Advertisement

உப்புக் காற்று
 

அத்தியாயம் 23

பவித்ரா வெளிநாடு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, புவனா தன் மருமகள் வெளிநாடு செல்வதை முன்னிட்டு, தன் குடும்பத்தினருக்கு மட்டும் பெரிய ஹோட்டலில் விருந்து கொடுத்தார். 

அருள் தனது சொந்த பணத்தில் பைக் வாங்கி இருந்தான். அவனும் ரோஜாவும் அதில் சற்று தாமதமாகவே வந்தனர். அன்றுதான் ரேஷ்மாவும் ரோஜாவும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொண்டனர். 

ரோஜா சுடிதார் அணிந்திருந்தாள். தலைக்குக் குளித்து நீல கூந்தலை தளர பின்னி, முகத்திற்குப் பெரிதாக ஒப்பனை எதுவும் இல்லாமலே… பார்க்க பளிச்சென்று இருந்தாள். ஆளை அசரடிக்கும் தோற்றம் இல்லையென்றாலும், பார்த்ததும் பிடிக்கும் குடும்பப் பாங்கான தோற்றம் அவளிடம்.

பவித்ராவிற்காக ஸ்ரீநிவாஸ் பட்டும் படாமல் அருளிடம் இரண்டு வார்த்தை பேசினார். ரோஜாவைப் பார்த்து லேசாகத் தலையசைத்ததோடு சரி, வேறு எதுவும் பேசவில்லை.

ரேஷ்மா கெத்தாகவே இருக்க, இவளிடம் எல்லாம் தான் வழிய சென்று பேச வேண்டுமா என்ற எண்ணத்தில், அருளும் அவளைக் கண்டு கொள்ளாமல் விட்டான். ரோஜா ரேஷ்மாவை பார்த்து புன்னகைக்க… அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ரோஜாவை மட்டம் தட்ட எதாவது வாய்ப்பு கிடைக்குமா என்பது போல ரேஷ்மா காத்திருக்க… அருள் ரோஜாவை விட்டு நகரவே இல்லை. யார் மதித்தால் என்ன மதிக்கவில்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் என்பது போல.. பவித்ராவும் ரோஜாவுடனே இருந்தாள்.

ரோஜா நிதானமான பெண். அவளும் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள.. அவளிடம் எதுவும் குறையாக ரேஷ்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“உங்களுக்கு அங்க இருந்திட்டு? இங்க வந்து இருக்கக் கஷ்ட்டமா இல்லை.” ரேஷ்மா அக்கறைகாட்டி விசாரிக்க, இவ்வளவு நேரம் தன்னைக் கண்டுகொள்ளாமல் இருந்தவள், திடிரென்று தானாக வந்து பேசவும், ரோஜா எச்சரிக்கையானாள்.

“எங்க?” எனத் தெளிவாக ரோஜா திருப்பிக் கேட்க,

“அதுதான் உங்க ஊர் இப்படியெல்லாம் இருக்காது இல்ல… அதைச் சொன்னேன்.”

“இல்லையே… அப்படியொண்ணும் பெரிய வித்யாசம் இல்லையே… அங்கேயும் மனுஷங்கதான் இருக்காங்க. இங்கேயும் மனுஷங்கதான் இருக்காங்க.” என ரோஜா அலட்சியமாகப் பதில் கொடுக்க… குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் பவித்ராவுக்குப் புரை ஏற… அருள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, தங்கையின் தலையில் தட்டினான்.

ஒண்ணுமே இல்லைனாலும் இந்தத் திமிருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. தான் அவளை மட்டம் தட்ட நினைத்தால்… அவள் அல்லவா தன்னை மட்டம் தட்டி விட்டாள் என ரேஷ்மாவுக்குக் கொதிப்பாக இருந்தது. 

“நான் ஆளுங்களைச் சொல்லலை… இப்படி வசதியாவா உங்க ஊர் இருக்கும். இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் இருக்குமா? அதைச் சொன்னேன்.” ரேஷ்மா விளக்கி சொல்ல… 

“ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு மாதிரி. எங்க ஊர் இன்னும் அழகா இருக்கும். அங்கேயும் இது போலப் பெரிய ஹோட்டல் எல்லாம் இருக்கே…” என்றாள் ரோஜா விட்டுக் கொடுக்காமல்.

உணவு உன்ன அழைக்கப்பட… அருளும் ரோஜாவும் இணைந்தே சென்றனர். முதலில் என்னவெல்லாம் இருக்கிறது பார்த்துவிட்டு வரலாம் எனப் பவித்ரா சொல்ல… வரிசையாகப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

கடைசியில் இருந்த விதவிதமான ஐஸ்கிரீம் மற்றும் கேக்கை பார்த்த ரோஜா, “இதுவும் எவ்வளவு வேணா சாப்பிடலாமா?” எனக் கேட்க,

அவளின் எண்ணம் புரிந்த அருள், “உதை வாங்குவ… முதல்ல சாப்பாடு சாப்பிட்டு, கடைசியில தான் இதுக்கு வரணும்.” என்றான்.

“ஏன்?”

“அப்படித்தான்.”

இருவரும் நெருக்கமாக நின்று கிசுகிசுப்பாகப் பேசிக்கொள்ள. அவர்கள் இருவரும் எதோ ரகசியம் பேசுவது போலவே இருந்தது.

“ரோஜா என்ன வேணுமோ. நல்லா எடுத்து சாப்பிடனும். உன்னை நான் நல்லா கவனிக்கணும்ன்னு மாதவன் சொல்லி இருக்கான். இது அவன் கொடுக்கிற விருந்து தான்.” என்றார் புவனா. ரோஜா ஆமோதிப்பது போலப் புன்னகைத்தாள்.

ஸ்ரீநிவாஸ் மற்றும் செல்வம் தனியே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு உணவருந்த, பவித்ரா மற்றவர்களுடன் இணைந்து உணவருந்தினாள். அருள் இதற்கு முன்பே இந்த ஹோட்டல் வந்திருந்ததினால்… ரோஜாவை தனியே அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்தது எல்லாம் உன்ன வைத்தான். அவர்களுடன் ராஜீவ் இருந்தான். கடைசியில் இருவரும் ஐஸ்கிரீம் எடுத்துக் கொண்டு பின்னால் இருந்த தோட்டத்திற்குச் சென்றனர்.

அங்கே இருந்த உஞ்சலில் ஆளுக்கொன்றில் உட்கார்ந்து பேசியபடி உண்டனர். ரோஜா இங்கே வருவதற்கு முன் பயந்து போய் இருந்தாள். இப்போது அப்படி இல்லை.

“நாமும் இப்படி விருந்து கொடுக்கணும்.” ரோஜா சொல்ல…

“அதுக்கு எதாவது காரணம் இருக்கணும் இல்ல… எதாவது குட் நியூஸ் இருக்கா சொல்லு… நாமும் கொடுக்கலாம்.” அருள் கேட்க,

“அடப்பாவி…” என்பது போலப் பார்த்தவள், சிரிப்புடனே ஐஸ்கிரீமை உண்டாள். 

விருந்து பவித்ராவுக்காக என்பதால்.. ஆளுக்கொரு பரிசு பொருளை பவித்ராவிடம் கொடுக்க… அருள் ரோஜாவைப் பார்க்க, தன் கைப்பையில் இருந்து, இரண்டு தங்க மோதிரங்களை எடுத்து ரோஜா பவித்ராவிடம் கொடுத்தாள்.

“உங்களுக்கும் அண்ணாவுக்கும் அண்ணி.”

“இது வாங்கத்தான் ரெண்டு பேரும் போய் இருந்தீங்களா?” எனப் பவித்ரா சொன்னவள், “ரொம்ப நல்லா இருக்கு. நான் அங்க போய் அவரோட சேர்ந்து போட்டுகிறேன்.” எனத் தன் கைப்பையில் பத்திரப்படுத்தினாள். 

புவனாவும் தேவியும் பவித்ரா அணியும் விதமாக உடைகளே வாங்கி வந்திருக்க… அருளும் ரோஜாவும் கொடுத்ததே விலை உயர்ந்த பரிசானது.
ஸ்ரீநிவாஸ் கொஞ்சம் மதிப்பாக ரோஜாவைப் பார்த்தார். அருள் அவளை வைத்து தானே கொடுக்க வைத்தான். 

“உங்களுக்கு மோதிரம் பிடிச்சிருக்கா அண்ணி?” என ரோஜா பவித்ராவிடம் கேட்க, “ரொம்ப நல்லா இருக்கு. நீங்க செலக்ட் பண்ணதா..” என்றாள் பவித்ரா. 

“இவளுங்க ரெண்டு பேரும் எவ்வளவு நாள் இப்படி இருப்பாளுங்கன்னு நானும் பார்க்கத்தானே போறேன்.” என்றார் தேவி தன் அருகில் இருந்த ரேஷ்மாவிடம். 

“அதுதான் பவித்ரா வெளிநாடு போகப்போறாளே…” 

“போனாலும் திரும்பி இங்க வந்து தானே ஆகணும். அப்ப பார்ப்போம் இவங்க லட்சணத்தை. இப்ப பத்து நாலுன்னு ரெண்டு பேரும் நடிச்சிட்டு இருக்காளுங்க.” என்றார் தேவி, அவர் சொன்னபடி நடக்குமா என்ற ஆர்வம் ரேஷ்மா முகத்தில் தெரிந்தது. 
கிளம்பும் போது அருளும் ரோஜாவும் ஸ்ரீநிவாஸிடம் சொல்லிக்கொள்ள, அவராகவே இருவரையும் வீட்டுக்கு வாங்க என்றார். பவித்ராவுக்கும்  புவானாவுக்கும் மிகவும் மகிழ்ச்சி. அப்போதே இருவரையும் அழைத்துக் கொண்டு புவனா தங்கள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.   

முன்பு இருந்த கவலை இப்போது பவித்ராவுக்கு இல்லை. ரோஜா சமாளித்துக் கொள்வாள் எனச் சந்தோஷமாகவே தன் கணவனிடம் செல்ல தயாரானாள். அருள் தான் தவித்துப் போனான். 

“அவ்வளவு தூரம் தனியா போயிடுவியா.. நடுவுல வேற மாறனுமாமே.” என அவன் கவலை கொள்ள… 

“நீ வேணா கொண்டு வந்து விடு.” எனப் பவித்ரா கேலி செய்தாள். 

பவித்ரா செல்வதை நினைத்து ரோஜா கண்கலங்க… “இப்படி நாத்தனார் ஊருக்கு போறதுக்கு எல்லாம் அழுவுற அண்ணியை நான் இப்பத்தான் பார்கிறேன். நல்லதுன்னு நிம்மதியா இருக்காம.” என்றார் புவனா கேலியாக. பவித்ராவை வழியனுப்ப விமான நிலையம் வந்திருந்தனர். 

“அடுத்து எப்ப டி வருவ?” அருள் கேட்க, 

“இருடா இன்னும் ஆறு மாசத்தில ரேஷ்மாவுக்குக் கல்யாணத்தை வச்சி, பவித்ராவை இங்க கூப்பிட்டுகலாம்.” என்றார் புவனா. அதன் பிறகே அருள் சற்று நிம்மதியானான். 

ஆயிரம் பத்திரம் சொல்லி அருள் தங்கையை வழியனுப்ப… பவித்ரா எல்லோரிடமும் விடைபெற்று தன் கணவனை நோக்கி விமானத்தில் பறந்தாள். அவள் அங்கே மாதவனிடம் சென்று சேர்ந்த பிறகுதான், இங்கே எல்லோருக்கும் நிம்மதி ஆனது. 

கலை, காலை மாலை வந்து சிறிது நேரம் ரோஜாவுடன் இருந்துவிட்டு செல்வார். அப்போது சில நேரம் சாரதியும் வந்து, ரோஜாவை டீ போட்டு தர சொல்லி குடித்துவிட்டு செல்வார். 

தேவி பவித்ரா இருக்கும் வரை வந்தவர், அதன் பிறகு வருவதே இல்லை. ரோஜாவை பார்க்க நேர்ந்தால்… இரண்டு வார்த்தை பேசுவதோடு சரி. அவர் ரோஜாவுக்கும் பவித்ராவுக்கும் சிண்டு முடிக்கவே பார்த்தார். அதுதான் ரோஜாவுடன் நன்றாகப் பேசவும் காரணம். இப்போது பவித்ராவும் இல்லாததால்… வருவதே இல்லை. அவர் அழைக்காமல் எப்படிச் செல்வது என ரோஜாவும் செல்ல மாட்டாள். 

அவளுக்கும் நேரம் சரியாக இருந்தது. காலையில் எழுந்தால் அருளுக்கு டீபன் செய்து கொடுப்பது, பின் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மதிய சமையலை ஆரம்பிப்பாள். இரண்டு மணி போல அருள் வருவான், பிறகு இருவரும் சேர்ந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு அவன் கம்பனிக்கு சென்று விடுவான்.
ரோஜா உட்கார்ந்து எதாவது தைத்துக் கொண்டு இருப்பாள். அதுதான் பவித்ரா நிறைய வாங்கிக் கொடுத்துவிட்டு சென்றாளே…. திரும்ப அருள் மாலை வர ஏழு எட்டு மணி ஆகும். அவன் வந்துவிட்டால்… அவனை தவிர வேறு எதுவும் நினைக்க, அவளுக்கு நேரம் இருக்காது. 

ஒருநாள் தேவி அவர் கணவருடன் வெளியே சென்றிருக்க… மலருக்குத் துணையாகக் கலை வீட்டில் இருக்க… ராஜீவ் இங்கே வந்து இருந்தான். ராஜீவ் கொஞ்சம் நிறம் கருப்பாக, அதோடு சற்று பூசிய உடல்வாகு கொண்டவன். வெகுளியான பையன். 

அவனுக்குத்தான் கதை கேட்பது பிடிக்குமே… ரோஜாவிடம் அவர்கள் ஊரைப் பற்றிக் கதை கேட்டுக் கொண்டிருந்தான். ரோஜா இரவு சமையல் செய்தபடி அவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள். 

“நீங்க ஏன் காலேஜ் போகலை?” 

“எங்க ஊர்ல காலேஜ் இல்லை… வெளியுருக்குத்தான் போகணும். எனக்கு அம்மாவும் இல்லையா… அதனால வீட்டை பார்த்திட்டு இருந்திட்டேன்.” 

“இங்க எல்லாம் அப்படி இல்லை… தெருவுக்குத் தெரு இப்ப காலேஜ் இருக்கு… நம்ம ஏரியால கூட ஒன்னு இருக்கு. நீங்க இப்ப கூடப் போய்ப் படிக்கலாம்.” 

“இனிமே போய் நான் படிக்கவா…” எனக் கேட்டாலும், படிப்பில் ஆர்வம் உள்ள பெண் என்பதால்…சிறிது ஆசையும் எட்டி பார்த்தது. 

ரோஜா மாவு பிசைந்து விட்டு, குருமா செய்ய, தேவி வந்துவிட்டார். வெளியே இருந்தே அவர் குரல் கொடுக்க… ரோஜா சென்று ஆவலாகவே  அவரை வீட்டுக்குள் அழைத்தாள். 
“வேலை இருக்கு ரோஜா…” என்றவர், ராஜீவ்வை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். 

அவன் குருமா பிடிக்கும் என்றதால்… மனம் கேட்காமல் ரோஜா கொஞ்சம் குருமா எடுத்துக் கொண்டு, அவர்கள் வீட்டிற்குச் சென்றாள். 

“என்ன மா சாப்பிட இருக்கு?” 

“இருடா இப்பத்தான் வந்தேன். மாவு இருக்கு சட்னி அரைச்சுத் தோசை சுடுறேன்.” 

“தோசையா? அதுவும் வெறும் சட்னி தானா… நான் அண்ணன் வீட்ல சாப்பிட போறேன்.  அங்க அண்ணி சப்பாத்தி குருமா பண்றாங்க. எனக்கும் சேர்த்து தான்.” என்றான்.

“போனா உன் காலை உடைச்சிடுவேன். அவ என்ன ஜாதியோ என்னவோ… எல்லாம் உங்க தாத்தா பாட்டி பண்ற வேலை… முதல்ல பேரன்னு எவனையோ கொண்டு வந்தாங்க. அவனாவது இந்தக் குடும்பம், இப்ப அவன் இவளை இழுத்திட்டு வந்திருக்கான்.” 

“உங்க தாத்தா பாட்டிக்காக நான் பொருத்து போறேன். எட்ட நின்னு பழகிறதோடு நிறுத்திக்கணும். அவங்க வீட்டுக்கு போற வேலை எல்லாம் வச்சுக்கக் கூடாது.” 

“உனக்குத் தோசை வேண்டாமா, வெளிய போய் என்ன வேணுமோ வாங்கிச் சாப்பிடு. ஆனா அங்க போகக் கூடாது.” எனக் கத்தி விட்டுத் தேவி உள்ளே செல்ல… அவர் பேசியது வீட்டில் இருந்த சாரதி கலை என அனைவருக்குமே கேட்டது என்றால்… கதவு திறந்து இருந்ததால்.. வெளியே நின்ற ரோஜாவுக்கும் தெளிவாகக் கேட்டது. 

அன்று பவித்ரா சொல்லும்போது புரியாதது, இன்று நேரிலேயே கேட்டதும் நன்றாகவே புரிந்தது. ரோஜா அப்படியே வீடு திரும்ப, அங்கே வாசலில் அருள் நின்று கொண்டிருந்தான். அவள் கையில் குழம்புடன் வருவதைப் பார்த்தவன், “என்ன இது.” என்றான். 

அவன் நேராகப் பார்த்து கேட்கும் போது, அவனிடம் மறைக்கவா முடியும், “ராஜீவுக்குக் கொண்டு போனேன்.” என்றவள், வேறு எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றாள். 

அருள் முகம் கைகால் கழுவி, உடை மாற்றி வந்த போது, ரோஜா குனிந்து சப்பாத்திக்கு தேய்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அவள் முகம் நிமிர்த்திப் பார்க்க… கண்கள் கலங்கி இருந்தது. 

“என்ன ஆச்சு? யாரு என்ன சொன்னா?” என்றதும் ரோஜா எல்லாவற்றையும் சொல்லிவிட… 

“இதெல்லாம் எதிர்ப்பார்த்ததுதான் ரோஜா… இவங்க எல்லாம் எப்படி இருந்தாலும், நமக்கு ஒன்னும் இல்லை புரியுதா?” 

“அவங்க எப்படி இருக்காங்களோ, நாமும் அப்படி இருந்திட்டுப் போகப் போறோம். அவ்வளவு தான்.” 

“பவித்ரா எப்படி இருப்பாளோன்னு தான் நான் பயந்திட்டு இருந்தேன். ஆனா பவித்ரா எல்லாவத்தையும் விட எனக்கு என் அண்ணன் தான் முக்கியம்ன்னு காட்டினா இல்ல…” 

“நான் வேணும்ன்னு அவ நினைச்சா… அதோட அவளுக்குத் தெரியும், எனக்கு நீ எவ்வளவு முக்கியம்ன்னு. அவளுக்குப் புரிஞ்சது இல்ல.. எனக்கு அதே போதும், இவங்க எல்லாம் நமக்குத் தேவை இல்லை.” 

“இவங்களும் ஒருநாள் உன்னை விரும்பி வருவாங்க பாரு…” 

“ஏழைக்கு ஜாதி இல்லை… அதே போல அதிகப் பணக்காரனுக்கும் ஜாதி இல்லை. பணம் பணத்தோட சேர்ந்துக்கும். ஒருநாள் நாமும் அந்த உயரத்துக்குப் போகும் போது, இவங்களுக்கு நாம யாருன்னு எல்லாம் மறந்து போகும். நடக்குதா இல்லையான்னு மட்டும் பாரு.” என்றான். 

அருள் பேசப் பேச ரோஜாவுக்கு ஒரு தெளிவு… இனி தான் எப்படி இருக்க வேண்டும் எனப் புரிய ஆரம்பித்தது.

Advertisement