தயங்கி கேட்க… 

“சாப்பிடுறேனே…” என்ற பதில் உடனே வந்தது. 

“நீங்க எங்க வீட்ல எல்லாம் சாப்பிட மாட்டீங்கன்னு நினைச்சு தான் கேட்கலை… தப்பா நினைச்சுக்காதீங்க.” 

“ஏன் உங்க வீட்ல சாப்பிடுறதுக்கு என்ன? வீடு பெரிசா சின்னதா எல்லாம் பிரச்சனை இல்லை… சுத்தமா இருக்கணும். நீ இந்தச் சின்ன வீட்டை கூட எவ்வளவு சுத்தமா வச்சிருக்க.” ரேணு சொல்ல.. வெளியே இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மரியதாஸ். 

“நான் போய் இலை வாங்கிட்டு வரேன்.” என்றவர், எழுந்து கடைக்குச் சென்றார். 

வரும் போது அவர் முட்டையும் வாங்கி வர… ஆம்லட் போட்ட ரோஜா… ரேணுவுக்கு இலையில் உணவை பரிமாறியவள், தந்தைக்குத் தட்டில் போட்டுக் கொண்டு போய், திண்ணையில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு வந்தாள். 

“நான் கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டதே இல்லை. இப்பத்தான் முதல் தடவை சாப்பிடுறேன். செம சூப்பரா இருக்கு.” என்றவள் ரசித்துச் சாப்பிட… ரோஜா புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

“நீயும் சாப்பிடு…” என்றதும், ரோஜாவும் அவளுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள். இருவரும் சாப்பிட்டதும் பேசிக் கொண்டு இருந்தனர்.

“மழை வர மாதிரி இருக்கு இல்ல… வர்றியா அப்படியே சர்ச் வரை நடந்திட்டு வரலாம்.” என ரேணு கேட்க, ரோஜா மரியதாசிடம் சொல்லிவிட்டு ரேணுவுடன் சென்றாள். 

இருவரும் பேசியபடி சர்ச்சுக்கு வர… அங்கே வெளியே அருள் தன் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தான். 

“நான் வரும் போதே அருள் இங்க இருக்கிறதைப் பார்த்தேன். அதுதான் உன்கிட்ட இங்க போகலாம்ன்னு சொன்னேன்.” என்றவள், அருளையும் அவன் நண்பர்களையும் நோக்கி செல்ல… ரோஜா அவளைப் பின் தொடர்ந்தாள். 

இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்ததும் அருள் வரவேற்பாகப் புன்னகைத்தாவன், ரோஜாவுக்குத் தன் அருகே உட்கார இடம் விட…. ரோஜா அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தாள். 

“என்ன இந்த நேரத்தில் இங்க இருக்கீங்க?” 

“பாதர் சர்ச் வெள்ளை அடிக்கணும் சொன்னாரு. அதுதான் நாங்களே அடிச்சி கொடுத்திடலாம்ன்னு பேசிட்டு இருக்கோம். கிறிஸ்துமஸ் வருது இல்ல…” 

“ம்ம்… எனக்கும் எதாவது வேலை கொடுங்க. நானும் பண்றேன்.” 

“நீ ஸ்டெல்லா எல்லாம் சேர்ந்து உள்ள சுத்தம் பண்ணுங்க.” 

“சரி…” 

“அருள் நீங்க ரொம்ப லக்கி தெரியுமா… ரோஜா சமையல் சூப்பர்… இன்னைக்குக் கருவாட்டுக் குழம்பு செம டேஸ்ட்.” ரேணு சொன்னதும், புன்னகையுடம் ரோஜாவின் பக்கம் திரும்பியவன், “எனக்கு எங்க டி?” என்றான். 

“உங்க பங்கை தான் அவங்களுக்குக் கொடுத்திட்டேன். உங்களுக்குக் கிடையாது.” ரோஜா சொல்ல, 

“அப்படியா ரோஜா… ஐயோ எனக்குத் தெரியாதே…” என ரேணு வருந்த… 

“நீங்க வேற… சும்மா சொல்றாங்க, அவங்களுக்குக் கருவாடே பிடிக்காது.” என்றாள் ரோஜா. 

“நிஜமாவா அருள்…” 

“இதுல என்னங்க சந்தேகம் உங்களுக்கு.” 

“ஓ… அப்ப ஓகே…” என்றவள், வேறு விஷயம் பேச… கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. 

“அருள், உங்க வீடியோ யூ ட்யூப்ல போட்டது… எவ்வளவு பேரு பார்த்து இருக்காங்க பாருங்க. இப்படியே போனா சீக்கிரம் உங்களுக்கு இதுல இருந்து வேற நல்ல வருமானம் வரும். இன்னும் கடலுக்குப் போகும்போது எடுத்த வீடியோ எல்லாம் கொடுங்க போடலாம்.” என்று ரேணு ஆவலாகச் சொல்ல… அருள் கைப்பேசியில் அவர்கள் போட்ட வீடியோவுக்கு வந்த கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

“இது என்னது?” ரோஜா கேட்க… 

ரேணு தாங்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது எடுத்து இருந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியது பற்றிச் சொன்னவன், அந்த வீடியோவை ரோஜாவுக்குக் காட்டினான். 

ரேணு அருளுக்கு எப்படி அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் காண்பிக்க… அருளும் புரிந்து கொண்டான். பத்தாவது வரை படித்து இருக்கிறான்… அதுவும் இன்றைய காலகட்டத்தில் கைபேசியின் வழியாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள்…. கைப்பேசி என்பது வசதிக்கு என்ற காலம் போய், இன்று அது இல்லாமல் ஒருவரும் இல்லை. அருளும் அதற்கு விதிவிலக்கல்ல… கடலுக்குச் செல்லாத நாட்களில் பெரும்பாலும் கைபேசியோடு தான் அவன் நேரம் கழியும். 

சிறிது நேரம் இருந்துவிட்டு ரோஜா கிளம்ப…. “ரோஜா அடுத்தத் தடவை வரும் போது ஸ்டெல்லாவையும் கூடிட்டு வா.” என்றான் ஜோசப். அதை வைத்து எல்லோரும் அவனைக் கிண்டல் செய்ய… ஜோசப் அசடு வழிய… ரோஜா சிரித்துக் கொண்டே சென்றாள். 

ரேணு அவளது ஊருக்கு சென்று விட… அடுத்த முறை அருள் கடலுக்குச் சென்றுவிட்டு வந்ததும், கிறிஸ்துமஸ் நெருங்குவதால்… சர்ச்சை பெயிண்ட் அடிக்கும் பணி துவங்கியது. 
அருளும் அவன் நண்பர்களுமே அந்தப் பணியைச் செய்ய… சர்ச்சின் உள்ளே சுத்தம் செய்யும் பணியை ரோஜா, ஸ்டெல்லா மற்றும் இன்னும் சில பெண்கள் சேர்ந்து செய்தனர். கூடவே உதவகிறேன் என்று சின்ன வாண்டுகள் செய்யும் அட்டகாசம் என நாட்கள் இனிமையாகச் சென்றது. 

வேலைக்கு நடுவே இடைவேளையில் அருளும் ரோஜாவும் பேசிக்கொள்வார்கள். ஜோசப் ஸ்டெல்லாவிடம் பேசும் ஆவலில் வருவான். ஆனால் ஸ்டெல்லா இன்னும் அவனிடத்தில் பிடி கொடுத்து பேச மாட்டாள். 

ஒருமுறை அப்படி நால்வரும் சேர்ந்து இருந்த வேளையில், “ஸ்டெல்லா உனக்குக் கிறிஸ்துமஸ்க்கு என்ன வேணும் கேளு, நான் வாங்கித் தரேன்.” என ஜோசப் கேட்க, 

“ஆமாம் இவரு பெரிய மகாராஜா, அப்படியே கேட்டது எல்லாம் வாங்கித் தருவாரு.” என ஸ்டெல்லா கிண்டலாகச் சொல்ல… ஜோசப் முகம் வாடி விட… அருள் ஸ்டெல்லாவை பார்த்த பார்வையில் கண்டனம் தெரிந்தது. 

“நீ கேட்டுத்தான் பாரேன். அண்ணா வாங்கித் தர்றாங்களா இல்லையான்னு அப்புறம் தெரியும்.” என ரோஜா சொல்ல… 

“உங்க இஷ்ட்டம் என்ன வேணா வாங்கிக் கொடுங்க.” என்றாள் ஸ்டெல்லா… அதில் ஜோசப் மனம் சமாதானம் ஆகியது. 

“சரி நீ சொல்லு உனக்கு என்ன வேணும்?” அருள் ரோஜாவிடம் கேட்க, 

“உங்களுக்கு ப்ளூ கலர் பிடிக்கும்ன்னு எப்பவும் அதே கலர்ல தான் டிரஸ் எடுத்து தர்றீங்க. இந்தத் தடவையாவது வேற கலர்ல எடுங்க.” ரோஜா சொன்னதும், அருள் சிரித்து விட்டான். 

அருள் வேண்டுமென்றே மெதுவாக டீ குடிக்க… ஜோசப்பும் ஸ்டெல்லாவும் அங்கிருந்து நகர்ந்ததும், கையில் இருந்த காலி டம்ளரை அவன் கீழே வைக்க… ரோஜா அதை எடுத்துக் கொண்டு திரும்பினாள். 

அருள் அவளின் நீள கூந்தலை பிடித்து இழுக்க… ரோஜா அவன் மீது மோதி நின்றாள். 

“என்ன ஆச்சு உங்களுக்கு? வலிக்குது விடுங்க.” 

“ஏன் நீங்க ப்ளூ கலர்ல எடுத்துக் கொடுத்தா கட்ட மாட்டீங்களா?” அவன் அவளை வம்பிழுக்க… 

“ம்ம்… என்கிட்ட இல்லாத ப்ளுவே இல்லை. லைட் ப்ளூ, டார்க் ப்ளூ, இங்க் ப்ளூ, ஸ்கை ப்ளூ…” என அவள் வரிசைபடுத்த… 

“போதும் டி… வேற கலர் எடுத்து தரேன். வேற என்ன வேணும்?” 

“வேற எல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க உங்களுக்கும் எடுத்துக்கோங்க.” 

“உனக்கு உங்க அப்பா வேற டிரஸ் எடுப்பரே?” 

“அவர் காசு கொடுத்தார். நீங்க எப்படியும் எடுத்து தருவீங்கன்னு தெரியும். நான் அவருக்குத்தான் வேஷ்ட்டி சட்டை வாங்கி வச்சிருக்கேன். சேர்த்து வச்ச காசில வாங்கினேன்னு பொய் தான் சொல்லணும்.” 

“தையல் கிளாஸ் போனியே என்ன ஆச்சு?” 

“இப்ப நல்லா தைக்கக் கத்துகிட்டேன். ஆனா தையல் மெஷின் வாங்க காசு.” 

“நான் வாங்கி தரவா…” 

“அவ்வளவுதான் என்னோட அப்பா கொன்னே போட்டுடுவார்.” 

“உன் அப்பா என்ன தான் டி மனசுல நினைச்சிட்டு இருக்கார். உன்னை எனக்குக் கட்டி தந்தா நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன். தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கார்.” 

“விடுங்க கொஞ்ச நாள்ல அவரே சரின்னு சொல்வார்.” 

“இதை நீ எந்தத் தைரியத்துல சொல்ற?” 

“எந்த இளிச்சவாயன் ஒண்ணுமே இல்லாம கட்டிக்க வருவான். அந்த தைரியத்தில தான்.” 

“ஓ… அப்ப நீ என்னை இளிச்சவாயன் சொல்றியா?” அருள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கேட்க, 

அவன் கைக்கு எட்டாத தூரம் சென்றவள், “இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?” எனச் சொல்லிவிட்டு ஓடி விட்டாள். 

எல்லாம் என் நேரம் என நொந்தபடி அருள் அவன் வேலையைப் பார்க்க சென்றான். 

அன்று கிறிஸ்துமஸ் தினம், அவரவருக்கு முடிந்த விலையில் எளிமையாகவோ அல்லது சற்று பகட்டாகவோ உடை அணிந்து, அதிகாலை வழிபாடுக்குத் தேவாலையம் சென்றனர். 

தேவாலையம் அலங்கார விளக்குகள் மற்றும் தோரணங்களால் ஜொலிக்க… இருந்த மக்கள் கூட்டதிற்கு இடம் போதாமல் வெளியேவும் நிறையப் பேர் நின்று பிரத்தனை செய்தனர். 

பிரத்தனை முடிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ள… மரூன் வண்ண புடவையில் ஜொலித்த ரோஜாவின் விழிகள், அருளை தேடி அலைந்தது. அவள் வரும் போது வழியில் நின்று விழி எடுக்காமல் பார்த்து ரசித்தவனை இப்போது காணவில்லை. 

“அப்பா நன் என் பிரண்ட்ஸ் கூடப் பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு வரேன்.” 

“சரி மா சீக்கிரம் வந்திடு… கடை கூட்டமா இருக்கும். நான் போய்க் கறி வாங்கிட்டு வீட்டுக்கு போறேன்.” என மரியதாஸ் செல்ல… 

அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் அன்று காலை ஆட்டுக் கறி குழம்பும், தோசையும் செய்வது வாடிக்கை. 

மரியதாஸ் சென்றதும் ரோஜா அருளை தேடி சென்றாள். அவன் உச்சி பாறையில் உட்கார்ந்து புலர்ந்தும் புலராத காலைப் பொழுதை பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி அங்கே என்ன பார்கிறான் என நினைத்தவள், அவன் அருகே சென்றாள். 

ஆதவன் இப்போது தான் மேலே எழும்பிக் கொண்டிருக்க…. பார்க்க ஆரஞ்சு வர்ண பந்து கடலுக்குள் இருந்து எழுவது போல இருந்தது. அதைப் பார்ப்பதே கண் கொள்ளாக் காட்சியாக இருக்க… அதை ரசித்தபடி அவன் அருகே பாறையில் நெருங்கி உட்கார்ந்தாள். 

அருளிடம் அப்போதும் சிறு சலனமும் இல்லை. அப்போது தான் அவன் பார்வை தான் அங்கே இருக்கிறதே தவிர… மனம் வேறு எதோ யோசித்துக் கொண்டிருக்கிறது என அவளுக்குப் புரிந்தது. 

“இப்ப நீங்க என்னத்தை நினைச்சிட்டு மனசை போட்டு குழப்பிட்டு இருக்கீங்க?” அவள் அதட்டலாகக் கேட்க…. 

“நாளைக்கு என்ன நாள் தெரியுமா?” என்றான். 

அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நாள், அதை எப்படி மறப்பாள். 

“நான் யாரோட வந்தேன். அவங்க என்ன ஆனாங்க? எதுவுமே தெரியலையே ரோஜா.” 

யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அவனைத் தேடி வந்திருப்பார்கள் தானே… அதைச் சொல்லி அவனை வருத்த வைக்க வேண்டாம் என நினைத்தவள், 
“நல்ல நாளும் அதுவுமா, நீங்க இப்படி இருந்தா நான் எப்படிச் சந்தோஷாமா இருக்கிறது?” எனவும், அவளுக்காக உணர்வுகளை அடக்கியவன், “என்ன பண்ணனும் சொல்லு?” என்றான். 

“சந்தோஷமா இருங்க. நான் இருக்கேன் இல்ல….”
“வாங்க இப்ப சர்ச்ல கூட்டம் குறைஞ்சு இருக்கும். நாம சேர்ந்து போய் ப்ராத்தனை பண்ணுவோம். அடுத்த வருஷம் கிறிஸ்துமஸ் குள்ள நமக்குக் கல்யாணம் நடந்திடனும்ன்னு வேண்டிக்குவோம்.” என்றவள், அவன் கையைப் பிடித்து எழுப்பிக் கொண்டு சென்றாள். 

இருவரும் பிரத்தனை முடித்துவிட்டு வந்த போது, “எங்க அப்பா கறி எடுக்கப் போய் இருக்காரு. நான் உங்களுக்குக் குழம்பு வச்சுக் கொண்டு வரேன்.” என்றாள். 

“இன்னைக்குக் காலையில ஜோசப் வீட்ல சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க. மதியத்துக்கு நாங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் வெளியப் போறோம். நீ கறியை எனக்கு எடுத்து வைக்காம… ஒழுங்க நீ சாப்பிடு.” 

அருள் உண்மையாகவே சொல்கிறானா என ரோஜா அவன் முகத்தை ஆராய…. “உங்க அப்பா உன்னைத் தேடிட்டு வர்றதுக்குள்ள ஒழுங்கா வீட்டுக்கு போ…” என்றான். 

அப்போது அங்கு வந்த ஜோசப், “மச்சான், காலையில சாப்பிட நம்ம வீட்டுக்கு வந்திடு.” எனச் சொல்லிவிட்டு செல்ல.. அதன் பிறகே ரோஜா நிம்மதியானாள். 

அரிசியும் உளுந்தும் விற்கும் விலைக்கு இட்லி தோசை செய்வது எல்லாம் எப்போதோ ஒருமுறை தான். அரசாங்கத்தில் இலவசமாகக் கொடுத்த கிரைண்டர் இருக்க… அதை வைத்து நேற்று தான் மாவு அரைத்து வைத்து இருந்தாள். 

தந்தை வாங்கி வந்த கொடுத்த கறிக்கு, மிக்சியில் மசாலா அரைத்தாள். அதுவும் இலவசமாகக் கொடுத்தது தான். வசதியானவர்களே ஓட்டுக்கு பணமோ, பொருளோ கொடுக்கும் போது வாங்கத்தானே செய்கிறார்கள்… இவர்களைப் போல் ஏழைகள் வாங்கி வைப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே… வீட்டில் இருக்கும் டிவி கூட இலவசம் டிவி தான். 

ரோஜா அரைத்து வைத்திருந்த மாவை தோசையாக ஊற்றி எடுக்க… அடுப்புக்குப் பக்கத்திலேயே தரையில் உட்கார்ந்து மரியதாஸ் வயிறு நிறைய உண்டார். 

சாப்பிட்டு எழுந்தவர், “நீயும் சாப்பிடு மா…” என்றவர், திண்ணையில் சென்று உட்கார… தனக்கு இரண்டு தோசைகள் ஊற்றிக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள்.
மதியத்திற்குக் கறிக் குழம்பே இருந்தது. அதனால் சாதம் மட்டும் வடித்தால் போதும் என டிவி பார்க்க உட்கார்ந்து விட்டாள். 

சிறிது நேரம் சென்று மரியதாஸ் யாருடனோ பேசும் சத்தம் கேட்டு எழுந்து வாயிலுக்கு வந்தாள். அங்கே அவள் அண்ணி நிர்மலாவின் உறவினன் கிருபா  வந்திருந்தான். 

அவன் ஆம்பூரில் செருப்பு தைக்கும் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவனுக்கு ரோஜாவை திருமணம் செய்துகொள்ள மிகவும் விருப்பம். ஆனால் அவன் பெற்றோருக்கு வீட்டிற்கு வரும் மருமகள் வரதட்சனை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்த்தனர். அதனால் இவர்கள் திருமணப் பேச்சு வார்த்தை ஆரம்பிக்காமலே இருந்தது. 

அவனைப் பார்த்ததும் ரோஜா முகம் மாற… இப்போது எதற்கு வந்திருகிறான் என எரிச்சலாகப் பார்த்தாள்.

Advertisement