Advertisement

உப்புக் காற்று 

அத்தியாயம் 22 


அருளும் வந்து பக்கத்தில் இருந்த சுவற்றில் உட்கார்ந்து கொள்ள.. சிறிது நேரம் இருவருமே பேசவில்லை. காற்று சிலுசிலுவென வீச… இருவரும் வெளியே மட்டும் அல்ல மனதிற்குள்ளும் குளுமையை உணர்ந்தனர். 

“ரொம்பச் சந்தோஷமா இருக்கு பவித்ரா, நீ ரோஜா கிட்ட இவ்வளவு நல்லா நடந்துபேன்னு நான் நிச்சயமா எதிர்பார்கலை… அன்னைக்குத் தாத்தா கிட்ட நான் அவளைப் பத்தி சொன்னபோது கூட, வேண்டாங்கிற மாதிரி தான் நீ சொன்ன…” 

“அங்க வேளாங்கண்ணி வந்திருந்த போது கூட, நீ அவகிட்ட முகம் கொடுத்து பேசலை…” 

“நான் இப்பவும் சொல்றேன், இந்தக் காதல் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா நான் பார்த்த காதல் எல்லாம் அப்படித்தான் இருந்தது.” என்ற பவித்ரா மேலும் தொடர்ந்தாள். 

“உருகி உருகி லவ் பன்னுவாங்க, அப்புறம் ஈஸியா பிரேக் அப்ன்னு சொல்வாங்க.” 

“இவ்வளவு நாள் எங்கிருந்தோ கஷ்ட்டபட்டுட்டு, இப்ப எல்லாம் சரியாகிற நேரத்தில, நீ உனக்காக ஒரு பெண் அங்க இருக்கான்னு சொல்லும் போது, இது தேவையான்னு தான் தோனுச்சு.” 

“எனக்குத் தெரியும், நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு. அதனால தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்.” 

“ஆனா நீ இவ்வளவு தீவிரமா ரோஜாவை கல்யாணம் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை…” 

“நம்ம வீட்டிலே உன்னைச் சேர்க்க மாட்டாங்களோ… நீ அங்கயே இருந்திடுவியோன்னு பயம், அதுதான் ரோஜா மேல கோபப்படக் காரணம்.” 

“நான் பயந்த மாதிரிதான் ஆச்சு. நீ அங்கயே இருந்திட்ட. இதுக்கு மேல சரி வராதுன்னு தான் எல்லார்கிட்டயும் சண்டை போட்டேன். ரோஜாகிட்டையும் கோபமா பேசினேன்.” 

“ரோஜாகிட்ட பேசினியா எப்போ?” 

“நீ எப்பவும் நைட் போன் பண்ணுவ, அன்னைக்குப் பண்ணலை… இவர் வேற எதோ புயல்ன்னு சொன்னாரா.. நான் ரோஜாவை கூப்பிட்டுக் கேட்டேன்.
ஆமாம் அவர் கடலுக்குப் போயிருக்கார்ன்னு சொன்னா… ரொம்பக் கோபம் வந்திடுச்சு.” 

“நீதான் திரும்ப எங்க அண்ணன் கடலுக்குப் போகக காரணம்ன்னு சொல்லி கோபப்பட்டேன்.” 

“ஏன் பவித்ரா அப்படிப் பண்ண? நடந்த எதுக்கு அவ காரணம் இல்லை புரியுதா…” 

“கல்யாணம் கூட நான் எடுத்த முடிவு. தாத்தா அந்தப் பெண்ணுக்குப் பணம் கொடுத்திடலாம்ன்னு சொன்னதும், எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதுவரை நான் ரோஜாவை உடனே கல்யாணம் பண்ற எண்ணத்தில இல்லை.” 

“நீங்க யாராவது அவகிட்ட இப்படிப் பேசி வச்சா… அவ என்னைத் திரும்பியும் பார்க்க மாட்டா… அந்தப் பயத்தில தான் நான் உடனே கல்யாணம் பண்ணேன்.” 

“நான் ஒத்து வரலைனா, நீங்க அடுத்து ரோஜாவை தேடி போவீங்கன்னு தெரியும். அதனாலதான் நான் உங்களுக்கு நேரமே கொடுக்கலை….” 

அண்ணன் சொன்னதற்குப் பொய்யாகக் கூட இல்லை எனப் பவித்ரா மறுக்கவில்லை. கண்டிப்பாக ரோஜாவிடம் பேசி இருப்பேன் என்றாள். 

“நீ அவகிட்ட சண்டை எல்லாம் போட வேண்டாம். எங்க அண்ணன் நல்லா இருக்கணும், நீ விலகிக்கோ சொன்னாலே… அவ விலகி போயிருப்பா… ஏன்னா அவளுக்கு என்னோட சந்தோஷம் தான் முக்கியம். ஆனா அதுக்குப் பிறகு நாங்க ரெண்டு பேருமே நடைபிணமா தான் இருந்திருப்போம். வேற வாழ்க்கை எல்லாம் தேடி இருக்க மாட்டோம்.” 

“நீ நினைக்கிற மாதிரி, பருவ கோளாறுல வரலை எங்க காதல். ரோஜாவை பார்த்து பிடிச்சுப் போய்ப் பொண்ணு கேட்டேன். அவங்க அப்பா பொண்ணு கொடுக்கலை… ஏன் தெரியுமா? அவர் தன் பையனை கடல்ல தான் இழந்தார். அதனால கடலுக்குப் போறவனுக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னார்.” 

“ஆனா அதுக்குப் பிறகு தான் ரோஜா என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தீவிரமா இருந்தா… அவங்க அப்பா மட்டும் பிடிவாதம் பிடிக்கலைனா… எங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும்.” 

“அப்ப என்ன செஞ்சிருப்ப நீ? ரோஜாவை டைவர்ஸ் பண்ணிட்டு வான்னு சொல்லி இருப்பியா?” 

“நான் இப்பவும் சொல்றேன், நான் உன் காதலுக்கு எதிரி இல்லை. உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தா.. எனக்கு அது இன்னும் நிம்மதியா இருந்திருக்கும்.” 

“நீ இங்க வந்த பிறகு, அங்க இருக்கப் பெண்ணைக் கல்யாணம் பண்ணா சரி வருமா… அப்படின்னு குழப்பம்.” 

“இப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்ட, நாங்களும் அதை ஏத்துகிட்டோம் தானே… உன்னை விட்டுட்டு வான்னு சொல்லலையே…” 

“அப்படி வேற சொல்வீங்களா?” 

“ஐயோ ! நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன், நீ ஏன் இப்படி டென்ஷன் ஆகிற?” 

“ஏன்னா நீங்க எல்லாம் இல்லாத போது, எனக்கு அவ மட்டும் தான் இருந்தா…” 

“இருக்கிறவங்க கொடுக்கிறது பெரிய விஷயமே இல்லை. ஆனா அவங்க அப்பா, அவங்க ரெண்டு பேருக்கு வர்றது போலத்தான் மீனோ, அரிசியோ கொண்டு வருவார். அதையும் அந்தப் பெண் எனக்குக் கொடுத்திட்டு, அவ எத்தனை நாள் சரியா சாப்பிடாம இருந்திருக்கா தெரியுமா?” 

“எவ்வளவு பணம் இருந்தாலும், சில பொண்ணுங்க மனசு மட்டும் கிடைக்காது. அது போலத் தான் ரோஜா… இந்தப் பணம் வசதி எல்லாம் அவ முன்னாடி ஒண்ணுமே கிடையாது.” 

அண்ணனின் பேச்சில் தான் எதோ பெரிய தவறு செய்தது போலப் பவித்ராவுக்குத் தோன்றியது. “எனக்கு இதெல்லாம் தெரியாது. எனக்கு இருந்தது எல்லாம், எனக்குன்னு நீ மட்டும் தான் இருக்க. உன்னையும் இழக்க விரும்பலை அவ்வளவுதான்.” 

“என்னால நீ மனசு கஷ்ட்டபட்டிருந்தா, ரொம்பச் சாரி.” என்றாள் கம்மிய குரலில். 

“ஹே… ஏன் டி சாரி எல்லாம் சொல்ற?” 

“நிஜமா எனக்குத் தெரியலை… நான் பண்ணது தப்பா சரியான்னு கூட எனக்குத் தெரியலை…. இத்தனை நாள் இருந்த இடத்தில இருந்து உன்னை வர வச்சிட்டேன்.” பவித்ரா அழுகையுடன் சொல்ல… 

“ஹே….. நான் என் மனசில இருக்கிறது உன்கிட்ட சொன்னேன் அவ்வளவுதான். எனக்கு உன்கிட்ட தானே சொல்ல முடியும்.” 

“ஒருவேளை உன் இடத்தில நான் இருந்து, என் இடத்தில நீ இருந்திருந்தா, அப்ப நானும் உன்னைப் போலத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டும் நீ எப்படியும் போன்னு விட முடியுமா என்ன?” என்றவன், “நீ எனக்கு நல்லது தான் பவித்ரா செஞ்சிருக்க. அதுல உனக்குச் சந்தேகமே வேண்டாம்.” என்றவன், பவித்ராவின் அருகே எழுந்து சென்று அவளைத் தோளோடு அனைத்துக் கொண்டான். 

பவித்ரா கண்ணீரை துடைக்க… “நான் இங்க இருந்து போனதுக்குக் காரணம், ரோஜா மட்டும் தான். அவ இப்போ என்னோட இருக்கும் போது, எனக்கு இங்க இருக்கிறது சந்தோஷம் தான். நீ மனசை போட்டு குழப்பாதே…சரியா?” 

“ம்ம்…” 

“வாழ்க்கை எங்களுக்குப் போராட்டமா தான் இருந்தது. இப்ப உன்னால எங்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு.” 

“நானா எப்பவும் இங்க வந்திருக்க மாட்டேன். சித்தப்பா மனசு மாறவும் நாட்கள் ஆகி இருக்கலாம். உன்னால தான் இப்ப நாங்க இங்க இருக்கோம்.” 
மனம் விட்டு பேசியதும், இருவரின் மனதில் இருந்த வருத்தங்கள் மறைந்தது. மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, இருவரும் உறங்க சென்றனர். 
இனி அண்ணன் இங்கிருந்து செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை பவித்ராவுக்கு வந்திருந்தது. அதனால் மாதவன் விருப்படியே டிக்கெட் போட்டு விடும் படி தகவல் அனுப்பிவிட்டு உறங்கினாள். 

அருள் அறைக்குள் வந்ததும், ரோஜாவை பார்க்க, அவள் ஏசி குளிருக்கு கையைக் காலை ஒடுக்கிக் கொண்டு படுத்து இருந்தாள். 

ரிமோட் கொண்டு ஏசியை அணைத்தவன், கட்டிலில் அவளை ஒட்டி உட்கார்ந்து கொண்டு, அவளைத் தன் புறம் திருப்பினான். 

முதலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அருளின் தொடர் முயற்சியில் அவளாகவே புரண்டு படுத்தாள். 

அருள் அவள் நெற்றி கன்னம் என நிருதுவாக வருடி விட…. அதன் தாக்கத்தில் உறக்கம் களைந்து மெல்ல கண் திறந்து பார்த்தாள்.

“நீயா முழு மனசா இங்க வந்தியான்னு எனக்கு தெரியாது. ஆனா இங்க ஏன் வந்தோம்ன்னு நான் எப்பவுமே உன்னை நினைக்க விடாம பார்த்துப்பேன். நீ என்னை நம்புற தானே…” அருள் சொல்ல… அவனுக்கு வார்த்தையால் பதில் சொல்லாமல், ரோஜா அவனை இழுத்து அனைத்துக் கொண்டாள். 

குளிர்ந்து போயிருந்த அவளின் உடல் அருளை அனைத்ததும் அதன் கதகதப்புச் சுகமாக இருக்க, அவனை மேலும் இறுக அணைத்தவள், அவன் கன்னத்தில் வேறு அழுத்தி முத்தமிட… அதற்கு மேல் அருளை நிறுத்தி வைக்க முடியுமா என்ன? 

அன்று தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாகவே விழித்தனர். ரோஜா குளித்து விட்டு வர, பவித்ரா பால் காய்ச்சிக்கொண்டு இருந்தாள். 

“நான் காபி போடுறேன்.” என ரோஜா சொல்ல, பவித்ரா விலகி நின்றாள். அப்போது அவர்கள் வீட்டில் இதற்கு முன் வேலை செய்த பெண் வர, 

“வாங்க புஷ்பா, எப்பவும் போல நம்ம வீட்ல வீடு பெருக்கி துடைச்சு, வெளியேவும் பெருக்கி கோலம் போட்டுடுங்க.” என்றாள். ரோஜா எதோ சொல்ல வர… அவளைத் தடுத்தவள், 

“நீங்க வெளிய பெருக்கி கோலம் போட்டுட்டு வாங்க.” எனச் சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பியவள், ரோஜாவை பார்க்க, 

“வேலைக்கு ஆளு வேண்டாமே, நானே பண்ணிப்பேனே…” என்றாள். அப்போது அருளும் அங்கே வந்துவிட…. 

“மத்தவேளை இருக்கு இல்லையா, அதை நீங்க பண்ணுங்க போதும். வெளிய போய் நீங்க வாசல் தெளிக்கிறது எல்லாம் இங்க சரி வராது.” 

பவித்ரா சொன்னதற்கு அருளும் மறுக்காமல் இருக்க… “எனக்கு வேலை இல்லைனா போர் அடிக்கும்.” என்ற ரோஜாவிடம், “போர் அடிச்சா அண்ணனோட கம்பெனிக்கு போங்க.” எனச் சொல்லிவிட்டுப் பவித்ரா சென்று விட… 

“இங்க எப்படின்னு பவித்ராவுக்குத்தான் தெரியும் ரோஜா, நீ அவ சொல்றபடி கேளு..” எனச் சொல்லிவிட்டுச் சென்றான் அருள். 

காலை உணவு வேளையில் “அண்ணா, நானும் ரோஜாவும் ஷாப்பிங் போறோம். நாங்க வர லேட் ஆகும், நீ கம்பெனியிலேயே சாப்பிட்டுக்கோ…” 

“அப்படி எங்க போறீங்க?” என்ற அண்ணனிடம், “போயிட்டு வந்ததும் தெரிஞ்சிடும்.” என்றாள் பவித்ரா. 

வெளியே என்றதும், ரோஜா ஆர்வமாகவே கிளம்ப… அருள் ரோஜாவிடம் பணம் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் சென்றதும் இருவரும் கார் பிடித்துப் பெரிய ஜவுளி கடைக்குச் சென்றனர். 

பவித்ரா நிறையப் புடவை மற்றும் சுடிதார்கள் என வீட்டுக்கு அணிவது, வெளியே அணிவது எனப் பார்த்துப் பார்த்து எடுத்தாள். 

நீயும் உனக்குப் பிடிச்சது எடு என்றுதான் சொன்னாள். ரோஜா இரண்டு மட்டும் எடுக்க, அதையும் வாங்கிப் பவித்ரா பில் போட்டாள். 

அங்கே வெளியே இருந்த ஹோட்டலில் மதிய உணவு உண்டவர்கள், மீண்டும் பட்டு புடவை எடுக்கும் பகுதிக்கு சென்று, சில புடவைகள் எடுத்தனர். 

வீடு வந்து சேர மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. பவித்ரா செல்லில் துணி தைப்பவரை அழைத்து வீட்டிற்கு வர சொன்னாள். அவளுடைய அளவும் ரோஜாவின் அளவும் கொடுத்தவள், அளவு சரிபார்க்க ரோஜாவிற்கு மட்டும் முதலில் ஒன்று தைத்துக் கொண்டு வர சொன்னாள். 

“நானே தைப்பேன், என்னோட தையல் மெஷின் கூடக் கொண்டு வந்திட்டோம்.” 

“சரி, அவர் இப்போ ஒரு நாலு மட்டும் தைக்கட்டும், மிச்சம் வேணா நீங்களே தச்சுக்கோங்க.” என்றவள், வாங்கிய பெரும்பான்மையான புடவை மற்றும் சுடிதார்களை ரோஜாவிடமே கொடுத்தாள். 

வீட்டில் அணிவதற்கு வெளியே அணிவதற்கு எனப் பிரித்துக் கொடுத்தவள், “வீட்ல தானேன்னு ரெண்டு டிரெஸ்ஸை மாத்தி மாத்தி போட கூடாது. எங்க சித்தி கட்டின புடவையைத் திருப்பிக் கட்ட மூன்னு மாசம் ஆகும்.” என்றாள். 

பவித்ரா சொல்ல வருவது ரோஜாவுக்குப் புரிந்தே இருந்தது. இருக்கும் இடத்திற்கு ஏற்றபடி இரு எனத் தன்னைச் சொல்கிறாள் எனப் புரிந்தது. 

அன்றும் மாலை தேவி வந்து ரோஜாவிடம் நன்றாகப் பேசிக் கொண்டு இருந்துவிட்டு சென்றார். 

“எங்கையோ கடைக்குப் போன மாதிரி இருந்ததே….” ரோஜா பதில் சொல்வதற்குள், 

“நான் ஊருக்கு போறேன் இல்ல சித்தி அதுக்குக் கொஞ்சம் வாங்க வேண்டியது இருந்தது.” எனப் பவித்ரா முடித்துக் கொண்டாள். 

தேவி ரோஜாவிடம் அவள் பிறந்து வீடு பற்றிக் கேட்க, பிறந்த வீட்டில் நினைவில் ரோஜாவின் கண்கள் கலங்க, 

“அவங்க வீட்டை பத்தி பேசினா, அவங்களுக்கு அவங்க அப்பாவை நினைச்சு கஷ்ட்டமா இருக்கும். நாம வேற பேசலாமே…” என்றாள் பவித்ரா. தேவி சென்ற பிறகு, “நாம எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் சொல்லனும்னு அவசியம் இல்லை. அவங்க நல்லவிதமா எடுக்காம… இளக்காரமா நடத்தவும் செய்யலாம்.” என எச்சரித்தாள். 

“ஏன் அவங்க நம்ம குடும்பம் தானே….” என ரோஜா சொல்ல, சில விஷயங்கள் அவளாகவே புரிந்து கொண்டால் நல்லது எனப் பவித்ரா நினைத்தாள். ரோஜாவும் ஒன்றும் விவரம் இல்லாத பெண் இல்லை. அதனால் அவளது விருப்பதிற்கே விட்டுவிட்டாள். 

மாலையில் அருள் வந்ததும், ரோஜா அவனிடம் இன்று வாங்கிய துணிகளை எடுத்து வந்து காட்ட, பவித்ரா சில நகைகளைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள். 

“அம்மாவோடது, நீ இருக்கேன்னு தெரிஞ்சதும், அப்பவே பாட்டி சொல்லிட்டாங்க. உனக்குச் சேர வேண்டியதை உன் பொண்டாட்டிகிட்ட கொடுக்கச் சொல்லி… கொடுத்திட்டேன்.” என்றவள், ரோஜாவிடம் நகைகளைக் கொடுக்க…ரோஜா அருளைப் பார்த்தாள். 

“இதுக்கெல்லாம் இப்ப என்ன அவசரம்?” அருள் சொல்ல… 

“ஊருக்கு கிளம்பறதுக்குள்ள, நான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யணும்.” என்றவள், ரோஜாவின் கைகளில் நகைகளை வைத்தாள். 

“என்னது ஊருக்கு போறியா எப்ப?” 

“இன்னும் பத்து நாள்ல.” 

“ஏன் பவித்ரா அதுக்குள்ளே போற…..” 

“இன்னும் எத்தனை நாள் இங்க இருக்க முடியும்? அதுவும் மாதவன் தான் வர சொன்னார்.” 

மாதவன் என்றதும் அருளுக்கும் மறுப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்களும் புதிதாகத் திருமணம் ஆனவர்கள், அவனும் எத்தனை நாட்கள் தனியாக இருப்பான் என நினைத்து அமைதியானான். ஆனால் இன்னும் பத்து நாட்களில் பவித்ராவை பிரிய வேண்டும் என்பது கஷ்ட்டமாகவே இருந்தது. 

இருந்த சில நாட்களில் தனக்குத் தெரிந்த சமையல் மற்றும் வீட்டு நிர்வாகத்தை எல்லாம் ரோஜாவுக்குப் பவித்ரா சொல்லிக் கொடுத்தாள். பெரும்பாலும் இருவரும் சேர்ந்தே இருப்பார்கள். இவள் சென்று விட்டால் தான் எப்படித் தனியாக இருக்கப் போகிறோம் என ரோஜாவுக்குக் கவலையாக இருந்தது. மற்றபடி நாட்கள் மகிழ்ச்சியாகவே சென்றது. 

Advertisement