Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 5

மதியம் போல வீடு வந்தவன், வெளியே செல்வதற்கு முன் வடித்து வைத்த சாதத்தையும், ரோஜா அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த வைத்திருந்த குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, படுத்தது தான் தெரியும். அவன் மீண்டும் கண்விழித்தது மறுநாள் காலை தான். 

தொடர்ந்த பல மணி நேர உறக்கத்தில் உடல் அசதி எல்லாம் போய் விட, சுறு சுறுப்பாக உணர்ந்தான். குளித்து விட்டு வந்தவன், ரோஜா வீட்டிற்குச் சென்றான். 

அவள் தந்தை கடலுக்குச் சென்று இருக்க… குளித்து முடித்து வெளியே நின்று ஈர தலைத் துவட்டிக் கொண்டு இருந்தாள். இவன் திண்ணையில் வந்து உட்கார்ந்ததும், “நல்ல தூக்கமா…” என்றவள், அவன் வருவான் எனச் சேர்த்துச் செய்து வைத்திருந்த உணவை கொண்டு வர உள்ளே சென்றாள். 

மண் பானையோடு கேப்பை கூழும், தனியாகத் தட்டில் மோர் மிளகாயும் கொண்டு வந்து திண்ணையில் வைத்தாள். 

கூழில் மோரை ஊற்றிக் கரைத்தவள், அவனுக்கு டம்ளரில் ஊற்றிக் கொடுக்க… அதை வாங்கிக் குடித்தவன், மறுகையால் மோர் மிளகாயை எடுத்துக் கடித்தான். 

தனக்கும் கூழை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டவள், “நேத்து உங்க படகுல ஒரு பொண்ணு வந்ததே யாரு அவங்க?” எனக் கேட்டாள். 

“எதோ ஆராய்ச்சி படிப்பு படிக்கிறவங்க போல… மீனவர்களைப் பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்காங்க. அவங்க நாட்டுப்படகுல தான் வந்திட்டு இருந்தாங்க. பிறகு நம்ம படகை பார்த்ததும், ஆசைப்பட்டு இதுல ஏறினாங்க.” என்றவன், காலியான டம்ளரை நீட்ட, மீண்டும் அதில் கூழை நிரப்பிக் கொடுத்தாள். 

“ஓ,…அப்படியா?” 

“ஆமாம். பக்கத்தில ரெசார்ட்ல தான் தங்கி இருக்காங்க. வேளாங்கண்ணி போகணும்ன்னு சொன்னாங்க, நீயும் வரியா?” என்றான். 

“படகுலையா…” 

“ஆமாம், நம்ம ஜோசப் சொந்தக்காரன் மோட்டார் படகு வச்சிருக்கான். ஆறு பேர் போறது, அதுல போயிட்டு வந்திடலாம்.” 

“எப்ப?” 

“இப்ப காலையில போகனும்.” 

“இருங்க நான் எங்க அப்பாவுக்குச் சோறு மட்டும் ஆக்கி வச்சிட்டு வந்திடுறேன்.” என்றவள், அவர்கள் சாப்பிட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சிட்டாக உள்ளே சென்று விட… 

“பத்து மணிக்குள்ள படகு துறைக்கு வந்திடு.” எனக் குரல் கொடுத்துவிட்டுச் சென்றான். 

நேற்று வைத்த மீன் குழம்பு இருக்க, அரிசியைக் களைந்து உலையில் போட்டவள், உலர்வதற்காக விரித்து விட்டடிருந்த கூந்தலை வாரி பின்னளிட்டாள். பிறகு அன்று அருள் வாங்கித் தந்த நீல நிற புடவையை எடுத்து உடுத்தியவள், முகத்திற்கு ஒப்பனை செய்து கொண்டாள்.
வீட்டை ஒதுங்க வைத்துவிட்டு, சாதத்தை வடித்துவிட்டு, வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுக்கச் சென்றாள். 

“அக்கா, நான் வர்றதுக்குள்ள எங்க அப்பா வந்திட்டா சாவியைக் கொடுத்திடுங்க. எங்க அப்பா கேட்டா நான் சீக்கிரம் வந்திடுவேன்னு சொல்லுங்க.” என மட்டும் சொல்லிவிட்டு சென்றாள். 

அவள் அப்பா வர மதியமாகி விடும். அதற்குள் வந்துவிடலாம் என நினைத்தாள். 

அவள் படகு துறைக்குச் சென்ற போது, அவளுக்காக மற்றவர்கள் காத்திருந்தனர். நேற்று பார்த்த பெண்ணும் அங்கிருந்தாள். 

“இவங்க ரேணு….” என அவளிடம் சொன்னவன், “இது ரோஜா.” என்று மட்டும் சொல்ல… 

“யாருன்னு கேளுங்க?” என ஜோசப் எடுத்துக் கொடுத்தான். ரோஜா வெட்கப்பட….அருள் பதில் சொல்லாமல் சிரிக்க… அதிலேயே ரேணுவுக்கு விஷயம் புரிந்து விட்டது. 

“சீக்கிரம் வா… உங்க அப்பா வர்றதுக்குள்ள திரும்ப வர வேண்டாமா?” என்ற அருள், ரோஜாவுக்குக் கை கொடுத்து அவளைப் படகில் ஏற்றினான். மற்றவர்களும் ஏற… ஜோசப்பின் நண்பன் ரவி படகை செலுத்தினான். 

அக்கரைபேட்டையில் இருந்து வேளாங்கண்ணி சாலை வழியாகச் சென்றாலே பத்து கிலோமீட்டர் தூரம் தான். இவர்கள் படகில் செல்வதால்… இன்னும் சீக்கிரமே சென்று விட முடியும். செல்லும் வழியில் ரேணு அவர்களைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். 

இருபது நிமிடத்தில் வேளாங்கண்ணி சென்று சேர்ந்தனர். ரவி மட்டும் படகிலேயே இருக்க… மற்ற நால்வரும் இறங்கி கடற்கரை வழியாகவே மாதா கோவிலை சென்று சேர்ந்தனர். 

ரேணுவை தவிர மற்றவர்களுக்கு அடிக்கடி வந்து போகும் இடம்தான். எங்காவது பண்டிகை நாட்களில் வெளியே செல்வது என்றால்… இங்கே தான் வருவார்கள். அதிகச் செலவு இல்லாமல், அவர்களால் பார்க்க முடிந்த இடம். 

வார நாள் என்பதால் கூட்டம் அதிகமில்லை. முதலில் மாதா கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிட்டவர்கள், பிறகு நிதானமாக அங்கிருந்த கடை வீதியில் சுற்றி திரிந்தனர். 

கோவில் வாயிலில் நின்று அருளும் ரோஜாவும் செல்பி எடுத்துக் கொண்டனர். அவனிடம் இருந்த செல்லில் தங்கள் இருவரின் படத்தை ரோஜா ஆர்வமாகப் பார்க்க… “உனக்கும் இப்படி ஒரு செல் வாங்கித் தரேன்.” என அருள் சொல்ல.. 

“ரொம்ப விலையால இருக்கும், எனக்கு வேண்டாம்.” என்றாள் ரோஜா. 

“கம்பெனி போன் வாங்கினாத்தான் விலை அதிகம். விலை மலிவானது இருக்கும். நான் உனக்கு அதை வாங்கித்த தரேன்.” 

அருள் ரோஜாவுக்குக் காதில் கழுத்தில் அணிய கவரிங் ஆபரணங்கள் வாங்கிக் கொடுத்தான். பிறகு அவளிடம் பிரியாணி சாப்பிடுகிறாயா எனக் கேட்க, 

“எனக்குப் பொரியல், கூட்டு, சாம்பார், ரசம் எல்லாம் வச்சு, சாதம், சாப்பிடனும்.” என அவள் ஆசையாகச் சொல்ல…எல்லோரையும் அழைத்துக் கொண்டு உணவகம் சென்றான். 

ரேணு மீன் உணவுக்குச் சொல்ல, ஜோசப் தனக்குப் பிரியாணி என்றான். ரோஜா விரும்பியதையே தங்கள் இருவருக்கும் அருள் சொன்னான். ரோஜா நிறைவாக உண்பதை கண்கள் கனிய பார்த்து இருந்தான். 

பெரும்பாலும் ஒரு குழம்போடு அவர்கள் உணவு முடிந்து விடும். பொரியல், கூட்டு என்று வைப்பது எல்லாம் மிகவும் அரிது. அதுதான் அவள் விரும்பி கேட்க காரணம். 

“எனக்காகத்தானே வந்தீங்க. நான்தான் பணம் கொடுப்பேன்.” என ரேணு சொல்ல… 

“நீங்க எங்க விருந்தாளி நாங்க தான் கொடுப்போம்.” என அருள் கொடுத்தான். 

நன்றாக உண்டுவிட்டு, மீண்டும் கடற்கரை ஓரமாக நடந்து படகுக்கு வந்தனர். கடைசி இருக்கையில் அருளும் ரோஜாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டு வந்தனர். 

“இப்ப சந்தோஷமா?” அருள் கேட்க, ரோஜா கண்கள் மின்ன ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள். 

“இந்தச் சேலை நல்லா இருக்கா?” 

“நல்லா இருக்கு… இன்னைக்குக் கூட இன்னொரு சேலை எடுத்திருக்கலாம். நேரம் தான் இல்லை.” 

“ஏற்கனவே இன்னைக்கு ரொம்பச் செலவு. இருக்கிற காசை எல்லாம் இப்ப செலவு பண்ணிட்டா… கடலுக்குப் போக முடியாத நாள்ல செலவுக்கு என்ன பண்ணுவீங்க?” 

“என்கிட்டே இருக்கு ரோஜா…” அருள் சொல்ல, ரோஜா அவனைக் கவலையாகப் பார்க்க… 

“நம்ப மாட்டியா? என்கிட்டே காசு இருக்கு.” என்றான். 

இவர்கள் இருப்பிடம் வந்துவிட… படகு துறையில் தெரிந்தவருடைய வண்டியை வாங்கி, அதில் ரோஜாவை ஏற்றிக் கொண்டு சென்று, அருள் அவள் வீட்டின் அருகில் விட்டான். 

ரோஜா அவனிடம் சொல்லிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள். இவளுக்கு முன்பு மரியதாஸ் வந்திருந்தால்… எங்கே சென்றாய் எனக் கேட்பாரே… பொய் வேறு சொல்ல வேண்டுமே எனக் கவலையுடன் வந்தாள். ஆனால் அவள் அப்பா இன்னும் வந்திருக்கவில்லை. 

பக்கத்து வீட்டில் இருந்து சாவி வாங்கியவள், அருள் வாங்கிக் கொடுத்த பொருட்களைப் பத்திரபடுத்த, அப்போது மரியதாஸ் வரும் சத்தம் கேட்க, கொடியில் இருந்த நைட்டியை எடுத்து புடவைக்கு மேலாக அணிந்து கொண்டு, கூந்தலை கொண்டாய் இட்டபடி வெளியே வந்தாள். 

“இன்னைக்கு வருமானம் பரவாயில்லை. இந்தா இதுல அரிசி, கேப்பை எல்லாம் இருக்கு…” என மகளிடம் அவர் பையைக் கொடுக்க… ரோஜா வாங்கி வைத்தவள், அவர் குளித்து விட்டு வரவும் உணவு எடுத்து வைத்தாள். 

அவள் வெளியே சென்றுவிட்டு வந்தது மரியதாசுக்கு தெரியவே இல்லை. இன்றுதான் இப்படி முதல் முறையாக அருளோடு வெளியே சென்றிருக்கிறாள்.
அருள் நெடு நாட்கள் கழித்து ஊரில் இருப்பதால்… அன்று இரவு கடற்கரையில் ஒரு படகில் உட்கார்ந்து இருந்தான். 

அன்று ஸ்டெல்லாவோடு ரமேஷ் உடன் வர…. அருள் கண்ணில் இருவரும் பட்டனர். எல்லையில் நின்றுகொண்ட ரமேஷ், அங்கிருந்த காவலாளிகளுடன் பேச, ஸ்டெல்லா அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றாள். 

“இவன் அந்த ரெசார்ட் முதலாளி இல்ல…” அருள் கேட்க, 

“ஆமாம் சில நாள் ஸ்டெல்லாவோட துணைக்கு வரான். என்ன விஷயம்ன்னு தெரியலை… ஊருக்குள்ள ஆளுக்கு ஒன்னு பேசிக்கிறாங்க.” என்றான் உடனிருந்த நண்பன். 

“டேய் இதெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டிக்கனும். அது சின்னப் பொண்ணு, இவன் பாட்டுக்கு மனசுல ஆசையை உண்டாகிக்கிட்டு போயிட்டான்னு வை. அந்தப் பிள்ளைக்குத் தான் கஷ்ட்டம்.” 

“அந்த அறிவு பெத்தவருக்கு இல்ல இருக்கணும்.” 

“அவருக்குத் தெரியுமோ என்னவோ? அவர் கண்டிப்பாருன்னு எல்லாம் இருக்கக் கூடாது. நான் ஸ்டெல்லா கிட்ட பேசிக்கிறேன்.” என்றான் அருள். 

சொன்னபடி மறுநாள் அருள் ஸ்டெல்லா வரும் நேரம் அவளுக்காகக் காத்திருந்தான். இன்று அவள் காவலாளியுடன் வந்தாள். 

“அருள் அண்ணா எப்படி இருக்கீங்க?” 

“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உன் வேலை எப்படி இருக்கு.” 

“நல்லா போயிட்டு இருக்கு.” 

“நேத்து உன்னோட வந்தது உன் முதலாளி தானே…” 

“ஆமாம்.” 

“அவரு எதுக்கு நேத்து உன்னோட வந்தார்.” 

“நைட் நேரம் தனியா போக வேண்டாமேன்னு….” என ஸ்டெல்லா சொல்லவும், இன்று அவன் வரவில்லை காவலாளி தானே வந்திருந்தார். அப்போது உண்மையிலேயே அந்தக் காரணம் தான் என நினைத்து அருள் அப்போது வேறு ஒன்றும் கேட்காமல் ஸ்டெல்லாவை அனுப்பி வைத்தான். ஆனால் அதன் பிறகு வந்த நாட்களில் அவன் ஸ்டெல்லாவை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ரமேஷையும் அதன் பிறகு ஸ்டெல்லாவோடு பார்க்கவில்லை. 

மறுவாரம் ஸ்டெல்லா வேலைக்குச் சென்ற போது…. அங்கே எல்லோரும் பரபரப்பாக இருந்தனர். இன்று முதலாளிக்கு வேண்டிய விருந்தினர்கள் வரப் போவதாகவும், அதற்கு ரெசார்ட்டை பிரத்யேகமாக அலங்கரிக்க வேண்டும் எனத் தகவல் வந்திருந்தது. ஸ்டெல்லாவும் எல்லோரோடும் சேர்ந்து வேலை பார்த்தாள். 

ஸ்டெல்லாவுக்கு அன்று பார்ட்டி ஹாலில் தான் வேலை. அந்த அறையை அலங்கரித்ததும், உணவு மேஜையில் பொருட்களை அழகாக அடுக்கிக் கொண்டு இருந்தாள். அப்போது ரமேஷ் சில விருந்தினர்களுடன் உள்ளே நுழைந்தான். சூட்டில் ஆண் அழகனாகத் தெரிந்தான். ஸ்டெல்லா அவனை ரகசியமாகப் பார்த்து ரசித்துக் கொண்டாள். பிறகே அவன் உடன் வந்தவர்களைக் கவனித்தாள். 

இரண்டு நடுத்தர வயது தம்பதிகள், ஒரு இளவயது தம்பதி, அவர்களுடைய குழந்தை மற்றும் ஒரு அழகான இளவயது பெண் என வந்திருந்தனர். அவர்கள் யார் எனத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும், அப்போது யாரையும் கேட்க முடியாது என்பதால்… ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள். 

எல்லோரும் பேசிக்கொண்டே உணவு அருந்த வசதியாக, நடுவே பெரிய வட்ட மேஜை போடப்பட்டிருந்தது. முதலில் அந்த இளவயது தமப்திகள் தங்கள் மகனை சாப்பிட வைத்தனர். அதுவரை மற்றவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். 

பிறகே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் சூப்பும் ஸ்டாடரும் கொண்டு வந்து வைக்க, அந்தச் சிறுவன் அவன் பெற்றோரை தொந்தரவு செய்ய…. அங்கு நின்றிருந்த ஸ்டெல்லாவை அழைத்த ரமேஷ், குழந்தையை விளையாடும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினான். 

இத்தனை பேர் இருக்க, தன்னை மட்டும் அவன் அழைத்ததும், அதிலேயே குளிர்ந்து போன ஸ்டெல்லா, அவன் சொன்னதை ஆவலாகச் செய்தாள். குழந்தையின் தாய்ப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்தே அனுப்பினாள். 

விளையாட்டு அறையில் அந்தப் பையனை விளையாட விட்டு, ஸ்டெல்லா பார்த்துக் கொண்டு இருந்தாள். அங்கே பணியில் இருக்கும் பெண்மணி அப்போது அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். 

“நம்ம பாஸ் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு வந்திருக்காங்க பார்த்தியா?” என்றாள். 

ஸ்டெல்லாவுக்கு முதலில் புரியவே இல்லை. அவள் மூலைக்கு எட்டும் வேளையில், அந்தப் பெண்மணி மேலும் தொடர்ந்தார். 

“வந்திருக்கிறது ரமேஷ் சாரோட அப்பா அம்மா, வருங்கால மாமனார் மாமியார், அவர் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு, அந்தப் பெண்ணோட அண்ணா அண்ணி.” 

“ரெண்டு பேரும் வெளிநாட்டில படிக்கும் போது காதலிச்சாங்கலாம். இவங்களைப் போலவே அவங்களும் பெரிய பணக்காரங்கலாம். இன்னும் ரெண்டு மாசத்தில கல்யாணம் போலிருக்கு.” என அந்தப் பெண் சொல்வதைக் கேட்டு ஸ்டெல்லா மனம் கலங்கி போனாள். 

ரமேஷ் தன்னிடம் ஒரு நாள் காதலை சொல்வான், தன்னைத் திருமணம் செய்து கொள்வான். பிறகு தான் ராணி போல வாழ்வோம் என இத்தனை நாட்கள் செய்து வைத்திருந்த, கற்பனை யாவும் நொடி பொழுதில் களைந்து விட… யதார்த்தம் முகத்தில் அறைந்தது. 

பணம் பணத்தோடு தான் சேரும் என்றுதான் அப்போதும் நினைத்தாள். தான் அதிகபடியாக ஆசையை வளர்த்துக் கொண்டோம் என அவள் உணரவே இல்லை. 

அவள் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்யத் தொடங்க, “அக்கா இந்தப் பையனை அவங்க அப்பா அம்மாகிட்ட விட்டுடுறீங்களா? எனக்கு உடம்பு முடியலை… நான் வீட்டுக்கு போகணும்.” என்றாள். 

“சரி…” என்றவர், அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். 

ஸ்டெல்லா எப்போதும் போலப் பின் வாயில் வழியாக வெளியே சென்றாள். இவளைப் பர்த்தக்தும் காவலாளி வர… “நீங்க வர வேண்டாம் நானே போயிக்கிறேன்.” என்றவள், விரைந்து நடக்க… அவரும் உடன் செல்லவில்லை. 

சில நாட்களாக இவள் மீது தன் பார்வையைப் பதித்து இருந்த அருள்… தூரத்தில் இவள் தனியாக வருவதைப் பார்த்தது விட்டான். ஆனால் ஸ்டெல்லா இவன் இருக்கும் பக்கம் வராமல் கடலை நோக்கி செல்ல… முதலில் குழம்பிப் போனவன், பிறகு அவளை நோக்கி ஓடத் துவங்கினான். 

ஸ்டெல்லா தனது உயிரை போக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் கடலை நோக்கி செல்ல… அவள் இடை அளவு தண்ணீரில் இருக்கும் போதே, அருள் சென்று அவளைப் பிடித்துக் கரைக்கு இழுத்து வந்தான். 

“பைத்தியமா உனக்கு. என்ன வேலை பண்ற?” 

“எனக்கு வாழவே பிடிக்கலை.” 

“ஓ அப்படி என்ன கஷ்டம் உனக்கு.” 

அவன் கேட்டதற்கு ஸ்டெல்லா பதில் சொல்லாமல் இருக்க… அவளை இன்னும் மேலே கரைக்கு அழைத்து வந்ததும், ஸ்டெல்லா அங்கேயே மணலில் உட்கார்ந்து கொண்டாள். 

“யாரையவது லவ் பன்றியா ஸ்டெல்லா, உன் முதலாளியையா?” என அருள் தான் ஊகித்ததைக் கேட்க, ஆமாம் எனத் தலையசைத்தாள். 

“அவங்க எங்க, நாம எங்க, அதெல்லாம் யோசிக்க மாட்டியா?” 

“அவனே லவ் பண்றேன்னு சொன்னாலும், நீ நம்பலாமா?” என அருள் சொல்லும் போது, இவர்களைத் தூரத்தில் பார்த்துவிட்டு அருகில் வந்திருந்த ரமேஷ், அவன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான். 

“அவர் லவ் பண்றேன்னு சொல்லலை… நான் தான் லவ் பண்ணேன்.” என ஸ்டெல்லா சொன்னதும் தான் ரமேஷுக்கு உயிர் வந்தது. 

இப்போது தான் அவனின் வருங்கால மனைவியும், அவன் குடும்பத்தினரும் கிளம்பி இருந்தனர். அவர்கள் சென்றதும் எப்போதும் போல… சுற்றிப் பார்க்க வந்தவன் கண்ணில் இவர்கள் இருவரும் பட்டனர். அது ரெசார்ட்டுக்கு உட்பட்ட பகுதி என்பதால்… என்னவென்று பார்க்க வந்திருந்தான். 

“உனக்கு அறிவு இருக்கா… நீயா ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு, சாகப் போறியே… உன் அப்பா அம்மா பத்தி யோசிச்சு பார்த்தியா?” என அருள் சொன்னவன், ரமேஷை பார்த்ததும் பேச்சை நிறுத்தினான். அவனைப் பார்த்ததும் ஸ்டெல்லா எழுந்து நின்றாள். 

“நீ இந்த முடிவுக்கு வர, நான் உன்கிட்ட எப்பவாவது தப்பா பேசி இருக்கேனா… இல்லை பழகி இருக்கேனா… நீ எப்படி இப்படி ஒரு ஆசையை வளர்த்துகிட்ட…” 

“நீ தனியா போறியே… நம்மகிட்ட வேலைப் பார்க்கிற பொண்ணுக்கு எதுவும் தப்பா நடந்திட கூடாதுன்னு, ஒரு அக்கறையில தான் துணைக்கு வந்தேன். அதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா…அதுவும் நான் தினமும் உன்னோட வரலையே…அப்புறம் எப்படி நீ அப்படி நினைச்ச?” 

“இனி ஒருத்தருக்கு உதவி செய்றதுக்கு முன்னாடி, நான் ரொம்ப யோசிப்பேன்.” என்ற ரமேஷ் திரும்பி செல்ல… ஸ்டெல்லா தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தாள். 

“இப்ப புரியுதா உன்னோட தப்பு.” என்ற அருள் அவளுக்கு மேலும் நிறையப் புத்திமதி சொன்னவன், அவள் உடை காயும் வரை அங்கேயே இருந்துவிட்டு, பிறகு அவளை அழைத்துக் கொண்டு சென்றான். 

மகள் எப்போதும் வரும் நேரத்திற்கு வரவில்லை என்றதும், அவள் தந்தை அவளைத் தேடிக் கொண்டு வர… அருள் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். ஸ்டெல்லா மீண்டும் அது போலச் செய்யமாட்டாள் என எந்த உறுதியும் இல்லை. அவர்கள் கவனமாக இருப்பார்கள் அல்லவா… அதனால்தான் சொல்லிவிட்டான். 

மோசஸின் பின்னே வந்திருந்த மரியதாசும் எல்லாவற்றையும் கேட்டு இருந்தார். கேட்டவர் மிகவும் பயந்து போனார். நல்லவேளை ரோஜா அங்கே வேலைக்குச் செல்லவில்லை என நினைத்துக் கொண்டார். வந்த சுவடு தெரியாமல் திரும்பி போனார். 

அருள் சொன்னதைக் கேட்ட மோசஸுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மகளைக் கடிந்துகொள்ளவும் பயமாக இருந்தது. அவளை அதன்பிறகு அவர்கள் வேலைக்கு அனுப்பவில்லை. கவனமாகப் பார்த்துக் கொண்டனர். 

அங்கே ரமேஷும் அவன் தந்தையை இங்கே இருக்கச் சொல்லிவிட்டு, அவன் சென்னை கிளம்பிவிட்டான். சென்னையிலும் அவர்களுக்கு ஒரு ரெசார்ட் இருக்கிறது. 

அருள் தன் நண்பன் ஜோசப்புக்கு, ஸ்டெல்லாவை பேசி முடித்தான். அருள் கேட்ட போது முதலில் ஜோசப், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க… ஊரில் அரசல் புரசலாகப் பேசிய விஷயம், அவன் காதுக்கும் வந்திருக்கும் என அருளுக்குத் தெரியும். 

“டேய், நீ என்னை நம்புற இல்ல…நீ மத்தவங்க பேசுறதை வச்சு எதுவும் நினைக்காத… அப்படி எதுவுமே கிடையாது. அவன் துணைக்குத்தான் கூட வந்திருக்கான்.” 

“நீ சொன்னா சரி டா… அந்தப் பிள்ளைக்கு என்னைப் பிடிக்குமான்னு தான் யோசிச்சேன். எனக்கு எப்பவுமே ஸ்டெல்லாவை பிடிக்கும்.” என்றதும் தான் அருளுக்கு நிம்மதி ஆனது. 

அருளும் ரோஜாகவும் மாற்றி மாற்றி ஸ்டெல்லாவிடம் பேசி அவளைச் சரி செய்து வைத்து இருந்தனர். 

ஸ்டெல்லாவும் தன் கற்பனை உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தாள். இதுதான் நிதர்சனம் என்ற உண்மை அவளுக்கு விளங்கியது.









Advertisement