Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 21 


“பவித்ரா, நீ சொன்னது போல, உங்க அண்ணன் இங்க வந்திட்டான். இதுக்கு மேல நீ கோபமா இருக்கிறது நியாயம் இல்லை.” 

“நான் அதுக்கு யோசிக்கலை அத்தை. சித்தப்பாகிட்ட அப்படிப் பேசிட்டு இப்ப அங்க போக ஒரு மாதிரி இருக்கு.” 

“இதுக்குதான் யோசிக்காம பேசக்கூடாது. ஆனா நீ வருத்தபடுற அளவுக்கு ஒன்னும் இல்லை. இதை விட உங்க அப்பாவும் அம்மாவும் இருக்கும் போது, உன் சித்தப்பாவும் சித்தியும் பேசி இருக்காங்க.” 

“அப்ப எங்களுக்குக் கம்பனியை தனியா பிரிச்சுக் கொடுங்கன்னு, அவங்களும் கேட்டவங்க தான்.” 

“உங்க அப்பாதான் பொறுப்பா இருந்தார். கல்யாணத்துக்குப் பிறகு இவருக்குக் கீழ இருக்கிறதான்னு உங்க சித்தப்பாவுக்கு எண்ணம்.” 

“இப்பவும் அவங்களுக்கு ஆதாயம் இல்லாம சேர்ந்து இருக்கிற முடிவுக்கு வந்திருக்க மாட்டாங்க. அவங்க அவ்வளவு விவரம் இல்லாதவங்க இல்லை.” 

“எனக்கு அவங்களை எப்படி ஆஃப் பண்றதுன்னு தெரியும். நான் பார்த்துகிறேன் விடு.” புவனா சொல்லி விட்டாலும், பவித்ரா கிளம்பத் தயங்கிக் கொண்டே இருக்க…அப்போது ரேஷ்மா வந்தவள், 

“என்ன உங்க குப்பத்து அண்ணியைப் பார்க்க போகலையா?” என நக்கலாகக் கேட்க, பவித்ராவுக்குச் சுர்ரென்று ஏறி விட்டது. 

இப்போதே இப்படிப் பேசும் ரேஷ்மா, தானும் ரோஜாவை அலட்சியமாக நடத்தினால் சுத்தமாக மதிக்க மாட்டாள் எனத் தெரியும், மற்றவர்களும் அப்படித்தான். எனவே, “குப்பம் கிப்பம்ன்னு சொன்ன அவ்வளவு தான். அவங்க என்னோட அண்ணி, ஒழுங்கா பேசு.” என எச்சரித்தவள், “அத்தை, நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்.” எனத் தன் மாமியாரிடம் சென்று சொல்லிவிட்டு சென்றாள். 

அருள் வரும் போது இரண்டரை மணி. வரும் போதே அவன் மதிய உணவு வாங்கி வந்துவிட… “கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாது.” கலை சொல்ல… 

“ஊர்ல கூட எப்பவும் இந்த நேரத்திற்குத் தான் பாட்டி சாப்பிடுறது. என் அப்பா வர ரெண்டு மணிக்கு ஆகிடும்.” என்ற ரோஜா தன் அப்பாவின் நினைவில் கண்கலங்க… 

அதைக் கவனித்த அருள், “ரோஜா சாப்பாடு எடுத்து வை…பசிக்குது.” என அவளைத் திசை திருப்பினான். 

“நான் ரோஜாவை சாப்பிட கூப்பிட்டாலும், அவ வரலை… இந்தப் பவித்ரா இருந்தாலாவது கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ன்னு பார்த்தா, அவளும் வரலை…” எனக் கலை புலம்ப… 

“ஒன்னும் பிரச்சனை இல்லை பாட்டி. சாமான் வாங்கிக் கொடுத்திட்டா, ரோஜாவே நல்லா சமைப்பா… பவித்ரா வராம எங்க போவா, வருவா.” என்றான். 

“நீங்களும் சாப்பிடுங்க பாட்டி.” ரோஜா சொன்னதற்கு, 
“இல்லைமா நான் சாப்பிட்டேன், நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.” எனக் கலை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தோளில் கைப்பையும், கையில் சில பைகளோடு பவித்ரா உள்ளே நுழைந்தாள். 

“எப்ப வர்றா பாரு.” எனக் கலை சொல்ல… யாரோ என நினைத்துப் பார்த்த அருளுக்கும் ரோஜாவுக்கும், பவித்ராவைப் பார்த்ததும் ஆச்சர்யமே. 

ஹப்பா வந்துவிட்டாளா என்பது போல அருள் நினைக்க, இப்போது என்ன சொல்வாளோ என ரோஜா பயந்தவள், தயங்கியபடியே “வாங்க அண்ணி.” என்றாள். அருளும் “வா பவித்ரா…” என்றான். 

பவித்ரா முதலில் ரோஜாவிடமே பேசினாள். “எப்ப வந்தீங்க?” என அவள் கேட்க, நம்மையா கேட்கிறாள் என்பது போலப் பார்த்த ரோஜா பதில் சொல்வதற்குள், அருள் முந்திக் கொண்டு “பன்னிரண்டு மணி இருக்கும்.” என்றான். 

பவித்ரா அருளை மதிக்கவே இல்லை. “இப்பத்தான் சாப்பிடுறீங்களா… நானும் கொஞ்சம் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன். இதையும் சாப்பிடுங்க.” என அவள் ரோஜாவிடம் கொடுக்க… 

“ஓ நம்ம மேலத்தான் கோபமா? இன்னும் மலை இறங்கலையா இவ…” என் நினைத்தவன், “சாப்பிடு பவி.” என்றான். 

பவித்ரா அருள் சொன்னதற்கு அசையாமல் இருந்தவள், “நீங்களும் சாப்பிடுங்க அண்ணி.” என ரோஜா சொன்னதும், உள்ளே சென்று தனக்கும் தட்டு எடுத்து வந்து, அவளே போட்டுக் கொண்டு சாப்பிட…அருளும் சாப்பிட ஆரம்பித்தான். 

“நீங்க சாப்பிடலை…” பவித்ரா ரோஜாவிடம் கேட்க, “உங்களுக்குப் பரிமாறிட்டு சாப்பிடுறேன்.” என்றாள். 

“நான் ஒன்னும் விருந்தாளி இல்லை. நானே போட்டுச் சாப்பிடுப்பேன். நீங்க சாப்பிடுங்க.” 

பவித்ரா சொன்னதும் ரோஜாவும் சாப்பிட உட்கார, இனி பவித்ரா பார்த்துக் கொள்வாள் என நினைத்த கலை, “சரி நான் போய்க் கொஞ்ச நேரம் படுக்கிறேன்.” எனச் சென்றார். 

இருந்த பசியில் மூவருமே நன்றாக உண்டனர். இப்போது எதாவது பேசினால், பவித்ரா கோபத்தில் சரியாக உண்ண மாட்டாள் என நினைத்த அருள், எதுவும் பேசவில்லை. 

சாப்பிட்டதும் ரோஜா எல்லாவற்றையும் எடுத்து சென்று சமையல் அறையில் வைக்க, பவித்ரா தான் வரும் போது வாங்கி வந்த பாலை பிரிட்ஜில் வைத்து விட்டு, தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். 

அருள் இருந்த களைப்பில் ஹாலிலேயே படுத்து விட, ரோஜாவும் சற்று ஓய்வு எடுத்தாள். ஐந்து மணி போல எழுந்து வந்த பவித்ராவுக்கு, தன் மாமியார் கண்டிப்பாக வருவார் எனத் தெரியும், அதனால் ரோஜாவிடம் வேறு நல்ல புடவை மாற்றித் தயாராகச் சொன்னாள். 

பவித்ரா வந்திருப்பது தெரிந்ததும், தேவி அவளை வம்பிழுக்கவே மாலையில் வந்தார். அவரோடு மலரும், ராஜீவும் வந்திருந்தனர். பவித்ரா வாங்க எனக் கேட்டுவிட்டு , சமையல் அறைக்குள் சென்று நின்று கொண்டாள். 

“மதியம் நீங்க நம்ம வீட்டுக்கு சாப்பிட வருவீங்கன்னு இருந்தேன்.” எனத் தேவி சொல்ல… இவர் கூப்பிடாமல் எப்படி வருவோம் என எதிர்ப்பார்க்கிறார் என நினைத்த அருள், “சித்தி சாப்பிட கூப்பிட்டதை நீ சொல்லவே இல்லையே ரோஜா…” என அவன் மனைவியைக் கேட்பது போல, கேட்டும் விட்டான். 

“இல்லை நான் கூப்பிடலை, எனக்கு வேலையே சரியா இருந்தது. உங்க பாட்டி கூப்பிட்டா என்ன? நான் கூப்பிட்டா என்ன? எல்லாம் ஒண்ணுதான்.” 

“ஓ அப்படிச் சொல்றீங்களா சித்தி? உங்களுக்கே நிறைய வேலை இருக்கும், இதுல நாங்க வேற ஏன் தொந்தரவா இருக்கனுமேன்னு தான், நான் வெளிய வாங்கிட்டு வந்தேன். பவித்ரா வேற வாங்கிட்டு வந்தா. இன்னைக்கு நைட்ல இருந்து அவங்க ரெண்டு பேரே சமைச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன்.” 

“ம்ம்… என்னதான் நாம பார்த்து பார்த்து செஞ்சாலும், நமக்கு நல்ல பேர் இல்லை பார்த்தியா? இந்தக் காலத்தில அதை எல்லாம் எதிர்பார்க்கவும் கூடாது.” தேவி யாரை குத்திக் காட்டுகிறார் எனப் புரியாமல் இல்லை. 
சமையல் அறையில் டீ போட்டுக் கொண்டிருந்த பவித்ரா பல்லைக் கடித்தாள். 

அப்போது புவனாவும் வந்துவிட… அவருடன் கலையும் வந்திருக்க, வீடே களை கட்டியது. ரோஜாவுக்கு எல்லோரையும் பார்த்ததும் ஒன்றும் ஓடவில்லை. நல்லவேளை பவித்ரா சொன்னதால்.. புடவை மாற்றினோம் என நினைத்தாள். காலையில் கட்டி இருந்த புடவை, பிரயாணத்தில் கொஞ்சம் நலுங்கியே இருந்தது. 

பவித்ரா டீ போட்டுக் கப்பில் ஊற்றிக் கொடுக்க… ரோஜா அதை எடுத்து சென்று எல்லோரிடமும் கொடுத்தாள். 

“நல்லா இருக்கா டா உன் பொண்டாட்டி.” என அருளிடம் சொன்ன புவனா, அவர் வாங்கி வந்திருந்த, பூவையும் இனிப்பையும் ரோஜாவிடம் கொடுக்க… 
ரோஜா புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள், உள்ளே எடுத்து சென்று, எல்லோருக்கும் பூவை சமமாகப் பங்கிட்டு கொடுத்தாள். 

மாமியார் வந்த தைரியத்தில், பவித்ரா தனக்கு டீ எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள். 

“பொண்ணுங்க எல்லாம் என்ன இருந்தாலும், இன்னொருத்தர் வீட்டுக்கு போற வரைக்கும் தான்.” எனத் தேவி மீண்டும் ஆரம்பிக்க… 

“அப்படியில்லை தேவி, பரத் எங்க அண்ணனை போலப் பொறுமை, பவித்ரா அவ சித்தப்பா போல இருக்கா… உன் புருஷனும் கோபம் வந்தா பட்டுன்னு பேசிடுவான். ஏன் அவனும் தானே சொத்தை பிரிச்சு கொடுன்னு கேட்டான்.” 

“அன்னைக்கு அவ அண்ணனுக்கு என்ன ஆச்சோன்னு ஒரு பயத்திலேயும், படபடப்பிலேயும் பேசிட்டா… அதைப் போய்ப் பெரிசு பண்ணிட்டு. விட்டுட்டு போவியா…” 

“எல்லாம் வயசில ரத்தம் சூடா இருக்கும்போது பேசுறது தான். இப்ப உன் புருஷன் அப்படியா இருக்கான்.” 

தன் நாத்தனாரை எல்லாம் தன்னால் பேசி ஜெயிக்க முடியாது எனத் தேவிக்குத் தெரியும், அதனால் அவர் அமைதியாகி விட… 

“என்ன இருந்தாலும் பவித்ரா பேசினது தப்பு தான். அவ சார்பா நான் மன்னிப்புக் கேட்டுகிறேன்.” என்றான் அருள். 

“நீ மன்னிப்புக் கேட்கணும்ன்னு நான் சொல்லலை பரத், எனக்கு ஒரு சின்ன வருத்தம்.” 

“இருக்கட்டும் சித்தி, பவித்ரா பேசினது தப்புதான். நீங்க எப்பவும் போல அவகிட்ட இருக்கணும்.” என்ற அருள் பவித்ராவை பார்க்க, இருவரும் முறைத்துக் கொண்டனர். 

“அதுதானே அண்ணன்காரன் தங்கச்சிக்காக மன்னிப்புக் கேட்டுட்டான். இனி இதை விட்டுடலாம்.” எனப் புவனா முடித்துக் கொண்டார். 

ரோஜா புவனாவையும் அருளையும் மாறி மாறி பார்க்க… “என்ன ரோஜா?” எனப் புவனா கேட்க, 

“நீங்க இவரையா பொறுமைன்னு சொன்னீங்க.” என அவள் சந்தேகமாகக் கேட்க, 

“ஆமாம் ஏன்?” 

“இவருக்குப் பொறுமை எல்லாம் இல்லை. ரொம்பக் கோபம் வரும். கோபம் வந்தா ரொம்பப் பேசுவார்.” என ரோஜா அருளைப் பற்றிப் பிட்டு பிட்டு வைக்க… அடிப்பாவி என்பது போல அருள் பார்க்க, பவித்ராவுக்கு ஒரே சிரிப்பு. 

“வேற என்ன பண்ணுவான் இவன்.” பவித்ரா கேட்க, 

“வேற எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா இவர் பொறுமைன்னு சொன்னதுனால சொன்னேன்.” 

“எங்ககிட்ட மட்டும் தான் நல்லவன் சீன் போடுறானா?” பவித்ரா சொன்னதும், 

“ஏன் டி அதுக்காகக் கோபமே வரமா இருக்குமா…” என்றான் அருள். 

அருள் கடைக்குச் சென்று, கொறிக்கத் தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுக்க… ரோஜாவும் பவித்ராவும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். 

அதன் பிறகு தேவி நன்றாகத்தான் பேசிக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அவர் கிளம்பி விட, புவனாவும் ரேஷ்மா வீட்டில் தனியாக இருப்பாள் எனக் கிளம்ப, “ஏன் ரேஷ்மா வரலை?” என்றான் அருள். 

“ஏனோ வரலைன்னுட்டா, நான் இன்னொரு நாள் கூடிட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றார் புவனா. 

அருள் ரோஜாவையும் பவித்ராவையும் அழைத்துக் கொண்டு சென்று சித்தப்பாவை பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்தான். 
கொஞ்ச நேரம் தான் அங்கிருந்தனர். தேவி பேருக்குத்தான் சாப்பிட்டு போங்க எனச் சொன்னார். அது புரிந்து அண்ணனும் தங்கையும் மறுத்துவிட்டு வீடு வந்தனர். 

அருள் சில மளிகை சாமான்கள் வாங்கி வந்திருக்க, பவித்ரா இரவுக்கு என்ன செய்வது என யோசித்தாள். 

“நான் வேணா சாப்பாடு வைக்கட்டுமா?” ரோஜா கேட்க, 

“இந்த நேரத்தில சாப்பாடா… அதுவும் சாயந்திரம் ஸ்நாக்ஸ் வேற சாப்பிட்டு இருக்கோம். சாதம் சாப்பிடுற அளவுக்கு வயித்துல இடம் இல்லை. உப்புமா பண்ண தெரியுமா?” 

“ரோஜா வீட்டில் எப்போது ஒருமுறை தான் பலகாரம் செய்வது. அதுவும் இட்லி, தோசை அல்லது பூரி தான். உப்புமா எல்லாம் செய்ததே இல்லை.” 

அவள் விழிப்பதைப் பார்த்த அருள், “அவளுக்குத் தெரியாது. நான் வேணா செய்றேன்.” என்றான். 

“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்.” என்ற பவித்ரா அவளே சென்று செய்ய, ரோஜா சென்று எப்படிச் செய்வது எனப் பார்த்துக் கொண்டாள். 

சாப்பிடும் போது, “ஆமாம் உனக்கு ரேஷ்மா மேல என்ன திடீர் அக்கறை? அவளைப் பத்தி அத்தைகிட்ட விசாரிக்கிற?” பவித்ரா அருளிடம் கேட்க, 

“ஏன் நான் கேட்க கூடாதா.” என்றான் அருள். 

“யாரு ரேஷ்மா?” என ரோஜா கேட்க, 

“உனக்கு ரேஷ்மாவை தெரியாதா… அது ஒரு பெரிய காதல் கதை, நிச்சயம் வரை போச்சே… இவன் உன்கிட்ட சொல்லலை…” பவித்ரா வேண்டுமென்றே கேட்க, 

“அடிப்பாவி, இவளா கதையில வெட்டி ஒட்டுறாளே என நினைத்த அருள், 
“நான் உனக்குப் பிறகு சொல்றேன்.” என்றான் ரோஜாவிடம்.
சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு ரோஜா சென்றுவிட, 

“உனக்கு நான் என்ன டி பண்ணேன், இப்படிப் போட்டுக் கொடுக்கிற?” அருள் நொந்து போய்ச் சொல்ல, 

“என்னை எப்படி அழ வச்ச இல்ல, இப்ப அனுபவி.” என்றாள் பவித்ரா காட்டமாக. அப்போது ரோஜா வந்துவிட, அதோடு பேச்சு நின்றது. 

பவித்ரா நமட்டு சிரிப்போடு அவள் அறைக்குச் சென்றுவிட, இன்னொரு அறைக்கு அருளும் ரோஜாவும் சென்றனர். 

நைட்டி மாற்றிக் கொண்டே, “யாரு ரேஷ்மா?” என ரோஜா கேட்க, 

“மறக்கிறாளா பார்த்தியா இவ…” என நினைத்த அருள், ரேஷ்மாவை பற்றிச் சொன்னான். 

“ரேஷ்மாவின் நிச்சயம் நின்றது. புவனா அருளை ரேஷ்மாவுக்குச் செய்யலாம் எனச் சொன்னது, தான் மறுத்தது.” எனச் சொன்னவன், ரேஷ்மாவுக்கும் தன் மேல் விருப்பம் இருந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. 
இன்னொருவரை திருமணம் செய்யப் போகும் பெண், அவளைப் பற்றி அப்படிச் சொல்ல, அவனுக்கு மனம் வரவில்லை. 

“ஆனா பவித்ரா அண்ணி வேற மாதிரி சொன்னாங்களே…” 

“அவ வேணுமுன்னே பண்றா உனக்குப் புரியலையா? சொல்லப்போனா ரேஷ்மாவுக்கு என்னைச் சுத்தமா பிடிக்காது. அவ வீட்ல சொல்றாங்கன்னு தான் சரின்னு சொன்னா.” 

“ஓ… நீங்க அதுதான் நம்மக் கல்யாணத்தை அவசரமா பண்ணீங்களா?” 

“அதுவும் ஒரு காரணம். பவித்ராவை அத்தை வீட்லயே செய்யும் போது, அவங்களுக்கு நேரா அழுத்தமா வேண்டாம்ன்னு சொல்ல முடியலை…” 

“இதெல்லாம் விட்டுட்டா நீங்க எனக்காக வந்தீங்க.” 

“நல்லா கேட்கிற டி கேள்வி. உனக்காக வராம யாருக்காக வருவேன்.” அருள் சொன்னதும், ரோஜா அவனை அனைத்துக் கொண்டாள். 

“நான் கூட உங்க வீட்டு ஆளுங்க எப்படியோன்னு நினைச்சேன். ஆனா எல்லோரும் நல்லத்தான் பழகிறாங்க.” என்றாள். அருள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், “உன் நாத்தனார் உன்னோட ராசி ஆகிட்டா போலிருக்கு.” என்றான் சிரிப்புடன். 

“அவங்க அண்ணன் அங்க இருந்தாருன்னு தான் கோபம். அதுக்குக் காரணம் நான்னு என் மேல கோபம். இப்ப இங்க வந்ததும், அவங்க கோபத்தை விட்டுடாங்க.” என ரோஜா சரியாக ஊகிக்க,
“என் மேலத்தான் இன்னும் கோபம் போலப் போலிருக்கு.” என்றான். 

“என்னோடையே பேசுறாங்க. உங்களோட பேசாம இருப்பாங்களா என்ன? அதெல்லாம் பேசுவாங்க.” என்றவள், அலுப்பாக இருக்கிறது, தூங்கப்போறேன் எனப் படுத்துக் கொண்டாள். 

அங்கே பவித்ரா யோசனையில் இருந்தாள். 

இங்கே வந்து தலையைக் காட்ட வேண்டுமே என வந்தது போலத்தான் இருந்தது. ரோஜாவை வீட்டுக்கு வா என்று யாருமே அழைக்கவில்லை. புவனா கூட அழைக்கவில்லை. 

புவனாவுக்கு அழைக்க ஆசைதான். ஆனால் அவர் கணவர் மற்றும் ரேஷ்மா எப்படி நடந்து கொள்வார்களோ எனப் பயந்தே அவர் அழைக்கவில்லை. 

அருளோடு சுமுக உறவு இருக்க வேண்டும், அதே நேரம் ரோஜாவை தள்ளி வைப்பதும் தெரியாமல், தேவி நடந்து கொண்டார். அது தெரிந்தும் தெரியாத மாதிரி அருளும், பவித்ராவும் அதே போலச் சாஸ்திரத்துக்கு அவர் வீட்டில் தலையைக்காட்டி விட்டு வந்தனர். பாவம் இதெல்லாம் ரோஜாவுக்குத் தெரியவில்லை. 

மாதவன் பவித்ராவை அழைக்க, அவள் பேசிக்கொண்டே மேல் மாடிக்கு சென்றாள். 

“என்ன டிக்கெட் போடட்டுமா?” 

கணவனின் கிண்டல் பவித்ராவுக்குப் புரியாமல் இல்லை. “நான் இப்ப வரலை… கொஞ்ச நாள் ரோஜாவோட இருந்து அவளுக்கு இங்க எல்லாம் பழகிட்டு வரேன்.” என்றாள். பிறகு கணவனிடம் இன்று நடந்ததையெல்லாம் சொன்னாள். 

“இவ்வளவாவது நல்லா நடந்துகிட்டாங்களே… கொஞ்ச நாள் போனா எல்லாம் சரி ஆகும்.” என்றான். 

“நான் நம்ம இடத்துக்கு வர எப்படியும் இன்னும் பத்து நாள் ஆகும். நீயும் அப்ப இங்க இருக்கிறது போல வந்திடு. என்னைத் தனியா இருக்க விடாத.” 

“சரி, எப்ப கிளம்புறேன்னு நான் பார்த்திட்டு சொல்றேன்.” 

பவித்ரா பேசிவிட்டு வைத்த போது, அருள் அங்கே வந்தான். அண்ணனைப் பார்த்ததும் பேச வசதியாக, அங்கிருந்த சுவற்றில் ஏறி உட்கார்ந்தாள். 

Advertisement